💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 02
தந்தையின் குரல் கேட்டு மூவரும் அச்சத்தோடு பார்த்தனர்.
“எங்கே இந்த பொண்ணுங்க? போய் பாரு ஜெயா” என மனைவியை ஏவினார் மாரிமுத்து.
கணவன் சொல் கேட்டு தலையசைப்போடு அறையினுள் நுழைந்தவரின் விழிகள் மகள்களைத் தேடி அலைபாய்ந்தன.
“நந்து! ஜானு! அடியே மகி” மூவரின் பெயர்களையும் வரிசையாக அழைக்க,
“பார்த்தியாக்கா இந்த அம்மாவுக்குள்ள கொழுப்பை? உங்களை அழகா கூப்பிட்டு எனக்கு மட்டும் அடியேனு அடைமொழி போடுறாங்க” பாத்ரூமினுள் இருந்து கத்திய மகிஷாவின் வாயைப் பொத்தி,
“ஷ்ஷ் கத்தாத டி லூசு” அவள் தலையில் கொட்டினாள் ஜனனி.
“பாத்ரூம்ல யாரு?” உள்ளிருந்து வந்த சத்தத்தில் ஜெயந்தி கதவில் காது வைத்துக் கேட்க,
“நான் தான் மா” மூவரும் ஒரே கோரசாக சொல்லி வசமாய் சிக்கிக் கொண்டனர்.
“நான் சொல்லி இருப்பேன். நீ எதுக்கு வாயைத் திறந்த” ஜனனி மகிஷாவை முறைக்க,
“நீ மூடிட்டு இருக்க வேண்டியது தானே? எதுக்கு நடுவுல நந்தி மாதிரி வந்த?” மகி அவளை முறைக்க,
“மாட்டியாச்சு. இனி என்ன பிரயோசனம்?” இருவரையும் தீயாக முறைத்தாள் நந்திதா.
“மூனு பேரும் பாத்ரூம்ல என்ன பண்ணுறீங்க?” ஜெயந்தி வாயைப் பிளக்க,
“க்ளீன் பண்ணிட்டு இருந்தோம் மா” என இளித்தவாறு வந்த மூவரது கோலத்தையும் கண்டு வாயில் கை வைத்தார் தாய்.
“எப்படி? உருண்டு பிரண்டு க்ளீன் பண்ணுனீங்களா?” அவர் மேலிருந்து கீழாகப் பார்த்தபடி கேட்டார்.
“ஆமா. ப்ரஷ் இல்லேனு ஜானு முடியால கக்கூஸ் க்ளீன் பண்ணுனா” மகிஷா முகத்தை கோணலாக வைத்துக் கொண்டு கூற,
“ச்சீ உவாக். கருமம் பிடிச்சவளே” அவள் முதுகில் அடித்தாள் ஜனனி.
“அப்பா கூப்பிடுறார். இப்படி தண்ணி வடிய வடிய வந்து நிற்காம ஓடி போய் சுடிதாரை மாத்திட்டு வாங்க” என்றவாறு சென்றார் ஜெயந்தி.
ஐந்து நிமிடத்தில் மூவரும் தந்தை முன் சென்று நிற்க, ஆராய்ச்சிப் பார்வை பார்த்தார் மாரிமுத்து.
மீசையை முறுக்கி விட்டு வெள்ளை வேஷ்டி சட்டையில் ஐயனார் போல் காட்சி தருபவர் அவர். புன்னகைக்கு விலை என்ன என்று கேட்கும் நபர். எப்போதும் கடுகடுப்பாகவே வலம் வருவார்.
பெங்களூரில் கிரமாமப் புறமாக இருக்கும் ரத்னபுரி எனும் ஊரில் தலைமை வகிப்பது ரத்னவேல் குடும்பம். அவரது குடும்பமே அவ்வூரின் விஷேசங்களுக்கு தலைமைப் பொறுப்பை ஏற்கும்.
ரத்னவேல் இறந்து விட, அவரது தலைவர் பதவியும், அரிசி ஆலைகள் நிலபுலன்கள் அனைத்தும் ஒரே மகனான மாரிமுத்துவிற்கு உரித்தாயின.
அவர் ஜெயந்தியை திருமணம் செய்திருந்தார். பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடாது என்று சட்டம் விதிப்பவர் அவர். ஆணாதிக்க சிந்தனை இந்த சமூகத்தில் வாழும் அவர் மனதிலும் ஓரளவு இருக்கத் தான் செய்தது.
அவ்வூரில் அதிகம் படித்தது ஜெயந்தி தான். திருமணத்தின் பின் வேலைக்குச் செல்லக் கூடாது என்று கறாராகக் கூற, கணவன் சொற்படி கலெக்டர் வேலையை விட்டுவிட்டார்.
திருமணம் முடித்து இரண்டாம் வருடத்தில் நந்திதா பிறந்தாள். அதற்கு மூன்று வருடங்கள் கழித்து ஜனனியும் அதற்கடுத்த வருடம் மகிஷாவும் பிறந்தனர்.
சிறு வயதில் அன்பைப் பொழிந்தாலும், அவர்கள் வளர வளர சற்று துரமாகிக் கொண்டவருக்கு, அதிக அன்பு செலுத்தினால் தலைக்கு மேல் ஏறி விடுவார்கள் என்ற எண்ணம்.
அந்த விரிசல் மகள்களுக்கு தந்தை மீது பயத்தை உருவாக்கியது. அவர் சொல்வதைத் தலையசைத்து கேட்க வேண்டுமே தவிர, மறுப்பு சொல்லக் கூடாது.
மூவரும் படிப்பில் சிறந்து விளங்கினர். நந்திதாவுக்கு படிக்க ஆசை இருந்தாலும், பதினைந்து வயதோடு பாடசாலையில் இருந்து நிறுத்தப்பட்டாள்.
தினம் தினம் அழுது கரைந்தாலும், படிக்க வேண்டும் என்ற ஆசையை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டிருக்கும் அக்காவைப் போல் ஜனனியால் இருக்க முடியவில்லை.
“நான் படிக்கனும். எனக்கு தடை சொல்லாதீங்க” அவர் முன் சென்று நின்றாள் ஜனனி.
“தாராளமா போகலாம். ஆனால் அத்தோடு எனக்கும் உனக்குமான உறவு முடிஞ்சு போயிடும்” என்று மிரட்டல் விடுத்தார்.
“என்னங்க” ஜெயந்தி பதறிப் போக, “அது என்னைக்கும் அறுத்துக்க முடியாத உறவு. ஆனால் இப்போ விட்டுட்டு பின்னாடி என்னால படிக்கலையேனு அழுது வடிக்க முடியாது” என அவள் பாடசாலை சென்றாள்.
“படிக்கிறது குற்றம்னு சொன்னவரு அவர் பொண்ணை மட்டும் அனுப்புறது சரியே இல்ல” என்றவாறு மாரிமுத்துவிற்கு ஊரில் நிறைய பேச்சுகள் வந்தன.
அவற்றைக் கேட்டு விட்டு வந்தால் வீட்டில் ஜனனிக்கு அர்ச்சனை விழும். அதற்குப் பயந்து மகிஷா படிப்பை நிறுத்திக் கொண்டாள். ஜனனி தடுத்தும் கேட்கவில்லை.
படித்து முடித்து வேலை கிடைக்கும் வரை, ஜனனி அவளது ஊரில் இயங்கும் சூப்பர் மார்கெட்டில் அக்கவுண்ட் செக்ஷனில் பணி புரிகிறாள்.
“என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” மாரிமுத்து கோபமாகக் கேட்க,
“அது வந்துப்பா குளிச்சிட்டு..” மகி தரையைப் பார்த்துக் கொண்டு சொல்ல,
“குளிச்சீங்க சரி. எங்கே? கடல்லயா?மழையிலேயா?” அவரது கோபமே கூறியது மழையில் நனைந்தது தெரிந்து விட்டது என்று.
எதிர்வீட்டில் வசிப்பவன் பார்த்துக் கொண்டிருந்தது நினைவு வர, நிச்சயம் அவனது வேலை தான் என்று நினைத்து மூவரும் கருவிக் கொண்டனர்.
“விடுங்க. ஏதோ ஆசையில நனைஞ்சிட்டாங்க” பரிந்து பேச வந்த ஜெயந்தியை முறைத்து,
“இப்படி பாவம் பார்த்துத் தான் பிள்ளைங்க கெட்டுப் போறாங்க. அதுவும் நம்ம முன்னாடி நனையலயே. நம்மளைப் போக விட்டு இல்லாத நேரமா திருட்டு வேலை பார்த்திருக்காங்க. இன்னும் என்னவெல்லாம் மத்தவங்க சொல்லி அறிய வேண்டி இருக்கோ?”
மூவர் மனதையும் அவ்வார்த்தைகள் வெகுவாய்த் தாக்கின.
“இதே மழையில போய் தோட்டத்தை சுத்தம் பண்ணனும். அதான் உங்களுக்கு தண்டனை” கோபமாக கையில் இருந்த துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு சென்றார் மாரிமுத்து.
“அய்யோ இப்போ மாத்தின ட்ரெஸ் திரும்ப நனைஞ்சிருமே. கழுவுறதுக்கு ஒரு செட்டு துணி கூடிரும்” தலையில் கை வைத்தாள் மகி.
“உனக்கு அதான் பெரிய கவலை இல்ல?” அவளை இரு பக்கமாக இழுத்துக் கொண்டு சென்று தோட்டத்தை சுத்தப்படுத்தத் துவங்கினர் சகோதரிகள்.
……………..
“என் யுகி டார்லிங்கு என்ன வேணும்?” பல்கோணியின் பிடியில் அண்ணன் மகனை அமர வைத்தவாறு கேட்டான் தேவன்.
“எனக்கு உங்களை மாதிரி டிஷ்யூம் டிஷ்யூம் பண்ணனும் சித்தா” கைகளைப் பொத்தி அவன் வயிற்றில் குத்திக் காட்டினான் யுகன்.
“ஹய்யடா செம்ம. நீ இங்கே தானே இருப்ப. நான் சொல்லித் தர்றேன். சித்தா மாதிரி பாக்ஸர் ஆகலாம்” அவன் கன்னத்தில் முத்தமிட,
“வேணாம் யுகி. நீ என்னை மாதிரி டாக்டர் ஆகிடு” என்றவாறு வந்தான் ரூபன்.
“நோ ரூபி. எனக்கு அது வேணாம். டிஷ்யூம் டிஷ்யூம் தான் ஆசை” என்றதும் தேவன் விழுந்து விழுந்து சிரிக்கத் துவங்க, “ரூபியா?” திறந்த வாய் மூட மறந்தான் ரூபன்.
“ஷாக்க குறைங்க ப்ரோ” தேவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க,
“நிக் நேம்” என்றான் யுகி.
“அவனுக்கு மட்டும் சித்தா எனக்கு ரூபியா? பொம்பள பெயர் மாதிரி இருக்கு. நிக் நேம் வெக்கிற மூஞ்சைப் பார்” அவன் கன்னத்தைக் கடித்து வைத்தான்.
“குழந்தையைக் கடிக்காத ரூபி” சிரிப்பினூடே சொன்ன தேவனைக் கண்டு, வெறியாகி அவனை அடிக்கலானான் உடன்பிறந்தவன்.
“சித்தா அடி வாங்காதீங்க. குத்துங்க அப்படித் தான் கமான்” கை கொட்டி சிரித்தான் யுகன்.
சிரிப்பு சத்தம் கேட்டு அங்கு வந்த சத்யாவின் விழிகள் அனைத்தும் மறந்து சிரிக்கும் மகனின் மீது நேசம் மீதூற நிலைத்தன.
“இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு. எந்திரிங்க டா” இருவரையும் மேகலை அதட்ட,
“இந்த பிரச்சினைக்கே நீங்க தான் காரணம் மம்மி” குற்றஞ்சாட்டும் பாவனையில் ரூபன் சொல்ல,
“நான் என்னடா பண்ணேன்?”
“அப்பா சொன்ன மாதிரி தீபன்னு வெச்சிருக்கலாம். தீபுன்னு அழகா நிக் நேம் வரும். ரூபன்னு உங்க ஆசைப்படி வெச்சு என்னை பொம்பளையாக்கிட்டீங்க” முகத்தைச் சுளித்துக் கொண்டு ரூபன் கூற,
“பாட்டியை திட்ட வேணாம் ரூபி” என்று யுகி சொன்னதும், மேகலை சட்டென சிரித்து விட சத்யாவின் இதழ் கடையோரம் புன்னகை அரும்பிற்று.
“டாடி கூட சிரிச்சுட்டார்” யுகி தந்தையிடம் தாவ, அவனை அணைத்து கன்னத்தில் முத்தமிட்டான் சத்யா.
“நீ இப்படியே சந்தோஷமா இருக்கனும் சத்யா. நான் சொன்னபடி உனக்கு பொண்ணு பார்க்கலாமா?” என்று கேட்டார் மேகலை.
நொடிப்பொழுதில் அவன் புன்னகை மறைந்து போக, “சந்தோஷம் பொண்ணுனால வராது. அவளுங்களால கிடைக்கிறது வெறும் வலியும் வேதனையும் தான்” என்றான், முகம் இறுக.
“எஸ் பாட்டி! நானும் டாடியும் இருக்கோம். அம்மா தேவையே இல்லை” என கோபமாக உள்ளே ஓடி விட்டான் யுகன்.
சத்யாவை விட, யுகனின் கோபமே மற்றவருக்கு அதிர்வை உண்டாக்கியது.
“அவனுக்கும் இப்படி ஒரு எண்ணத்தை கொடுத்துட்டல்ல” சினத்தோடு தேவன் சொல்ல,
“என்னாலயே இதை அக்ஸப்ட் பண்ணிக்க முடியல தேவா. அவன் அம்மாங்குற உறவையே வெறுக்குறான்” தலையை அழுத்தமாக கோதிக் கொண்டான் சத்யா.
“உனக்கு அம்மா வேணும். ஆனா அம்மா பாசம் கிடைக்காமலே அவன் வளரனுமா? நீ எதுக்கு இவ்ளோ செல்ஃபிஷ்ஷா இருக்கேனு எனக்கு தெரியல” தேவ் வெறுப்பைக் கக்க,
“இனாஃப் தேவா. இதுக்கு மேல நீ பேசக் கூடாது” ரூபனின் முகம் சிவந்து போனது.
“உனக்கும் அவர் பேசுறது தான் சரில்ல? என் அம்மாவுக்கு எதுவும் ஆச்சுன்னா நான் சும்மா இருக்க மாட்டேன்” சத்யா மற்றும் ரூபனை நோக்கி விரல் நீட்டி எச்சரித்து விட்டுச் சென்றான் தேவன்.
“நா.. நான் உன்னை என்னம்மா பண்ணப் போறேன்? இவன் எதுக்கு இப்படி பேசுறான். ஹீ ஹர்ட்ஸ் மீ” கண்களை மூடித் திறந்தான் சத்யா.
“வாங்கம்மா. ரெஸ்ட் எடுக்கலாம்” ரூபன் தாயை அழைத்துக் கொண்டு அறையினுள் செல்ல,
“இவனுங்க ஏன்டா அடிச்சுக்குறாங்க. அவன் கல்யாணம் பண்ணிக்காம எவ்வளவு காலம் தனியா வாழ்வான்? கல்யாணம் பண்ணிக்க சொன்னா கேட்க மாட்டேங்குறான். அந்த குழந்தை தாயில்லாத பிள்ளையா வளர்றதை பார்க்கிற சக்தி எனக்கில்லை” ரூபனின் கையைப் பிடித்துக் கொண்டு அழுதார் மேகலை.
“ம்மா! சீக்கிரம் எல்லாம் மாறிடும். எனக்கு நம்பிக்கை இருக்குமா. எப்படியாவது அண்ணனை கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சுடலாம். நீங்க ஸ்ட்ரைன் பண்ணிக்காதீங்க. ப்ளீஸ் மா. நான் சொல்லுறதைக் கேளுங்க” அவன் கண்களும் கலங்கிப் போயின.
“எனக்கு நம்பிக்கை படிப்படியா குறைஞ்சு போகுது. என் குழந்தைங்களை சந்தோஷமா வாழ வெச்சுப் பார்க்க நெனக்கிறது தப்பா” என அழுதவருக்கு மாத்திரை கொடுத்து தூங்க வைத்தான் ரூபன்.
உறங்கும் தாயைப் பார்த்தவனோ, “உன்னை சந்தோஷப்படுத்திப் பார்க்க நான் என்ன வேணா பண்ணுவேன்மா” என்றவனின் விழிகள் மனதில் உதித்த எண்ணத்தினால் பிரகாசித்தன.
“ஏன்டி என் குழந்தையை அநாதையாக்கிட்டு போன? உன்னை என்னிக்குமே நான் மன்னிக்க மாட்டேன்” பழைய நினைவுகளின் தாக்கத்தில் பூச்சாடியை எட்டி உதைத்தான் சத்யஜீவா.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி
2024-12-03