28. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(2)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 28

 

தரையை நோக்கிய சத்யாவின் வழிகள் அகல விரிந்தன. தரையில் விழுந்திருந்தது ஒரு புகைப்படம். அதில் புன்னகை ஏந்தி நின்றிருந்தவன் ராஜீவ் அல்லவா?

 

அதனைப் பார்த்தவனுக்கு உள்ளம் எல்லாம் கொதிக்கத் துவங்கிற்று. அவன் வந்தவுடன் இந்த அறைக்கு வரும் போது மேசை மீது ஒரு டயரி இருந்ததைப் பார்த்தான். ஆனால் இப்போது அது இல்லை. அவ்வாறெனில் அதை ஜனனி தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்பதும், அச்சமயம் அதனுள்ளே இருந்த புகைப்படம் கீழே விழுந்திருக்க வேண்டும் என்பதையும் யூகித்துக் கொண்டான்.

 

அவள் இன்னும் ராஜீவ்வின் நினைவில் இருப்பதை எண்ணி கோபம் பொங்கியது  அவனுக்கு.

 

“ஒருத்தனை மனசுல வச்சுட்டு எப்படி என் கூட தாலி கட்டி வாழ வந்தா? என்ன ஜென்மம் இவ?” அவள் மீது இருந்த நல்லுணர்வு முற்றிலும் மறைந்து, வெறுப்பு ஓங்கத் துவங்கியது.

 

“இன்னிக்கி உன் கிட்ட ரெண்டில் ஒன்னு கேட்காம விட மாட்டேன். என்ன பதில் சொல்லுவேனு நானும் பார்க்கத் தானே போறேன்” என்று நினைத்தவன் புகைப்படத்தைக் கையில் வைத்தவாறு அவளின் வருகைக்காக வெறி கொண்ட வேங்கை போல் காத்திருக்கலானான்.

 

அதற்குள் மேகலை அவனை அழைக்க, புகைப்படத்தை மடித்து தனது பர்ஸிற்குள் வைத்துக் கொண்டு சென்றான் சத்யா.

 

ரூபனோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்தவளை வெறுப்போடு நோக்கின, அவன் விழிகள். இனியா அவனை விட்டுச் சென்றாள், அதே போல் இன்னொருவனை நினைக்கும் இவளும் அப்படிச் செய்து விடுவாளோ என்ற எண்ணம் அவனை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

 

அதே சமயம் கிட்சனில் பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த மகியின் பின்னால் வந்து நின்றான் ரூபன்.

 

“ஓய் மகி” என்று அழைக்க, பதறிப் போய் திரும்பியவளோ “இப்படியா பேய் மாதிரி வந்து நிற்பீங்க?” என்று கேட்டாள் கோபமாக.

 

“நான் வருவேன்னு தூது சொல்லிட்டா வந்து நிற்க முடியும்? உன்னைப் பார்க்கனும்னு தோணவும் வந்துட்டேன்” தலை சாய்த்துக் கேட்க, “எதுக்கு என்னைப் பார்க்கனும்? அப்படிப்பட்ட எண்ணங்கள் இருந்தா அழிச்சிடுங்க. இப்படி வந்து நிற்கிறதை யாராவது பார்த்தா வேற மாதிரி ஆகிடும்” காற்றாடியாய் படபடத்தாள் மகிஷா.

 

“என்ன வேற மாதிரியாகும்? நான் எதுவுமே யோசிக்கலயே. நீ தான் ஓவரா யோசிச்சிட்டு இருக்குற மாதிரி எனக்கு விளங்குது. என்ன நெனச்சிட்டு இருக்க நீ?”

 

“நான் எதுவுமே நினைக்கல. உங்களையும் எதையும் நினைக்க வேண்டாம்னு சொல்லுறேன். என் கூட பேச வேணாம், என்னைப் பார்க்க வேணான்னு சொல்லுறேன். உங்களுக்குப் புரியுதா இல்லையா?” என்று கேட்டாள்.

 

அவன் வழிய வந்து பேசும் போது உள்ளுக்குள் அவன் மீது ஒரு வகை நேசம் ஊற்றெடுப்பது போலிருந்தது அவளுக்கு. என்றாலும் அவை வேண்டாம் என்று மனதில் பூட்டுப் போட்டுக் கொண்டதால் அவனிடம் இவ்வாறு பேசினாள்.

 

நந்திதாவின் செயலால் குடும்பத்திற்கு உண்டான களங்கம் தன்னால் ஒரு போதும் ஏற்படக் கூடாது‌. ஜனனியின் பேச்சை ஒருபோதும் மீறக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தாள் மகிஷா.

 

“ஏன்னு கேக்குறேன்? நான் பேசினா என் கூட எல்லோரும் பேசுவாங்க. நீ மட்டும் எதுக்கு இப்படி விலகிப் போற?” அவளது செயல் ரூபனுக்கு வித்தியாசமாக இருந்தது.

 

“நேரடியாவே சொல்லுறேன். நீங்க என்ன நினைச்சு என் கிட்ட பேசுறீங்களோ எனக்கு தெரியாது. நீங்க பல பெண்களோட பேசியிருக்கலாம், பழகி இருக்கலாம். ப்ரண்டாகி இருக்கலாம்‌. அதே மாதிரி நீங்க என் கூட பேசுறதா கூட இருக்கலாம்.

 

ஆனால் நான் அப்படி இல்லை. நான் இதுவரைக்கும் அப்பா தவிர வேற ஆண்கள் கூட பேசினது கிடையாது. இப்படி இருக்கும் போது நீங்க பேசுறது எனக்கு வித்தியாசமா இருக்கு. உங்க மேல ஒரு அழகான ஒரு எண்ணத்தை கொடுத்துருமோனு தோணுது. அதனால்தான் சொல்றேன். ப்ளீஸ் என் கூட பேசாதீங்க” தன்னைப் பற்றி அவன் நினைத்தாலும் பரவாயில்லை என்று மனதில் பட்டதை அப்படியே சொல்லி விட்டாள்.

 

அவளைக் கூர்ந்து நோக்கிய ரூபனுக்கு மகி இன்று வேறு விதமாகத் தெரிந்தாள். அவன் பார்த்த பெண்கள், உள்ளுக்குள் காதலை வைத்துக் கொண்டு அவனிடம் அதை மறைத்துப் பேசுபவர்கள். ஆனால் இவள் முற்றிலும் மாறுபட்டுத் தோன்றினாள். தான் பேசினால் அவளுக்கு அவன் மீது ஒரு உணர்வு வந்து விடும் என்கிறாள். 

 

“நீ சொல்லுறதைப் புரிஞ்சுக்கிட்டேன் மகி. ஆனால் எனக்கு உன்னைப் பார்க்கும் போது டிப்ரண்டா ஃபீல் ஆகுது. உன் கிட்ட ஏதோ மாயம் இருக்கு. உன்னோட குறும்பு, துறு துறுனு இருக்கிறது, மனசுல தோணுறத சொல்லுறது எல்லாமே பிடிச்சிருக்கு. அப்பறம் என்னை விட்டு விலகிப் போற அந்த செய்கையும் கூட. என்னால உன்னை விட்டு ஒதுங்கி இருக்க முடியாது மகி. உன் கூட பேசனும்னு தோணுது. அப்போ என்னோட ஃப்ரெண்ட் ஆகுறியா?” என்று கையை நீட்டினான்.

 

சற்று யோசித்தவளுக்கு அதுவும் நன்றாகத் தோன்ற, “ஓகே ஃப்ரெண்ட்ஸ். ஒன்லி ஃப்ரெண்ட்ஸ். வேற எதுவும் நமக்குள்ள வர வேண்டாம்” அவனுக்கு கை கொடுத்தாள் மகி.

 

“பார்ப்போம். எனக்கு ஏதாவது தோணுனா நான் சொல்லுவேன். உனக்கு தோணுனாலும் நீ சொல்லலாம். வர்றேன்” அவளது தலையில் செல்லமாக தட்டி விட்டுச் சென்றான்.

 

“அப்போ நாங்க கிளம்புறோம். வீட்டுக்கு வாங்க சம்மந்தி” என்று மேகலை விடைபெற, “அம்மா” என்றவாறு ஜெயந்தியை அணைத்துக் கொண்டாள் ஜனனி.

 

தனது ஊருக்கு வந்தவளுக்கு அங்கிருந்து செல்லவே மனமில்லை. 

“போயிட்டு வர்றேன் மகி‌. நல்லா படி. ஆல் தி பெஸ்ட்” தங்கையின் கைகளைப் பிடித்துக் கொள்ள, “சரிக்கா. தினமும் ஃபோன் பண்ணு” என்றாள் மகி.

 

“நான் வர்றேன்பா” என்ற ஜனனியை அன்போடு பார்த்து, “நல்லா இருமா” அவள் தலை வருடி ஆசீர்வதித்தார் மாரிமுத்து.

 

சத்யா அனைவரிடமும் பொதுவாக சொல்லிக் கொண்டு செல்ல, அனைவரும் காரில் ஏறினர்.

 

ரூபன் வேன் ஓட்ட அவனருகில் ஏறிக் கொண்டான் யுகி.

 

“டாட் லிட்டில் ப்ரின்ஸ்! என் கிட்ட எதுக்குடா வந்த?” என்று ரூபன் கேட்க, “உன் கூடவும் நான் பாசம்ல ரூபி? அதான்” கண் சிமிட்டியவனை செல்லமாக முறைத்தான் அவன்.

 

ஜனனி மேகலையோடு பின்னால் ஏறப் போக, “பின் சீட்டில் இருந்தா அறவே ஒத்துக்காது டா. நீ போய் சத்யா கிட்ட இரு” என்றார்.

 

தேவன் மேகலையின் அருகில் அமர, வேறு வழியின்றி சத்யாவின் அருகில் அமர்ந்தாள் மனைவி. அவளை விட்டு சத்யா தள்ளி அமர, என்னவோ போல் இருந்தது அவளுக்கு.

 

‘என் மேல அப்படி என்ன கோபம் அவருக்கு? எதுக்கு தொட்டாலே தீட்டுனு சொல்லுற மாதிரி நடந்துக்கிறார்?’ மனம் சுணங்கினாள் ஜானு.

 

சற்று நேரத்தில் அவள் உறக்கத்தைத் தழுவ, சத்யாவின் தோளில் தலை சாய்த்தாள். அவள் தொடுகையில் அவனுக்கு கூசுவது போல் இருக்க, “ஏய் எழுந்திரு” காதில் சொல்லவே, திடுக்கிட்டு விழித்தாள்.

 

“என்னங்க உங்களுக்கு? தூங்க கூட விட மாட்டீங்களா?” தூக்க கலக்கத்தில் கேட்டாள் காரிகை.

 

“தூங்க வேண்டாம்னு சொல்லல. ஆனால் என் மேல வந்து விழாத” மற்றவருக்குக் கேட்காமல் பற்களை நறநறக்க, “நான் ஆசையிலா உங்க மேல விழுந்தேன். தூங்கினா அப்படித் தான். நான் வேணும்னா தேவாவை இங்கே வர சொல்லிட்டு பின்னால் போகவா?” என்று கேட்டாள்.

 

“எதுக்கு? அம்மா கேட்டா நான் தூங்க விடலனு சொல்லவா?”

 

“உங்களுக்கு அத்தை கிட்ட சொல்லவும் கூடாது. நீங்க தூங்கவும் விட மாட்றீங்க. என்ன குணம் இது?” கோபமாகப் பார்த்தாள்.

 

“எங்க குணமாவது பரவாயில்லை. உன் குணம் தான் குப்பையா இருக்கு” என்றவன், “நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?” பட்டென்று கேட்டு விட்டான்.

 

அவனிடமிருந்து அப்படியொரு வினாவை எதிர்பாராமல் திகைத்துப் போய் நின்றாள் பெண். ராஜீவ்வைப் பற்றி எப்படிச் சொல்வது என யோசித்தாள்.

 

“இ..இல்ல” என்றவளுக்கோ இப்போது அவனிடம் அதைச் சொல்லத் தோன்றவில்லை.

 

‘ராஜீவ் பற்றி அப்பறமா சொல்லலாம். வேன்ல வெச்சு எப்படி எல்லாம் சொல்லுறது?’ என்று நினைத்தவளுக்கு அதை அவனிடம் சொல்லுமளவு தம்முள் நெருக்கம் இல்லை என்றே தோன்றியது. இருப்பினும் பிறகு சொல்லலாம் என்று நினைத்தது தான் அவள் செய்த தவறு.

 

அவளது இல்லை என்ற வாசகம் அவனுள் கோபத்தை அலைமோதச் செய்தது. அன்று இருவர் கண்களிலும் தெரிந்த காதல் பொய் அல்லவே. இன்று அவள் சொல்வது தான் பொய் என்று தெரிந்தது. பொய்யானவளாக அவனுள் ஒரு விம்பத்தைப் பதித்தாள் ஜனனி.

 

‘உண்மையை இப்போதாவது சொல்லுவானு நெனச்சேன். ஆனால் இப்படி சொல்லிட்டல்ல. வேற எப்படி சொல்லுவ? நீ பொய், உன் பேச்சு பொய், உன் காதல் பொய்.. நீ மத்தவங்க மேல வெச்சிருக்கிற பாசம் மட்டும் உண்மையா? அதுவும் சந்தேகமா இருக்கு’ உள்ளுக்குள் சொல்லிக் கொண்டான் சத்யா.

 

அவனது மனம் அறியாதவள், “ஏன் திடீர்னு இப்படி கேட்கிறீங்க?” என்று கேட்க, “இல்லனு சொல்லிட்டல்ல. அது போதும். வேற எதுவும் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” என்றான், பார்வையில் அனல் கக்க.

 

“இவ்ளோ சூடா இருக்காதீங்க. முகம் பார்க்க நல்லாவே இல்ல” என்று அவள் சொல்ல, “உன் முகமும் தான் நல்லா இல்லை. நான் எதுவும் சொல்லலயே. இளிச்சிட்டே இருந்தா உன் முகம் நல்லா இருக்கும்னு நெனக்காத. மனசு எப்படியோ முகமும் அப்படித் தான் இருக்கும்” அவனும் பதிலுக்கு முறைத்தான்.

 

“அந்த பழமொழியை சொல்லுங்க. யூ.எஸ் போனது தான் போனீங்க, தமிழை மறந்தாச்சா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும்” கண் சிமிட்டிச் சொன்னாள் ஜனனி.

 

“நான் எதையும் மறக்குற ஆள் இல்லை. உன்னோட அகத்தின் அழகு தான் முகத்தில் நல்லா தெரியுதே” 

 

“என் மூஞ்சு என்ன அழகுனு எனக்குத் தெரியாது‌. உங்களுக்கு நான் அவ்ளோ மட்டமா தெரிய என்ன காரணம்னு எனக்குத் தெரியல. ஆனால் எனக்கு இன்னொரு பழமொழி தோணுது சொல்லவா? 

 

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்‌. நீங்க என்னை ஏதோ ஒரு கோணத்தில் வெச்சுப் பார்க்குறீங்க. அதனால் தான் நான் உங்க கண்ணுக்கு அப்படி தெரியுறேனோன்னு நெனக்கிறேன்” என்றாள் அவள்.

 

“உண்மை தான். என் கண்ணுக்கு மட்டும் நீ வேற மாதிரி தெரியுற. ஏன்னா அந்த உண்மை தெரிஞ்சது எனக்கு தான். அதைப் பார்த்தது நானாச்சே” வெறுப்போடு வந்தன, அவன் வார்த்தைகள்.

 

“என்ன உண்மை? அப்படி என்ன தெரியும் உங்களுக்கு?” சற்றே கோபமாகக் கேட்டாள்.

 

“நீ வேற யாரையோ..” என சொல்ல வருவதற்குள் அவள் சீட்டில் சாய்ந்து கொள்ள, “என்ன நாடகம் ஆடுறியா?” என்று கேட்டான்.

 

“இல்லை” தலையை இடமும் வலமும் ஆட்டியவளோ அடுத்து சத்யா வாய் திறக்கும் முன் அவன் மடியில் மயங்கிச் சரிந்தாள்.

தொடரும்…….!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 2

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!