Episode – 36
கோடீஸ்வரன் தனது பெயருக்கு ஏற்றது போலவே கோடீஸ்வரனாக வாழ விரும்பும் ஒரு நபர் தான்.
அப்படிப்பட்ட ஒரு பண பேய்க்கு கிடைத்த நல்ல உள்ளம் கொண்ட செலவு இல்லாத அடிமைப் பெண்மணி தான் அவரின் மனைவி சிவகாமி அம்மா.
கோடீஸ்வரனுக்கு, “மனைவி முக்கியமா?, இல்ல பணம் முக்கியமா?, இரண்டில ஒன்ன செலக்ட் பண்ணி சொல்லுங்கன்னு யாரும் கேட்டா…. ஒரு நொடி கூட யோசிக்காது பணம் தான் முக்கியம்.” என கூறி விடுவார் அவர்.
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதற்கு சரியான உதாரணம் இவர் தான்.
என்ன ஒன்று இவர் பணத்திற்காக மற்றவர்களை பிணம் ஆக்கி விடுவார்.
பணம் என்ற ஒற்றை சொல்லிற்காக எந்த எல்லைக்கும் போகக் கூடிய ஒரு மனிதர் தான் இந்த கோடீஸ்வரன்.
பணத்திற்கு அடுத்து அவர் பெரிதும் நம்பும் ஒரு விடயம் தான் மாந்திரீகம், ஜோதிடம்.
எவனாவது ஒரு மாந்திரீகன் நீங்கள் ஒரு உயிர் பலி கொடுத்தால் இவ்வளவு பணம் கிடைக்கும் என சொல்லி விட்டால் அதை மறுக்காது அப்படியே செய்யக்கூடிய ஒரு நபர் தான் இவர்.
இதில் இவருக்கு என ஒரு ஆஸ்தான மாந்திரீகர், ஜோதிடர் என இருவர் இருக்கின்றனர்.
இப்படிப்பட்ட கேடு கெட்ட நபருக்கு தங்கமாக கிடைத்தவர் தான் சிவகாமி அம்மா.
அவருக்கு தனது கணவனைப் பற்றி அனைத்தும் தெரிந்திருந்தும் அவரை மீறி செல்ல முடியாமல் அங்கேயே அடைபட்டுக் கிடந்தார் அவர்.
கோடீஸ்வரன் சிவகாமி அம்மாவை திருமணம் செய்தது அவரிடம் இருக்கும் பணத்திற்காகவும், மற்றும் அவரிடம் இருந்த அழகுக்காகவும் மட்டும் தான்.
இவை இரண்டும் வெளியில் தெரியும் காரணங்கள்.
அதனையும் விட முக்கிய காரணம் ஒன்றும் இவர்களின் திருமணத்திற்கு பின்னால் இருக்கின்றது.
ஆம், இப்படிப் பட்ட ஜாதகத்தில் உள்ள பெண்ணைத் திருமணம் செய்தால் தான், கோடீஸ்வரனுக்கு ஆயுள் அதிகம் என்பது தான் அடுத்த காரணம்.
ஆக மொத்தம், அதை இதை கணக்குப் போட்டு, தனக்கு எது செய்தால் லாபம் என நிறைய யோசித்து,
தனது சுய லாபத்தை மட்டும் எண்ணி, சிவகாமி அம்மாவை திருமணம் செய்து கொண்டவர் தான் மிஸ்டர் கோடீஸ்வரன் எனும் நச்சுப் பாம்பு.
திருமணம் செய்த பிறகு, ஒரு நாள் கூட சிவகாமி அம்மாவை அன்பாக பார்த்ததும் இல்லை, பேசியதும் இல்லை அந்த மனிதன்.
திருமணத்திற்குப் பிறகும் ஜோசியரிடம் கேட்டு முதலாவது ஆண் பிள்ளையாக வந்தால் இன்னும் செல்வம் பெருகும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு, அதற்காக சிவகாமி அம்மாவை அந்தப் பரிகாரம் செய், இந்தப் பரிகாரம் செய், என வதைத்து எடுத்து பெண் குழந்தை தான் என்று தெரிந்தால் கண்டிப்பாக அழித்து விடுவேன் என மிரட்டி, அவரை ஒவ்வொரு கணமும் பயத்தில் இருக்க வைத்த ஒரு பெரிய மனுஷன் தான் அவர்.
அவரின் டார்ச்சரை சிவகாமி அம்மா, தாங்க முடியாது தாங்கும் போது,
“அம்மா நீ கவலைப் படாத உன்ன இந்த ஆள் கிட்ட இருந்து, நான் காப்பாத்துறன்.” என கருவறைக்குள் இருந்து தாய்க்கு செல்ல உதை மூலம் தைரியம் கொடுத்து, தாயின் மொத்த நல்ல குணங்களையும் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு பிறந்தவன் தான் அரி தீரன்.
பிறக்கும் போதும் தாய்க்கு அவன் எந்த கஷ்டமும் கொடுக்கவில்லை.
வளரும் போதும் எந்த கஷ்டமும் கொடுக்கவில்லை.
தாயுடன் எப்போதும் நேரம் செலவழிப்பவனுக்கு, தந்தை என்றால் மட்டும் ஒரு வித அலர்ஜி.
சிறு வயதில் இருந்தே அவரின் குணங்கள், பழக்கங்கள் எதுவும் அவனுக்கு பிடிக்காது.
அவர் ஆசையாக அவனைக் கொஞ்ச வந்தாலும், ஒரு பார்வை உடன் தள்ளி நிறுத்தி விடுவான் அவன்.
அது என்னவோ…. மனைவியிடம் மிளகாய் போல காரமாய் காய்ந்து பேசுபவர்,
தீரன் என்று வந்தால் பாகு போல உருகி விடுவார்.
அதற்கு காரணம் தீரன் பிறந்ததில் இருந்து வளர வளர, பல வழிகளிலும் பணம் வந்தமை தான்.
அவர் தொட்ட தொழில்கள் அனைத்திலும் வெற்றி, கால் வைக்கும் இடம் எல்லாம் அவரின் பெயர் முதலிடம் என அவருக்கு அனைத்திலும் வெற்றி கிடைக்கவே,
அதற்கு காரணம் மகன் என முற்று முழுதாக நம்பியவர், அவனைத் தலையில் வைத்துக் கொண்டாட ஆரம்பித்தார்.
ஆனால் சிறு வயதிலேயே வஞ்சக பாசம் எது?, உண்மையான பாசம் எது?, எனப் புரிந்து கொண்ட தீரன், தந்தையின் பொய் அன்பில் ஏமாறாது தாயின் மெய் அன்பில் மகிழ்வும் கண்டான்.
அவன் வளர வளர, அவரின் தொழில்களும் அசுர வளர்ச்சி கண்டது, அதே நேரம் அவரது குணங்கள் இன்னும் கீழ்த்தரமாக கேவலமாக மாறத் தொடங்கியது,
ஆம், பணத்தை அநியாய வட்டிக்கு விடுதல், கட்டப் பஞ்சாயத்து, ஆட்களை அடித்து பணம் பறித்தல் இது எல்லாவற்றுடனும் சேர்த்து, அவரின் பகட்டு வாழ்க்கையும் எல்லை தாண்டிப் போக ஆரம்பித்தது.
ஆம், அவரின் இஷ்டப் படி மனம் போன போக்கில் வாழ ஆரம்பித்தார் அவர்.
அதன் விளைவு, மதுப் பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம், மாதுப் பழக்கம் என அவரிடம் அனைத்து கெட்ட பழக்கங்களும் உருவாக ஆரம்பித்தது.
மனைவி, பிள்ளைகள் இருக்கிறார்களே ஒரு கட்டுப் பாட்டுடன் இருக்க வேண்டும், குடும்பத்தில் ஒழுக்கமாக இருக்க வேண்டும், என்னைப் பார்த்துத் தான் பிள்ளைகள் வளரும், அதற்கு நான் முன் உதாரணமாக இருக்க வேண்டும்…. இப்படி எந்த விதமான கட்டுப் பாடுகளும், யோசனைகளும் இன்றி தான்தோன்றித்தனமாக வாழ ஆரம்பித்தார் அவர்.
சிவகாமி அம்மா, அனைத்தையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க காரணம் தீரன் மட்டும் தான்.
சில நேரங்களில் இரவில் மட்டும் கணவன் உரிமையுடன் தன்னை நாடும் கோடீஸ்வரனைக் கண்டு குமட்டிக் கொண்டு வந்தாலும் மிகவும் பொறுமையாக பல்லைக் கடித்துக் கொண்டு அந்த இரவுகளைக் கடப்பார் அவர்.
ஆனால் தீரனுக்கும் அங்கு நடக்கும் அனைத்தும் நன்கு புரியத் தான் செய்தது.
இருந்தாலும் அன்னைக்காக அமைதி காத்தான்.
தீரனும், வளர்ந்த பின்னாடி அன்னையைக் கூட்டிக் கொண்டு அந்த நரகத்தில் இருந்து வெளியே சென்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் முடிந்த வரையில் பல்லைக் கடித்துக் கொண்டு, அங்கேயே தங்கி படிக்க ஆரம்பித்தான்.
படிப்பு தான் ஒருவனை உயர்த்தும், அது தான் நிரந்தரம். என அன்னை சொன்ன வாக்கை தவறாது கடைபிடித்தான் அவன்.
இப்படியே நாட்கள் நகரும் போது தான்,
தீரனின் ஏழாவது வயது நடந்து கொண்டு இருக்கும் போது, யாரும் எதிர் பாராத அந்த நிகழ்வு நடந்தேறியது.
ஆம், மீண்டும் சிவகாமி அம்மா கருத் தரித்தார்.
எப்போதும் தனது சந்தோசத்தை மட்டும் கருத்தில் கொள்ளும் கோடீஸ்வரன், அடுத்த குழந்தை வரக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
அவரைப் பொறுத்த வரைக்கும்,
ஜோசியரின் கூற்றுப் படி,
முறையான வாரிசாக இன்னொரு குழந்தை உருவானால், அது அவரது சாம்ராஜ்ஜியத்தின் அழிவுக்கு வழி வகுக்கும் என்பது தான் முடிவாக இருந்தது.
அதனை சிவகாமி அம்மாவுக்கும் சொல்லி, எச்சரிக்கை செய்து இருந்தார்.
ஆனால் கடவுள் கொடுப்பதை யார் தான் தடுக்க முடியும்?, கடவுளின் ஆசியால் சிவகாமி அம்மாவும் கர்ப்பம் தரித்து விட்டார்.
ஆனால் அதனை வெளியில் சொல்ல அவருக்கு தைரியம் இல்லை. சொன்னால் என்ன நடக்கும் என அவருக்கு தெரியாதா?
முடிந்த வரையிலும் கணவன் எனும் கொடூரனின் காதுக்கும், கண்ணுக்கும் குறித்த விடயம் போகாது பார்த்துக் கொண்டார்.
ஆனால் எத்தனை நாளைக்கு மூடி மறைக்க முடியும்?, ஒரு நாள் வெளியில் வந்து தானே ஆக வேண்டும்.
தொடர் வாந்தி, சோர்வினால் சிவகாமி அம்மா கஷ்டப் பட,
அது அங்கு வேலை செய்வோரின் கண்ணில் பட, கோடீஸ்வரனின் விசுவாசி ஒருவரினால் அவரது காதுக்கு விடயம் கொண்டு செல்லப் பட்டது.
விடயத்தை கேள்விப்பட்டதும் வேலைகள் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு, கடுங்கோபத்துடன் வீட்டுக்கு வந்தவர், மனைவி கெஞ்சியும், அழுதும், காலில் விழுந்தும் கவனத்தில் கொள்ளாது மிருகம் மாதிரி அவரை ஹாஸ்பிட்டலுக்கு அழைத்து சென்றார்.
அவர் தனது தாயை இழுத்து செல்வவதைக் கண்டு துடித்துப் போன தீரன், ஓடிச் சென்று தடுக்கவும்,
அது எதனையும் கருத்தில் கொள்ளாது, அவனைத் தள்ளி விட்டு, மனைவியை இழுத்துக் கொண்டு சென்றவர்,
உடனடியாக சிவகாமி அம்மாவுக்கு அபார்ட் பண்ணும் படி கூற, அந்த நல்ல பெண்மணியின் கூக்குரலும், அழுகையும் அந்த இடத்தை நிறைத்தது.
டாக்டர்ஸ்ற்கு அவரைப் பார்த்து கவலையாக இருந்தாலும், வேறு வழி இல்லாது போகவே, சிவகாமி அம்மாவை அழைத்துக் கொண்டு சென்றனர்.
ஆனால் சற்று நேரத்திலேயே திரும்பி வந்த டாக்டர்,
“சாரி மிஸ்டர் கோடீஸ்வரன், இனி உங்க வைப்ற்கு எதுவும் பண்ண முடியாது. இனி குழந்தையை அழிக்க முடியாது, அப்படி அழிச்சா…. அது உங்க மனைவி உயிருக்கே ஆபத்தா முடியும்.” என கூற,
அவரோ, பல்லைக் கடித்துக் கொண்டு,
“அவளும் போய் சேரட்டும், எனக்கு அந்த குழந்தை வேணாம் அவ்வளவு தான்.” என கொஞ்சமும் இரக்கம் இன்றி கூறினார்.
அவரின் பேச்சில் டாக்டர்ஸ் அனைவரும் முழி பிதுங்கி நின்றனர்.
கோடீஸ்வரன், எதற்கும் இருக்கட்டும் என, ஜோசியரிடம் போன் போட்டு, விஷயத்தை சொல்ல,
அவரோ, “அவசரப்பட வேண்டாம் கோடீஸ்வரன், இப்போதைக்கு உங்க உயிரில இருக்கிற கண்டம் போகணும்னா உங்க மனைவி உயிரோட இருக்கணும். குழந்தை பிறக்கும் வரைக்கும் வெயிட் பண்ணுங்க. அதுக்கு அப்புறம் என்ன செய்றதுன்னு யோசிப்பம்.” என கூற,
தனது உயிர் சம்பந்தப் பட்டது என்றவுடன், கோடீஸ்வரனும் கொஞ்சம் யோசித்து விட்டு அடங்கிப் போனார்.
டாக்டர்ஸ்சை அழைத்து இப்போதைக்கு எதுவும் பண்ண வேண்டாம் என கூறி, மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு சென்று விட்டார்.
ஆனால், சிவகாமி அம்மா இரண்டாவது குழந்தையை பெற்று எடுக்கும் வரைக்கும் அவரை ஒரு வழி பண்ணி விட்டார் அவர்.
ஒரே குத்தல் பேச்சுக்கள், தொடர் வேலைகள், ஒழுங்கான சாப்பாடு வழங்காமல் கஷ்டப் படுத்தல் என அவரை விடாது பழி வாங்கினார் அவர்.
ஆனாலும், சிவகாமி அம்மா, சோர்ந்து போகாது தன் குழந்தைக்காக அனைத்தையும் தாங்கினார்.
அதற்கு, அவரிற்கு துணை புரிந்த இன்னொரு ஜீவன் தீரன் தான்.
“தனது தம்பி, இந்தஉலகில் ஆரோக்கியமாய் ஜனிக்க வேண்டும்.” என அவன் உறுதி பூண்டு அன்னைக்கு காவலாய் இருந்தான்.
ஆம் தம்பி தான், ஸ்கேன் மூலம் ஆண் பிள்ளையா?, இல்லை பெண் பிள்ளையா? என பார்த்து இருந்தார் கோடீஸ்வரன்.
அதன் மூலம் தீரனுக்கும் அந்த விடயம் தெரிந்து இருந்தது.
அதே நேரம் அவனுக்கு நாளுக்கு நாள் தந்தை மீதான வெறுப்பு பல மடங்கு அதிகரித்துக் கொண்டே போனது.
நாட்கள் நகர்ந்து, பத்து மாதங்களும் முடிவடைய இடியுடன் கூடிய மழை நாள் ஒன்றில், மாலை நேரம் சிவகாமி அம்மாவின் இரண்டாவது புதல்வன் பிறந்தான்.
அண்ணனைப் போலவே அன்னைக்கு கஷ்டம் கொடுக்காது பிறந்தவன் தான் ஆதி மூலனும்.
ஒரு தந்தையாக, அவர் குழந்தை பிறந்ததும் செய்ய வேண்டிய எதையும் செய்யவே இல்லை.
ஒரு நல்ல அப்பாவாக மகனைக் கொஞ்சவில்லை, தோளில் போட்டு தூங்க வைக்கவில்லை, அழுதால் தட்டிக் கொடுக்கவில்லை, பெயர் வைக்கவில்லை, குழந்தை பொக்கை வாய் சிரிப்பை ரசிக்கவில்லை, அழுதால் அன்னம் ஊட்டவில்லை, பொம்மைகள் வழங்கவில்லை, ஆக மொத்தம் அந்தக் குழந்தையை தன் குழந்தையாக பார்க்கவே இல்லை.
ஆனால் இவை எல்லாவற்றையும் ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து செய்தான் தீரன்.
ஒரு அண்ணன் அப்பாவாக மாறி தன் தம்பியைத் தாங்கினான்.
கோடீஸ்வரனும், தீரன் தம்பியிடம் பாசம் காட்டுவதை உணர்ந்து, சற்று அமைதியாகிப் போனார்.
அவருக்கு தீரன் முக்கியம் அல்லவா.
இப்படி இருக்கும் போது தான், கோடீஸ்வரனின் ராஜ போக வாழ்க்கையில், திடீர் சரிவு ஏற்பட ஆரம்பித்தது.
அதன் விளைவு சிவகாமி அம்மா, தீரன், ஆதி மூவரின் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது.
அப்படி என்ன நடந்து இருக்கும்?
கோடீஸ்வரனால் அவர்கள் மூவரும் அடைந்த துன்பங்கள் என்னென்ன?
அடுத்த எபி நாளை வரும் மக்காஸ் 😍😍😍
கதையின் அடுத்த ட்விஸ்ட் எப்படி இருக்கு மக்காஸ் 😍😍😍😍😍
கதை சீக்கிரம் முடிஞ்சிடும்…. மக்காஸ்.
படிக்காதவங்க படிக்க ஆரம்பிங்க.. 💖💖
நிறைய இடங்கள்ல மழை பெய்யுது மக்காஸ்…. எல்லாரும் கவனமா இருங்க, புயல் நேரங்களில் அதற்குரிய நடவடிக்கைகளை சரியா கடைப்பிடிங்க. அலட்சியம் வேண்டாம்.
உங்களால் முடிந்த வரையில் பாதிக்கப் பட்டவங்களுக்கும் உதவி செய்ங்க..