24. அபயமளிக்கும் அஞ்சன விழியே!

0
(0)

🤍 அபயமளிக்கும் அஞ்சன விழியே! 🤍

👀 விழி 24

 

அந்தி மாலை நேரம், அழகான நிலவு தன் பூமிக் காதலியை பார்க்கும் தீராத காதலோடு வருகை தந்திட, தன் பணியை முடித்துக் கொண்டு மேற்கில் பயணித்துக் கொண்டிருந்தது ஆதவன்.

 

வேஷ்டி நுனியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு வயலில் வேலைகளை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்தான் நிதின். அனைவரும் சென்றதும் அங்கிருந்த கற்பாறையில் அமர்ந்து கொண்டான்.

 

பசி வயிற்றைக் கிள்ளியது. பகலுணவுக்கு வீடு செல்லவில்லை அவன். வீடு செல்ல மனம் வரவில்லை அவனுக்கு. காரணம் ஆலியாவுடன் நடைபெற்ற சிறு ஊடல் தான்.

 

இரு கைகளையும் கோர்த்து பின்னந்தலையில் வைத்து பாறையில் முதுகை உறவாட விட்டான். கண்கள் தானாக மூடிக் கொண்டன.

 

இரு நாட்களுக்கு முன்பு‌ வயலில் ஒருவனை பாம்பு கடித்து விஷம் உடலில் முழுதாக பரவும் முன்னே கொண்டு சென்றதில் வைத்தியசாலையில் தான் அந்நாள் கழிந்தது நிதினுக்கு.

 

தன்னிடம் வேலை செய்யும் தொழிலாளிகளுக்கு ஏதாவது என்றால் அவனே முன்னின்று அனைத்தும் செய்வான். விஷத்தை அகற்றி விடலாம், உயிருக்கு எதுவும் ஆபத்து‌ இல்லை என்ற செய்தி கிடைக்கும் வரை அவனுக்கு மனம் ஆறவில்லை.

 

வீடு திரும்பியவனை வரவேற்றது வாடியிருந்த மனைவியின் தோற்றமே.

 

“ஆலி! என்னாச்சு? உடம்புக்கு ஏதும் முடியலையா?” நெற்றி, கழுத்தைத் தொட்டுப் பார்க்க இல்லை என்பதாக தலையசைத்தவள் அடுத்துக் கூறியதில் அதிர்ந்து விழித்தான்.

 

“இனி வயல்ல வேலைக்கு போக வேணாம் நிதின்”

 

அவ்வினா தந்த அதிர்ச்சியோடு அவளை நோக்கி “ஏன்?” என வினவினான்.

 

“ஏன்னு தெரியாதா? பார்த்தியா பாம்பு கடிச்சதை. எனக்கு பயமா இருக்கு நிதின். உனக்கு ஏதாவது ஆச்சுனா என்னால நினைக்கவே முடியல‌. வயலுக்கு போகாத” 

 

காரணம் இதுவாக இருக்கும் என்று முதலிலேயே ஊகித்து விட்டான். தனக்கு எதுவும் ஆகக் கூடாது என்ற அச்சமே இவ்வாறு சொல்லக் காரணம் என்பதும் புரிந்தது. ஆனால் அதனை செய்ய முடியுமா? 

 

“நீ பயப்படுற மாதிரி எதுவும் இல்லை. நூற்றில் ஒரு தடவை இப்படி நடக்க வாய்ப்பு இருக்கு. அதுக்காக வேலைய விட்டுற முடியுமா? அதுவும் ஆபத்துக்காக பயந்து என் தொழிலை விட முடியாது. எத்தனை பேர் வேலை பார்க்கிறாங்க. அப்படி நான் விடுறதா இருந்தா வர்ற ஆபத்தை எல்லாம் நான் அவங்க மேல திணிக்கிற சுயநலவாதி ஆயிடுவேன். இதை எப்படி உனக்கு புரிய வைக்கிறதுன்னு தெரியல” 

 

“ஒன்னும் புரிய வேணாம். அப்பா கிட்ட சொல்லி அவர் பேக்டரில வேலை வாங்கி தர‌ சொல்றேன்”

 

“பேக்டரில ஆபத்து இல்லையா? மாடில இருக்கும் போது கால் தவறி கீழே விழுந்து மண்டையை போடலாம். சுவிட்ச் போடுறப்போ கரண்ட் ஷாக் அடிச்சு உசுரு போகலாம். வேலை பார்த்துட்டு இருக்கும் போது கன்டெய்னர் ட்ரைவர் தெரியாம வந்து என்னை அடிச்சு தூக்கலாம். இப்படி எத்தனையோ வழிகள்ல ஆபத்து வர முடியும்” அழுத்தமாக சொன்னான் நிதின்.

 

“ஏட்டிக்கு போட்டியா பேசாத நித்தி. என் பயத்தை புரிஞ்சுக்கோ” மென்குரலில் சீறினாள் அவள்.

 

“நீ ப்ராக்டிகலா யோசி. எந்த தொழில்லேயும் நீ சொல்லுற மாதிரி ஆபத்து வர தான் செய்யும்.‌ ஒன்னு நாம கவனமா இருக்கனும். அடுத்தது கடவுள் கையில். எவ்ளோ கவனம் சிதறாம இருந்தாலும் ஆபத்தோ மரணமோ வர்றதா இருந்தா குறித்த நேரத்தில் வர தான் செய்யும். அதுக்காக என்னை வயலுக்கு போகாதனு சொல்றது சுத்த முட்டாள்தனம் ஆலியா”

 

அவள் புரிந்து கொள்ளும் மனநிலையில் இல்லை.‌ இதற்கு மேல் புரிய வைக்க‌ அவனுக்கும் பொறுமை போதவில்லை.

 

“ஒன்னு மட்டும் சொல்றேன் உன் மண்டையில் தெளிவா ஏத்திக்க. எனக்கு விவசாயம் தான் தொழில். அந்த வயல் தான் என் உலகம்.‌ அதை விட்டுட்டு வர சொல்லி பேச்சுக்கு கூட சொல்லாத. என்னிக்கும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன்.‌ உசுருள்ள வரை இந்த நிதின் விவசாயி தான்” அழுத்தம் திருத்தமாக கூறி விட்டு வந்தான்.

 

அதற்குப் பிறகு ஊடல் தொடர்ந்தது. அமைதி நிலைத்தது. ஆனால் சண்டையிட்டுக் கொள்ளவும் இல்லை.‌ அருகருகே அமர்ந்தால் பார்க்கும் நேரம் பார்வையை திருப்புவதும், கவனிக்காத நேரம் கள்ளத்தனமாக பார்ப்பதுமாக இருந்தனர்‌.

 

“சண்டைக்காரி‌” அவளை எண்ணி முணுமுணுத்துக் கொள்ள, “நீ தான் சண்டைக்காரன்” எனும் சத்தத்தில் அலறியடித்துக் கொண்டு எழுந்து அமர கண்ணில் கனல் கக்க நின்றிருந்தாள் நிதினின் மனையாட்டி.

 

“சண்டை போடலாம்னு தான் வந்திருக்க போல” புருவம் தூக்கிப் பார்த்தான்.

 

“ஆமா! எனக்கு வேற வேலை வெட்டி இல்லை. இவர்‌ கூட சண்டை போட தவமா தவம் கிடக்குறேன்” முறைப்பை வஞ்சமின்றி வழங்கினாள்.

 

“அது சரி. அப்பறம் ஏன் இங்கே வந்த? பாம்பு வந்துடும் மா” நக்கல் தொனியில் சொல்ல,

 

“வந்தா வந்து கடிச்சிட்டு போக போகுது. செவனேனு நிம்மதியா கண்ண மூடப் போறேன்” அலட்டிக் கொள்ளாமல் தோளைக் குலுக்கிக் கொண்டாள் ஆலியா.

 

“அப்படியே ஒன்னு ஓங்கி விட்டேன்னா கன்னம் வீங்கி‌ கண்ணு இல்ல காது கூட வேலை செய்யாமல் போயிரும்” ஓங்கிய கையை கீழிறக்கினான் கணவன்.

 

“கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி யாரோ என்னை சண்டைக்காரினு சொன்னாங்க. இப்போ அந்த ஆள் தான் சண்டைக் கோழியா சிலுப்பிட்டு இருக்கான். இப்போதெல்லாம் ரொம்பத் தான் கோபப்படுற” முறுக்கிக் கொள்ள,

 

“நீ தான் கோபப்பட வெக்கிற ஆலி! எனக்கு ஆசை இல்லை இப்படி முகத்தை திருப்பிட்டு கிடக்கனும்னு. எதாவது எடக்குமடக்கா பேசி என்னை சீண்டி விடுற” அவளோடு பேசாமல் இருந்ததினால் ஏற்பட்ட கவலை பெருமூச்சாக வெளியேறியது.

 

“உண்மை தான். நான்‌ அம்மா கிட்ட இதை சொல்லவும் திட்டிட்டாங்க ஏன் அப்படி சொன்னனு. உன் தொழிலை விட சொல்லி இருக்க கூடாது.‌ ஆனா சாரி சொல்லவும் தோணல. நீ பேசாம இருந்ததால சாரி கிடையாது” 

 

“மன்னிப்பை கூட வீறாப்பா, கேட்க முடியாதுன்னு சொல்ல உன்னால மட்டும் தான் முடியும். ஓகே நானும் சாரி சொல்லல. எல்லாம் சரியாகிருச்சு”

 

“அப்போ வா சாப்பிடலாம்” கொண்டு வந்திருந்த பொட்டலத்தைப் பிரிக்க, “சாப்பாடு கொண்டு வந்தியா? நான் என்னமோ வீட்டுக்கு கிளம்ப துணிமணி எடுத்துட்டு வந்தனு நினைச்சேன்” சிரிக்காமல் தான் அவளை வாரினான் நிதின்.

 

“பெரிய உலக மகா யுத்தம் நடந்தது. சண்டை போட்டா பெட்டியை கட்டிட்டு கிளம்புவேன்னு நெனப்பாக்கும். வீட்டுல இருந்து உன்னை டாச்சர் பண்ணிட்டு இருப்பேன்” அவன் தோளில் அடித்தாள் அவள்.

 

“சரிடி சீக்கிரம் தா. கொலைப்பசியா இருக்கு” வயிற்றைத் தடவிக் கொண்டவனை இயன்ற அளவு முறைத்து வைத்தாள்.

 

“பெரிய சீன் சிகாமணி! சண்டை போட்டா‌ வீட்டு பக்கம் வர மாட்டாராம். வந்து ஒரு கட்டு கட்டிக்கனும் அப்போ தானே சண்டை பிடிக்க சக்தி இருக்கும்” வாழை இலையில் சோற்றை வைக்க, இளித்து வைத்து விட்டு உண்ண ஆரம்பித்தான் அவன்.

 

“கண்ணு வைக்காத. சண்டை போடனும்னு கொட்டிக்கிட்டு தானே வந்திருப்ப?” என்று கேட்க, “எனக்கு சாப்பிடலனா தான் தெம்பு வரும்.‌ பசி வந்தால் பத்தும் பறக்கும் தானே. அதான் சாப்பிடாம பத்தையும் பறக்க விட்டு உன்னை பந்தாட வந்தேன்” என்றவளுக்கும் பசிக்கத் தான் செய்தது.

 

“சாப்பிடலனு ஒரு வார்த்தையில் சொல்லாம எத்தனை டயலாக் விடுற ஆயா மாதிரி” முறைப்புடன் சண்டைக்கு வரப் போனவளுக்கு உணவுக் கவளத்தைத் திணித்து வாயை அடைத்திருந்தான்.

 

கண்களால் முறைத்து விட்டு சாப்பிட்டவளின் முகத்தை இடக்கரத்தால் வருடி விட்டான் அன்பாக. தன்னால் அவள் பசியில் இருந்தது குற்றவுணர்வாக இருந்தது.

 

“என்னடா?” இதழ் பிரித்துக் கேட்டவளிடம் மறுப்பாக தலையசைத்தான்.

 

“நான் சண்டை போடுறேன்னு உனக்கு சலிப்பா இருக்கா? என்‌ மேல கோபம் வருதா?” மெல்லிய குரலில் கேட்டாள் ஆலியா.

 

“இல்லைடி. நீ சண்டை போடுறது நல்லா இருக்கு. அப்போ தான் உன்னை இன்னும் பிடிக்குது. அன்பு இன்னும் ஜாஸ்தியாகுது. புரிதலும் அதிகரிக்குது. ஐ‌ லவ்‌ யூ டி கியூட் சண்டக்காரி” என்று அவன் கூற, குறுநகை பூத்த இதழ்கள் தனக்கு ஊட்டி விட்ட கையில் ஈரமுத்தம் பதிக்க, இரு உள்ளங்களிலும் காதல் ஈரம்!

