25. விஷ்வ மித்ரன்

5
(3)

 விஷ்வ மித்ரன்

 

💙 அத்தியாயம் 25

 

_சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு_

 

ஹாஸ்பிடலில் ஹரிஷின் முன்னால் அமர்ந்திருந்தான் மித்ரன். அவனையே கண்கள் கலங்க பார்த்துக் கொண்டிருந்தார் தந்தை.

 

சில நாட்களாக அவனுக்கு அடிக்கடி நெஞ்சு வலி, தலைவலி வரத் துவங்கியிருந்தது. ஆரம்பத்தில் பெரிதாக எடுக்காமல் அலட்சியமாக இருந்தவன் நாட்கள் செல்லச் செல்ல அவனுடலில் ஏதும் மாற்றம் ஏற்படுவதை அறிந்தான். கூடவே முன்பை விட சற்றே பலவீனமாக உணர்ந்தான் அருள் மித்ரன்.

 

ஆனால் இதை விஷ்வாவிடம் சொல்லாமல் மறைத்து விட்டிருந்தான், அவனுக்குத் தெரிந்தால் உடைந்து போய் விடுவான் என்று! தனக்கு என்ன நோய் வந்தாலும் கண்டுக்காத விஷ்வா, மித்ரனுக்கு ஏதாவது ஒன்று என்றால் பயந்து போய் விடுவான். அதனால் தான் இதை அவனிடம் சொல்லாமல் ஹரிஷிடம் கூறினான்.

 

இந்த செய்தி பீதியை கிளப்பினாலும் அதை வெளிப்படையாக தெரியப்படுத்தாமல் பாடி செக்அப் செய்ய அழைத்து வந்திருந்தார் ஹாஸ்பிடலுக்கு.

 

அதற்கான ரிசல்ட் வந்து மேசையில் வீற்றிருக்கின்றது. அதனை வாசித்துப் பார்த்தவர் தான் மனம் கலங்கி மகனை நோக்கினார்.

 

“டாடி! வாட் ஹேப்பன்? ஆர் யூ ஓகே?”என்று கேட்க, அவன் பேசுவது செவியில் விழுந்தாலும் எதுவும் பதிலளிக்காமல் இருந்தார்.

 

“எதுவோ இருக்கு. எனக்கு என்ன ப்ராப்ளம் டாடி? மறைக்காம சொல்லுங்க” என்றவனது இதயமோ பரீட்சை எழுதி முடித்து பெறுபேறு வெளிவரும் தருணத்திற்காக காத்திருக்கும் மாணவனின் இதயத்தைப் போல நொடிக்குப் பல தரம் துடிக்கலானது.

 

“நீ இதைக் கேட்டு மனசு உடைஞ்சு போயிடக் கூடாது கண்ணா. ஸ்டெடியா இருக்கனும்” மூக்கு கண்ணாடியை சரி செய்து கொண்டார் ஹரிஷ்.

 

“சூர்ப்பா! சொல்லுங்க நான் தைரியமா தான் இருக்கிறேன்” என்றான் அவன்.

 

“உனக்கு ஹார்ட்ல பிளாக் இருக்கு டா. ஹர்ட் சர்ஜரி பண்ணி இதயம் மாற்றனும்” தழுதழுத்த குரலில் கூறி முடித்தார் அந்த டாக்டர். இதைவிட அபாயகரமான பேஷன்ட்டையும் எதிர்கொண்டு லாவகமாக கையாள்பவர் தான் இவர். ஆனால் தனது இரத்தம் என்று வரும் போது உடைந்து போனார். அவருக்கென்று இருக்கும் ஒரே பிள்ளை அவன் அல்லவா?

 

தலையில் இடி விழுந்தாற் போல இருந்தது ஆடவனின் மனநிலை. இதயம் என்ற வார்த்தையைக் கேட்ட உடனே அவனது இதயத்தில் வசிக்கும் விஷ்வா தான் நினைவுக்கு வந்தான்.

 

“விஷூ….!!” எனக் கதறினான் மித்ரன். சிலை போல் நிற்கும் மகனைக் கண்டு எழுந்து போய் அவன் தோள் தொட்டார் ஹரிஷ்.

 

“மித்து! என்னபா இப்படி இருக்க? டாடியை பாரு” என்று பதற, “என்னால ரொம்ப நாளைக்கு வாழ முடியாதா டாடி? பல வருஷம் சந்தோஷமா அவனோட நட்போடு பிரியாம வாழனும்னு ஆசைப்பட்டேனே. அதெல்லாம் கானல் நீரா போய்டுமா” அவர் தோளில் தலை புதைத்தான் புதல்வன்.

 

“மித்து இப்படி எல்லாம் பேசாதடா. ஆப்ரேஷன் பண்ணா எல்லாம் சரியாகிடும். காய்ச்சல் வந்தா மருந்து குடிக்குறோமே. அந்த மாதிரி தான் பா இதுவும். நீ பெருசா எடுத்துக்கிட்டு பயப்படாதே” அவனை ஆறுதல் படுத்தினார் ஹரிஷ்.

 

“எனக்கு எந்த பயமும் இல்லை டாடி. விஷ்வாவை நினைச்சா தான் கஷ்டமா இருக்கு. இது தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்படுவான். ப்ளீஸ் பா இதை அவன் கிட்ட சொல்ல வேண்டாம். சத்தியம் பண்ணுங்க” என கையை நீட்டினான்.

 

“மி..மித்து அவன் கிட்ட சொல்லாம மறைக்கிறது சரியா வராது” தடுமாற்றத்துடன் மறுப்பை வெளியிட்டார் அவர்.

 

“நோ! இது தெரியாம இருக்குறது தான் நல்லது. இதை அவனால தாங்கிக்க முடியாது டாடி. என் மேல பாசம் இருக்குன்னா சத்தியம் பண்ணுங்க” என வற்புறுத்தினான்.

 

வேறு வழியின்றி அவன் கை மேல் கை வைத்து சத்தியம் செய்தார் ஹரி.

 

……………………

 “மகேஷ் எனக்கு இம்மீடியட்டா இந்த ஆபரேஷன் பண்ண வேண்டி இருக்கு. செவன் மந்த் தான் டைம். அதுக்குள்ள ஆப்ரேஷன் பண்ணலன்னா என் பையன் உயிருக்கு ஆபத்தாகிரும். இப்போ தான் இந்த ஆபத்தோட பர்ஸ்ட் ஸ்டேஜ்ல இருக்கான். தேடிப் பாருங்க எங்கிருந்தாவது ஒரு ஹார்ட் கிடைக்குதுன்னா கால் பண்ணுங்க. நான் உங்களை தான் மலை போல நம்பி இருக்கேன்” என்று டாக்டர் மகேஷிடம் பேசிக் கொண்டிருந்தார் ஹரிஷ்.

 

“ஓகே ஹரிஷ் பீல் பண்ணாத. டேக் கேர் பாய்” என இணைப்பைத் துண்டித்தார் மகேஷ்.

 

“யேன் பா என்னை நம்ப மாட்டீங்களா?” என்று குரலில் ஹரிஷ் பட படப்புடன் நிமிர்ந்தார். கதவில் சாய்ந்து கோபமும், கண்ணீருமாக நின்றிருந்தான் விஷ்வா.

 

“விஷு நீயா?” திகைத்துப் போகலானார் அவர்.

 

“ஆமா நானே தான்! என் மித்துக்கு என்ன ஆச்சுப்பா? சொல்லுங்க அவனுக்கு என்னாச்சு. எதுக்காக ஹார்ட் தேடுறீங்க?” கேள்விகளை அடக்கியவனுக்கு ஏதோ புரிந்தும் புரியாத நிலை.

 

ஹரிஷால் இதற்கு மேல் மறைக்க முடியாமல் அனைத்தையும் கூறி உடைந்து அழுதார். விஷ்வா ஸ்தம்பித்துப் போய் நின்றான்.

 

ஹரிஷைத் தோளோடு அணைத்து கொண்டவன் ஏதோ உறுதியுடன் தான் நிமிர்ந்தான்.

 

“மித்துக்கு கண்டிப்பா ஹார்ட் கிடைக்கும். ஒரே ஒரு வாரத்துல ஆப்பரேஷன்கு ரெடி பண்ணுங்க” அவன் விழிகள் கத்தியின் கூர் முனையாக மின்னின.

 

“என்னடா சொல்லுற? அதுவும் இவ்வளவு உறுதியா..?” புரியாமல் கேட்டார் அவர்.

 

“நூறு சதவீதம் உறுதியா சொல்றேன். ஏன்னா அவனுக்காக கொடுக்கிறது அவன சுமந்துட்டு இருக்குற இந்த இதயத்தை” என்று சுட்டு விரலால் இடது நெஞ்சைச் சுட்டிக் காட்டினான் விஷ்வா.

 

“விஷ்வா…!” என அலறினார் ஹரிஷ்.

 

“முடியாது விஷு. நான் இதுக்கு ஒருக்காலும் ஒத்துக்க மாட்டேன். இனி ஒரு தடவை இந்த மாதிரி பேசாத” எனக் கடிந்து கொண்டார்.

 

“என்னால என் முடிவுல இருந்து மாற முடியாது. நான் முடிவு எடுத்தது எடுத்தது தான். நீங்க ஆபரேஷனுக்கு ரெடி பண்ணுங்க” தீர்மானமாக சொன்னான் விஷ்வஜித்.

 

“ப்ளீஸ் டா! இது ஒன்னும் விளையாட்டு இல்ல. எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு பண்ணுறதுக்கு. கொஞ்சமாவது சிவா நீலா பத்தி நினைச்சு பாரு. ப்ளஸ் மித்துவும் இதற்கு நிச்சயம் சம்மதிக்க மாட்டான்” குரலை உயர்த்தினார் ஹரிஷ்.

 

சிறு புன்னகையை உதட்டில் படர விட்டு “சொன்னால் தானே சம்மதிக்க மாட்டான். அவனுக்கு இந்த விஷயம் தெரிய கூடாது. நீங்க தெரியவும் விடக் கூடாது..” என்றவன் அதனோடு நில்லாமல் அவர் கையைத் தன் தலையில் வைத்துக் கொண்டான்.

 

ஹரிஷ் உறைந்து போய் நிற்க “மாப்ள கிட்ட இதை சொல்லக் கூடாதுப்பா” என்று விட்டு மேசையில் இருந்த டாக்குமெண்ட்ஸில் கையெழுத்து போட்டு விட்டு வெளியேறினான்.

 

தலையில் கை வைத்து அமர்ந்தார் தந்தை. சென்றவன் திரும்பி வந்து “அப்பா ஒன்னு புரிஞ்சுக்கங்க. மித்துக்காக என் இதயத்தை கொடுத்தே தீருவேன். அதை அவன் கிட்ட சொல்லி தடுக்க நினைக்க வேண்டாம். தடுத்தா நான் என் உயிரை விடவும் தயங்க மாட்டேன். எனக்கு என் உயிர் தூசுக்கு சமன். என் மித்து மட்டும் தான் எனக்கு முக்கியம்” என்று விட்டு திரும்பி நடந்தான்.

 

இவனது நட்பை நினைத்து பெருமைப்படுவதா? இல்லை அவன் எடுத்த முடிவை எண்ணி வருந்துவதா? என்று தெரியாமல் தவித்தார் ஹரி. இருவருக்கும் செய்த சத்திய வாக்குகளுக்கு இடையே தத்தளிக்கும் படகாக இருந்தது அவர் நிலமை.

 

…………..

அடுத்த நாளே மித்ரனிடம் இதயம் கிடைத்த விடயத்தை கூறியதற்கு அவன் மகிழ்ந்து தான் போனான்.

 

அந்த மகிழ்வு ஹரிஷின் அறைக்குள் நுழைந்து எதையோ தேடிக் கொண்டிருந்த நொடி முற்றிலும் அழிந்து போனது.

 

ஹார்ட் டோனர் பகுதியில் அழகாக அவனைப் பார்த்துக் கண் சிமிட்டியது, அவனது தோழனின் கையொப்பம். ஒரு தடவை ஆடிப் போய் நின்றவனோ அடுத்த நொடி ஹரிஷின் முன் வந்து பைலைத் தூக்கி வீசினான்.

 

அவனுக்கு விடயம் தெரிந்து விட்டது என்பதை அந்த ஆக்ரோஷமே தெரிவித்தது.

 

“மி…மித்து” என அழைத்தார் மெதுவாக.

 

“பேசாதீங்க! பேசாதீங்க டாடி. உங்களால் எப்படி அவன் சைன் பண்ணும் வரை சும்மா இருக்க முடிந்தது? அது மட்டும் இல்லாமல் என் கிட்ட இருந்து மறைச்சிருக்கீங்க. நீங்க மறைச்சிருக்க மாட்டீங்க. அவன் தான் வேணாம்னு சொல்லிருப்பான்” பிடரியை அழுந்தக் கோதி விட்டுக் கொண்டான்.

 

“எனக்கு என்ன பண்ணுறதுனே தெரியல கண்ணா. உன் கிட்ட சொன்னா செத்துடுவேனு மிரட்டுறான். அவன் சொன்னதை செய்யுற வைராக்கியக்காரன்னு தெரியும்ல. அதுவும் உன் விஷயத்தில் அவனுக்கு நிதானமே இருக்காது. உன்ன மட்டும் தான் பெருசா மதிப்பான். அந்த நிமிஷத்துல வேற எதுவா இருந்தாலும் துச்சம் தான் அவனுக்கு” அவன் முதுகையை வருடிக் கொடுத்தார்.

 

“அவன் கிட்ட எனக்கு தெரிஞ்சதுன்னு சொல்லவும் முடியாது. சொன்னா ஏதாவது எமோஷனல் பிளாக்மெயில் பண்ணி ஆப்ரேஷன் பண்ண வச்சிருவான். அவனோட உயிரை எடுத்துத் தான் நான் உயிர் வாழனும்னா அப்படி எந்த வாழ்க்கையுமே எனக்குத் தேவையில்லை. அவன் இல்லாத லைஃபை நான் வாழ்வேனு அவன் எப்படி நினைச்சான்?” என குறுக்கும் மறுக்குமாக குட்டி போட்ட பூனை போல் நடக்க, அப்போது தான் விஷ்வா அழைத்திருந்தான் மனசு சரியில்லை என்று.

 

விஷ்வாவோடு சென்றவனிடம் அவன் பிரிவு பற்றி கனவு வந்ததைக் கூற அந்த முடிவு மனதில் உதித்தது.

 

“கரெக்ட்டு! நான் உன்னை விட்டு போறது ஒன்னு தான் இதுக்கு முடிவு. ஆறு மாசம் கழிச்சு தான் வருவேன். சர்ஜரி பண்ணுனா உயிரோட வருவேன்” என மனதில் சொல்லிக் கொண்டான்.

 

அந்த நாள் தான் நீலவேணியின் மிரட்டலும் அவனை அச்சுறுத்த, அவன் எடுத்த முடிவுக்கு அது சரியாக தூபம் போட்டது. உடனே ஹரிஷுடன் யூ.கே சென்று விட்டான் மனதினில் வலியோடு, பிரிவின் துயரத்தோடு.

 

ஹரிஷ் அனைத்தையும் சொல்லி முடிக்க, அனைவரும் ஒரே மனநிலையில் தான் இருந்தனர். வைஷ்ணவி என்றும் போல் இவர்களது நட்பில் உரோமங்கள் சிலிரிக்கத் தான் நிற்கலானாள்.

 

நண்பனுக்காக தனது இதயத்தைக் கொடுக்க முன்வந்த விஷ்வா! அவனுக்காக தனது உயிரைக் கொடுக்க முன்வந்த மித்ரன்! உயிராக நேசிக்கும் உயிரில் கலந்த உயிர்த்தோழர்கள் தான் இந்த விஷ்வ மித்ரர்கள்.

 

“ஏன் விஷு அப்படி சைன் பண்ணிட்டு போன? வலிச்சுது டா. எனக்கு இந்த ப்ராப்ளம் இருக்குன்னு சொன்னது கூட வலிக்கல. ஆனா எனக்காக உன் உயிரை கொடுக்க முன் வந்த பாரு அது தான் ரொம்ப வலிச்சுது. அதனால தான் டா உன்னை விட்டுப் போனேன். உன் கூட இருந்தா நீ எப்படியாவது என்ன ஆபரேஷனுக்கு ஒத்துக்க வைப்ப. யூ.கே போய் நாலு மாசத்துல எனக்கு செட்டாகுற ஹார்ட் கிடைச்சது. அதை வச்சு சர்ஜரி பண்ணிட்டோம். அது குணமாகும் வரை இருந்து தான் வந்தேன். உன்னை பார்க்க ஆசை ஆசையா பீச்சுக்கு வந்தேன் மாப்ள” என்றவனின் குரல் மாறியது, அன்று பீச்சில் துரோகி என்று அவன் சொன்னதை நினைத்து.

 

விஷ்வாவுக்கும் கூட அதே ஞாபகமே…! முதல் முறையாக தனது உயிரானவனை வார்த்தை வேல்களால் குத்திக் கிழித்த தருணம். துரோகி என்று அவனைக் காயப்படுத்திய நிமிடம்.

 

“உன்னை பீச்சில் பார்த்த அந்த நிமிஷம் எனக்குள்ள சொல்ல முடியாத சந்தோஷம். மித்துன்னு கத்திட்டு வந்து உன்னைக் கட்டி பிடிக்கனும் போல இருந்துச்சு. ஏன்டா என்னை விட்டுப் போன? என்ன விட்டு போக எப்படி தான் மனசு வந்துச்சுன்னு கேட்டு அழனும் போல தோனுச்சு. ஆனாலும் அதை பண்ண முடியாம என் நிலைமை தடுத்தது. மனச கல்லாக்கிட்டு உனக்கு என் வாயாலயே துரோகின்னு சொல்லிட்டேன்” அந்த நாளின் தாக்கம் இன்றும் அவனது முகபாவனையிலும் குரலிலும் தெரிந்தது.

 

சரேலென்று திரும்பி நண்பனை ஊடுறுவினான் மித்ரன்.

 

“என்ன? நீ கோபத்தில் அப்படி சொல்லலையா? அப்படி என்னடா வேண்டுதல் உனக்கு? என் கூட பேசாம கோபப்பட்டுட்டு எதுக்காக குடிச்ச?” என குழப்பமாகக் கேள்வி எழுப்பினான் மித்து.

 

“உனக்கு இன்னும் சர்ஜரி பண்ணலையோன்னு நினைச்சேன் மாப்ள. நீ போய் ஆறு மாசம் ஆயிடுச்சு. ஏழு மாசத்துல அதை பண்ணிடனும்னு அப்பா சொன்னாருல்ல. அதனால தான் உன் கூட கோபமா இருக்குற மாதிரி நடிச்சேன். யாராவது டாக்டர் கிட்ட பேசி உனக்கு எப்படியாவது என் இதயத்தை கொடுக்கலாமுன்னு நினைச்சேன் டா. நான் உன்னோட நல்லா பேசிட்டு திடீர்னு அதுக்கு பிறகு இல்லாம போயிட்டா உன்னால தாங்கிக்க முடியாது. அதனால அப்போவே விலகிப் போய் சர்ஜரி பண்ணி உன்னை வாழ வைக்கத்தான் என் வாயாலே உன்னை துரோகின்னு சொல்லிட்டேன்” என அனைத்தையும் விளக்கினான் விஷு.

 

அவனது நட்பில் உள்ளம் உருகினாலும் தனக்காக அவனது வாழ்வை அழித்துக் கொள்ள போனதை நினைத்து முறைத்தான்.

 

“உன் ஹார்ட்டை எடுத்துட்டு நீ இல்லாத உலகத்துல நானும் இருப்பேன்னு கனவு கண்டியாக்கும். அப்புறம் விசாரிச்சியா?” என்று கேட்டான்.

 

“ஆமா! மகேஷ் டாக்டர் கிட்ட கால் பண்ணி கேட்டேன். உனக்கு சர்ஜரி பண்ணியாச்சுனு அவர் சொன்னார். அதுக்கு பிறகு தான் உன் கூட பேசினேன்” முழுவதுமாகக் கூறினான்.

 

மித்ரன் விஷ்வாவை கை அசைத்து அழைக்க, நண்பனை அறிந்தவனோ அவனை நெஞ்சோடு சேர்த்து அணைத்து தலைவருடி விட்டான்.

 

“இனிமேல் நமக்குள்ள பிரிவே வரக் கூடாது விஷு” என்று மித்ரன் சொல்ல, “நீ சொல்லிட்டல்ல. இனி பிரிவு நம்ம பக்கமே வராது. அப்படி நம்மளை நெருங்கப் பார்த்தாலும் அதை செருப்பால அடிச்சு ஓட ஓட விரட்டிடுவேன் ஓகேயா” என சிரித்தான் காளை.

 

எல்லோர் இதழ்களிலும் புன்னகை மலர “எப்பா முடியலையே ராமா! இந்த தோஸ்துங்க ரெண்டும் ஓவராத்தான் போகுதுங்க. தாங்க முடியலையே” கண்களைப் பெரிதாக்கி பொய்யாக அலுத்துக் கொண்டாள் அக்ஷரா.

 

“உன்னால முடியலைன்னா போ. எங்கள பாத்து கண்ணு வைக்காதடி” அவள் தலையில் நங்கென்று கொட்டினான் விஷ்வா.

 

“அப்பா பாருங்கப்பா. எப்போ பாரு என்ன கொட்டிக்கிட்டே இருக்கான். அதனால் தான் நான் வளரவே மாட்டேங்குறேன்” என உதடு பிதுக்கி ஹரிஷிடம் முறையிட்டாள்.

 

“உன்னை கொட்டினாலும் நீ வளரவே மாட்ட அக்ஷுமா! நீ குள்ள வாத்து மாதிரி இருந்துட்டு என் பையன குற்றம் சொல்லாதே” சிவகுமார் விஷ்வாவுக்கு சார்பாகப் பேசினார்.

 

“போ சிவு! நீ மோசம் அவனுக்கு தான் சப்போர்ட் பண்ணுற”

 

“ஏய் வாலு! அப்பாவை இப்படியா பேர் சொல்லி கூப்பிடுவ?” செல்லமாகக் கடிந்து கொண்டார் நீலவேணி.

 

அவரைப் பார்த்து சிரித்து ” இல்ல அத்தைமா பொய் சொல்லாதீங்க. உங்க புருஷனை நீங்க மட்டும் தான் செல்லமா சிவுன்னு கூப்பிடனும். அதானே அண்ணிக்கு வேணானு சொன்னீங்க. எனக்கு தெரியும்” என கண் சிமிட்டினாள் வைஷ்ணவி.

 

“ஆத்தீ..! நீயும் இந்த வாலில்லாக் குரங்கு அக்ஷு மாதிரி தான் வாயாடி இருக்கியே. நான் எப்படித்தான் இந்த ரெண்டையும் சமாளிக்க போறேனோ?” கன்னத்தில் கை வைத்தார் நீலவேணி.

 

“என் அம்முலுவை குரங்குனு சொல்லாதீங்க அம்மா” என்று மித்ரன் நீலவேணியிடம் சண்டைக்கு வர,

 

“அய்யோடா! சப்போர்ட்ட பார்த்தியா இவளுக்கு” விஷ்வா வியந்தான்.

 

“நான் தான் சொன்னேன்ல அவன் என் பக்கம் தான். இல்லையா அருள்?” கணவனை நோக்கினாள் அவள்.

 

தலையை நாலா பக்கமும் உருட்டி “எஸ்! உன் பக்கமும் தான்.‌ விஷு பக்கமும் தான். ரெண்டு பேர் பக்கமும் நான் நிற்பேன்” என்றான் மித்து.

 

“விட்டுக் கொடுக்க மாட்டியே இந்த வீணா போன விஷுவ” நொடித்துக் கொண்டாள் அக்ஷரா.

 

“அது தான் அவங்க பாசத்தோட பவர்” வைஷ்ணவி விஷ்வாவைப் பார்த்துக் கொண்டே சொன்னாள்.

 

அவள் பார்வையில் மயங்கி உதடு குவித்து ஊதினான் அந்த குறும்புக் கண்ணாளன். பலமுறை விளையாட்டாகவே அவளை வெறுப்பேற்ற இவ்வாறு செய்தவன் இன்று முதல் தடவை காதலுடன் பறக்கும் முத்தத்தைக் கொடுக்க, கண்களை அகல விரித்து சட்டென கீழே குனிந்து கொண்டாள் காரிகை.

 

‘மை க்யூட் நவி…! யூ ஆர் மை ஹனி’ என்று ரசனையுடன் மனதில் கொஞ்சிக் கொண்டான் நவியின் ஜித்து.

 

அக்ஷரா மற்றும் மித்ரனுக்கு தனிமை கொடுத்து மற்றவர்கள் வெளியேறிச் செல்ல, மறு நொடி தன்னவனைத் தாவி அணைத்துக் கொண்டாள் அருள் மித்ரனின் அன்பு அம்முலு.

 

நட்பு தொடரும்………!!

 

ஷம்லா பஸ்லி 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 3

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!