லீலாவதியை முறைத்து விட்டு தனது அறைக்குள் வந்து கதவை அறைந்து சாற்றினாள். அதிலேயே வித்யாவின் கோபத்தின் அளவு தென்பட்டது. அதைப் பார்த்து சிறிதும் கவலைப்படாமல் ரமணியை அழைத்து வித்யாவிற்கு ஜீஸ் கொடுக்குமாறு சொல்லிவிட்டு வெளியே சென்று விட்டார்.
ரமணியும் வித்யாவிற்கு மிகவும் பிடித்த மாம்பழ ஜூஸை எடுத்துக் கொண்டு, அவள் அறைக்கு முன்னால் சென்று கதவைத் தட்டினாள். அறைக்குள் கோபத்தில் நெயில் பாலிஷ் போட்ட தனது அழகிய விரல் நகங்களை கடித்துத் துப்பியபடி தனது கோபத்தை விரல் நகங்களில் காட்டிக் கொண்டு அறையை குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டு இருந்தாள் வித்யா. அந்த நேரத்தில் ரமணியும் கதவைத் தட்டினார்.
“யாரும் உள்ள வர வேண்டாம்.. நான் கதவைத் திறக்க மாட்டேன்.. இங்க இருந்து போயிடுங்க..” என்று சொன்னதைக் கேட்ட ரமணி, “சின்னப்பாப்பா நான் ஜூஸ் எடுத்திட்டு வந்திருக்கிறன்.. கதவைத் திறங்க பாப்பா..”
“ரமணிமா நான் இருக்கிற கடுப்புக்கு இந்த ஜூஸ்தான் ரொம்ப முக்கியம்.. என்னைக் கொஞ்சம் தனியா விடுங்கம்மா..” என்று அவள் சத்தம் போட, அமைதியாக நின்ற ரமணி, “சின்னப்பாப்பா உங்கிட்ட கொஞ்சம் பேசணும்.. கதவைத் திற பாப்பா.. என் கண்ணுல..” என ரமணி அவளிடம் அன்பாகக் கேட்க, கதவைத் திறந்தாள் வித்யா.
“பாப்பா முதல்ல இந்த ஜூஸைக் குடி..” என்று வித்யாவை வற்புறுத்தி அந்த ஜூஸை குடிக்க வைத்தார் ரமணி. அதன் பின்னர் அவளிடம், “பாப்பா உங்க அக்கா ரொம்ப பாவம்டா.. யாருக்குமே அந்த நிலமை வரக்கூடாதுமா..” என்று மிகவும் வருத்தம் நிறைந்த குரலில் கூற, அதைக் கேட்ட வித்யா ரமணியின் கையைப் பிடித்துக் கொண்டு பதட்டத்துடன், “ரமணிம்மா நீங்க என்ன சொல்றீங்க? என் அக்காவுக்கு என்னாச்சி? அவ எங்க இருக்கிறா?” என்றவள் விழிகள் கலங்க, அவளது கையைத் தட்டிக் கொடுத்து விட்டு நடந்த அனைத்தையும் வித்யாவிடம் கூறத் தொடங்கினார்.
“சின்னப்பாப்பா கல்யாணம் பண்ணி அந்த வீட்டிற்கு போன அப்புறம் உங்க அக்கா சந்தோஷமா இல்லை.. அந்த பிரகாஷ் பெரியபாப்பாவை ரொம்ப கொடுமைப்படுத்தினான்.. சம்மு பாப்பாக்கூட வாழ்ந்திட்டு இன்னொரு பொண்ணுகூட தொடர்பு வச்சிருந்துக்கிறான்..” என்று அவர் சொல்லிக் கொண்டே போகும் போது வித்யாவின் கண்கள் கோபத்தில் சிவந்தன. “என்ன சொல்றீங்க? அந்த பொறுக்கி நாயை அம்மாவும் அப்பாவும் சும்மாவா விட்டாங்க?” என தொனியில் கோபத்தைக் காட்டிக் கேட்க, அவளைப் பார்த்து வருத்தமான புன்னகையை சிந்திய ரமணி, “சம்மு பாப்பா அந்த பொறுக்கிய டைவர்ஸ் பண்ணிட்டு இந்த வீட்டிற்கு ஆதரவு தேடி வந்த பாப்பாவை நீ இந்த வீட்டுப் பொண்ணே இல்லை.. அநாதைனு பேசி அவ மனசை உடைச்சி வீட்டை விட்டு வெளியே அனுப்பிட்டாங்க.. அந்த ராத்திரி நேரத்துல எங்க போனா என்ன ஆனானு யாருக்கும் தெரியலை..” என்றவர் தனது புடவை முந்தானையால் வாயை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தார். வித்யாவிற்கு அந்த பிரகாஷையே கொல்லும் வெறி வர அறையில் இருந்து வெளியே செல்ல முயன்றவளைத் தடுத்தார் ரமணி.
“என்னை விடுங்க ரமணிம்மா.. எவ்வளவு தைரியம் இருந்தா என் அக்கா வாழ்க்கைய நாசமாக்கியிருப்பான்? அவனை கொல்லாம விடமாட்டேன்..”
“அவசரப்படாத சின்னப்பாப்பா.. முதல்ல சம்மு பாப்பா எங்க இருக்கான்னு கண்டுபிடிக்கணும்.. எனக்கு யார்கிட்ட உதவி கேக்கிறன்னு தெரியல பாப்பா..” என்றவரின் குரலில் இருந்த கவலை அவர் சம்யுக்தா மீது கொண்ட அன்பை பறைசாற்றியது.
“நீங்க கவலைப்படாதீங்க அக்கா.. அக்காவை எப்படியாவது கண்டுபிடிச்சி மறுபடியும் இந்த வீட்டிற்கு கூட்டிட்டு வந்து, அந்த பிரகாஷ் நாய்க்கு அவ கையாலேயே நான் தண்டனை கொடுக்க வைப்பேன்.. என் சம்மு அக்கா மனசு குழந்தை மனசு அவ மனசுக்கு நிச்சயம் நல்லாத்தான் இருப்பா..” என்றாள் உறுதியான குரலில்.
“நான் கும்பிடுற அந்த மாரியாத்தா நிச்சயமா பெரியபாப்பாவை காப்பாத்துவாமா..” என்று நம்பிக்கை மிகுந்த குரலில் கூறினார். வித்யா யோசனையில் இருக்க அவர் அங்கிருந்து சமையல் அறைக்குச் சென்று விட்டார்.
………………………………………………..
பரந்தாமன் வீட்டையே தலைகீழாக மாற்றி வைத்திருந்தார். எப்போதும் புன்னகையுடனே அவர் இருந்தாலும் இன்று அவரது முகத்தில் அதிக ஜொலிப்பாக இருந்தது. அதைப் பார்த்த சம்யுக்தா, “சார் இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கிறீங்க போல இருக்கு..” என்று அவரிடம் புன்னகையுடனே வினவினாள். ஆம் இப்போது சம்யுக்தா முற்றிலும் மாறி இருந்தாள். அவளது பேச்சில் ஒரு தெளிவு, செயலில் நிதானம், ஆனால் உடல் எடையும் கண்ணில் அணிந்துள்ள கண்ணாடியும் மட்டுமே அவளை அடையாளம் காட்டியது. வேலையில் சேர்ந்தது முதல் மிகவும் கடினமாக உழைத்தாள். கடைசியாக இருந்த அவளது டீமை கொஞ்சம் கொஞ்சமாக ஐந்தாவது இடத்திற்கு கொண்டு வந்தாள். மூன்று மாதங்களில் அவளது இந்த கடமை உணர்வு தீஷிதனை இம்ப்ரஸ் பண்ணியது. ஒவ்வொரு விடயத்தையும் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டாள். டீமில் தன்னுடைய வேலை முடிந்தது என்று நினைத்து விடாமல், மற்றவர்கள் முடிக்காமல் வைத்திருந்த வேலைகளையும் செய்து முடித்தாள். இவை அவளின் கடந்து வந்த முட்பாதையை மறக்க உதவியது. காலை முதல் மாலை என்று இல்லாமல் காலை முதல் இரவு வரை கம்பனியே கதி என்று வேலை செய்து கொண்டு இருந்தாள் சம்யுக்தா. இவளின் செயல் பரந்தாமனை வியக்க வைத்தது.
இந்த மூன்று மாதத்தில் நடந்த மற்றுமொரு விடயம் சம்யுக்தா, புகழின் செல்லத் தங்கையாக பரந்தாமனின் மாணவியாக, ஆம் சம்யுக்தாவிற்கு வேலையில் வரும் சந்தேகங்களை தீர்த்து வைத்து ஆலோசனை வழங்குவது பரந்தாமன் தான். அதனால் அவரின் மாணவியாகிப் போனாள் சம்யுக்தா. இவர்கள் இருவருடனும் சேர்ந்து இருந்தாலும் தீஷிதனுடன் மட்டும் ஒரு இடைவெளியை கடைபிடித்தாள்.
“அட ஆமால்ல சார்.. நான் மறந்தே போயிட்டேன்.. ஆமா மதுவை பார்க்க நீங்க ஏன் ஏர்போர்ட் போகல?”
“அந்த சோகத்தை ஏன்மா கேக்குற.. கடன்காரன் தீஷிதன் இந்த காலையில ரொம்ப குளிரா இருக்கும் என் உடம்புக்கு ஒத்துக்காதுனு என்னை விட்டுட்டு அவன் மட்டும் போயிட்டான்..” என்று குழந்தை போல முகத்தை சுருக்கி வைத்துக் கொண்டு சம்யுக்தாவிடம் மகனைப் பற்றி புகார் வாசித்தார். அவரது முகத்தைப் பார்த்த சம்யுக்தாவிற்கு சிரிப்பு வந்தாலும் அதை உதடுகளுக்கு மறைத்துக் கொண்டு, “கவரப்பட்டாதீங்க சார் மது சீக்கிரமா வந்திடுவா..” என்று சொல்லும் போதே தீஷிதனின் காரின் ஹாரன் சத்தம் கேட்டது.
ஹாரன் சத்தம் கேட்டதும் வேகமாக வாசலுக்கு ஓடினார் பரந்தாமன். இத்தனை வயதிலும் தன் மகளைப் பார்க்க ஓடும் அவரைப் பார்த்து மகிழ்ந்தாள் சம்யுக்தா. சமையலறைக்குச் சென்று ஆரத்தியை தயார் செய்து கொண்டு வெளியே வந்தாள். காரில் இருந்து இறங்கிய மதுரா, “அப்பாபாபா…” என்று சொல்லியபடியே ஓடி வந்து அவரை அணைத்துக் கொண்டாள்.
“சிண்டு நல்லா இருக்கியாடா?” என்று தனது அருமை மகளின் முகத்தை தன் கைகளால் பாசமாக வருடி அவள் தலையை தடாவினார். தந்தையின் கண்களில் வடிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு, “நான் படிச்சி முடிச்சிட்டு அமெரிக்காக்கு டாட்டா காட்டிற்று வந்திட்டேன் அப்பா.. இனிமேல் உங்ககூடதான் இருப்பேன்.. எங்கேயும் போக மாட்டேன்..” என்று தந்தையை அணைத்துக் கொண்டவள் கண்களிலும் கண்ணீர். இங்கே நடக்கும் பாசப் பிணைப்பை பார்த்தும் பார்க்காமலும் நின்றான் தீஷிதன். ஆரத்தியுடன் வந்த சம்யுக்தாவிற்கு இதைப் பார்த்து மகிழ்ச்சியாக இருந்தாலும் இதைப் போல நமக்கு ஒரு உறவு அமையவில்லையே என்று எண்ணி வருத்தம் வந்தது உண்மையே. நொடியில் அதை மறைத்துக் கொண்டு இதழ்களில் புன்னகையை மலரவிட்டாள். ஆனால் ஒரு நொடியில் அவள் முகத்தில் வந்த வருத்தம் தீஷிதனின் விழிகளில் இருந்து தப்பவில்லை.
“ஹாய் மது..” என்றவாறு வந்த சம்யுக்தாவிடம் வந்த மதுரா, “ஹாய் சம்மு அண்ணி..” என்றாள். அவளின் அண்ணி என்ற அழைப்பில் விழிகள் தெறிக்க அதிர்ச்சியில் மதுராவைப் பார்த்தாள் சம்யுக்தா. அவளைப் பார்த்து கண்களை சிமிட்டியவள், “எனக்கு உங்களை அக்கானு கூப்பிடவோ இல்ல பேர் சொல்லிக் கூப்பிடவோ விருப்பம் இல்லை.. அண்ணினு கூப்பிட பிடிச்சிருக்கு.. ப்ளீஸ் சம்மு அண்ணி நான் அப்டியே கூப்ட்டுக்கவா..?” என்று விழிகளில் ஆர்வத்துடன் கெஞ்சினாள். சம்யுக்தாவிற்கு என்ன சொல்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு நிற்க, தீஷிதன், “தாரளமாக கூப்பிடு மது..” என்று சொல்லிவிட்டு உள்ளே செல்ல, “சூப்பர் அண்ணாவே சொல்லியாச்சு.. அப்புறம் என்ன நான் உங்களை இனிமேல் அண்ணினுதான் கூப்பிடுவேன்..” என்றாள். பரந்தாமனுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சியாக இருந்தது. சம்யுக்தாவிற்கோ இப்போ இங்க என்ன நடந்தது என்று யோசிக்க, அதை தடை செய்யும் விதமாக, “சம்மு அவன் கிடக்கிறான் நீ ஆரத்தி எடுமா மது வீட்டிற்குள்ள போகட்டும்..” என்று சொல்ல, அவளும் தலையசைத்து விட்டு மகிழ்வோடு மதுராவிற்கு ஆரத்தி எடுத்து திலகம் இட்டு வரவேற்றாள். மதுரா துள்ளிக் குதித்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