💕 ஜீவனின் ஜனனம் நீ…!! 💕
ஜனனம் 109 (இறுதி அத்தியாயம்)
காதல்!
காதல் பெருங்காதலாகிப் பெருகி வழிந்து சத்ய ஜீவா மற்றும் ஜனனியின் வாழ்வில் புது அத்தியாயத்தை எழுதி இருந்தது.
ஆறு மாதங்கள் கழிந்த நிலையில் சத்யாவின் வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்கும் சொந்த பந்தங்கள் நிறைந்து வழிந்தனர்.
மகிழ்வில் பூரித்துப் போயிருந்த மேகலை ஓடியாடி வேலை செய்ய, “எங்க அம்மாவுக்கு சின்ன ஆள்னு நெனப்பு. எப்படி ஓடியாடி வேலை செய்றாங்க பார்த்தியா?” ரூபன் மகியின் காதில் சத்தமாக சொன்னது மேகலைக்கும் கேட்டு விட, “என்னடா நக்கலா?” என்று மகனைத் திரும்பி முறைத்தார்.
“நோ மம்மி! எங்களை விட நீங்க சுறுசுறுப்பா இருக்கீங்க. அதைச் சொன்னேன்” என்று அவன் இழுவையாகச் சொல்ல, “உனக்கு இப்போல்லாம் குசும்பு ஜாஸ்தியாயிடுச்சு. அம்மாவை கிண்டல் பண்ணுறதே வேலையாப் போச்சுல்ல?” என்றவாறு கர்ப்பிணியாக இருந்த வினிதாவின் கையைப் பிடித்துக் கொண்டு வந்தான் தேவன்.
வினிதா மட்டுமல்ல, மகிஷாவும் கர்ப்பமாக இருந்தாள். திருமணம் முடிந்த சில வாரங்களில் மேற்படிப்பைப் பூர்த்தி செய்வதற்காக தனுவும் கார்த்திக்கும் மலேசியாவிற்கு சென்று விட்டனர். இன்றைய விழாவில் அவர்கள் இல்லாதது மேகலைக்கு கவலையாக இருந்தாலும், அடிக்கடி வீடியோ அழைப்பு ஏற்றுப் பேசி அந்தக் குறையை நிவர்த்தி செய்து கொண்டிருந்தாள் தன்யா.
“இந்த குட்டி வாண்டுங்களைப் பார்த்தியா?” என்று வினிதா மகியிடம் கேட்க, “இல்லக்கா! எங்க போயிருப்பாங்களோ தெரியல. இங்கே தான் எங்கயாச்சும் விளையாடிட்டு இருப்பாங்க” என்று சொல்லும் போதே “ரூபி” என அழைத்தவாறு வந்து விட்டான் யுகன்.
“இதோ வந்துட்டான். இவனுக்கு என்னோட பெயரை ஊருக்கு தண்டோரா போட்டு சொல்லுறது தான் வேலை” என அவனது கன்னத்தைச் செல்லமாகக் கடித்து வைத்தான் ரூபன்.
“அகி எங்கே கண்ணா?” என்று தேவன் அவனிடம் கேட்க, “இதோ என் கூட தான் இருந்தான். நாங்க கிட்சன் போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுட்டு இருந்தோம்” என்று சொல்ல,
“உங்களுக்கும் அதுக்கும் அப்படி ஒரு கனெக்ஷன்ல? எப்போ பாரு ஐஸ்கிரீம்” அவனது கன்னங்களைப் பிடித்து ஆட்டினாள் வினிதா.
“ஜானுவும் டாடியும் வரலையா?” என யுகி தேட, “அவங்க எங்க வருவாங்க? ரொமான்ஸ் பண்ணிட்டு இருப்பாங்க” என்று சொன்ன ரூபனின் கையில் கிள்ளி, “சின்னப் பசங்க முன்னாடி இப்படியா பேசுவீங்க?” என்றாள் மகி.
“உண்மைய சொன்னா உனக்கு கோவம் வருது. ஒரு வேளை உனக்கும் ரொமான்ஸ் கேட்குதோ?” என அவள் காதில் கிசுகிசுத்து, முறைப்பைப் பரிசாகப் பெற்றுக் கொண்டான்.
இவர்களின் தேடலுக்குக் காரணமான இருவரும் காதல் சொட்டும் பார்வையை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டு நின்றிருந்தனர்.
“என்னங்க” மௌனத்திரையைக் கிழித்தாள் ஜனனி.
“இரு ஜானு! நான் உனக்காக ரெண்டு கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்கேன்” என்று அவளைக் கட்டிலில் அமர வைத்தான் சத்யா.
“எல்லாரும் நம்மளைத் தேடுவாங்க. எங்கே போறதுன்னாலும் நாம தான் லேட். அதுக்கு வேற உங்க தம்பிங்க கலாய்ச்சுத் தள்ளுவாங்க” சிணுங்கலுடன் அமர்ந்தாள் பெண்.
“அவனுங்க அப்படித் தானே. அதுக்காக நாம சீக்கிரம் போயிடனுமா என்ன? ஃபங்ஷன் தொடங்க இன்னும் அரை மணி நேரம் இருக்கு. அது வரை பொறுமையா இரு” என்றவனோ அவளை விடுவதாக இல்லை.
அந்நேரம் அவள் “ஆஆ” என அலற, “என்னாச்சு ஜானு? என்னம்மா?” பதற்றத்துடன் அவள் முகம் நோக்கினான்.
“உங்க குழந்தை தான் உதைக்கிறான்” என்று அவள் வயிற்றில் கை வைக்க, கணவனின் நேசப் பார்வை மனையாளின் மேடிட்ட வயிற்றின் மீது படிந்தது.
இது அவளுக்கு எட்டாவது மாதம். இன்று அவளுக்கு வளைகாப்பு விழா! அவளுக்கு மட்டுமல்ல, வினிதா மற்றும் மகிஷாவுக்கும் கூட. அவர்கள் ஆறுமாத கருவைச் சுமந்து கொண்டிருந்தனர்.
“பொய் சொல்லாத ஜானு” அவன் சொன்னதைக் கேட்டு, “பொய்யா? நான் எதுக்கு பொய் சொல்லனும்? நெஜமா உதைச்சாங்க” என்று அவள் கூற,
“அடியே என் செல்லப் பொண்டாட்டி! அதைச் சொல்லல. குழந்தைனு சொன்னியே அதைச் சொன்னேன். உன் வயிற்றில் இருக்கிறது குழந்தையா? குழந்தைங்களா?” என்று அவன் செல்லம் கொஞ்ச,
அவளின் இதழ்கள் அழகாக விரிய “குழந்தைங்க! அதுக்காகவா இப்படி சொன்னீங்க” சட்டென்று நகைத்தாள் அவள்.
ஆம்! அவள் இரட்டைக் குழந்தைகளைச் சுமந்து கொண்டிருக்கிறாள் அல்லவா? சத்யாவின் நினைவு பின்னோக்கி நகர்ந்தது.
அன்று வேலைக்குச் சென்று களைப்புடன் வீடு திரும்பினான் சத்யா. கதவைத் திறந்து வரும் போது ஜனனி அவனுக்காக வாயிலில் காத்திருந்தாள். அவனது தோள் பையை வாங்கிக் கொண்டவளுக்கு கன்னத்தில் முத்தமொன்று கொடுத்தான்.
புன்னகையை வழங்கியவள், “லேட் ஆச்சுல்லங்க. போய் ஃப்ரெஷ் ஆகிட்டு ரூம்ல இருங்க. சாப்பாடு கொண்டு வர்றேன்” என சென்றாள்.
அலுப்புத் தீரக் குளித்து விட்டு வந்தவன் அறையில் அவள் இல்லாதது கண்டு புருவம் சுருக்கினான். நொடி நேரம் தான். மறுநொடியே அவன் இதழோரம் சிரிப்பு எட்டிப் பார்க்க பல்கோணிக்குச் சென்றான்.
அவனது எதிர்பார்ப்பைப் பொய்யாக்காமல் அவனுக்காகக் காத்திருந்தாள் சத்யாவின் காதல் மனைவி.
“நான் இங்கே தான் இருக்கேன்னு தெரியும்ல?” என்று அவள் வினவ, “என் ஜானுவைப் பற்றி எனக்குத் தெரியாதா?” என்றவனுக்கு அன்பு கனிய ஊட்டி விட்டாள்.
“உனக்கு என்னை எவ்ளோ பிடிக்கும் ஜானு?” என்று அவன் கேட்க, “ஒரு தாய்க்கு அவங்க குழந்தையை எவ்ளோ பிடிக்குமோ அந்தளவு உங்களைப் பிடிக்கும்” என்று பதிலளித்தாள்.
“நீ உண்மையிலே எனக்குத் தாய் தான் ஜானு! இல்லன்னா இப்படி எனக்காக காத்திருந்து, ஊட்டி விட்டு கவனமா பார்த்துப்பியா? உன் அன்புக்கு முன்னால நான் கடன்காரனா நிற்கிறேன்” அவளது கையைப் பற்றிக் கொண்டான்.
“அப்படிலாம் கிடையாது. உங்க அன்பை விடவா நான் பெருசா தர்றேன்? எவ்ளோ அன்பா என்னைத் தாங்குறீங்க? மத்தவங்க முன்னாடி கூட என்னை விட்டுடாம எப்போவும் உங்க அன்பை அதேயளவா தர்றது எவ்ளோ பெரிய விஷயம் தெரியுமா?” என்று சொன்னவள், “இருங்க உங்களுக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்” என்றவாறு எழுந்து சென்றாள்.
வரும் போது அவள் கையில் ஒரு சிறு நகைப்பெட்டி இருந்தது. அதைத் திறந்து காண்பிக்க அவனது கண்கள் அகல விரிந்தன. வெள்ளிக் காப்பொன்று அவனை நோக்கிக் கண் சிமிட்டியது.
“வாவ் ஜானு” அவன் ஆசையோடு அதைத் தொட்டுப் பார்க்க, “பிடிச்சிருக்கா?” என்று கேட்டாள் காரிகை.
“என் ஜானு எனக்காக வாங்கித் தந்த முதல் கிஃப்ட்! பிடிக்காம இருக்குமா எனக்கு? ரொம்ப அழகா இருக்கு. நான் காப்பு போட்டதே இல்ல. ஆனால் நல்லா இருக்கும்ல?” என்று கேட்டான்.
“ரொம்ப அழகா இருக்கும். உங்க கையைப் பார்த்தது தாலி கட்டும் போது தான். அந்த நிமிஷம் உங்க கையில் காப்பு இருந்தா எடுப்பா இருக்குமேனு நெனச்சேன். அதான் ஒரு மாதிரி அதை நினைப்புல வெச்சி காசு சேர்த்து வாங்கிட்டேன்” என்றவளின் அன்பு அவனுள் தித்தித்தது.
“அப்போவே மேடமுக்கு என் கை மேல கண்ணு போயிருக்கு. ஆனால் அப்பாவி மாதிரி தலை குனிஞ்சு நின்னல்ல” தம் திருமண நாளை நினைவு கூர்ந்தான் அவன்.
“நான் அப்பாவினு யார் கிட்டவும் சொல்லலப்பா” என்றவள் அவன் கையில் காப்பை அணிவித்து விட்டாள்.
“சூப்பரா இருக்கு ஜானு. உன் புருஷன் கை இப்போ தான் ஜொலிக்குது” என்றவனைப் பார்த்து, “உங்க மனசையும் ஜொலிக்க வைக்கிற மாதிரி ஒரு கிஃப்ட் தரப் போறேன்” என்றவள் இன்னொரு சிறு பெட்டியை அவன் கையில் வைத்தாள்.
அதைத் திறந்தவனின் கண்கள் கலங்கிப் போக, “நீங்க அப்பாவாகப் போறீங்க ஜீவா” அவன் காதோரம் கூறினாள் ஜனனி.
சிவப்புக் கோடு விழுந்த ப்ரெக்னன்ட்சி கிட்டைப் பார்த்த கண்கள், தன் கண்மணியின் முகத்தில் நிலைக்க, “ஜானூஊஊ” என அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான் சத்யா.
“லவ் யூ ஜானு! லவ் யூ சோ மச். எனக்கு வேற என்ன சொல்லுறதுன்னு தெரியல. தாங்க் யூ தங்கக்குட்டி” அவள் கன்னம் ஏந்தி முகம் முழுவதும் முத்தத்தால் நனைத்தான்.
“இன்னிக்கு ஒரு மாதிரி இருக்கவும் அத்தை கூட போய் செக் பண்ணுறேன். உங்களைக் கூட்டிட்டு போகலனு ஏதாவது சொல்லுவீங்களோனு நெனச்சேன். ஆனால் என் எண்ணம் பிழைச்சுதுன்னா உங்களுக்கும் ஏமாற்றம் வரும்ல? அதனால தான் நானே பார்த்துட்டு வந்து சர்ப்ரைஸா சொல்ல இருந்தேன்” என்று சொன்னாள்.
“ஏமாற்றம்னா அது உனக்கு வராதா? உனக்கு வர்ற எதுவானாலும் அதை நானும் அனுபவிக்கனும் ஜானு” என்றவனோ, “ஆர் யூ ஹேப்பி?” எனக் கேட்டான்.
“ரொம்ப சந்தோஷம்ங்க! உங்களுக்கு என்னை எவ்வளவு பிடிக்கும்?” என்று வினவினாள்.
“எத்தனை குழந்தை வந்தாலும் எனக்கு நீ தான் முதல் குழந்தை. உன்னை அவ்ளோ பிடிக்கும் ஜானு! உனக்கு அப்பறம் தான் எனக்கு மத்த எல்லாம்” என்று மொழிந்தவனைக் கட்டியணைத்தாள் அவள்.
அடுத்த நாள் விடிந்ததும் அகி, யுகியிடம் விடயத்தைக் கூற, “எங்களுக்கும் பாப்பா வரப் போறா. ஜாலி ஜாலி” என்று துள்ளிக் குதித்தனர்.
“என்ன பெயர் வைக்கலாம் ஜானு?” என்று அகி கேட்க, “அவங்க உன்னை அம்மான்னு தான் கூப்பிடனும். நாங்க மட்டும் தான் ஜானு சொல்வோம்” இப்பொழுதே பாசம் போராட்டம் நடத்தினான் யுகி.
அதன் பிறகு வந்த நாட்கள் சத்யாவின் காதலில் கரைந்து உருகி உவகை கொண்டாள் ஜனனி. சும்மாவே அவளைத் தாங்குபவன் அவன். இப்பொழுது கேட்கவும் வேண்டுமா? அவன் செய்யும் அலப்பறையில் மேகலையும் ஜனனியும் அவனை முறைத்துத் தள்ள, அதைப் பார்த்தால் ரூபன் மற்றும் தேவனின் கிண்டலுக்குக் குறைவு இருக்காது.
இவர்கள் இப்படி என்றால் குட்டி வாண்டுகள் இரண்டும் அவளை தம் அன்பிலும் அலப்பறையிலும் திணறடித்தனர். இதற்கிடையில் வினி, மகி கர்ப்பமடைய அந்த வீடே ஆனந்தத்தில் மூழ்கியது. இரட்டிப்பு மகிழ்வாக ஜனனி இரட்டைக் குழந்தைகளைச் சுமப்பது அறியக் கிடைக்க இன்பத்திற்கு அங்கே குறைவில்லை.
இதோ இன்று வளைகாப்பு! சத்யாவின் அலப்பறை தாங்க முடியாமல் அவனை முறைக்க, “நீ எவ்ளோ வேணா முறைச்சுக்க. நான் என் வேலையைப் பார்த்துட்டு தான் விடுவேன்” என்று தரையில் அமர்ந்தான்.
“கிஃப்ட் தர்றேன்னு சொல்லிட்டு எதுக்கு இங்கே உட்கார்றீங்க?” என்று அவள் வினவ, “ஷ்ஷ்ஷ்” வாயில் கை வைத்துக் காட்டியவன் கொலுசை எடுக்க அவள் விழி விரித்தாள்.
அவளது பாதத்தைத் தன் தொடையில் வைத்து கொலுசு அணிவித்தவன், அவள் காலில் முத்தமிட்டான். அவள் பாதம் சிலிர்த்தது, தேகமும் கூட. அளவற்ற அவன் அன்பின் விளைவு அது.
“அடுத்தது ஜிமிக்கி” ஜிமிக்கியும் அணிவித்து விட்டான்.
“அடுத்து வளையல் போட்டு வளைகாப்பும் நடத்துங்களேன்” என்று சொன்னவளைப் பார்த்து, “அதை அங்கே பண்ணலாம். தேவா, ரூபன் எல்லாரும் அவங்க வைஃப்கு போடும் போது போட்டு விடுறேன். ஆனால் கொலுசு, ஜிமிக்கியை எல்லார் முன்னாடியும் போட்டா சங்கடம் வரும். அவங்களுக்குப் போடலனு வினி, மகி மனசு சுணங்கினா நல்லா இருக்காதுல்ல?” என்றான் சத்யா.
“இதான் எனக்கு உங்க கிட்ட பிடிச்ச விஷயம். அடுத்தவங்களுக்கு சங்கடம் வரக் கூடாதுன்னு பண்ணுறீங்ளே. நீங்க க்ரேட்” அவன் முடியைச் செல்லமாகக் கலைத்து விட்டாள்.
“சரி போகலாமா? உன்னைத் தூக்கிட்டு தான் போவேன். நோ சொல்லக் கூடாது” ஆரம்பத்திலே தடை விதித்தவன், அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.
அவன் முகத்தைப் பார்த்தவாறே அவளும் செல்ல, “அம்மா! உங்க மூத்த மருமகள் பல்லக்குல வர்றாங்க” என்றான் ரூபன் சத்தமாக.
“என் ஜானு ராணினு நீயே ஒத்துக்கிட்ட பார்த்தியா?” தம்பியைப் பார்த்துக் கண் சிமிட்டியவாறு அவளை அமர வைத்தான் சத்யா.
நந்திதாவும் எழிலும் தம் கைக்குழந்தை நதியாவுடன் வந்திருந்தனர். ஜெயந்தி குழந்தையை வைத்துக் கொண்டிருந்தார்.
“மாமா! அக்காவுக்கு வளைகாப்பே நடத்தி முடிச்சு தான் கூட்டிட்டு வந்தீங்க போல” என்று மகி கேட்க, “இல்ல மகி சித்தி. டாடிக்கு ஜானு தான் காப்பு போட்டிருக்கா. இதோ பாருங்க” சத்யாவின் கையில் இருந்த காப்பைக் காட்டினான் அகி.
“ஆமா சித்தி. அது வளைகாப்பு இல்ல. வளையாத காப்பு. நல்ல ஸ்ட்ராங்கா இருக்கு” என யுகி சொன்னதைக் கேட்டு, “இந்த அவமானம் உனக்குக் தேவையா?” எனக் கேட்ட கணவனை முறைத்துப் பார்த்தாள் மகி.
மேகலை மருமகள்களுக்கு சடங்கு செய்ய, ஒவ்வொருவராக செய்து முடிந்ததும், கணவன்மார் தம் மனைவிகளுக்குச் செய்தனர்.
“லவ் யூ டி வினி” தன்னவள் நெற்றியில் முத்தமொன்று வைத்தான் தேவன்.
“மகி! நீயே பாப்பா தான். உனக்கு ஒரு பாப்பானு நம்ப முடியல மகி” என்று ரூபன் மெதுவாகச் சொல்ல, “பெத்து கொடுத்து தான் காட்டனும். முதல்ல வளையல் போடுங்க” என்றவளுக்கு வளையல் அணிவித்தான் அவன்.
“இன்னும் எத்தனை குழந்தை பெத்து தருவ ஜானு?” தன்னவளிடம் சந்தனம் பூசும் சாக்கில் கேட்டான் சத்யா.
அவள் முகமோ குங்குமமாகச் சிவக்க, “எத்தனை வேணாலும். நீங்க கொடுத்தா பெத்து தர நான் ரெடி” என்றவளைக் குறும்பு மின்னப் பார்த்து, “ஹா ஹா அதுக்கென்ன. தாராளமா தர்றேனே” என்றவாறு வளையல் போட்டு விட்டான்.
“நாங்களும் ஜானுவுக்கு வளையல் போடனும்” சிறுவர்கள் வந்து நிற்க, “உங்க கிட்ட வளையல் இருக்கா?” எனக் கேட்டான் தேவன்.
“டாடி எடுத்து தந்தாங்க” என்றவாறு இருவரும் இரு கைகளுக்கும் வளையல் அணிவித்தனர்.
“என் பட்டுக் குட்டீஸ்” இருவரையும் அணைத்து முத்தமிட்டாள் ஜனனி.
அவளின் முதல் குழந்தைகள் யுகனும், அகிலனும் அல்லவா? பெறாமலே அவளுள் தாய்மை சுரக்க வைத்த செல்வங்கள்! என்றென்றும் அவளுக்கு அவர்கள் முதன்மை தான்.
“லவ் யூ ஜானு” அவளது கன்னத்தில் முத்தமிட்டனர் இருவரும்.
“டாடி எங்கே?” யுகன் கேள்வி கேட்க, “என்ன கண்ணா” மகனின் முன் வந்து நின்றான் சத்யா.
“ஜானுவுக்கு முத்தம் கொடுங்க” என்று சொல்ல, மறுப்புக் கூறாமல் அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் பதித்தான்.
“அண்ணாவோட காட்டுல அடைமழை தான்” வீடியோ காலில் வந்திருந்த தன்யா கிளுக்கிச் சிரிக்க, “உனக்கு பொறாமையாக்கும்” என்றான் கார்த்தி.
நாட்கள் இப்படித் தான் யாருக்காகவும் காத்திராமல் கடந்து சென்றன. சத்யா வீட்டிலேயே வேலை செய்ய ஆரம்பித்தான். ஜனனியுடன் அதிகமாக நேரம் செலவிட்டான்.
அவளும் அவனை அதிகம் தேடினாள். கடற்கரை சென்று இருவரும் கரம் கோர்த்து நடந்தார்கள். அவள் வலியில் முகம் சுருக்கினால் அவனுக்கு மனம் சுணங்கும்.
“ஜானு! ஜானு!” என்று அவளையே சுற்றி வந்தான் சத்ய ஜீவா.
இல்லாதவனுக்குக் கிடைத்த அரிய பொருள் போலத் தான் அவனுக்கு ஜனனியும். அந்த அளவுக்கு அவளைக் கொண்டாடித் தீர்த்தான். சண்டை பிடிப்பான், திட்டவும் செய்வான்.. ஆனால் அது கூட அவளுக்காகத் தான். அப்படித் திட்டினாலும் மறு நொடி அவனே வந்து சமாதானம் செய்வான்.
இன்றும் அப்படித் தான் அவளுடன் கோபித்துக் கொண்டு விட்டான் சத்யா. சாப்பிடாமல் தூங்கியதன் விளைவு அது. நேற்று அவன் வெளியில் சென்று வருவதற்குள் தூங்கி விட்டாள். எழுப்ப மனமின்றி இருந்தவன் இன்னும் கோபமாக சுற்றிக் கொண்டிருந்தான்.
“இப்போ நான் ஒரு ப்ளேட் ஃபுல்லா சாப்பிட்டேன். இன்னுமா உங்க கோபம் போகல?” அவளும் முறுக்கிக் கொண்டு செல்ல, குளித்து விட்டு வந்தவனின் மனமோ அவளை நாடியது.
அவனது பார்வை உணர்ந்தும் கண்டும் காணாதது போல் இருந்தவள் முன்னால் வந்து நின்றவன், “கோபமா கூட இருந்துக்கோ. ஆனால் தலையை மட்டும் துடைச்சி விடு ஜானு” டவலை நீட்டினான் அவன்.
டவலைப் பிடுங்கி எறிந்து விட்டு, சேலை நுனி கொண்டு அவன் தலை துடைக்கத் துவங்கினாள் ஜானு. அவளது செய்கையில் சிரித்து விட்டவன் சமத்துப் பிள்ளையாக அவள் முகத்தை இமை சிமிட்டாமல் நோக்கினான்.
“என்ன ஜீவா?” மென்மையாய்க் கனிந்து ஒலித்தது அவள் குரல்.
உருகி விட்டான் சத்யா. ஒன்றும் இல்லை என்பதாகத் தலையை இடம் வலமாக அசைத்தவனின் பார்வை மட்டும் எங்கும் நகரவில்லை.
“கொஞ்சம் உட்கார் ஜானு” அவளை அமர வைத்து மடியில் தலை சாய்த்தான்.
“நம்ம பசங்க என்னோட இடத்தை எடுத்துக்கப் பார்க்குறாங்க. உன் மடியில் சாயும் போது இடிக்கிறாங்க” தன்னை முட்டும் வயிற்றைப் பார்த்தவாறு சொன்னான் அவன்.
“அவங்க இடிக்கிறாங்கன்னு நீங்க தள்ளிப் போக முடியாது சார். உங்க இடம் உங்களுக்குத் தான். இந்த ஜானு உங்க இடத்தில் உங்களை மட்டுமே எதிர்பார்ப்பா” அவன் தலை கோதி, நெற்றியில் முத்தமிட்டாள் மனைவி.
அவன் இமைகள் மூடிக் கொண்டன. தன்னவள் தலை கோதும் சுகத்தை ஆழ்ந்து அனுபவித்தான்.
“உன்னோடு நானும் வாழ
உன்னோடு நானும் சாக
உன் மடி சாயவா” அவன் உதடுகள் மெல்ல முணுமுணுத்தன.
“என் மடியில் நீ மழலை
கேட்க வேண்டும் உன் குரலை
கோதிக் கொடுப்பேன் நின் குழலை
என்றும் நீயின்றி நானில்லை” அவள் இதழ்கள் கவி பாடின.
“ஸ்ஸ் ஜானு! செம” அவன் ரசித்துக் கூறும் போது, “ஜீவாஆஆ” அவன் முடியில் கொடுத்த பிடியில் அழுத்தம் கூடியது.
அந்தப் பிடி அவனுக்கும் வலியைக் கொடுக்க, “ஜானு” சட்டென்று அவள் முகம் நோக்கினான்.
“வலி வருதுங்க” அவள் கரம் வயிற்றை அழுத்த, அவனுக்கோ இதயம் வெட வெடத்தது.
“நாம ஹாஸ்பிடல் போயிடலாம் செல்லம். ஒன்னும் பிரச்சினை இல்லை” அவளைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு ஓடினான்.
தேவன் காரை எடுக்க, ஹாஸ்பிடலில் இருந்து அப்போது தான் வந்த ரூபனும் முன்னால் ஏறிக் கொண்டான்.
“என்னங்க” வலியில் துடிக்கும் தன்னவளின் கரத்தை அழுத்திக் கொண்டு தானும் துடிதுடித்துப் போனான் சத்யா.
“ஒன்னும் இல்லடா கண்ணம்மா. சீக்கிரம் போயிடலாம். கொஞ்சம் பொறுத்துக்க ஜானு. லவ் யூம்மா” அவள் கையில் முத்தமிட்டுக் கூறியவனுக்கும் கண்கள் கலங்கின.
“தேவா ஃபாஸ்ட்! குயிக்கா போடா” தம்பியை அவசரப்படுத்த, “சரிண்ணா” என்றான் அவனும்.
புயல் வேகத்தில் வைத்தியசாலையை அடைந்து விட்டனர். அவனைப் பிரிந்து அறையினுள் செல்லும் போது அவள் ஒரு பார்வை பார்க்க, “என் அம்மால்ல டா? என்னை நெனச்சுக்க. நம்ம அகி, யுகியை நெனச்சுக்க. எனக்கு நீ தான் டா எல்லாமே. என் உசுருல்ல. பத்திரமா போயிட்டு வா ஜானு” அவள் நெற்றி, கன்னம் என்று மாறி மாறி முத்தமிட்டு அனுப்பி வைத்தான்.
அவன் கண்கள் கலங்கியே இருந்தன. இரு கைகளையும் இறுகப் பிணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தவனுக்கு சுற்றம் புரியவில்லை. அவன் சித்தமெங்கும் ஜனனியே நிறைந்திருந்தாள். அவள் நலமாகத் திரும்ப வேண்டுமென வேண்டிக் கொண்டான்.
“அண்ணா” அண்ணனின் தோளில் கை வைத்து அழுத்திய தேவன், வெளியில் வந்த ரூபனைப் பார்த்து “நீ என்னடா வந்துட்ட?” என்று கேட்டான்.
“என்னால முடியல தேவா. நம்ம அண்ணி டா. என்னால அவங்களை அப்படிப் பார்க்க முடியல. அவங்க துடிக்கிறதைப் பார்க்கும் போது அம்மா ஞாபகம் வர்றாங்க” என்று அமர்ந்து கொண்டான்.
சிறிது நேரத்தில் ஒன்றன் பின் ஒன்றாக குழந்தை அழும் சத்தம் கேட்டது. நர்ஸ் இரு குழந்தைகளையும் ஒன்றாகக் கொண்டு வந்து கொடுக்க, அவர்களை வாங்கியது ரூபன் தான்.
“சத்யா உன் பசங்களைப் பார்” என்று தேவா காண்பிக்க, “எனக்கு ஜானுவைப் பார்க்கனும் ரூபன். ஏதாவது பண்ணு” என்றிருந்தான் சத்யா.
“இரு நான் வர்றேன்” என்று குழந்தைகளை தேவனிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்ற ரூபன் சற்று நேரம் கழித்துத் திரும்பி வந்தான்.
“அண்ணி மயக்கமா இருக்காங்க. ரிலாக்ஸா இருங்கண்ணா. கொஞ்சத்துல போகலாம்” என்றதும் தான் சத்யா சற்று ஆசுவாசமானான்.
தன்னவளைப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட, உள்ளே சென்று அவள் முகம் நோக்கினான். மயக்கத்தில் தான் இருந்தாள், கண்களை மூடியவாறு. அவளைப் பார்க்கும் போதெல்லாம் வலியில் துடித்தது தான் நினைவில் உதித்தது.
அவளது கையை மென்மையாகப் பற்றிக் கொண்டவனுக்கு சில நிமிடங்களில் அசைவு தெரிந்தது.
இமை பிரித்த கணம் தெரிந்த அவன் உருவத்தைக் கண்டு “ஜீவா” மறு கையை அவன் தலையில் வைத்து வருடிக் கொடுத்தாள் ஜனனி.
“ஜானுமா! என் தங்கமே” நிமிரிந்து பார்த்தவன் அவள் முகமெங்கும் முத்தமிட்டு, அப்படியே தன் முகத்தை வைத்துக் கொண்டிருக்க அவன் கண்களில் கண்ணீர் வழிந்து அவளது கண்களைத் தொட்டது.
“என்னங்க இது? எதுக்கு அழுறீங்க?” அவள் பதற்றத்துடன் அவனது கண்களைத் துடைக்க, “தெரியல ஜானு. எனக்கு அழனும் போல இருக்கு. நான் அழனும். நீ ரொம்ப அழுத தானே?” என்றான் கலக்கமாக.
“பிரசவத்தில் ஒரு தாய் உணர்ற வலி அந்தக் குழந்தை முகம் பார்த்ததும் மாயமா மறைஞ்சு போயிடும் இல்லையா? இப்போ என் வலியும் போயிடுச்சு என் குழந்தை ஜீவாவைப் பார்த்ததும். அந்த வலியை அனுபவிச்சுட்டு வந்தப்போ எனக்கும் கூட மறு ஜென்மம் எடுத்த மாதிரி தான் இருக்கு.
கண் விழிச்சதுமே முதல்ல உங்களைப் பார்த்தேன். அவ்வளவு சந்தோஷமா இருக்கு. இப்போ அழக் கூடாது. சந்தோஷமா இருக்கனும்னு தானே உங்களுக்காக ரெண்டு பொக்கிஷங்களை தந்திருக்கேன். அவங்களை நீங்க மட்டும் பார்த்தா சரியா? எனக்கு காட்ட மாட்டீங்களா?” அவன் முகத்தை வருடிக் கேட்டாள்.
“அய்யோ சாரி ஜானு. நான் வேற லூசு மாதிரி அதை மறந்துட்டேன்” வேகமாக வெளியில் சென்று குழந்தைகளை வாங்கி வந்தான்.
“வாங்கிக்க ஜானு” குழந்தைகளை அவள் மீது வைக்க, அவள் நெஞ்சம் மகிழ்வில் விம்மித் தணிந்தது.
இப்போது தான் சத்யாவும் குழந்தைகளை நன்கு பார்த்தான். ஜனனியும் ஆசை தீர தன் கருவில் உருவெடுத்த மகன்களைப் பார்த்து ரசித்தாள். அவளுக்கு சிறு பிள்ளைகள் என்றாலே பிடிக்கும். சின்னஞ்சிறு விரல்களை எப்பொழுதும் தொட்டு ரசிப்பாள். இன்று அவளுக்கென்று இரு குழந்தைகள்.
“ரொம்ப கியூட்ல?” அவள் பூரிப்புடன் சொல்ல, “அப்படியே உன்னை உரிச்சுப் பிறந்திருக்காங்க பார். கியூட்டா இருக்க மாட்டாங்களா என்ன?” எனக் கேட்டான் கணவன்.
“அம்மாஆஆஆ” எனும் அழைப்பில் அவள் நிமிர, அகியும் யுகியும் தான் வந்திருந்தனர்.
“தம்பி பாப்பாங்களைப் பார்க்க வந்தீங்களா?” என்று சத்யா வினவ, “இல்ல என் அம்மாவைப் பார்க்க வந்தேன்” ஜனனியின் கையைப் பிடித்துக் கொண்டான் அகி.
“உங்களுக்கு ஒன்னும் இல்லையே? நான் பயந்து போயிட்டேன்மா. லவ் யூம்மா. எங்க கூடவே இருங்க. வீட்டுக்கே வந்துடுங்க” ஜனனியை அணைத்துக் கொண்டான் யுகி.
“அழாத கண்ணா! நான் வீட்டுக்கு வந்துடுவேன். உங்களை விட்டுட்டு அம்மா எங்கே போவேன்? வந்து உங்க கூட விளையாடுறேன், படிச்சு தர்றேன்” என்று அவள் சொல்ல, “நோ ஜானு! கொஞ்ச நாளைக்கு நீ நல்லா ரெஸ்ட் எடுக்கனும். உன்னை நாங்க எதுவும் பண்ண சொல்லி கேட்க மாட்டோம். ஏதாவது வேணும்னா கேளுங்க செஞ்சு தர்றோம்” என்று சொன்னான் அகிலன்.
“யாருடா இதெல்லாம் சொல்லித் தந்தது உங்களுக்கு?” அவள் கேட்க, “டாடி தான்” தந்தையைக் காட்டினான் யுகி.
“நல்லா சொல்லித் தருவாரே உங்க டாடி” அவள் பார்வை அவளவன் மீது காதலுடன் படர்ந்தது.
“நீ என் தேவதை டா” அவளை அணைத்தவனிடம், “எஸ் டாடி! ஜானு நெஜமாவே ஏஞ்சல் தான்” என்ற யுகனும் அவளை அணைக்க, அகியும் அவள் கைப்பிடித்துக் கொள்ள, உண்மையில் தேவதையாகவே உணர்ந்தாள் வஞ்சி.
தொடரும்…….!!
ஷம்லா பஸ்லி