21. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 21

 

காலை நேரம். எழில் பாடசாலை செல்வதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தான். 

 

“காஃபி போட்டு எடுத்துட்டு வர்றேன் எழில்” என்று சொன்னவாறு நந்திதா அறையை விட்டு வெளியில் வந்தாள்.

 

அன்னம்மாள் சமயலறையில் இருப்பதைப் பார்த்தவளுக்கு உள்ளே செல்லவும் தயக்கமாக இருந்தது. ஆனால் அப்படியே இருக்க முடியாமல் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சென்றாள்.

 

அவளைப் பார்த்த அன்னம்மாள் “என்ன?” எனக் கேட்க, “அவருக்கு காஃபி போடனும்” தயக்கமாக உரைத்தாள் அவள்.

 

“இவ்ளோ நாளும் நீ தான் போட்டியா? நான் காபி போட்டு வெச்சிருக்கேன். உனக்கு மட்டும் நீ போட்டுக்க” என்றவாறு காஃபியை எடுத்துக் கொண்டு சென்றார்.

 

நந்திதாவுக்கு மனம் குமைந்தது. அவளை யாரும் இப்படி பேசியது இல்லை. அவளுக்கு மட்டும் காஃபி போடத் துவங்கினாள்.

 

“எழில்! காஃபி குடி” அன்னம்மாள் நீட்டிய காஃபியை வாங்கியவன், “நந்து காஃபி போடுறேன்னு போனா. அவ கிட்ட வேணாம்னு சொல்லிடுங்க மா” என குடித்து முடித்தான்.

 

“நான் சொல்லியாச்சு. என்னமோ பேந்தப் பேந்த முழிச்சிட்டு நிற்கிது அந்தப் பொண்ணு. உனக்கு வேற பொண்ணே கிடைக்கலையா?” என்று கேட்டு விட்டார் அவர்.

 

“வாயை மூடிட்டு இருந்தா இப்படி பேசுவீங்க. அதுவே வாய் திறந்து பேசினா திமிருன்னு சொல்லுவீங்க. எனக்கு நந்துவைத் தான்மா பிடிச்சிருக்கு. அவ இப்போ என் பொண்டாட்டி. சோ அவளை எதுவும் சொல்லாதீங்கம்மா” மென் குரலில் கூறியவன்,

 

“நீங்க அவ கூட அன்பா இருக்கலனா கூட பரவாயில்லை. ஆனால் எதுவும் சொல்ல வேண்டாம். என்னை நம்பி வந்திருக்கா. நீங்க பிரச்சனை பண்ணுனா நான் யார் பக்கத்தை எடுக்கிறது? எனக்கு ரெண்டு பேருமே வேணும்மா. ப்ளீஸ் எனக்கு அப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையைத் தராதீங்க” என்று கெஞ்சலுடன் மொழிந்தான்.

 

அவன் சொன்னது அன்னம்மாளின் வாயை அடைக்க, வேலைக்கு செல்பவனை எதுவும் சொல்லி அனுப்ப வேண்டாம் என நினைத்தார்.

 

“சரிப்பா. நான் எதுவும் சொல்லல” என்று கூற, புன்னகைத்து விட்டு அறையினுள் நுழைந்தான்.

 

காஃபி குடித்து விட்டு வந்த நந்துவைப் பார்த்து, “நான் ஸ்கூல் போறேன்” கழுத்துப் பட்டியைக் கட்டினான்.

 

“சரிங்க” தலையசைத்தவளது விழிகள் அவன் மீது ஏக்கத்துடன் படிந்தன.

 

“நீங்க போனா எனக்கு போரடிக்கும். சீக்கிரம் வந்துருங்க. மிஸ் யூ என்றெல்லாம் சொல்ல மாட்டியா?” அவன் கேட்க, அமைதியாக தலையசைத்தாள்.

 

“நான் உன் ஹஸ்பண்ட் நந்து. உனக்கு என்ன தோணுனாலும் என் கிட்ட சொல்லலாம். உனக்கு ஏதாவது வேணுமா கேளு. ஏதாவது பிரச்சினையா தயங்காம சொல்லு. மனசுக்குள்ளயே எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு இருக்காத. வெளியில் சொல்லிடனும்” என்று சொல்ல,

 

“நானும் சொல்லனும்னு தான் ஆசைப்படுறேன். ஆனால் சின்ன வயசுல இருந்து அமைதியா இருந்தே பழகிப் போச்சு. எனக்கு அது பிடிக்கும் இது வேணும்னு கேட்டது இல்லை. என்ன நடந்தாலும், எது கெடச்சாலும் அதை ஏத்துப்பேன்” தனது அந்த நிலை மட்டும் அவளுக்கு என்றுமே பிடிக்காது.

 

ஆனால் சிறு வயது முதல் அப்படியே பழகியவளுக்கு அந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்வது பெரும் சவாலாக இருந்தது.

 

“ஆனால் என் விஷயத்தில் மட்டும் நீ வித்தியாசமா பண்ணுனல்ல. நான் வேணும்னு வந்த தானே? அதனால என் கிட்ட மட்டும் நீ வித்தியாசமா நடந்துக்கனும். அதாவது உன் இயல்பை விட்டு வெளியே வந்து, என்னவானாலும் என் கிட்ட சொல்லனும். சரியா?” அவளது கன்னத்தைப் பிடித்து ஆட்டினான்.

 

“சரி. நான் முயற்சிக்கிறேன். மதியம் என்ன பண்ணுறது? அத்தை என் கிட்ட பேச மாட்றாங்க” கவலையோடு அவள் கேட்க,

 

“இனி எதுவும் சொல்ல மாட்டாங்க. நீ போய் அவங்களுக்கு ஏதாவது உதவி பண்ணிக் கொடு. மலர் காலேஜ் போயிட்டா. நீ தான் அம்மாவைப் பார்த்துக்கனும்” என்று பதிலளித்தான்.

 

“ம்ம். சீக்கிரம் வந்துடுவீங்கள்ல?” அவன் செல்வது அவளுக்கு சோர்வைக் கொடுக்க, “சீக்கிரம் வர முடியுமா? பிள்ளைகளுக்கு படிச்சு கொடுத்துட்டு வருவேன். டேக் கேர் நந்து” அவளது தலை வருடி விடை பெற்றுச் சென்றான் எழிலழகன்.

 

……………..

விடியலில் எழுந்து அமர்ந்த சத்யாவுக்கு இன்று எழுந்தவுடன் ஜனனி ஞாபகம் வந்தது. அவளை எழுப்பி அனுப்ப வேண்டுமே என்று எழுந்து பார்க்க, அவளோ சுருண்டு படுத்திருந்தாள்.

 

“இந்தப் பொண்ணு எழும்பவே எழும்பாதா? எனக்கு தூக்கம் இல்லாம போகுது இவளால” சலித்துக் கொண்டவன், வேகமாகச் சென்று ஃப்ரெஷ் ஆகி வந்தான்.

 

அவனது கால் பட்டு கதிரை கீழே விழ, யுகன் அங்குமிங்கும் அசைய, “இன்னும் தூங்கு யுகி” அவனைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்தான் அவன்.

 

‘செயார் விழுந்த சத்தத்துக்கு கூட சுரணை இல்லாம படுத்திருக்கா. உலகமே இடிஞ்சு விழுந்தாலும் விளங்காது போல’ உள்ளுக்குள் புறுபுறுத்துக் கொண்டு, “ஜனனி” என்று அழைத்தான்.

 

ம்ஹூம் கொஞ்சம் கூட அசையவில்லை. மீண்டும் அழைத்தவனுக்கோ பொறுமை பல மைல்கள் சென்று விட அங்கிருந்த ஜக்கை எடுத்து அவள் மீது தண்ணீரை ஊற்றி விட்டான்.

 

“மழை மழை” கை கால்களை உதறிக் கொண்டு எழுந்து அமர்ந்தவளுக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

கையில் ஜக்குடன் நின்றிருந்த சத்யாவைக் கண்டதும் என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்தவளுக்கு பற்றிக் கொண்டு வந்தது.

