💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 23
ராஜீவ்வை நினைக்கக் கூடாது என்று தான் நினைத்திருந்தாள். ஆனால் சத்யா இப்படிப் பேசியதும் அவன் நினைவு அவள் முன்னே மண்டியிட்டது.
நிலைக்காத காதல் தான். ஆனால் ராஜீவ் அவளுக்கு என்றும் துணையாக நின்றான். அவளது கஷ்டங்களின் போது அவனிடம் ஆறுதல் தேடுவாள். அவனும் அந்த ஆறுதலைக் குறையாமல் கொடுப்பான். இன்றும் அதே ஆறுதலை எதிர்பார்த்த போது, நிதர்சனம் அவள் புத்தியை சம்மட்டியால் அடித்தது.
தனக்கு திருமணமாகி விட்டது, வேறு ஒரு ஆடவனுடன். என்ன தான் கஷ்ட நஷ்டங்கள் வந்தாலும் இனி ராஜீவ்வை நினைக்கக் கூடாது. அது பெருந்தவறு என தன்னுள் உருப்போட்டுக் கொண்ட ஜனனிக்கு யாரிடமும் சொல்ல முடியாத வலியை மனத்துள் பூட்டி வைத்ததில் கண்ணீர் துளிர்த்தது.
அவள் கண்களைத் துடைத்து விட்ட கரத்தின் ஸ்பரிஷம் அவளுள் இன்ப மலர்களை கொத்துக் கொத்தாக பூக்கச் செய்தது. திறந்த விழிகளுக்கு தரிசனம் கொடுத்தார் ஜெயந்தி.
“அம்மா” தன் முன்னே நின்ற தாயைத் தாவி அணைத்துக் கொண்டாள் ஜனனி.
“ஜானு! என்னம்மா இது? அழாத டா. உன் அழுகையைப் பார்க்கவா இங்கே வந்தேன்?” அவளைப் பதிலுக்கு அணைத்துக் கொள்ள,
“இல்லம்மா. நான் அழல. நீங்க வந்துட்டீங்கள்ல? நான் அழ மாட்டேன்” சட்டென கண்ணீரைத் துடைத்துக் கொண்டு சிரித்தாள்.
“இதான் என் பொண்ணுக்கு அழகு. நீ எப்போவும் இப்படி சந்தோஷமா இருக்கனும்” அவளது நெற்றி வழித்து முத்தமிட, “மகி எங்கம்மா?” தங்கையைத் தேடினாள்.
“அக்காஆஆஆ” தாய்ப்பசுவைக் கண்ட கன்றுக் குட்டி போல் ஓடி வந்தாள் மகிஷா.
“உன்னை விட்டு வந்துட்டாங்களோனு நெனச்சிட்டேன். வந்துட்டியா என் மகி குட்டி?” அவளது கன்னத்தைப் பிடிக்க, “அம்மாவும் அப்பாவும் வந்தா நான் மட்டும் இருக்கனும்னு என்னையும் கூட்டிட்டு வந்துட்டாங்க. என்னை எங்கேயும் தனியா விடக் கூடாதுன்னு அப்பா நினைக்கிறார்” பெரூமூச்சு விட்டாள் மகி.
“தனியா விட்டாங்களோ இல்லையோ நாம ஒழுங்கா இருந்தா போதும் மகி. நந்து விஷயத்தில் அப்பா உடைஞ்சு போயிட்டார். அதனால அவர் அப்படி பயப்படறார். அந்த பயம் ஒன்னுமே இல்லனு சொல்லுற மாதிரி நீ நடந்துக்கிட்டா அது போதும் டி” என்றிட,
“எனக்கு அது தெரியாதா? அப்பாவைப் பார்க்க எனக்கே கஷ்டமா இருக்குக்கா. முன்னெல்லாம் எவ்ளோ தைரியமா வெளியில் போவார். எங்கே வெளியே போனால் நந்து பற்றி தோண்டித் தோண்டி கேட்டு சில பேர் அசிங்கப்படுத்துவாங்களோனு வீட்டில் இருக்கார்” முகம் வாடக் கூறினாள் மகி.
“தோண்டித் துருவுறதை பொழப்பா வெச்சுக்கிற ஆட்களுக்கு வேற வேலை இருக்காது. ஒரு பொண்ணு நல்ல மார்க் எடுத்தா அது தெரிய வாய்ப்பே இல்லை. ஆனால் ஒரு பொண்ணு லவ் பண்ணுனா, ஓடிப் போனா அது காட்டுத் தீ போல பரவிடும். அப்படி பரப்ப மட்டும் தான் பல பேர் காத்துக்கிட்டு இருக்காங்க” வெறுப்போடு சொன்னாள் ஜனனி.
“உள்ளே வாங்கம்மா. எதுக்கு வெளியில் நின்னு பேசிட்டு இருக்கீங்க?” என்று மேகலை அழைக்க, ஜனனி அவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள்.
ரூபனுடன் பேசிக் கொண்டிருந்த மாரிமுத்துவின் மீது ஜனனியின் பார்வை படிந்தது.
“நல்லா இருக்கியா?” அன்போடு அவளை நோக்கியது அவர் பார்வை.
“இருக்கேன்பா. நீங்க எல்லாரும் சந்தோஷமா இருந்தா நான் இன்னும் நல்லா இருப்பேன்” நடந்து முடிந்த விடயங்களை மறந்து சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதை மறைமுகமாகக் கூற, அதைப் புரிந்து தலையசைத்தார்.
“மகியைத் தொடர்ந்து படிக்க அனுப்பலாம்னு நெனச்சி இருக்கேன் மா” ஜனனியைப் பார்த்தவாறு சொல்ல, அவளுக்கு முகம் மலர்ந்தது.
“அப்பா! நெஜமாவா?” துள்ளிக் குதித்தபடி தந்தையின் அருகில் அமர்ந்து கொள்ள, “ஆஆஆ” என கத்தினான் ரூபன்.
“என்னாச்சு ரூபன்?” ஜனனி அவசரமாகக் கேட்க, “உங்க தங்கச்சி ஆர்வக் கோளாறில் என் காலையும் மிதிச்சிட்டு போயிட்டா” என்று அவன் சொல்ல, மகி இளித்து வைத்தாள்.
“அவளுக்கு படிக்க ஆசை. அதான் அப்பா ஓகே சொன்னதும் தலை கால் புரியல” அவள் தங்கைக்காக பேச, “உங்க தங்கச்சியை விட்டுக் கொடுக்க மாட்டீங்கள்ல அண்ணி?” சிரித்துக் கொண்டு ரூபன் கேட்க, தேவனும் வந்து அமர்ந்தான்.
“நீங்க உங்க கூடப் பிறந்தவங்களை விட்டுக் கொடுக்க மாட்டீங்கள்ல? அப்படித் தான் நானும். கூடப் பிறந்த பாசம் இருக்க தானே செய்யும்” என்று அவள் சொன்னது தேவனுக்கு குற்ற உணர்வைக் கொடுத்தது.
அந்த ‘கூடப் பிறந்த பாசம்’ என்பதை மறந்து அல்லவா சத்யாவிடம் நடந்து கொண்டான்? அவனது முகத்தில் தெரிந்த உணர்வைப் புரிந்து கொண்டு கையைப் பிடித்து அழுத்தினான் ரூபன்.
ஜெயந்தி மற்றும் மாரிமுத்து சத்யாவைத் தேடினர். அவனுக்கோ இவர்கள் வந்தது கூட தெரியவில்லை.
“சத்யா! யுகி” என மேகலை அழைக்க, இருவரும் மாடியில் இருந்து வந்தனர்.
ஜனனியின் குடும்பத்தினரைப் பார்த்த சத்யாவுக்கு எப்படி பேசுவது என்று தெரியவில்லை.
“வாங்க வாங்க” பொதுப்படையாகக் கூறி புன்னகைத்தவாறு தேவனின் அருகில் அமர்ந்து கொண்டான்.
“சித்தா! டாடி வேணும்னே உங்க கிட்ட உட்கார்றார். நீங்க தள்ளிப் போக மாட்டீங்களா?” என்று தேவனின் காதில் கேட்க, “சும்மா இருடா சில்வண்டு. இப்படி கேட்குற நீயே தான், எங்க டாடியை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு என் கிட்ட சண்டையும் போடுவ” என ரகசியம் பேச கண் சிமிட்டிச் சிரித்தான் யுகன்.
