💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 47
அகிலனை மடியில் இருத்திக் கொண்டு தோட்டத்து பெஞ்சில் அமர்ந்திருந்தாள் ஜனனி.
“உனக்கு ஊட்டி விட்டா பிடிக்காதா அகி?” தனது சந்தேகத்தை அவள் முன்னிருத்த, “எனக்கு கை இருக்குல்ல. நானே சாப்பிடுவேன்” என்றவனின் பேச்சில் அவளது புருவங்கள் சுருங்கின.
“ஏன் அப்படி சொல்லுற அகி?”
“ஒரு நாள் ஊட்டி விடச் சொல்லி கேட்டதுக்கு அம்மா அப்படித் தான் சொன்னாங்க. அதனால நான் யார் கிட்டேயும் கேட்காம தனியா சாப்பிடுவேன்” கதை போல் சாதாரணமாக சொல்பவனைப் பார்க்க அவளுக்கு ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தது.
அவனது குரல், அன்புக்காக எவ்வளவு ஏங்கி இருக்கிறான் என்பதை அப்பட்டமாக எடுத்துரைத்தது. இந்த வயதில் தானே ஒரு குழந்தை அன்பை எதிர்பார்க்கும்? அதைக் கூட வழங்காதவளாக இந்த இனியா இருந்திருக்கிறாளே என்று நினைத்தவளோ, மற்றவர் பற்றிய எண்ணம் எதற்கு? இனி இவனை நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும் என்று உறுதியெடுத்துக் கொண்டாள்.
“நீ கையால சாப்பிடலாம் தப்பில்ல. ஆனால் நாங்க யாராவது உனக்கு அன்பா ஊட்டி விட்டா நீ வேண்டாம்னு சொல்லாம வாங்கிக்கனும் சரியா?” அன்போடு அவள் கேட்க, “சரி” தலையை ஆட்டி வைத்தான்.
“எங்கே ஆஆ காட்டு பார்ப்போம்” என்றிட, வாயைத் திறந்தவனுக்கு, தனது கையில் வைத்திருந்த சாக்லேட்டை ஊட்டி விட்டாள்.
“நீங்க என் அம்மா மாதிரி இல்லை. ஆனால் அன்பா இருக்கீங்க” அவளை அணைத்துக் கொண்டான் அகிலன்.
அவனது அணைப்பு அவளுக்கு இதமாக இருந்தது. அவளுள்ளும் தாயன்பு சுரக்கக் கண்டாள். அம்மா போல் இல்லை என்றான், அப்படியெனில் அதற்கு அர்த்தம் அவனுடைய ‘அம்மா’ என்ற உறவுக்கான வரையறையை அவள் மீறி விட்டாள் என்பது தானே?
யுகியையும் இவனோடு சேர்த்து, அகிலனை கலகலப்பாக மாற்ற முடிவெடுத்துக் கொண்டாள். அறையின் ஜன்னல் வழியே இதைப் பார்த்துக் கொண்டிருந்தான் சத்யா.
அவனுக்கு அகிலனைப் பார்க்கும் போது குற்றவுணர்வு மனதைக் குடைந்தது. அவனும் யுகன் போலத் தானே? ஆனால் அதனை சீர்தூக்கிப் பார்க்காமல் அநாதை ஆசிரமத்தில் விட்டது எவ்வளவு பெரிய தவறு என்று நினைத்தான்.
நடந்தது நடந்து விட்டது. இனி அகிலனை சரி செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதன் போது யுகன் கோபிப்பான் என்பதை அறிந்தாலும், எப்படியாவது அனைத்தும் சரியாக வேண்டும் என்று வேண்டுதல் வைத்தான்.
அவனுக்கே தன்னை எண்ணி பிரம்மிப்பாக இருந்தது. இப்போதெல்லாம் அவனிடம் கோபம் இல்லை. முன்பு போல் கோபமும், கடினமும் குறைந்தது போன்ற எண்ணம்.
“சத்யா! அத்தை கூப்பிடுறாங்க” எனும் மேகலையின் குரலில், போன தலை வலி வந்தது போல் இருந்தது.
இன்று எந்தப் பிரச்சினையை இழுத்து விட வந்திருக்கிறாரோ என்ற யோசனையுடன் செல்ல, “இந்த வீட்டில் என்ன நடக்குது சத்யா? ஒவ்வொருத்தரும் என்னென்னவோ சொல்லுறாங்க” என்று கேட்டார் நீலாம்பரி.
“நான் நடக்கிறேன், நீங்க நடக்கிறீங்க, ரோட்டுல ஆடு, மாடு நடக்குது, காட்டுல புலி நடக்குது. அது மட்டும் இல்ல அத்தை! நம்ம கோவில்ல திருவிழா கூட நடக்குதாம். நீங்க எந்த நடப்பைப் பற்றி பேசுறீங்க?” விசிலடித்தவாறு வந்து அவர் தோளில் இடித்தான் ரூபன்.
“நக்கல் நையாண்டிக்கு இது நேரம் இல்ல ரூபன்” அவனை முறைத்தவர், “கல்யாணத்தைப் பார்த்தா கடைசி நேரத்தில் பொண்ணு மாறிடுச்சு. இப்போ என்னன்னா அந்தப் பொண்ணு இனியா கூட இருந்த பையனை கூட்டி வந்திருக்காம்” சத்யாவிடம் கேட்டார் நீலாம்பரி.
அவனே பதில் சொல்லட்டும் என்று அமைதி காத்தனர் அனைவரும். ஆசிரமத்தில் விட்ட விடயம் மட்டும் வீட்டினரைத் தவிர வேறு எவருக்கும் தெரியாதது நல்லதாகப் போய் விட்டது. இல்லையென்றால் அதுவே பூதாகரமாகத் திரும்பி இருக்கும்.
“இனியா கூட இருந்த பையன் இல்ல, என் பையனைத் தான் ஜனனி கூட்டிட்டு வந்தா. இந்த வீட்டு மருமகள் என்கிறதால அதைப் பண்ணுறதுக்கான எல்லா உரிமையும் இருக்கு அத்தை. அப்பறம் முதல்ல சொன்னீங்களே பொண்ணு மாறின விஷயம், அது கடவுள் போட்ட கணக்குனு நான் நெனக்கிறேன். ஏன்னா ஜனனி இருந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் இந்த முடிவை எடுத்திருக்க மாட்டாங்க.
பெத்த பிள்ளையை வேணானு விட்டவ இனியா. ஆனால் இன்னொரு பிள்ளையோட பொறுப்பை ஏத்துக்கனுமானு யோசிச்சு தயங்காம அவனுக்கு நல்லது பண்ண வெச்சு என் தப்பை சரி செஞ்ச ஜனனியோட மனசு யாருக்குமே வராது” அவனது பேச்சில் மூக்கு உடைபட்டது போல் இருந்தது அவனது தந்தையின் அருமைத் தங்கைக்கு.
வித்தியாசமாக நடக்கும் விடயங்களை குத்திக் கிளறி வேடிக்கை பார்க்கும் சில குறுகிய புத்தி கொண்டவர்கள் உறவினர் வரிசையில் இருக்கவே செய்கின்றனர்.
சத்யா தன்னை உயர்வாகப் பேசியதில் ஜனனிக்கு சொல்ல முடியாததொரு உணர்வு. அவனை இமைக்காமல் பார்க்க, அவன் பார்வையும் இவளைத் தான் தீண்டியது.
“இல்ல சத்யா! ஊரெல்லாம் புரளியா இருக்கு. என்னென்னவோ பேசிக்கிறாங்க. அதான் என்ன ஏதுன்னு கேட்க வந்தேன்” அவர் ஜகா வாங்க,
“அத்தை! எங்க வீட்டுல நல்ல விஷயங்கள் நிறையவே நடந்திருக்கு. சத்யா இன்ஜினீயரிங் முடிச்சான், ரூபன் டாப் ரேங்க் எடுத்து டாக்டரானான், நான் கூட பாக்ஸிங்ல ஃபேமஸாகி கோல் மெடல் எல்லாம் எடுத்திருக்கேன். பெருமைக்காக இதை சொல்லுறேன்னு நெனக்காதீங்க.
இதுவெல்லாம் உங்க காதை எட்டி இருக்கும் தானே? அப்போ எல்லாம் நீங்க இதே ஊர்ல தான் இருந்தீங்க. சாதிச்சுட்ட டா, கங்ராட்ஸ், இன்னும் நிறைய வளரனும்னு நீங்கள்லாம் ஒத்த வார்த்தை சொல்லல, ஏன்? அதுக்காக எங்க வாசப்படி மிதிக்கவும் இல்ல.
ஆனால் இப்படி ஏதாவது நடந்துட்டா மட்டும் எப்படி தரையில கால் பட நேரமில்லாம பறந்துக்கிட்டு வர்றீங்க? கேட்கிறதா இருந்தா எல்லாமே கேட்கனும். அப்படி இல்லாம இதுக்கு மட்டும் விளக்கம் கேட்க வர்றது எனக்கு சரியாப்படல” என்றான் தேவன்.
“தேவா!” மேகலை மகனைப் பார்க்க, “நான் அவங்களை எதுவும் சொல்லலம்மா. மனசுல வந்த ஆதங்கத்தைக் கேட்டேன். மத்தபடி அவங்களை அவமதிக்கிறேன்னு நினைக்காதீங்க” என்று விட்டான்.
நீலாம்பரிக்கு பதில் பேச நா எழவில்லை. அவன் கேட்ட கேள்விக்கு அவரிடம் நிச்சயம் பதிலில்லை. அவனது பேச்சு முற்றிலும் சரியே. புரளி பேச இருக்கும் கூட்டம், பாராட்டுவதற்கு வராது.
“நிரா எங்கே அண்ணி? இந்தப் பக்கம் வரவே இல்ல?” மேகலை பேச்சைத் திசை திருப்ப, “நாளைக்கு வருவா. தேவன் கூட கோச்சிங் சென்டருக்கு போக ஆசைன்னு சொன்னா” என்றார் நீலாம்பரி.
“கோச்சிங் செண்டர்ல பார்க்க எதுவும் இல்ல அத்தை. என் கூட ஹாஸ்பிடல் வர சொல்லுங்க. நிறைய இடம் காண்பிக்கிறேன்” ரூபன் கேட்க, “அவ உன் கூட வர மாட்டா” என்று வந்தது பதில்.
“அப்படினா நீங்க வர்றீங்களா அத்தை? பைக்ல ஒரு ரவுண்டு போவோம்” அவரது தோளில் கை போட, “எனக்கு அதுல போய் பழக்கம் இல்ல. அதுவும் உன் கூட வர எனக்கு வெட்கம்” என்றிட,
“அய்யோ! உங்க வெட்கத்துக்கு முன்னால புதுப்பொண்ணு கூட தோத்துப் போயிடுவா” கிண்டல் செய்து ஒரு வழிப்படுத்தினான் ரூபன்.
“உனக்கு குசும்பு ஜாஸ்தியாகிடுச்சு. அப்பறம் பார்த்துக்கிறேன்” அவனது காதைக் திருகி விட்டு அவர் சென்றதும், அனைவரும் ஆசுவாசமாக மூச்சு விட்டனர்.
“உன்னால தான் டா அவங்களை சமாளிக்க முடியும். நீ இல்லனா அவ்ளோ தான்” தேவன் ரூபனின் தோளில் தட்ட, “போடா! அவங்க போறதுக்குள்ள போதும் போதும்னு ஆகுது. ஏதாவது வம்பு பண்ணவே கிளம்பி வர்றாங்க” தலையில் கை வைத்தான் ரூபன்.
“சும்மா இருங்கப்பா. ஒவ்வொன்னு சொல்ல வேண்டாம். அவங்க இயல்பு அப்படி. அதை புரிஞ்சு நாமளும் அதற்கு ஏற்ற மாதிரி பதில் கொடுத்தா சரி” என்று சொன்னாள் ஜனனி.
“டாடி! அத்தை கால் பண்ணுனாங்க. கட்டாகிடுச்சு” என்றவாறு அலைபேசியை எடுத்துக் கொண்டு வந்தான் யுகன்.
அதனை வாங்கிய சத்யா அவ்வெண்ணிற்கு அழைப்பு விடுத்தான்.
“அது யாருடா புது அத்தை உனக்கு?” ரூபன் கேட்க, “தன்யா அத்தை” என்றதும் தேவனது முகம் சிவந்தது.
“உனக்கு அத்தைனு யாரும் இல்ல யுகி. சும்மா வந்து ஒட்டிக்கிட்டவங்களுக்கு அத்தை சொத்தைனு உறவு முறை சொல்லாத” என்று அவன் சொன்னது அழைப்பை ஏற்றவுடன் தன்யாவின் காதில் விழ, அவளுக்கு முகம் சுருங்கிப் போனது.
“நான் அப்பறமா பேசுறேன்ணா” அவள் ஒரு மாதிரி குரலில் சொல்ல, “நீ பேசு தனு. அவன் பேசுற எதையும் காதில் வாங்கிக்காத. எத்தனை தடவை சொன்னாலும் அவன் புத்தியில் ஏறாது” என்ற சத்யாவுக்கு ஆத்திரம் தீரவில்லை.
“யாருக்காகவோ என்னை தூக்கி எறிஞ்சு பேசுறல்ல” தேவன் கோபமாகச் செல்ல, “அவனைப் பற்றி உனக்குத் தெரியுமே? கவலைப்படாத தனு. அப்பறம் சொல்லு, புது பாய் ஃப்ரெண்ட் கூட இன்ஸ்டால போஸ்ட் போட்டிருந்த. யாரு டி அது?” நிலமையை சகஜமாக்க ஆவலுடன் வினவினான் ரூபன்.
“டேய் மச்சி! அது கார்த்திக். என் ஃப்ரெண்டு டா. சச் அவ ஸ்வீட் பர்சன்” தன்யாவின் கண்கள் அழகாக மின்னின.
“ஏங்க! அவ கண்ணுல காதல் இருக்கு தெரியுமா? உங்க மாப்பிள்ளை கார்த்திக் தான்” என்று கிசுகிசுத்த ஜனனியை முறைத்தவன், “நானே தேவா-தனுவுக்கு இடையிலான சறுக்கலை சரி பண்ணனும்னு டென்ஷன்ல இருக்கேன். நீ இதுல புது உறவு சேர்க்கிறியா?” எனக் கேட்டான் சத்யா.
“ஜஸ்ட் சொன்னேன். அதுக்காக கோவிச்சுக்க கூடாது. முதல்ல உங்களுக்கும் தேவாவுக்கும் இடையிலான உறவை சரிப்படுத்திக்கங்க. அப்போ தான் அவர் சம்பந்தப்பட்ட உறவுகளை உங்களால சரி செய்ய முடியும்” என்று சொல்ல, தலையாட்டியவனுக்கு அவள் சொல்வது சரியென்று பட்டது.
“அண்ணி! அகியைக் காட்டவே இல்ல” என்று தனு வினவ, “இதோ இருக்கான் டா. யுகியைப் போலத் தான் அகி பாப்பாவும்” என்று இருவரையும் அருகில் நிறுத்திக் காண்பிக்க,
“ஆமா அண்ணி. அப்படியே ஒன்று போல் இருக்காங்க. சேர்த்து வெச்சி பார்க்கும் போது அவ்ளோ அழகு” என்று நெட்டி முறிக்க, யுகன் கோபமாக நகர்ந்து விட்டான்.
“தனும்மா! அம்மாவை மறந்துட்டல்ல நீ” என்று மேகலை கேட்க, “அய்யோம்மா உங்களைப் போய் நான் மறப்பேனா? அநாதையா இருந்த எனக்கு மகள் என்கிற அந்தஸ்தைத் தந்தது நீங்க தான். எனக்கு உலகமே நீங்க, சத்யாண்ணா உட்பட இந்தக் குடும்பம் மொத்தமும் தான்” என்று கூற,
“அப்படியே கார்த்தியையும் சேர்த்துக்க தங்கோ” எனக் கத்திய ரூபனை, “போடா எரும” என்று மூக்கு முட்ட முறைத்துத் தள்ளினாள் தன்யா.
“இவங்க ரெண்டு பேரும் இப்படி தான் ஃப்ரெண்ட்ஸ் மாதிரி பழகுவாங்க. எல்லாருமே தனுவை எங்க வீட்டுல ஒருத்தியா ஏத்துக்கிட்டாங்க, தேவனைத் தவிர” என்ற சத்யாவின் குரலில் கவலை.
“தேவன் புரிஞ்சுப்பான்ங்க. எல்லாமே சரியாகிடும். கவலைப்படாதீங்க” என்று கூறிய ஜனனிக்கு தேவனின் விடயம் சற்று இடித்தது.
தேவனுக்கு தன்யாவைப் பிடிக்காமலிருக்க காரணம் என்ன? தேவனுக்கும் சத்யாவுக்கும் இடையில் உள்ள முறுகலுக்குக் காரணம் என்ன?
இவ்விரண்டு வினாக்களையும் சுமந்திருந்தது அவளது உள்ளம்.
தொடரும்…….!!
ஷம்லா பஸ்லி