101. ஜீவனின் ஜனனம் நீ…!!

5
(5)

💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕

ஜனனம் 101

 

“அம்மாஆஆஆ” எனும் சத்தத்தில் அடித்துப் பிடித்துக் கொண்டு சமயலறையில் இருந்து வந்தாள் ஜனனி.

 

யுகன் கீழே விழுந்திருக்க, அழுது கொண்டிருப்பவனை அகி தூக்க முயன்றான். 

 

“கண்ணா” எனும் அழைப்புடன் சென்று அவனைப் பிடித்துத் தூக்கி சோஃபாவில் அமர வைத்தாள்.

 

“ஆஆ! வலிக்குது ஜானு” காலைப் பிடித்துக் கொண்டு வலியில் முகம் சுருக்கினான்.

 

அங்கு வந்த சத்யாவும் அவனது காலைப் பார்க்க லேசாக உராய்ந்து இருந்தது. மற்றவர்களும் அவனது சத்தத்தில் அங்கு கூடி விட்டனர்.

 

“பார்த்து வர மாட்டியா யுகி? பாரு எப்படி உராய்ஞ்சு இருக்குன்னு” சத்யா முறைத்துப் பார்க்க, அவன் இன்னும் அழ ஆரம்பித்தான்.

 

“அய்யோ திட்டாதீங்க. அவனே பாவம் வலியில் இருக்கான். உங்களுக்கு இதான் வேலை” என்று ஜனனி முறைக்க, “சொல்லிக் காட்டுறியா?” அவளை முறைத்தான் சத்யா.

 

“உங்க சண்டையை அப்பறமா வெச்சுக்கங்க. இப்போ அவனுக்கு மருந்து பூசி விடுங்க” என்று சொன்னான் அகி.

 

“நீ பாயின்ட்டா பேசுற பாப்பா” என்ற ரூபன், க்ரீம் ஒன்றை எடுத்து வந்து தடவி விட்டான்.

 

“ஆஆ ரூபி” அவனது மார்பில் உதைக்க, “மிளகாய்ப்பொடி! நேரம் பார்த்து நெஞ்சில் உதைக்கிறல்ல. உன் வாயில பூசுவேன் டா” என்று அவனது கன்னத்தைக் கடித்து வைத்தான்.

 

“டேய் சும்மா இரேன் டா. எப்போ பாரு அவன் கன்னத்தைக் கடிச்சு வைக்கிற” அவன் தோளில் அடித்தான் தேவன்.

 

“அதான் சித்தா. யுகி கன்னம் வீங்கி போயிரும்ல?” அகிலன் உச்சுக் கொட்ட, “அவன் வாய் கன்னம் எல்லாம் கொழுப்பு ஏறித் தான் இருக்கு. இதுக்கு மேல வீங்க ஒன்னும் இல்ல” என்றிட, “ரூபீஈஈ” அவனது மீசையைப் பிடித்து இழுத்தான் யுகி.

 

“சித்தா உனக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கேன் யுகி. என்னன்னு சொல்லு பார்ப்போம்” என்று தேவன் கேட்க, “அப்போ எனக்கு?” பாய்ந்து கொண்டு வந்தான் அகிலன்.

 

“ரெண்டு பேருக்கும் தான் தங்கமே. உனக்கு இல்லாததா?” என்று சொல்ல, “ஐஸ்கிரீமா சித்தா?” யோசனையாகப் பார்த்தான் யுகன்.

 

“அதைத் தான் தினமும் கொண்டு வர்றானே. இது வேற ஒன்னா தான் இருக்கும்” என்றான்‌ ரூபன்.

 

சின்னவனோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்க, டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூன் சீடியைக் காட்டினான் தேவன்.

 

“வாவ் சித்தா” கால் வலியையும் மறந்து அவன் கழுத்தைக் கட்டிக் கொள்ள, “அகி பாப்பா! இப்போ கொஞ்சம் முன்னாடி கால் வலினு அழுதது யாரு டா?” என்று‌ ரூபன் கேட்ட தோரணையில் சிரித்து விட்டனர் அனைவரும்.

 

டாம் அண்ட் ஜெர்ரி கார்ட்டூனை ஓட விட்டு அனைவரும் அமர்ந்து கொள்ள, தள்ளி அமர்ந்த ஜனனியை நெருங்கி அமர்ந்தான் சத்யா.

 

“கார்ட்டூன் பாருங்க” என்று அவள் சொல்ல, “நீ கார்ட்டூன் பார். நான் உன்னைப் பார்க்கிறேன்” என்றவனின் ரகசியப் பேச்சில் அவள் வெட்கத்துடன் முறைத்தாள்.

 

“எல்லார் முன்னாடியும் வெட்கப்படாத. அப்பறம் தூக்கிட்டு போயிடுவேன்” என்று கூற, “நான் சும்மா தானே இருக்கேன். நீங்க வெட்கப்பட வெச்சிட்டு என் மேல பழி போடாதீங்க” அனல் பார்வை வீசினாள் வஞ்சி.

 

“என்ன ஜானு ரகசியம் பேசுறீங்க?” யுகன் அவளைப் பார்த்துக் கேட்க, “ஒ..ஒன்னும் இல்ல யுகி. சும்மா தான்” பதில் சொல்வதற்குள் தடுமாறி நின்றாள்.

 

“யுகி கிட்ட அதிக கவனம் தேவை” சத்யா சொல்லவே, “அதை விட நீங்க தான் டேஞ்சர் பார்ட்டி” என்றாள் அவள்.

 

“நானும் அகியும் டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி பண்ணப் போறோம். அகி தான் ஜெர்ரி, நான் டாம்” என்று யுகி சொல்ல, “நான் உன் வால்ல சூடு வைப்பேன்” என்றான் அவன்.

 

“நான் உன்னைத் தூக்கி சட்டில போட்டு சூப் வைப்பேன்” யுகி தீவிரமாகக் கூற, “ஜெர்ரி டாம்மை தண்ணில தள்ளி விடும் தெரியுமா?” அகி கை கொட்டிச் சிரித்தான்.

 

“டாம் அண்ட் ஜெர்ரி ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கும்ல? நாங்க பக்கத்து வீட்டு டிவில போய் பார்ப்போம்” என்று சொன்னாள் ஜனனி.

 

“ஏன் ஜானு உங்க வீட்டுல டிவி இல்லையா?” சோகமாகக் கேட்டான் அகி‌.

 

“இருந்துச்சு. ஆனால் நாங்க அதையே பார்த்துட்டு இருந்தா அப்பா கோபம் வந்து உடைச்சிடுவார். அப்பறம் அவருக்கு தேவைப்படும் போது திரும்ப வாங்கிட்டு வருவார். மறுபடி உடையும், மறுபடி வரும்” என்று ஜனனி சொல்ல,

 

“உங்க அப்பாவுக்கு காசு கொட்டும் போல. வாங்கி வாங்கி உடைக்கிறார்” என்று ரூபன் கூற, “கோவில்ல தேங்காய் உடைக்கிற மாதிரி உங்கப்பா வீட்டுல டிவி உடைக்கிறாரோ?” என்று சத்யா சிரிக்க,

 

“சும்மா இருங்க டா. அப்படி சொல்லக் கூடாது” மகன்களை அடக்கினார் மேகலை.

 

“நாங்களும் சின்ன வயசுல டாம் அண்ட் ஜெர்ரி பார்ப்போம். அப்பா சிடி வாங்கிட்டு வருவார். அவர் ஸ்நாக்ஸ் கொண்டு வருவார். அதுக்கு சண்டை போட்டு சாப்பிட்டு, டிவி பார்த்து, அப்பா மடியில் யாரு சாயுறதுன்னு சண்டை போட்டு எல்லாமே செம்ம மெமரீஸ்” என்று தேவன் சொல்ல, அவர்களது மனதிலும் அந்நினைவுகளின் பசுமை.

 

…………….

புகையிர நிலையத்தை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு வந்தனர் அகியும் யுகியும்.

 

“இவ்ளோ ஆட்கள் வருவாங்களா?” வாயைப் பிளந்து கேட்டான் யுகன்.

 

“ஆமாடா. கார் மாதிரி இல்லையே. ட்ரெய்ன் எவ்ளோ பெருசா இருக்கு. அவ்ளோ இடத்திலும் ஆட்கள் வருவாங்க” என்று கூறினான் ரூபன்.

 

“நமக்கும் கூட இதுவெல்லாம் புதுசு மாதிரி இருக்கு. கார்ல போறதுல இந்த எக்ஸ்பீரியன்ஸ் கெடச்சதே இல்ல” என்றவாறு மேகலையின் கையைப் பிடித்துக் கொண்டு வந்தான் தேவன்.

 

தனது அருகில் வரும் சத்யாவைத் தான் காதல் சிந்தும் நயனங்களால் நோக்கினாள் ஜனனி. நேற்று மாரிமுத்து அழைத்து வீட்டில் விருந்து ஒன்று ஏற்பாடு செய்திருப்பதாகக் கூறினார். நந்திதாவுக்கும் சேர்த்து இதை செய்வதாக அறிவித்திருந்தார்.

 

வழக்கம் போல் காரில் தானா என ஜனனி சலிக்கும் போதே ரயிலில் செல்ல டிக்கெட் புக் செய்தான் சத்யா. அவளுக்குப் பிடிக்கும் என்று முன்பு ஒரு நாள் சொன்னாளே. அதை நினைவுபடுத்தி இதனைச் செய்ய, அவளுக்கும் புரியவே செய்தது.

 

“அம்மாவுக்கு நடந்து வர்றது கஷ்டமா இருக்குமே. தேவா கூட கார்ல அம்மா வரட்டுமே” என்று சத்யா கூற, “எனக்கும் ட்ரெயின்ல போக ஆசையா இருக்குப்பா. என்னால வர முடியும்” என்று விட்டார் மேகலை.

 

அவர்களும் தாயின் ஆசைக்கு ஒப்புக் கொண்டனர். இதோ ரயிலில் ஏறியும் விட்டனர். யன்னல் ஓரமாக இருந்த இருக்கையில் ஜனனி அமர்ந்து கொள்ள, அவளது பக்கத்தில் அமர்ந்தான் சத்யா.

 

குழந்தைகளை அழைக்க, அவர்கள் சித்தப்பாமாரிடம் இருப்பதாகக் கூறி அடுத்த சீட்டிற்கு சென்றனர். சத்யாவின் பார்வை ஜனனி மீதிருந்தது.

 

இளந்தென்றலில் அசைந்தாடும் முடிக்கற்றை அவளின் பிறை நெற்றியைப் பாதி மூடி இருந்தது. இயற்கை அழகுகளை அள்ளிப் பருகும் ஆனந்தத்தில் லயித்த விழிகள், பற்களிடையே சிறைப்பட்ட சிவந்த உதடுகள், வளையம் போன்ற தோடு அணிந்த செவிகள், சற்றே பூசி விட்டாற் போன்ற கன்னங்கள் என்று கவிதை வடிவில் தெரிந்தாள் தாரகை.

 

அவனது கரம் அவளின் கரம் மீது படிந்தது. விரலிடுக்கில் விரல் கோர்த்து இறுக்கிக் கொண்டான் சத்ய ஜீவா. அவன் மனதெங்கும் மகரந்தமாய் மகிழ்வு மழை பொழிந்தது.

 

புதிதாகப் பிறந்த மழலைக்கு உலகம் எப்படிப் புதிதாக இருக்குமோ சத்யாவுக்கும் அப்படித் தான் இருந்தது. அவனின் மறு ஜனனம் அவளுக்காகவே பிறந்தது போல் உணர்ந்தான். இழந்த அன்பு, அடக்கிய அன்பு, சிறைப்படுத்தி வைத்த அன்பு என அனைத்தையும் அவளுக்காகக் கொட்டிக் கொடுக்க அவன் அணுக்கள் அனுதினம் துடித்தன.

 

அவனது ஸ்பரிஷம் அறிந்தவள், பக்கவாட்டாகத் திரும்பி அவனை ஏறிட்டாள். அவனின் ஆழ்ந்த பார்வை அவளுள் வெட்கப் பூக்களை வஞ்சகமின்றிப் பூக்க வைத்தன.

 

“என்னங்க?”

 

“உன்னைப் பார்த்துட்டே இருக்கனும் போல இருக்கு ஜானு” என்றான் ஆடவன்.

 

“பார்க்கிறதா இருந்தா பாருங்க. இப்படி சொல்லிட்டு பார்க்காதீங்க. அப்படி பார்க்கும் போது எனக்கு ஒரு மாதிரி இருக்கு” அவளது சிணுங்கும் குரலில் சொக்கித் தான் போனான்.

 

மாலை மயங்கி இருந்தது. சூரியன் மேற்கினில் சங்கமிக்கும் பொழுதில் வானமும் சிவந்து போயிருந்தது.

 

அவனவள் மதி வதனம் நோக்கியவனுக்கு நேற்றுக் கேட்ட பாடல் வரியொன்று நினைவு வந்தது. அவள் பக்கமாகத் தலை சாய்த்து அதனைப் பாட ஆரம்பித்தான்.

 

“மாலை மங்கும் நேரம்

ஒரு மோகம் கண்ணின் ஓரம்

உனைப் பார்த்துக் கொண்டு நின்றாலே போதும் என்று தோன்றும்” 

 

காதோரம் கேட்ட அவனின் கானமும், கன்னம் தொட்ட வெப்பம் மிகுந்த மூச்சுக் காற்றும், குரலில் இருந்த உணர்வும் மங்கையவளை மயக்கம் கொள்ள வைத்தன.

 

“ட்ரெயின்ல வரனும்னு ஆசைப்பட்டியே. பிடிச்சிருக்கா?” என்று அவன் கேட்க, “ரொம்ம்ம்ம்ப” கைகளை விரித்துச் சொன்னாள் அவள்.

 

“நான் அதிகமா எங்கேயும் போனதில்ல. வீட்டில் தான் இருப்பேன். என் ஃப்ரெண்ட்ஸ் சிலர் இருக்காங்க. ஃபேமிலி, ஃப்ரெண்ட்ஸ்னு கூட்டு சேர்ந்துட்டு ட்ரிப் போவாங்க. அதைப் பார்த்தா ஆசையா இருக்கும். அட்லீஸ்ட் ட்ரெயின்லயாவது போகனும்னு ஆசை. ரயில் பயணமே ஒரு தனி சுகம் தான் எனக்கு. ஆனால் அதுவெல்லாம் நடந்தது இல்ல” என்று சொன்னவள் தொடர்ந்து பேசினாள்.

 

“இப்போ நான் நெனச்சது நடக்குது. ஏதோ ஒன்னு ரெண்டு நடக்கும் போதும் சந்தோஷம் தாங்கல. எல்லாம் உங்களால தான். தாங்க் யூ” அவனது கையை இறுகப் பற்றினாள்.

 

“ஒன்னு ரெண்டு இல்ல, நீ ஆசைப்படுற எல்லாம் நடக்கும். என்னால முடிஞ்சளவு நிறைவேத்தி வெப்பேன். உன்னை நிறைய இடங்களுக்கு கூட்டிட்டு போய் காட்டுவேன். உன் முகத்துல இன்னுமின்னும் சந்தோஷத்தைப் பார்க்கனும் ஜானு” என்றவனுக்கோ அவளது சந்தோஷமே ஒற்றை அவாவாக இருந்தது.

 

“இப்படி சொன்னதே போதும். நான் இப்படியெல்லாம் வாழனும்னு ஆசைப்பட்டதில்ல. என் ஆசைகள் அதிகமாவே நடக்கிற மாதிரி தோணுது. லவ் யூங்க! லவ் யூ சோ மச்” அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.

 

“நாங்களும்” அகிலனும் யுகியும் ஓடி வந்தனர்.

 

“அடடா! வந்துட்டீங்களா செல்லக் குட்டீஸ்” என்ற சத்யா அகியை மடியில் அமர வைக்க, யுகி ஜனனியின் மடியில் அமர்ந்தான்.

 

“டாடி! ட்ரெயின்ல போறது செமயா இருக்கு. மயில், கடல், மரம், பாலம் எல்லாமே பார்த்தோம்” கண்கள் மின்ன சொன்னான் யுகன்.

 

“எஸ் டாடி! பக்கத்து சீட்டில் இருந்த குட்டி பாப்பா எங்க கூட சிரிச்சா. பாட்டி தந்த பிஸ்கட்ட பாப்பாவுக்கு கொடுத்தோம். அழகா தாங்க் யூ சொன்னா” மகிழ்வு கொப்பளித்தது அகியின் முகத்தில்.

 

“ஆமா. நிறைய அனுபவங்கள் கிடைக்குதுல்ல. இனிமே நாம அடிக்கடி வரலாம்” என்ற சத்யாவின் கூற்றில் அவனது குழந்தைகள் குதூகலித்தனர், ஜானுவும் கூட.

 

தொடரும்…..!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 5

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!