 

“எதுக்கு என் மேல தண்ணி ஊத்துனீங்க?” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கக் கேட்டாள் ஜனனி.

 

“எழுப்பினா எழும்ப முடியாதா? கத்திக் கத்தி முடியாம போய் லாஸ்ட்க்கு தண்ணி ஊத்திட்டேன்” சாதாரணமாக சொல்ல, “நான் என்ன உங்க மடியிலயா தூங்குறேன்? என் பாட்டுல யாருக்கும் பிரச்சினை இல்லாம தரையில் தூங்குறேன். அதுவும் பொறுக்காம கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்படி நடந்துக்குறீங்க?” அவளால் அவன் செய்ததை ஏற்க முடியாது போயிற்று.

 

“ஹலோ ஹலோ! மனசாட்சி பற்றி நீ பேசக் கூடாது. அதுக்கான தகுதி உனக்கு கொஞ்சமும் கிடையாது” ராஜீவ்வின் நினைவில் சொல்ல, “ஏன் கிடையாது? நான் என்ன பண்ணுனேன்?” ஏகத்துக்கும் எகிறியது அவளுக்கு.

 

“ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி மூஞ்சை வெச்சுக்கிட்டா உன்னை எங்க வீட்டில் மத்தவங்க வேணா நம்புவாங்க. ஆனால் நான் நம்ப மாட்டேன்”

 

“யோவ்! நீ என்னை நம்பனும்னு எந்த அவசியமும் இல்லை எனக்கு” வந்த கோபத்தில் மரியாதை தூரப் பறந்தது.

 

“ஏய் மரியாதையா பேசு. யோவ் யோவ்னு பேசுன பல்லைப் பேத்துருவேன்” முறைத்துப் பார்த்தான் சத்யா.

 

“மரியாதையை கேட்டு வாங்க முடியாது மிஸ்டர். அது தானா வரனும். நீங்க அந்த மாதிரி நடந்துக்காத போது அதைத் தர முடியாது” அவளுக்கும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துப் போக முடியவில்லை.

 

அவனுக்கு ராஜீவ் விடயத்தில் அவள் மீது வெறுப்பு. இது அறியாத பெண்ணவளுக்கு அவனது கோபமும் வெறுப்பும் ஆத்திரத்தைக் கொடுத்தது.

 

“உன் மரியாதை யாருக்கு வேணும்? காலையில் மனுஷன் மூடை ஸ்பாயில் பண்ணவே வந்து விடிஞ்சிருக்கே” என சலித்துக் கொள்ள, “விடிஞ்சது கூட தெரியாம நான் ஒரு ஓரமா தூங்கிட்டேன் தானே? நீங்க என்னை எழுப்பி விட்டு கூத்து காட்டிட்டு என் மேலே பழி போடுறீங்களா?” பதிலுக்கு அவளும் முறைத்தாள்.

 

“நான் ஒன்னும் கூத்து காட்டவும் இல்ல காத்து வாங்கவும் இல்ல. நீ இப்படி தூங்கிட்டு இருக்கிறதை யுகி பார்த்து அம்மா கிட்ட சொன்னா நான் பேச்சு வாங்கனும். அதனால தான் எழுப்பி விட்டேன். இல்லனா உன் மேல தினமும் மழை பொழிய வைக்க எனக்கு எந்த ஆசையும் இல்லை” அடக்கப்பட்ட கோபத்துடன் வெளியில் சென்றான் சத்ய ஜீவா.

 

“ஓஹ்ஹோ கதை அப்படி போகுதா? நேற்று எழுப்பும் போது நானும் கொஞ்சூண்டு நல்லவன்னு நெனச்சேன். ஆனால் இப்போ தானே காரணம் தெரியுது” கடுகடுப்புடன் குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

 

சற்று நேரம் கழித்து வந்த சத்யா யுகியை எழுப்ப, “குட் மார்னிங் டாடி” என்றவாறு எழுந்து அமர்ந்தான்.

 

“குட் மார்னிங் செல்லம். கழுவி விடட்டுமா உன்னை?” அவனைத் தூக்கிக் கொள்ள, ஜனனி வெளியே வந்தாள்.

 

“குட் மார்னிங் ஜானு” ஜனனியைக் கண்டு யுகன் கையசைக்க, “வெர்ரி குட் மார்னிங் யுகி”  பூவாக மலர்ந்தது அவள் வதனம்.

 

“நான் கழுவிட்டு வர்றேன்” என யுகி சொல்ல, “ஓகே. அய்ம் வெயிட்டிங் ஃபார் யூ” அவனது கன்னம் கிள்ளி விட்டுச் சென்றாள்.

 

“ஜானு ஸ்வீட் டாடி” யுகன் அவளைப் பார்த்துக் கூற, “ஸ்வீட்டா? அவ ரெட் சில்லி மாதிரி ரொம்ப ஸ்பைசி” என முணுமுணுக்க, “ஏதாவது சொன்னீங்களா?” அவன் முகத்தை ஆராய்ந்தான் யுகன்.

 

“இல்ல இல்ல டா. ஸ்வீட் ஃப்ரெண்டை எறும்பு மொய்க்காம பார்த்துக்க சொன்னேன்” அவனைக் குளிப்பாட்டி விடச் சென்றான் தகப்பன்.

 

மேகலையைத் தேடி வந்த ஜனனி அவர் மட்டும் அமர்ந்திருப்பதைக் கண்டு, “தேவன் ரூபன் எல்லாம் எங்கே அத்தை?” எனக் கேட்டாள்.

 

“வாக்கிங் போகனும்னு ரெண்டு பேரும் போனாங்க மா” அவளை அன்போடு நோக்கினார் மேகலை.

 

“சரிங்கத்தை. இன்னிக்கு நான் தான் டிஃபன் பண்ணுவேன். நீங்க உட்கார்ந்து இருங்க” எனக் கூறி, சமயலறைக்குச் சென்றாள்.

 

அடுத்த ஒரு நிமிடத்தில் வாசலில் ஏதோ உடையும் சத்தம் கேட்டு ஓடி வர,  வாயிற்படியில் கோபமாக நின்றிருந்தான் தேவன்.

 

முன்னால் வைக்கப்பட்டிருந்த பூச்சாடி கீழே உடைந்து சிதறியிருந்தது. அவன் தான் உடைத்திருக்க வேண்டும் என யூகித்துக் கொண்டாள் ஜனனி.

 

மேகலை கவலையோடு நிற்க, “டேய் தேவா! காம் டவுன்” ரூபன் அவனைச் சமாதானம் செய்ய முயன்றான்.

 

“என்னை மட்டும் கூல் பண்ணு‌. ரோட்டுல போறவன் வர்றவன் எல்லாம் என்னை கேள்வி கேட்கிறான். அவனை எதுவும் கேட்க மாட்ட நீ” தலையை அழுத்தமாகக் கோதிக் கொண்டான் தேவன்.

 

“யார் என்ன சொன்னாங்க?” என்று மேகலை வினவ, “இன்னிக்கு வினி ஃப்ரெண்டைப் பார்த்தோம். வினியை எதுக்கு கை விட்டீங்க? அவ ரொம்ப பாவம்னு சொல்லிட்டா. அதுக்கு தான் இவன் இப்படி கோவப்படுறான். அவ கிட்டவும் கெட்ட கெட்ட வார்த்தையா பேசிட்டு வந்துட்டான்” ரூபன் நடந்ததை மறைக்காமல் சொன்னான்.

 

“நா..நானா அவளைக் கை விட்டேன்? என்னை விலகிப் போனது அவ. ஆனால் எல்லாருக்கும் நான் தான் கெட்டவன்ல?” உடைந்த பூச்சாடியைக் காலால் உதைக்க, 

 

“தேவாஆஆஆ” எனும் அழைப்போடு வந்து நின்ற சத்யா மீது, தேவனின் கோப விழிகள் நிலைபெற்றன.

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!