சீதளம் 4
“இருடி நான் போய் வீராவுக்கு ஒரு தேங்க்ஸ் சொல்லிட்டு வரேன்” என்று ஒரு அடி முன்னே எடுத்து வைத்தவளை அவளுடைய கையைப் பிடித்து தடுத்தாள் பூங்கொடி.
“ இங்க பாருடி நீ நினைக்கிற மாதிரி வீரா பக்கத்துல அவ்வளவு சீக்கிரம் யாரும் போக முடியாது. கிட்ட போனா முட்டி தூக்கிருவான். வேந்தன் அண்ணா பேச்சை மட்டும் தான் அது கேட்கும் லூசுத்தனமா அது கிட்ட போகணும்னு நினைக்காத வா எங்க கூட” என்று இழுக்க இவளோ,
“ அட போடி கூறுகெட்டவளே வீரா அப்படியெல்லாம் கிடையாது. இப்ப பாரு நான் பக்கத்துல போய் அவனுக்கு நன்றி சொல்லிட்டு அவன தடவி கொடுத்துட்டு வரேன். உன்னோட ரெண்டு நொல்ல கண்ணையும் நல்ல விரிச்சு வச்சு பாரு” என்று அவளிடம் சொன்னவள் வீராவின் அருகே செல்ல அங்கு வீராவோ முன்னங்காலை மண்ணில் உதைத்தவாறு பார்த்துக் கொண்டிருந்தது.
இவள் கொஞ்சம் கொஞ்சமாக அதன் அருகில் செல்ல அதுவோ தன்னுடைய திமிலை சிலுப்பியவாறு உறுமியது.
அதை கண்டு மற்றவர்களோ பயமாக பார்த்துக் கொண்டிருக்க பூங்கொடியோ,
“ அடியே லூசு மேகா சொன்னா கேளுடி இங்கே வா” என்று இவள் கத்த அவளோ,
“ இருடி சொல்லிட்டு வந்துடுறேன். பாரு எவ்வளவு சமத்தா நிக்கிறான்னு” என்று சொல்லியவாறு முன்னே செல்ல,
“அண்ணா ஏதாவது செய்யுங்க அண்ணா” என்று பூங்கொடி வேந்தனிடம் கேட்க அவனோ தான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண்களால் சைகை செய்தான்.
இவள் அதை தொட வேண்டும் என்று நினைப்பது வீராவுக்கு தெரிந்தாலே அது கண்டிப்பாக அவளை முட்டி தூக்கி விடும்.
அது இருக்கும் கோணத்தை பார்த்த வேந்தனோ தன்னுடைய கண்களாலே வீராவை எதுவும் செய்யக்கூடாது என்று கட்டளை இட அவனுடைய கட்டளையை புரிந்து கொண்ட வீராவோ அமைதியாக நிற்க, இவளோ அதன் அருகில் போய் நின்றவளோ,
“ ஹாய் வீரா நான் மேகா என்னோட உயிரை காப்பாத்துனதுக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ். அங்க பாரு அவங்க எல்லாருமே ஏதோ அவர்தான் காப்பாத்துன மாதிரி ரொம்ப ஓவரா பில்டப் கொடுக்குறாங்க. ஆனா எனக்கு தெரியாதா என்ன காப்பாத்துனது யாருன்னு. என்ன பொறுத்த வரைக்கும் நீ தான் என்னுடைய ஹீரோ. வெரி குட் பாய்” என்றவள் அதனுடைய முகத்தில் தன்னுடைய கைகளால் தடவவும் செய்தாள்.
அதுவோ வேந்தனின் கட்டளைக்கு இணங்க அமைதியாக நின்று கொண்டிருந்தது.
அது தெரியாமல் இவளோ அது தன்னை ஒன்றும் செய்யாது. தோழிகள் மூஞ்சியில் கரியை பூசி விட்டோம் என்று கெத்தாக திரும்பியவள்,
“ பாத்திங்களாடி என்னமோ சொன்னிங்க வீரா முட்டும் அப்படி இப்படின்னு பாருங்க அவன் எவ்வளவு சமத்தா நிற்கிறான்” என்று சொல்லியவள் அதற்கும் மேல் அதிகமாக வீராவின் நெற்றியில் தன்னுடைய இதழை பதித்தவள்,
“ பை வீரா நம்ம இன்னொரு நாள் பார்ப்போம்” என்று அதற்கு டாட்டா காட்டியவள் அங்கிருந்து கெத்தாக இவர்களை நோக்கி நடந்து வந்தாள். பெண்களைக் கடந்து வேந்தனின் அருகில் வந்தவள்,
“ என்ன மேன் வீராவுக்கு கொடுத்த முத்தத்தை பார்த்து பொறாமையா இருக்கா. அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது என்ன காப்பாத்துனது என் ஹீரோ வீரா தான். சோ அவனுக்கு நான் முத்தம் கொடுப்பேன் இரண்டாவது வந்த நீங்கள்லாம் அதை பார்த்து பீல் பண்ண கூடாது சரியா” என்று அவள் பாட்டுக்கு பேசிக் கொண்டே போக, அவள் பின்னே இருந்த தோழிகளோ தலையில் அடித்துக் கொண்டாலும் வேந்தனோ தனக்குள் உண்டான சிரிப்பை அவள் அறியாமல் மறைத்துக் கொண்டவன் தன்னுடைய தலையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டான்.
“ வாங்கடி போகலாம்” என்றவள் வேந்தனை பார்த்து நக்கலாக சிரித்தவள் அவ்விடம் விட்டு அகன்றாள்.
போகும் பொழுது பூங்குடியோ பின்னே திரும்பி,
“ அண்ணா சாரி அண்ணா அவ கொஞ்சம் அப்படித்தான் அவளுக்காக நான் சாரி கேட்டுக்குறேன்” என்று அவனுக்கு மட்டும் கேட்கும் படி சைகையால் சொல்ல அவனும் சிறு தலையசைப்போடு அங்கிருந்து நகர்ந்து விட்டான்.
அங்கு மேகாவை முட்ட வந்த மாட்டை ஒரு வழியாக போறாடி அதன் உரிமையாளர் பிடித்துக் கொண்டு செல்ல அவர் முன்னே சென்ற வேந்தனோ,
“ என்ன அண்ணா இப்படி வாயில்லா ஜீவன் அவன போட்டு அடிச்சு இருக்கீங்க” என்று அந்த மாட்டின் முதுகில் கிடந்த அடியின் அடையாளத்தை பார்த்தவன்,
“ அதுக்கு என்ன தெரியும் அத போய் இப்படி அடிச்சு இருக்கீங்க இதுதான் உங்களுக்கு கடைசி முறை இதுக்கு அப்புறம் நீங்க இந்த மாட்ட ஜல்லிக்கட்டுக்கு கொண்டு வரக்கூடாது” என்றான்.
உடனே அவரும் தன்னுடைய தவறை உணர்ந்து,
“மன்னிச்சிருங்க தம்பி ஏதோ கோபத்துல அடிச்சுட்டேன். ஆனா நான் செஞ்சது தப்புதான். புள்ள மாதிரி வளத்தவன அடிச்சிட்டோமேன்னு இப்ப கடந்து மனசு அடிச்சுக்குது. ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் தம்பி இதுக்கு பிறகு இப்படி நடக்காது” என்று அவர் வேந்தனிடம் கையெடுத்து கும்பிட அவனும் சரி என்றவன் அங்கிருந்து சென்று விட்டான்.
ஒரு பக்கம் இவ்வாறு நடக்க அங்கு இன்னொரு பக்கமோ மாடுகளை அடக்குவதும் அங்கு நடந்து கொண்டுதான் இருந்தது.
“என்ன இது இவ்வளவு நேரம் ஆகியும் மாப்ளைய காணோம் எங்க போனான். மாப்ள இன்னேரம் வந்திருக்கனுமே” என்று அந்த கூட்டத்தில் தன்னுடைய நண்பனை தேடிக் கொண்டிருந்தான் சக்தி.
“ எவ்வளவோ மாடுகள் வந்துட்டு ஏன் நம்ம வீரா கூட வந்துட்டு போயிட்டான். அந்த கதிர் பையன் அடிபட்டது கூட பாக்காம இவன் எங்க சுத்திகிட்டு இருக்கான்” என்று தன்னுடைய நண்பனுக்கு அழைப்பை எடுத்தான் சக்தி.
மறுமுனையில் அவனுடைய அழைப்பை வேந்தன் ஏற்க,
“ டேய் மச்சான் எங்கடா இருக்க இங்க எவ்ளோ பெரிய சம்பவம் எல்லாம் நடந்தது தெரியுமா. அதையெல்லாம் மிஸ் பண்ணிட்ட டா நீ சரி நீ இன்னைக்கு போட்டியில் கலந்துக்கலையா இவ்வளவு நேரமா வராம இருக்க” என்று அவனை பேசிவிடாமல் இவனே வரிசையாக கேள்விகளை கேட்க வேந்தனோ,
“ இரு மச்சான் அங்க தான் வந்துட்டு இருக்கேன் பக்கத்துல வந்துட்டேன் வந்து சொல்றேன்” என்றவன் நேராக சக்தியின் அருகில் வந்தான்.
“டேய் மச்சான் அந்த கதிரவன் இன்னக்கி நம்ம வீரா கிட்ட செம்மையா மாட்டிக்கிட்டாண்டா நம்ம வீரா அவன தூக்கி வீசினான் பாரு. நம்ம வீரா உள்ள இறங்கவும் அம்புட்டு பயலுகளும் ஓரமா போய் நிக்க இவன் ஏதோ பெரிய வீரான் மாதிரி அவனை எதிர்த்து நிக்க நம்ம வீரா வந்து பாருன்னு நல்லா செஞ்சு விட்டான் டா” என்று வேந்தனிடம் வீராவை புகழ்ந்து தள்ளியவன்,
“ சரிடா மச்சான் நீ போட்டியில் கலந்துக்கலையா?” என்று சக்தி கேட்க,
“ நான் அப்பவே வந்துட்டேன் டா இடையில ஒரு சில்வண்டு மாட்டிக்கிச்சு அதான் மாப்பிள்ளை லேட் இல்லன்னா அப்பவே வந்து இருப்பேன்” என்று மேகாவை நினைத்து அவன் கூற, “என்னடா மச்சான் சொல்ற” என்று சக்தி கேட்க நடந்ததை கூறினான் வேந்தன்.
“ யாருடா அந்த லூசு புள்ள” என்று சக்தி மீண்டும் கேட்க புன்னகைத்தவனோ,
“ அசலூர் புள்ளடா சரி மச்சான் இருக்கிற ஆட்டத்தை முடிச்சிட்டு வரேன்” என்றவன்,
“எங்கடா என்னோட டி-ஷர்ட்” என்று சக்தியிடம் கேட்க அவனோ,
“ இந்தாமச்சான்” என்று அவர்கள் குரூப்புக்கு என்று அடிக்கப்பட்ட மஞ்சள் கலர் டி ஷர்ட் ‘மதுரவேந்தன்’ என்று கம்பீரமாக தமிழில் அடிக்கப்பட்டிருந்த அவனுடைய டி -ஷர்டை வாங்கி போட்டுக் கொண்டவன் அங்கு மாடுபிடிக்கும் களத்தில் இறங்கினான் சிங்கமாக.
அடுத்தடுத்து வரும் அனைத்து மாடுகளையும் அவனே அடக்கினான்.
