அத்தியாயம்-1 “அடியே எருமமாடு.. எவ்ளோ நேரம் எழுப்பிக்கின்னு இருக்குறது.. கொஞ்சமாச்சும் காதுல வாங்கிக்கின்னு எழுதா பாரு.. இதெல்லாம் எங்க உருப்புட போவுது.. சனியன் சனியன்..”என்று அந்த வீட்டின் வாசலில் உட்கார்ந்தவாறே கத்திக்கொண்டிருந்தார் குமுதா.. குமுதாவின் கைகள் அதுப்பாட்டிற்கு முன்னால் இருந்த விரகடுப்பில் இருந்த இட்லி குண்டானில் தண்ணியை பிடித்து அடுப்பை பற்ற வைத்து அதில் தூக்கி வைத்தார் அந்த இட்லி குண்டானை.. நெருப்பில் உட்கார்ந்திருக்கும் எரிச்சல் ஒருப்பக்கம் என்றால் வியாபாரத்திற்கு நேரம் ஆனது ஒருபக்கம் எரிச்சல் வேறு.. இன்னொரு அடுப்பில் சாம்பார் கொதித்துக்கொண்டிருக்க.. “என்னா குமுதாக்கா நாஸ்ட்டா ரெடியாக்கிக்ககினு இருக்கு போலற்குத்தே..”என்று வடசென்னை பாசையில் பேசிக்கொண்டு ஒருவன் வர.. “ம்ச் காலையிலையே ஒரண்ட இழுக்க வந்துக்கினியா நீ.. போன மாசம் தர வேண்டிய காச தந்துட்டு நாஸ்ட்டா வாங்க வா.. இல்ல சுடுதண்ணிய கொண்டாந்து மூஞ்சில ஊத்திப்புடுவேன்..”என்று எகிறினார் குமுதா.. “அய்ய.. இப்போ அதுக்கு இன்னாத்துக்கு அவசரம்.. நான் என்ன ஓடியா பூடபோறேன்.. தோ இன்னாண்ட இருக்கு என் வூடு.. காச கொடுக்காம என்னா பண்ண போறேன்..”என்று அவன் குழைய.. “அடச்சி.. அன்னாண்ட போ.. நாலு இட்லிக்கு சாதத்துல போட்ட பருப்பாட்டம் குழையறான்.. இவன் மூஞ்ச பாத்தா விடியுமா இந்த நாளு..”என்று குமுதா கத்த “ஆமா ஆமா அப்டியே என்னாட மூஞ்ச பாக்கலனா மட்டும் ஒன்னோட நாலுனா குடுச பெருசா மாளிகையாயிடுமா.. வந்துட்ட பெருசா பேச..”என்று அவனும் எகுற “அடிங்க்கூ.. நொன்ன என்ன என் கடைக்கின வந்து கத்திட்டு இருக்க கசமாளம்.. ஒத்த காசு குடுத்து இட்லி வாங்கி திங்க வக்கில்ல.. பேசுற பேச்ச பாரு அமெரிக்க அதிபர் கணக்கா… ஓடியா போய்டு நாய இல்ல சுட சுட கொதிக்கிற சாம்பார உன் மேலுக்கா ஊத்துனேனு வையி.. ஏற்கனவே காக்கா துப்பி போட்ட மாங்கா மாறிதான் இருக்க.. இத வேற ஊத்துனா காக்கா கூட சீண்டாத மாதிரி ஆகிடுவ.. ஓடிப்போ.. பரதேசி..”என்று கத்த அவனோ பயந்து போனவனாக பம்மிக்கொண்டு ஓடிப்போக… “ஓடுது பாரு தொட நடுங்கி.. கரப்பான் மூச்சிய திருப்பி போட்ட மாதிரி ஒரு உடம்பு அதுக்கு வக்கன கேக்குது.. த்தூ தேறி..”என்றவாறே இட்லியை ஊற்றி அடுக்க.. “ம்மோய்…”என்றவாறே வந்தாள் குமுதாவின் கடைசி மகள் காமினி.. “என்ன கடக்குட்டி.. இன்னா வேணும்..”என்று குமுதா வேலையை பார்த்தவாறே கேட்க “ம்மோய்ய்.. இந்த சடைய பின்னிவிடு.. ஸ்கூலுக்கு நேரம் போய்ட்டே இருக்கு..”என்று அவள் கத்த.. “ம்ச் பெரிய மாடு எங்கன தான் போச்சோ.. காலையிலையே இப்டி வந்து நின்னுட்டு என் உசுர வாங்குறீங்க..”என்று புலம்ப.. “அக்கா காலையிலையே அந்த ஜிம்முக்கு போச்சே நீ பாக்கல..”என்று சின்னக்குட்டி போட்டுக்கொடுக்க.. அதில் குமுதா அதிர்வாக வாயில் கையை வைத்தவர்.. “ஏன்டி காலையில இருந்து நான் இங்கனேவே தானடி குந்திக்கினு இருக்கேன்.. இது எப்போ நடந்தது..”என்று கேட்க “ம்ம் நீ கருமமே கண்ணா சாம்பாருக்கு காய் வெட்டும்போது தான் நடந்தது..”என்றவள் இரண்டு ரிப்பன்களையும் எடுத்துக்கொண்டு போய் தன் அன்னையிடம் நீட்டியவாறே நிற்க “ம்ச் இங்கன வேணாம்.. அங்க போய்டுவோம்.. இங்க குந்திக்கினு சீவுறத பாத்தானுங்க இந்த கசுமாளுங்க முடியே இல்லைனாலும் சாம்பார்ல முடி, சட்னில முடினு காச குடுக்காம ஓடப்பாப்பானுங்க..”என்ற குமுதாவோ அவளை அழைத்துக்கொண்டு இன்னொரு பக்க தின்னைக்கு வந்துவிட.. “ம்மோய்.. நான் அழகா இருக்கனா..”என்றாள் சின்னக்குட்டி வழமை போல.. “ம்ச் ஆமா இருக்குறது குடுச.. இதுல அழகு ஒன்னு தான் கொறச்ச..”என்று பக்கத்து வீட்டுக்காரி சங்கீதா கத்த “அடியேய்.. குடுசைல இருந்தாலும், மாளிகையில இருந்தாலும் என் மவளுங்க அழகுதான்.. மொதல உன் புருஷன காலையிலையே காசு இல்லாம இட்லி வாங்க அனுப்புறத நிறுத்து.. அப்புறம் என் பொண்ணுக்கிட்ட வரலாம்..”என்று கத்திய குமுதாவோ.. “புருஷனுக்கு இட்லி இல்லனு சொல்லிட்டனாம் அந்த சினம் பாரு அந்த சங்கூதுற வயசுல சங்கீதாவுக்கு..”என்று குமுதா திட்டியவாறே தலை சீவிவிட அதில் வாயை மூடி சிரித்த சின்னக்குட்டியோ.. “ம்மா நீ நல்லா கலாய்க்கிறம்மா… அப்டியே கோவை சரளா மாறி..”என்று கூற அதில் குமுதாவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.. “ஏன் சின்னக்குட்டி அம்மா அப்டியா பேசுக்கின..”என்று கேட்க ஆம் என்று தலையை ஆட்டினாள் அவள்.. “ம்ச் ம்மா தலையில நெறையா எண்ணெய் வச்சிக்காத.. ம்ச் வெயில்ல போனா வழியிது…”என்றாள் சிணுங்களாக.. “ஏன்டி.. அப்பால தான் முடி நல்லா உசரமா வளரும்..”என்றவர் அவளுக்கு நன்றாக சீவிவிட.. சட்டென்று தன் பெரிய பெண்ணின் நியாபகம் வர… “அந்த ராங்கி கூட சேராதடி.. முடிய ஒட்டுக்கா கட்டு பண்ணி வச்சிருக்கா பாரு..கொஞ்சமாச்சும் இந்த வளந்த மாடுக்கு பொண்ணுன்னு நினைவு இருக்கா இல்லையானு தெரில.. விடிஞ்சதும் அந்த ஓட்ட சைக்கிள தூக்கிக்கிட்டு தடிப்பய மாறி ஓடிக்கின்னே இருக்கு ஜிம்முக்கு.. அங்க போயி அரைக்கா சட்ட ஒன்ன போட்டுக்கினு கண்டவனையும் குத்திக்கிட்டு நிக்குது.. ஒருநா இல்ல ஒருநா அவ கைய ஒடைக்கல.. என் பேரு குமுதா இல்ல..”என்று அவர் வழமையாக எடுக்கும் சபதத்தை எடுக்க.. அதில் சிரித்த காமினி.. “நான் ஒன்னாங்கிளாஸ் படிக்கிறதுல இருந்து இதான்மோய் சொல்ற.. இப்போ நான் பத்தாங்க்ளாஸ் படிக்கிறன்.. ஆனாலும் நீ சொன்னத ஒருநா கூட செஞ்சி நான் பாக்கல..”என்று பெண்ணவள் குலுங்கி சிரிக்க.. அதில் குமுதாவிற்கே சிரிப்பு வந்துவிட்டது.. “சேட்டக்காரி..”என்று காமினியின் தலையில் வலிக்காமல் தட்டியவர்.. “கண்ணு நல்லா படிக்கிற இல்ல..”என்று கேட்க.. “ம்ச் அதெல்லாம் படிக்கிறன்மோய்.. நீ வேணா பாறேன் அக்கா எப்டி பத்தாவதுல ஃபஸ்ட் மார்க் எடுத்து நியூஸ்ல எல்லாம் வந்துதோ அதே போல நானும் வருவேன்.. ம்ம் பன்னென்டாவது கூட வருவேன்..”என்று கூற அதில் அகம் மகிழ்ந்து போனார் குமுதா.. “குட்டி அம்மா தெனமும் இதெ சொல்றேனு கோச்சிக்காதடா அம்மாக்கு பயம்.. எங்க என்ன மாறியே என் பொண்ணுங்களும் மாட்டிக்குமோனு.. அதான் சொல்றேன்.. யாராவது லவ் கிவ்வுனு வந்தா மயங்கிடாதீங்க கண்ணு.. அம்மாவுக்கு நீங்க ரெண்டு பேரும் நல்லா படிச்சி பெரிய ஆள் ஆகனும்னு ஆச.. அம்மா மாறி கெட்டு சீரழிஞ்சிடாதீங்கடா..”என்று ஆற்றமையாக கூற காமினியோ தன் அம்மாவை நிமிர்ந்து பார்த்தவள் அவர் கண்ணில் வழியும் கண்ணீரை துடைத்து விட்டவாறே.. “நாங்க உன் பொண்ணுங்கம்மா.. உன்னோட கஷ்டத்த பாத்தே வளந்தவங்க.. ம்ச் என்னிக்கும் நானோ அக்காவோ உனக்கு கஷ்டத்த குடுக்கமாட்டோம்.. அதும் அக்காகிட்ட யாராலையும் நெருங்கவே முடியாதுல்ல.. என்னை பத்தியும் என் ஸ்கூல்ல பல பேருக்கு தெரியும்.. எனக்கு ஒரு ரெளடி அக்கா இருக்கா.. எங்கிட்ட யாராச்சும் நெருங்குனா அப்புறம் அவனுங்க கதி அரோ கதி தானு.. அதுனால யூ டோன்ட் வொரி அபவுட் மீ.. உனக்கு அக்கா பத்தி தான் வொரி பண்ணிக்க நெறையா விசியம் இருக்கு..”என்றாள் அவள்.. குமுதாவோ தன் மகள் நாலு வார்த்தை இங்கிலீஸில் பேசியதையே ஆச்சரியமாக பார்த்தவர்.. அவளை நெட்டி முறித்தவர்.. “என் கண்ணு, என் செல்லம் எப்டிலாம் இங்கிலீசுல பேசுது பாரு.. என் பட்டு..”என்று கொஞ்ச.. அவளோ குலுங்கி சிரித்தவள்.. “ம்மோய்ய்ய் நான் பேசுறது டப்பா இங்கிலீசு தான்.. ஆனா அக்கா பேசுது பாரு அதான் அப்டியே டாப்புல போற இங்கிலீசு தெரிமா..”என்றவள் தன் அன்னையிடம் தலையை பிண்ணிய வாறே எழ.. “ம்ச் இங்கிலீசு நல்லா பேசி என்ன புரோஜனம்.. இப்டி ஆம்பள தடியனுங்க கூட சேர்ந்துட்டுல்ல சுத்துது வெளக்கமாத்து கட்ட..”என்று குமுதா தன்னுடைய பெரிய பெண்ணை திட்ட.. “அட வுடுமா.. அக்கா இப்டி இருக்குறது நமக்கு எம்மா நல்லது தெரியும்ல.. எந்த காவாலி பயலும் நம்மான்ட நெருங்கறதில்ல.. அது மட்டுமா உன்ற புருஷன் அவரும் தானே.. அக்கா மட்டும் இப்டி வீரமா இல்லனு வையி நம்மள தூக்கினு போயி வித்துடமாட்டான்..”என்று காமினி கூற தன் மகள் கூறுவதும் நிஜம் என்பது போல தலையசைத்தார் குமுதா. குமுதா சென்னையில் இருக்கும் நுங்கம்பாக்கத்தில் கொட்டிக்கிடக்கும் சேரி வாழ்மக்களில் ஒருவர். வசதியானவர் இல்லை என்றாலும் ஒரு காலத்தில் சென்னையில் எண்ணெய் கடை வைத்து நடத்திய நடுத்தர வர்கத்தை சேர்ந்த மாணிக்கத்தின் மகள். மாணிக்கத்திற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள். அவர் தான் குமுதா. குமுதா வீட்டின் செல்லமகளாக வளர்ந்தவர். அவரின் இந்த சேரி வாழ்க்கைக்கு காரணம் காதல் தான். ஆம் நன்றாக செங்கொழுந்தாக வளர்ந்தவர் சரியான தர லோக்கல் கண்களில் மாட்டியது தான் விதியின் கோரமோ தெரியவில்லை.. அதுவோ குமுதாவின் வாழ்க்கையை அகோரமாக்கியது. வெங்கடேஷன் கடைந்தெடுத்த சோம்பேறி. குமுதா கல்லூரி படிக்கும் போது அவர் நடந்து போகும் இடத்தில் கட்டிக்கொண்டிருந்த பங்களாவில் தான் வெங்கடேஷன் சித்தாள் வேலையில் இருந்தான். அவன் கண்களில் கழுத்தில், காதில் நகையுடன் வெள்ளை தோலில் கொழு கொழுவென இருக்கும் குமுதா மாட்ட.. அன்றில் இருந்து குமுதா வாழ்க்கை அவனால் கெடுக்கப்பட்டது. அவள் வரும் வரை நன்றாக வேலைப்பார்ப்பவன் குமுதா கல்லூரி செல்லும்போதும், திரும்பி வீட்டிற்கு போகும்போதும் நல்ல கலர் கலர் சட்டையை போட்டுக்கொண்டு வந்து ஸ்டைலாக நிற்பவனை கண்டு குமுதாவிற்கு ஒரு மாதிரி சிலுசிலுப்பாக தான் இருந்தது. முதலில் குமுதா அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் நேர்கொண்ட பார்வையாக தான் சென்று கொண்டிருப்பாள். ஆனால் போகப் போக அவள் வயதின் காரணமாக அவனின் மீது ஒரு ஈர்ப்பு தான் வந்தது குமுதாவிற்கு. முதலில் கள்ளத்தனமாக குமுதா அவனை பார்க்க அதுவோ வெங்கடேசனுக்கு கிளுகிளுப்பை தான் தந்தது. “டேய் வெங்கடேஷு கிளி நம்பக்கிட்ட மாட்டிகிச்சுடா..” என்று மனதில் நினைத்துக் கொண்டவன். ஒரு தரம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு நேராகவே அவளிடம் சென்று தன் காதலை கூறிவிட்டான். அதனைக் கேட்ட குமுதாவோ முதலில் பட படவென விழிகள் அடிக்க நின்று கொண்டிருந்தவள் பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் தன் வீட்டிற்கு ஓடி விட்டாள். மேலும் இரண்டு நாட்கள் அவன் அவளின் முன்னாலே வந்து நின்று கொண்டிருந்தவனை அவள் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. பொருத்து பொருத்து பார்த்த வெங்கடேஷனோ அதன் பின்பு நான்கு நாட்கள் அவள் கண்ணில் படாமல் மறைந்து நின்றான். எப்போதும் நம் கண் முன்னாடியே நிற்பவன் நான்கு நாட்களாக காணாமல் போனது அவளுக்கு ஒரு வித படபடப்பை கொடுத்தது. விழிகள் படபடக்க சுற்றிமுற்றி அவனை தேடிய குமுதாவிற்கு அப்போதுதான் தெரிந்தது அவனை எந்த அளவிற்கு தான் காதலிக்கிறோம் என்று., உடனே அவனை தேடிக் கொண்டிருந்தவளுக்கு சடார் என்று தன் முன்னால் வந்து நின்ற வெங்கடேசனை கண்டு விழிகள் கலங்க ஆரம்பித்தது.. அதனை அவள் காதலாகவே எடுத்துக்கொண்டாள்.. “நீங்க எங்க போனீங்க நான் எவ்ளோ நாளா உங்கள தேடிட்டு இருக்கேனு தெரியுமா..இந்த நாலு நாளா நீங்க எங்க போனீங்க..” என்று குமுதா கலக்கத்துடன் கேட்க அதுவோ வெங்கடேஷுக்கு தன் பால் விழுந்த பெண்ணவளை நினைத்து ஒரு வித கர்வம் தான் தோன்றியது. “ஆமா நான் தான் என் காதல உன்கிட்ட சொன்னேனே.. ஆனா நீ ஏத்துக்கலையே அப்புறம் எதுக்கு என்னை தேடுற..” என்று அவள் வாயாலேயே தன் காதலை வாங்க விரும்ப. அதனைக் கேட்டவளோ விழிகள் படபடக்க நின்றவள் “நானும் உங்களை காதலிக்கிறேன்..” என்று பட்டென்று கூறிவிட்டாள் குமுதா.. அன்று ஆரம்பித்தது குமுதாவிற்கான அழிவு காலம்.