“நல்லா இருக்கீங்களா மாப்பிள்ளை?” மாரிமுத்துவின் கேள்விக்கு, “இருக்கேன் மாமா” மாமா என்று புன்னகையோடு சொல்வதற்குள் அவனுக்கு மூச்சு திணறிப் போனது.
‘ரொம்ப நடிக்கிறயா நீ. உலகமகா நடிகன்’ உள்ளுக்குள் ஜனனி சொல்ல, அவன் பார்வை அவளைத் தொட்டு மீண்டது.
“நாளைக்கு விருந்து வெச்சிருக்கோம். எல்லாரும் எங்க வீட்டுக்கு கண்டிப்பா வரனும்” என ஜெயந்தி அழைப்பு விடுக்க, “கண்டிப்பா வர்றோம்” என்றார் மேகலை.
ஜனனி டீ போட்டு எடுத்துக் கொண்டு வந்து பரிமாறினாள். சத்யாவிடம் நீட்ட அவனோ வேண்டாம் என மறுக்க, “எடுத்துக்கோங்க” அவன் கையில் திணித்து விட்ட போது அவனால் எதுவும் செய்ய முடியவில்லை.
‘ஜான்சிராணி’ முறைத்துப் பார்த்தான் சத்யா.
“நம்ம அண்ணனுக்கு ஏற்ற ஆள் இவங்க தான் டா” என ரூபன் சொல்ல, “இட்ஸ் ட்ரூ டா” அக்கூற்றை தேவனும் ஆமோதித்தான்.
“சாப்பிட்டு போங்கம்மா” ஜனனி சொல்ல, “வேற ஒரு நாளைக்கு வர்றோம் ஜானு. இன்னிக்கு போகனும். வீட்டுல ஏகப்பட்ட வேலை கிடக்கு” என்ற ஜெயந்தி மேகலையோடு பேசிக் கொண்டிருக்க, ஜனனி சமயலறைக்குச் சென்றாள்.
மொட்டை மாடிக்குச் சென்ற மகிஷாவைப் பின்தொடர்ந்து வந்தான் ரூபன்.
“என்ன சார் என் பின்னாடி வர்றீங்க?” புருவம் உயர்த்திக் கேட்டாள் அவள்.
“உன் காலை மிதிக்கனும்னு வந்தேன். நீ என் காலை மிதிச்ச தானே?” என்றான் அவன்.
“தெரியாம மிதிச்சதுக்கு ஏன் இப்படி பண்ணுறீங்க? வேணும்னே பண்ணி இருந்தா அந்த மிதி பலமா இருந்திருக்கும்” தலையை சிலுப்பிக் கொண்டாள்.
“ஓஹ்ஹோ அப்போ வேணும்னே மிதிப்பேன்னு சொல்லுறியா?” அவளோடு பேசுவது அவனுக்கு சுவாரஸ்யமாக இருந்தது.
“ஆமா மிதிப்பேன், காலை இல்ல உங்க வாயை. அப்பறம் டாக்டர் சார் ப்ளாஸ்டரை வாயில் ஒட்டிக்கிட்டு திரிய வேண்டி வரும்”
“என்னம்மா நீ இவ்ளோ வயலன்டா இருக்கே? நீ பேசுறதைப் பார்த்தா உங்கக்காவை விட பலமடங்கு இருப்ப போல” வாயில் கை வைத்துக் கொண்டான் வைத்தியன்.
“பின்ன? மகிஷான்னா சும்மாவா? என் வாயைக் கிளறினா அவங்க வாயை டேமேஜ் பண்ணிடுவேன்” என்று சொல்ல, “அடடே! பயந்துட்டேன்” பயப்படுவது போல் நடித்தவனைக் கண்டு பயங்கரமாக முறைத்தாள்.
“எனக்கு பயப்படனும்னு சொல்லவே இல்லையே. ஆனால் நீங்க என்னை ரொம்ப சீண்டிப் பார்க்கிறீங்க. நான் எப்போவும் ஒரே மாதிரி இருக்க மாட்டேன்” இடுப்பில் கை வைத்துக் கொள்ள, “அந்நியன் அம்பி ரெமோனு பல அவதாரம் எடுப்பியோ?” என்று கேட்க,
“பேய் மோகினி பிசாசுன்னு கூட அவதாரம் எடுப்பேன்” என்றாள்.
“இப்போவே பார்க்க அப்படி தான் இருக்க”
“உங்களுக்கு ரொம்பத் தான் குசும்பு. நாளைக்கு எங்க ஊருக்கு வருவீங்கள்ல. அப்போ பார்த்துக்கிறேன்” என்று சொல்ல, “பார்க்கலாமே” அவனது பார்வை பாவை மீது ரசனையோடு படித்தது.
மறுபக்கம் மாரிமுத்து சத்யாவோடு கதைத்துக் கொண்டிருந்தார். அவனுக்கோ இலகுவாக அவரது பேச்சில் ஒன்ற முடியவில்லை. எனினும் மரியாதை கருதி அமர்ந்து பதில் சொல்லிக் கொண்டிருந்தான்.
“என் பொண்ணு எதையும் என் கிட்ட ஆசைப்பட்டுக் கேட்டதில்ல மாப்பிள்ளை. கேட்கிற அளவுக்கு நானும் அவ கூட ஒரு அப்பனா நடந்துக்கல. இப்போ உங்க கையில் ஒப்படைச்சிருக்கேன். நடந்து முடிஞ்ச விஷயங்களை மறந்துட்டு அவளை சந்தோஷமா வெச்சுக்கங்க. அதைத் தவிர நான் எதையும் கேட்க மாட்டேன்” என்று சொல்லும் போது மாரிமுத்துவின் குரல் தழுதழுத்தது.
அவளைப் பார்க்கும் போது தந்தையின் செல்லப் பிள்ளை என்று நினைத்திருந்தான். ஆனால் மாரிமுத்து இப்படிச் சொல்வதைக் கேட்டவனுக்கு அவளுக்கும் மாரிமுத்துவுக்கும் நடுவில் இறுக்கமான உறவொன்று இருந்ததில்லை என்று புரிந்தது.
“நான் பார்த்துக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க” என்றவனுக்கு வாக்குக் கொடுக்க மனம் தயங்கியது.
ஜெயந்தி கிளம்ப எத்தனிக்க, “ம்மா! இப்போவே போகனுமா?” ஏக்கத்தோடு கேட்டாள் காரிகை.
“நாளைக்கு வீட்ட வர்ற தானே? பார்த்துக்கலாம் ஜானு. சின்னப் பிள்ளை மாதிரி பண்ணாம சந்தோஷமா எங்களை அனுப்பி வை” மகளின் கையைப் பிடித்துக் கொள்ள, முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டு தலையசைத்தாள்.
“நீ வர்றேனு நினைக்கும் போது செம்ம ஜாலியா இருக்குக்கா. சீக்கிரமே வந்துடு” என்று மகி சொல்ல, “நானும் வருவேன் ஆன்ட்டி” இடையிட்டுச் சொன்ன ரூபனை அவள் முறைக்க,
“உனக்கும் தான்பா. நிச்சயம் வரனும்” என சிரித்தார் ஜெயந்தி.
“மாடு எதுக்கு வாலைத் தூக்குது?” தேவன் அவன் காதில் வினவ, “ஓடத் தான்” பதில் சொன்னான் ரூபன்.
“ஓட மட்டுமில்ல ரூபி, ஆய் போகவும் வாலைத் தூக்கும்” என்று யுகன் சொல்ல, ஜனனிக்கும் அது கேட்டு விட சிரிப்பை அடக்கிக் கொள்ள பெரும்பாடு பட்டுப் போனாள்.
“நீ ரொம்ப ஷார்ப் டா” தேவன் அவனைப் புகழ, ரூபன் முறைத்தான்.
“நாங்க போயிட்டு வர்றோம்” மூவரும் விடைபெற்றுச் செல்ல, அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தாள் ஜனனி.
“நீ மகிஷாவுக்கு ரூட்டு விடுறியா?” என்று தேவன் யோசனையாகப் பார்க்க, “ஜஸ்ட் பார்க்கிறேன் டா. வேற எதுவும் இல்லை” தோளைக் குலுக்கிய ரூபனை சத்யாவும் அதே யோசனையோடு நோக்கினான்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி