22. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(1)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 22

 

“தேவாஆஆ” எனும் அழைப்போடு வந்த சத்யா மீது தேவனின் கோப விழிகள் திரும்பின.

 

“இவ்ளோ கோபம் ஆகாது தேவா. யாரோ ஒருத்தி சொன்னதுக்காக நீ இப்படி டென்ஷனாகி கத்தலாமா?” என்று சத்யா கேட்க, “அடடா! கோபத்தைப் பற்றி, டென்ஷனைப் பற்றி நீ எனக்கு லெக்சர் எடுக்குறியா?” நக்கலாகச் சிரித்தான் தேவன்.

 

“உன் நல்லதுக்கு தான் சொல்லுறேன். கோபத்தை கன்ட்ரோல் பண்ணிக்க டா” என்று சொன்ன சத்யா அவனது பார்வையில் மௌனம் சாதிக்க, “உன்னால கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியாதுல்ல? அப்படியிருக்க, நீ எனக்கு எப்படி அட்வைஸ் பண்ண வர்ற?” என்று கேட்டவனின் குரலில் அத்தனை கோபம்.

 

“போதும் தேவா” என்று ரூபன் தடுக்க, “எல்லாரும் என்னையே ஸ்டாப் பண்ணுங்க” விறு விறுவென்று அங்கிருந்து சென்றான்.

 

மேகலை கலக்கத்தோடு பார்க்க, ஜனனிக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனால் தேவனுக்கு சத்யா மீது ஏதோ கோபம் என்பதை மட்டும் ஐயமின்றி அறிந்து கொண்டாள்.

 

தேவனிடம் வந்த ரூபன், “என்னடா நெனச்சிட்டு இருக்க உன் மனசுல? சத்யாவை என்னென்னவோ பேசுற? அவன் சொன்னதில் எந்த தப்பும் இல்லை” என்றான்.

 

“சத்யா அட்வைஸ் சொல்லுறது எனக்கு கொஞ்சமும் பிடிக்கல. அவ்ளோ தான்”

 

“நீ கொஞ்சம் ஓவரா தான் போற. சத்யா மேல உனக்கு கோபம் இருக்கலாம். ஆனால் மத்தவங்க முன்னாடி விட்டுக் கொடுக்கிற அளவுக்கு போவேனு நான் எதிர்பார்க்கல. அண்ணி என்ன நெனச்சிருப்பாங்க? இதையெல்லாம் கொஞ்சம் கூட யோசிக்க மாட்டியா?” ரூபனால் உடன் பிறந்தவனின் செயலை ஏற்கவே முடியவில்லை.

 

“நானே எத்தனையோ யோசனையில் இருக்கேன். இதில் அவர் ஏன் தலையிடனும்?” புருவத்தை நீவி விட்டான் தேவன்.

 

“ஏன்னா அவர் நம்மளோட அண்ணா. அதை நீ மறக்காத” அழுத்தமாக மொழிந்தான் ரூபன்.

 

“ஏன் டா நான் எல்லார் கண்ணுக்கும் தப்பா தெரியுறேன். என்னை விட்டுப் போனது வினிதா தானே? ஆனால் அந்த பழியும் என் மேல விழுது. அவ சின்சியரா லவ் பண்ணாளாம். நான் என்ன டைம் பாஸ்க்கா லவ் பண்ணேன்?” என்று கேட்கும் போதே அவன் இதயத்தில் வலி ஊடுறுவியது.

 

காலேஜில் வினிதா தேவ் என்றால் பிரபலமான காதல் ஜோடி. அப்படி ஒரு நெருக்கம் இருவருள்ளும். இணைபிரியா ஜோடியாக இருந்தனர். ஆனால் பிரிந்து விட்டனரே.

 

“ஒன்னு கேட்கிறேன். வினி திரும்ப வந்தா நீ ஏத்துப்பியா?” அவனைக் கூர்ந்து பார்த்தான் ரூபன்.

 

“விட்டுப் போனவ எதுக்கு திரும்பி வரனும்? அவ போய் ரெண்டு வருஷம் ஆச்சு டா. இப்போ எங்கே எப்படி இருக்காளோ?” கண்களை மூடித் திறந்தான் ஆடவன்.

 

“எனக்கென்னவோ அவ உன்னை விட்டு சும்மா போனதா தெரியல. நீ ஈகோ வெச்சுட்டு சண்டை போட்டியா?” என்று அவன் கேட்க, “அப்படியே சத்யாவை மாதிரி கேட்கிற. அண்ணன் புத்தி தானே உனக்கும் இருக்கும். போடா” என வெளியில் செல்லும் போது அங்கு வந்து நின்றாள் ஜனனி.

 

“அ..அண்ணி” தட்டுத்தடுமாறிய தேவனுக்கு அவளை எதிர் கொள்ள என்னவோ போல் இருந்தது.

 

“டென்ஷன் ஆகாதீங்க. நான் எதுவுமே கேட்கல போதுமா? அண்ணன் தம்பி பிரச்சினைக்குள்ள நான் என்னிக்கும் வர மாட்டேன்” சகஜமாகப் புன்னகைத்தாள் ஜனனி.

 

அவளது பின்னால் வந்த சத்யா அதனைக் கேட்டு, ‘என்னவோ பெரிய உத்தமி மாதிரி பேசுறா. அவ அயோக்கியத்தனம் எனக்கு தானே தெரியும்’ என சொல்லிக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.

 

“அப்பறம் ஒரு விஷயம் சொல்ல வந்தேன். அத்தை ரொம்ப அப்செட் ஆகிட்டாங்க. சோ அவங்களை நீங்க தான் சமாதானப்படுத்தனும். ஏன்னா அவங்க அப்செட்டானது உங்களால” என்று விட்டுச் சென்றாள் ஜனனி.

 

தேவனுக்கு முகம் வாடிப் போக தாயிடம் சென்று அமர்ந்தான்.

 

“ம்மா!” அவரை அழைக்க, “என் கிட்ட பேசாத தேவா” கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டார்.

 

“நான் பண்ணுனது தப்புத் தான். சாரிம்மா. இனிமேல் அவ்ளோ கோபமா சத்யா கிட்ட நடந்துக்க மாட்டேன்” என்றவனுக்கு தான் பேசியது அதிகப்படியோ என்று தோன்றத் தான் செய்தது.

 

“இதை நீ பல தடவை சொல்லிட்ட தேவா. ஆனால் மறுபடி மறுபடி அப்படி நடந்துக்கிற. நானும் எவ்ளோ தான் தாங்குறது? நான் உங்களை ஒற்றுமையா தானே வளர்த்தேன். ஆனால் இப்படி நடந்துக்கிறதால என் வளர்ப்பு தப்பா போகுது. அதை நீ யோசிக்க மறந்துட்டல்ல” கவலையோடு பார்த்தார் மேகலை.

 

“அச்சோ அப்படி இல்ல. உங்க வளர்ப்பு தப்பில்லம்மா. ப்ளீஸ் இப்படி பேசாதீங்க” அவனுக்கு குற்றவுணர்வு மேலிட, “அதான் உண்மை டா. இல்லனா நீ இப்படி பண்ணி இருப்பியா?” அவரால் அவன் செயலை ஏற்க முடியவில்லை.

 

சத்யா கோபக்காரன் தான். ஆனால் அவன் அறிவுரை கூற வந்த போது முகத்தில் அடித்தது போல் பேசியது அவருக்கு வலியைக் கொடுத்தது.

 

“சாரி. சாரிம்மா. நான் இனிமே அந்தளவு ரூடா நடந்துக்க மாட்டேன். சத்யா கிட்ட கோபப்படாம இருக்க ட்ரை பண்ணுறேன்‌” அவரது மடியில் சாய்ந்து கொண்டவனுக்கு கண்கள் கலங்கின.

 

“சரி விடு. இனிமே அப்படி நடக்காமல் இருந்தா அது போதும்” அவனது தலையை வருடி விட்டார் மேகலை.

 

“உங்களைக் கஷ்டப்படுத்தனும்னு நான் நெனச்சதே இல்லம்மா. ஆனால் என்னால கஷ்டம் தான் வருது உங்களுக்கு. ரொம்ப கவலையா இருக்கு” அவரது கையைப் பிடித்துக் கொள்ள,

 

“கவலைப்படாத தேவா. எனக்கு நீங்க மூனு பேரும் ஒற்றுமையா சந்தோஷமா இருக்கனும். அதைத் தவிர நான் வேற எதையும் பெருசா ஆசைப்பட மாட்டேன். என் மூனு பிள்ளைங்களும் எனக்கு ஒன்னு தான்” அவனை அன்பு கனிய நோக்கினார்.

 

தாயின் இதமான தலை கோதலில் கண்களை மூடினான் தேவ். தன் அன்பு அம்மாவிற்காக இனிமேல் சத்யாவிடம் கோபப்படக் கூடாது என்று உறுதியெடுத்துக் கொண்டான். அவ்வுறுதி ஒரு நாள் தகர்க்கப்பட்டு உன் தாயை மீண்டும் நீயே காயப்படுத்தப் போகிறாய் என்று எள்ளி நகையாடியது விதி.

 

தனது அறையில் குட்டி போட்ட பூனை போல் உலவிக் கொண்டிருந்தான் சத்யா. தேவ்வின் பேச்சு கொடுத்த தாக்கம் அவனை விட்டு மீளவில்லை.

 

தேவனுக்கு புத்தி கூறும் அளவு அவன் நல்லவன் இல்லை. ஏனெனில் தேவ்வைப் போல் சத்யாவும் கோபக்காரன். மேகலையின் முகத்தில் தெரிந்த வருத்தத்தைக் கண்டு, அந்நொடி எதையும் யோசிக்காமல் தேவனை ஏசினான்.

 

எனினும் முகத்தில் அடித்தது போல் அவன் அப்படிச் சொல்வான் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. அதிலும் ஜனனியின் முன்பு சொன்னது இன்னும் அவன் மனதைக் குடைந்தது.

 

அறையினுள் வந்த ஜனனிக்கு ஏனோ சத்யாவைப் பார்க்கும் போது ஒருவித கவலை ஏற்பட்டது. மாரிமுத்து திட்டினால் சற்று வேதனை கொள்வாள். அதுவே மற்றவர் முன்னிலையில் திட்டினால் அது பெரும் வலியாக இருக்கும். அவர் பார்த்து விட்டாரே, என்ன நினைத்திருப்பார் என்றெல்லாம் யோசனை செல்லும்.

 

அதே நிலை தான் இப்போது சத்யாவுக்கும் என்பதை தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டாள் ஜனனி. அவனிடம் ஏதாவது பேசலாமா? பேசினால் ஏதாவது நினைத்துக் கொள்வானா? என்ற இரண்டு யோசனையில் இருந்தாள்.

 

அவளைக் கண்டு “என்ன? என்ன வேணும்?” என்று கேட்க, “அது வந்து…” என்ன பேசுவது எனப் புரியாமல் எச்சில் விழுங்க,

 

“எனக்கும் தேவனுக்கும் நடுவில் என்ன பிரச்சினைன்னு கேட்க வந்தியா? நீ எவ்ளோ கேட்டாலும் நான் சொல்லப் போறதில்ல” என்றான் பட்டென்று.

 

“உங்க ரெண்டு பேருக்கும் நடுவில் நான் நுழைய மாட்டேன். அப்படினு நான் சொன்னதை நீங்க ஒட்டுக் கேட்டீங்கள்ல? அப்பறம் எதுக்கு அதைப் பிடிச்சு சண்டை ஆரம்பிக்கிறீங்க?” புருவம் உயர்த்திக் கேட்டாள் அவள்.

 

அவள் தேவனோடு பேசிய சமயம் சத்யா பின்தொடர்ந்து வந்து கேட்டதை ஜனனி கண்டு கொண்டாள். அதைக் கேட்டும் அதே விடயத்தைச் சொல்லி வாக்குவாதம் செய்வது தான் ஏனென்று புரியவில்லை அவளுக்கு.

 

“நான் உன் கூட சண்டை பிடிக்க தவம் கிடக்கல. நீ தான் என் கிட்ட வான்டட்டா வந்து சண்டை போடப் பார்க்கிற” என்று அவன் முறைக்க, “அடேங்கப்பா! இவரு பெரிய பாகிஸ்தான் பச்சரிசி. நான் இவரு கூட சண்டை போட துள்ளிட்டு இருக்கேனாம். கவலையா இருக்கீங்கனு பழசை எல்லாம் மறந்துட்டு உங்க கிட்ட பேசலாம்னு நெனச்சேன் பாருங்க. என் புத்தியை செருப்பால அடிக்கனும்” தன்னைத் தானே திட்டிக் கொண்டாள் மங்கை.

 

“வாசல்ல செருப்பு இருக்கும். அதில் நல்லதா ஒன்னு எடுத்து அடிச்சிக்கோ. இனி என் பக்கம் வந்துடாத” மறுபுறம் திரும்பிக் கொண்டான் சத்யா.

 

“உங்க பக்கம் வைஃபை இருந்தா கூட வருவேன். ஆனால் சண்டை போட வர மாட்டேன். ஒன்னு ஞாபகம் வெச்சுக்கோங்க. எனக்கு உங்க கூட பேசனும், இப்படி வாய் கிழிய கத்தனும், தொண்டைத்தண்ணி வத்த சண்டை போடனும்னு எந்த ஐடியாவும் இல்லை” அவனைக் கடுமையாக முறைக்க,

 

“அப்பறம் யார் கூட பேசனும்னு இப்போ ஐடியா பண்ணிருக்க? சொல்லு பார்ப்போம். இதுக்கு பதில் சொல்லு. வேற யாரையாச்சும் பார்த்துட்டியா என்ன?” ராஜீவ்வின் நினைவில் அவன் கேட்க, அவன் கேட்பதன் உள் அர்த்தம் புரியா விட்டாலும் அக்கேள்வியில் அவள் மனம் காயப்பட்டுப் போனது.

 

“நீ எந்த ஜென்மம்னே தெரியல யா” என கோபமாக சொல்லி விட்டு அவனோடு வாக்குவாதம் செய்யும் எண்ணமின்றி கார்டனுக்குச் சென்றாள்.

 

“ரொம்பத் தான் பண்ணுறா. மட்டு மரியாதை இல்லாம பேச வந்துட்டா. ஒரு நாளைக்கு இருக்கு அவளுக்கு” என்று சத்யா சொல்ல, “யாருக்கு இருக்கு?” எனக் கேட்டவாறு வந்தான் யுகன்.

 

“உன் ஃப்ரெண்டுக்கு தான். என்னை ரொம்ப இன்சல்ட் பண்ணுறா யுகி. எனக்கு கோவமா வருது” தலையைப் பிடித்துக் கொண்டான்.

 

“கோபப்படாதீங்க டாடி. அதனால தானே இன்னிக்கு சித்தா அப்படி சொன்னார். நீங்க கோபம் இல்லாம இருந்திருந்தா நீங்க சொன்னதை சித்தா கேட்டிருப்பார். ஆனால் அவர் கேட்காததற்கு நீங்களும் காரணம் தானே?” யுகன் பேசுவது அவனுக்கு சரியென்று தோன்றியது.

 

“நான் நிறைய தப்பு பண்ணுறேனா கண்ணா?” மகனைத் தவிப்போடு ஏறிட, 

 

“மனுஷனா இருந்தா தப்பு பண்ணுவாங்கனு ரூபி சொல்லி இருக்கார். அதை தப்புன்னு உணர்ந்தா நாம சரி பண்ணிக்கனும்ல. உங்களுக்கு ஏதாவது தப்பா தெரிஞ்சா இனி அதைப் பண்ணாதீங்க. அவ்வளவு தான்” கைகளை விரித்துக் காட்டியவன் அந்நொடி சத்யாவுக்கு அவனது தந்தை போல் தோன்றினான்.

 

“ஆனால் உங்க பாசம் ரைட் டாடி! எனக்கு நீங்க தான் எப்போவும் பெஸ்ட். யூ ஆர் மை சூப்பர் ஹீரோ” அவனது கழுத்தைக் கட்டிக் கொண்டான் யுகன்.

 

ஒருபோதும் தன் மனதைப் புண்படுத்தாமல் அன்பைப் பொழியும் அன்புச் சிட்டை அணைத்து, “தட்ஸ் மை கண்ணா” என அவனது கன்னத்தில் முத்தமிட்டான் தந்தையானவன்.

 

கார்டனில் நின்ற ஜனனிக்கோ அவளது எதிர்காலத்தை எண்ணி மனம் கலங்கியது, முதல் முறையாக. சத்யாவின் கேள்வியை நினைவு கூர்ந்தவளுக்கு ராஜீவ் ஞாபகம் வர, இமை தாண்டி வழிந்த நீரைத் துடைத்து விட்டது ஒரு கரம்.

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!