இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49

5
(10)

Episode -49

கோடீஸ்வரனின் முகத்தைப் பார்த்ததும், ஒரு நொடி ஆதியும் சரி, தீரனும் சரி அசந்து தான் போனார்கள்.

அவரின் முகத்தில் கை விரல்களின் அடையாளம் அப்படி பதிந்து போய் இருந்தது.

தீரனோ, அவரை ஒரு நொடி கூர்ந்து பார்த்து விட்டு, அப்படியே பார்வையை அங்கே இருந்த தமயந்தி மீது செலுத்த,

அவளும் புருவத்தை உயர்த்தி “என்ன?” என்பது போல அவனைப் பார்த்தாள்.

அவனுக்கு உண்மையில் எப்படி எதிர் வினையாற்றுவது எனப் புரியாத நிலை.

தான் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக இப்படி வந்து நிற்கும் மனைவியைக் கண்டு, அவனுக்கு பேச்சு வர மறுத்தது.

எவ்வளவு பெரிய சிக்கலில் தானே வந்து மாட்டி இருக்கிறாள்?,

இந்த முயற்சியில் அவளது உயிர் கூட போயிருக்க வாய்ப்பு உண்டு.

ஆனாலும் அதனைக் கூட மதிக்காது, இப்படி வந்து நிற்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவன் மீது அவள் கொண்ட காதல் அன்றி வேறு ஏது?

அவன் சொன்ன ஒற்றை வார்த்தைக்காக, அவள் இவ்வளவு தூரம் செய்து இருக்கிறாள் என்றால் அதற்கு காரணம் அவன் மீது அவள் கொண்ட உயிர் நேசம் அன்றி வேறு என்னவாக இருக்க முடியும்?

ஆனால், இப்போது காதலைக் கொண்டாடும் தருணமோ, அதற்கு உரிய சந்தர்ப்பமோ இப்போது இல்லையே.

அவளை இந்த அயோக்கியனிடம் இருந்து காப்பாற்ற வேண்டுமே என எண்ணிய போது தான் தமயந்தியை உற்றுக் கவனித்தான் தீரன்.

அவளின் இரு கன்னங்களிலும் கை விரல் அடையாளங்கள் பதிந்து இருந்தது.

ஆனாலும் வலியை வெளியில் காட்டாது திமிராக அமர்ந்து இருந்தாள் பெண்ணவள்.

அவள் எத்துணை மென்மையானவள் என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும்

அப்படிப் பட்டவள் இன்று இப்படி, வலிகளைத் தாண்டி சீறிப் பாய காரணம் அவன் மாத்திரம் தான்.

“தீரன் பொண்டாட்டிடா.” என அவன் மார் தட்டிக் கொள்ள ஆசை கொண்டாலும். அவளின் சோர்ந்த முகம் அவனை வாட்டி வதைத்தது.

அவளை அடித்து துன்புறுத்தி இருக்கிறார்கள் எனத் தெரிந்ததும் அவனின் இரத்தம் மொத்தமும் கொதிக்க ஆரம்பித்தது.

அவனால் ஒரு இடத்தில் நிலை கொள்ள முடியாது போகவே, சிரமப் பட்டு தன்னை அடக்கிக் கொண்டான்.

அவனின் கோபம் அவனது விவேகத்தை தடை செய்யும். அது அவனுக்கு நல்லது இல்லையே.

இப்போது அவனுக்கு வேகத்தை விட முக்கியமானது விவேகம் இல்லையா….

இப்போது கவலையைக் காண்பித்தாலோ, இல்லை கோபத்தைக் காட்டினாலோ அவன் தோற்று விடுவான் அவனின் மனையாளும் தோற்று விடுவாள். ஆகவே அவன் அமைதி காத்தான்.

கெத்தான முகத்தையே வெளியில் காண்பித்தான். கோடீஸ்வரனை நோக்கி இளப்பமான புன்னகை ஒன்றை சிந்தியவன்,

“என்ன கோடீஸ்வரன் அடி பலமா விழுந்து இருக்கு போல. இந்த அடி போதுமா இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?, என் பொண்டாட்டி சரியான வேலை தான் செய்து இருக்கா.” என கூறி கிண்டலாக சிரிக்கவும்,

அவனது முகத்தில் தமயந்தியைக் கண்டதும், பயம், பதட்டம் வரும் என் எதிர் பார்த்தவர்,

அது எதுவும் இல்லாது போகவும், ஒரு கணம் ஏமாந்து தான் போனார்.

தான் நினைத்தது எதுவும் நடக்கவில்லை என எண்ணியவருக்கு முகம் கன்றிப் போனது.

அவரின் முகக் கன்றலை திருப்தியுடன் பார்த்தான் தீரன்.

“என்ன கோடீஸ்வரன் என் கண்ணில சின்னக் கலக்கத்தைக் கூடக் காணோம்னு ரொம்ப பீல் பண்ற மாதிரி இருக்கே.” என அப்போதும் கேலியாக கேட்க,

பதிலுக்கு கோடீஸ்வரனும், “என்னடா திமிரா நான் இப்பவே உன்ன என் முன்னாடி மண்டியிட வைக்க முடியும். உன் பொண்டாட்டி அதுதான் என்னோட அருமை வளர்ப்புப் புத்திரி என் மேல கை வைக்கும் போது, என் புருஷனுக்கும், ஆதிக்கும் நீங்க செய்த கொடுமைக்கு நான் தர்ற பரிசுன்னு சொல்லித் தான்டா என்னை அறைஞ்சா. நல்லவ போலவே வந்து, அப்பா அவர் சொன்னது எதையும் நான் நம்பலப்பா, உங்கள பத்தி எனக்கு தெரியும் அப்பா. என்னோட சொத்து முழுக்க உங்களுக்கு எழுதித் தரேன்னு சொல்லி, அமைதியாப் பேசிட்டு, என் பக்கத்தில வந்து நான் எதிர் பார்க்காத நேரம் அறைஞ்சிட்டா. ரொம்ப நல்லா நடிச்சு என்ன ஏமாத்திட்டா. ஆனாலும் அவளுக்கு தைரியம் ரொம்ப ரொம்ப ஜாஸ்தி தான்டா.என் இடத்துக்கு தில்லா தனியா வந்து இருக்கா.”

“பூனை போல இருக்கிறவ இன்னைக்கு புலி போலப் பாயக் காரணம் நீ தான்டா. அவ என்னையே எதிர்த்து நிற்க காரணமும் நீ. ஒரு அடிக்கே சுருண்டு விழுறவ, அத்தனை அடி வாங்கியும் தில்லா நிக்கிறாடா. அதுக்கு காரணம் உன் மேல இருக்கிற காதல். என்ன அடிச்சப்போ உன் பொண்டாட்டிய கண்டம் துண்டமா வெட்டிப் போடணும்ணு எனக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்துதுடா. ஆனா அவளால எனக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு.”

“அந்த ஒரு காரணத்துக்காகத் தான் அமைதி காக்கிறன். அவ முன்னாடியே உன்னையும், உன்னோட அருமைத் தம்பியையும் போட்டுத் தள்ளிட்டு அதுக்கப்புறம் அவளையும் மேலோகம் அனுப்பி வைக்கிறேன். அங்க போய் சந்தோஷமா வாழ்ந்து கொள்ளுங்க. அவ கண்ணு முன்னாடியே நீங்க இரண்டு பேரும் சாகணும் அது தான் அவளுக்கு நான் கொடுக்கப் போற மிகப் பெரிய கிப்ட்.”

“நீங்க இரண்டு பேரும் நான் பாவம் பார்த்து விட்டதால வளர்ந்து நிற்கிற காட்டுச் செடிங்கடா. உங்கள வேரோட வெட்டிப் போட்டா கேட்கிறதுக்கு யாரு இருக்காங்கடா?” என கத்த,

அவரின் பேச்சில், தீரனை விட அதிகம் கோபம் கொண்டு கொந்தளித்து நின்றது என்னவோ ஆதி தான்.

அவனது கை முஷ்டிகள் இறுகிப் போய் நின்றவனின் கைகளைப் பற்றி அவனை சற்று சமாதானப் படுத்தினான் தீரன்.

அண்ணனுக்காக அமைதியாக நின்றவன், அவனை ஏறிட்டுப் பார்க்க,

தீரன் கண்களை ஒரு முறை மூடித் திறந்தவன், குறித்த சைகை மூலம் செய்ய வேண்டியதை உணர்த்த,

ஆதியும் புரிந்து கொண்டு, கண் சிமிட்டி விட்டு,

அடுத்த நொடி க கையை நீட்டி,

“போதும் மிஸ்டர் கோடீஸ்வரன் உங்க பேச்சு. காது வலிக்குது. சும்மா வெட்டிப் பேச்சுப் பேசாம, முக்கியமான விஷயத்துக்கு வருவோமா?, இப்போ என்ன ஒண்ணு நீங்க…. தப்பு…. தப்பு…. நீ சாகணும். இல்ல நாங்க சாகணும் அவ்வளவு தானே. இதுக்கு எதுக்கு பக்கம் பக்கமா டயலாக் பேசுறாய். சும்மா வள வளன்னு.” என கிண்டலாக கூற,

“ஏய்…. நான் உன்னோட அப்பன்டா….”

“யாரு நீ?, அப்பா என்கிற வார்த்தைக்கு உரிய அர்த்தம் தெரியுமா உனக்கு?, அப்பான்னா, பாசம், பாதுகாப்பு, நல்ல பழக்கங்கள் எல்லாத்துக்கும்முன் உதாரணமா இருக்கணும். பிள்ளைங்கள கண்ணுக்குள்ள வைச்சுப் பார்த்துக்கணும். கண்ண மூடிக்கொண்டு கடைசிக் காரியம் பண்ண யோசிக்க கூடாது. இப்போ இருக்கிற பல பேர் பிள்ளைங்கள பெத்தா மட்டும் போதும்ன்னு நினைக்கிறாங்களே தவிர, அவங்கள சமூகத்துல ஒரு நல்ல பிரஜையா உருவாக்கணும்ன்னு நினைக்கிறது இல்லை.”

“பெத்ததோட கடமை முடிஞ்சுதுன்னா…. எப்படி உங்கள அப்பான்னு கூப்பிட முடியும். இன்னைக்கு சமுதாயம் கெட்டுப் போக காரணமே உங்கள மாதிரி ஆட்கள் தான். ஏனோ தானோன்னு பிள்ளைங்கள கவனிக்காம விடுறதால தான், பல பிள்ளைங்க தடம் மாறி அழிஞ்சு போறாங்க. எல்லாப் பிள்ளைகளும் பிறக்கும் போது நல்லவங்க தான். ஆனா வளரும் போது தான் சறுக்கிறாங்க. அதுக்கு காரணம் உன்ன மாதிரி சுயநலமான பெற்றோர்கள் தான்.”

“அதே மாதிரி உங்களோட ஒண்ணுக்கும் உதவாத மூட நம்பிக்கையால தான் சூனியம் வைக்கிறவன் மாடி வீடு கட்டுறான். கஷ்டப் பட்டு உழைச்சு மாடி வீடு கட்டினவன் பிச்சைக் காரன் ஆகிறான். முழுசா கடவுள நம்புற நீங்க எதுக்கு இந்த மாதிரி ஆட்கள நம்பணும். அத விடு. நான் என்னையா தப்பு செய்தன். உனக்கு பிள்ளையா பிறந்தத தவிர.”

“எனக்கு அப்பான்னா நான் கை காட்டுறது என்னோட சதாசிவம் அப்பாவாத் தான் இருக்கும். எனக்கு ஒண்ணு இல்லை இரண்டு அப்பா இருக்காங்க. என்ன குழப்பமா இருக்கா என்னோட இன்னொரு அப்பா என் அண்ணன் தான்.” என தீரனைக் கை காட்ட,

தீரனின் கண்கள் தானாக கலங்கியது.

தமயந்திக்கோ, ஆதியின் பேச்சுக்கு விசில் அடிக்க வேண்டும் போல இருக்க,

கை, கால்கள் கட்டப் பட்ட நிலையில் முடியாது போக,

“அப்படி சொல்லு ஆதி, இவர எல்லாம், மனுஷ ஜென்மத்துல சேர்க்க முடியாது. இன்னைக்கு தான்டா சாட்டையடியாப் பேசி இருக்காய். அப்படியே உன்னோட முகத்தையும் இந்த மிருகத்துக்கு காட்டு, அப்போ தான் உன்னோட வெறியும், கோபமும் புரியும்டா.” எனக் கூறியவளை,

ஆதியும், தீரனும் புருவம் தூக்கிப் பார்த்தனர்.

அவளின் பேச்சில் தீரனுக்கு புது உத்வேகமே பிறந்தது.

ஆதியோ, “அப்படி சொல்லுங்க அண்ணி.” எனக் கூறவும்,

“ஏய், என்னடா ஆளாளுக்கு படம் காட்டுறீங்களா?” என கர்ஜித்த கோடீஸ்வரன்,

மேலும் ஏதோ சொல்ல வர,

காதைக் குடைந்த, ஆதி, “இதுக்கு மேல நோ பேச்சு. ஒன்லி ஆக்ஷன் மட்டும் தான். இப்போ பாருங்க அண்ணி வேடிக்கையை.” என கூறி விட்டு,

சத்தமாக விசில் அடிக்க, அடுத்த நொடி, பட்டென்று மேலிருந்து கூரையைப் பிய்த்துக் கொண்டு, வந்து குதித்த தீரனின் ஆட்கள், கோடீஸ்வரனும், அவரது ஆட்களும் எதிர் பாரா வண்ணம், பட படவென அங்கிருந்த அவரது ஆட்களை சுட்டுத் தள்ள ஆரம்பித்தனர்.

இந்த அதிரடியை கோடீஸ்வரனே எதிர் பார்க்கவில்லை.

அவர், பணயமாக தமயந்தியை வைத்து மிரட்டலாம் என எண்ணி, அவளை நோக்கி ஒரு எட்டு எடுத்து வைக்க,

அவரைப் போக விடாது தடுத்து எட்டி உதைந்த தீரன், அவர் எழும் முன் மின்னல் வேகத்தில் தமயந்தியை காப்பாற்றி இருந்தான்.

அதே போல, ஆதியும் ஒரு பக்கமாக, கோடீஸ்வரனின் ஆட்களைப் பந்தாடிக் கொண்டு இருந்தான்.

இரு சிங்கங்களும் இணைந்து அந்த இடத்தை அதகளம் பண்ணிக் கொண்டு இருந்தனர்.

தீரன், தமயந்தியை ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தததுடன், காவலுக்கு, தனது ஆட்களையும் நிறுத்தி வைத்து இருந்ததனால் வேறு யாரும் அவளை நெருங்கக் கூட முடியவில்லை.

அவளின் அருகில் கூட யாராலும், போக முடியாத நிலை.

ஒரு பக்கம், தீரனும், ஆதியும் சிம்பிளாக ஜெயித்துக் கொண்டு இருந்தனர்.

இருவரின் பலத்துக்கும் முன்னாலும், கோடீஸ்வரனின் ஆட்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.

கோடீஸ்வரன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் குறைய ஆரம்பித்தனர்.

தனது ஆட்களை முன்னால் ஏவி விட்டவர், மெதுவாக ஆதி, மற்றும் தீரன் இருவரது கண்களிலும் மண்ணைத் தூவி விட்டு,

அங்கும் இங்கும் பார்த்து விட்டு, மறைவான இடம் நோக்கி சத்தம் இல்லாது நகர்ந்து சென்று நின்று கொண்டார்.

அங்கிருந்து மறைந்து நின்றாலும் அவரின் கண்கள் அங்கு நடக்கும் அனைத்தையும் உற்றுக் கவனித்துக் கொண்டு தான் இருந்தது.

ஆதியை விட இப்போது அவருக்கு கோபம் அதிகம் இருப்பது எல்லாம் தீரன் மீது தான்.

அவன் தானே, சிறு வயதில் இருந்து ஆதியை காப்பாற்றி வளர்த்துக் கொண்டு வந்து இருக்கிறான்.

அவர் அழிக்க நினைத்த ஒரு விதையை, அவன் வளர்த்து விருட்சம் ஆக்கி வைத்து இருக்கிறான் அல்லவா.

அவருக்கு எதிராக அவன் வளர்ந்து நிற்க காரணம் அவன்.

தமயந்தி, அபர்ணாவின் சொத்து அவருக்கு வராது போக காரணம் அவன்.

இரு பெண்களுக்கும் உண்மை தெரியக் காரணம் அவன்.

அவரின் சொத்துக்கள் அணு அணுவாக அழிந்து போக காரணம் அவன்.

இன்று, தமயந்தி அவரை அறைய காரணமும் அவனே தான்.

ஆதியை அவர் அழிக்க நினைத்த காரணம் வேறு.

ஆனால் இப்போது தீரனை, அவர் அழிக்க நினைக்கும் காரணம் அவனின் மீது உள்ள அதீத கோபம் தான்.

ஆதியை விட உடனடியாக தீரனைப் பழி வாங்க வேண்டும் என எண்ணினார் அவர்.

அவரின் கேடான ஆசை நிறை வேறுமா?

இல்லை தீரன் அவருக்கு முடிவு கட்டுவானா?

தமயந்தி, கணவனைக் காப்பாற்ற முன் வருவாளா?

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 10

No votes so far! Be the first to rate this post.

2 thoughts on “இடைவெளி தாண்டாதே..!! என் வசம் நானில்லை..!! 49”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!