அப்பொழுது ஊர் தலைவர், மைக்கில்,
“ மதுரைக்காரங்க செண்பக பாண்டியன் அவர்களின் மாடு வரப்போகிறது” என்று சொல்ல ஒரு வெள்ளை நிற காளை வீராவை போலவே வாடி வாசலில் கடந்து துள்ளி குதித்து வர அதனுடைய கூர்மையான கொம்புகளைக் கண்டு வீரர்கள் சற்று அஞ்சி நடுங்க அந்த காளை தன்னை சுற்றி வரும் வீரர்களை தன்னுடைய கொம்புகளைக் கொண்டு சரமாரியாக குத்திக் கிழித்தது.
பத்திர்க்கும் மேற்பட்ட வீரர்கள் காயம் அடைய, அங்கு வெள்ளை வேஷ்டி சட்டையில் தன்னுடைய பெரிய மீசையை முறுக்கி விட்ட செண்பக பாண்டியனோ,
“ அப்படிதாண்டா முட்டு நல்லா முட்டு என் மாட்ட புடிக்க வர ஒரு பயலும் உசுரோட இருக்கக் கூடாது. அப்படிதாண்டா ஒவ்வொருத்தனையா குத்தி கிழி” என்று இங்கு நின்றே தன்னுடைய மாட்டிற்கு ஊக்கம் அழிப்பது போல பேசிக் கொண்டிருந்தார்.
அப்பொழுது அவர் பேசுவதை கேட்டு பக்கத்தில் நின்ற ஒரு நபரோ,
“என்ன செண்பக பாண்டியன் இப்படி சொல்றீங்க” ஒன்று கேட்க அதற்கு அவரோ,
“ என்னலே தைரியம் கூடிருச்சா என்கிட்ட கேள்வி கேட்கிற அளவுக்கு எல்லாம். மறந்துட்டீங்களா நான் யாருன்னு ஒழுங்கு மரியாதையா ஓடிப் போயிடு” என்றார் பாண்டியன்.
அப்பொழுது மற்றொருவரோ சென்பகபாண்டியனை கேள்வி கேட்டவரை கையைப் பிடித்து அங்கு தனியாக இழுத்து வந்தவர்,
“ ஏன் யா உனக்கு என்ன கூரு கெட்டு போச்சா அந்த ஆளு ரொம்ப மோசமானவன். அவன் இப்படி பேசலன்னதான் ஆச்சரியம் அவன்கிட்ட போய் நீ நியாயம் கேட்கிறேன் நீதி கேட்கிறேன்னு போய் கேட்டுகிட்டு இருக்க. ஏதோ நல்ல மனநிலையில் இருக்கிறதுனால உன்னை சும்மா விட்டுட்டான் இல்லன்னா நீ கேள்வி கேட்டதையே காரணமா வச்சு உன்னை இன்னேரம் கொண்ணு போட்டு இருப்பான்” என்றார் அவர்.
இங்கு வேந்தனோ, தன் முன்னே அந்த மாடு அதைப் பிடிக்க வரும் வீரர்களை தன்னுடைய கூர் கொம்புகளால் குத்தி கிழிப்பதோடு அவ்விடம் விட்டு வெளியேறாமல் சுற்றி சுற்றி ஒவ்வொருவரையும் முட்டித் தள்ளியது.
இதை பார்த்த வேந்தனோ இனி சரி வராது என்று நினைத்துக் கொண்டு ஒரு அடி முன்னே எடுத்து வைக்க போக அந்த நேரம் சரியாக, சென்பக பாண்டியன் ஊர் தலைவர் கையில் உள்ள மைக்கை புடுங்கியவர்,
“ லேய் மதுரவேந்தா நீ உண்மையான ஆம்பளையா இருந்தா என் வீட்டு மாட்ட புடிச்சு காட்டுலேய் பார்ப்போம். அப்படி நீ மாட்டைபுடிச்சிட்டேனா அந்த மாட்ட உனக்கே கொடுத்துடறேன்” என்று இவ்வளவு நேரமும் தன் வீட்டு மாடு அங்கு உள்ள வீரர்களை குத்திக் கிழிப்பதை பார்த்து இருமாப்போடு வேந்தனிடம் சவால் விட்டார்.