43. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

 

ஜனனம் 43

 

பாக்ஸிங் பழக்கிக் கொண்டிருந்த தேவனின் குத்துகள் இன்று வழமையை விட ஆக்ரோஷமாக இருந்தன. 

 

“தேவன் பாஸ் ஃபயரா இருக்கார்ல‌. என்னாச்சோ தெரியல. பார்த்து இரு” வினிதாவை பைக்கில் விட்டு விட்டுச் சென்றான் அஷோக்.

 

வினி வந்ததை கடைக்கண்ணால் பார்த்து அறிந்த தேவன் சற்று நேரத்தில் அவளருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தான். வீட்டில் எதுவோ சரியில்லை என்பது அவனுக்கு நேற்றிரவே புரிந்து விட்டது.

 

சாப்பிடும் போது சத்யா, யுகன் இருவரும் வழக்கம் போலில்லை. அமைதியாகவே இருந்தனர். யுகன் ஜனனியோடு ஜாலியாக பேசவில்லை. அவள் பசிக்கவில்லை என்று அறையினுள் அடைந்து கொண்டாள்.

 

கோர்ட்டில் என்ன நடந்தது என்பது இதுவரை அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் கேட்கவும் இல்லை, எவரும் சொல்லவும் இல்லை.

 

“சத்யா ஏதோ பண்ணிட்டு வந்திருக்கான். அவன் முகமே சரியில்லை” ரூபன் இரவு தேவனிடம் சொல்லி இருந்தான்‌.

 

என்ன நடந்திருக்கும் என்று யோசித்து தலை வலித்தது இவனுக்கு. முன்பு எவ்வளவு ஆனந்தமாக இருந்த குடும்பம் அது‌. யாரினதோ கண் பட்டது போல் இப்போது அனைத்தும் மறுபுறம் நடப்பது போலிருந்தது.

 

“என்னாச்சு தேவ்? எதுவும் பிரச்சினையா?” என்று அவள் கேட்க, “பிரச்சினையைத் தான் உங்கக்கா சிறப்பா தந்துட்டு போயிட்டாளே. இருந்த சொட்டு நிம்மதியை திரும்பவும் எடுத்துக்கிட்டா. அவளுக்கு என்ன தான் வேணுமாம்? அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டதைத் தவிர சத்யா வேறெந்த தப்பும் பண்ணல‌” கோப விழிகளை அவள் மீது பாய்ச்ச,

 

“திரும்ப என்ன பண்ணுனா? என்னாச்சு தேவ்?” பதற்றத்துடன் கேட்டாள் வினிதா.

 

“உனக்கெதுக்கு அது? அவ பக்கம் பேசி என்னை விட்டுட்டுப் போனவ தானே நீ? இப்போ அக்கறை இருக்கிற மாதிரி நாடகம் ஆடாத” வெறுப்போடு வந்தன வார்த்தைகள்.

 

“ப்ளீஸ் தேவ்! சொல்லு‌. என்ன தான் ஆச்சு?” அவள் கெஞ்சலுடன் வினவ, “நேற்று சத்யா கோர்ட்..” என்று ஆரம்பிக்கும் போது அவளது அலைபேசி அலறியது.

 

எடுத்துப் பார்க்க அஷோக் தான் அழைத்திருந்தான். அதைப் பார்த்து விட்டு தேவனை ஏறிட, அவன் கண்களில் தீப்பொறி.

 

“போய் பேசிட்டு வர்றேன்” என்க, “வராத. அப்படியே போயிடு. அவன் கூடவே அஷு அஷுனு குசு குசு பேசிட்டு இரு. இப்போ தானே விட்டுட்டு போனான். அதுக்குள்ள நீ இல்லாம இருக்க முடியலயோ?” அஷோக்கை நினைக்கும் போதே அவனுக்கு கடுப்பானது.

 

“எதுக்கு கூப்பிடுறானோ தெரியலை. சும்மா எதுக்கெடுத்தாலும் தையத்தக்கானு குதிக்காத” அவளும் சற்றே கடுமையாகப் பேச,

 

“ஓஹ்ஹோ! மேடமுக்கு அவன் பற்றி பேசினா பொங்கி வழியுதோ? அந்தளவுக்கு போயிடுச்சுல்ல”

 

“நீ பேசுறது அசிங்கமா இருக்கு. ஹீ இஸ் மை ஃப்ரெண்ட்”

 

“புரியுது புரியுது. வெயிட் பண்ண வைக்காத. உன் ஃப்ரெண்ட் துடிச்சு போயிடுவான். எடுத்து பேசு” அவளை அவசரப்படுத்தினான் தேவன்.

 

“ஓவரா போகாத தேவ். ஒருத்தங்க அவசரத்துக்கு கால் பண்ணி எடுக்காம போனா என்னவாகும்? எல்லாத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்குறது தப்பு” அவளுக்கு அவன் பேசிய தொனியில் பற்றிக் கொண்டு வந்தது.

 

“அது சரி. நான் தான் தப்பு. நீ ரொம்ப சரியா பேசுறல்ல. அப்படியேதான் இருந்துக்க. நான் கவலையா இல்ல செத்தே போனாலும் என்ன ஏதுன்னு கேட்க வராத” என்றிட, “தேவ்வ்” என அலறினாள் வினிதா.

 

“சும்மா பதறாத. போய் அவன் கூட பேசு. அதோ மறுபடி கூப்பிடுறான்ல?” என்று சொல்ல, “ரொம்ப பண்ணுற நீ” சலிப்போடு தூரச் சென்று அழைப்பை ஏற்றாள்.

 

“இவ மட்டும் எல்லாம் அளவோடவா பண்ணுறா?” மேசையில் தலை வைத்துக் கண் அயர்ந்தான் ஆடவன்.

 

…………….

அதிகாலையில் கண் விழித்தான் சத்யா. எழுந்தவுடன் அவன் கண்கள் ஜனனியைத் தேடின. அவள் உறங்கிய இடம் வெறுமையாக இருந்தது.

 

“எங்கே போயிட்டா?” அவனையறியாது ஒருவித பதற்றம் தொற்றிக் கொள்ள, பல்கோணிக்குச் சென்று பார்த்தான்.

 

அங்கும் அவள் இல்லை. தான் பேசியதை நினைத்து எங்காவது சென்று விட்டாளோ? அப்படியென்றால் தாயிற்கு என்ன பதில் கூறுவது என்று திணறிப் போனான்.

 

படிகளில் இறங்கி கீழே செல்ல, தோட்டத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அங்கு இருப்பாளோ என்று வேகமாக நடையைக் கட்ட, இருமல் ஓசையில் திடுக்கிட்டுத் திரும்பினான்.

 

துப்பட்டாவை சால்வை போல் போர்த்திக் கொண்டு இருமியவாறு நின்றிருந்தாள் ஜனனி.

 

“இங்கே தான் இருக்கியா?” அவனிடம் சீரான மூச்சு வெளிப்பட, “ஏன்? வீட்டை விட்டு ஓடிட்டேன்னு நெனச்சுட்டீங்களா?” வலது புருவத்தை மேலேற்றினாள் மங்கை.

 

“ச்சே ச்சே” தலையை வேகமாக அசைக்க, “யுகிக்கு ட்ரஸ்ட் ஃபுல் டாடி தான் நீங்க. ஆனால் நான் உங்க மேல இம்மியளவும் ட்ரஸ்ட் வெச்சதில்ல. சோ இவ்ளோ கேவலமா பொய் சொல்லாதீங்க” அவள் குரல் கம்மியிருந்தது.

 

“உனக்கு உடம்பு சரியில்லையா?” உடனே கேட்டு விட்டான் அவன்.

 

“உடம்பு இல்ல, மனசு தான் சரியில்ல” அவளும் மறைக்கவில்லை.

 

“என்னை மன்னிச்சிடு ஜனனி. நேற்று ராஜீவ் விஷயத்தை உன் கிட்ட கேவலமான முறையில் பேசிட்டேன்”

 

“எந்த முறையில் மனசுல இருக்கோ அந்த முறையில் தான் வாயில வரும். பானையில் இருக்கிறது தானே அகப்பையில் வரப் போகுது” அவள் இதழ்களில் விரக்திச் சிரிப்பு.

 

“நான் பேசினது தப்புத் தான். உன்னையும் ராஜீவையும் ஆரம்பத்தில் நான் லவ்வர்ஸா பார்த்தேன். அப்பறம் நீ சட்டுனு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்ட. இனியாவோட சேர்த்து வெச்சு யோசிச்சதுல நீ என் மனசுல அப்படி ஒரு விம்பமா பதிஞ்சு போன.

 

ஆனால் உன் நடவடிக்கைகளைப் பார்த்த அப்பறம் நான் அதை மறந்துட்டேன். ராஜீவ் விஷயத்தில் வேற ஏதாவது நடந்திருக்கலாம்னு நெனச்சு உன் மீதான எண்ணம் கொஞ்சம் கொஞ்சமா மாறிடுச்சு. நேற்று ஏதோ டென்ஷன்ல.. அது ரொம்ப பெரிய தப்பு தான்” அவன் சொன்ன விதம் அவனுக்கே ஒரு மாதிரி இருந்தது.

 

“நீங்க சொன்னது எனக்கு கஷ்டமா இருந்துச்சு தான் இல்லனு சொல்லல. என்னைப் பற்றி நீங்க இல்ல, யாரு பேசி இருந்தாலும் அந்த டைம் அப்படி தான் ரியாக்ட் பண்ணி இருப்பேன். அது என் கேரக்டரை டேமேஜ் பண்ணுற மாதிரி இருந்துச்சு. இப்போ எனக்கு அது பெரிய விஷயமே இல்லை.

 

நீங்க பேசுற அளவு நான் யாரையும் ஏமாத்தல. விளக்கம் கொடுக்குற அளவு நமக்கு நடுவுல எந்த உறவும் இல்ல. தாலி கட்டுனீங்கனு உங்க கிட்ட எந்த உரிமையையும் எதிர்பார்க்கல. சோ இனிமேல் நீங்க அப்படியே பேசினாலும் நான் அழ மாட்டேன். நிச்சயம் பதிலடி கொடுப்பேன். ஏன்னா நீங்க சொல்லுற மாதிரி நான் எதுவும் பண்ணல” அவள் குரலில் பிசிறில்லை.

 

சத்யாவால் எதுவும் பேச முடியவில்லை. இவ்வளவு தெளிவாகப் பேசுகிறாள் என்றால் அவளிடம் எந்தத் தவறும் இல்லை என்று புரிந்தது. இனிமேல், ராஜீவ் பற்றி ஒருபோதும் பேசக் கூடாதென உறுதியெடுத்துக் கொண்டான்.

 

“ஒரு மனைவியா உங்க கிட்ட நான் எதையும் எதிர்பார்க்க கூடாதுன்னு உறுதியெடுத்துட்டேன். பட், இந்த வீட்டுக்கு மருமகளா என்ன பண்ணனுமோ அதையெல்லாம் பண்ணுவேன். அதுக்கு நீங்க மறுப்பு சொன்னா, அந்த உரிமையை பறிச்சுட்டீங்கனா கண்டிப்பா இந்த வீட்டில் இருக்க மாட்டேன்” அங்கிருந்து செல்ல, சிலையாக நின்றிருந்தான் சத்யா.

 

தன் உதிரத்தில் உதித்த மகவின் விடயத்தில் நேற்று ஒரு தவறைச் செய்து விட்டான். இன்று ஜனனி மீதான தவறும் சேர்ந்து கொள்ள, குற்றவுணர்வு இரட்டிப்பாகி அவனைக் கொன்றது.

 

அந்த நேரத்தில் அவளைத் திட்டி விட்டான் தான். விட்ட வார்த்தைகளை அள்ள முடியாது. எனினும், தம்மை நம்பி வந்த பெண்ணை காயப்படுத்தி விட்டோமே என்ற நினைப்பு அவனை நேற்று உறங்க விடவில்லை.

 

சிறிது நேரம் கழித்து அறையில் அமர்ந்திருந்த ஜனனியின் கண்கள் யுகனை வட்டமிட்டன. வழக்கம் போல் “குட் மார்னிங் ஜானு” என்றான் தான்.

 

ஆனால் அவ்வழைப்பில் வழமை போன்ற இனிய ஸ்வரம் இல்லை. முகத்தில் எக்கச்சக்க தவிப்பு.

 

அவளும் பதிலுக்கு காலை வணக்கம் கூறி விட்டு வெளியேறியவள், வேலைகளை முடித்துக் கொண்டு இப்போது தான் அறையினுள் வந்தமர்ந்தாள்.

 

யுகனின் கைகளில் கதைப்புத்தகம் வீற்றிருந்தது. இந்த சில நாட்களாக அவளிடம் கதை சொல்லுமாறு கேட்பான் அவன். ஆனால் இன்று வாய் திறந்து கேட்கவில்லை.

 

தயக்கம் தகர்த்தவள் அவனருகில் சென்றமர்ந்து, “கதை சொல்லட்டுமா?” எனக் கேட்க, புத்தகத்தை அவளிடம் நீட்டினான்.

 

அதை வாங்கி பக்கமாக வைத்து விட்டு “ஒரு குட்டிக் கதை சொல்லவா?” அவள் கேட்டதும், தலையாட்டினான்.

 

“எனக்குக் கெடச்ச பொக்கிஷத்தோட கதை. என் வாழ்க்கையில் நான் சந்தோஷமா இருந்த டைம் இருக்கு செல்லம். ஆனால் என்னோட முழு நேரத்தையும் சந்தோஷமா மாற்ற எனக்காக ஒரு பொக்கிஷம் கிடைச்சுது.

 

மிகப்பெரும் புதையலை நான் இந்த வீட்டில் கண்டெடுத்தேன். என் அன்பை மொத்தமா கொட்டி, அவனோட அன்பு மழையில் நான் வாழ்க்கை பூரா நனையனும்னு ஆசைப்பட்டேன். எப்போவும் அந்த நெருக்கத்தை விட்டுடாம, இன்னுமின்னும் கெட்டியா பிடிச்சுக்கனும்னு விரும்பினேன்.

 

நாம நினைக்கிறது எல்லாமே வாழ்க்கையில் நடந்துடுறது இல்லல்ல. அந்த பொக்கிஷத்தோட அன்பை இழந்துடுவேனோனு பயமா இருக்கு. நான் செய்யப் போற செயல் அந்த இழப்பை ஏற்படுத்தும்னு தெரிஞ்சும் அதைப் பண்ண வேண்டிய நிலையில் நான் இருக்கேன்” யுகனைப் பிடித்த அவளது கைகள் பலமான நடுங்கின.

 

“ஜானு! என்னாச்சு உனக்கு? அந்தப் புதையல்..?” அவன் கேள்வியாக நோக்க, “அது நீ தான் யுகி” கண்கள் கலங்க மொழிந்தாள் அவள்.

 

அதைக் கேட்டவனுக்கு எதுவோ புரிவதாய். 

 

“அப்படினா நான் வேண்டாம்னு சொன்னதை நீ பண்ணப் போறியா?” சற்றே கடுமையாகக் கேட்டான் யுகன்.

 

“என்ன பேசிட்டு இருக்கீங்க ரெண்டு பேரும்?” மேகலை உள்ளே வர, சத்யாவும் அவரருகில் அமர்ந்து கொண்டான்.

 

“கதை சொல்லிட்டு இருந்தோம் பாட்டி” என்று சொன்ன பேரனை மடியில் இருத்திக் கொண்டார் மேகலை.

 

சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, “அத்தை! நான் ஒன்னு கேட்கவா?” அனுமதி வேண்டியவளை, கேள் என்பதாகப் பார்த்தார்.

 

“இந்த குடும்ப நலனுக்காக முடிவெடுக்க எனக்கு உரிமை இருக்கா? உங்க கிட்ட கேட்கலனு கோவிச்சுக்க மாட்டீங்களே?” 

 

“இல்லம்மா. இந்த வீட்டுப் பொறுப்பு இப்போ உன் கிட்ட இருக்கு‌. முடியும்னா நீ சொல்லி இருப்ப. அப்படி சொல்லாம எதையாச்சும் பண்ணுறதா இருந்தாலும், நீ யோசிச்சு சரியா தான் பண்ணுவனு எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றவருக்கு ஜனனியின் முடிவுகள் கச்சிதமாக இருக்கும் என்பது திண்ணம்.

 

“இது போதும் அத்தை” அவரை அணைத்துக் கொண்டவளைப் பார்த்த சத்யாவின் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

 

ஏமாற்றம் வழியும் விழிகளால் ஜனனியை ஏறிட்டான் சத்யாவின் மைந்தன். அவன் பார்வையை எதிர்கொண்ட ஜனனிக்கோ உள்ளத்தில் பிரளயமே வெடித்தது.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி


 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!