உயிர் போல காப்பேன்
அத்தியாயம்-1
முடிந்தது
முடிந்தது
இன்றுடன் அனைத்தும்
என் வாழ்க்கை.
கல்யாண கனவுகள்.. அனைத்தும்..
என்று மனதில் பேசிக்கொண்டு இருந்த நேரம்..
இரு வலிய கரத்தில் இரண்டு கரங்களோடு சேர்த்து தன் கழுத்தில் பொன்னால் ஆன கருப்பு மணி கோர்க்கப்பட்ட மாங்கள்யம் கட்டப்பட்டது.தன் கண்ணீர் துளிகள் கண்ணில் இருந்து வழிவதை கூட பொருட்படுத்தாமல் தனக்கு என்று விதிக்கப்பட்ட இந்த வலி நிறைந்த வாழ்க்கையை ஏற்கவும் முடியாமல், அவர்களை எதிர்க்கவும் முடியாமல் மேடையில் உட்கார்ந்துக்கொண்டு இருந்தாள். ஆஸ்வதி தாகூர் இனி ஆஸ்வதி ஆதித் சர்மா..
ஆஸ்வதி, அவள் முகத்தில் கல்யாண பெண் என்ற அடையாளமாக அலங்காரம் மட்டும் தான் இருந்தது. மற்றபடி அவள் முகத்தில் எந்த வித பூரிப்பும் இல்லை, சந்தோசமும் இல்லை
மணமக்களுக்கு என்று உரிய கள்ளப்பார்வையோ, செல்ல சீண்டல்களோ எதுவும் இல்லாமல் மயான அமைதியாக இருந்தது அந்த மண்டபம்
அது ஒரு கல்யாண மண்டபம் அங்கு உள்ள அனைவரும் மேடையில் உள்ளவர்களை தான் அதிர்ச்சியாகவும், ஆச்சரியமாகவும் பார்த்துக்கொண்டு இருந்தனர். கடைசி நேரத்தில் மாப்பிள்ளை மாறி பார்த்திருக்கிறார்கள்.ஏன் கடைசி நேரத்தில் கல்யாணம் நின்று கூட பார்த்திருக்கின்றனர். ஆனால் இப்படி ஒரு கல்யாணத்தை பார்த்தது இல்லை.
நல்ல அடர் சிகப்பு நிறத்தில் லெகங்கா அணிந்து உடல் முழுதும் கற்களால் அலங்கரிக்கப்பட்டு தேவதை போல இருந்தாள் கழுத்தில் நல்ல அடர்ப்பான வைர அட்டிகை. அதன் கீழ் நல்ல நீளமான ஆரம்.. கைகளில் முழுவதுமாக வளையல்கள்.. அந்த மணமேடையில் இருந்த லைட்டில் அவள் இன்னும் ஜொலி ஜொலிப்பாக இருந்தாள்… முகம் தெரியாமல் சிவப்பு துணியால் மூடி இருந்தாள். அவள் தாம் நம் கதாநாயகி ஆஸ்வதி தாகூர்.
அவளுக்கு அருகில் க்ரீம் நிற சர்வானியில் ஆங்கு ஆங்கு சிவப்பு நிறத்தில் கற்கள் பதித்து இருந்தது. அவன் முகம் தெரியாத அளவிற்கு அவன் முகத்தில் பூக்களால் ஆன மறைவு தொங்கிக்கொண்டு இருந்தது..அவன் முகம் தெரியவில்லை என்றாலும் அவனது உடல் கட்டிற்கு அந்த சர்வானி நன்றாக இருந்தது.
அதை எதையும் கவனிக்காத ஆஸ்வதி தன் வாழ்வில் சந்தோசத்தை இது வரை அனுபவித்திடாத 22 வயது இளம் மங்கை.
அவள் நிமிர்ந்து நொடிக்கு ஒரு தரம் தன் முன்னால் தன் பேத்தியின் வாழ்க்கை இனியாவது நன்றாக இருக்க வேண்டும்.. என்ற மனதுடன்.. தன் தாத்தாவையும், இவள் எக்கேடு கெட்டு போனால் என்ன இனி இவள் தொல்லை நமக்கு இல்லை என்று நினைத்துக்கொண்டு பெருமிதமாக நிற்கும் இவள் சித்தி ரேஸ்மா..
அவர்களை பார்க்கும் பொழுதெல்லாம் இதற்கு தானே சித்தி ஆசைப்பட்டாய் என்று கத்தி கேட்க வேண்டும் போல் வெறியாக வந்தது ஆஸ்வதிக்கு. ஆனால் தாம் அவ்வாறு வளரவில்லையே.
ஆஸ்வதி, 22 வயது இளம் மங்கை, நல்ல நிறம் அழுதாலோ அல்லது கோவப்பட்டதோ அவள் மூக்கு தனியாக சிவந்து இருக்கும், பார்க்க அது கூட அழகாக இருக்கும், நல்ல வளவளப்பான தேகம், தலையில் முடி நன்றாக முதுகை தொடும் அளவிற்கு இருக்கும், நெற்றியில் வந்து எப்போதும் நான்கைந்து முடிகள் படிந்திருக்கும், வில் போன்ற புருவம், மயில் விழியாள் என்ற பேருக்கு ஏற்றது போல கண்கள், அழகாக செதுக்கப்பட்ட மூக்கு, அழகாக சுண்டி இழுக்கும் சிவந்த உதடுகள், கொஞ்சம் குட்டைதான் ஆனால் அதற்கு ஏற்றது போன்ற உடல் வாகு..
ஆஸ்வதிக்கு அம்மா கிடையாது.இவள் பிறந்த உடனே இறந்துவிட்டார், இவளது அப்பா தாகூர்.. குழந்தையாய் இருந்த இவளை கவனித்துக்கொள்ள என்று வெளியில் சொல்லிவிட்டு அவரது தேவைக்கு என்று தன் மனைவி இறந்த அடுத்த மாதமே கல்யாணம் செய்துக்கொண்டார். இவள் சித்தி கல்யாணம் செய்துக்கொண்டு வந்த அடுத்த நாளில் இருந்து இவளை கவனித்துக் கொள்ளாமல் வெளியில் செல்வது, தோழிகளுடன் சுற்றுவதையே பொழுது போக்காக இருந்தார். இதை எல்லாம் பார்த்த ஆஸ்வதியின் தாத்தாவும், பாட்டியும் அவளை தங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து வளர்க்க ஆரம்பித்தார்கள். பின் இவளுக்கு பிறகு அவள் சித்திக்கு 6வருடம் கழித்து விஷாலி என்ற ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் தன் அம்மாவை போல் இல்லாமல் தன் அக்காவின் மேல் அவ்வளவு அன்பு வைத்திருந்தாள். பின் இவளுக்கு 16 வயது இருக்கும் போது இவளது பாட்டி இறந்த பின்பு தாத்தாவுடன் இருந்த இவளை அவ்வளவு வருடமாக கண்ணிற்கு தெரியாமல் இருந்த இவள் அப்பாவிற்கு இவளை அப்போது தான் கண்ணிற்கு தெரிந்து தன் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இது அவள் சித்தி ரேஷ்மாவிற்கு பிடிக்கவில்லை என்றாலும் தன் கணவனுக்காகவும், அக்கா அக்கா என்று பின்னால் சுற்றும் தன் மகள் விசாலிக்காகவும் சகித்துக்கொண்டார். அதன் பின் தாத்தா மாதத்திற்கு ஒரு முறை தன் பேத்தியை பார்க்க வருவார். அதன் பின் ஆஸ்வதி கல்லூரி செல்ல ஆரம்பித்த போது அவள் தந்தை ஒரு விபத்தில் அடிப்பட்டு இறந்து போனார்.
அதன் பின் இவளுக்கு ஒரு நாள் போவது ஒரு யுகம் போவது போல் இருக்கும். ஏனென்றால் அவள் சித்தி அவ்வளவு கொடுமைப்படுத்துவார். அனைத்து வேலையையும் இவள் தலையிலே விடியும் பின் கல்லூரி இளங்கலை முடித்து வீட்டில் இருக்கும் இந்த ஒரு வருடத்தில் தான் அவள் சித்தி இந்த திருமணத்தை இவள் தங்கை படிப்பை முன்னால் வைத்து மிரட்டி ஒப்புக்கொள்ள வைத்தாள்.
அவள் சித்தி ஆஸ்வதியை மிரட்டியதே விசாலியின் படிப்பை முன் வைத்து தான். ஆஸ்வதியும் அறிவாளே.. அவள் தங்கை சிறுவயதில் இருந்து மருத்துவம் படிப்பதை தான் கனவாக கொண்டுள்ளாள் என்பதை விசாலி நன்றாக படிப்பாள்.. அவளுக்கு மருத்துவம் மெரிட்டில் சீட் கிடைத்தது தான்.. ஆனால் அதற்கும் அதிகமாக பணம் தேவைப்பட்டது தான்..
அதனால் தான் இத்திருமணம். இப்போது இவள் தங்கை மருத்துவம் படிக்க சென்றுள்ள இந்த நேரத்தில் இவளுக்கு திருமணம் முடிக்க முடிவு செய்தாள் ஆஸ்வதியின் சித்தி.. இதற்கு ஒத்துக்கொள்ளாத தாத்தாவை தன் தங்கைக்காக கஸ்டப்பட்டு சம்மதிக்க வைத்தாள். இப்போது திருமணம்.
ஆஸ்வதி தன் வாழ்க்கையில் எதற்கும் இது வரை ஆசைப்பட்டது இல்லை எது கிடைக்கிறதோ.. அதை வைத்து சந்தோஷமாக வாழ கற்றுக்கொண்டாள் இவள் தாத்தா வீட்டில் இருந்து தன் தந்தை வீட்டிற்கு வந்ததே தன் தாத்தாவினால் தான்.. அவர் தான் இவளிடம். தனக்கு வயதாகிவிட்டது.. உனக்கு பாதுகாப்பான குடும்பம் வேணுமா என்று அவளை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
அங்கு போனவள் எப்போதும் போல தன் படிப்பு வீடு வீட்டு வேலை என்று தன்னை சமாளித்துக்கொண்டாள் அவளுக்கு அங்கு ஒரே ஆதரவு அவள் தங்கை தான்..
அப்போதும் அவளது தந்தை இவளிடம் அன்பை செலுத்தினார் என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அவளும் அந்த வீட்டில் உள்ள பொருட்களை போல ஒரு பொருள் அவரது நண்பர்கள் அவரை கேட்ட சில கேள்விகளால் தான் ஆஸ்வதியை அழைத்து வந்து தன்னுடன் வைத்துக்கொண்டார் அதும் அவருக்கு ஒரு கடமை போல தான்,..
இப்படியாக போய்க்கொண்டு இருந்த வாழ்க்கையில் தான் ஆஸ்வதியின் தந்தைக்கு ஒரு ஆக்ஸிடன்ட் ஆனது கேள்விப்பட்டு ஹாஸ்பிட்டல் ஓடிய போது அவர் தன்னுடைய இறுதிக்கட்டத்தில் இருந்தார் அவரை பார்த்த ஆஸ்வதிக்கு கண்கள் தானாக கலங்கியது அவர் இதுவரை பாசமாக அவளை பார்த்ததில்லை தான்.. ஆனால் தன் கண் முன்னால் நன்றாக இருந்தவர் திடிர் என்று இப்படி உடல் முழுதும் கட்டுடன் படுத்திருந்தது ஆஸ்வதியின் மனதை கலங்கடித்தது.
அவளை கடைசியாக பார்த்த அவளது தந்தை தாகூர் அவளை பார்த்து கண்களால் மன்னிப்பை கேட்டார் அதில் ஆஸ்வதி கலங்கிதான் போனாள்…அவர் அவளை பக்கத்தில் கூப்பிட்டு
“என்ன மன்னிச்சிடு ஆஸ்வதிமா.. அப்பா உனக்கு எதுமே பண்ணது இல்ல மன்னிச்சிடு டா…”என்றார் அவள் கையை இறுக்கி பிடித்துக்கொண்டு அதில் அவளால் ஒன்றும் சொல்ல முடியாமல் அவரை கலங்கிய விழிகளால் நோக்க…
அந்த நொடியே அவர் உயிர் அவரை விட்டு பிரிந்தது அவரது கடைசி நொடியிலா அவர் இப்படி தன்னிடம் முழு பாசத்தையும் கண்களில் தேக்கி வைத்து தன்னை பார்க்க வேண்டும். என்று அவள் நொந்து போனாள் அதன் பின்னால் அவளது சித்தியின் போக்கே வேறையாக இருந்தது.. இவளை வேலை வாங்குவது அவர் வெளியில் சொகுசாக சுற்றுவது என்று தன் காலத்தை ஓட்டினார்..
அப்போது தான் ஆஸ்வதியின் சித்தி அவளுக்கு கொண்டு வந்த திருமண வரன் தான் இது.. அவள் தாத்தா ஆரம்பத்தில் இதில் எதிர்ப்பு தெரிவிக்க…. அப்போது தான் அவருக்கு தெரிந்தது அவரது பள்ளி தோழனின் பேரன் தான் தன் பேத்திக்கு வரன் என்று..அவர் நண்பனை சந்திக்க…. பின் அவர் திருமணத்திற்கு சம்மதித்தார்.. இதில் ஆஸ்வதிக்கு தன் தாத்தா மீது கொஞ்சமே கொஞ்சம் வருத்தம் இருந்தது
இப்போது..அவள் தன் கழுத்தில் ஏறிய மாங்கள்யத்தை ஒருமுறை விரக்தியாக பார்த்து விட்டு திரும்பி தலையை பூமியில் புதையும் அளவிற்கு குனிந்து அருவியாய் பொலியும் தன் கண்ணீரை கட்டுப்படுத்த போராடிக்கொண்டு இருந்தாள். அதனை இன்னும் கொடுமை ஆக்க அவளை எழுப்பிவிட்டு அவளுக்கு தற்போது தாலிக்கட்டிய அந்த முகம் தெரியா தன் கணவனுடன் அந்த அக்னியை சுற்றி வலம் வந்தனர். இடை இடையில் அவன் தன்னை வேறு எங்கோ இழுப்பதும் அவனுக்கு முன்னால் போனவன் அவனை ஒழுங்காக அழைத்து செல்வதுமாக இருந்ததை தன் சிவப்பு நிற சாலின் வழியாய் அவளுக்கு தெரிந்தது.
பின் அதே இடத்தில் இருவரையும் உட்கார வைத்து ப்ரோகிதர் மணமகனிடம் குங்குமத்தை நீட்டி வைக்க சொல்ல அவனுக்கு பக்கத்தில் நின்ற அவனுக்கு ஆரம்பத்தில் இருந்து உதவிய அந்த வாலிபன் அவன் காதில் எதோ சொல்ல அவனும் விளையாட்டை கேட்பது போல தன் அருகில் உட்கார்ந்திருந்த அவளின் தலையில் அணிந்து இருந்த துணியை விலக்கிவிட்டான்,
இப்போதும் ஆஸ்வதி குனிந்த தலை நிமிராமல் கண்கள் மூடி தன்னை சமன் செய்துக்கொண்டு இருந்தாள். அந்த வாலிபன் மணமகனின் தலையில் போட்டு இருந்த பூக்களால் ஆன அந்த திரையை எடுத்துவிட்டான்.
அவன் எதோ… காதில் சொல்ல அதுப்படி தன் அருகில் உட்கார்ந்திருக்கும் தன் மனைவிக்கு குங்குமத்தை எடுத்து அவள் வகுட்டில் வைக்கிறேன் என்று பாதி அவள் முகத்திலும், பாதி அவள் வகுட்டிலும் எதோ படம் வரைவது போல வைத்துவிட்டான் சிரித்துக்கொண்டே..
அப்போது தான் ஆஸ்வதி நிமிர்ந்து அவனை பார்த்தாள். ஆனால்.. அவனது முகம் தெரியவில்லை . ஆனால் சர்மா குடும்பத்திற்கு என்று ஏற்றது போன்ற வலிமையான உடல் கட்டு இருந்தது ஆனால் எதோ அவன் சிரித்துக்கொண்டே இருந்தான்… அவனது சிரிக்கும் சத்தம், பேசும் சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டே இருந்தது.. சின்ன பிள்ளை போல தனக்கு எதிரில் இருந்த அனைத்து பொருட்களையும் எடுக்க கையை நீட்டிக்கொண்டே இருந்தான்.ஆனால் அவனுக்கு அருகில் உள்ளவன் அவன் கையை பிடித்து அவனை எடுக்காதவாறு மிரட்டிக்கொண்டும், கொஞ்சிக்கொண்டு இருந்தான்.
இப்பொது அவனது தலையில் உள்ள திரை விலக்கப்பட்டு இருந்தது. அவனது முகம் அனைவருக்கும் தெரிந்தது. அவன் செய்யும் குறும்புகளையும், விளையாட்டுகளையும் எல்லாம் பார்த்த அங்கு சுற்றி நிற்கும் அனைவரும் எதோ இவளை பரிதாபமாக பார்ப்பதை நிற்பதை போல் நின்றிருந்தனர்…
ஆனால் ஆஸ்வதிக்கு அவனை பார்த்தவுடன் எதோ இந்த பூமியே சுழலாததை போல அவனையே இமைக்க மறந்து பார்த்துக்கொண்டு இருந்தாள்.
ஆம், அவன் தன்னையே உணராத அளவிற்கு சின்ன பிள்ளை தனமாக இருந்தான்..
26வயது குழந்தையாக…. அவன் ஆதித் சர்மா
(வருவாள்..)
உங்களின் ஆதரவை என்றும்எதிர்பாக்கும் -ப்ரியா பாண்டு