💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 56
“அகி இங்கே வா” சத்யா அழைக்க, தயங்கித் தயங்கி அறையினுள் நுழைந்தான் அகிலன்.
“என் கிட்ட வர ஏன் யோசிக்கிற? வந்து இப்படி உட்கார்” அவனை மடியில் அமர வைக்க, யுகி ஓடி வந்து அமர்ந்து கொண்டான்.
“யுகி நகர்ந்து உட்கார்” என்று சத்யா சொல்ல, “முடியாது டாடி. அவனுக்கு ஜானு கிட்ட போக சொல்லுங்க” ஒய்யாரமாக அமர்ந்து தந்தையின் தோளைக் கட்டிக் கொண்டான் மகன்.
“ரெண்டு பேருக்கும் இடம் இருக்கு. உனக்கு ஒரு கால் அவனுக்கு ஒரு கால்” தனது இரு கால்களையும் தொட்டுக் காட்டினான்.
“அதெல்லாம் முடியாது. ரெண்டுமே எனக்கு. வேற யாருக்கும் தர மாட்டேன்” யுகி பிடிவாதமாகக் கூற, “நான் கேட்கவே இல்லை யுகி. அவர் கூப்பிட்டதால தான் வந்தேன்” சத்யாவைக் காட்டி விட்டு சென்றவனின் முகத்தில் வாட்டம்.
இதை அறிந்தவன் என்ன செய்வதென்று புரியாத நிலையில் விழித்தான். யுகனின் பிடிவாதத்தை எப்படி சமாளிப்பது? அகியை எப்படி நெருங்குவது? இரண்டுக்கும் நடுவில் தவித்தது அவன் மனம்.
வெளியில் வந்த அகி ஜனனியை நோக்கி ஓடி வந்தான்.
“என்ன செல்லம்?” என்று கேட்பதற்குள் அவளை அணைத்துக் கொண்டு, “என்னை ஏன் யாருக்கும் பிடிக்கல?” அவன் கேட்ட கேள்வியில் திணறி நின்றாள் ஜனனி.
“மறுபடி இப்படி கேட்கிறியே அகி. இந்த மாதிரி பேசக் கூடாதுன்னு சொன்னேன் தானே? உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். நீ என் பையன் டா” அவன் நெற்றியில் முத்தமிட,
“என் அம்மாவுக்கும் என்னைப் பிடிக்கல. அதனால தானே என்னை வேண்டாம்னு சொல்லிட்டாங்க” என்றிட அவளுக்கோ என்ன சொல்வதென்று புரியாத நிலை.
“பிடிக்கலனு சொல்ல முடியாது அகி. அது அவங்க நிலைமை. உன்னை வெச்சுக்க முடியாதுனு அனுப்பிட்டாங்க. உன் கிட்ட ஒன்னு கேட்கிறேன். உனக்கு அங்கே இருக்க பிடிச்சிருக்கா? இங்கே வந்தது நல்லா இருக்கா?” அவனைக் கூர்ந்து நோக்கினாள் நங்கை.
“இங்கே தான் ஜானு. அங்கே என் கூட யாரும் பேச மாட்டாங்க. நானே என் வேலையை செய்வேன், தூங்குவேன், எழும்புவேன். அப்படியே இருந்துட்டேன்.
இங்கே அப்படி இல்ல. நிறைய பேர் இருக்கீங்க. நீங்க என் மேல அன்பு காட்டுறீங்க. நான் இப்போ தான் சின்ன குழந்தை மாதிரி தோணுது. எனக்கு முத்தம் எல்லாம் தர்றீங்க. நான் ஜாலியா விளையாடுறேன்” அகிலனின் கண்கள் விண்மீன்கள் போன்று ஜொலித்தன.
“ஆஹ் அதானே. ஒன்னே ஒன்னு தான் சொல்லுவேன். கடவுள் நமக்கு என்னிக்கும் கஷ்டத்தை தர மாட்டார். அவர் தர்றது பிடிக்கலனு நாம அழலாம், புலம்பலாம், மறுக்கலாம். ஆனால் அவர் தந்தது தான் நமக்கு ஏற்றதுனு ஒரு நாள் நமக்கு புரியும். அகி அவனோட டாடி கூட இருக்கிறதைத் தான் அவர் விரும்புறார். நீயும் அதை மனசார ஏத்துக்கனும்” அவனது கையைப் பிடித்துக் கொண்டாள்.
“உண்மை ஜானு. ஆனால் யுகி என் கூட பேச மாட்டேங்கிறான். டாடி கிட்ட விட மாட்டேங்கிறான். அதான் கஷ்டமா இருக்கு. எனக்கு அழுகையா வருது ஜானு” என்றவனது மனம் அவளுக்கு புரியத் தான் செய்தது.
“நீ கவலைப்படாத அகி! உனக்கு கண்டிப்பா டாடியோட அன்பு கிடைக்கும். யுகியோட அன்பும் தான். கொஞ்ச நாள் வெயிட் பண்ணு எல்லாமே மாறும். நான் சொல்றதை கேட்க மாட்டியா? என் பேச்சில் உனக்கு நம்பிக்கை இருக்கு தானே?” அவள் விட்ட அன்பு அவனைச் சரியாகத் தாக்கியது.
“ஆமா” என்று தலையை ஆட்ட, “அப்படின்னா இனிமே கவலைப்படக் கூடாது. சரியா?” அவனது கன்னங்களை பிடித்துக் கிள்ளினாள்.
“சரி ஜானு” தலையசைத்து அவளை அன்பு கனியப் பார்த்தான் அகிலன்.
சற்று நேரம் அவனோடு பேசிக் கொண்டிருந்த ஜனனி, அவனை அறையில் அமர வைத்து விட்டு சத்யாவைத் தேடிச் சென்றாள்.
லேப்டாப் முன் அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்தான் சத்யா. அவன் முன் சென்று நின்று “வெளியே கூட்டிட்டு போறீங்களா?” என்று கேட்க, “எனக்கு வேலை இருக்கு” என்றான், லேப்பில் பார்வை பதித்தவாறு.
“நான் எனக்காக ஒன்னும் கேட்கல. அகி கொஞ்சம் ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்ணுறான். அதனால வெளியே எங்கேயாச்சும் போனா ஃப்ரீயா இருக்குமேனு நெனச்சேன்” படபடவென பொரிந்தவள், “நானே கூட்டிட்டு போறேன். நீங்க ஒன்னும் வர வேண்டாம்” முறைத்துக் கொண்டு செல்லப் போனவளது கையைப் பிடித்திருந்தான் சத்யா.
“என்ன?” அவன் கடுமையாகக் கேட்க,
“என்னன்னா என்ன? கையை விடுங்க நான் போகனும்” கையை விடுவிக்கப் போராடினாள் அவள்.
“நீயே போறதுனா போயிருக்கலாம் தானே? எதுக்கு என்னைக் கூப்பிட்ட?” கேள்விக்கு விடை தராமல் விடுவிக்கப் போவதில்லை என்பதாக இருந்தது அவனது பிடி.
“கணவன் என்கிற உரிமையிலோ, உங்க கிட்ட கேட்டுட்டு போகனும்கிற அடக்கத்திலோ வந்து கேட்கல. என்ன தான் அகி கூட பழகினாலும் அவன் மேல என்னை விட உங்களுக்கு தானே உரிமை இருக்கு. அதனால உங்க கிட்ட கேட்க வந்தேன். இப்போ சொல்லியாச்சுல்ல. நீங்க வரலைனாலும் நான் போகத் தான் போறேன்” குரல் கமறக் கூறினாள் ஜனனி.
“உன்னைப் போக வேண்டாம்னு நான் சொல்லல. தாலி கட்டிட்டோம்னு ஒரு பெண்ணை என் அதிகாரத்தின் கீழ் வெக்கிற ஆண் நான் இல்லை. போக வேண்டிய இடத்திற்குப் போற சுதந்திரம் உனக்கு இருக்கு. அப்பறம் ஜானு, நீ என் கிட்ட வெளியே வர்றீங்களானு கேட்ட. வேலை இருக்குனு சொன்னேனே தவிர, வர முடியாதுன்னு சொல்லலயே. காரணத்தையும் சொல்லிட்ட. வர்க் முடிச்சிட்டு ஒரு அரை மணி நேரத்தில் வர்றேன். ரெடியாகி நில்லு” என்றவனோ இன்னும் அவள் கையை விட்டான் இல்லை.
“அப்போ ஓகே. கையை விடுங்க” என்றதும், “அகி மேல என்னை விட உனக்கு உரிமை இருக்கு ஜானு. அவனை கேர் எடுத்து பார்த்துக்கிறது, அன்பா இருக்கிறதுல நாங்க யாரும் உன் பக்கத்தில் நிற்க முடியாது. அவனுக்காக நீ நிற்கனும். அந்த உரிமையை நீ யாருக்கும் விட்டுக் கொடுக்கக் கூடாது, அது நானாக இருந்தாலும் சரி” அவனது பேச்சில் அவளுக்கு உள்ளம் சிலிர்த்தது.
அகிலனுக்கான உரிமையைப் பெற்று விட்ட திருப்தி. அதனை சத்யா வாயால் கேட்டது மகிழ்வை வாரிக் குவித்தது.
“இப்போ நீ போகலாம்” அவளது கையை விடுவிக்க, சிட்டாகப் பறந்து விட்டாள் ஜனனி.
அவள் அகிக்கு அழகாக உடைமாற்றி விட்டாள். சத்யா வேலையை முடித்துக் கொண்டு யுகியைத் தேடி வந்து “அகி கூட வெளியே போகலையா டா?” என்று கேட்டான் சத்யா.
“அவங்க ரெண்டு பேரும் போகட்டும் டாடி! நான் போக மாட்டேன்” முகத்தைத் திருப்பிக் கொண்டான் யுகன்.
“நோ டியர்! அகி, யுகி, ஜானு, சத்யா நாலு பேரும் வெளியே போறோம். நீ வர மாட்டேன்னா ஓகே. அப்போ நாங்க மூனு பேரும் போறோம்” என்றபடி மகனின் முகத்தைக் கீழ்க்கண்ணால் நோக்க,
“நான் வருவேன். அப்படிலாம் உங்களை தனியே விட முடியாது. அந்த அகி உங்களை அவன் சைடுக்கு எடுத்துடுவான்” அவன் சொன்ன தோரணையில் பக்கென சிரித்து விட்டான் காளை.
‘இவன் பயப்படுறது லவ்வரை செட் பண்ணுறேன்னு சொல்லுற மாதிரில்ல இருக்கு. இருந்தாலும் இவனுக்கு நல்ல யோசனை தான்’ உள்ளுக்குள் நினைத்துக் கொண்டவன் அவனருகில் முட்டி போட்டு அமர்ந்து, “டாடிக்காக ஒன்னு செய்வியா?” என்று கேட்டான்.
“என்ன டாடி?” யுகனின் கண்கள் தந்தை மீது நிலைக்க, “அகி அழுதுட்டே இருந்தானாம். அதுக்காக நாம வெளியே போறோம். அங்கே போய் எதுவும் சண்டை போடாமல் இருப்பியா?” கெஞ்சலுடன் கேட்டான் சத்யா.
“அப்போ அகிக்காக தான் வெளியே போறீங்களா? முன்னெல்லாம் எனக்காக போனீங்க” என்று ஒரு மாதிரி குரலில் கேட்டவன், “நான் அழுதாலும் கூட்டிட்டு போவீங்க தானே? சாரி டாடி. நான் அப்படி பேசல. இனிமே இப்படி சொல்ல மாட்டேன்” மன்னிப்புக் கேட்கும் பாணியில் தன் கழுத்தைக் கட்டிக் கொண்ட மகனை நெகிழ்வோடு பார்த்தான் தந்தையானவன்.
“உன்னோட இந்த குணம் தான் எனக்கு ரொம்ப பிடிச்சதே. அகிக்காக பண்ணுறேன்னு கோபப்படும் போது உனக்காக ஒன்னுமே பண்ணலனு சொல்லிடுவியோனு பயந்தேன். ஆனால் நீ அதையும் நல்லா யோசிச்சு என்னை புரிஞ்சுக்கிட்டு பேசிட்ட. லவ் யூ கண்ணா” அவனது கன்னத்தில் முத்தமிட்டான்.
“லவ் யூ டூ டாடி. உங்களுக்காக நான் இன்னிக்கு அகி கூட சண்டைலாம் போட மாட்டேன். சமத்தா இருப்பேன்” என்றவனை, உடை மாற்றி அழைத்துச் சென்றான்.
வாசலில் அகியும் ஜனனியும் நின்று கொண்டு ரகசியமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்.
“ஷ்ஷ்ஷ்” யுகன் ஒட்டுக் கேட்க ஆரம்பிக்க, “இங்கே வாடா” சத்யா அவனைப் பிடித்து இழுத்தான்.
“ஜானு! உன் கால்ல என்ன காயம்?” என்று அகி கேட்ட கேள்விக்குத் தான் ரகசியமாக பதில் சொல்லலானாள் ஜனனி.
“நான் பதிமூனு வயசு இருக்கும் போது ஒரு தோட்டத்துல மட்டும் மாங்காய் பறிக்க போனாலே ஏதாவது நடக்கும். ஒரு முறை விழுந்துட்டு வந்தேன். இன்னொரு நாள் போய் நாய் கடிச்சிடுச்சு. வேற ஒரு நாள் அடுத்த வீட்டுக் காளை மூர்க்கமாகி என்னை விரட்டி வந்துச்சு. அந்தப் பக்கம் போகக் கூடாதுன்னு அப்பா எச்சரிச்சு விட்டுட்டார்.
அந்த மரத்து மாங்காய் வேணும்னு ஒரு நாள் மகி அடம்பிடிச்சு நின்னா. அப்பா வெளியூருக்கு போய் இருந்தார். சாப்பிட முடியாதுன்னு அவ அடம்பிடிச்சதால நான் போய் மாங்காய் பறிச்சிட்டு வந்து கொடுத்தேன். நான் போன விஷயம் தெரிய வந்து அப்பா சூடு வெச்சிட்டார் அகி. அப்பறம் அந்த பக்கம் போறதே கிடையாது” மெல்லிய குரலில் சொன்னாள் ஜனனி.
“சூடா? வலிச்சிருக்குமே ஜானு?” ஒரே சமயத்தில் கேட்டிருந்தனர் அகியும் யுகியும்.
விலுக்கென நிமிர்ந்து பின்னால் திரும்பினாள் ஜனனி. அங்கு யுகியை எதிர்பார்க்கவில்லை, கூடவே சத்யாவையும். தான் பேசியது அவனுக்கும் கேட்டிருக்குமா என அவன் முகத்தை ஆராய்ந்தாள்.
கேட்டது தானே? நெருப்பு என்றதும் நெஞ்சம் பதறியது அவனுக்கு. வலித்து இருக்குமே? அலறி இருப்பாளே என்று நினைத்து மருகியது அவன் மனம். அவளிடம் அவனுக்கு தனி அன்பொன்று உருவாகி இருந்தது.
“ஏன் ஜானு அவங்க அப்படி?” என்று அகி கேட்க, தன்னை மீட்டுக் கொண்டவளோ “நான் பண்ணுனது தப்பு தானே? அவங்க வேணாம்னும் நான் செஞ்சதால எனக்கு தந்த தண்டனையா ஏத்துக்கிட்டேன். அது எனக்கு இன்னொரு நாள் ஏற்பட இருந்த ஆபத்தை தடுத்து நிறுத்த காரணமா இருந்திருக்கலாம். அதுக்கு பிறகு அந்த பக்கம் போகவே இல்லல்ல.
அப்பாம்மா சொன்னா அதைக் கேட்கனும் என்கிற பாடத்தை மட்டும் இதனால நீங்க கத்துக்கங்க. அன்ட், உங்களுக்கு அப்படிப்பட்ட தண்டனைகள் கிடைக்காது என்றத நெனச்சு சந்தோஷப்படுங்க. இருக்கிற உறவுகளை அழகா ஏத்துக்கிட்டு சந்தோஷமா இருங்க” அவள் பார்வை யுகி மீது படிந்தது.
“ஓகே நாம போகலாம்” என்று சத்யா காரில் ஏறிக் கொள்ள, யுகி அவனருகிலும், ஜனனி அகியோடு பின்னால் ஏறினாள்.
‘நீ நிறையவே கஷ்டப்பட்டுட்ட. இப்போவும் உனக்காக வாழல. உனக்கான சந்தோஷத்தை நான் தரனும்னு நினைக்கிறேன் ஜானு. இதை உனக்காக செலுத்துற நன்றிக்கடனா நெனச்சா கூட பரவாயில்ல. உன்னை நான் நல்லா பார்த்துப்பேன்’ அவளோடு மானசீகமாக உரையாடினான் சத்ய ஜீவா.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி