26. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(2)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 26

 

“சித்தாஆஆ” தேவனின் காலைப் பிடித்துக் கொண்டு, “போகலாமே. வயலுக்கு தோட்டத்துக்கு எல்லாம் போகப் போறோம். ஜாலியா இருக்கும்” என்று யுகி கேட்க,

 

“சரிடா நான் வர்றேன். ரூபியும் வர்றான். உங்க டாடி தான் உண்ட மயக்கத்தில் நிற்கிறாரு. வர முடியாதாம்” அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த சத்யாவைக் காண்பித்தான் அவன்.

 

“டேய் எரும! அந்த ரூபியை அவன் மறந்தாலும் நீ மறக்க விட மாட்ட போலிருக்கே” ரூபன் முறைக்க, “வெச்சதே நான் தான் ரூபி. யார் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன்” என்றவன் தந்தையின் முன்னால் போய் நின்றான்.

 

“ஜானு இப்போ வந்துடுவா. வாங்க டாடி” 

 

“அதான் எல்லாரும் இருக்காங்கள்ல. நீ ஜாலியா போயிட்டு வா யுகி” தலை தூக்கி மகனைப் பார்த்தான் சத்யா.

 

“போங்க டாடி நீங்க ரொம்ப மோசம்” என்ற யுகன் அங்கு வந்த ஜனனியைக் கண்டு, “ஜானு! டாடி வரலனா நானும் வர மாட்டேன்” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான்.

 

“அச்சோ யுகி. உனக்கு சுற்றி காட்டனும்னு கூட்டிட்டு போறேன். நீயே வரலனா எப்படி?” என்று கேட்டவள், “யுகிக்காக வாங்க” கணவனின் முகத்தைப் பார்த்தாள்.

 

“சும்மா வந்து என்ன பண்ணுறது? நான் பார்க்காத வயலா தோப்பா?” என்று அவன் அலட்சிய தொனியில் கூற, “அதெல்லாம் பார்த்திருப்பீங்க. ஆனால் எங்க ஊரு வயலையும் தோப்பையும் பார்த்ததில்ல தானே? அதுவும் யுகி அதெல்லாம் பார்த்திருக்க மாட்டான். அவனோட ஆசைக்காக வரலாம்ல?” என்று சொன்னாள் ஜனனி.

 

யுகனின் முகத்தைப் பார்க்க, அவன் ஆவலோடு தன்னை நோக்குவது கண்டு “ஓகே” என்று தலையசைக்க, “வாவ் டாடி” தந்தையைக் கட்டிக் கொண்டது குட்டி வாண்டு.

 

தேவனின் அருகில் நின்ற ரூபனின் விழிகள் மகியைத் தேடின. குறும்பையும், சிறு பிள்ளைத்தனத்தையும், கடுகடுப்பையும் மாறி மாறிப் பிரதிபலிக்கும் அவளின் முகம் அவனுள் பதிந்து போனது போன்ற பிரம்மை.

 

“ஹலோ சார்! என்னையா தேடுறீங்க?” அவன் பின்னிருந்து வந்த மகி, “நான் வர மாட்டேன்னு நெனச்சிட்டீங்களோ? அப்படிலாம் தப்பு கணக்கு போடக் கூடாது. உங்களுக்கு பயந்து நான் வராம இருக்க மாட்டேன்” கண் சிமிட்டிச் சென்றாள்.

 

“உனக்கு ஏற்ற ஆள் தான்” என்று சொன்ன தேவனுக்கு வினிதாவின் நினைவு.

 

அவளும் அப்படித் தான். குறும்புக்காரி‌. கோபக்காரனான அவனையே வீழ்த்திய பேசும் கிளியவள். ஆனால் இன்று அவனுள் மேலும் கடுமையை விதைத்து விட்டுச் சென்றவளும் அவளே. தலையை அழுத்திக் கோதி அவள் நினைவுகளில் இருந்து மீண்டு வந்தான் தேவன்.

 

மாரிமுத்து கடைக்குக் கிளம்பிச் சென்றார். மேகலை வர முடியாது என்று ஜெயந்தியோடு தங்கிக் கொண்டார். ஜெயந்திக்கோ சத்யாவின் சிரிப்பில்லா முகத்தைக் கண்டு இன்னமும் உள்ளூர பயம் தான். ஆனால் மற்றவர்கள் ஜனனியோடு நன்றாகப் பழகுவது கண்டு மகளின் வாழ்வு சந்தோஷமாக மாற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். 

 

மற்றவர்கள் வெளியில் சென்றனர். ஜனனியும் மகியும் முன்னே நடக்க, தேவனின் கழுத்தில் யுகன் உட்கார்ந்து செல்ல, ரூபன் அண்ணன் மகனோடு பேசிக் கொண்டு சென்றான். சத்யா அங்குமிங்கும் பார்த்தவாறு பின்னால் சென்றான்.

 

நெற்கதிர்கள் தலைசாய்த்து இளந்தென்றலில் ஆடியசைய, பச்சை மற்றும் தங்க நிறப் பட்டாடை உடுத்திய நங்கை போல் அழகுற விளங்கியது வயல்.

 

“ஜானு! நான் போட்டோல தான் பார்த்திருக்கேன். அழகா இருக்குல்ல” தேவனிடமிருந்து இறங்கி கைகளை விரித்தவாறு ஜனனியிடம் ஓடி வந்தான் யுகன்.

 

“நாம ஃபோட்டோ எடுத்துக்கலாமா யுகி?” தனது அலைபேசியில் அவனை விதவிதமாக ஃபோட்டோ எடுத்தாள்.

 

“என்னையும் எடுங்க” மகியின் கையில் அலைபேசியைக் கொடுத்தான் ரூபன்.

 

“எனக்கு எடுக்கத் தெரியாது” என்றவள் அவனை விலகி நிற்க, “எடுத்துக் கொடு மகி” என்றாள் ஜனனி.

 

“சரிக்கா” தலையசைப்போடு அவனை ஃபோட்டோ எடுத்தாள்.

 

ரூபனுக்கு அவளைப் பார்க்கையில் விழிகளில் ரசனை பெருகிற்று. காற்றில் அசையும் முடிக்கற்றைகள் அவள் முகத்தில் மோதுவதை ரசித்துப் பார்த்தான்.

 

“ஜானு மாங்காய் பறிக்கலாமா?” என்று யுகன் கேட்க, “சரி யுகி! நீ சித்தா கூட இரு. நாங்க போய் பறிச்சிட்டு வர்றோம்” அவனைக் கைகளில் ஏந்திக் கொண்டு வந்து தேவனின் கைகளில் ஒப்படைத்தாள்.

 

சத்யாவின் விழிகள் எதேர்ச்சையாக ஜனனியின் மீது படிந்தன. அவள் யுகனோடு பேசும் பொழுது கண்களில் தெரியும் அன்பு அவனுள் ஏதோ உணர்வுகளை உருவாக்கின. அவள் மீது கோபம் தான். ஆனால் மகன் மீது அவள் வைத்திருக்கும் அன்பு அவனை இளகச் செய்தது.

 

நாம் அளவு கடந்து நேசிக்கும் ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்தினால், அவர் மீது நமக்கு ஒரு நல்லுணர்வு வருவது இயல்பு தானே? ஜனனியின் விடயத்தில் அப்படி ஒரு உணர்வு சத்யாவை ஆட்கொண்டது.

 

தேவனும் ரூபனும் யுகனோடு நிற்க, மற்றவர்கள் மாந்தோப்பு இருக்கும் இடத்தை அடைந்தனர்.

 

“மாமா! இதான் மாந்தோப்பு” என்று மகி காட்ட, “எப்படி மாங்காய் பறிக்கிறது?” புருவம் சுருக்கினான் அவன்.

 

“இந்த மதில் மேல ஏறி குதிச்சா மாந்தோப்பு. ஏறுங்க போகலாம்” என்று ஜனனி சொல்ல, “என்ன இது? குரங்கு வித்தை காட்டவா என்னைக் கூட்டிட்டு வந்த?” கோபமாகக் கேட்டான் சத்யா.

 

“கையை கட்டிட்டு மரத்தைப் பார்த்தா மாங்காய் வாய்க்கு வராது. கொஞ்சம் ட்ரை பண்ணுனா தான் பறிச்சு சாப்பிட முடியும். அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும். அப்படி தான். மெது மெதுவா ஏறிப் பாருங்க” அவள் சொன்ன தத்துவத்தைக் கேட்டு, கடுமையாக முறைத்தான்.

 

“எனக்கு மட்டும் ஏற முடியாது. நீங்க பர்ஸ்ட் ஏறுங்க, யுகிக்காக” என்று சொல்ல, “யுகி பெயரை யூஸ் பண்ணி எல்லாம் செய்யுறல்ல” அவளிடம் முறுக்கிக் கொண்டு மதில் மேல் ஏறினான். 

 

அடுத்ததாக ஜனனி ஏறிக் கொள்ள, சத்யா அவளிடம் பறித்துக் கொடுத்தான். சற்று நேரத்தில் பின் பக்கமாக திரும்பிப் பார்த்து விட்டு, “அய்யோ போச்சு போச்சு‌. இறங்குங்க சீக்கிரம்” என்று கத்த, “என்னாச்சு?” ஒன்றும் புரியாமல் கேட்டான் சத்யா.

 

“இந்த தோப்போட ஓனர் வர்றாரு. இங்கிருந்து ஓடியாகனும். இல்லனா அவ்வளவுதான். அப்பா கிட்டே சொல்லி விட்டுருவாரு” என்று படபடத்தாள்.

 

“என்னது? நீ திருட்டு மாங்கா பறிக்கவா கூட்டிட்டு வந்த? ஏதோ உனக்கு தெரிஞ்சவங்க தோட்டமா இருக்குமுன்னு நினைச்சேன். இப்படியா மாட்டி விடுவ?” அவன் பதிலுக்கு படபடக்க,

 

‘அப்பா சாமி! காம்பவுண்டில் இருந்து கழுத்தறுக்கிறானே’ என உள்ளுக்குள் பிதற்றியவள், “உங்க சண்டையை அப்புறமா வச்சுக்கோங்க. இப்போ முதல்ல தப்பிக்கிற வேலைய பாருங்க” என்றாள், பற்களை அரைத்துக் கொண்டு.

 

சத்யா கீழே குதிக்க, ஜனனி இன்னும் இரண்டு மாங்காய்களை அவசர அவசரமாக பறிக்கத் துவங்கினாள்.

 

“அக்கா! அவர் வர்றதுக்குள்ள வந்துடு. இல்லன்னா செத்தோம்” என மகிஷா சொல்ல, “சரிடி கொஞ்சம் இரு. யுகி ஆசையா கேட்டான். சொல்லிட்டு கொண்டு போகலனா நல்லா இருக்காதே” இன்னும் சிலதை எட்டி பறித்துக் கொண்டவள் குதிக்கும் போது, தடுமாறி சத்யாவைத் தள்ளிக் கொண்டு விழுந்தாள்.

 

“அய்யோ சீக்கிரம் எந்திரிங்க” என்று சத்யாவிடம் பரபரக்க, “லூசு லூசு! நீ எழுந்திருச்சா தான் நான் எழும்ப முடியும். என்ன யோசனைல இருக்க? அறிவில்லாத நீயெல்லாம் எதுக்கு திருட்டு மாங்கா பறிக்க வர்ற?” என்று திட்டினான்.

 

“அதை அப்பறமா பார்த்துக்கலாம். இப்போ ஓடலாம்” காலில் விழாத குறையாக கெஞ்சி அவனை இழுத்துக் கொண்டு ஓடி வந்தாள்.

 

தந்தையைக் கண்ட யுகன், “ரேஸ் ஓடுனீங்களா டாடி? நீங்க தான் ஃபர்ஸ்ட் ப்ளேஸ்” என்று கைகளை உயர்த்திக் கொண்டு துள்ளிக் குதிக்க, “ஆமாடா! ரேஸ் ஓடல. மரதன் ஓட வெச்சுட்டா உன் ஜானு” மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கப் பேசினான் சத்யா.

 

“என்னண்ணா ஆச்சு?” ரூபன் புரியாமல் கேட்க, மகியோடு ஓடி வந்த ஜனனி “அது ஒன்னும் இல்ல கொழுந்தனாரே. மாங்காய் பறிக்கிற இடத்தில் பேய் இருக்குனு சொன்னேனா உங்கண்ணா பயந்து தெறிச்சு வந்துட்டார்” ரூபனின் காதில் சொல்ல, அது சத்யாவின் காதிலும் விழுந்தது.

 

“பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு கதை கட்டுறியா? திருட்டு மாங்கா பறிக்கப் போற மூஞ்சியைப் பாரு” என்று அவன் சொல்ல, “அதுல இருக்கிற டேஸ்ட் பற்றி உங்களுக்கு எங்கே தெரியப் போகுது? போங்க போங்க” என்றவளுக்கு தன் ஊருக்கு வந்ததில் உற்சாகம் பெருகி ஓடியது.

 

கல்லொன்றை எடுத்து மாங்காயை அடித்து உடைக்க, மகி வாழை இலையொன்றைப் பறித்து வந்து தனது கைப்பையில் இருந்த உப்பு மற்றும் மிளகாய்த் தூளை வைத்தாள்.

 

“அண்ணி! நீங்க செம்ம போங்க” என்று ரூபன் சொல்ல, தேவன் வினிதாவின் நினைவுகளில் சிக்கித் தவித்தான்.

 

“இதலாம் எதுக்கு ஜானு?” யுகன் ஆச்சரியமாகப் பார்க்க, “மாங்காயை இதில் தொட்டு சாப்பிட்டா டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும். சாப்பிட்டு பாரு யுகி” அவனுக்கும் ஒன்றைக் கொடுக்க, சப்புக் கொட்டி சாப்பிட்டான்.

 

அலைபேசியில் மூழ்கப் போனவனை முறைத்து “இந்தாங்க சாப்பிடுங்க” அவன் கையில் ஜனனி மாங்காயைத் திணிக்க, “ரொம்பத் தான் பண்ணுறா” முணுமுணுத்தவன் மகியின் முன்பு எதுவும் சொல்ல வேண்டாம் என்று அமைதியாக சாப்பிட்டான்.

 

“சின்ன வயசுல நான், மகி, நந்து மூனு பேரும் எந்த நாளைக்கும் வருவோம். கிரிக்கெட் ஆடிட்டு மாங்கா பறிச்சு சாப்பிட்டு போவோம். எத்தனையோ மரத்தில் விழுந்து, ஓனர் கிட்ட ஏச்சு வாங்கி, அப்பா கிட்ட மாட்டிக்கிட்டு தோப்புக்கரணம் போட்டு.. அப்பப்பா அதெல்லாம் மறக்க முடியாத மெமரீஸ்” என்று சொல்கையில் அவளது முகத்தில் நவரசங்களும் தெரிந்தன.

 

“ஆமா! நாங்க ஃப்ரெண்ட்ஸ் கூட போய் மாட்டுனாலும் எனக்காக ஜானு அப்பா கிட்ட ஏச்சு வாங்குவா. நந்துக்கா அமைதியா இருக்கிறதால அப்பா அவ எதுவும் பண்ணலனு நெனச்சுப்பார். ஜானு அக்காவும் அதை அப்படியே மெயின்டேன் பண்ணி நந்துவைக் காப்பாற்றி அவ அடி வாங்கி இருக்கா” மகிஷா பழைய நினைவுகளை மீட்டிப் பார்க்க,

 

“ப்ச் மகி! சும்மா இரு. அதெல்லாம் எதுக்கு?” தங்கையைக் கண்டிப்போடு நோக்கினாள் உடன்பிறந்தவள்.

 

“நீ சூப்பர் ஜானு. மத்தவங்களுக்கு கஷ்டம் வர விடாம அவங்க சந்தோஷத்துக்காக நாம கஷ்டத்தை ஏத்துக்கிறது நல்ல விஷயம்னு டாடி சொல்லி இருக்கார். ஐ லைக் யூ ஜானு” அவளைப் பார்த்துப் புன்னகைத்தான் யுகன்.

 

“மீ டூ ஸ்வீட் ஹார்ட்” அவனது கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்ட ஜனனியை அந்நொடி வருடிக் கொடுத்தது, சத்யாவின் பார்வை.

 

அதே பார்வை வீடு திரும்பும் போது நடந்த நிகழ்வில் அனலோடு அவளைத் தாக்கியது.

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!