முகவரி அறியா முகிலினமே..! – 3

4.3
(6)

முகில் 3

எதிரில் நின்ற பனைமரம் அந்த காரிருளில் அவனது கண்களுக்கு புலப்படவில்லை அத்துடன் வேகமாக பின்னே பார்த்தபடி ஓடி வந்ததால் அந்த உயர்ந்த பனைமரம் நிற்பதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

நெற்றியில் பனைமரம் மோதியதால் பலமாக அடிபட்டு தலை வலியுடன் உலகமே சுற்றுவது அப்போது தான் அவனுக்கு தெரிந்தது.

அப்படியே ஒரு நிமிடம் விழுந்து கிடந்தவன் எழ முடியாமல் தலையை அங்கு இங்கும் அசைத்து நிதானத்திற்கு வர முயற்சி செய்தான்.

அப்பொழுது பவள முத்துக்கள் பதித்த வளையல்கள் பூட்டிய அழகிய கரம் அவன் எழுவதற்கு கை கொடுத்தது.

அந்த இருளில் தெரிந்த வளையல் பூட்டிய கரத்தை பார்த்ததும் முதலில் சந்தேகம் கொண்டவன் பின்பு நிமிர்ந்து பார்க்க அழகிய வதனம் கொண்ட தேவதை போல கையில் தீப்பந்தத்துடன் செந்தாழினி அவன் முன் வந்து நின்றாள்.

அந்த நெருப்பு பந்தத்தின் வெளிச்சத்தில் அவளது வதனம் பார்த்து அப்படியே அசந்து போனவன் முதல் பார்வையிலேயே ஏதோ மனதில் இனம் புரியாத உணர்வு குடி கொண்டது போல உணர்ந்தான்.

பல காலம் பார்த்து பழகி பரீட்சையமானது போல அவனுக்கு செந்தாழினியின் வதனம் தோன்றியது.

ஆதிரன் அசைவற்றே அவளை கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்க செந்தாழினி மெலிதாக சிரித்த வண்ணம் விரல்களால் சுடக்கிட்டு அவனது சிந்தை செல்லும் பாதையை இடை நிறுத்தினாள்.

“என்ன சார் பனையில மோதி விழுந்ததும் கனவுலோகத்துக்கு போயிட்டீங்களோ..! ஊருக்கு போற ஆசை இல்லையா..?” என்று அவள் கிண்டல் அடித்ததன் பின்னர் தான் அவன் சுயமடைந்தான்.

“நீங்க..” என்று அவன் இழுக்க,

“நான் யாருன்னு சொன்னாத்தான் கைப்பிடித்து எழுந்திருப்பீங்களோ..! என்னோட பெயர் செந்தாழினி நீங்க ஆதிரன் தானே..!” என்று அழகாக முகம் சரித்து கேட்டாள் செந்தாழினி.

“ஆமா அது எப்படி உங்களுக்குத் தெரியும்…” என்று புரியாமல் கேட்க,

“பிரகாஷ் அண்ணா இன்னைக்கு காலையில டீக்கடை அண்ணாக்கு கால் பண்ணி நீங்க வர்ற விபரத்த சொல்லி என்ன போய் உங்கள கூட்டி வர சொன்னாராம்…” என்று தனது நண்பனின் பெயரை கூறிய பின்பு தான் ஆதிரனுக்கு சந்தேகத் திரை மறைந்தது.

‘ஓஹ் பிரகாஷ் பார்த்த வேலையா ராஸ்கல் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லி இருக்காலாம் இந்த அழகான பொண்ணு முன்னாடி மரத்துல மோதி விழுந்திருக்கத் தேவையில்லை..’ என்று மனதிற்குள் பிரகாஷை வார்த்தைகளால் அர்ச்சனை செய்து கொண்டிருந்தவன் மெல்ல எழுந்து,

“நீங்க பிரகாசுக்கு..?”

“அதுதான் சொன்னனே பிரகாஷ் அண்ணா என்று எனக்கு அவர் சொந்தம் இல்ல ஆனா தெரியும். இந்த ஊர்ல இருக்கிற எல்லாருமே சொந்தம் மாதிரி தான் ஆனா சொந்தம் இல்லை.

வாங்க வாங்க நீங்க ஊருக்கு இப்போ தானே வந்திருக்கீங்க எங்க ஊரை பத்தி ஒரு கொஞ்ச நாள் போகப் போக விஷயங்களை தெரிஞ்சுப்பீங்க…”

“சரி சரி இன்னும் எவ்வளவு தூரம் இருக்கு ஊருக்கு போறதுக்கு..” என்று செந்தாழியின் நடந்து கொண்டு ஆதிரன் கேட்க,

“இப்படியே மெதுவா நடந்தீங்கன்னா ஒரு மணி நேரத்தில் போய் சேர்ந்திடலாம் என்னோட சேர்ந்து என் நடைய புடிச்சு நடந்தீங்கன்னா 20 நிமிஷத்திலேயே போயிடலாம் எப்படி வசதி..” என்று புருவம் உயர்த்தி செந்தாழினி குறும்பாகக் கேட்க,

ஆதிரன் “நீங்க நல்லா பேசுறீங்க..” என்று சிரித்தான்

“அப்படியா ரொம்ப சந்தோஷம் ஊரிலேயும் அப்படித் தான் பேசிக்கிறாங்க சரி வாங்க வாங்க நேரமாச்சு இன்னும் கொஞ்ச நேரத்துல இந்த பக்கம் கரடி, காட்டுப் பன்னி, யானை எல்லாம் வரும் நாம அதுக்குள்ள ஊருக்கு போய்டணும்..” என்று செந்தாழினி கூறியதும் சோர்வாக நடந்த ஆதிரனின் கால்கள் எவ்வாறு வேகமாக நடத் தொடங்கியது என்று ஆதிரனுக்கே புரியவில்லை.

செந்தாழியின் பின் வேகமாக சென்றவன் அங்கிருந்த மூன்று பக்கமும் மலைகளால் சூழ்ந்த கிராமத்தை கண்டு வியந்தே போனான்.

அந்த நிலவொலியில் மலைகளும், நீர்வீழ்ச்சிகளும், ஆறுகளும், வயல் வெளிகளும் அழகாக காட்சி தந்தன.

அதை வியந்து பார்த்தபடி நடந்து வந்தவன் ஊரில் எல்லைக்கு வந்த பின்பு அருவியின் அருகில் இருக்கும் பாறையில்  களைப்பால் அமர்ந்து விட்டான்.

“என்ன சார் கால் வலிக்குதா..?”

“இல்ல கொஞ்சம் களைப்பா இருக்கு தண்ணி ஏதாவது இருக்குமா..?” என்று எச்சில் கூட்டி விழுங்கி தொண்டையை தடவியப்படி கேட்டான்.

“ஐயோ என்ன சார் கண்ணுக்கு முன்னுக்கு இவ்வளவு நீர் ஓடுது என்கிட்ட தண்ணி கேக்குறீங்க..”

“இதுவா இத குடிக்கலாமா..?”

“இதைத்தானே நாங்க எல்லாரும் குடிக்கிறோம் குடிச்சு பாருங்க அப்படியே தேன் மாதிரி இனிக்கும்..”

“இது சுத்தமா..?” என்று ஆதிரன் இழுக்க,

“குடிச்சு பாருங்க சார் ஓடுற தண்ணி எப்பவுமே சுத்தமா தான் இருக்கும்..” என்று செந்தாழினி நம்பிக்கை ஊட்டும் வண்ணம் எடுத்து கைகளினால் அள்ளி நீரை அருந்திக் காட்டினாள்.

கையில் நீரை ஏந்தி வாயில் வைத்து குடித்துக் காட்ட,

அவனும் அதே போல் நீரை எடுத்து தனது தாக்கத்தை போக்கிக் கொண்டான். முதலில் தடுமாறியவன் பின் தண்ணீரின் சுவையை உணர்ந்ததும் வயிறு நிரம்ப நீரை நிரப்பிக் கொண்டான்.

“எப்படி இருக்கு..?”

“உண்மையிலேயே இந்த தண்ணில ஏதோ ஒரு சுவை இருக்கு நான் இதுவரைக்கும் இப்படி ஒரு நீரை குடிச்சதே இல்ல மினரல் வாட்டரை விட இது சூப்பரா இருக்கு..” என்று கூறி வியந்து போனான்.

“இதுக்கே இப்படின்னா இன்னும் எவ்ளோ இருக்கு சார் வாங்க வாங்க இன்னும் கொஞ்ச தூரம் தான்…”

“செந்தாழினி நான் எங்க தங்குறதுன்னு ஏதாவது பிரகாஷ் சொன்னானா என்கிட்ட சொன்னான் நான் அரேஞ்ச் பண்ணி வச்சிருக்கேன்னு யாரோ வாத்தியார் வீடு இருக்காமே..!”4

“ஆமாங்க சார் நீங்க ஒன்னும் கவலைப்பட தேவையில்லை நானே எல்லாமே பார்த்து இருந்து செஞ்சு தாரேன்

எங்க ஊர்ல ஒரு சின்ன பள்ளிக்கூடம் இருக்கு அதுக்கு பக்கத்துல ஒரு வீடு இருக்கு அங்க எங்க ஊருக்கு படிப்பிக்க வார வாத்தியாருங்க தங்குவாங்க இப்ப அது சும்மா தான் கிடக்கு நீங்க அங்க தங்கிக்கோங்க நான் காலையில போய் அதெல்லாம் சுத்தம் பண்ணி வச்சுட்டேன் உங்களுக்கு எந்த பிரச்சனையும் வராது..”

“ரொம்ப தேங்க்ஸ் செந்தாழினி அதோட எனக்கு நீ ஒரு ஹெல்ப் பண்ணனும்..”

“சொல்லுங்க சார் செஞ்சுட்டா போச்சு..”

“இந்த ஊரை நான் போட்டோ பிடிக்கணும் அதுக்கு நீ தான் எனக்கு உதவி செய்யணும் இங்க இருக்கிற வித்தியாசமான புதுசா ரொம்ப அழகான இடங்களை நீ எனக்கு கூட்டிக்கொண்டு போய் காட்டினா போதும்…”

“சரிங்க சார்..” என்று கூறிவிட்டு திரும்ப ஆதிரனுக்கென்று ஏற்பாடு செய்த வீடும் அருகில் வந்து விட்டது.

கதவை திறந்துவிட்ட செந்தாழினி,

“சரி இதுதான் நான் சொன்ன வீடு கொஞ்சம் சின்னதா தான் இருக்கும் பார்த்து இருந்துக்கோங்க

மேசை மேல உங்களுடைய இராச்சாப்பாடு வச்சிருக்கேன் எடுத்து மறக்காம சாப்பிடுங்க சார் காலையில நான் ஒரு எட்டு மணி போல வாரேன் எனக்கு காலைல எட்டு மணிக்கு பிறகு தான் உங்களுக்கு ஊரை சுத்தி காட்ட முடியும்

என்னோட வேலை எல்லாம் முடிச்சிட்டு வர எட்டு மணி ஆகும் 8 மணியிலிருந்து ஒரு 11 மணி மட்டும் நான் ஊரை சுத்தி காட்டிட்டு அதுக்கப்புறம் சமைக்க போகணும்

சமைச்சிட்டு வந்து அதுக்கப்புறம் பொழுது சாயம் ஒரு நாலு மணிக்கு திரும்பி உங்களுக்கு சுத்தி காட்டுறேன் நாலு மணியிலிருந்து ஆறு மணி மட்டும் காட்டிட்டு பொழுது சாய்ந்ததும் எனக்கு வேலை இருக்கு சார்

மூணு நேரம் சாப்பாடு உங்களுக்கு தந்துடுறேன் ஆனா அதுக்கு நீங்க எனக்கு காசு தரணும்

வயல் வேலை, பண்ணை வேலை செய்ற இங்கே இருக்கிற கொஞ்ச பேருக்கு நான் சாப்பாடு செஞ்சு சமைச்சு போடுறது தான் என்னுடைய வேலை பெரிய அளவுல காசு கேக்க மாட்டேன் ஒன்னும் யோசிக்காதீங்க

நீங்க என்னோட சாப்பாடு சாப்பிட்டு பாத்துட்டு எவ்வளவு தர முடியும் என்று தோணுதோ அவ்வளவு தாங்க..” என்று செந்தாழினி பணிவாகக் கூற,

“என்ன செந்தாழினி என்ன இப்படி சொல்றீங்க நீங்க எவ்வளவு வேணும்னு சொல்லுங்க நான் தரேன் எனக்கு சாப்பாட்டுக்கு காசு கொடுக்கிறதுல எந்த பிரச்சனையும் இல்லை நான் தரேன் நீங்க எனக்கு இந்த அளவுக்கு உதவி செய்யுறதே பெரிய விஷயம்..”

“அதெல்லாம் ஒன்னும் இல்ல சார் இதெல்லாம் உதவியா  என்னோட வேலையே இதுதான் அதோட பிரகாஷ் அண்ணா எங்களுக்கு எவ்வளவு உதவி செய்திருக்காரு

அவருக்கு உதவி செய்ய நான் கடமைப்பட்டிருக்கிறேன் முதல் முதல் அவரே என்கிட்ட கேட்ட உதவி அதை நான் சரியா செய்து முடிக்கணும்

உங்களுக்கு ஏதாவது வசதி குறைவா இருந்தா எனக்கு சொல்லுங்க நான் செய்து தர முயற்சி பண்றேன்..” என்று கூறிவிட்டு செந்தாழினி உடனே புறப்பட்டு சென்று விட்டாள்.

ஆதிரனும் பயணக் களைப்பால் உணவை உண்டு விட்டு அப்படியே உறங்கியும் விட்டான்.

காலையில் ஏதோ மேளம் அடிக்கும் சத்தம் கேட்க திடுக்கிட்டு எழுந்தவன் அப்போதுதான் கண்களை திறந்து சுற்றும் முற்றும் பார்த்தான்.

என்ன ரொம்ப வித்தியாசமா இருக்குஎ நம்ம ரூம் மாதிரி இல்லையே என்று சிறிது நேரம் கண்களை மூடி யோசித்தவன் அப்போதுதான் பிரகாஷின் கிராமத்துக்கு  வந்திருக்கின்றோம் என்பதை உணர சிறிது நேரம் ஆனது.

கண்களை அழுந்தத் துடைத்துவிட்டு எழுந்து இருந்தவனுக்கு பெட் காஃபி குடித்து பழகியதால் அன்று அதனை ரொம்ப மிஸ் பண்ணினான்.

‘செந்தாழினி மூணு வேளை சாப்பாடு மட்டும் தான் தாரதுன்னு சொன்னால் டீ எல்லாம் கிடைக்காது போல..” என்று எண்ணிக் கொண்டிருக்கும்போது வாசலிலே செந்தாழனியின் குரல் கேட்டது.

எழுந்து வந்து கதவை திறக்க செந்தாழினி புன்னகையுடன்,

“எட்டு மணி ஆயிடுச்சு இன்னும் எழுந்திருக்கலையா சரி சரி வாங்க குளிச்சிட்டு அப்புறமா ஊர சுத்தி பார்க்கப் போவோம்..” என்று கூறும் போது அந்த வழியால் தம்பட்டம் அடித்துக் கொண்டு ஒருவன் சென்றான்.

இந்த தம்பட்டம் அடிப்பவனது பார்வை ஒரு நிமிடம் செந்தாழினி மீதும் ஆதிரன் மீதும் அழுத்தமாக விழுந்தது.

அவனது பார்வையின் வீச்சு மிகவும் கோரமாக இருந்தது.

“இது மேள சத்தம் இல்ல சார் தம்பட்டம் இங்க பஞ்சாயத்து கூட நாங்க இப்படி தம்பட்டம் அடிச்சு ஊர்ல இருக்க எல்லாரையும் கூப்பிடுவோம்

தம்பட்டம் அடிச்சதும் ஏதோ பஞ்சாயத்து நடக்கப்போவது என்று அர்த்தம் 10 மணிக்கு ஊர்ல இருக்க அனைவரும் ஊர் மத்தியில இருக்க ஆல மரத்துக்கு அடியில வந்துடனும்..”

“பஞ்சாயத்தா அப்படின்னா இந்தப் படத்துல காட்டுவாங்க நாட்டாமை தீர்ப்ப மாத்தி எழுதுன்னு அதா..” என்று சரத்குமார் போல குரலை மாற்றி அதே தொனியில் கூற,

செந்தாழினிக்கு சிரிப்பு வந்து விட்டது.

“ஆமாங்க சார் இந்த ஊர்ல யாராவது தப்பு செஞ்சாங்கன்னு சொன்னா பஞ்சாயத்துக்கு அறிவிக்கணும்  

பஞ்சாயத்து சபையில முக்கியமா அஞ்சு பேர் இருக்காங்க அதுல ஒருவர் தான் பண்ணையார்

அவர்தான் எங்க ஊர்ல ரொம்ப பெரிய ஆளு பண்ணையாருக்கு கூடவே  ஊர் பெரிய மனுசங்க நாலு பேர் இருப்பாங்க

அவங்க அஞ்சு பேரும் சேர்ந்து எடுக்கற முடிவுதான் முடிவு முதல் தப்பு என்னனு விசாரிச்சிட்டு அதுக்கப்புறம் அதுக்கு தீர்ப்பு சொல்லுவாங்க அதுக்கு கிராம மக்கள்  ஒத்துழைப்பு தெரிவிச்சா அதுதான் கடைசி தீர்ப்பு அதன்படி தண்டனை வழங்குவாங்க..”

“இன்ட்ரஸ்டிங் படத்துல காட்டறது போல பெரிய மீசை வெச்சு பயங்கரமா தான் இருப்பாங்க போல சரி அத நான் இன்னைக்கு பார்த்தே ஆகணும்..” சிறுபிள்ளை போல ஆர்வத்தில் துள்ளிக் குதித்தான் ஆதிரன்.

பாவம் ஆதிரனுக்குத் தெரியவில்லை அந்த பஞ்சாயத்தால்தான் பெரும் ஆபத்து தனது வாழ்க்கையில் ஏற்படப் போகின்றது என்று…

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.3 / 5. Vote count: 6

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!