21. விஷ்வ மித்ரன்

5
(1)

 விஷ்வ மித்ரன் 

 அத்தியாயம் 21

 

முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருந்த பூர்ணியையே கன்னத்தில் கை வைத்து பாவமாகப் பார்த்திருந்தான் ரோஹன்.

 

“அடியே எதுக்கு மூஞ்ச தொங்க போட்டுட்டு இருக்கே? பார்க்கவே சகிக்கல” என்றவனைக் கண்ணில் கனலுடன் நோக்கி, “எப்படி சகிக்கும்? அதான் ஆபீஸ்ல மூக்கும் முழியுமா சீவி சிங்காரிச்சுக்கிட்டு உன்னோட இருக்காளே சீலா. அவள் தான் உனக்கு தேவதை மாதிரி தெரிவா” என நொடித்துக் கொண்டாள் அவள்.

 

 “பூர்ணிஇஇ” அதட்டலுடன் வந்தது அவன் குரல்.

 

“பார்த்தியா எப்போவும் எனக்கு பூ பூன்னு சொல்லுவ? இப்போ நான் பூர்ணி ஆகிட்டேன்ல?” என்று அதற்கும் கோபம் கொண்டாள்.

 

“ஆமா! இப்போ நீ பூ இல்லை. பூர்ணி! பௌர்ணமி அன்னைக்கு பிரகாசிக்குற பூரண நிலவு டி என் பூக்குட்டி” என்று அவள் தாடை பற்றிக் கொஞ்சினான் ரோஹன்.

 

“சும்மா ஐஸ் வைக்க தேவையில்லை. இவ்வளவு நேரம் என்ன கண்டுக்காம அந்த சிலுக்கு சீலா கூட தானே கடலை போட்டே” இன்னும் சூடு தணியவில்லை ரோஹனின் மனைவிக்கு.

 

“நான் சீலா கூட பேசுனது குற்றமா? உன்ன கண்டுக்காதது குற்றமா?” எனக் கேட்டான்.

 

“கண்டுக்காதது தான்” அவனுக்கு கேட்காதவாறு வாய்க்குள் முனகினாள் அவள்.

 

“ஐ நோ! உன்ன கண்டுக்காததுக்கு தான் இப்படி கோபப்படுறே. உன் கூட பேசவே பயமா இருக்கு. நான் பேசினா நீ ஏடாகூடமா பேசி அதுக்கு நான் கோபத்துல உன்னைக் காயப்படுத்திடுவேனோனு பயப்படுறேன் பூ” உண்மையாகவே வருத்தம் அப்பட்டமாக தெரிந்தது அவனது பேச்சில்.

 

பூர்ணி அவனருகில் சென்று அவனை இடித்துக் கொண்டு அமர, அவனோ தள்ளிச் சென்றான்.

 

“சீலா வந்து இடிச்சுட்டு நின்னாலும் இப்படித்தான் தள்ளி போவியா” என அவள் கிண்டலாகக் கேட்க, முறைத்தவன் அவளை இன்னும் நெருங்கிக் கொண்டே அமர்ந்தான்.

 

“ஒரு பேச்சுக்கு சொன்னா அத சீரியஸா எடுத்துக்கிட்டு வர்ரத பாரு” என்றவளைப் பார்த்து, “இனிமேல் சீலா பற்றி வாய் திறந்த அதுக்கப்புறம் நான் பேசமாட்டேன். உன்ன பேச விடாம பண்ணிடுவேன்” என கூறியவனின் பார்வை அவள் இதழில் படிந்து மீண்டது.

 

அப்பார்வையின் அர்த்தம் உணர்ந்த பெண்ணவளோ உதட்டைப் பற்களுக்கிடையில் சிறைப்படுத்திக் கொள்ள, வெளிவரத் துடித்த புன்னகையை இதழுக்குள் மறைத்துக் கொண்டான் ரோஹி.

 

“நான் ப்ரெக்னன்டா இருக்குறதை பற்றி சொல்லி அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் வார்த்தைகளால வதைச்சிட்டேன். தப்புத் தான்டா. ஆனா அது என் புத்திக்கு புரியலையே. அன்னைக்கு நடந்த சம்பவம் இன்னும் என் கண்ணு முன்னாலே நிக்குது. அது ஞாபகம் வரும் போது கோபத்தை என்னால கண்ட்ரோல் பண்ணிக்க முடியாமல் போகுது. என்னை அறியாமல் உன்னை ஹர்ட் பண்ணிடுறேன்” என்று முகம் வாட்டமுற அவனிடம் வருந்திக் கூறினாள்.

 

“புரியுது மா. நீ வருத்தப்பட்டு என்னையும் வருந்த வைக்கிறது எல்லாத்துக்குமே நான் மட்டும் தான் காரணம். அன்னைக்கு உன்னை நம்பாமல் போயிட்டேன். நான் சுயநலவாதியா நடந்துக்கிட்டேன்ல? இப்போவும் கஷ்டத்தை தான் தந்துட்டு இருக்கேன். உன்னை சந்தோஷமா இருக்க விட்டுட்டு நான் எங்கேயாவது போயிடலாமான்னு கூட தோணுது” என்றவனின் வாயைத் தன் கையால் பொத்தியவாறே எரிக்கும் பார்வையால் சுட்டுப் பொசுக்கினாள் பூரி.

 

“இனிமேல் என்னை விட்டுப் போறேன்னு ஒரு பேச்சுக்கு கூட சொல்லாத ரோஹி. சந்தோசமோ துக்கமோ எதுவா இருந்தாலும் எனக்கு துணையா நீ நிற்கணும். நமக்குள்ள ஆயிரம் கோப தாபங்கள் இருக்கலாம். அதை மத்தவங்க முன்னால வெளிப்படுத்திக்க கூடாது” என்றவள் “அதை விட முக்கியமான விஷயம்! நம்மளோட சண்டை நம்ம பேபியை இந்த விதத்திலும் பாதிக்கவே கூடாது” என உறுதியாகக் கூறினாள்.

 

அவளை இமைக்காமல் பார்த்துவிட்டு “எப்போ தான் உன் கோபம் இல்லாம போகும் பூ?” எனக் கேட்டிருந்தான்.

 

“அய் டோன்ட் நோ! அது இப்போவா நாளைக்கா இல்ல எப்போன்னு சொல்ல தெரியல. ஏன் வாழ்நாள் பூராவும் கூட கோபம் மறையாமலே இருக்கலாம்” என தோலைக் குலுக்க,

 

நெஞ்சில் கை வைத்து “என்னடி இப்படி அசால்டா சொல்லிட்டே? உனக்கு என்ன கஷ்டம்? எனக்கு தான் எல்லா கஷ்ட நஷ்டமும்” என பாவமாக சொன்னான்.

 

“உனக்கு என்னடா கஷ்ட நஷ்டம்?” புரியாமல் கேட்டாள்.

 

“இப்போவே பார்க்க தவிக்குற கண்ணையும், உன்னை அணைக்கத் துடிக்குற கையையும் வச்சுக்கிட்டு படாத பாடு படறேன். இதுல வாழ்நாள் பூரா ரொமான்ஸ் பண்ணாம நான் எப்படி இருக்க போறேனோ? கடவுளே ஏன் தான் என்னை இப்படி சோதிக்குறே” என கைகளை மேலே உயர்த்தி பெருமூச்சு விட்டான் ரோஹன்.

 

“ரொமான்ஸ் பண்ண முடியாதுங்கிறது தான் ஐயாவோட பெரிய கவலையா?” பக்கென சிரித்தாள்.

 

“பூ…!! என் பீலிங்ஸ் உனக்கு விளையாட்டா போச்சு இல்ல” என்று அவன் முகத்தைத் திருப்பிக் கொள்ள, “எப்போ கோபம் போகும்னு தெரியலனு தான் சொன்னேன். ரொமான்ஸ் பண்ண கூடாதுன்னு யார் சொன்னா?” சாதாரணமாக வினவிட சடாரென திரும்பி அவளைப் பார்த்தான் அவன்.

 

“அப்படின்னா பண்ணலாமா?” என கண்கள் பளிச்சிட கேட்க, “அதைத் தானே டா சொன்னேன்” என்றாள்.

 

“அப்போ பண்ணிட்டா போச்சு” என குதூகலித்தவன் சற்றும் எதிர்பாராத விதமாக அவளது பட்டுக் கன்னத்தில் பச்சக்கென முத்தமிட்டான்.