 

••••••••••••••••••••

 

காலை சமையலை முடித்துக் கொண்டு தரையில் விரிப்பை விரித்து உணவு வகைகளை கடை பரப்பினாள் அஞ்சனா. தனது வீட்டில் டைனிங் டேபிள் கூட இல்லையே, அதில் உட்கார்ந்து பழகியவனுக்கு தரையில் உட்கார முடியுமா என்று நேற்று வீட்டிற்கு வந்த போது யோசித்தாள்.

 

ஆனால் அவனோ முகம் சுளிக்காமல் அமர்ந்து உண்ண நெகிழ்ந்து போனது அவளுள்ளம்.

 

சமைக்கும் வரை சேட்டை செய்து கொண்டிருந்தவன் இப்போது எங்கே சென்றான் என தேடுதல் வேட்டை நடத்தினாள்‌.

 

“அபய்! எங்கே இருக்கீங்க?” அங்குமிங்கும் தேடியவளின் கண்களை பின்னால் இருந்து மறைத்தன, இரு கரங்கள்.

 

தன்னுள்ளம் கொள்ளை கொண்ட கண்ணாளனின் கை‌‌ இதுவல்ல என்றுணர நொடிப் பொழுதும் தேவைப்படவில்லை.

 

“அஞ்சுமா” எனும் அழைப்போடு திரை விலக்கப்பட, சடுதியாக திரும்பிய அஞ்சனா அங்கு நின்றிருந்த தாமரை டீச்சரைக் கண்டு கண்களை அகல விரித்தாள்.

 

“டீச்சர்” என்று அழைத்து தாமரையைக் கட்டிக் கொண்ட அஞ்சனாவின் செவி தீண்டியது “டீஈஈஈச்சர்” எனும் பல குரல்களின் ஒருமித்த அழைப்பு.

 

திரும்பிய அஞ்சனா ஆனந்தமாக அதிர்ந்தாள். அவள் வகுப்பாசிரியையாக இருந்த மூன்றாம் வகுப்பு மலர் மொட்டுக்கள் அனைவரும் வந்திருந்தனர்.

 

“ஹேய் குட்டீஸ் குட்‌ மார்னிங்” என கையை விரிக்க, “வெர்ரி குட் மார்னிங் அஞ்சு டீச்சர்” கிட்டத்தட்ட பதினெட்டு மாணவர்களும் அவளைச் சூழ்ந்து ஆரவாரித்தனர்.

 

“மே ஐ கம்மின் டீச்சர்?” எனும் வினாவோடு உள்ளே வந்தான் ருத்ரன் அபய்.

 

“வர வேண்டாம் அங்கிள். நீங்க கேட்டதுக்கு டீச்சர் ஓகே சொன்னா தான் உள்ளே வரனும்” தலையுயர்த்திப் பார்த்து சொன்னாள் ஒரு சிறுமி.

 

“அடடே அப்படீங்களா பாப்பா. சாரி சாரி. டீச்சர் உள்ளே வரலாமா?” அனுமதி கேட்டவன், “வாங்க” எனும் அவளின் அனுமதியில் வந்தமர்ந்தான்.

 

“ருத்ரன் தம்பி நேற்று கால் பண்ணி நீ இங்கே வந்ததா சொன்னாரு.‌ அப்பறம் இன்னிக்கு உன் ஸ்டுடன்ஸை அவங்க பேரன்ட் கிட்ட கேட்டு கூட்டிட்டு வர‌ சொன்னதால எல்லோரும் வந்திருக்காங்க” என்றார் தாமரை.

 

தன்னவன் பக்கம் சென்ற பார்வையை அவனிடமிருந்து மீட்டுக் கொள்ளும் வகையை அவள் அறியவில்லை. அழகால் அல்ல, அன்பென்னும் மாயத் தூண்டிலினால் அவளை வசமாகச் சிக்க வைத்து இதய வலையில் சிறைப்பிடித்திருந்தான் காதல் மாயவன்.

 

விருந்தினர் வருவதாகக் கூறி வகைவகையாக சமைக்க வைத்தது ஏன் என்று இப்பொழுது புரிந்தது.

 

“வாங்க சாப்பிட்டு இருக்கலாம்” ருத்ரன் சொல்ல சிறுவர்கள் அவசரமாக சம்மணமிட்டு உட்கார, தாமரையும் அமர்ந்தார்.

 

“டீச்சர் அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க”

“டேஸ்டா இருக்கு டீச்சர்”

“இன்னும் தாங்க டீச்சர்.‌ டின்னருக்கும் சேர்ந்தே சாப்பிட போறேன்”

அவளின் சமையலை சிறுசுகள் பாராட்டித் தள்ள சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போகலானாள் அஞ்சன விழியாள்.

 

அவளோடு அத்தனை நெருககமாக, அன்பாகப் பழகியவர்கள் இவர்கள்.‌ அவர்களை விட்டு வந்த கவலை நெஞ்சோரம் நெருடவே செய்தது. இவர்களை ஒன்றாக மீண்டும் காண்போம், இவ்வாறு தன் கையால் சமைத்துக் கொடுத்து மகிழ்வோம் என்று கிஞ்சித்தும் நினைத்திருக்கவில்லை.

 

நெஞ்சை அழுத்திய சுமையெல்லாம் சுழன்றோடி சுகமான சாரல் செல்லமாக வருடிக் கொடுத்தது.

 

அவளுக்கு இணையாக ருத்ரனும் பார்த்து பார்த்து பரிமாறினான். அஞ்சனாவை இத்தனை மகிழ்வு பூரிக்கக் கண்ட போது தாமரையின் உள்ளம் நிறைந்தது. தன் கணிப்பு தப்பவில்லை என்பதில் பரம திருப்தி.

 

தன்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு மத்தியில் அமர்ந்து அஞ்சனா கதை சொல்ல, சுவாரஸ்யமாக கதையில் லயித்துப் போயினர் சின்னஞ்சிறு சிட்டுக்கள்.

 

ஐஸ்கிரீம் கொண்டு வந்த அபய் தன்னவளிடம் கொடுத்து அவளுக்கே பகிர்ந்தளிக்கச் செய்தான்.‌ கொள்ளை ஆனந்தம் கண்களில் புத்தொளி பாய்ச்ச அவற்றை அன்புச் சிட்டுகளுக்கு வழங்கினாள்.

 

சிறிது நேரம் ஆட்டம் போட்டு விட்டு “போயிட்டு வரோம் டீச்சர்” அவள் கன்னத்தில் முத்தமிட்டு விடைபெற்றனர்.

 

ஒரு சிறுவன் “பாய் டீச்சர்! லவ்‌‌ யூ” அவள் கழுத்தைக் கட்டி கன்னத்தில் முத்தமிட்டான்.

 

“லவ் யூ ‌ஸ்வீட்! நல்லா படிக்கனும் என்ன? போயிட்டு‌ வாங்க” அவனது கோலி குண்டு கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டு வழியனுப்பி வைத்தாள்.

 

இதைக் காண்கையில்‌‌ முகம் மலர்ந்ததோடு கொஞ்சமாக பொறாமையும் எட்டிப் பார்க்கத் தான் செய்தது அஞ்சு டீச்சரின் கணவனுக்கு.

 

தன்னை அணைத்து விடுவித்த அஞ்சனாவிடம், “அப்போ நானும் போயிட்டு வரேன்டா” என்க, அவரை மீண்டும் அணைத்தாள் அஞ்சனா.

 

“தாங்க் யூ டீச்சர். என் வாழ்க்கையில் இவ்ளோ சந்தோஷம் அவரால கிடைக்குது.‌ அவரையே எனக்கு கிடைக்கச் செய்தது நீங்க தானே. உங்களுக்கு நன்றி சொல்லி தீர்க்க முடியாது” என்றாள் அஞ்சனா.

 

“எல்லாம் கடவுளோட விளையாட்டும்மா.‌ உன்னை ருத்ரன் தம்பி கூட சேர்த்தது அவரோட காதல் தான். ஆனா எனக்கு அவரோட காதல் பற்றியோ, அவரைப்‌ பற்றியோ முன்னாடி தெரியாது. அப்படி இருந்தும் எப்படி யார்னே தெரியாத ஒருத்தர் கையில் உன்னை சேர்த்தேன்னு பார்க்கிறியா?‌ அதுக்கு காரணம் அவர் முகஜாடை” சற்று நிறுத்தி தொண்டையை செருமிக் கொண்டு பேசத் துவங்கினார்.

 

“சொன்னா நம்புவியானு தெரியாது.‌ ஏன்னா நடந்த‌ விஷயம் அப்படி.‌ நான் இந்த ஊருக்கு வந்த‌ முதல் நாள் இங்கே கோயிலுக்கு போனேன். அப்போ கண்ட காட்சி என்னை அதிர்ச்சியடைய வெச்சுது. நான் அப்போ கல்யாணமே பண்ணி இருக்கல” அவர் தயங்க, “அப்படி என்ன கண்டீங்க?” ருத்ரன் வினா எழுப்பினான்.

 

“அந்த கோயிலில் கொஞ்சம் மறைவான இடத்தில் ஒரு சாமி சிலை இருக்கு. அதை கும்பிட்டு திரும்பும் போது, அஞ்சுவோட அப்பா அவர் மனைவியை அணைச்சுக்கிட்டார். அப்போ பார்த்த அதே காட்சியை மறுபடி அத்தனை வருஷத்துக்கு அப்பறம் உங்க உருவத்தில் பார்த்தேன்”

 

இருவருக்கும் திகைப்பு. நம்ப இயலவில்லை என்றாலும் நம்பித் தானே ஆக வேண்டும்?

 

“ருத்ரன் அப்படியே பிரபா அண்ணாவை உரிச்சு வெச்சிருந்தார். அந்த உருவ ஒற்றுமையே அஞ்சுவை பயமில்லாமல் கைப்பிடிச்சுக் கொடுக்க காரணமா இருந்துச்சு. உங்களை அப்படி நிமிஷம் கடவுள் கிட்ட வேண்டிக்கிட்டேன் சுஜித் வேணாம். இவரையே அஞ்சு கூட சேர்த்து வைனு. அதற்கான சந்தர்ப்பம் அவ்வளவு சீக்கிரம் அமையும்னு தான் நான் எதிர்பார்க்கல” 

 

“ஆமா சுஜித் எங்கே இப்போ?” – இது அஞ்சனாவின் கேள்வி.

 

“அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் எங்கேஜ்மன்ட் ஆயிடுச்சு டா. அடுத்த மாசம் கல்யாணம்” புன்னகையோடு முடித்துக் கொண்டு விடைபெற்றுச் சென்றார் தாமரை.

 

தாமரை கூறியதை நினைவுறுத்தி, “இதெல்லாம் எப்படி அபய் சாத்தியம்?‌ ஒரு தடவை கண்டு என்னை காதலிச்சீங்க. இன்னொருத்தர் கூட நடக்கவிருந்த நிச்சயம் முடிஞ்சு அங்கேயே உங்க கூட கல்யாணம் ஆச்சு. அப்பறம் நீங்க என் அத்தை பையன்னு தெரிஞ்சது, நம்ம உருவ ஒற்றுமை, எல்லாமே மேஜிக் மாதிரி இருக்குல்ல” நீங்காத வியப்பு அவளை வண்டாகக் குடைந்திற்று.

 

“சில விஷயங்கள் அப்படி தான் டி. எதிர்பாராத கஷ்டம் ஒன்னு வந்துச்சுனா அதை விதி என்பாங்க. ம்ம் இதுவும் அப்படி தான். ஆனா ஒன்னு நம்ம ரெண்டு பேருக்குமான பந்தம் இன்னிக்கு நேற்று உருவாக்கப்பட்டது இல்லை. நாம பிறக்க முன்னமே இறைவனால் நிர்ணயிக்கப்பட்டு முடிச்சிடப்பட்டது” அவள் தளிர்க் கரங்களை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.

 

“உண்மை அபய். இந்த பந்தம், உங்க சொந்தம் எனக்கு என்னிக்குமே வேணும். எப்போதும் உங்க கூட இருக்கனும்”‌ அவன் மார்பில் தலை சாய்க்க,‌

 

அவளைத் தோளோடு சேர்த்து அணைத்து உச்சந்தலையில் இளஞ்சூடாக பதித்த முத்தம் “உன்னோடு நான் இருப்பேன் கண்ணம்மா, என் உயிர் உள்ளவரை. உயிர் விட்டுப் போனாலும் உறைந்த நினைவுகள் யாவும் உனைச் சுற்றியே வாழும்!” என்று உறுதி மொழி வழங்கியது ஸ்திரமாக.

 

தொடரும்………!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

error: Content is protected !!