💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 64
யுகியின் பின்னால் சென்ற சத்யா அவனது கண்களைப் பொத்த, “டாடீஈஈ” மெல்லிதழ் பிரித்துப் புன்னகை பூத்தான் யுகன்.
“ஃபோன் வெச்சிட்டு வா” என்று சொல்ல, அலைபேசியை அணைத்து அவனிடம் கொடுத்தான்.
“அதென்ன பேச்சு உனக்கு? ஜானு சொன்னா கேட்க மாட்டியா?” சத்யா வினாத் தொடுக்க,
“அ..அது டாடி” பதில் கூற இயலாமல் தடுமாற,
“பெரியவங்க சொன்னா அதில் அர்த்தம் இருக்கும். அவங்க சொல்லுறத கேட்கனும்னு சொல்லி இருக்கேன்ல? அதுவும் ஜானு சொன்னா கண்டிப்பா கேட்கனும்” சற்றே அழுத்தமாகச் சொன்னான் தகப்பன்.
“நான் இனிமேல் கேட்பேன்” தன்னையறியாமல் அவன் சொல்லி விட்டான்.
“ம்ம் அது! டாடி எப்படியோ ஜானுவும் அதே மாதிரி தான் உனக்கு. என்னை எப்படி நெனக்கிறியோ, என் பேச்சை எப்படி கேட்கிறாயோ, மரியாதை தர்றியோ அதையெல்லாம் ஜானுவுக்கும் பண்ணனும். என்ன புரிஞ்சுதா?” அவன் ஜனனியில் சொல் கேட்கவில்லை என்பதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
சத்யா கடினமாகப் பேசியதில் யுகன் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ள, ஜனனிக்குத் தான் என்னவோ போல் ஆகியது.
“என் பேச்சு கேட்கலைங்கிறது ஒரு விஷயமா? அதைக் கேட்கப் போய் யுகி கோவிச்சுக்கிட்டான் பாருங்க” அவனுக்கு மட்டும் கேட்கும் படியாக அவள் கூற,
“குழந்தைங்க கோவிச்சுப்பாங்கனு அவங்க தப்பை திருத்தாம இருக்கக் கூடாது. சும்மா பார்த்துட்டு கடந்து போனா அதுவே பின்னாடி நம்மளை யோசிக்க வெச்சிடும். ஒவ்வொன்னையும் அந்தந்த நேரத்தில் சுட்டிக் காட்டனும்” என்றவனின் கூற்றிலிருந்த உண்மை அவளுக்கும் புரிய, தலையாட்டி ஆமோதித்தாள்.
“அகி! இங்கே வா” மற்றைய மகனை சத்யா அழைக்க, இடம் வலமாக தலையசைத்து மறுப்புச் சொன்னான்.
யுகி ஏற்கனவே கோபத்தில் உள்ளான். இதில் அவன் சத்யாவிடம் சென்றால் சண்டைக்கு வருவானோ என்ற எண்ணம் அவனுக்கு.
“என்னடா செல்லம்?” தன்னிடம் அவன் இன்னும் ஒட்டிக் கொள்ளாதது சத்யாவுக்கு பெருத்த தாக்கத்தைக் கொடுத்தது.
“அகிம்மா வா. நாம போகலாம்” அகியின் கையைப் பிடித்து சற்று தள்ளி அழைத்துச் சென்றவள், சத்யாவுக்கு யுகியை சமாதானம் செய்யுமாறு செய்கை செய்தாள்.
அவனும் அருகில் சென்று, “யுகி” என அழைக்க, “போங்க. போய் அகியை கூப்பிட்டுக்கங்க” கோபமாக சொன்னான் சின்னவன்.
“அவனையும் கூப்பிடுவேன். உன்னையும் கூப்பிடுவேன். ரெண்டு பேரும் என் பசங்க தானே?” அன்போடு கேட்க, “என்னை மட்டும் தானே அப்படி சொல்லுவீங்க. இப்போ அவனையும் சொல்லுறது எனக்கு பிடிக்கல” முகம் சுளித்தான்.
“அது அவன் வர முன்னாடி டா. இப்படி யோசி! நீ மட்டும் தான் இருக்க. அப்பறமா நம்ம வீட்டுக்கு இன்னொரு பேபி வந்தா அந்த பேபி கூடவும் இப்படித் தான் நடந்துப்பியா?”
அதைக் கேட்ட யுகனின் முகம் சட்டென கனிந்தது. புதுப்பிள்ளையின் வரவு யாருக்குத் தான் பிடிக்காது?
“அப்படி வந்தா ரொம்ப நல்லா இருக்கும்ல டாடி? நான் அந்த பாப்பாவை அன்பா பார்த்துப்பேன். ஹேப்பியா விளையாடுவேன். அடுத்த வீட்டுல இருக்கிற பாப்பா கூட அவங்க அக்கா ஜாலியா இருக்காங்க” கோபம் மறந்து குஷியாகி இருந்தான் சிறுவன்.
“அதே மாதிரி அகியையும் நெனச்சுக்க தங்கம். அவன் கூடவும் அன்பா இரு. ஜாலியா விளையாடு. உன் வயசு என்றாலும் இந்த வீட்டுக்கு அவன் குட்டி பையன் தான். நீ பெரிய பையன்ல?” அவன் தலையை மென்மையாக வருடிக் கொடுக்க,
“எனக்கு புரியுது டாடி. ஆனால் சில நேரம் கோபம் வருது. நான் வேணும்னே இப்படிலாம் பண்ணல. முன்னெல்லாம் சமத்து பையனா இருப்பேன்ல? இப்போ நீங்க அட்வைஸ் பண்ணுற அளவுக்கு நான் கெட்டவனா மாறிட்ட மாதிரி இருக்கு” முகம் சுருங்கக் கூறினான் யுகன்.
“இல்ல யுகி! நீ அப்போவும் இப்போவும் எப்போவும் சமத்து பையன் தான். நீ குழந்தை டா. உன் மனசு தூய்மையானது. இதெல்லாம் உனக்கு பழக்கமில்லாம வருதே தவிர, வேறு எதுவும் இல்ல. எல்லாம் போகப் போக சரியாகிடும்” மகனின் பிஞ்சு முகத்தை கனிவோடு நோக்கினான் சத்யா.
“லவ் யூ டாடி. நான் இனி நீங்க அட்வைஸ் பண்ணுற மாதிரி நடக்காம ட்ரை பண்ணுறேன்” என்றவனின் கன்னம் தட்டி, “தட்ஸ் மை கண்ணா” என அணைத்துக் கொண்டான்.
யுகியை ஜனனியிடம் அழைத்துச் சென்றான் சத்யா. ஜனனி ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டிருக்க, அவள் மடியில் அமர்ந்திருந்தான் அகி.
‘ஓகே ஆகிட்டானோ?’ என்ற கேள்வியோடு ஜனனி சத்யாவைப் பார்த்து புருவம் உயர்த்த, “எல்லாம் ஓகே தான்” முறைப்போடு பதில் சொன்னான் யுகன்.
“முறைச்சிட்டு சொன்னா எப்படி நம்புறதாம்? கொஞ்சம் சிரிச்சுட்டே சொல்லலாமே” என்று அவள் சொல்ல, “ஓகே ஆகிட்டேன் ஈஈஈஈ. போதுமா?” பல்லை இளித்துக் கொண்டு அவன் கேட்ட தோரணையில் சிரித்து விட்டனர் மூவரும்.
“நீ எதுக்கு சிரிக்கிற?” அகியிடம் எகிற, “சிரிப்பு வந்துச்சு. இதோ இந்த ஃபோட்டோல இருக்கிற பையன் மாதிரி இருக்கே” என்றதும் ஜனனியின் கையிலிருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தான்.
அதில் மொத்தப் பற்களும் பளிச்சிட நகைத்துக் கொண்டிருந்தான் சிறுவன்.
“இது என்ன புக்?” யுகன் கேள்வியாகப் பார்க்க, “ஸ்டோரி புக். நான் கதை சொல்லப் போறேன். இப்படி உட்கார்” பக்கத்தில் கை காட்டினாள் ஜனனி.
“இப்படி உட்காருங்க டாடி” சத்யாவுக்கு கட்டளை விடுத்தான் மகன்.
“நீ இரு டா. நான் இப்படி இருக்கேனே” எதிர் இருக்கையைக் கை காட்டினான் சத்யா.
“அதெல்லாம் முடியாது. அகியும் மடியில் தானே இருக்கான். நானும் மடியில் உட்காரனும். நீங்க வாங்க” என்று அழைக்க, சத்யா ஜனனியைப் பார்த்தான்.
“எதுக்கு என்னைப் பார்க்கிறீங்க? யுகி சொல்லுறான்ல. வந்து உட்காருங்க” அவள் முறைப்போடு சொல்ல, ‘இவளுக்கு ஃபீலிங்ஸே இல்லையா? அவன் சொன்னதும் உட்கார சொல்லுது ஜான்சி ராணி. இவ கிட்ட உட்கார்றது எனக்கு திண்டாட்டமா இருக்கே’ புலம்பலுடன் அவளருகில் அமர்ந்தான்.
“ஒரு ஊரில்…” அவள் கதை சொல்ல ஆரம்பிக்க, இருவரும் கன்னத்தில் கை குற்றி கேட்டுக் கொண்டிருந்தனர்.
தலையை அங்குமிங்கும் அசைத்து, ஜிமிக்கிகள் நர்த்தனம் புரிய, வாயோடு இமைகளும் விரிய, கண்கள் நவரச உணர்வுகள் சொரிய அவள் கதை கூறும் பாவனைகளை ரசித்துப் பார்த்தன, அவன் விழிகள்.
இத்தனைக்கும் அவள் அழகை அவன் ரசித்ததில்லை. அவள் குணத்தை ரசித்தான், முதிர்ச்சியான பேச்சை ரசித்தான், அவளது தாய்மையை ரசித்தான். இன்று முதல் முறையாக அவனுள்ளம் அவளின் அழகை ரசிக்கத் தூண்டியது.
“செம்மயா இருக்கு ஸ்டோரி. ஐ லைக் இட்” யுகன் சொன்னதும், அவளின் இதழ்கள் அழகாக விரிந்தன.
“எஸ் ஜானு. நீங்க சொல்லுற விதம் அவ்ளோ அழகா இருக்கு” அகியும் ரசனையோடு சொல்ல, “அது மகி பழக்கி விட்டது. ஸ்கூல் லைப்ரரி போய் ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு புக் எடுத்துட்டு வந்து அவளுக்கு சொல்லுவேன். கதை கேட்காம தூங்க போகவே மாட்டா” தங்கையின் நினைவில் நெகிழ்ந்து போனாள் பாவை.
“அகி! எழுந்து வா” யுகன் சொல்ல, “ஏன்? எதுக்கு எழும்ப சொல்லுற?” அகி யோசனையாகப் பார்த்தான்.
“சொன்னா செய்” அவன் உத்தரவு பிறப்பிக்க, ஜனனியின் மடியில் இருந்து இறங்கினான் அகிலன்.
சத்யாவின் மடியிலிருந்து இறங்கிய யுகி, “டாடி மடியில் உட்கார்ந்துக்க” என்றவனை மூவரும் புரியாமல் பார்த்தனர்.
“கொஞ்ச நேரம் முன்னாடி டாடி உன்னைக் கூப்பிட்டும் போகாம இருந்த. ஜானு கூப்பிட்டா மட்டும் போற. பெரியவங்க சொல்லுறத நாம கேட்கனும்ல? ஜானு எப்படியோ அப்படி தான் டாடியும். அவர் பேச்சுக்கும் மரியாதை கொடுக்கனும்” பெரிய மனிதன் போல் சொன்னான் யுகன்.
சத்யா மற்றும் ஜனனியின் இதழில் சிரிப்பு தவழ்ந்தது. அவனுக்குச் சொன்ன விடயங்களை திருப்பிச் சொல்கிறானே என்றிருந்தது.
“என்ன டாடி நான் சொல்லுறது சரி தானே?” இடுப்பில் கை வைத்துக் கேட்க, “சரி டா சரி. ரொம்ப தெளிவா பேசுற பெரிய மனுஷா” சிரிப்புடன் கூறினான் தந்தை.
“இப்போ கூப்பிடுங்க” என்று யுகன் சொல்ல, “வா அகி” கை நீட்டி அழைப்பு விடுத்தான் சத்யா.
இம்முறை மறுப்பின்றி அவனது மடியில் அமரச் சென்றவன், சற்று தாமதிக்க, “என்ன?” எனக் கேட்டான் யுகி.
“நீ ஜானு மடியில் உட்கார்ந்தா நான் நீ சொன்னதை கேட்கிறேன்” என்றான் அகி.
“உனக்கு இதே வேலையாப் போச்சுல்ல. நான் ஒன்னு சொன்னா பதிலுக்கு இன்னொன்னு கேட்ப” முறைத்துப் பார்த்தான்.
“இப்போ உன்னால முடியுமா முடியாதா?” அகி கேட்ட தோரணையைக் கண்டு, “டாடிக்காக கேட்கிறேன். மத்தபடி உனக்கு பயம் எல்லாம் இல்ல. அவர் மடியில் நீ உட்காரனும்னு ஆசைப்படுறார். அதற்காக நீ சொன்னதை கேட்கிறேன்” என்றவாறு ஜனனியைப் பார்க்க,
“வாடா செல்லம்” அவனைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்ட ஜனனிக்கு மகிழ்வு தொற்றிக் கொண்டது.
அவளின் முக மலர்வைக் கண்டு நிறைவோடு புன்னகைத்தான் அகி. பின்னர் அவனாகவே சத்யாவின் மடியில் அமர்ந்து கொண்டான்.
“எங்க மூனு பேர்ல உனக்கு யாரை ரொம்ப பிடிக்கும்?” அகியிடம் கேட்டான் யுகன்.
“ஜானுவைத் தான் பிடிக்கும். அவங்க என்னை அவ்ளோ அன்பா பார்த்துக்கிறாங்க. என் அம்மா கூட அப்படி பார்த்துக்கிட்டதில்ல. இவங்க கிட்ட வளர நான் ரொம்ப லக்கி” என்றுரைத்தான் அகிலன்.
அவனது பேச்சில் உருகிப் போன ஜனனிக்கு கண்கள் கலங்கின. இத்தகைய தூய அன்பு தனக்கென கிடைத்து விட்டதே என்றிருந்தது.
“எனக்கு டாடியைத் தான் ரொம்ப பிடிக்கும். அம்மான்னா எப்படினே எனக்கு தெரியாது. அப்படி ஒரு உறவு இருக்குன்னா டாடி தான் எனக்கு அம்மா. எனக்காக அவங்க நேரத்தை, அன்பை அளவில்லாம செலவளிச்சாங்க. ஹீ இஸ் மை ஹீரோ” தந்தையை அன்புடன் நோக்கினான் யுகன்.
“ஜானுவுக்கு யாரைப் பிடிக்கும்?” – இது அகிலனின் வினா.
“எனக்கு யுகியையும் அகியையும் பிடிக்கும். நான் பெறாமலே எனக்குக் கெடச்ச பொக்கிஷம் நீங்க” இரு குழந்தைகளையும் நேசப் பார்வையால் தழுவினாள்.
‘அப்போ என்னை பிடிக்காதா?’ சத்யாவின் உள்ளம் ஊமையாய் கேள்வி கேட்டது.
“அப்போ டாடிக்கு?” யுகன் தந்தையை ஏறிட, “எனக்கு உங்களை தான்டா பிடிக்கும். என் உலகமே உங்களை சுத்தி தான் இருக்கு” அவன் பார்வை மூவரையும் சுற்றி வந்தது.
“எங்க ரெண்டு பேரையுமா சொல்லுறீங்க டாடி?” யுகன் புருவம் இடுங்கக் கேட்க, “மூனு பேரையும் சொல்லுறார். அவருக்கு ஜானுவையும் பிடிக்கும். அது எனக்கு புரியுது” அகி சொன்னதைக் கேட்டு சத்யா விழி விரிக்க, அவ்விழிகளில் நேசத்தைத் தேடலாயின, மங்கையின் மலர் விழிகள்.
தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி