💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 33
காலேஜ் சென்று விட்டு வந்தாள் மகிஷா. அவள் முகத்தில் அத்தனை மலர்வு.
“அம்மா…!!” என்றவாறு ஜெயந்தியின் கைகளைப் பிடித்து சுற்றியவளுக்கு தனது படிக்கும் கனவு நனவானதில் ஏக மகிழ்ச்சி.
பத்திரிகை படித்துக் கொண்டிருந்த மாரிமுத்துவின் விழிகள் சின்ன மகளின் மகிழ்ச்சியைக் கவனிக்கத் தவறவில்லை. அதைப் பார்க்கும் போது அவருக்கு என்னவென்று தெரியாத உணர்வு.
ஜனனி மட்டும் இல்லை என்றால் இன்று மகிஷா படிக்கச் சென்றிருக்க மாட்டாள். அவள் இத்தனை சந்தோஷப்பட்டு அவர் பார்த்திருக்கவும் மாட்டார். இத்தனை நாட்களாக அவளது மகிழ்வு எதில் உள்ளது என்று கவனிக்காமல் விட்டதில் அவருக்கு குற்ற உணர்வு எட்டிப் பார்த்தது.
நந்திதாவின் செயல் மாரிமுத்துவை மிகவும் உடைத்திருந்தது. பழைய மாரிமுத்துவாக இருந்திருந்தால் மகிஷாவை நிச்சயம் படிக்க அனுப்பியிருக்க மாட்டார். இப்படி எதுவும் நடந்து விடக்கூடாது என்ற அச்சத்தில் தான் அவர் படிப்பை விட்டே நிறுத்தினார்.
ஜனனி ஒவ்வொரு தடவை வெளியில் செல்லும் போதும் இதே அச்சம் தான். அவள் யாரையாவது இழுத்துக் கொண்டு காதல் என்று வந்து நிற்பாளோ என்பது அவரது எண்ணம். இருப்பினும் ஜனனி அவர் நினைத்ததற்கு எதிர்மாறாய் நடந்து கொண்டாள்.
மகிஷாவை சத்யாவுக்கு மணமுடித்துக் கொடுப்பதில் அவருக்குமே அவ்வளவு ஈடுபாடு இல்லை. என்றாலும் கூட மேகலைக்கு தனது மகளைத் தருவதாக வாக்களித்ததன் காரணமாக இரண்டாம் மகளுக்குப் பதில் அவளைப் பார்த்தார்.
அவ்விடத்தில் ஜனனி வாய் திறந்து அவளாகவே திருமணத்திற்கு விருப்பம் தெரிவிப்பாள் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் முற்றிலுமாக நம்பிய நந்திதா அந்நம்பிக்கையைச் சிதைத்தாள். நம்பிக்கை வைக்காத மகள் அவருக்காக அந்த வாழ்வை ஏற்றுக் கொண்டாள்.
சில நேரங்களில் இப்படித் தான். வாழ்க்கை வேடிக்கை காட்டி விடுகிறது. கண்மூடித்தனமாக நம்பும் ஒரு சிலர் அந்நம்பிக்கையைத் தகர்த்து விட, நாம் நம்பிக்கை வைக்காத ஒருவர் நம் எண்ணத்தைப் பொய்யாக்கி நமக்கு நல்லது செய்து விடுகின்றனர்.
“ஏய் விடு டி. தலை சுத்துது” என்று சொன்ன ஜெயந்திக்கும் மகளின் சந்தோஷத்தில் அகம் மலர்ந்து போயிற்று.
“அய்ம் சோ ஹேப்பி மா. திரும்ப படிக்க முடியாதோனு நெனச்சேன். என் ஆசை நிறைவேறிடுச்சு. அந்த புக்ஸ் எல்லாம் திரும்ப எடுத்து படிக்கும் போது பூரிச்சு போயிட்டேன். நான் கலெக்டர் ஆவேன். நீங்க விட்ட வேலையை நான் தொடர்வேன் உங்களுக்காக” என்றவளை ஆரத் தழுவிக் கொண்டார் ஜெயந்தி.
அவர் ஆசைப்பட்டு செய்த வேலை அது. திருமணத்தின் பின் விட்டு விட்டார். அதனை மகள் செய்ய நினைப்பது அவருக்கு மகிழ்வைக் கொடுத்தது.
“நீ நல்லா இருக்கனும் மகி. என் பொண்ணுங்க சந்தோஷமா இருக்கனும்” என்றவருக்கு ஜனனி மற்றும் நந்துவின் நினைவு.
தனது அறையினுள் நுழைந்த மகிக்கு ரூபனிடமிருந்து மேசேஜ் வந்திருந்தது.
“காலேஜ் விட்டு வந்ததும் கால் பண்ணு மகி” என்று அனுப்பி இருந்தான்.
“வந்தாச்சு” பதில் அனுப்பிய மறுகணமே அழைத்து விட்டான் அவன்.
“ஹலோ” தன் செவி தீண்டிய ஆடவனின் குரலில் அவள் மனதினுள் ஒருவித உற்சாகம்.
“இருக்கியா மகி?” அவன் சற்று சத்தமாகக் கேட்க, “ஹான் இருக்கேன்” காற்றுக்கும் வலிக்காத குரலில் பதில் கூறினாள் காரிகை.
“காலேஜ் எப்படி இருந்தது? புது ஃப்ரெண்ட்ஸ் கெடச்சாங்களா?”
“காலேஜ் செம்மையா இருந்தது ரூபன். நான் நெனக்கவே இல்ல, என் வாழ்க்கையில் இந்த அனுபவம் கிடைக்கும்னு. நிறைய ஃப்ரெண்ட்ஸ் கெடச்சாங்க. காலேஜை சுத்தி பார்த்தோம். முன்னால பானிபூரி கடை இருந்துச்சு. வரும் போது அதை வாங்கிட்டு தான் வந்தேன்” படபடவென வந்தன வார்த்தைகள்.
“அது சரி. எங்கே போனாலும் வயித்துக்கு படையல் போட்றுவீங்களே. இந்த பொண்ணுங்களே இப்படித் தான். போற இடத்தில் சாப்பாடை தேடுவாங்க” என்று ரூபன் சொல்ல,
“ஏன் ஏன்? ஆம்பளைங்களுக்கு வயிறு கிடையாதா? நீங்க வயித்துக்கு வஞ்சகம் பண்ணுற மாதிரில்ல பேசுறீங்க. பானிபூரி கடையில் எங்களை விட பசங்க அதிகமா இருந்தாங்க” முறைப்போடு மொழிந்தாள் மகிஷா.
“அவங்க பானிபூரி சாப்பிட வரல. பொண்ணுங்களை சைட்டடிக்க வர்றாங்க. இது கூடவா தெரியல?”
“ஓவரா தான் கலாய்க்கிறீங்க. உங்களுக்கு எப்படி அதெல்லாம் தெரியும்? நீங்களும் காலேஜ் டேய்ஸ்ல அப்படி தான் இருந்தீங்களோ?”
“எக்ஸாட்லி. நிறைய பொண்ணுங்களை சைட்டடிப்பேன், ஜொள்ளு விடுவேன், நம்பர் வாங்கி கடலை போட்டும் இருக்கேன். இட்ஸ் இன்ட்ரெஸ்டிங் மகி” ஹாஸ்யக் குரல் அவனிடம்.
“அப்போ அப்படி தான் நானுமா?” கேட்பதற்கு வாய் துடித்தாலும், வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள் மகிஷா.
நட்பு தானே? அந்த எல்லையை என்றும் தாண்டக் கூடாது. அவன் இப்படிச் சொல்வதால் ஏற்படும் கோப உணர்வை அழித்து விட வேண்டும் என நினைத்துக் கொண்டாள்.
பாசசிவ், லவ் எதையும் வர விடக் கூடாது என்பதில் தீர்மானமாக அவள் இருக்க, விதியோ அதற்கு மாற்றமாய் கணக்கெழுதினால் என்ன செய்வாளோ?
“நெஜமாவே நான் அப்படி தான். ஆனால் உன் கிட்ட வேற ஏதோ இருக்கு தெரியுமா? எல்லாரும் டக்குனு என் கிட்ட லவ்வுனு வந்து நின்னுடுவாங்க. ஆனால் அவங்களை விட, லவ் வேணாம்னு சொன்ன மகிஷா வித்தியாசமா தெரியுறா. வேணாம்னு சொல்லுறதை செய்ய நினைக்கிறது தான் நம்ம மனசோட கெட்ட குணமோ என்னவோ” சிரிப்போடு அவன் சொல்ல,
“நீங்க எந்தக் குணமா வேணாலும் இருங்க. எனக்கு ஒரு குணம் மட்டுமே. லவ் வேண்டாம்னா வேண்டாம். அவ்ளோ தான்” என்றவள் அவனோடு காலேஜில் நடந்த விடயங்களை பகிர்ந்து கொள்ளத் துவங்கினாள்.
…………….
“உனக்கு அம்மாவைப் பிடிக்குமா ஜானு?” தனது முகத்தை அண்ணாந்து பார்க்கும் யுகனை அன்பு கனிய நோக்கினாள் ஜனனி.
“அம்மாவை யாருக்குத் தான் பிடிக்காது யுகி? என்ன தான் நாம சொன்னாலும் அம்மாவை விட அதிகமாக நம்மளை வேற யாராலேயும் நேசிக்க முடியாது. தாய்ப்பாசத்தை மீறின சக்தி எதுவும் இல்லை” தன் அம்மாவின் ஞாபகத்தில் சொன்னாள்.
“ஆனால், இனியாவுக்கு என் மேல அப்படி இல்லல்ல ஜானு? என்னைப் பிடிக்கலனு தானே விட்டுட்டு போயிட்டாங்க. அப்படி போனாங்கன்னா நான் ஏதாவது தப்பு பண்ணிருப்பேனா?” அவன் கேட்ட கேள்வியில் திகைத்துப் போனவளுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாத நிலை.
“யுகி! நீ தங்கம் டா. இந்த வயசுல எவ்ளோ அன்பா, அறிவா, ஒழுக்கமா இருக்க. அவங்க ஏன் போனாங்கனு எனக்கு தெரியாது. ஆனால் உன்னைப் போல ஒரு பையனை அவங்க மிஸ் பண்ணிட்டாங்கனு தான் சொல்லுவேன்” அவனை அள்ளி அணைத்துக் கொண்டவளுக்கு கண்கள் கலங்கின.
“டாடியையும் என்னையும் விட்டுப் போனதால எனக்கு அவங்களைப் பிடிக்காது தெரியுமா? அம்மா சொல்லவே பிடிக்காது. அதனால நான் இனியா சொல்லுவேன். இருந்தாலும் பெரியவங்களை பெயர் சொல்லி கூப்பிடக் கூடாதுல்ல. நான் தப்பு பண்ணுறேனோனு தோணுது”
“என்னை ஜானுனு சொல்லுறது உனக்கு கில்ட்டியா இல்லையா?” பதில் கேள்வி கேட்டாள் ஜானு.
“இல்லையே. நீ என் ஃப்ரெண்ட் தானே ஜானு. அதனால எனக்கு அப்படி தோணல” என்று அவன் சொன்னதை செவியேற்று சற்று யோசித்தாள்.
“உனக்கு அவங்களை அம்மாவா ஏத்துக்க முடியலனு சொல்லுற. ஆனால் வேற உறவு சொல்லவும் முடியாது யுகி. அதனால நீ அவங்களை உன் ஃப்ரெண்டா ஏத்துக்கோ. அவங்க மேலுள்ள கோபத்தை, வெறுப்பை விட்று. நீ இப்படி இருந்தேனு எதுவும் மாறப் போறதில்லையே செல்லம்.
உன் மனசுல கோபம் கூடுறது மட்டுமே நடக்கும். அது உனக்கும் சரியில்ல. என்ன இருந்தாலும் நீ அவங்களை வெறுக்காதனு நான் சொல்லுறேன். அவங்க மனசுல என்ன இருக்கோ தெரியல. கண்டிப்பா உன்னை வெறுக்க மாட்டாங்க. அதனால நீயும் இனியாவ மனசுல நல்ல விதமா நெனச்சுக்க”
அவள் சொன்னதை ஆழ்ந்து உள்வாங்கிய யுகன் தலையை மட்டும் அசைத்தான்.
“குட் ஐடியா! நான் அப்படியே ட்ரை பண்ணுறேன்” என்றவன் ஜனனியின் தோள்களில் சாய்ந்து கொண்டான்.
“எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு ஜானு. நீ என் டாடி மாதிரி நல்ல நல்ல விஷயமா சொல்லித் தர. யூ.எஸ்ல இருக்கும் போது அவரு என் கூட நல்லா பேசுவார்.
இங்கே வந்து பிறகு வேலை அது இதுனு பிசியாகினதுல ஒழுங்கா பேசுறது இல்ல. அவர் வேலையை இப்போ நீ பண்ணுற. யூ ஆர் சோ கியூட்” அவளது கன்னத்தில் முத்தமிட்டான்.
“என் தங்க குட்டி” அவனது தலையைச் சிலுப்பி விட்டவளுக்கு அவன் மீது எல்லையற்ற நேசம் பெருக்கெடுத்தது.
“நீ தூங்குறியா யுகி?” அவனைத் தட்டிக் கொடுத்து உறங்க வைத்தாள்.
சத்யா பாத்ரூமில் இருந்தான். அவனது அலைபேசி ஒலிக்கும் சத்தம் கேட்டு அருகில் சென்று எடுப்பதா வேண்டாமா என்று யோசித்தாள் ஜனனி.
யாராக இருக்கும் என்று யோசித்தபடி மேஜையருகே செல்ல, ஒரு பெண்ணின் புகைப்படத்தோடு திரை ஒளிர்ந்தது.
அதில் தெரிந்த பெயரை “தனு” என்று உச்சரித்த அதே நொடி, அலைபேசியை எடுத்திருந்தான் சத்யா.
“என் போன் கிட்ட உனக்கு என்ன வேலை?”
“கால் வந்துச்சு. யார்னு பார்த்து உங்க கிட்ட சொல்லலாம்னு நெனச்சேன். இதையும் பண்ணக் கூடாதா?” அவனைப் போலவே அவளும் கேட்டாள்.
“என் ஃபோன் கிட்டயும் வராத. அவ்ளோ தான் சொல்லுவேன்”
“ஆமா! இதுவே டப்பா போன். இது கிட்ட நெருங்கக் கூடாதாம். எங்க வாசம் பட்டா எவ்ளோ அதிர்ஷ்டம் தெரியுமா? அது யாருக்கு தெரியப் போகுது?” என்று கேட்டவள் திடீரென்று வாயை மூடிக் கொண்டாள்.
ஓயாமல் வாய் விட்டு அடி வாங்கப் போனது நினைவுக்கு வரவே, எதற்கு வம்பு என கட்டிலில் அமர்ந்து தனது அலைபேசியை நோண்ட ஆரம்பிக்க, அவளை ஒரு மாதிரி பார்த்து விட்டு அழைப்பை ஏற்றான் கணவன்.
“ஹலோ தனு! எப்படி இருக்க?” அவனது கேள்வியில் மறுமுனையில் இருந்த தன்யாவுக்கு முகம் மலர்ந்தது.
“நான் நல்லா இருக்கேன் அண்ணா! யுகி எங்கே? வீட்டுல எல்லாரும் சுகமா?” ஆவலுடன் கேட்டாள் அவள்.
“யுகி தூங்குறான். எல்லாரும் நல்லா இருக்காங்க. நீ ரொம்ப மோசம் டா, வேற யாரோ மாதிரி ஆடிக்கொரு தடவை அமாவாசைக்கு ஒரு தடவை வந்து சுகம் விசாரிக்கிற” முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் சத்யா.
‘அடேங்கப்பா! இந்தாளுக்கு இப்படி பேசவும் தெரியுமா? மூஞ்சைப் பாரு. இந்தப் பூனையும் பால் குடிக்குமாங்குற மாதிரி இருக்கு’ உள்ளுக்குள் வியந்தாள் ஜனனி.
“எக்ஸாம்னால பிசி ஆகிட்டேன். இப்போ ஃப்ரீயா இருக்கேன்” என்றவள், “அண்ணியைக் காட்டவே இல்ல. எங்கே பார்ப்போம்” என்றதும் சத்யாவின் விழிகள் ஜனனியை நோக்கின.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி