விஷ்வ மித்ரன்
நட்பு 28
வானக் காகிதத்தில் செந்நிறச் சாயம் பூசி விளையாடிற்று காலைக் கதிரவன்.
நெடுநேரம் கழித்துத் தான் கண்விழித்தாள் பூர்ணி. தலை வலிப்பது போலிருக்க, முகம் சுருக்கினாள் அவள்.
“குட் மார்னிங் பூக்குட்டி” கையில் காபி கப்புடன் புன்னகையே உருவாய் வந்து நின்றான் ரோஹன்.
அவளோ அமைதி ஆயுதத்தைக் கையேந்தச் சித்தம் கொண்டாள், அவன் மீது இன்னும் மீதியிருந்த கோபத்தில்.
“ஓகே குட் மார்னிங் சொல்லாத. பேட் மார்னிங்னு சொன்னாலும் பரவாயில்லை. ஆனால் காபியை மட்டும் எடுத்துக்கிட்டா போதும்” அவளருகில் வந்தான்.
“நான் எதுக்கு நீ தர்ர காபியை எடுக்கனும்? காலையிலேயே வந்து டென்ஷன் பண்ணாத” கடுப்புடன் கத்தினாள் ரோஹியின் காதல் கண்மணி.
“சரி எடுக்கவும் வேணாம். போய் ப்ரெஷ் ஆகிட்டு வா. நானே காபியை புகட்டி விடறேன்” கண்சிமிட்டினான் அவன்.
“உன் காபியே வேண்டாம்னு சொல்லுறேன். இதுல புகட்டி விடுவியா? பேசாம போயிரு ரோஹன்” கண்களை மூடிக் கொண்டாள் சினத்துடன்.
“பூக்குட்டி….!!” என அவன் பேச வரும் போது,
“ப்ச்! பூக்குட்டி பூனைக்குட்டினு சொல்லாத எனக்குப் பிடிக்கல” கண்ணைத் திறவாமல் சொன்னாள் பூர்ணி.
“சரி சொல்லலை. கன்னுக்குட்டி, பட்டுக்குட்டி, எழுந்திரு செல்லக் குட்டி. என் கூட பேசு டி அம்மு குட்டி” வார்த்தைக்கு வார்த்தை குட்டி போட்டவனை எழுந்தமர்ந்து விழியெனும் சுடரால் சுட்டெரித்தாள் செங்காந்தள் பெண்ணவள்.
“ஷட்அப் மேன்! உன் கூட பேசுற நிலமைல நான் இல்லை. அவ்ளோ ஆத்திரமா வருது. ஆதங்கமா இருக்கு. என் மேல நம்பிக்கை இல்லாத நீ யேன் டா இப்போ என் கூட பாசமா இருக்கே?” கேள்விக் கணைகளை ஆக்ரோஷமாய் வீசினாள் அவள்.
அவை குறி தப்பாமல் அவனிதயத்தைத் தாக்கி குத்திக் கிழிக்கவும் தான் செய்தன. ஆயினும் பதிலுக்கு வார்த்தை அம்பு எய்ய அவனால் இயலாதே?
அன்று அவன் தன் மௌன ஆயுதத்தால் கொடுத்த காயத்தை ஆற்ற காதல் அம்பின் மூலம் இலக்கின்றி அவளைத் தாக்க முடிவு செய்தான், குற்றவாளியாய் அவள் முன் நிற்கும் கணவன்.
சந்தேகம் என்பது அவ்வளவு பெரிய குற்றம் அல்லவா? யாருக்கு எப்படியோ அவளது மலர் போன்ற மென்மையான மனதை அது கசக்கி சின்னா பின்னமாக்கி விட்டது.
அதை கொஞ்சம் கொஞ்சமாக மறந்து அவனோடு வாழலாம் என்று துளிர் விட்ட நினைப்பை தவிடு பொடியாக்கியது அவனது தாய் மற்றும் தங்கையின் பேச்சு.
“நீ கேட்குற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாதவனா நான் இருக்கேன். ஆனால் என்ன சொன்னாலும் என்னால உன்னை விட்டுப் போகவோ, உன்னை விட்டு விலகவோ முடியாது” திண்ணமாகக் கூறினான் ரோஹன்.
“நீ என்ன விலகுறது? நானே விலகனும்னு நினைக்கிறேன். அப்படி செய்ய முடியாத நிலமை எனக்கு” என்றவளின் கை தன் வயிற்றை வருடிக் கொள்ள,
“என்ன தான் தப்பே பண்ணி இருந்தாலும் இந்தக் குழந்தை உன்னோடதும் கூட. அதை உன்னை விட்டும் பிரிக்க எனக்குக் கூட உரிமை கிடையாது. அப்பா இல்லாமல் வளரும் கஷ்டம் என் பாப்பாவுக்கு வேண்டாம். அவ சந்தோஷமா எந்த கவலைகளும் இல்லாமல் பாசத்தோடு வளரனும்” அழகான கனவு மனதில் விரிய மொழிந்தாள் பூரி.
“இப்படிலாம் பேசாத பூ. நம்ம குழந்தை நம்ம கூட எந்த குறையும் இல்லாம வளரும். அதே பாசத்தோடு உன்னையும் பார்த்துக்க ஆசைப்படுறேனே. அதை யேன்டி ஏத்துக்க மாட்டேங்குற? எனக்கு பண்ண தப்பை சரி செய்ய ஒரு வாய்ப்பு தர மாட்டியா?” அவளது கையைப் பிடித்துக் கெஞ்சுதலுடன் பார்த்தான் ஆடவன்.
பதில் சொல்ல முடியாது திணறினாள் அவனது மனைவி. அவன் மீது கொண்ட அளவில்லாத அன்பு அவன் மீதிருந்த கோபத்தை திரை கொண்டு மறைக்கச் சித்தம் கொண்டது. ஆயினும் ஏதேவொன்று தடுக்கவும் தான் செய்தது.
‘உன்னைக் காயப்படுத்தினது யாரா இருந்தாலும் அதுக்கு கண்டிப்பா பதிலடி கொடுப்பேன். என் பூ போன்ற பூவையே கலங்க வெச்சுட்டாங்கள்ல?’ மனதினுள் பொங்கியவனுக்கு அது தன் தாய் என்று தெரிந்தால்?
“காபி குடி. ப்ளீஸ் மா. நைட்டும் எதுவும் சாப்பிடல” காபியை நீட்டும் அவன் முகம், அவளை கீ கொடுத்த பொம்மையாக மாற்ற அதை வாங்கி பருகினாள்.
கப்பை நீட்டிய தன்னவளைக் கண்டு அடக்க மாட்டாமல் நகைத்தான் அவன்.
“டேய் காமெடி ஏதாவது ஞாபகம் வந்துச்சா? இப்படி கெக்க பிக்கேனு சிரிக்குறே?” என வினவினாள்.
“காமெடி ஞாபகம் வரலை. உன்னைப் பார்த்ததும் சிரிப்பை அடக்க முடியலை. ஹா ஹா” வாயைப் பொத்தி சிரித்தவனைக் கண்டு கடுப்பாகியது காரிகைக்கு.
“என்னனு சொல்லிட்டுத் தான் சிரியேன். என்னைப் பார்த்து சிரிக்கிறன்னா என் முகத்துல காமெடி படமா ஓடுது?” முறைத்துப் பார்த்தாள் அவள்.
“அதை நீயே பாரு” என அவளை அழைத்துச் சென்று கண்ணாடி முன் நிறுத்த, அதில் தன் முகத்தைப் பார்த்தாள்.
காபி குடித்ததில் வாயோரத்தில் மீசை போன்று அடையாளம் இருக்க, “இதுக்கு போயா இவ்வளவு சிரிப்ப?” இடுப்பில் கை குற்றினாள் பூர்ணி.
“சிரிப்பு தானா வந்துருச்சு. ஆனாலும் பார்க்க அழகா இருக்கே என் மீசைக்கார பூனைக்குட்டி” அவளது மூக்கைப் பிடித்து ஆட்டினான்.
“போடா கிறுக்கா” அவன் தலையில் தட்டி விட்டு வாயைத் துடைக்க கையெடுக்க, “வெயிட் வெயிட்” என அவளைத் தடுத்தவன் ஃபோனை எடுத்து அவளைத் தோளோடு சேர்த்து அணைத்திட,
“என்ன பண்ணுறே?” என்று அலைபேசியைப் பார்த்துக் கேட்டவளைக் கண்டு கண்சிமிட்டி படபடவென செல்ஃபீ எடுத்துத் தள்ளினான் ரோஹி.
“எதுக்கு போட்டோ எடுத்த?” முறைப்போடு கேட்டாள் அவள்.
“என் பொண்டாட்டியோட நான் எடுத்தேன். உனக்கென்ன?” என்று தெனாவெட்டாகக் கேட்டு அவள் வாயைத் தன் கையால் துடைத்தான்.
“இப்போ நான் பண்ண போறதையும் எதுக்குனு கேட்ப. சோ முன்னாடியே சொல்லிடறேன். என் பொண்டாட்டிக்கு நான் கொடுப்பேன்” பூடகமாக பேசினான்.
“என்ன கொடுக்க போறே? டாச்சரா?”
“எஸ்! அழகான டாச்சர். ஸ்வீட்டான டாச்சர்” புரியாமல் நோக்கிய தன் விண்மீன் பெண்ணின் கன்னத்தில் பச்சக்கென முத்தமிட்டான் மன்னவன்.
“டேய்ய்ய்….” பற்களை நற நறவெனக் கடிக்க ஆரம்பித்த பூர்ணியைப் பார்த்து,
“இட்ஸ் கியூட் டாச்சர் பப்பிமா. லவ் யூ பேபிமா. குட் பை புஜ்ஜிமா” பறக்கும் முத்தத்தைக் கொடுத்தான் அவன்.
“இங்கே வாடா மைதாமா” என்று பக்கத்தில் இருந்த டெடி பியரைத் தூக்கி அவன் மீது வீசி விட்டு துரத்தினாள்.
“மீ எஸ்கேப் டார்லுமா” என்றவாறு ஓடினான் ரோஹி.
…………………
மித்து வீட்டின் முன் சீறிப் பாய்ந்து நின்றது விஷ்வாவின் பைக். அதற்கு மித்து வீட்டின் மீது பாசமோ இல்லையோ, அதன் மீது அமர்ந்திருக்கும் ஆடவனுக்கோ அங்கு வசிக்கும் பெண்ணவள் மீது கொள்ளைப் பிரியம்.
“நவிமா! எங்கே டி இருக்கே? பொண்ணுங்களை கண்டுக்காம இருந்தவனையே இப்படி கன்னா பின்னானு காதலிக்க வெச்சுட்டியே. தன்னந்தனியா புலம்ப விட்டுட்டியே. எல்லாம் பண்ணிட்டு நீ மட்டும் ஜாலியா இருக்கியா? இரு வரேன்” ஹெல்மட்டைக் கழற்றி பைக்கில் மாட்டி விட்டு கேட்டைத் திறந்து கொண்டு சென்றான்.
ஊஞ்சலில் முதுகு காட்டி அமர்ந்திருப்பவளைக் கண்டு உற்சாகம் பீறிட்டது அவனுக்கு.
ஓசைப்படாமல் மெல்ல காலடி எடுத்து வைத்து அவளை நோக்கி செல்ல, “டேய் மாங்கா மடையா! உனக்கு என்னைப் பார்த்தால் லூசு மாதிரி தெரியுதா?” என்ற அவளது பேச்சில் அப்படியே ஃப்ரீஸாகி நின்றான்.
‘யாரைச் சொல்லுறா? இப்படி கோபமா இருக்காளே யாரோ அந்த பாவப்பட்ட ஜீவன்?’ இது நம் நாயகனின் மைன்ட் வாய்ஸ்.
“என்னை வெச்சு செய்யுறல்ல? ஒரு நாளைக்கு உன்னைக் கதற விடுறேன் டா ராட்சசா” என்றவளது கையில் ஃபோன் இருந்ததைக் கண்டு அதில் இருக்கும் ஒருவனைத் தான் திட்டுகிறாள் என்பது புரிந்தது.
“மூஞ்சைப் பாரு. எப்போ பாரு கள்ளச் சிரிப்பு, சில நேரம் எட்டிப் பார்க்கும் கோபம், குறையாத பேச்சும், ஓயாத குறும்பும். உன்னை மாதிரி ஒருத்தன பார்த்ததே இல்லை டா” இப்போது கோபம் போய் அவள் குரலில் ஒரு வித மென்மை தெரிந்தது.
“அது யாரு? என் நவி குட்டியை ரசிக்க வைத்தது?” சிறு பொறாமையும் உள்ளுக்குள் எட்டிப் பார்த்தது.
“நீ பேசுற பேச்சுக்கு அப்படியே மூஞ்சுல குத்து விடனும்னு தோணும். வாயினா அப்படி ஒரு வாய் டா உனக்கு” செல்லக் கோபத்துடன் சிணுங்கினாள் விஷுவின் அழகு நவி.
“ஹல்லோ வைஷ்ணவி” என்று அழைத்து அவள் முன் சென்று நின்றான் அவன்.
திடுமென வந்தவனை சற்றும் எதிர்பாராததால் ஸ்தம்பித்து நிற்கலானாள் அவள்.
“ஓய்! பேசு வாயாடி” அவள் முகத்தின் முன் சொடக்கிட்டான் காளை.
“ஹா..ஹான். எப்போ வந்தீங்க?” திக்கித் திணறிக் கேட்டாள் வைஷு.
“இப்போ தான். ஏன் இவ்ளோ தடுமாற்றம்?” அவனது புருவ இடுக்கு சுருங்கியது.
“உங்களை எதிரிபார்க்கலேல. அதான் சடனா வரவும் ஒரு மாதிரி ஷாக் ஆயிட்டேன்” தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு கூறினாள்.
“ஆமா! இவ்ளோ நேரமா யாரைத் திட்டுன? அது யாரு மாங்கா மடையன்?” நெற்றியை நீவி விட்டுக் கொண்டான் ஜித்.
“மாங்கா மடையன் இல்லை. அது தேங்கா கடையன்னு சொன்னேன். நான் கடைக்கு தேங்காய் வாங்க போனேனா அவன் என்னை ரொம்ப நேரம் காக்க வெச்சுட்டான். அதான் வறுத்தெடுத்துட்டு இருந்தேன்” இதழ் குவித்து காற்றை ஊதித் தள்ளினாள் மாது.
“ஓஓ அப்படியா? அப்பறம் அவனை மாதிரி ஒருத்தனை பார்த்ததே இல்லைனு சொன்ன. அவ்ளோ பெரிய அப்பாடக்கரா அவன்?”
நாடியில் விரல் தட்டி யோசித்து விட்டு “ச்சே ச்சே இல்லை. பார்க்க தகர டப்பா மாதிரி இருப்பான். ஆனால் அவனுக்குத் தான் அப்பாடக்கர்னு நினைப்பு” என்று இதழ் சுளித்தாள்.
“அவனை நானும் பார்க்கனும்னு தோணுது. அவன் ஃபோட்டோ உன் கிட்ட இருக்குனு நினைக்கிறேன். எங்கே காட்டுறியா?” ஆவல் மேலிடக் கேட்டான் விஷ்வா.
“அவன் ஃபோட்டோ இல்லை” அலைபேசியை பின்னால் மறைத்தாள் அவள்.
“காட்டு நவி. அவன் தகர டப்பாவா இல்லை சோப்பு டப்பாவானு பார்த்து சொல்லுறேன்” அவளை நோக்கி கையை நீட்டினான்.
“இல்லை வேணாம் விஷு. விட்றுங்களேன்” கண்களைச் சுருக்கிக் கெஞ்சினாள் வைஷு.
“நோ வே எனக்கு பார்க்கனும்” அவளை நோக்கி சென்று போனை எடுத்துப் பார்த்தவனின் முகத்தில் எவ்வித சலனமுமில்லை.
‘ஹப்பாடா! ஃபோன் ஆஃப் ஆகி இருக்கும். சோ பார்த்திருக்க மாட்டான்’ நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டாள்.
“அதில் சார்ஜ் இல்லை. தாங்க சார்ஜ் போட்டுட்டு வரேன்” என்று தொலைபேசியைக் கேட்டு கையை நீட்டினாள்.
“இவன் தான் தேங்கா கடைக்காரனா?” முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க போட்டோவைக் காட்டினான் அவன்.
அதைப் பார்த்து அதிர்ந்து போனாள் அக்குறும்பழகி. போட்டோவில் கைகளை மார்புக்கு குறுக்காகக் கட்டி ஸ்டைலாக நின்றிருந்தான் விஷ்வஜித்.
“வி.. வி..விஷு” சொற்பஞ்சம் ஏற்றபட்டது அவளுக்கு.
“ம்ம்… வை… வை.. வைஷு” அவளைப் போலவே திக்கலுடன் அழைத்துக் காட்டினான்.
“அது உங்களைத் தான் அப்படி பேசினேன். ஈஈஈ” செவி மடலைப் பிடித்து அவனை ஏறிட்டாள்.
“தகர டப்பா…?” புருவத்தை ஏற்றி இறக்க,
“இல்லை” தலையை வேகமாக இடம் வலமாக ஆட்டினாள்.
“சோப்பு டப்பா…??” மீண்டும் கேட்டான்.
“ஹிஹி. இல்லை” உள்ளுக்குள் எடுத்த உதறலுடன் மறுத்தாள்.
“அப்போ?” அவள் பதற்றத்தை உணர்ந்து உதட்டுக்குள் எழுந்த சிரிப்புடன் வினவினான் விஷ்வா.
“தெரியலையே” உதடு பிதுக்கினாள் பாவமாக.
“நான் சொல்லட்டுமா?”
“சொல்லுங்க” என்றாள் அவள்.
“நானா சொன்னா உனக்கு பனிஷ்மண்ட் இருக்கு. பரவாயில்லையா?” என்று கேட்டதும், “ம்ம்ம்” கண்களால் சம்மதித்தாள்.
“இவன் தகர டப்பா இல்லை. வருங்காலத்தில் உன் குழந்தைகளுக்கு அப்பா” என்று அவள் கைகள் இரண்டையும் பற்றிக் கொண்டான் காதலன்.
அவன் கூறியதில் நாணத்தில் செவேலெனச் சிவந்து தான் போனாள் பெண்ணவள்.
“பனிஷ்மண்ட் தரப் போறேன். அவ்ளோ கஷ்டமா ஒன்னும் தர மாட்டேன். ஸ்வீட் பனிஷ்மண்ட். எனக்கு ஒரே ஒரு கிஸ் தா” என்று அவன் சொல்ல,
“கிஸ்ஸா?” விரிந்த வாய் மூட மறுத்தது.
“முத்தம் மா முத்தம். அதுக்கு உன் பாஷையில் வேறு ஏதாச்சும் பெயர் இருக்கா?” கிண்டலுடன் அவன்.
“இல்லை. என்னால முடியாதுங்க” அவசரமாக மறுப்பை வெளியிட்டாள் அவள்.
“அப்போ நான் மித்துவை பார்க்க கூட்டிட்டு போக மாட்டேன்”
“அண்ணாவையா? என்னைக் கூட்டிட்டு போகவா வந்தீங்க?” மகிழ்வில் முகம் மின்னியது.
“எஸ்! மித்து கால் பண்ணி உன்னையும் அழைச்சுட்டு வர சொன்னான். பட் அதுக்குள்ள என்னை மாங்கா மடையனாக்கிட்ட” பாவம் போல் சொன்னான் அவன்.
“நீங்க என்னை கடுப்பாக்கினதை நினைச்சு பார்த்தேன். அதான் கொஞ்சம் எமோஷனலாகி ஏதேதோ உளறிட்டேன்” அவன் முகம் பார்த்தாள், தவறு செய்த குழந்தையாக.
“ஓகே ஓகே. போகனும்னா ரெடியாகிட்டு வா” என்றதும் சற்று முன் கேட்ட முத்தத்தை மறந்து விட்டான் என நினைத்து துள்ளிக் குதித்து ஓடினாள் அவள்.
“முயல் குட்டி மாதிரி போறாளே. பார்க்கும் போதே உன்னை இழுத்து எனக்குள்ள பொத்திப் பாதுகாக்கனும்னு நினைக்க வைக்கிறியே. கூடிய சீக்கிரமே உன் கிட்ட லவ்வை சொல்லுறேன் ஹனிமா” தன்னவளைக் கொஞ்சிக் கொண்டான் ஜித்து.
“ரெடி விஷ்வா” என்று வந்து நின்றவளை இமைக்க மறந்து பார்த்தான் அவன்.
“வாங்க போகலாம்” என்று பைக்கின் அருகே வந்தவளை அமர விடாது கையை வைத்துக் கொண்டான் அவன்.
“எதுக்கு இப்படி பண்ணுறீங்க. டிக்கெட் தந்தா தான் ஏற விடுவீங்களோ சார்?” முறைப்புடன் பார்த்தாள் பாவை.
“யாஹ் அஃப்கோர்ஸ்! டிக்கெட் தரனும். குயிக்கா கொடு” கன்னத்தைக் காட்டினான்.
அவன் கூறிய டிக்கெட் எது என்று அவளுக்குப் புரிய, கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள்.
“என்ன பண்ணுறே நவி? எனக்கு இப்படி பண்ணா பயம் வந்துரும். நீ வெட்கப்படாமல் இருந்தால் தான் நல்லா இருக்கு” என அவன் வம்பிழுக்க,
“போடா டேய்! என் கிட்ட ஒரு நாளைக்கு சிக்காமலா போயிருவ”
“இப்போவே உன் கிட்ட சிக்க ரெடியா தான் இருக்கேன். நீ தான் என்னை சிக்க வைக்க வலை போட மாட்ற” கண்ணடித்தான் ஆடவன்.
“வலை பின்னிட்டே இருக்கேன். ரெடியானதும் அதை விரிச்சு உன்னை பிடிச்சுருவேன். அப்பறம் இந்த விஷு மீனால துள்ளவும் முடியாது. நீந்திக் குதித்து ஆட்டம் போடவும் முடியாது” பெருமையாக சொன்னாள் அவள்.
“இப்போவே குட்டி ஆட்டம் போட்டுக் காட்டுறேன்” என்றதோடு நில்லாமல் அவள் கன்னத்தில் முத்தம் வைத்தான், அதிரடியாக.
“போடா ராட்சசா” அவன் தோளில் கையைப் பொத்திக் குத்தினாள் நவி.
“கடன் கூடிட்டே போகுது நவி. நான் கடன் கொடுக்குறதில் கொடை வள்ளல். நான் அளவில்லாமல் தந்தால் நீ தான் திரும்பி அதை என் கிட்ட தர முடியாம திணற வேண்டி வரும்.
சோ கடனை சீக்கிரம் அடைச்சு கடன் இருக்குற முத்தங்களை தரப் பார்” அவளுக்கு பைக்கில் அமர இடம் கொடுத்தான்.
“கேட்காமல் கிடைக்குறது கடன் இல்லை உதவி. அதை கண்டிப்பா திரும்ப கொடுக்கனும்னு அவசியம் இல்லை மிஸ்டர் விஷ்வா” என்று கூறி அவன் பின்னால் அமர்ந்தவளின் மனமோ,
‘நீ கடன் தரலனாலும் இதை வட்டியோட சேர்த்து திரும்ப பல மடங்கா ஒரு நாளைக்குத் தருவேன். கொஞ்சம் பொறுத்திரு மை லவ்லி ஜித்து’ என கொஞ்சிக் கொண்டது.
………………….
கதவைத் திறந்து உள்ளே நுழைந்த விஷ்வா கண்டது, கண்களை மூடியிருந்த மித்ரனைத் தான்.
அவனுதட்டில் உறைந்திருந்த புன்னகையைக் கண்டு தானும் புன்னகைத்தவனை, “மாப்ள” என அழைத்தவாறு விழி திறந்தான் நண்பன்.
“எப்படிண்ணா அவரைக் கண்டு பிடிச்சீங்க?” இந்தக் கேள்வி அம்பை எய்தது வைஷ்ணவி தான்.
அக்கேள்வியைக் கேட்கும் அவசியமே விஷ்வாவுக்கு இருக்கவில்லை. அதன் பதிலைக் கூட அவன் அறிவான் அல்லவா?
“அவன் என் உணர்வு டா. இந்த மித்துங்குற உடல் இருக்கக் காரணமே விஷ்வா அப்படிங்குற உயிர் தான். உயிரும் உடலுமா இருக்குற எங்க நட்பு எனக்கு அவன் வந்ததை இதயத்துடிப்பு மூலமா உணர்த்திடுச்சு பாப்பா” மென்னகையுடன் பதில் கூறினான் அண்ணன்காரன்.
“வாவ்! அண்ணா உங்க நட்பைக் கண்டு வியக்குறதா, எனக்கும் அப்படி இல்லையேனு ஏங்குறதா, இல்லை பொறாமைப்படுறதானு தெரியல. எப்போவும் நீங்க இப்படியே இருக்கனும்னு வேண்டிக்குறேன்” இப்போதும் மித்ரனின் பேச்சில் பூரித்தாள் தங்கை.
“நான் வர முன்னால நீ யாரைப் பற்றி நினைச்சுட்டு இருந்த?” கை கைட்டி கேள்வி கேட்டான் விஷு.
“என் ஸ்கூல் ப்ரெண்டைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன் டா”
“அது யாரு? உன் கூட ஒட்டிக்க பார்ப்பானே அந்த அர்ஜுனா?” முகம் கடுகடுத்தது அவனுக்கு.
“அர்ஜுன். உன்னை மட்டும் முறைச்சு முறைச்சு பார்ப்பான் அவன் தானே?” சிறு சிரிப்பு தவழ்ந்தது மித்துவின் இதழில்.
“அவனே தான். நீ எதுக்கு அவனை நினைக்கனும்? அவனை ஒருக்காலும் நினைக்கக் கூடாது” முகத்தை உப்பிக் கொண்டு நண்பனைப் பார்த்தான் விஷ்வா.
“ஏன்? ஏனாம். அவன் அழகா கொழு கொழுனு இருப்பான் தானே. இப்போ நினைக்கும் போது கூட அந்த குண்டுக் கன்னத்தை கிள்ளி பார்த்திருக்கலாம்னு தோணுது” பழைய நினைவில் முகம் மலர்ந்தான்.
“நான் வேணான்னு சொல்லுறேன். நீ அவனை நினைக்குற. அவனைப் பற்றி பேசுற” கோபம் கொண்ட விஷ்வாவை விழி கொட்டாமல் நோக்கினாள் வைஷு.
அடுத்த வீட்டுப் பிள்ளை மீது அன்பு கொண்டு கொஞ்சும் தாய் மேல் செல்லக் கோபம் கொண்டு ‘என்னை மட்டும் கொஞ்சு’ என்பது போல் நிற்கும் குழந்தையாக இருந்தவனின் இந்தப் பரிணாமம் ஆச்சரியமாகவும், அழகாகவும் இருந்தது.
தன்னைக் கடுப்பாக்கி, முத்தமிட்டு, ரசித்து, வாயாடும் விஷ்வாவா இவன் என வியந்த பார்வை நவியிடம்.
“இப்போ யேன்டா கோவப்படுற? அர்ஜுன் கியூட்னு சொன்னேன்” நண்பனின் முகம் பார்த்தவனுக்கு குபுக்கென சிரிப்பு எட்டிப் பார்த்தது.
“அப்போ நான் கியூட் இல்லையா?”
“அடேய்! நீ கியூட் இல்லை டா. என்னோட ஹார்ட் பீட்” என்றான் மித்து.
“சும்மா பொய் சொல்லாதே. அந்த பஜ்ஜு அஜ்ஜுனையே நினைச்சுக்க. அவனைத் தேடிப் போய் கன்னத்தைக் கிள்ளி உன் பல வருட நிறைவேறாத ஆசையை நிறைவேத்திட்டு வா” முகத்தைத் திருப்பிக் கொண்டான் விஷு.
“கோவிச்சுக்காதே டா. உன்னை கோபப்படுத்திட்டேனு பாப்பா கோவிச்சுக்க போறா” கிண்டலாக சொன்னான் மித்து.
“கூலாக்க ட்ரை பண்ணுற. பேசாதே” என்றவனைப் பார்த்தவாறு அதற்கு மேல் பேசாமல் மௌனியாகிப் போனான் நண்பன்.
ஓரிரு நொடிகளில் அனைத்தும் மறந்து, “மித்து உனக்கு ஒன்னு தெரியுமா?” என்று கேட்டு அவனருகே அமர்ந்து கொண்டான் விஷ்வா.
“சொல்லு விஷு” கோபத்தை மறந்து போனதை அவனே மறந்து விட்டதை உணர்ந்து மனதினுள் சிரித்துக் கொண்டான் மித்து.
“என்னை ஒரு பொண்ணு தகர டப்பானு சொல்லிட்டா. என்னை பார்த்தா அப்படியா இருக்கு?” தன்னைத் தானே பார்த்துக் கொண்ட விஷ்வாவின் பேச்சில் மூச்சு விட மறந்து போய் நின்றாள் வைஷ்ணவி.
‘சொல்லிருவானோ? அண்ணா என்ன சொல்லுமோ? என்னைப் பதற வைக்கிறதே இவனுக்கு வேலை’ உள்ளுக்குள் பிதற்றினாள் பாவை.
“அது யாரு என் மாப்ளயை அப்படி சொன்னது?” என விசாரித்தான் அருள்.
“அது ஒரு புள்ளப் பூச்சி டா. நீ விடு”
“ஹீரோவுக்கான பத்துப் பொருத்தமும் பக்காவா இருக்கிறவனை தகர டப்பானு சொல்லி இருக்காளே. அவளுக்கு ரசனையே இல்லை விஷு”
‘அண்ணா கிட்ட போட்டு கொடுத்து என்னை பயப்பட வெச்சுட்டல்ல. உனக்கு இருக்கு’ மனதினுள் வெகுவாய் புகைந்தாள், விஷுவின் வருங்கால மனையாட்டி.
“சூப் கொண்டு வந்ததை மறந்தே போயிட்டேன். அம்மா தான் செஞ்சு கொடுத்தாங்க” என்றவாறு கொண்டு வந்த சூப்பை எடுத்தான்.
“அம்மா கூட நீ நல்லா பேசுற தானே விஷு?” மித்ரனின் ஆராய்ச்சிப் பார்வை நண்பனை துளைத்தது.
“ஆமாடா என் அம்மாவோட செல்ல மகனே! அவங்க கூட நல்லா சூப்பரா பேசுறேன் போதுமா?” எனக் கேட்க, தலையாட்டினான்.
“பசிக்குது மாப்ள. சீக்கிரம் தா” அவசரப்படுத்தினான் மித்து.
அவனது நீட்டிய கையை அப்புறப்படுத்தி தானே கரண்டியால் அவனுக்கு ஊட்டி விட்டான் விஷ்வா.
அவனை அன்புடன் பார்த்துக் கொண்டு சாப்பிட்டான் மற்றவன்.
சற்று முன்பு விஷ்வா குழந்தையாக சண்டை போட்டான். இப்போது அவன் தாயாக ஊட்டி விட, அவனுக்கு சேயாய் மாறிப் போயிருந்தான் மித்ரன்.
அவன் போதுமென மறுக்க, தலையசைத்து விட்டு மீதமிருந்ததைத் தானே பருகி முடித்தான் விஷு.
“நீ சூப் குடிப்பியா? முன்னெல்லாம் உனக்கு பிடிக்காதே”
“ம்ம் பிடிக்காது தான். உனக்கும் கூடத் தான் அவ்வளவா பிடிக்காது. ஆனால் இப்போ நீ அதை குடிக்க வேண்டிய அவசியத்தில் இருக்கும் போது நானும் அதையே செய்யுறேன்” சாதாரணமாக தோளைக் குலுக்கியவனை இமைக்காமல் பார்த்தான் தோழன்.
“என்னை அப்படி பார்க்காத மாப்ள! வெட்கமா வருதுல்ல. அக்ஷுவைப் பாரு”
“போடா தடியா” அவன் வயிற்றில் செல்லமாகக் குத்தினான் மித்ரன்.
“வீட்டில் தனியா இருக்க கஷ்டமா இருக்கா பாப்பா?” தங்கையிடம் கேட்டான் அண்ணன்.
“நாளைக்கு டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு அப்பா சொன்னாருல்ல. ஒரு நாள் தானே ஒரு கஷ்டமும் இல்லை. கண் மூடித் திறக்குறதுக்குள்ளே போயிரும்” என்றவளின் தலையை வருடி விட்டான் மித்து.
“உன் தங்கச்சியை பார்த்துக்க தான் டா எல்லாருக்கும் பெரிய கஷ்டம்” இடை புகுந்த விஷுவிடம்,
“அதான் உன் கிட்ட ஒப்படைச்சு இருக்கேன். நீ பார்த்துப்ப தானே?” என்றான் நண்பன்.
“போங்கண்ணா! நீங்களும் என்னை கலாய்க்குறீங்க” அவளோ சிணுங்கி விட்டு தன்னவனைப் பார்க்க,
மித்து அறியாமல் இதழ் குவித்துக் காட்டியவனை மூக்கு முட்ட முறைத்துத் தள்ளினாள் விஷ்வஜித்தின் இதய அரசி!
நட்பு தொடரும்….!
ஷம்லா பஸ்லி