23. விஷ்வ மித்ரன்

5
(1)

 விஷ்வ மித்ரன் 

 

அத்தியாயம் 23

 

பைக்கில் ரவுண்ட்ஸ் போய் களிப்புடன் மித்துவின் வீட்டை அடைந்த நண்பர்களை வரவேற்றது வைஷ்ணவி காணாமல் போய் விட்டாள் என்ற அதிர்ச்சியான தகவல்!

 

தலையில் கை வைத்து அமர்ந்திருந்த ஹரிஷின் இரு புறமும் ஓடிச் சென்று உட்கார்ந்தனர் இருவரும்.

 

மித்து “டாடி! என்ன சொல்லுறீங்க? வைஷு இல்லையா? அவள் எங்க தான் போனாள் அதுவும் இந்த டைம்ல” படபடப்புடன் கேட்டான்.

 

“மனசு சரியில்லைப்பா கோயில் வரைக்கும் போயிட்டு வரேன்னு கால் பண்ணுனா. நானும் சரிடா பத்திரமா போயிட்டு வான்னு சொன்னேன். ஆனா ஃபோர் ஹவர்ஸ் ஆகியும் வீட்ட வரல. எனக்கு என்னமோ பயமா இருக்கு டா” தளர்ந்து போய் நின்றார் ஹரிஷ்.

 

விஷ்வாவோ சிலையென உறைந்து போயிருந்தான்.

 

மித்ரனின் ஸ்பரிசத்தில் விலுக்கென தலையை உயர்த்திக் கொண்டு “அப்பா வைஷுவுக்கு எதுவும் ஆகி இருக்காது. நானும் மித்துவும் போய் அவளை எப்படியாவது தேடி கூட்டி வருவோம். நீங்க பயப்படாம இருங்க” என ஹரிஷை ஆறுதல் படுத்திவிட்டு நண்பனுக்கு கண்ணைக் காட்டினான்.

 

அவனும் தலையசைப்புடன் செல்ல, விஷ்வா பைக்கை ஸ்டார்ட் செய்தான். கோவிலில் ஒரு இடம் விடாமல் தேடிக் களைத்துப் போயினர்.

 

கோயில் தெருவிலும் கூட திக்குத் தெரியாமல் அலைந்தும் கிடைத்த பலன் என்னவோ பூஜ்ஜியம் தான்!

 

“நவி எங்கடி இருக்க? ப்ளீஸ் சீக்கிரம் வந்துரு டி. என் கூட சண்டை போட வர மாட்டியா?” தன்னவளிடம் மனதினுள் கதறிக் கொண்டே அங்கும் இங்கும் ஓடினான் விஷ்வா.

 

“பாப்பா எங்கடா இருக்கே?” தலையை அழுந்தக் கோதி விட்டுக் கொண்டான் மித்து.

 

சிசிடிவி ஃபுட் ஏஜ் கூட அந்த தெருவில் இல்லாமல் போனது இவர்களின் துரதிஷ்டம் தான். இரவு பத்து மணியையும் நெருங்கி விட்டது.

 

விஷ்வாவின் இதயம் ஓடும் ரயிலாக தட தடத்திட, பஸ் ஸ்டாண்டில் அப்படியே அமர்ந்து கொண்டவனது நிலையைக் கண்டு திகைத்துத் தான் போனான் தோழன்.

 

“மாப்ள” என்றவாறு அவனிடம் ஓடிச் சென்று முட்டி போட்டு அமர்ந்து கொள்ள, அவனோ எங்கோ வெறித்திருந்தான்.

 

“டேய் என்னாச்சு டா?முதல்ல எந்திரி விஷு. உன்னை இப்படி பார்க்க முடியல” என்று அவனைப் போட்டு உலுக்க, எதையுமே உணராத நிலையில் இருந்த விஷ்வாவின் காதில் “நான் இல்லன்னு தெரிஞ்சுக்கு திக்கு தெரியாம பிரம்மை புடிச்ச மாதிரி நின்னா…!! எதையும் சிந்திக்கிற சக்தியை இழந்து துடிச்சா அது காதல்” என்ற வைஷ்ணவியின் வார்த்தைகளே எதிரொலித்ததன.

 

“அ…அப்போ நான் நவியை காதலிக்கிறேனா? அய்யோ இப்படி ஒரு சூழ்நிலைலயா நான் இதை உணரனும்? நவிமா என்ன விட்டு எங்கே போயிட்ட?” என்று தவித்துப் போனான் அவன்.

 

“விஷா ஒன்னும் பயப்படாத. நம்ம வைஷு கண்டிப்பா கிடைச்சுருவா. அவளுக்கு எதுவும் ஆகிருக்காது” என்றவன் தனக்கும் சேர்த்தே ஆறுதல் சொல்லிக் கொண்டான்.

 

“மித்து எனக்கு பயமா இருக்கு டா. வைஷுக்கு மனசு சரியில்லாம இருந்திருக்கு. எனக்கும் கூட ஏதோ தப்பு நடக்க போற மாதிரி பீல் ஆச்சுல்ல?” உள்ளம் வெட வெடத்தது விஷ்வாவிற்கு.

 

“அப்படி தோணுனா தப்பு நடக்கும்னு அர்த்தம் இல்லல. நீ மனசைப் போட்டு குழப்பிக்காத. நல்லதே நடக்கும்” என்று அவன் தோளை தட்டிக் கொடுத்தான் மித்து.

 

ஏதோ யோசிப்பதும் “வைஷு கண்டிப்பா கிடைச்சிடுவாள் தானே?” என்று கேட்பதுமாக இருந்த அவன் நிலையில் தவித்துப் போகலானான் நண்பனும்.

 

“அவள் எங்கேயும் போயிருக்க வாய்ப்பில்லை. அப்படின்னா என்ன ஆனா? யாராவது கடத்தி இருப்பாங்களா?” பல கோணங்களில் விஷு யோசிக்க,

 

“அப்படி கடத்துற அளவுக்கு நமக்கு யாருடா எதிரி?” என சொன்ன மித்ரனுக்கு தர்ஷனின் நினைவு கிஞ்சித்தும் வராமல் தான் போயிற்று.

 

ஜீவன் இன்றி எதையோ பறி கொடுத்தது போல் இருந்த விஷ்வாவின் மனம் நொடிக்கு ஒரு தரம் “நவி நவி” என்று அவள் பெயர் சொல்லி துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தது.

 

…..………………..

எங்கும் கும்மிருட்டு! கதிரையில் கை கால்கள் கட்டப்பட்டு மயக்கத்தில் இருந்த வைஷ்ணவிக்கு மெல்ல மெல்ல சுயநினைவு திரும்ப ஆரம்பித்திருந்தது.

 

மங்கலாக இருந்த கண்களை இறுக மூடித் திறந்தவளுக்கு தான் இருக்கும் இடம் வீடல்ல என்பது புரிய வேகமாக யோசிக்கத் துவங்கினாள்.

 

கோயிலுக்கு செல்லும் வழியில் ஒருவன் வழி மறித்ததும் மற்றொருவன் பின்னால் இருந்து கர்ஷிப்பை முகத்தில் வைத்து அழுத்தியதும் நினைவில் உதித்தது.

 

“யார் என்ன கடத்தி இருப்பாங்க? ஐயோ” உள்ளம் பதறத் துவங்கியது.

 

அவளுக்கு கையை அசைக்கக் கூட முடியாது இறுக்கமாக கட்டப்பட்டிருக்க “விஷு! என்ன காப்பாற்று! அண்ணா வாங்க ணா” அண்ணனையும் விஷ்வாவையும் நினைத்தாள் அவள்.

 

அந்நேரம் கொல்லென்ற பேய்ச்சிரிப்பு அவள் செவிப்பறையைக் கிழிக்கும் அளவிற்கு கேட்க, பயத்தில் கை கால்கள் சில்லிட்டன. இருளில் எதுவுமே கண்ணுக்கு புலப்படாமல் இருக்க, சட்டெனு எங்கும் ஒளி சூழ்ந்தது

 

அவள் முன்னால் கோரச் சிரிப்புடன் நின்றிருந்தான் தர்ஷன். யார் என்றே தெரியாத ஒரு ஆடவனைக் காணவும் அதிர்ந்து போனாள் வைஷ்ணவி.

 

“விஷ்வாவின் அருமைக் காதலியும், மித்ரனின் பாசமிகு தங்கையுமான வைஷ்ணவியை எனது கோட்டைக்கு மனம் நிறைய வருக வருகவென வரவேற்கிறேன்” கைகளை விரித்து அவளை வரவேற்க,

 

“யார் நீங்க? என்னை எப்படி தெரியும்?” என்று நடுக்கத்துடன் வினவினாள் அவள்.

 

“நிச்சயம் சொல்லியே ஆகனுமா டியர்? நான் தான் விஷ்வா அன்ட் மித்ரனோட எனிமி! அவங்க லைஃப்ல வில்லன்னா அது இந்த தர்ஷன் மட்டும் தான். உன்னுடைய ஹீரோ என்ன பற்றி சொல்லி இருக்க மாட்டான் தானே?” கேலியாக உதடு வளைத்தான் தர்ஷன்.

