57. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(6)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 57

 

கடற்கரையில் வண்டியை நிறுத்தினான் சத்யா. யுகி வேடிக்கை பார்க்க ஆரம்பிக்க, ஜனனியின் கையை விடுவித்துக் கொண்டு ஓடிச் சென்றான் அகி.

 

“ஹேய் நில்லு அகி” அவனை ஓட்டமும் நடையுமாகப் பின்தொடர்ந்தாள் பெண்.

 

“எதுக்கு இந்த அகி இப்படி‌ பண்ணுறான்? பீச் பார்த்ததே இல்லாத மாதிரி நடந்துக்கிறானே” தனது சந்தேகத்தை முன்னிறுத்தினான் யுகன்.

 

அவனை மணலில் அமர வைத்த சத்யா, “உன்னை பழக்கம் இல்லாத ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போய் விட்டா என்ன பண்ணுவ?” என்று வினவினான்.

 

“வித்தியாசமா பார்ப்பேன். சுத்தி சுத்தி வேடிக்கை பார்ப்பேன். அங்கேயும் இங்கேயும் ஓடிப் போவேன்” என்று பதிலளித்தான் சிறுவன்.

 

“அதையே தான்‌ அவனும் செய்றான். நீயும் அகியும் உருவத்தில் மட்டும் தான் ஒன்னா இருக்கீங்க. மத்தபடி உங்க குணங்கள், எண்ணங்கள், சூழ்நிலைகள் எல்லாமே வேற வேற. அவனுடைய விருப்பங்கள் உன்னுடையது போல் இருக்காது. அவன் எண்ணங்கள் உன்னை ஒத்திருக்காது.

 

அதனால நீ அவனை உன்னை வெச்சு ஒப்பிடக் கூடாது. உனக்கு நினைச்ச நேரம் என் கூட வெளியே வந்திடுவ. ஆனால் அவன் அப்படி இல்ல. அவன் விருப்பங்கள் பூரணமாகி இல்லை. நிறைய ஆசைகள், ஏக்கங்களை புதைச்சிட்டு வாழ்ந்திருக்கான்.

 

அவனை நல்லபடியா பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை யுகி. ஒரு அப்பாவா நான் பார்த்துக்கனும், ஒரு அண்ணனா நீ பார்த்துக்கனும். ஆனால் நாம ரெண்டு பேரும் அந்த இடத்தில் இருக்கல. அதையெல்லாம் ஜானு பண்ணுறா. இதையெல்லாம் பண்ணனும்னு அவளுக்கு எந்த அவசியமும் இல்ல டா. ஆனாலும் உங்க மேலுள்ள அன்பால எல்லா பொறுப்பையும் அவ ஏத்துக்கிட்டா” என்ற சத்யாவின் பார்வை ஜனனி மீது படிந்தது.

 

அனைத்தையும் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்த யுகி, “உங்களுக்கு ஜானுவை பிடிச்சிருக்கா டாடி?” என்று கேட்டு விட்டான்.

 

“என் மேல யாராவது அன்பு காட்டினா உனக்கு அவங்களை பிடிக்குமா?” என்று கேட்க, “எஸ் டாடி” உடனே தலையசைத்தான்.

 

“அதே தான் டா. உன் மேல, அகி மேல பாசமா இருக்கிறதால எனக்கு ஜானுவைப் பிடிக்குது” உண்மையில் அவளை அவ்வளவு பிடித்தது அவனுக்கு‌.

 

“நான் உனக்கு சொல்ல வந்தது ஒன்னு தான் யுகி‌. எல்லாரும் ஒரே மாதிரியா இருக்க மாட்டாங்க. அகி இதையெல்லாம் வித்தியாசமா பார்க்கிறான்னு நீ ஒரு மாதிரி நினைக்கக் கூடாது.

 

ஸ்கூல் போனா கூட அப்படி தான், உனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சிருக்கும். இன்னொரு பிள்ளைக்கு அது தெரியாம இருக்கும். அந்த டைம்ல உனக்கு தெரியுமேனு பெருமையா சொல்லிக்கக் கூடாது. அவங்களுக்கு தெரியலயேனு மட்டமா நினைக்கக் கூடாது. நமக்கு தெரிஞ்சத அவங்க கிட்ட அன்பா பேசி சொல்லிக் கொடுக்கனும். இல்லனா டீச்சர் சொல்லும் வரை நீ அமைதியா இருக்கனும்” என்று சத்யா சொல்லிக் கொடுக்க,

 

“இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. நமக்கு தெரிஞ்சத சொல்லிக் கொடுத்தா கடவுள் நமக்கு இன்னும் அறிவைத் தருவாராம். கல்வி கொடுக்கக் கொடுக்கக் கூடுமே அன்றி குறையாதுல்ல டாடி?” அழகாக விளக்கம் கொடுத்த மகனை வாஞ்சையோடு நோக்கினான்.

 

“இது எனக்கு ஜானு சொல்லிக் கொடுத்தது. கல்வி பற்றி நிறைய சொன்னாங்க” என்ற யுகனின் கண்களோ அகியோடு விளையாடும் ஜனனி மீது நிலைத்தன.

 

அங்கு நீரில் காலை நனைத்து துள்ளிக் குதித்துக் கொண்டிருந்தான் அகிலன்.

 

“ஜாலியா இருக்குல்ல ஜானு? நான் ஒன்னு ரெண்டு தடவை வந்திருக்கேன். ரொம்ப நாளைக்கு அப்புறம் இன்னிக்கு வந்தேன்” ஏக்கமும் ஆர்வமும் போட்டி போட்டன, அவன் குரலில்.

 

“உனக்கு பிடிச்சிருக்குனா அடிக்கடி வரலாம். உன் ஆசைகள் நிறைவேறலையேனு வருத்தப்படாத. எல்லாத்தையும் சொல்லு. ஒவ்வொன்னா நிறைவேத்திடலாம்” என்றவாறு மணல் விளையாடினாள் ஜனனி.

 

“உங்களுக்கும் பீச்னா பிடிக்குமா?” என்று அகி வினவ, “யாருக்கு தான் பிடிக்காது? இந்த ப்ளேஸ், அழகா இருக்குல்ல அகி. விதவிதமான ஆட்கள் வருவாங்க, சின்னக் குழந்தைகள் சந்தோஷமா விளையாடுவாங்க. அதையெல்லாம் நேரம் போறது தெரியாம பார்த்துட்டே இருக்கலாம்ல?” அவளது கண்கள் தத்தித் தவழ்ந்து வரும் அலைகளில் ரசனையோடு படர்ந்தன.

 

“மம்மி கூட வந்தாலும் அவங்க ஃபோட்டோ எடுத்துட்டு போன் பார்த்துட்டு இருப்பாங்க. என் கூட விளையாட வர மாட்டாங்க. நீங்க விளையாட வருவீங்களா?” ஆசை மீதூறக் கேட்டான் அகி.

 

“நீ இங்கே சந்தோஷமா இருக்க வந்திருக்க. அதனால கவலையான எந்த விஷயத்தையும் நினைக்கக் கூடாது. ஜாலியா விளையாடலாம்” என்றவள், சத்யா மற்றும் யுகியிடம் சென்றாள்.

 

“அதோ அங்கே பந்து இருக்கு. ஒன்னு வாங்கிட்டு வாங்க. எல்லாரும் சேர்ந்து விளையாடலாம்” என்று ஜனனி சொல்ல, அவனும் அவ்வாறே வாங்கிக் கொண்டு வந்தான்.

 

“நீங்க மூனு பேரும் விளையாடுங்க. நான் உட்கார்ந்துட்டு இருக்கேன்” சத்யா மறுப்புத் தெரிவித்தான்.

 

“வாங்களேன் எல்லாரும் விளையாடலாம்” அகி அழைக்க, “நீயும் வா யுகி” யுகனையும் எழுப்பிக் கொண்டு வந்தான்.

 

“கேட்ச் பிடிப்போம்” என்ற யுகி, சத்யா மற்றும் ஜனனிக்கு நடுவில் நின்று கொண்டான்.

 

‘அகி கூட பேசக் கூடாதுன்னு இப்படி பண்ணுது இந்த யுகி டார்லு’ என்று நினைத்த ஜனனி, வேண்டும் என்றே சத்யாவுக்கும் யுகிக்கும் நடுவில் சென்று நின்றாள்.

 

“எதுக்கு இங்கே வந்த?” சத்யா புருவம் சுருக்க, “உங்க கிட்ட இருக்கனும்கிற ஆசையில் வந்தேன்” இளித்துக் கொண்டு சொன்னாள் அவள்.

 

அவளுக்கோ எந்தவித உணர்வும் இல்லை அல்லவா? ஆகையால் சாதாரணமாக சொல்லி விட்டாள். அவளது அந்தப் பேச்சு சத்யாவை ஏதோ செய்தது.

 

“நெஜமாவே என் கிட்ட இருக்கனும்னு வந்தியா?” என்று விழி விரித்தான்.

 

“யோவ் ஹிட்லர்! அகி கிட்ட பந்தை வாங்கவோ கொடுக்கவோ விருப்பம் இல்லாம இந்த யுகி நம்ம ரெண்டு பேர் நடுவிலும் வந்து நின்னான். அவனை அகி கிட்ட அனுப்பனும்னு நான் உங்க பக்கத்துக்கு வந்தேன். சும்மா கேள்வி கேட்காம இருங்க” அவள் படபடக்க,

 

“கேள்வி கேட்டா ஒத்த வார்த்தையில் பதில் சொல்ல மாட்டியா? இத்துனூன்டு கேள்விக்கு இறப்பர் நாடா மாதிரி இழுத்து இழுத்து விளக்கம் தர்ற” முறைத்து வைத்தான் சத்யா.

 

“பின்ன என்னவாம்? உங்க பக்கத்துக்கு நான் எதுக்கு வரனும்? அந்த அளவுக்கு நம்ம நடுவில் எதுவும் இல்ல” என்றவளைக் கை நீட்டித் தடுத்து, “போதும் போதும். இது பற்றி அப்பறமா பேசலாம். பேச்சு வளர்க்காமல் விளையாடு” கும்பிடு போட்டவனைப் பார்த்து விட்டு, சிலுப்பிக் கொண்டு விளையாட‌ ஆரம்பித்தாள்.

 

நால்வரும் மாறி மாறி பந்தைக் கை மாற்றி விளையாடினர். தவற விடும் போது சிரித்தும், சிணுங்கியும், அதை எடுத்துக் கொண்டு வர செல்ல சண்டைகள் போட்டும் நேரங்கள் கழிந்தன.

 

“செமயா இருக்கு ஜானு. அடிக்கடி இங்கே வந்து விளையாடுவோம்” என்று அகி துள்ளலுடன் கூற, “உனக்கு பிடிச்சிருக்குனா வரலாம்” என்றான் சத்யா.

 

“அப்போ எனக்கு பிடிச்ச இடம்..” என்று யுகி சொல்ல வரும் போது ஜனனி இடைமறித்து, “யுகிக்கு பிடிச்ச இடம் சில்ட்ரன் பார்க், அகிக்கு பீச். நேரம் கிடைக்கும் போது இரண்டுக்கும் மாறி மாறி வரலாம். ஓகே தானே?” என்று கேட்க,

 

“ஓகே ஜானு. டன்” ஜனனியின் கையைப் பிடித்துக் கொண்டான் யுகி.

 

“யு..யுகி” என்று அழைத்தவளுக்கோ மனம் நெகிழ்ந்து போக, உணர்ச்சிவசப்பட்டு அவள் கையைப் பிடித்தவனுக்கோ அதைச் சட்டென விடவும் மனம் இல்லை.

 

“ஹேய்‌ யுகி! அப்படியே நில்லு இந்த போஸ் அழகா இருக்கு. அப்படியே ஒரு ஃபோட்டோ எடுத்துக்கலாம்” சத்யா நிலமையை சமாளிக்கக் கூறினான்.

 

“ஓகே டாடி” யுகனும் அவளது கையைப் பிடித்து ஜனனியைப் பார்த்தபடி நிற்க, ஜனனி அவனை அன்பொழுகப் பார்த்தவாறு நின்றது சத்யாவின் அலைபேசியில் படமாக்கப்பட்டது.

 

அவன் நகர்ந்ததும் அகிலனும் அவ்வாறே புகைப்படம் எடுத்துக் கொண்டான். 

 

“நீங்களும் போய் நில்லுங்க” என்று அகி சத்யா விடம் சொல்ல, “ஆமாமா” இதனை யுகியும் ஆமோதித்தான்.

 

“யுகி! உனக்கு தான் டாடி என் கிட்ட வர்றது பிடிக்காதே?” அந்த காரணத்தை வைத்து தப்பிக்க முயன்றாள் ஜனனி.

 

“பிடிக்காது தான். ஆனால் இன்னிக்கு அகி சொல்றதுக்கு நோ சொல்லக் கூடாதுன்னு இருக்கேன். சோ டாடி கையைப் பிடிச்சு ஃபோட்டோ எடுங்க” என்றதும், ஜனனி சத்யாவைப் பார்த்தான்.

 

அவனோ சாதாரணமாக இடுப்பில் கை குற்றி நிற்க, “என்னங்க கூலா நிற்கிறீங்க?” அவனுக்கு மட்டும் கேட்கும் விதமாககக் கேட்டாள் அவள்.

 

“சில்லுனு காத்து வீசும் போது கூலா தானே இருக்கும். நீ எதுக்கு தோசைக்கல்லுல இருக்கிற தோசை மாதிரி சுடச்சுட இருக்கே?”

 

“அவங்க ஃபோட்டோ எடுக்க சொல்லுறாங்க. அதுவும் கையைப் பிடிச்சு” அவளோ கண்களை விரித்துச் சொல்ல, “கையைப் பிடிச்சு தானே? வேற எங்கேயும் பிடிச்சு இல்லையே?” என்றவனை ஙே என முழித்துப் பார்த்தாள்.

 

“அப்படினா உங்களுக்கு கையைப் பிடிக்க ஓகேவா?” என்று கேட்க, “எதுக்கு அவ்ளோ அலட்டிக்கிற? ஜஸ்ட் ஃபோட்டோ ஜானு. அவங்க ஆசைப்படுறதுக்காக” அவன் சொன்னதும் அவள் யோசிக்க ஆரம்பித்தாள்.

 

‘குழந்தைங்க மட்டுமா ஆசைப்படுறாங்க? ஐயாவுக்கும் ஆசை ஆம்பியூலன்ஸ்ல வருதே’ என கேட்ட மனசாட்சியை ஒரு தட்டு தட்டி அடக்கி வைத்தான் சத்யா.

 

“ஒரு ஃபோட்டோ தானே? பெருசா அதுல என்ன இருக்கு? கையை பிடிச்சோம்னு ஒன்னும் ஆகிடாதே” வெளிப்படையாகவே கேட்டவள், தன் சம்மதம் வேண்டிக் காத்திருந்த இரு சிட்டுக்களையும் பார்த்து தலையசைத்தாள்.

 

“வாவ் சூப்பர்” அகி துள்ளிக் குதிக்க, அங்கிருந்த ஒரு பெண்ணை அழைத்து வந்து ஃபோட்டோ பிடிக்கச் சொன்னான் யுகி.

 

“நாங்க பிடிச்சது போல ஜானு கையைப் பிடிச்சுக்கோங்க” அகி சத்யாவிடம் சொல்ல, “ஓகே டா” ஜனனியின் நீட்டிய கையைப் பிடித்துக் கொண்டான்.

 

“அடுத்த கையால ஜானு தோளைப் பிடிங்க டாடி. அந்த மாதிரி தான் போட்டோஸ் வரும்” யுகன் சொன்னதைக் கேட்டு, “நீங்க நல்லா வருவீங்க” ஜனனி செல்லமாக முறைத்தாள்.

 

மறு கையால் அவளது தோளைப் பற்றிக் கொண்டவன் அவளது முகத்தை நோக்கினான். ஜனனியின் விழிகள் அவனது காந்த விழிகளுடன் கலந்தன.

 

வில்லாய் வளைந்த புருவங்கள் ஒன்றையொன்று மோதும் தீவிரத்தோடு நிற்க, கருமணிகள் பாற்கடலில் அலைபாய்ந்து நீந்த, அவற்றை மறைத்து வெளிக்காட்டும் இமைகளின் தாளம் ஆடவனைக் கவர்ந்திழுத்தது.

 

🎶 கண்ண காட்டு போதும்

நிழலாக கூட வாரேன்

என்ன வேணும் கேளு

குறையாம நானும் தாரேன் 🎶

 

🎶 நச்சுனு காதல கொட்டுற ஆம்பள

ஒட்டுறியே உசுர நீ நீ

நிச்சயமாகல சம்பந்தம் போடல

அப்பவுமே என் உசுரு நீ நீ 

 

அன்புல வெத வெதச்சி

என்ன நீ பறிச்சாயே 🎶

 

நேற்று வானொலியில் ஒலித்த பாடல் இன்று நினைவில் உதித்தது அவனுக்கு.

 

சத்யாவின் ஸ்பரிசத்தை சாதாரணமாகக் கடந்த காரிகைக்கு அவனது ரசனை சொட்டும் ஆழ்ந்த பார்வையில் இருதயம் இடம்மாறித் துடிக்கலாயிற்று.

 

அவன் ஒற்றைப் புருவம் உயர்த்த, வஞ்சியவள் இமைக் குடைகளைத் தாழ்த்தி இதழ் கடித்ததுவும் புகைப்படமானது.

 

“டாடி! எங்களை விட, நீங்க ஜானு கூட எடுத்த ஃபோட்டோ பியூட்டிபுல்” யுகனின் சத்தத்தில் சிந்தை கலைந்த இருவருக்கும் சுயநினைவடைய சில நிமிடங்கள் தேவைப்பட்டன.

 

அவர்களை ஐஸ்கிரீம் பார்லர் அழைத்துச் சென்ற சத்யா, அடுத்த சில நிமிடங்களில் யுகனின் கோபத்திற்கு இலக்காகி நின்றான்.

 

தொடரும்……!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!