 

கண்களை அகல விரித்து நோக்கி “என்னடா இப்படி பொசுக்குனு கிஸ் பண்ணிட்ட? சும்மா சொன்னேன் அதுக்கு இந்த ஸ்பீட்லயா கிஸ் பண்ணுவே?” என முறைப்போடு பார்த்தாள் மங்கை.

 

“என் பொண்ணுக்கு கிஸ் பண்ண அனுமதி வேண்டித்தான் காத்திருந்தேன். நீ ஓகே சொல்லிட்டே. அவளுக்கு முதல்ல கிஸ் பண்ணினா என் பொண்ணோட அம்மா கோச்சுக்குவான்னு தான் அவளுக்கு ஃபஸ்ட் பண்ணினேன்” என நீளமாக விளக்கமளித்தான் ரோஹி.

 

“பொண்ணு இல்ல. பையன் தான் எனக்கு வேணும்” என முறுக்கிக் கொண்டாள் அவள்.

 

“இல்ல பொண்ணு தான் வேணும். என் பூ மாதிரி அழகா குட்டியா கியூட்டா பொண்ணு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்” பிறக்கப் போகும் தனது உயிர் மீதான பாசம் அவனிடம் வெளிப்பட்டது.

 

“சரி சரி என்னவோ ஒன்னு. அப்படியே பொண்ணு வந்தாலும் நீ என்னை விட அவ மேல தான் பாசம் காட்டுவியா?” விட்டால் அழுது விடுவது போல் கேட்டாள் பூர்ணி.

 

அவளது கன்னங்களைத் தன் கைகளால் தாங்கி “என்னடி இது? ஒன்னு இல்ல பத்து குழந்தைங்க வந்தாலும் எனக்கு நீ தான் முதல் குழந்தை! எப்போவும் எனக்கு நீ தான் ஃபர்ஸ்ட் அண்ட் பெஸ்ட் ஓகேவா” எனக் காதலுடன் மொழிந்தான்.

 

மெல்ல தலையாட்டியவள் அவன் மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள். நெடு நாட்களுக்குப் பிறகு தன் நெஞ்சத்தை மஞ்சமாக்கி தஞ்சம் புகுந்திருக்கும் வஞ்சியை மனம் நிறைய பார்த்துக் கொண்டிருந்தான் ரோஹன்.

 

தலையைத் தூக்கி அவனைப் பார்த்து “ரோஹி பசிக்குதுடா” என்க, “வா சாப்பிடலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு சென்றான்.

 

அவளோ சாப்பிடாமல் அவனையே பார்த்துக் கொண்டிருக்க “என்ன பார்க்குற? சாப்பிடு மா” என்று விட்டு தானும் சாப்பிட ஆயத்தமானான்.

 

“ஒரு பேச்சுக்கு கூட ஊட்டி விடவான்னு கேட்குறானா பாரு” என மனதில் நினைத்துக் கொள்ள அவன் கரம் அவள் முன் நீண்டிருந்தது.

 

பூர்ணி அவனை ஆச்சரியமாக ஏறிட “சாப்பிடு பூ” என ஊட்டி விட்டான்.

 

தன் மனதில் நினைப்பதை நிறைவேற்றி வைக்கும் ரோஹனை அன்பு கனியப் பார்த்தவாறு சாப்பிட்டாள் பூர்ணி.

 

………………

 

மித்ரனின் சிறு வயது ஃபோட்டோவைப் பார்த்துக் கொண்டிருந்தாள் அக்ஷரா.

 

 “ஹேய் பேபி அருள்! பாரேன் எவ்வளவு க்யூட்டா இருக்க. உன் கன்னத்தைக் கிள்ளி விடனும் போல இருக்கு டா. நீ எனக்கு ஹபியா வரப் போறேன்னு சின்ன வயசுலயே தெரிஞ்சு இருக்குமோ தெரியல!? அதனால தான் நான் அன்னைக்கு உன்ன அண்ணன்னு கூப்பிடவே முடியல” என்று அந்த போட்டோவைக் கொஞ்சினாள் அருளின் அம்முலு.