 

அவன் சொன்ன வார்த்தைகளில் சகலமும் உறைந்தது பாவைக்கு. விஷ்வா மித்ரனுக்காக தன்னை கடத்தி இருக்கின்றான். கடத்தியதன் காரணம் தான் என்னவாக இருக்கும் என யோசித்தவளுக்கு சினிமாக்களில் தோன்றும் சில தகாத காட்சிகள் சிந்தையில் வரவும் தவித்துப் போனாள்.

 

“முருகா இந்த படுபாவி என்னை ஏதாச்சும் பண்ணிடுவானா? என்னால தாங்க முடியலையே? நான் செத்தாலும் விஷ்வாவுக்கு மட்டும் தான்” என்று மனதினுள் உறுதி எடுத்துக் கொண்டாள்.

 

“என்னை எதுக்காக கடத்திட்டு வந்தே?” எச்சில் கூட்டி விழுங்கிக் கொண்டே பயத்தை மறைத்துக் கொண்டு கேட்கலானாள் வைஷு.

 

“உன்னால எனக்கு ஒரு காரியமாக வேண்டியிருக்கு பேபி…!! என்னன்னு கேட்கிறியா அதையும் நானே சொல்லிடறேன். நான் ஒரு பொண்ண பார்ட்டில வெச்சு பார்த்தேன். அவளை பார்த்த உடனே புடிச்சு போச்சு. காதல் எல்லாம் இல்லை! அவளோட திமிரு அவளை அடைய வேணுங்கிற வெறியை அதிகம் ஆக்கிடுச்சு.‌ கால் பண்ணி மிரட்டி கூட பார்த்தேன் எதுவுமே வேலைக்கு ஆகல. அதனால அவளை என் வழிக்கு கொண்டு வர உன்ன துருப்பு சீட்டா யூஸ் பண்ணிக்க போறேன்.

 

அந்த பொண்ணு யாருன்னு தெரியுமா? உன் அண்ணன் மித்ரனோட லவ்வர் அக்ஷரா!” என கண்களில் மோகத்துடன் கூறினான்.

 

“அய்யோ அக்ஷுவா?” என்று உறைந்து போகலானாள் வைஷ்ணவி.

 

அவன் சொல்வதைக் கேட்டு அந்தப் பெண்ணின் மேல் பரிதாபம் கொண்டவள் அது அக்ஷுவாக இருக்கும் என்று சற்றுமே எதிர்பார்த்து இருக்கவில்லை.

 

“ஆமா பேபி உன் ஆசை அண்ணியே தான். சும்மா டக்கரா இருப்பாள்லே? ஆனா என்ன? கொழுப்பும் திமிரும் ஜாஸ்தி! விஷ்வா தங்கச்சியாச்சே அப்படித் தான் இருப்பாள். சரி பேசிட்டு இருக்க நேரமில்ல. அவளுக்கு ஃபோனை போட்டு தரேன் இங்க வர சொல்லு” என்றவாறு ஃபோனை அவள் காதில் வைக்கப் போக,

 

“முடியாது” என்ற ஒற்றை வார்த்தையில் மறுப்பை வெளியிட்டாள்.

 

“ஏன் முடியாது?” என்று கோபமாகக் கேட்டான் அவன்.

 

“அதெல்லாம் சொல்லிட்டு இருக்க முடியாது” என்றாள் விட்டேற்றியாக.

 

“என்ன டி வாய் ரொம்ப நீளுது? பயமில்லாமல் போச்சா?” என்று காட்டுக் கத்தல் கத்தினான் தர்ஷன்.

 

“பயமா எனக்கா? அதுவும் உன் மேல? ஹா ஹா காமெடியா இருக்கே. தில்லு இருந்தா விஷு மித்து கூட நேருக்கு நேர் மோதி இருக்கனும். உனக்கு தான் அது சுத்தமா இல்லையே. அதான் இப்படி பொண்ணுங்கள வச்சு பின்னால குத்துற. ஏன்னா உனக்கு பயம்! விஷ்வா மேல பயம்! மித்ரன் மேல பயம்! அவங்க நட்பைக் கண்டு மரண பயம்!” திமிராகச் சொன்னாள்.

 

அவளது சொற்கள் ஒவ்வொன்றிலும் வெறி ஏற” ஆமாடி எனக்கு பயம் தான். அதே பயத்தை உனக்கு காட்டவா?” அவள் முடியைக் கொத்தாகப் பற்றினான் அந்தக் கயவன்.

 

“டேய் விடுடா. உன்னால என்னை எதுவும் பண்ண முடியாது” என்று பல்லைக் கடித்து வலியைப் பொறுத்துக் கொண்டாள்.

 

“என்னால எல்லாமே பண்ண முடியும் டி. அவளை அடைஞ்சதும் உன்னை விட்டுடலாம்னு நெனச்சேன். ஆனா நீ ஓவரா ஆடுற. உனக்கு நரகத்தை காட்டுறேன் வெயிட் பண்ணு. மரியாதையா அவளுக்கு போன் பண்ணு” என்றான் தர்ஷன்.

 

“முடியவே முடியாது” தலையை இடம் வலமாக ஆட்டினாள் அவள்.

 

“முடியாதா? முடியாதா?” என்று கேட்டு ஆக்ரோஷமாக அவள் கன்னத்தில் அறைந்தான். அவனது வேகத்தில் உதடு கிழிந்து இரத்தம் வழிந்தது.

 

“நீ அடிச்சா மட்டும் இல்ல டா. என்ன கொன்னே போட்டாலும் அவளை வர சொல்ல மாட்டேன். உன்ன போல காட்டுமிராண்டி கிட்ட மாட்டி விடவும் மாட்டேன் “அசராமல் தான் நின்றாள் மித்ரனின் தங்கை.

 

“நீ சொல்லலனா என்ன? எனக்கு சொல்லத்” தெரியாதா? என்றவன் அவளுக்கு அழைப்பு விடுத்தான்.

 

…………………

ஸ்னாக்சை கொறித்துக் கொண்டிருந்த அக்ஷராவின் போன் அலற, அவள் மனமோ திக் திக் என அடித்துக் கொண்டது.

 

ஒரு வேளை அவனாக இருக்குமா என நினைத்துக் கொண்டே பார்க்க, அவனே தான்.

 

‘எடுத்தால் தானே பேசுவான் எடுக்காமலே இருந்திடலாம்’ என்று போனை ஆன்செர் செய்யவில்லை.

 

சிறிது நேரம் கழித்து வாட்சப் நுழைந்து வைஷுவிற்கு மெசேஜ் போடலாம் என நினைத்தவள் அதில் புது நம்பரில் இருந்து வாய்ஸ் நோட் வந்திருக்க உள்ளே சென்று அதனை அழுத்தினாள்.

 

“என்னடி கால் பண்ணாலும் ஆன்சர் பண்ண மாட்டேங்குற? குளிர் விட்டு போச்சுல்ல. உனக்கு அப்படியே உச்சந்தலையில் ஐஸ் வைக்குற மாதிரி ஜிலு ஜிலுன்னு ஆகுறதுக்கு ஒரு வீடியோ அனுப்புறேன் அதை பாரு” என கர்ஜித்தவன் தர்ஷனே தான்.

 

“என்ன செய்தியா இருக்கும்? அந்த வீடியோவில் அப்படி என்ன இருக்கப் போகிறது?” என நகத்தைக் கடித்துக் கொண்டே புலம்பியவள் அடுத்து வந்த வீடியோவை க்ளிக் செய்தாள்.

 

கை கால்கள் கட்டப்பட்டு, முடி எல்லாம் கலைந்து, உதட்டில் இரத்தத்துடன் இருந்த வைஷ்ணவியைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனாள் அக்ஷரா.

 

“வைஷு! வை..வைஷு” அவள் உதடுகள் தந்தியடிக்க, இதயமோ தாளம் தப்பித் தான் துடிக்கலாயிற்று.

 

இந்த நிலையில் வைஷுவை சற்றுமே எதிர்பார்த்து இருக்கவில்லை அவள். தர்ஷனின் அழைப்பு வர, இம்முறை பட்டென அட்டென்ட் பண்ணாள்.

 

“யாருயா நீ? எதுக்கு என் அண்ணிய கடத்தி இருக்கே. உனக்கு என்ன தான் வேணும்? ஏன் இப்படி என்ன சாவடிக்கிற” கரகரத்த குரலில் கேட்டாள் அக்ஷு.

 

“ஹேய் கூல் கூல் பேப்ஸ். எனக்கு என்ன வேணும்னு உனக்கு தெரியாதா? அது நீ தான்! சோ நீ என்ன பண்ணுறேனா நான் சொல்ற அட்ரஸ்க்கு வந்துடுற. மீறி வரலனா உன் அண்ணிக்கு என்ன கதி நேரும்னு தெரியும்ல?” என்று எச்சரித்தான் அவன்.

 

“நான் வரேன். ப்ளீஸ் அவளை எதுவும் பண்ணி விடாதே”

 

“அது உன் கையில தான் இருக்கு டார்லி. இப்போ கெஞ்சிட்டு, விஷ்வாவை கூட்டிட்டு வந்த அவ்வளவுதான். என் கார்ட்ஸ் உன்ன ஃபாலோவ் பண்ணிட்டு வருவாங்க. உன் கூட அவனுங்க வர்றது தெரிஞ்சது இங்க இருக்கிற வைஷுவ டெட் பாடியா தான் பார்ப்ப” என்க, அவளுக்கு குலையே நடுங்கியது.

 

“நோ! அப்படி எதுவும் பண்ணிடாத. நான் தனியாத் தான் வருவேன். வைஷுக்கு எதுன்னா அண்ணா, மித்துவால தாங்கிக்க முடியாது ப்ளீஸ்” என்று அவனிடம் இறைஞ்சியவள் காலை கட் பண்ணி விட்டு யாருக்கும் தெரியாமல் மெதுவாக வெளியேறி சென்றாள்.

 

அவளது ஸ்கூட்டியில் அவன் சொன்ன இடத்துக்கு விரையலானாள். அந்த பங்களா இருளில் மூழ்கி இருக்க, சிலர் கையில் கத்தி மற்றும் துப்பாக்கியுடன் சுற்றி நின்றிருந்தனர். கைகள் நடுங்க ஆரம்பிக்க, தள்ளாடியவாறு உள்ளே நுழைந்தவளைக் கண்டு தர்ஷனின் விழிகள் ஆசையில் பளபளக்க, வைஷ்ணவியோ கலங்கிய கண்களுடன் பார்த்தாள்.

 

“வைஷு” என கூச்சலிட்டுக் கொண்டே அவளிடம் ஓடி செல்ல, “எதுக்குடி வந்த? உனக்கு வராமலே இருந்திருக்கலாம்ல? இந்த மோசமானவன் கிட்ட தானா வந்து சிக்கிட்டயே. மித்துணாவால உனக்கு ஏதாச்சும்னா தாங்கிக்க முடியாது” கலக்கத்துடன் பேசினாள் வைஷு.

 

“ஹலோ கேர்ள்ஸ்” என தர்ஷன் அழைக்க, பரிச்சயமான குரலில் சட்டென தலை தூக்கிய அக்ஷு அவனைக் கண்டு ஓர் நொடி அதிர்ந்தும் தான் போனாள்.

 

“நீ..நீயா டா பொறுக்கி” என பற்களை நற நறக்க, 

“எஸ் மை பேப்ஸ்! என்னை நீ எதிர்பார்த்து இருக்க மாட்டியே. எப்படி என் சப்ரைஸ்?” என்று நக்கலாக வினவினான்.

 

“த்தூ…!! கேவலமா இருக்கு. இப்படி பொம்பளைங்கள கடத்திட்டு வந்து உன் ஆண்மைய நிரூபிக்கிறியே டா. உனக்கு வெட்கமா இல்ல?” என்று ஆங்காரமாய்க் கேட்டாள் அவள்.

 

சுட்டு விரலை காதினுள் விட்டுக் குடைந்து “ஷ்ஷ் சவுண்டு விடாத. மெதுவா பேசு” என்றான் தர்ஷன்.

 

“டேய் நீ உண்மையான ஆம்பளையா இருந்தா என் அண்ணா கூட நேருக்கு நேர் மோதி ஜெயிச்சு காட்டு டா. எப்படி காட்டுவ? நீ தான் ஆம்பளையே இல்லையே” கிண்டலாக வெளிப்பட்டது அக்ஷுவின் குரல்.

 

“நிறுத்து டி. விட்டா ஓவராத் தான் போற. உனக்கு இப்போ நிரூபிக்கிறேன் நான் பொம்பளையா ஆம்பளையானு. என் கிட்டயே எதிர்த்து பேசுறியா. இருக்குடி உனக்கு” என கண்கள் சிவக்க சொன்னவனோ அவளை நெருங்கினான்.

 

வைஷு தனக்குத் தெரிந்த கடவுள்களிடம் எல்லாம் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தாள்.

 

அக்ஷராவோ தீப் பார்வை பார்த்திட “உனக்கு பயமே இல்லையா? இவ்வளவு திமிரா நிற்கிறே. உன்னை காப்பாற்ற யாராவது வருவாங்கன்னு பகல் கனவு கண்டுட்டு இருக்கியா? அதெல்லாம் சினிமாவுல வேணா நடக்கலாம். இங்க நோ சான்ஸ்” கட்டை விரலை தலைகீழாகக் காட்டினான் தர்ஷன்.

 

“வருவாங்கடா வருவாங்க.‌ எனக்கு ஒன்னுனா என் அண்ணனும் அருளும் கண்டிப்பா வருவாங்க” என்றவளுக்கு ஏதோ தோன்ற வேகமாக ஓட துவங்கினாள், எதிரில் வந்த மானஸ் அவள் கையைப் பிடித்து தர்ஷனிடம் தர தரவென இழுத்துச் சென்றான்.

 

மானஸ் அவள் கைகள் இரண்டையும் பின்னால் வைத்து கட்டி விட்டு நகர்ந்து நின்று கொண்டான்.

 

“ஹா ஹா! இப்போ என்ன டி பண்ணுவ? நீ விரும்னாலும் இல்லனாலும் இன்னிக்கு என் கூட தான் இருப்ப” என்றவன் அவளை துகிலுரிக்கும் பார்வை பார்த்தான்.

 

அவன் பார்வையில் உடல் கூசிப் போயிற்று பெண்ணவளுக்கு. கண்களை இறுக மூடியவளின் தோளில் கை வைக்க, அவளோ கடித்து வைத்தாள்.

 

“கடிக்குறியா சண்டாளி?” என கடுப்பாகிய தர்ஷன் அவள் துப்பட்டாவை உருவி எடுத்த அடுத்த நொடி, ஆஆஆ என்ற அலறலுடன் தூரச் சென்று விழுந்தான்.

 

அனைவரும் நிமிர்ந்து பார்க்க வேட்டைக்காக காத்திருக்கும் சிங்கங்கள் போல கழுத்து நரம்புகள் புடைக்க, கை முஷ்டி இறுக பற்களை கடித்துக் கொண்டு நின்றிருந்தனர் விஷ்வாவும் மித்ரனும்.

 

தர்ஷன் விருட்டென எழுந்து கொண்டு “நீங்க எப்போடா வந்தீங்க?” என திகைப்புடன் நின்றான்.

 

“எப்போ வரனுமோ அப்போ கரெக்டா வந்துட்டோம் டா நாயே. என்ன தைரியம் இருந்தா என் தங்கச்சி மேலயே கை வச்சிருப்ப” என தர்ஷனின் சர்ட் காலரைப் பற்றினான் விஷ்வஜித்.

 

அக்ஷரா “அருள்” என்று ஓடி வந்து மித்ரனிடம் தஞ்சமாக, அவளை தோளோடு சேர்த்து அணைத்துக் கொண்டான் அவனும்.

 

வைஷுவைத் தேடி வந்த இருவருக்கும் ஸ்கூட்டியில் அக்ஷரா போன்ற ஒரு பெண் செல்வதை காணவும் சிறிதே சந்தேகம் வந்தது. அது அக்ஷராவே தான் என்பதை அவளது ஸ்கூட்டியை வைத்து அடையாளம் கண்டு கொண்டு அவளை பின் தொடர்ந்து வந்தனர் நட்புகள்.

 

விஷ்வா தர்ஷனை அடித்துத் துவம்சம் செய்ய, மித்ரன் ஓடி சென்று வைஷுவின் கட்டுக்களை அவிழ்த்து விட்டான்.

 

தர்ஷனின் மூக்கிலேயே கோபம் தெறிக்க குத்து விடப் போன விஷ்வாவுக்கு தர்ஷன் உதட்டோர சிரிப்புடன் கண் காட்ட, அங்கு திரும்பிய விஷ்வா அதிர்ந்து போனான்.

 

தர்ஷனின் கார்ட்ஸ் அக்ஷராவைக் குறி வைத்து gகன்னுடன் நின்றிருந்தனர்.

 

அந்த தருணத்தைப் பயன்படுத்தி விஷ்வாவைத் தள்ளிவிட்டு கைகளில் தூசு தட்டிக் கொண்டே எழுந்தான் தர்ஷன்.

 

“என்ன விஷ்வா நின்னுட்ட? அடிடா அடி. இன்னொரு அடி என் மேல விழுந்துச்சுன்னா உன் தங்கச்சி பரலோகம் போயிடுவாள்”

 

“தர்ஷா உனக்கு நாங்க என்ன டா பாவம் செஞ்சோம்?எதுக்கு இந்த மாதிரி பண்ணிட்டு இருக்க?” கண்களில் அனல் பறக்க கேட்டான் மித்ரன்.

 

“குட் கொஸ்டின் மித்து! எனக்கு பிடிக்கல. உங்க ரெண்டு பேரையுமே பிடிக்கல. உங்க பிரண்ட்ஷிப் பிடிக்கல. உன் கிட்ட பிரண்டாக ஏத்துக்கனு ஆசையா கேட்டப்போ என்ன சொன்ன? பிரண்டு ஆகலாம் ஆனா எனக்கு எப்போவுமே என் பெஸ்ட் பிரண்ட் விஷ்வான்னு. ஆனா இந்த விஷ்வா அதையும் வேணாம்னு சொல்லிட்டான். எனக்கு ஆரம்பத்தில் இருந்தே உங்க பிரண்ட்ஷிப்ப கண்டாலே எரிச்சலா வரும். உங்கள பிரிச்சே ஆகனும்னு துடியா துடிச்சேன். அதே மாதிரி பிரிக்கவும் செய்தேன்” என்று சொல்லி வெடித்துச் சிரித்தான் தர்ஷன்.

 

நால்வருமே அதிர்ந்து பார்க்க, “பிரிச்சியா? நீ எப்போடா பிரிச்ச?” தடுமாற்றமாகக் கேட்டான் விஷ்வா.

 

இரு புறமும் தலையாட்டிச் சிரித்து விட்டு “பார்த்தியா உங்க பிரிவுக்கு காரணம் நான் தான்னு உங்களுக்கே தெரியாதுல்ல. நான் அதுக்கு ட்ரம்ப் கார்டா யூஸ் பண்ணது உங்க அன்பு அம்மாவை. அவங்களுக்கு கால் பண்ணி உங்க ரெண்டு பேரையுமே எப்படியாவது பிரிக்கணும், இல்லனா விஷ்வாவை கொன்னுடுவேன்னு மிரட்டினேன். கொஞ்சம் பயந்தாலும் முதல்ல முடியாதுன்னு மறுத்தா. அப்புறமா மித்ரனை க்ளோஸ் பண்ணிடுவேன் என்று சொன்னதும் என்னமா துடிச்சா தெரியுமா? உடனே ஏதோ பிளான் பண்ணி மித்ரனை யூ.கே போக வெச்சுட்டா. பார்த்தியா விஷ்வா, உன் அம்மாவுக்கு உன்ன விட மித்ரன் மேல தான் ரொம்ப பாசம்” கேலியாகக் கூறினான் அவன்.

 

அந்த கேலியை ரசிக்க முடியவில்லை அவனால். உள்ளம் எரிமலையாகக் கொதித்து வெடித்தது. நண்பனின் பிரிவுக்குக் காரணம் தாய் இல்லை. இது தெரியாமல் அவளை வார்த்தைகளால் வதைத்து விட்டோமே என்று வேதனையாக இருந்தது.

 

மித்ரனுக்கோ தன் மேல் நீலவேணிக்கு எந்தவித கோபமும் இல்லை என்பதில் உள்ளம் குளிர்ந்தது. அதற்கு மேல் தர்ஷனின் மீது கொலை வெறியே வந்தது.

 

“டேய் பாவி பாவி” என கத்தியவாறு அவனை நோக்கி செல்ல, அவனைப் பிடித்து மித்ரனின் மார்புக்கு நேராக துப்பாக்கியைக் குறி வைத்தான் தர்ஷன்.

 

மூவரும் உறைந்து போய் நிற்க, விஷ்வாவோ ஒரு படி மேலாக துடித்துப் போனான்.

 

“தர்ஷா வேணாம். என் மித்துவ விட்று டா. உனக்கு என்ன தான் வேணும்?” உள்ளம் நடுக்கமுறக் கேட்டான் விஷு.

 

“எனக்கு உங்க ரெண்டு பேர்ல ஒருத்தனோட உயிர் வேணும்னு கேட்டா தருவியா விஷ்வா?” என்றவன் மானஸ்கு கண் காட்ட விஷ்வாவின் கையில் gகன்னைக் கொடுத்தான் மானஸ்.

 

விஷ்வாவைப் பார்த்து “ஒன்னு நீயே உன்ன சூட் பண்ணிக்கனும். இல்ல இவன் என் கையால சாகனும். உன் உயிரா? நீ உயிரா நேசிக்குற உயிர் நண்பனோட உயிரா? சாய்ஸ் இஸ் யூவர்ஸ்” அரக்கனாகத் தான் மாறியிருந்தான் தர்ஷன்.

 

அக்ஷராவும் வைஷ்ணவியும் இதயம் படபடவென அடித்துக் கொள்ள இருவரையும் மாறி மாறிப் பார்த்தனர். விஷ்வா தனது கையில் இருந்த துப்பாக்கியை நெற்றியில் வைத்தான்.

 

“நோ மாப்ள வேண்டாம் டா. ப்ளீஸ்” என அலறினான் மித்ரன்.

 

தர்ஷன் “பரவாயில்லையே விஷ்வா. இந்த நேரத்துலயும் உன் பிரண்டு தான் முக்கியம்னு நினைக்குறே” எள்ளலாகக் கூறினான்.

 

விஷ்வா தன்னுள் ஊடுறுவி உயிரில் கலந்து உதிரத்திலும் உறைந்திருக்கும் மித்துவையே விழிகளில் நிறைத்துக் கொண்டு கண்களை மூடி ட்ரிகரில் விரலை வைத்தான்.

 

“ட்ட்ரிக்க்….!!” புல்லட் பாயும் சத்தம் காதைக் கிழித்தது.

 

“விஷுண்ணா!”

“ஜித்தூஊ” என்ற குரல்கள் கேட்க, விஷ்வா கண்களைத் திறந்தான்.

 

அங்கே! அங்கே! தர்ஷனின் காலடியில் மார்பில் புல்லட் பாய்ந்து கீழே சரிந்து இருந்தான் அருள் மித்ரன்.

 

ஆம்! தன் உயிர்த் தோழனுக்காக தன்னுயிரையும் கொடுக்க எண்ணி தர்ஷனது gகன்னை அழுத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்டிருந்தான் விஷ்வஜித்தின் ஆருயிர் மித்திரன்.

 

வெறும் வாய் வார்த்தையில் மட்டுமல்ல! நிஜத்திலுமே ‘என் விஷு எனது உயிரை விட மேலானவன்’ என்று காட்டினான் நட்புக்கு இலக்கணமான அவன்!

 

தர்ஷனும் கூட இதை எதிர்பார்த்து இருக்கவில்லை. அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் சிலையாக நின்றிருக்க, போலீஸ் உள்ளே நுழைந்தனர்.

 

ஆம்! தாம் உள்ளே நுழைவதற்கு முன்னர் போலீசுக்கு அழைத்து விட்டுத் தான் வந்திருந்தான் விஷ்வா.

 

தர்ஷன் உட்பட அவனது ஆட்களைக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

 

“வி..விஷு! மாப்ள” என்ற மித்ரனின் மெல்லிய அழைப்பில் விஷ்வா எனும் சிலைக்கு உயிர் வந்திட தளர்ந்த நடையோடு சென்று முட்டி போட்டு அமர்ந்து அவனது தலையை தன் மடியில் கிடைத்தினான்.

 

“மித்து! ஏன்டா இப்படி பண்ணுன? வலிக்குதுடா. வலிக்குது. முடியல” விஷ்வாவின் கண்கள் கலங்கிப் போயின.

 

“அண்ணா” வைஷ்ணவியின் கண்களில் கண்ணீர் ஊற்றியது.

 

பாதி மூடிய இமைகளுடன் அக்ஷுவைப் பார்த்து “இப்போவாவது நான் கேட்டதை சொல்லுவியா அம்முலு?” எனக் கேட்டான்.

 

“அருள்…! உன்கிட்ட சந்தோஷமா பெருசா ஸர்ப்ரைஸ் பண்ணி இதை சொல்லனும்னு நினைச்சேன்டா. இந்த வார்த்தையை உன் கிட்ட சொல்லும் முதல் தருணம் உன்னால மறக்க முடியாததா இருக்கனும்னு ஆசைப்பட்டேன். ஆனால் இப்படியாகிடுச்சே. நீ என் உயிர் டா. ஐ லவ் யூ அருள். லவ் யூ டா.. லவ் யூ சோ மச்” என்று கேவிக் கேவி அழுது கொண்டே கூறினாள் அருளின் அம்முலு.

 

இரத்த வெள்ளத்தில் தன் மடியில் சாய்ந்திருக்கும் உயிரானவனின் கண்களில் துளிர்த்த கண்ணீரை நடுங்கும் விரல்களால் துடைத்து விட்டான் விஷ்வா.

 

அவனுக்குமே அவனைக் கட்டிப் பிடித்து கதறி அழத் தோன்றினாலும் தன் அழுகையைக் கண்டால் மித்ரன் உடைந்து விடுவான் என்பதால் கடினப்பட்டு அழுகையை அடக்கினான்.

 

மித்துவின் விழிகள் இப்போது விஷ்வாவை பார்க்க, “மாப்ள! இப்படி பார்க்காத டா. ஏதோ பண்ணுது. எனக்கு நீ வேணும் டா. ப்ளீஸ் பழையபடி வந்துடுடா” என்று சொன்னவனின்‌ குரல் கரகரத்தது

 

“விஷு! எனக்கு பயமா இருக்குதுடா. உன்னை விட்டு போயிடுவேன்னு..” என்று மித்து திக்கித் திணறி சொல்ல,

 

“இல்ல நீ போக மாட்டே. எனக்கு ப்ராமிஸ் பண்ணிருக்க டா. உன்னை போகவும் விட மாட்டேன். அந்த எமனால கூட நம்மளை பிரிக்க முடியாதுடா” என்று அவன் கையில் தன் கையைக் கோர்த்தான்.

 

“மை விஷு” என்ற மித்ரன் இதழில் புன்முறுவல் பூக்க கண்களை மூடினான்.

 

“மாப்ள…..!!” என்று அவ்விடமே அதிரும் படி கத்தியவன் அவனைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு நடக்க, விஷ்வாவின் கண்களில் இருந்து சூடான நீர் உருண்டோடி மித்திரனின் மார்பைத் தொட்டது.

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 1

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!