💕 *ஜீவனின் ஜனனம் நீ…!!* 💕
ஜனனம் 54
“நான் கோயிலுக்கு போயிட்டு வர்றேன் மகி. ரூபன் தம்பி வந்தா மேசையில் இருக்கிற சாப்பாட்டை பரிமாறு” என்று சொல்லி மேசையில் உணவை வைத்து விட்டு கோயிலுக்கு சென்று விட்டார் ஜெயந்தி.
அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்த மகிஷாவுக்கு அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவன் இங்கு வந்ததில் இருந்து அவள் மனதில் இனம் புரியாத மகிழ்வு. அவனைப் பார்க்க, பேச, நினைக்க மனம் தித்தித்தது.
“எங்கே தான் போயிட்டார்? இன்னும் தூங்குறாரா? போய் பார்க்கலாமா?” என்று தீவிர யோசனையில் ஆழ்ந்தவளுக்கு அவனைச் சென்று பார்த்தால் தான் என்ன என்ற எண்ணம் உதித்தது.
அலைபேசியை வைத்தவள் அவன் இருந்த அறைக்குச் சென்று கதவில் கை வைக்க அது லேசாகத் திறந்து கொள்ள, உள்ளே எட்டிப் பார்த்தாள்.
தலையணையைக் கட்டிப்பிடித்தவாறு உறங்கிக் கொண்டிருந்தான் ரூபன். பூனை போல் மெது மெதுவாக அடியெடுத்து வைத்து அவன் அருகில் சென்றவளுக்கோ அவனது தரிசனத்தில் உள்ளம் சிலிர்த்தது.
கன்னத்தில் கை வைத்து அவனைப் பார்த்தாள். நெற்றியில் சில்மிஷம் செய்யும் முடிகளை ஒதுக்கி விடத்தான் அவளது ஒவ்வோர் அணுவும் துடித்தன. தன்னையறியாமல் அவன் நெற்றியைத் தொடப் போனவள் சற்று சுதாகரித்து வெடுக்கென்று கையை இழுத்துக் கொண்டாள்.
“மகி! என்னடி பண்ணிட்டு இருக்க?உனக்கு லூசா?” என்று தன்னைத்தானே கடிந்து கொண்டவளுக்கு, தன் மனம் செல்லும் போக்கைக் கண்டு திகைப்பு எழாமலில்லை.
அக்கணம் கண் விழித்த ரூபனுக்கு மகிஷாவின் விம்பம் விழித்திரையில் விழுந்தது.
“குட் மார்னிங் மகி…!!” என்று எழுந்து அமர்ந்தவனுக்கு அவளை விட்டும் பார்வையை நகர்த்த முடியவில்லை.
“என்ன அப்படி பார்க்குறீங்க?” எனக் கேட்டாள், அவன் பார்வையில் துளிர்த்த தடுமாற்றத்தை மறைக்கப் போராடியவாறு.
“என் கண்ணு. நான் பார்க்கிறேன். உனக்கென்ன? பார்க்கக் கூட முடியாதுன்னு சட்டம் போடக் கூடாது”
பாவையவள் முகத்தை விட்டு பார்வையை நகர்த்த முடியாது போனது அவனுக்கு. எப்போது இந்த ஊருக்கு வந்தானோ அப்பொழுதே நட்பு எனும் வட்டத்திலிருந்து வெளிவரத் தொடங்கியிருந்தது அவனது சிந்தனை.
அதை அவனும் உணர்ந்தான். அவ்வுணர்வு அழகாக இருந்தது. பிடித்திருந்தது. அதற்காக இதற்கு காதல் என்று அவ்வளவு இலகுவில் பெயர் வைக்கவும் அவன் விரும்பவில்லை. என்றாலும், அவ்வுணர்வை ஆழ்ந்து ரசித்தான்.
“போய் பகரெஷ் ஆகிட்டு வாங்க. உங்களுக்கு சாப்பாடு எடுத்து வச்சிருக்கேன்” என்று சொல்ல, “என்ன மகி என் அம்மா மாதிரியே சொல்லுற?” என்று கேட்டவனுக்கு மேகலையின் ஞாபகம்.
“ஏன் அப்படி சொல்லுறீங்க?”
“இப்படித்தான் அம்மா வந்து எழுப்பாட்டுவாங்க. அப்புறம் இப்படியே சொல்லுவாங்க. எனக்காக சாப்பாடு எல்லாம் போட்டு வச்சு காத்துட்டு இருப்பாங்க. எனக்கு அவங்க இல்லைங்கிற குறையே இல்லாம நீ பார்த்துக்குற மகி. நீ எனக்கு இன்னொரு அம்மா மாதிரி ஃபீல் பண்ண வெக்கிற” என்று கூறி குளியலறைக்குள் புகுந்து கொண்டான்.
அவளுக்கு அவனின் அந்த வார்த்தை உயிர் வரை சென்று தாக்கியது. இப்படி ஒரு வார்த்தையை ஒரு ஆடவன் வாயால், அதுவும் ரூபனின் வாயால் கேட்டதில் அவளுக்கு சிறகின்றி வானில் உணர்வு.
வாயிலுக்கு சென்று காத்திருக்க, டி-ஷர்ட்டும், டெனிமும் அணிந்து வந்தான். முடியை ஒற்றைக் கையால் கோதிக் கொடுத்தவனின் ஆண்மை சொட்டும் அழகில் சொக்கித்தான் போனாள் மகிஷா.
“என்ன மகி? பார்வை பலமா இருக்கு?” என்று கேட்க, “ஒன்னும் இல்லை. வாங்க சாப்பிடலாம்” என்க தோளைக் குலுக்கி கொண்டே கதிரையை இழுத்துப் போட்டு அமர்ந்தான் ரூபன்.
அவள் உணவுப் பரிமாறிட, “உனக்கு என்னைப் பிடிச்சிருக்கா மகி?” என்று கேட்டான்.
“ஏன் பிடிக்காமலா? பிடிச்சு இருக்கிறதால தான் நான் இதெல்லாம் பண்ணுறேன். இல்லனா நான் உங்க பக்கம் வந்து இருப்பேனா?” சிறு சிரிப்பைப் பரிசளித்தாள்.
“ஏன் என்னை பிடிச்சிருக்கு?”
“எதுக்கு காலங்காத்தால கேள்வி கேக்குறீங்க? உங்க கிட்ட பேச நல்லா இருக்கு..” என்றவளை இடைமறித்து, “பேச மட்டுமா நல்லா இருக்கு பார்க்கவும் தானே? நீ என்னை சைட் அடிச்சல்ல?” வெளிப்படையாக அவன் தொடுத்த கேள்வி அம்பில் நொடியில் தடுமாறிப் போனாள்.
“இல்லையே” என்று சொல்ல வந்தவள், “ஆமா சைட் அடிச்சேன். அழகு ரசிக்கிறது ஒன்னும் தப்பில்லையே?” என்றாள் தெனாவெட்டாக.
“ஓஓ! அப்படின்னா ஓகே. நானும் அழகை ரசிக்கிறேன்” என்றவாறு சாப்பிட்டவனின் பார்வை அவள் முகத்தை வட்டமடித்தது.
“நீங்க இப்படி பாக்காதீங்க” அவன் பார்வையில் அவளுள் குறுகுறுப்பு.
“இது என்ன நியாயம்? நீ பாக்கலாம், நான் பாக்க கூடாதா? அழகை ரசிக்கிறது தப்பு இல்லன்னு சொன்னது நீ தானே? சோ நானும் இனிமேல் அழகை அழகா ரசிக்கலாம்னு இருக்கேன்” கண் சிமிட்டியவன், “நீ சாப்பிட்டியா மகி?” என்று கேட்டான்.
“எனக்கு பசிக்கல. அப்புறமா சாப்பிடுகிறேன்”
“நோ! இப்பவே நீ சாப்பிட்டாகனும்” என அவளை அமர வைத்தான்.
“நீங்க தான் எங்க வீட்டுக்கு கெஸ்ட். நீங்க சாப்பிடுங்க”
“கெஸ்ட்டு பெஸ்டுனு எதுவும் சொல்ல வேண்டாம். நீ சாப்பிடு” என்று அவனே அவளுக்கு பரிமாற, விழியோடு விழி உரச, அவன் மீது பார்வை பதித்தபடி சாப்பிட்டாள் மகி.
அவன் என்ன பரிசு செய்தாலும் அவளைக் கவர்வதாக இருந்தது. மெல்ல மெல்ல அவன் பால் சாய்ந்து கொண்டிருந்தாள். ‘சாயாதே மனமே! திடமாக இரு!’ மனதுக்கு கட்டளையிட்டாள்.
காதல்! பொல்லாதது அல்லவா? மனதை அது வசியப்படுத்தி விட்டால் நாம் சொல்வதை அது கேட்குமா என்ன?!
…………..
கலகலப்பு ஓய்ந்து போன நிலையில் இருந்தது எழிலழகனின் வீடு. அவனது தங்கை மலரை இன்று பெண் பார்க்க வந்திருந்தனர். அவனது குடும்பம் பற்றி அறிந்து வந்த மாப்பிள்ளை வீட்டினரும் சம்மதம் கூறி நிச்சயதார்த்தத்திற்கு நாளும் குறித்துச் சென்றனர்.
அன்னம்மாளுக்கு மனம் நிறைந்தது. மகளுக்கு நல்லதொரு வாழ்வை அமைத்துக் கொடுக்கத் தானே அவரும் ஆசைப்பட்டார். நினைத்தது போலவே ஒரு மாப்பிள்ளையைக் கொண்டு வந்து நிறுத்தினான் மகன்.
“உங்களுக்கு சந்தோஷமாம்மா?” தாயிடம் அவன் கேட்க, “மனசு நிறைஞ்சு போச்சு. எல்லாமே உன்னால தான்” அவனை அன்போடு பார்த்தார்.
“அவ என் தங்கச்சிம்மா. என்னோட பொறுப்பு தானே? அப்பா இல்லாத குறையே இல்லாம நாங்க கல்யாணத்தை சிறப்பா நடத்துவோம். மகனோட கல்யாணத்தைப் பார்க்க முடியலயேங்கிற ஏக்கத்தை இதனால தீர்த்து வெக்கிறேன்”
“என் ஏக்கத்தை நீ அன்பால, உன் பொறுப்பால தீர்த்து வெச்சிட்ட எழில். உன்னைப் போல ஒரு பையன், அம்மா சொல் கேட்டு குடும்பத்துக்காக ஒவ்வொன்னும் பண்ணிட்டு இருந்தா எந்த அம்மாவுக்குத் தான் மனசு குளிராம போகும்? உன்னால எனக்கு அந்த சந்தோஷத்தை தர முடியாம போச்சுனு கஷ்டப்படாத.
அந்த பொண்ணு தங்கமான பொண்ணு டா. நான் திட்டுறேன் தான், அதைப் பண்ணு இதைப் பண்ணுனு சொல்லுறேன். எதுவும் சொல்லாம அமைதியா இருக்குது. இன்னிக்கு மலர் கிட்ட கூட இந்த கல்யாணத்தில் பூரண சம்மதம் தானேனு கேட்டிருக்கா. அதுக்காக எனக்கு கோவம் வரல. அவ கிட்ட அப்படி கேட்காதது தானே உங்க கல்யாணம் இப்படியாக காரணமாச்சு. அது எனக்கு புரிஞ்சுது” என்று சொல்ல,
“அம்மா! நீங்களா இப்படி பேசுறீங்க?” ஆச்சரியமாகக் கேட்டான் எழில்.
“நான் பேச கூடாதா? வில்லினு நெனச்சிட்டியா டா? சீரியல் பார்ப்பேனே தவிர அந்த அளவு மோசமான மாமியாரா இருக்க மாட்டேன்” என்று செல்லமாக முறைக்க, “உங்களை மாதிரி எல்லா மாமியாரும் இருந்துட்டா மகன் வாழ்க்கையில் மழை தான். பொண்டாட்டி கிட்டவும் அம்மா கிட்டவும் முட்டி மோத வேண்டிய அவசியம் வராது” கன்னம் கிள்ளிச் சென்ற மகனின் செய்கையில், அன்னம்மாளுக்குப் புன்னகை.
அறையில் அமர்ந்திருந்த நந்திதாவிடம் சென்று, “வா நந்து” கையைப் பிடித்து வெளியில் அழைத்துச் சென்றான்.
“எங்கே கூட்டிட்டுப் போறீங்க?” என்றபடி அவனது இழுப்பிற்குச் செல்ல, “எதிர்ல உங்க வீடு இருக்கே. அதுக்கு தான்” என்றிட அவள் பயத்தில் எச்சில் கூட்டி விழுங்கினாள்.
“அப்படிலாம் கூட்டிட்டு போகல. நீயா விரும்பினா போகலாம் ஓகேயா? இப்போ இங்கே உட்கார்ந்துக்கலாம்” முற்றத்தில் போடப்பட்டிருந்த கதிரையில் அமர, அவளும் அமர்ந்து கொண்டாள்.
“எதுக்கு திடீர்னு இங்கே கூட்டிட்டு வந்தீங்க?”
“எவ்ளோ நேரம் தான் ரூம்குள்ளயே இருக்கிறது? நம்ம ரொமான்ஸ என் மாமனார் மாரிமுத்துவுக்கும் ஷோ காட்டலாம்னு ஒரு எண்ணம்” என்று அவன் சொல்ல,
“என்னது? அய்யய்யோ எனக்கு பயமா இருக்கு. நான் உள்ளே போயிடுறேன். அப்பா வந்துட்டார்னா அவ்ளோ தான்” தந்தையின் பெயர் கேட்டதும் அவளுள் படபடப்பு.
“ஹேய் நந்து ரிலாக்ஸ்! அப்பா இந்நேரம் கடைக்குப் போயிருப்பார் தானே? அப்படியே வந்தாலும் எதுக்கு பயப்படுற? எப்போ பாரு ரூம்லயே இருந்தா போரடிக்கும்ல? அதான் கூட்டிட்டு வந்தேன்.
இங்கே இருந்து உன் வீடு தெரியுதுல்ல. அதைப் பார். உங்கம்மா வெச்ச துளசி செடி இருக்கு. ஜானு கூட போட்டி போட்டு நட்ட செடியில் ரோஜாப்பூ பூத்திருக்கு. அதையெல்லாம் பார்த்து ரசிக்க மாட்டியா?”
நந்துவின் கண்கள் தோட்டத்தில் மலர்ந்த பூக்கள் மீது நிலைத்தன. ஜனனி மற்றும் மகியின் முகம் மனதில் மலர்ந்தது.
“அந்த வெள்ளை கலர் ரோஜா கோவிலுக்கு எதிர்க் கடையில் வாங்கினது. அது வேணும்னு மகி அடம்புடிச்சா. ஆனா காசு கொஞ்சம் குறைவா இருந்துச்சு. ஜானு ஒரு ஐடியா சொன்னா. அவ வாங்கின வளையலையும் நான் வாங்கின மிட்டாயையும் அந்தந்த கடைக்குப் போய் ரிட்டர்ன் பண்ணி காசை வாங்கிக்கிட்டு அந்த காசையும் சேர்த்து இதை மகிக்கு வாங்கி கொடுத்தோம்” அந்த நினைவுகளில் நந்துவின் கண்கள் விண்மீன் போல் விகசித்தன.
“இன்னும் நிறைய இருக்கு. நாங்க மூனு பேரும் அப்படி தான். ஒன்னு சேர்ந்தா ஜாலியா இருக்கும். நான் ரொம்ப பேச மாட்டேன். ஆனால் ஒரு வார்த்தை பேசினா அதைப் பிடிச்சு அவங்க கதைக்க தொடங்கிடுவாங்க. அவங்க ரெண்டு பேரும் பேசுறத கேட்டுட்டே இருப்பேன். சண்டை போடுறத பார்த்து சிரிப்பேன், கொஞ்சமா திட்டுவேன். நான் திட்டுனா பயந்த மாதிரி நடிப்பாங்க” மனம் விட்டுப் பேசும் மனைவியை மனம் நிறையப் பார்த்தான் எழில்.
“எனக்கு நம்பிக்கை இருக்கு நந்து. ஜானு, மகி ரெண்டு பேரும் உன் கூட பழையபடி பேசுற நாள் வரும். அதுக்கு நான் பொறுப்பு. உன் சந்தோஷம் அவங்கனு தெரிஞ்ச பிறகு, அதை உனக்கு தர எவ்ளோ வேணா போராடலாம்னு தோணுது” என்று கூற,
“அவங்க என் சந்தோஷம்னா, என் வாழ்க்கையே நீங்க தான். என்னை சிரிக்க வைக்க, ஃப்ரீயா ஃபீல் பண்ண வைக்க, மனசு விட்டு சிரிக்க வைக்க நீங்க செய்யுற ஒவ்வொரு விஷயமும் பிடிச்சிருக்கு. உங்களை மாதிரி ஒருத்தர் கெடச்சதுக்கு நான் அதிர்ஷ்டசாலி தான்” அவனது தோளில் தலை சாய்த்தாள் நந்திதா.
“அப்பா வந்துடுவார் நந்து” என்று அவன் சொல்ல, “வரட்டும். என் புருஷன் தானே?” கண்களை மூடிக் கொண்டாள்.
“ஏய் நெஜமாவே வர்றார் நந்து. எனக்கு வெட்கமா இருக்கு” அவன் வெட்கக் குரலில் சொல்ல, “பொய் சொல்லாதீங்க” என்றபடி கண் திறந்தவளோ மாரிமுத்துவைக் கண்டு கண்களை அகல விரிக்க, பார்வையைத் திருப்பிக் கொண்டு சென்று விட்டார் அவர்.
“ஹய்யோ எழில்” உள்ளே ஓடியே விட்டாள் நந்திதா.
“நில்லு நந்தும்மா” அவள் பின்னால் சென்றவனது முகத்திலும் மெல்லிய வெட்கச்சிவப்பு.
தொடரும்……!!
ஷம்லா பஸ்லி