💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 36
கோயிலுக்கு வந்திருந்தாள் நந்திதா. கண்களை மூடி மனமுருகி வேண்டியவளுக்குக் கண்களில் கண்ணீர் வழிந்தது.
“நான் பண்ணுன தப்பு மன்னிக்க முடியாதது. ஆனால் அதனால உண்டான விளைவுகளை என்னால ஏத்துக்க முடியல. கஷ்டங்களை தாங்கிக்க முடியல. அழுறதைத் தவிர வேற வழியும் இல்லை. நடந்ததை மாற்ற முடியாது, ஏத்துக்கிட்டு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு வாழறது ஒன்னு தான் வழி.
இருந்தாலும் என் குடும்பத்தை விட்டுப் பிரிஞ்சு இருக்கிறது ரொம்பவே வலிக்குது. பிறந்ததில் இருந்து அவங்க கூட ஒன்னா இருந்துட்டு இப்போ அவங்க பேச்சு வார்த்தை இல்லாமல் வாழறது நரகத்தை விட கொடுமையா இருக்கு கடவுளே. நீ தான் எல்லாத்தையும் சரி பண்ணனும்” அழுகையோடு தன் மனபாரத்தை இறக்கி வைத்தாள் நந்து.
அவள் கண்களைத் துடைத்து விட்டது ஒரு கரம். விரிந்த இமைகளுக்குள் அழகாய் விழுந்தது எழிலழகனின் விம்பம்.
“அழக் கூடாது நந்தும்மா! நீ அழுதது எல்லாம் போதும். கண்ணைத் துடைச்சிக்க டா” அன்போடு அவளை ஏறிட்டான் எழில்.
அவளுக்கென்று நிற்கும் ஒரே உறவு அவன் தான். அவளது சொந்தம், அவளின் பொக்கிஷம், அவளது ஆறுதல், சந்தோஷம் அனைத்தும் இப்போது அவன் ஒருவனே.
“நீங்க கூட இருந்தா நான் சந்தோஷமா இருக்கேன் எழில். என் கூடவே இருங்க” அவனது கைகளைப் பிடித்துக் கொள்ள, “உன் கூட தானே இருக்கேன். வந்து உட்கார்” அங்கிருந்த தூணின் அருகில் சாய்ந்து அமர்ந்தனர்.
நந்திதாவுக்கு தன் உடன் பிறந்தோர் நினைவு. அவர்களுடன் எத்தனை நாள் இவ்விடம் அமர்ந்து கதையளந்து இருப்பாள்?
“நான், ஜானு, மகி மூனு பேரும் இங்கே வந்து உட்கார்ந்து இருப்போம். நேரம் போறதே தெரியாம பேசிட்டு இருப்போம். தேங்காய் உடைச்சு சாப்பிட்டு, வாற போறவங்களைப் பார்த்துட்டு ரொம்ப ஜாலியா இருப்போம் தெரியுமா? எல்லாத்தையும் நான் மிஸ் பண்ணுறேன்” அவளது கண்கள் கலங்கிப் போயின.
“ஹேய் நந்து! அவங்க மட்டும் உன்னைப் பிரிஞ்சு சந்தோஷமா இருப்பாங்கன்னு நெனக்கிறியா? இல்லவே இல்ல. அவங்களுக்கு உன் மேல வருத்தம் இருக்கு. இருந்தாலும் கூடப்பிறந்த பாசம் இல்லாம போகாது. அந்த பாசமே உங்களைக் கண்டிப்பா சேர்த்து வைக்கும். கவலைப்படாத” அவளது தலையைத் தடவ,
“சரிங்க. எனக்கும் அந்த நம்பிக்கை இருக்கு. அவங்க கூட எப்போ சேர்வேனோ அப்போ தான் என் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். அப்பவும் கூட என் செயலால் ஏற்பட்ட வடு அழியாது” என்றாள் நந்து.
அவள் கூறுவது வாய்மை. பெற்றோர் விருப்பமின்றி, அவர்களுக்கு அவமானத்தைப் பரிசளித்து பிள்ளைகள் தம் வாழ்வை அமைத்துக் கொள்கின்றனர். பின்னால் அதை எண்ணி வேதனைப்படவும் செய்கின்றனர். இருப்பினும் அதனால் பயன் ஏதும் இல்லை.
பெற்ற மனம் பித்தல்லவா? சில நாளிலோ, குழந்தை பிறந்தாலோ அவர்கள் செய்த தவறை மன்னித்து ஏற்றுக் கொள்கின்றனர். எனினும், அவர்கள் பட்ட அவமானமும், அனுபவித்த வலிகளும், ஏமாற்றமும், ஊரார் முன் கூனிக் குறுகி நின்றதையும் என்றும் அழித்து விட முடியாது என்பதுவே நிதர்சனம்.
“புரியுது. இதைத் தான் நான் உன் கிட்ட அப்போவே சொன்னேன் அவசரப்படாதனு. ஆனால் நீ கேட்கல. ப்ச்! இப்போ அதைப் பற்றி பேசி வேலை இல்ல. திரும்பத் திரும்ப அதையே பேசாத” என்றவனிடம்,
“நான் ஒன்னு கேட்பேன். சம்மதிப்பீங்களா?” எனக் கேட்டாள்.
“கேளு நந்து” அவள் முகம் பார்த்தான் எழில்.
“எங்க வீட்டு பக்கத்தில் சமையல் கத்துக் கொடுக்கிறாங்க. எனக்கு விதவிதமா சமைக்கிறதுன்னா ரொம்ப பிடிக்கும். வீட்டிற்குள்ளேயே அடைஞ்சு இருக்கிறதுக்கு அந்த க்ளாஸ் போகலாம்னு நினைக்கிறேன். என்ன சொல்லுறீங்க?” தன் ஆசையை வெளிப்படுத்தினாள்.
“இதெல்லாம் ஒரு விஷயம்னு என் கிட்ட அனுமதி கேட்பியா? உனக்கு பிடிச்சு இருக்குன்னா தாராளமா போ. வீட்டில் போரடிக்கும்ல. எல்லாத்தையும் விட உனக்கு விருப்பம்னா அதை சந்தோஷமா பண்ணு” என்றிட, அவள் முகத்தில் மகிழ்ச்சி.
மாரிமுத்துவிடம் ஒரு தடவை கேட்டதற்கு அவர் பூரண எதிர்ப்பைத் தெரிவித்தார். நந்திதாவை வெளியில் அனுப்பவே அவருக்கு பயம். காதல் என்று ஒருவன் பின்னால் வந்தால், ஊராரிடம் கதை கேட்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.
ஜனனி அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த போது ‘அப்பா வேண்டாம்னு சொல்லிட்டார். நான் போகல’ என்று விட்டாள் நந்து.
எழில் என்ன சொல்வானோ என்று தயங்கித் தயங்கி இப்போது கேட்டாள். அவன் சரி என்றதும் மகிழ்ந்து போனது மனம்.
“ஆனால் அத்தை ஏதும் சொல்லுவாங்களோ?” அடுத்த தயக்கத்தை அவள் முன்வைக்க,
“ஒன்னைப் புரிஞ்சுக்க. நீ அடுத்தவங்களுக்காக வாழல. உனக்காக வாழுற ஓகே? அவங்க என்ன சொல்லுவாங்க இவங்க என்ன சொல்லுவாங்கனு யோசிச்சா நாம எதுவும் பண்ண முடியாது. அவங்க ஒன்னும் உனக்காக சந்தோஷத்தை அள்ளித் தரப் போறதில்ல. உன் சந்தோஷத்தை நீயா உருவாக்கிக்கனும்.
சின்னப்பிள்ளைத்தனமா பேசி என்னை டென்ஷன் பண்ணாத. என் ஸ்டுடன்ஸை விட உனக்கு தான் பெருசா விளக்கம் தந்து படிச்சு தரனும் போல” சற்றே கோபமானான் எழில்.
அவளுக்கு முகம் வாட, “உடனே மூஞ்சை இப்படி வெச்சுக்காத” என்றவனின் உதட்டில் அரும்பிய புன்னகையைக் கண்டு அவளிதழிலும் குறுநகை.
…………..
ஜெயந்தியின் மடியில் தலை சாய்த்திருந்தாள் மகிஷா.
“எங்கே டி போன? வந்ததும் வராததுமா மூஞ்சைத் தொங்கப் போட்டுட்டு இருக்க?” யோசனையாக சின்ன மகளைப் பார்த்தார் ஜெயந்தி.
“கோயிலுக்குப் போனேன் மா” என்று சென்னவள் முகத்தில் வலியின் ரேகைகள்.
“அங்கே போனதும் தூணைப் பார்த்திருப்ப. உடனே உன் அக்காமார் ஞாபகம் வந்துருச்சா?” மகளை அறிந்தவராகக் கேட்க, ஆமென்று தலையசைத்தாள் மகள்.
தூணில் தலை சாய்த்த போது உடன் பிறந்தவர்களின் நினைவு வந்திருந்தால் மட்டும் பரவாயில்லை. ஆனால் அதில் ஒருத்தியைப் பார்த்து விட்டாளே. அவள் பேசுவதை செவிகளால் கேட்டு விட்டாளே?
ஆம்! சற்று முன் நந்திதா பேசிய அனைத்தும் தூணின் பின்னிருந்த மகியின் காதுகளை கச்சிதமாக வந்தடைந்தன.
அவளுக்கு அதிக கோபம் மூத்த சகோதரி மீது. இருப்பினும் உடன் பிறந்த பாசமும், தங்களைப் பிரிந்த ஏக்கமும் அவளுள் மிகைத்து இருப்பதை உணர்ந்து கலங்கியவாறு அங்கிருந்து நகர்ந்தாள்.
“வாழ்க்கை அப்படித் தான் மகி! பாதி நாள் சேர்த்து வெச்சு சந்தோஷப்பட வைக்கும். மீதி நாள் பிரிவைத் தந்து கஷ்டப்பட வைக்கும். அதைத் தாங்கிக்கிற பக்குவத்தை நாம வளர்த்துக்கனும்” என்றவருக்கும் அவர்கள் இல்லாத சோகம் மனதைப் பிழிந்தது.
அதே நேரம் ஜனனி வீடியோ காலில் வர, உடனே ஆன்ஸ்வர் செய்தாள் மகி.
“என்னாச்சு? என் மகி மூஞ்சு டல்லா இருக்கு?” என்று கேட்டவளின் பார்வை தங்கையின் முகத்தை ஆராய்ந்தது.
“இவ கோயிலுக்கு போனா ஜானு. போயிட்டு வந்து உங்க ஞாபகமா இருக்குன்னு சொல்லி சோகமா இருக்கா. வேற ஒன்னும் இல்ல” என்று ஜெயந்தி பதில் கூற, மகியின் மனநிலை ஜனனிக்கும் புரியத் தான் செய்தது.
எவ்வளவு தான் தூரமாகப் பிரிந்து சென்றாலும் அந்த ஏக்கமும், பழைய நினைவுகளின் தாக்கமும் அவள் மனதில் இருக்கத் தான் செய்யும் என்பது அவளுக்குத் தெரியாதா என்ன?
அவளுக்கும் அப்படித் தானே? சாப்பிடும் போதும் வீட்டு ஞாபகம். மகி, நந்துவுடன் கலகலத்தவாறு சாப்பிடுவது, மாரிமுத்துவின் பார்வையில் வாயை அடைத்துக் கொள்வது, அவர் இல்லாத சமயம் பேச்சினிடையே சாப்பிட்டு இருமும் போது ஜெயந்தியிடம் திட்டு வாங்குவது என அனைத்தும் வரிசை கட்டி நினைவடுக்கில் மலருமே.
“யாரு ஜானு?” என்று கேட்டவாறு வந்து அவள் மடியில் அமர்ந்த யுகி, “ஹய் மகி சித்தி” என்றழைத்தான்.
“அடடே யுகி! ஜானு கூட ஒட்டிக்கிட்ட போல” மகியின் முகத்தில் மெல்லிய மலர்வு.
சிறு குழந்தைகளே அப்படித் தானே? எத்தனை கவலை இருந்தாலும் அதை நொடியில் மறக்கடிக்கும் வல்லமை மழலை மொழிக்குண்டு என்பதை மறுப்பார் எவரும் இலர்.
“எஸ் சித்தி! நான் ஜானு கூட ப்ரெண்ட் ஆகிட்டேன். நாங்க ஜாலியா பேசிட்டு இருப்போம், கதை சொல்லுவோம், விளையாடுவோம்” என்றவன் ரகசியக் குரலில், “அப்பப்போ குட்டி சண்டையும் போடுவோம்” என்று சொல்ல,
“யுகி! அதெல்லாம் வெளியில் சொல்லக் கூடாது. நம்ம பர்சனல் இல்லையா அது?” அவனது வாயைப் பொத்தி செல்லமாகக் கண்ணை உருட்டினாள் ஜனனி.
“மறந்தே போயிட்டேன் ஜானு! இனி அப்படி சொல்லல” காதைப் பிடித்து கொஞ்சல் மொழி பேசியவனின் பாவனையில் ஜெயந்தியும் கூட சிரித்து விட்டார்.
ஜனனிக்கும் யுகிக்கும் இடையில் நல்லதொரு உறவு இருப்பதை உணர்ந்து கொண்ட தாயுள்ளம் மகளின் வாழ்வு சிறக்க, வேண்டுதல் வைத்தது.
“நான் போய் சமைக்கிற வேலையைப் பார்க்கிறேன்” என்றவாறு ஜெயந்தி சென்ற மறுகணம், “ஹாய் மகி” கையசைப்போடு வந்து முகம் காட்டினான் ரூபன்.
“ஹாய் ரூபி” அவள் கையசைத்துப் புன்னகைத்ததும் குபீர் எனச் சிரித்து விட்டனர் யுகியும் ஜனனியும்.
“டேய் சிட்டுக்குருவி! ரூபினு நிக் நேம் வெச்சது பத்தாதுன்னு அதைப் பரப்பி விட்டுட்டு கெக்க பெக்கேனு சிரிக்கிறியா? உன்னைஐஐ” அவனுக்கு கிச்சு கிச்சு மூட்ட,
“ஹா ஹா! விடு ரூபி. கூச்சமா இருக்கு ரூபி. வேணா ரூபி” சிரிப்பினூடே பல ரூபிகளை எடுத்து வீசினான் யுகன்.
“இதுக்கு பேசாமலே இருந்திருக்கலாம் ரூபன். இவன் கிடைச்ச கேப்புல ரூபியை ஏலம் விட்டுத் தள்ளுறான்” அடக்கப்பட்ட சிரிப்போடு உரைத்தாள் ஜனனி.
“போங்க அண்ணி! உங்களுக்கும் என்னைப் பார்த்து சிரிப்பா இருக்குல்ல” முகத்தை உப்பிக் கொள்ள, “அப்படி இல்லை கொழுந்தனாரே. ஏதோ சிரிப்பு வந்துடுச்சு. ஆனா இனி சிரிக்கல” சிரிப்பை விழுங்கிக் கொண்டாள்.
“ஆனா நான் சிரிப்பேனே” ரூபனின் முகம் போன போக்கில் அடக்க மாட்டாமல் நகைத்தாள் மகிஷா.
“ஏய் சிரிக்காத மகி. சிரிக்காதனு சொல்லுறேன்” என்று அவன் முறைக்க, “நீங்க எல்லாம் ஒரு ஃப்ரெண்டா? எந்த ஒருத்தரும் தன் ஃப்ரெண்டு சிரிக்கக் கூடாதுன்னு நினைக்க மாட்டாங்க. ஆனால் நீங்க நான் அழனும்னு நினைக்கிறீங்க தானே” முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு அவள் சொல்ல,
“சிரிக்காதன்னு சொன்னா அழச் சொல்லுறேன்னு அர்த்தம் எடுக்காத தாயே. என்ன பண்ணுறது? உனக்கு புரிதல் அவ்வளவு தான். என்னைப் பற்றி அப்படித் தான் நெனச்சிட்டு இருக்கல்ல” இதழ் சுளித்தான் ரூபன்.
“அய்யோ அப்படி இல்லை ரூபன்” மகி பதற, “அடேய் நட்புப் பூக்களே! நான் என் தங்கச்சி கூட பேச வீடியோ கால் எடுத்தேன். நீங்க நட்பு வளர்க்க என் ஃபோன் தான் கெடச்சுதா? மரியாதையா சென்டிமென்ட் சீனை கட் பண்ணுங்க” இடுப்பில் கை வைத்து முறைத்தாள் ஜனனி.
“இந்த ரூபி அப்படித் தான் ஜானு” ஒத்து ஊதிய அண்ணன் மகனை நெருங்கி, “ஜானு வந்ததும் என்னை கழற்றி விடுறல்ல டா” அவனது கன்னத்தைக் கடித்து விட்டுச் செல்ல,
“ரூபீஈஈஈஈஈ” ரூபனைத் துரத்திக் கொண்டு ஓடிய யுகனைப் பார்த்து கலகலத்துச் சிரித்தனர் சகோதரிகள்.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி