💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 04
“அக்கோவ்! நான் தூங்கப் போறேன்” என்று மகிஷா சொல்ல, “தூங்குறதா இருந்தா மூடிட்டு தூங்கு டி. லைட் ஆஃப் பண்ணிடு” என்றாள் ஜனனி.
நந்திதா ஏற்கனவே உறங்கியிருக்க, “கும்பகர்ணி தூங்கிருச்சு. வௌவால் கொட்ட கொட்ட முழிச்சிட்டு பூ பறிக்க போகுது” என்றவளை,
“அவ கும்பகர்ணி. நான் வௌவால். நீ என்னடி தேவாங்கா?” என முறைத்தாள்.
“நான் தேவதை. தேவதை மாதிரி அழகா இருக்கேன்ல?” புருவம் உயர்த்தினாள்.
“என் கண்ணுக்கு அப்படி தெரியலடி. ஆனால் உனக்கு வர்றவனுக்கு நீ தேவதையா இருக்கலாம். இப்போ போடி”
“என்னை விரட்டுறல்ல. அப்பறம் பார்த்துக்கிறேன். குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்” கொட்டாவி விட்டவாறு போர்வைக்குள் புகுந்தாள் இளையவள்.
அவளைப் பார்த்து சிரித்து விட்டு லைட்டை அணைத்தவளோ நேரத்தைப் பார்க்க, இரவு பத்து மணியைக் காட்டியது.
பத்து மணிக்கு அவளுக்கு மனதில் அலாரம் அடித்து விடும். அது அவளவனோடு பேசும் நேரம்.
“ஹாய்” என மேசேஜ் அனுப்பி விட்டு, பதில் வரும் வரை அவனது டிபியை நோக்கினாள்.
கறுப்பு நிற ஷர்ட் அணிந்து, வலது பக்க கையை மடிப்பது போல் போஸ் கொடுத்திருந்தான். மாநிறம், உதட்டுக்கும் வலிக்காத புன்னகையைச் சிந்தினான் அந்த ஆடவன்.
அவன் ராஜீவ்!
ஜனனியின் இதயம் கவர்ந்தவன். மாரிமுத்துவின் தூரத்து சொந்தம். வெளியூரில் வசிக்கிறான். அவனை இதுவரை நேரில் கண்டதில்லை.
ஃபேமிலி க்ரூப்பில் இருந்தவன் அவளோடு நட்பாகப் பேச, அவளும் பேச ஆரம்பித்தாள். நட்பு காலப் போக்கில் காதலாக மலர்ந்தது.
ஆனால் காதலாக இருவரும் பேசியதில்லை. ஒருவர் மனதில் ஒருவர் இருப்பதை அறிந்தாலும் அதைச் சொல்லிக் கொள்ளாமல் நட்பாகவே பேசுவார்கள்.
அவனை ரசித்திடும் பொழுதில் “ஹாய் டி” பதில் அனுப்பி இருந்தான் அவன்.
அந்த டி’யில் உள்ளம் மலர்ந்தது. மனதுக்குப் பிடித்தவரின் உரிமையான பேச்சு அவ்வளவு இனிமையானது அல்லவா?
“என்ன பண்ணுற?” என அவள் கேட்க, அவனும் பதிலுக்குக் கேட்டான்.
“சாப்பிட்டாயா?”
“இன்றைய நாள் எப்படிச் சென்றது?”
“வீட்டில் எல்லாரும் என்ன பண்றாங்க?”
எனும் விதமாக வழக்கம் போல் உரையாடல் நீண்டது.
இன்று நடந்த விடயத்தை அவனிடம் ஒப்புவித்தாள் பெண்.
“ஒருத்தன் இன்னிக்கு என் கையைப் பிடிக்க வந்துட்டான் ராஜ்” என்று அவள் கூறியதும், “என்ன சொல்லுற ஜானு? என்னாச்சு? உனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லையே?” என பதறினான் ராஜீவ்.
“கையைப் பிடிச்சா சும்மா விடுவேனா? அதே கையை அவன் கன்னத்தில் பதிச்சுட்டுத் தான் வந்தேன்” என்று கூற, “தட்ஸ் குட் ஜானு. இப்படித் தான் தைரியமா இருக்கனும். பயந்தா இன்னும் இன்னும் வருவானுங்க. இவனுங்களை நாலு சாத்து சாத்தனும்” என்றான் அவனும்.
“எல்லாம் ஓகே. ஆனால் அப்பா என்னைப் புரிஞ்சுக்காம இருக்கிறது தான் என்னவோ பண்ணுது. நான் என்னமோ தப்பு பண்ண மாதிரி வஞ்சிட்டே இருக்கார்” தனது உள்ளக்கிடக்கையை அவனிடம் கொட்டினாள்.
“இது இன்னிக்கு நடக்கிற விஷயம் இல்லையே. அதைப் பற்றி யோசிக்காம ஃப்ரீயா விடு. அவரும் ஒரு நாள் உன்னைப் புரிஞ்சுப்பார். கவலைப்படாத” என ஆறுதல் கூறினான்.
“எனக்கு ஒரு ஃபோட்டோ அனுப்புறியா டா?” அவள் கேட்டதும் மறு நொடியே புகைப்படம் பறந்து வந்தது.
அவனைப் பார்த்த போது அவள் கவலைகள் மாயமான உணர்வு. அவனது புன்னகை அவள் இதழ்களிலும் ஒட்டிக் கொண்டது.
“சூப்பர் ராஜ்” அவள் பதில் அனுப்ப, அவளிடமும் புகைப்படம் கேட்டான்.
அவனுக்கு அழகாக ஃபோட்டோ எடுத்து அனுப்ப, “செம்மயா இருக்க ஜானு. அவ்ளோ அழகு” என்ற குறுந்தகவலைப் பார்த்து அவள் முகம் வெட்கச் சாயை பூசிக் கொண்டது.
இருவரும் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
“நான் போகட்டுமா ஜானு?” அவன் கேட்டதும் அவளுக்கு முகம் வாடியது.
“போகனுமா?” அந்த வார்த்தை ஏக்கம் சுமந்து வந்ததை உணர்ந்தானோ இல்லையோ, “நாளைக்கு ஒரு எக்ஸாம் இருக்கு. இப்போ தூங்கினா தான் போகலாம்” என்றான் அவன்.
“ஓகே. போயிட்டு வா” அவசரமாக அனுப்பி வைத்தவளுக்கு, போகின்றவனைப் பிடித்து வைக்க முடியவில்லை. போகாதே என்று சொல்லவும் முடியவில்லை.
“ஓகே டி. நீயும் தூங்கு. குட் நைட்” சென்று விட்டான் அவன்.
தரையில் சாய்ந்து மேலே பார்த்தவாறு யோசனைக்குச் சென்றாள். அவன் மேல் அவ்வளவு காதல். ஆனால் அந்தக் காதலுக்கு காலாவதித் திகதி எப்போது வருமோ?
அதனை நினைக்கும் போது இமை தாண்டி வழிந்தது கண்ணீர். அவளது காதல் அவளுக்கே வேடிக்கையாக இருந்தது.
“நான் உன்னை ரொம்ப லவ் பண்ணுறேன் ராஜ். எனக்கு நீ வேணும். ஆனால் நீ எனக்கு கிடைப்பியா?” வாய் விட்டுக் கேட்டவளுக்கு துக்கத்தில் தொண்டை அடைத்தது.
லைட்டைப் போட்டு மேசையில் இருந்த டைரியை எடுத்து கிறுக்கினாள். தான் எழுதியதைப் பார்த்த போது கண்ணீர் துளிர்த்தது. இறுதி வரிகளை உரத்து வாசித்தாள்.
“ஏக்கங்கள் பல
எதிர்பார்ப்புக்கள் சில – இன்று
ஏமாற்றமாய்க் கழிகிறது…
கனவுகள் கலைந்திடுமா?
என்னும் தவிப்பிலும் கூட
வண்ணமயமான கனவுகள் காண்கிறேன்
உன்னோடு வாழும் வாழ்க்கைக்காக!”
அவள் கண்களில் ராஜீவ்வை எண்ணி கண்ணீர் வழிந்தது. சட்டென அதைத் துடைத்துக் கொண்டு, மகியின் பக்கத்தில் உறங்கிப் போனாள் ஜனனி.
……………….
மறு நாளும் இனிதென விடிந்தது. யுகனை மடியில் அமர வைத்து கதை கூறிக் கொண்டிருந்தார் மேகலை.
“உன் அப்பா கிட்ட ஒரு அம்மாவை கூட்டி வரச் சொல்லு கண்ணா” மேகலை ஆசையோடு கூற, “எங்கம்மாவால தானே அப்பா இப்படி இருக்கார்? அம்மானு எனக்கு யாருமே வேணாம் பாட்டி” என மறுத்தான் அவன்.
“எல்லா அம்மாவும் அப்படி இருக்க மாட்டாங்க. எங்கம்மாவைப் பார். என் மேல, உன் அப்பா மேல, சித்தா மேல எவ்ளோ பாசமா இருக்காங்க” என்றவாறு வந்து அமர்ந்தான் ரூபன்.
“உங்களுக்கு அம்மாவைப் பிடிச்சிருக்கு. அதனால கூட இருக்கீங்க. எனக்கு அம்மாவைப் பிடிக்கல. சோ நான் வேணாம்னு சொல்லுறேன். ரெண்டுமே சேம் தான்” கண் சிமிட்டிச் சொல்லி விட்டுச் செல்ல, மேகலைக்கு முகம் வாடியது.
“ம்மா! நாங்க இப்படியே பேசிப் பேசி இருந்தா எதுவும் நடக்கப் போறதில்ல. நான் ஜோசியர் கிட்ட கேட்டு கொஞ்சம் போட்டோஸ் கொண்டு வந்திருக்கேன். அதில் அண்ணாவுக்கு சிலெக்ட் பண்ண சொல்லுவோம்” போட்டோக்களை அவரிடம் கொடுக்க,
“நான் காட்டினா அவன் ஒன்னை சிலெக்ட் பண்ணி கொடுத்துடுவான்னு நம்புறியா? அவனைப் பற்றி எனக்குத் தெரியும்” என்றார், மகனை அறிந்தவராக.
“அப்படிப் பண்ணுவார்னா யூ.எஸ்ல இருந்து வந்திருக்கவே வேணாமே. ஆனால் இங்கே வந்தவரை நல்லா பயன்படுத்திக்கனும். உங்க கையில் தான் எல்லாம் இருக்கு. எப்படியாவது உருட்டி மிரட்டி அவரை சம்மதிக்க வைக்கிறது உங்க பொறுப்பு” என்று விட்டான் ரூபன்.
“அந்த சீரியல்ல வருமே ஹார்ட் அட்டாக் வர்ற போல நடிச்சு கல்யாணத்துக்கு சம்மதம் வாங்குற மாதிரி. போலி டாக்டர் தேடவும் தேவையில்லை. உண்மையான டாக்டர் நீயே இருக்க. எனக்கு உதவி செய்றியா?” என மேகலை கேட்க,
“மம்மி! நீங்க எங்கேயோ போயிட்டீங்க. ஆனால் எனக்கு இதில் உடன்பாடு இல்ல. வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க” எனும் போது சத்யா வந்து விட்டான்.
“என்னம்மா ஒரே ஜாலி மூட்ல இருக்கீங்க. இவனுக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சிட்டீங்களா?” ஒரு போட்டோவை எடுத்துப் பார்த்தவாறு சொல்ல, “எனக்கில்ல. உனக்கு தான்ணா. நானே ஜோசியர் கிட்ட போய் எடுத்துட்டு வந்தேன்” என்றது தான் தாமதம், அவனது ஷர்ட் காலரைப் பிடித்து விட்டான் அண்ணன்காரன்.
“என்ன நெனச்சிட்டு இருக்கே நீ? எனக்கு எவளும் வேண்டாம்னு சொன்ன பிறகும் இதே மாதிரி பண்ணுனா என்னடா அர்த்தம்?” கோபம் தாளவில்லை அவனுக்கு.
“அவன் கிட்ட எதுக்கு கோவிச்சுக்கிற? நான் சொல்லித் தான் ரூபன் இதைப் பண்ணான். நீ ஒரு ஃபோட்டோவை எடுத்துக் கொடுத்தே ஆகனும்” சற்றே வன்மையாக மொழிந்தார் மேகலை.
“ப்ளீஸ்மா! என்னை ஏன் இப்படி ஆளாளுக்கு டார்ச்சர் பண்ணுறீங்க? நான் யுகி கூட சந்தோஷமா வாழுறேன். இதுக்கு மேல வேற எதுவும் வேண்டாம்” ஈற்றில் கெஞ்சிப் பார்த்தான் மூத்தவன்.
“இல்ல சத்யா. நீ சொல்லுறதை என்னால ஏத்துக்க முடியாது. ஏனோ தானோனு இருக்கே. உன்னை இப்படியே விட முடியாது. நீ கல்யாணத்துக்கு சம்மதிக்கலனா நான் உன் கிட்ட பேச மாட்டேன்”
“எமோஷனல் ப்ளேக் மெயில் பண்ணுறீங்களா? என்ன பண்ணுனாலும் இந்த முடிவில் இருந்து நான் மாற மாட்டேன். உங்க சொல்லுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் நான் இதை விட மோசமா வாழுவேனே தவிர, சந்தோஷம் என்னிக்கும் கிடைக்காது” தனது பிடியில் வலுவாக நிற்கலானான் சத்யா.
“சத்யா! நீ யுகியைப் பற்றி யோசி. அம்மா இல்லாம வாழுறது ரொம்ப கஷ்டம் டா. இப்போ இல்லைனாலும் ஒரு கட்டத்திற்கு மேல் அவங்க மனசு தாய்ப் பாசத்துக்காக ஏங்க ஆரம்பிக்கும். இப்போ கூட அவன் மனசுல அந்த ஏக்கம் இருக்கலாம். உனக்காக மறைச்சிட்டு இருக்கானோ என்னவோ?” மகனுக்கு எடுத்துச் சொல்ல முயன்றார் தாய்.
“அம்மா இல்லாம வாழுறது கஷ்டமா இருக்கலாம். அம்மா இறந்த பிறகு எத்தனை ஆண்கள் தனியா இருந்து பிள்ளைகளை வளர்த்து இருக்காங்க. இன்னொரு கல்யாணம் பண்ணி அவங்க மூலமா வளர்க்கனும்னு இல்லை. என் பையனை நான் பார்த்துப்பேன்” இறுதி முடிவாக அவன் அறிவிக்க, ரூபனும் மேகலையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“சோ! நீ அம்மா பேச்சுக்கு மரியாதை கொடுக்க மாட்ட?” ரூபன் கோபமாகக் கேட்க, “அதை நான் அப்போவே சொல்லிட்டேனே. நீங்க தான் தேவையில்லாம இவர் கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணுறீங்க” அலட்சியக் குரலில் சொன்னான், அங்கு வந்த தேவன்.
“தேவா….!!” மேகலை மறுப்பாகத் தலையசைக்க, “அவர் முடியாதுன்னு க்ளியரா சொல்லிட்டார்ல? நீங்க பேசலனா கூட பரவாயில்லையாம். அப்பறம் எதுக்கு இன்னமும் அதைப் பற்றி யோசிச்சு உங்க உடம்பைக் கெடுத்துக்கிறீங்க?” கேள்வி தாயிடம் இருந்தாலும், பார்வை உடன் பிறந்தவனிடம் இருந்தது.
“தேவ் போதும்! நீ எதுவும் பேசாத” என்று சத்யா சொல்ல, “ரெண்டு பேரும் பேசிட்டாங்க. மூனாவது நான் பேசனும். எனக்கும் அந்த உரிமை இருக்கு” என்றவன் ஏதோ சொல்ல, அதிர்ந்து நின்றான் சத்யா.
அனைத்திலும் மேலாக, அடுத்து சத்யா சொன்ன விடயம் அவர்களைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்திற்று.
தொடரும்……!!
என்ன டார்லிங்ஸ் மண்டை காயுதா?
ஒவ்வொரு கேள்விக்கும் பதில் கிடைக்கும். இப்போ கொஞ்சம் எமோஷனலா போற மாதிரி எனக்கு தோணுது. போகப் போக கதையோட போக்கு மாறும். அழுத்தமாக மாறலாம். வெயிட் பண்ணுங்க.
ஷம்லா பஸ்லி
2024-12-07