 

“இன்னும் கொஞ்ச நாள் தான். அப்புறம் என் அருள் கூடவே நான் இருப்பேன். நினைக்கும் போது ஹேப்பியா இருக்கு” அவள் முகம் மகிழ்வில் ஜொலித்தது.

 

திடீரென அலைபேசி அலற தெரியாத நம்பரில் இருந்து அழைப்பு வந்திருக்க புருவ முடிச்சுடனே ஆன்ஸ்வர் செய்தாள்.

 

“ஹலோ” என்க, மறுபக்கத்தில் வெடிச்சிரிப்பொலி கேட்டது.

 

“ஹலோ யாரது? கால் பண்ணிட்டு லூசுத்தனமா சிரிக்கிறது” என்று கேட்க, சிரிப்பு அடங்கிப் போய் “ஏய்ய்” என்ற கர்ஜனை வெளிப்பட்டது.

 

“யாரைப் பார்த்து டி லூசுன்னு சொல்கிறே? இப்போ நான் சொல்றதை கேட்டு நீ தான் பித்து பிடிச்சு லூசுத்தனமா பிஹேவ் பண்ண போறே” என்று கோபமாக சொல்ல, “யாரு நீ? முதல்ல நான் யாருன்னு தெரியுமா உனக்கு” காட்டமாக வினவினாள் அக்ஷரா.

 

“எஸ் அப்கோர்ஸ்! நீ அக்ஷரா சிவகுமார். இன்னும் கொஞ்ச நாள்ல மிஸ்ஸஸ் அக்ஷரா அருள்மித்ரனா பதவி ஏற்கப் போறே. அண்ட் விஷ்வஜித்தோட செல்ல தங்கச்சி. இந்த டீடேல்ஸ் போதுமா. இல்ல இன்னும் கொஞ்சம் சொல்லட்டா” என்று நக்கலாக அந்தப் பக்கத்தில் குரல் எழும்பியது.

 

அந்தக் குரலில் இருந்த கம்பீரம் அக்ஷராவின் வயிற்றில் பயப்பந்தினை உருள வைத்தது.

 

“யா…யார் நீங்க? என்ன பற்றி எப்படி எல்லாம் தெரியும்”

 

“அத சொல்ல முடியாது அக்ஷும்மா”

 

“உனக்கு என்ன வேணும்?” 

 

“அட கரெக்டா பாயின்ட்ட பிடிச்சு கேட்டுட்டியே. உன் புத்திசாலித்தனத்தை பாராட்டியே ஆகணும் செல்லம்” என்றதில் அவளுக்கு ஏகத்துக்கும் எகிறியது.

 

“சும்மா வள வளக்காம எதுக்கு கால் பண்ணனு சொல்லித் தொலை” எரிச்சலான குரலில் சொன்னாள் அக்ஷரா.

 

“அச்சோ கோச்சுக்கிட்டியா பேபி? எனக்கு என்ன வேணும்னு தெரியுமா? எனக்கு நீ தான் வேணும், வாழ்க்கை பூராவும்”

 

“ஹேய்! பார்த்து பேசு” உடல் நடுங்கக் கத்தினாள் மெல்லியவள்.

 

“ஸ்ஸ்! சவுண்ட கம்மி பண்ணிக்க டி.ஓஓ வாழ்க்கை பூரான்னு சொன்னதும் கோபம் வருதா? அப்போ பரவால்ல ஜஸ்ட் ஒரு நாள் என் கூட வா. அதுக்கு பிறகு நீ ஆசைப்பட்ட உன் காதலன் கூடவே இரு” காமுகனின் இவ்வார்த்தைகள் நாராசமாய்ப் பாய்ந்தன, அக்ஷுவின் செவிகளில்.

 

“ச்சீ வெட்கமா இல்ல உனக்கு? நீ எல்லாம் என்ன ஜென்மமோ” ஆத்திரத்தில் உதடு துடிக்கக் கூறினாள்.

 

“நான் என்ன பண்றது பேபிமா? உன்னைப் பார்த்ததுல தடால்னு விழுந்துட்டேன். அப்புறம் இன்னொரு விஷயம் சொல்லட்டா உன் அண்ணனும் உன் ஆருயிர்க் காதலனும் என்னோட பரம எதிரிங்க. சோ நான் உன் கிட்ட பேசுனது ஏதாவது அவனுங்க காதுக்கு போச்சு, முதல்ல உன் அண்ணனோட உசுரு தான் போகும். மைண்ட் இட்! என்ன இருந்தாலும் உயிர் நண்பன் போனதுக்கு பின்னால அந்த மித்து பயலும் தற்கொலை பண்ணிக்க தான் போறான். அவன் எதுக்கு வீணா தற்கொலை பண்ணனும்? அவனையும் நானே க்ளோஸ் பண்ணிடறேன் ஓகே? மறுபடியும் நேர்ல சந்திக்கலாம். பை பை டியர்” என கட் செய்துவிட்டான். அவன் தர்ஷன்!

 

குழப்பமும் வேதனையும் நிறைந்த மன நிலையில் இருந்தாள் அக்ஷரா. இதை யாரிடமும் சொல்லவே கூடாது என நினைத்துக் கொண்டவள் அறியவில்லை இதுவே தனது குடும்பத்திற்கு ஆபத்தாக முடியப் போகிறது என்று.

 

……………..

 

கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்த விஷ்வாவின் எண்ணங்களை அவனது இதய ராணி திருடிச் சென்றிருந்தாள். அவளைப் பற்றியே அவனது நினைவுகள் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தன.

 

ஃபோனை எடுத்து வாட்ஸ்அப்பில் போட்டிருந்த போட்டோவைப் பார்த்தான். நாக்கைத் துருத்திக் கொண்டு போஸ் கொடுத்திருந்தாள் அவள். அவளது முகத்தை விஷ்வாவின் விரல்கள் ஆசையுடன் வருடிக் கொடுத்தன.

 

கூடவே இதழ்களும் “நவி” என கொஞ்சித் தீர்த்தன.

 

“ஹாய்” என்று அவளது நம்பரில் இருந்து மெசேஜ் வர, அவன் உதட்டில் புன்னகை தானாகவே ஒட்டிக் கொண்டது.

 

“ஹாய் நவி மா” என பதில் அனுப்பியவனுக்கு அவளைப் பார்க்க ஆவல் கிளர்ந்தெழ “வீடியோ கால் எடுக்கவா?” என்று கேட்க,

 

“வேணாம் விஷ்வா” உடனடியாக மறுப்பு வந்தது.

 

“ஏன்டி?” பாவமான முகம் ஒன்றை அனுப்பினான்.

 

“ஐயோ! நான் யார் கூடவும் வீடியோ கால் பேசுனதே இல்லப்பா. எனக்கு பழக்கம் இல்ல. ஏதோ மாதிரி இருக்கு” என்றாள் வைஷு.

 

“சரி” என்று முகத்தை தொங்கப்போடும் ஸ்மைலியை சென்ட் பண்ணான்.

 

அவளுக்கு ஏதோ மாதிரி ஆனது போலும், “ஓகே கால் பண்ணுங்க” என சொல்லி விட்டாள்.

 

இனி என்ன? பியூஸ் போன பல்பு போல் இருந்த முகம், தௌஸன்ட் வாட்ஸ் பிரகாசத்துடன் ஒளிர்ந்தது.

 

உடனே வீடியோ கால் பண்ண, அவளோ ஒரு கையால் முகத்தை மறைத்துக் கொண்டாள். 

 

“அடியே முகத்தைக் காட்டு டி” என்ன விஷு கடுப்பாக, கையை அகற்றி நாணத்துடன் அவனைப் பார்த்தாள்.

 

அவளை விழுங்கும் பார்வை பார்த்து “லேசா சிரிக்குற வைஷு, கடுப்பாகுற வைஷு, கோபப்படுற வைஷுவ எல்லாம் பார்த்திருக்கேன். ஆனா வெட்கப்பட்டு நிற்குற வைஷுவ இன்னிக்கு தான் பார்க்குறேன் சோ க்யூட்” என சிரித்தான் விஷ்வா.

 

விழி விரித்து “என்ன என்ன? நான் வெட்கப்பட்டேனா? அதுக்கு சான்ஸே இல்ல” என்றாள்.

 

விஷ்வா “அப்படியா? நீ வெக்கப்படவே மாட்டேன்னு சொல்லுறியா” எனக் கேட்க, “ஆமாங்குறேன்” என்று தலையாட்டினாள் வைஷு.

 

“அட ஆமால்ல! ஆம்பளைங்களுக்கு எனக்கு எப்படி வெட்கம் வரும்?” என்று அவன் யோசிப்பது போல் செய்கை செய்ய, “டேய் என்னை பார்த்தா ஆம்பளை மாதிரி விளங்குதா. கிட்ட இருந்தன்னு வை நடக்குறதே வேற” காண்டாகினாள் வைஷ்ணவி.

 

“எஸ் எஸ்! கிட்டிருந்தா வேற மாதிரி தான் நடக்கும்” என உதடு குவித்துக் காட்டினான்.

 

“ஒரு நாளைக்கு அந்த உதட்டுல பச்சை மிளகாயை வைத்து தேய்ச்சு விடுறேன் பாருங்க. அம்மா எரியுதே எரியுதேன்னு கத்திட்டு ஓட வைக்கல என் பேரு வைஷ்ணவி இல்ல” என கையைப் பொத்திக் குத்துவது போல் பாவனை செய்தாள்.

 

“உன் பெயர் வைஷ்ணவி இல்ல மிளகாப் பொடி. அதனால தான் எப்போவுமே காரமா இருக்க” 

 

“என்ன மிளகாப் பொடியா மாற்றுவதே நீ தான்டா டுபுக்கூ. இல்லன்னா நான் சீனி மாதிரி இனிப்பா இருப்பேன” என மிதப்பாக சொன்னவளுக்கு மரியாதை தூரப் பறந்தது.

 

“அய்யய்யே! சீனி மாதிரி இருந்துடாதே. எறும்புலாம் உன்னை தேடி வந்துரும். அப்புறம் ஐயோ கடிக்குதே குத்துதேனு சொறிஞ்சுட்டு திரிவ” அடக்கப்பட்ட சிரிப்புடன் கூறினான் ஆடவன்.

 

“கொழுப்புடா உனக்கு” என முறைத்துப் பார்த்தாள் அவள்.

 

விஷ்வா “நீ அன்னைக்கு ஒரு கேள்வி கேட்டீல. அதையே நான் கேட்டா உன் பதில் என்னவாயிருக்கும்?”

 

அவனது கேள்வியில் நிமிர்ந்து அவன் விழிகளை தன் மான் விழிகளால் நேராகப் பார்த்தாள் வைஷ்ணவி.

 

“நீங்க சொன்ன அதே பதில் தான் எனக்கும். நான் அறிந்த ஆண்கள் மூன்றே மூணு பேர். அண்ணா, அப்பா இவங்களோட அன்பும் ஸ்பரிசத்தையும் விட உங்களோட அன்பும் நெருக்கமும் புதுசா இருக்கு. நீங்க கிண்டலடிக்குறது, உங்க கூட ஜாலியா சண்டை போடறது எல்லாமே புடிச்சிருக்கு. இந்த உணர்வுக்குப் பெயர் தெரியல” என பதில் கொடுத்தாள் அவள்.

 

“எனக்கும் அந்த உணர்வுக்குப் பெயர் தெரியல. காதல் வந்தாலும் இப்படித்தான் இருக்கும்னு அக்ஷு சொன்னா. ஒரு வேளை இது காதலா இருக்குமா?” என நாடியில் விரலைத் தட்டி யோசிக்கலானான் விஷ்வா.

 

“இப்படி எல்லாம் குழப்பம் இருக்கக் கூடாது விஷ்வா. காதலா இருக்குமானு உங்களுக்கே டவுட்? இது காதல் கிடையாது. நான் இல்லாமல் உங்களால இருக்க முடியாது, நான் இல்லன்னு தெரிஞ்சு திக்கு தெரியாம பிரம்மை புடிச்ச மாதிரி எதையுமே சிந்திக்குற திறனை இழந்து நின்னா அது தான் காதல். அப்படியும் இல்லனா வைஷ்ணவிய நான் காதலிக்கிறேன்னு மனசு உங்க கிட்ட எந்த வித குழப்பமுமே இல்லாமல் உறுதியா சொல்லுச்சுனா அப்போ வந்து என் கிட்ட லவ்வ சொல்லுங்க” என விளக்கமாக எடுத்துரைத்தாள் வைஷு.

 

“அட்ரா சக்கை! நீ சொல்லுறத பார்த்தா லவ்வுல ரொம்ப எக்ஸ்பீரியன்ஸ் இருக்குற மாதிரி தோணுதே” என்றான்.

 

“இதைச் சொல்ல எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. ஆசிரமத்துல இருக்கும் போதெல்லாம் நிறைய ஸ்டோரி புக் ரீட் பண்ணுவேன். அதை வெச்சு தான் சொன்னேன். நீங்க சொல்றத பார்த்தா நான் என்னவோ பத்து லவ் பண்ணி காதல் சாகரத்துல மூழ்கிட்டு வந்த மாதிரில்ல இருக்கு” என கண்களை உருட்டிக் கூற, அவளது விழிகளின் அலைபாய்தலை ரசித்தான்.

 

வைஷு “பட்! நீங்க நினைச்சதுல ஒரு சின்ன விஷயம் உண்மையா இருக்கு. அது என்னனா எனக்கு ஆசிரமத்தில் இருக்கும் போது ஒரு பையன் மேல செம லவ்” என்க, அவள் வார்த்தைகளில் அதிர்ந்து பார்த்தான் விஷ்வா.

 

‘உன் முதல் காதல் நானா இருக்கனும்னு ஆசைப்பட்டேன் நவி! ஏண்டி இப்படி சொன்ன?’ என மனதினுள் புலம்பினான் காளை.

 

“விஷ்வா கேக்குதா?” என்று அவள் முகத்தின் முன்னால் கையை ஆட்டிட, “ம்ம்” சுரத்தையற்ற குரலில் சொன்னான்.

 

“அவன் பெயர் பாலு! எனக்கு மட்டும் புஜ்ஜி. எப்போவுமே பேபி பேபினு என் கூடவே சுற்றிட்டு இருப்பான்”

 

“அவன் உன் வாலா முந்தானைய புடிச்சுட்டு சுத்துறதுக்கு” இது விஷ்வாவின் மைண்ட் வாய்ஸ்.

 

“நான் சாப்பிட்டால் எனக்கு ஊட்டி விடுவான். நான் ஊட்டி விட்டா தான் அவனும் சாப்பிடுவான். சாப்பிட்டுட்டு முடிச்சு எனக்கு கிஸ் பண்ணாம போகவே மாட்டான்” என கண்களில் கனவு மின்னக் கூறினாள் அவள்.

 

“என்னாதூ? கிஸ்ஸா” என அதிர்ந்தவனுக்கு மனதில் எதுவோ மாற்றம் உருவானது.

 

“அங்கேயே இருந்திருக்க வேண்டியது தானே. புஜ்ஜி கூட பஜ்ஜி சாப்பிட்டு கொஞ்சிட்டு இருந்திருக்கலாமே” என கோபமாகக் கேட்டான் விஷ்வா.

 

“அவன் வீட்டுல வந்து தங்க சொல்லி ரொம்ப அழுதான். நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டேன். பாவம் என் பட்டுக்குட்டி என்ன பண்ணுறானோ” என்று பெருமூச்சு விட்டாள் வைஷ்ணவி.

 

அவளையே பார்த்திருந்து விட்டு “நீ உன் புஜ்ஜிய மிஸ் பண்ணுறியா?” கடினமான குரல் அவனிடம்.

 

“ம்ம் ரொம்ப! அதை விட அவனோட கிஸ்ஸ மிஸ் பண்ணுறேன். ஐ மிஸ் ஹிம் அலொட்” கவலையும் ஏக்கமாக கூறி முடித்தாள் வைஷு.

 

“யார் அந்த புஜ்ஜி? என் நவிக்கு நீ தான் கிஸ் பண்ணுவியா? ஒரு நாளைக்கு உன்னை ஏதாவது பண்ணாம விடமாட்டேன் டா தீவெட்டித் தலையா” என கருவிக் கொண்டான் அவன்.

 

“அவனை மிஸ் பண்ணுறேனா அவன் மடியில சாய்ந்து கொஞ்ச வேண்டியது தானே? எதுக்கு என் கூட பேசிட்டு இருக்க?” சுருதி ஏறியது விஷ்வாவின் பேச்சில்.

 

“நான் எப்படி அவன் மடியில சாஞ்சுக்க முடியும்? அவன் தான் என் மடியில் இருப்பான். எவ்வளவு சமத்து தெரியுமா என் புஜ்ஜிக் குட்டி” என்று செல்லம் கொஞ்சி எதிரில் இருப்பவனின் பிபியை எகிற வைத்தாள்.

 

“என்ன கன்றாவி இது? அவன் தான் உன் மடியில உட்காருவானா?” என முகம் சுளித்தான்.

 

“ஆமா! அவனும் நானும் சேர்ந்து நிறையா சாக்லேட் சாப்பிடுவோம் தெரியுமா. அவன பார்க்கலனா எனக்கு தூக்கமே வராது” என்றவளைப் பார்த்து “ஓ அப்படியா? அவன கூடவே வச்சுக்க வேண்டியது தானே” என கடுப்படித்தான் விஷு.

 

“அவனை என் கூடவே வச்சுக்க முடியாது. நைட்டுக்கு அம்மாவ தேடி அழுவான்ல”

 

“என்னது? நைட்டுக்கு அம்மாவை தேட அவன் பாப்பாவா?” என்று வினவினான் அவன்.

 

“எஸ். எல் கேஜி பாப்பானா அப்படித்தானே. நாலு வயசு என் புஜ்ஜிக்கு” என மெலிதாக இதழ் பிரித்தாள் வைஷு.

 

“வாட்? எல்கேஜியா? அவன் உன் லவ்வர் இல்லையா” என மெதுவாகக் கேட்க, அவனின் முகபாவனைகளைக் கண்டு இதுவரை கடினப்பட்டு அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெடித்துச் சிதற விட்டாள் அவள்.

 

“ஆமாடா மக்கு விஷ்வா. எங்க ஆச்சிரமத்துல இருக்கிற மேமோட மகன் தான் புஜ்ஜி. எப்போவும் என் கூடத்தான் இருப்பான்” என சிரிப்பினூடே சொல்ல,

 

“கேடி கேடி..! நீ சொன்னது உண்மைன்னு நினைச்சு எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா. சரியான தில்லாலங்கடி நீ” என்றவனுக்கும் சிரிப்புதான் வந்தது, தன்னை நினைத்து.

 

“ஹா ஹா அது தானே எனக்கும் வேணும். எத்தனை வாட்டி என்ன கடுப்பாக்கி இருப்ப. எல்லாத்துக்கும் சேர்த்து வைத்து இன்னைக்கு பெருசா செஞ்சுட்டேன்ல” என நாக்கைத் துருத்தி அழகு காட்டினாள் வைஷு.

 

“போடி லூசு” என்று அவன் செல்லமாக முறைக்க, அவளோ “இந்த லூசால லூசான நீங்க அரைலூசு” என்க, “என்னை அரை லூசுன்னுட்டு நீ முழு லூசுனு ஒத்துக்கிட்டியே அது வரை சந்தோஷம்” என்றவனின் இதழில் முறுவல் தவழ்ந்தது.

 

என்றும் போல் அவனது சிரிப்பில் மயங்கி, தானும் புன்னகைத்தாள் வைஷு.

 

“அப்பப்பா என்னை சிரிச்சே மயக்குறியே டா. சிரிக்காத சிரிக்காத சிரிப்பாலே மயக்காத’னு நானும் பாடிடப் போறேன்” என மனதினுள் சிரித்துக் கொண்டாள்.

 

“நவி ஒன்னு சொல்லட்டா?” என அவன் புருவம் உயர்த்திட, “சொல்லுங்க” என அனுமதி கொடுத்தாள்.

 

“உன்ன மாதிரி உன் மனசும், செயல்களும் ரொம்ப அழகு” என்று ரசனையுடன் கூறினான் வேங்கை.

 

“ஆஹான்…!! நானும் ஒன்னு சொல்லவா?” என்றவள் அழகாக இதழ் விரித்து “ஐ லைக் யூ டூ விஷு” என்று சிரித்தாள்.

 

அவனோ அவளைப் பார்த்து இதழ் குவிக்கப் போக அதை உணர்ந்தவளோ கள்ளச் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தாள்.

 

“கள்ளி” என்று சொல்லி மந்தகாசப் புன்னகையைச் சிந்தினான் விஷ்வஜித்!

 

நட்பு தொடரும்………!!

 

✒️ ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!