விஷ்வ மித்ரன்
💙 நட்பு 31
வானதேவதையை இருள் அசுரன் கவ்விக் கவர்ந்து சிறைப்பிடித்திருந்தது.
கட்டிலில் அமர்ந்து கால்களை மடித்து அதில் முகம் புதைத்திருந்தாள் பூர்ணி. அவள் மனத்தில் ஒரு வித சஞ்சலம்.
மெல்ல எழுந்து பூனை நடை போட்டு வாசலை எட்டிப் பார்க்க அவள் வரும் போது எப்படி இருந்தானோ அப்படியே சோபாவில் அமர்ந்து தலையைக் கைகளால் தாங்கிக் கொண்டிருந்தான் ரோஹன்.
அவனின் நிலை மனதைப் பிசைந்திட, அருகில் சென்று அமர்ந்து, அவன் தோள் தொட்டாள்.
சட்டென நிமிர்ந்து அவளை நோக்கியவனின் விழிகளில் தெறித்த வெறுமை பாவையவளைக் கொன்று புதைத்தது. அவனை அவ்வளவு கவலையில் பார்த்ததே இல்லை.
“ரோஹி…!! அப்படி பார்க்காதே டா. எனக்கு ஒரு மாதிரி இருக்குது” அவனைக் கலங்கிய நேத்திரங்களால் தழுவினாள்.
“பூ எனக்கு.. எனக்கு உன்னை சந்தோஷமா பார்த்துக்க முடியாமல் போச்சுல்ல?” திக்கித் திணறிப் பேசியவனின் வாயில் கை வைத்துத் தடுத்து,
“வேணாம் டா இது மாதிரி பேசாத” என்றவளோ அவனைக் கைகளை விரித்து அழைப்பு விடுக்க,
அச்செய்கையில் இருந்த செய்தியைப் படித்தவனோ அவளைத் தாவி அணைத்துக் கொண்டான். அவனது அணைப்பு மேலும் மேலும் இறுகியது.
அவ்வணைப்பில் காமமில்லை. அன்பிருந்தது, அதனைத் தேடும் ஏக்கம் மிகைத்திருந்தது. தவிப்பும் தாயன்பைத் தேடும் சேயின் துடிப்பும் நிறைந்திருந்தது.
அவன் பார்வையும் வதனமும் சொன்ன செய்தி புரியாமல் நின்றவளுக்கு இந்த அணைப்பு கூறிய செய்தி புரிந்தது.
ஆரம்பத்தில் அவன் தவிப்பை புரிந்து கொள்ளாதவள், தற்போது உணர்ந்து கொண்டாள், அவன் மனம் ஏனோ காரணத்தால் நிலையின்றித் தவிக்கிறது என்று.
“ரோஹி என்னாச்சு டா உனக்கு?” அன்பில் குழைந்து எழுந்த வினாவை மனதிற்குள்ளேயே புதைத்துக் கொண்டாள்.
எதுவும் பேசாமல் அவன் சிகையை மென்மையாய் வருடிக் கொடுத்து அவன் முகம் பார்க்க,
“பூ! அப்படியே பண்ணு. ப்ளீஸ்” என அவளது கையைப் பிடித்து தன் தலையில் வைத்தான் ரோஹன்.
“ம்ம் சரிடா” நேசம் பொங்க அவனுக்குத் தாயாகிப் போனாள் தாரம்.
அன்பை மட்டுமே கொண்ட அந்த ஸ்பரிசம் கணவனை உருக வைக்க, அவள் வயிற்றில் முகம் புதைத்தான் ஆழமாக.
“ஸ்ஸ்! ரோஹி” பிடவை விலகி வெளித் தெரிந்த பளிங்கு இடையில் அவனது சவரம் செய்யப்படாது ஆங்காங்கே முளைத்த மீசை குத்த கூச்சம் கொண்டு அவன் முடியைக் கொத்தாகப் பற்றினாள் மலரன்ன மங்கையவள்.
“டேய் என்னை மன்னிச்சுரு டா. ஏதோ கோபத்தில் வார்த்தையை விட்டுட்டேன். என்ன இருந்தாலும் நான் அப்படி பேசியிருக்க கூடாது” அவனிடம் தயக்கமாகக் கூறினாள் அவள்.
“நீ யார் மனதையும் தெரிஞ்சே நோகடிக்குறவ இல்லை. அப்படி இருந்தும் இப்படி டக்குனு பேசிட்டேனா உன் மனசை நான் எவ்வளவு ஆழமாக காயப்படுத்தி இருக்கேன்னு புரியுது. நான் தான் மன்னிப்பு கேட்கனுமே தவிர நீயில்லை”
“நீ என்ன சொன்னாலும் என் மனசு ஆறலை! சாரி டா”
“யம்மா தாயே போதும். விட்டா இன்னிக்கு பூரா சாரி கேட்டுட்டே இருப்ப போலிருக்கே”
“சாரி கேட்கலைனா வேற என்ன பண்ணனுமாம் சாருக்கு? ஒரு மார்க்கமா பேசுறே?” அவன் முகம் நோக்கினாள் அவள்.
“உன்னைப் பார்த்தா ஒரு மார்க்கமா இல்லை பல மார்க்கமா ஆயிடுறேன் நான். என்ன பண்ணட்டும்?” அவள் தாடை பற்றிக் கேட்டான் காளை.
“அப்படி என்னத்த இருக்கு என் மூஞ்சுல?” புரியாமல் அவள்.
“உருட்டி மிரட்டுற கண்கள், முறைச்சுப் பார்க்கும் பார்வை, சுளிக்கும் உதடுகள், கூர்மையான இந்த மூக்கு இதெல்லாம் என்னை ஒவ்வொரு மனநிலையில் ஆழ்த்துகிறது பூ” அவள் முகத்தில் விரலால் ஊர்வலம் நடாத்தினான் நாயகன்.
“ரோ…ரோஹி” உணர்வுகள் ஊசி முனையில் அல்லாடலானது ஆடவனின் அல்லி ராணிக்கு.
“ம்ம் ரோஹி தான். உன்னோட ரோஹி” சற்று முன்னிருந்த அவனது மனநிலையை அடியோடு மாற்றியிருந்தாள் பூர்ணி.
“உனக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லையே? ஆபீஸ்ல ஏதும் வர்க் ப்ரஷரா?” அவனிடம் மென்மைனாக வினவினாள்.
“நோ.. நோ டா! அய்ம் ஃபைன்” அவளது கூந்தலைக் காதோரம் சொருகி விட்டவனுக்கு தனது வீட்டில் நடந்ததை அவளிடம் கூற கிஞ்சித்தும் விருப்பமில்லாது தான் போயிற்று.
அதனால் அவள் வெகுவாக காயப்படுவாள் என்பதை அறிந்தவனோ அதனை மறைக்க முடிவு செய்தான்.
“அப்படினா ஓகே டா”
“வா அப்படியே ஒரு வார்கிங் போயிட்டு வருவோம்” என அவன் அழைக்க மறுப்பேதும் சொல்லாமல் சென்றாள்.
“இன்னும் ஃபைவ் டேய்ஸ்ல மித்து, வைஷு வெட்டிங் வருது டா. நாம போகனும்ல?” குரலில் உற்சாகம் துள்ளக் கேட்டவளை ஏறிட்டு,
“கண்டிப்பா போறோம் சரியா?” என அவள் கையைப் பிடித்துக் கொண்டான்.
இருள் சூழ்ந்த நேரம்!
இதமான கைகளின் உரசல்!
இணையின் காதலாடும் பார்வையில் அந்த நடைப் பயணம் கூட இனிமையாய் அமைந்தது.
“ஐ லவ் யூ பூ! இனிமேல் உன்னை ஃபீல் பண்ண வைக்க மாட்டேன்” அவள் நெற்றியில் அழுத்தமாக இதழ் புதைத்தான் ரோஹன்.
அம்முத்தத்தில் கரைந்து போனவளின் முகத்தில் ஜொலித்த பிரகாசமும் உணர்வுக் கலவையுமே அவனது ஐ லவ் யூ’விற்கு பதிலாக அமைந்ததாக உணர்ந்தான் அவன்.
…………….
இரவுணவு முடிந்து ஹரிஷுடன் கதையளந்து விட்டு மாடிப் படிகளில் ஏறி யன்னலோரமாக இருந்த நாற்காலியில் அமர்ந்தாள் வைஷ்ணவி.
ஈரம் கலந்த காற்று சற்று சூடான கன்னத்தை வருடி இதம் கொடுக்க விஷவாவின் நினைவு அவளை அழகாய் தீண்டியது.
“விஷ்வா…!! குறும்புக்குப் பெயர் போனவன், சரியான சில்மிஷக்காரன், மயக்கும் பேச்சுக்காரன்” வஞ்சியின் நெஞ்சம் வஞ்சனையின்றி அஞ்சாத காளையவனை வர்ணிக்கலானது.
“உனக்கு என்னைப் பிடிக்கும் விஷு அது எனக்குத் தெரியும். அது காதலா? இல்லை வெறும் அன்பா? எனக்குப் புரியல ஜித்து. உன் காதலுக்காக நான் காத்திருக்கேன்” என்று மனதினுள் பேசியவளுக்கு நேற்று கோயிலுக்குச் சென்ற போது சந்தித்த பெண்ணின் முகம் நினைவடுக்குகளில் தோன்றியது.
அத்தோடு அவளுடனான சந்திப்பும் காணொளியாக மனதில் ஓடலானது.
வழக்கம் போல் கோயிலுக்குச் சென்று சாமி கும்பிட்டு விட்டு குளக்கட்டில் அமர்ந்திருந்தாள் வைஷு.
விசும்பும் சத்தம் அவள் செவியை அடைய பக்கத்தில் இருந்த பெண்ணை நோக்கினாள். முதுகு குலுங்குவதில் அவள் அழுவது புரிந்தாலும் யாரோ எவரோ என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.
சிறிது நேரத்தில் அப்பெண் எழுந்து செல்லும் போது மயங்கிச் சரிவதைக் கண்டு, “ஹே பார்த்து” என அவளைத் தாங்கிப் பிடித்தாள் வைஷ்ணவி.
சிலர் அவளது மயக்கத்தைத் தெளிவித்து விட்டு நகர்ந்து செல்ல, அவளது அழுகையைக் கண்ட நவி, “யாருமா நீ? எங்கிருந்து வர?” என வினவினாள்.
“எ..என் பெயர் ஆரா. பக்கத்துல தான் வீடிருக்கு. எனக்கு உங்களைப் பார்க்கும் போது இறந்து போன என் அக்கா ஞாபகம் வருது” விசும்பலுடன் அவள் கையைப் பிடித்தாள் அந்த பெண். பார்க்க அவளது வயதை விட ஓரிரு வயது இளையவள் போல் இருந்தாள்.
“அப்படியா? நீ ரொம்ப வீக்கா தெரியுற. உன் அப்பாம்மா நம்பர் சொன்னா கால் பண்ணி அவங்களை வர சொல்லுறேன். நம்பர் சொல்லு”
“எனக்குனு யாருமே இல்லைக்கா. நான் ஒரு அநாதை. எனக்காக இருந்த அக்காவும் கேன்சர் வந்து இறந்துட்டா. நா..நான் ஒரு அநாதை” என்றாள் ஆரா.
அவளைக் காண பரிதாபமாக இருந்தது பெண்ணவளுக்கு. ‘அநாதை’ பற்பல வருடங்களாக அவளையும் அழைக்க பயன்பட்ட வார்த்தை அல்லவா? அது எவ்வளவு துயரம் நிறைந்தது என்பதையும் அவள் அறிவாள்.
“எனக்கு என்ன ஆறுதல் சொல்லுறதுனே தெரியலடா. யாருமில்லாமல் வாழும் வாழ்க்கை எவ்வளவு கொடுமையானதுன்னு எனக்கும் தெரியும். உனக்காக கண்டிப்பா நான் வேண்டிக்குறேன். உனக்குனு ஒருத்தன் கண்டிப்பா வருவான் ஆரா. உனக்கு எல்லாமா மாறுவான்” உறுதிமொழி கோடுத்ததோடு அந்தப் பெண்ணுக்காக மனதார வேண்டிக் கொள்ளவும் செய்தாள்.
“வருவான் இல்லைக்கா வந்தான். என்னை உயிரா நேசிக்க ஒருத்தன் வந்தான். அநாதையான எனக்கு தாயா மாறி என்னைத் தாங்கினான். நானும் அவனை ஏத்துக்கிட்டு லவ் பண்ணுனேன்.
என்னை அவ்வளவு அன்பா பார்த்துக்கிட்டான். அவன் என் விச்சு! அவன் படிச்ச காலேஜ்ல நானும் படிச்சேன். அப்போ என்னை லவ் பண்ணுனான். அப்பறமும் என் கூட டச்ல இருந்தான்” என்று சொல்லி நிறுத்தினாள் ஆரா.
“அவ்வளவு பாசமா இருந்திருக்கார்ல. இப்போ எங்கே உன் விச்சு?” சற்றே ஆர்வமாகக் கேட்டாள் வைஷ்ணவி.
“ஆனால் கடந்த ஒரு மாசமா என் கூட பேசலை. என்னைப் பார்க்கவும் வரலை. ஒரு நாள் வந்து அவனுக்கு கல்யாணம் பிக்ஸ் பண்ணிட்டாங்கன்னும் அவனைத் தேடி வீட்டுக்கோ ஆஃபீஸ்கோ வரக் கூடாதுன்னும் சொல்லிட்டான். மீறி வந்தா என் விச்சு செத்துருவானாம்! நான் என்ன பண்ணட்டும்கா?” கேவிக் கேவி அழுதாள் ஆரா.
“ஆரா ப்ளீஸ்மா அழாத. அவருக்கு ஏதாவது ப்ராப்ளம் வந்து அப்படி சொல்லி இருக்கலாம்ல? உன்னை அப்படி நேசிச்சவர் திடீர்னு விட்டுட்டு போவாரா?”
“போயிட்டான்! என்னை கை விட்டுட்டான். விச்சுவுக்கு கல்யாணம் ஆகப் போறது நிஜம். இன்னும் ஒன் ஒன் வீக்ல அவனுக்கு வெட்டிங். என்னால முடியல
நான் வாழவே கூடாதுக்கா. என்னை மாதிரி அநாதைங்களுக்கு யாருமே வாழ்க்கை தர மாட்டாங்க. நாமல்லாம் குப்பை தான் மத்தவங்களுக்கு. விச்சு! உன் ஹனியை விட்டு வேற யாரையோ கட்டிக்க நினைக்க எப்படிடா மனசு வந்துச்சு?” புலம்பியவளைக் காண ஒரு மாதிரி இருந்தது வைஷ்ணவிக்கு.
“அழாத ஆரா! உங்க காதல் உண்மைன்னா விச்சு கண்டிப்பா வருவார். உனக்காக வருவார்”
“அவன் இல்லாம என்னால வாழ முடியாது. விச்சு உன் ஹனியை அழ விட மாட்டேனு சொல்லுவல்ல நான் அழுறது உனக்குக் கேட்கலையா?” கதறி அழுதவள்,
“நான் சும்மா வந்த உங்களை பிடிச்சு வச்சு என் சொந்தக் கதை சோகக் கதைகளை சொல்லி ஃபீல் பண்ண வெச்சுட்டேன்ல? சாரிக்கா. நான் போய் முகம் கழுவிட்டு வரேன்” என சென்றாள் ஆரா.
தளர்ந்த நடையோடு செல்லும் ஆராவைப் பார்த்த மெல்லிய மனம் படைத்த நவிக்கு இதயத்தில் பாரம் ஏறியது. சிலநிமிடங்கள் கழித்தும் அவள் வராது போகவே அங்குமிங்கும் தேடினாள். அவளைக் காணவில்லை.
அதற்குள் மித்ரன் அழைத்து நேரமாவதால் வீட்டிற்கு வருமாறு சொல்ல கனத்த மனதுடன் வீடு திரும்பினாள் அவள்.
அதனை இன்றும் நினைத்தவளுக்கு ஆராவின் அழுது வீங்கிய முகம் ஒருவித வேதனையைக் கொடுத்தது.
“ஆரா எங்கே இருந்தாலும் நல்லா இருக்கனும். அந்த விச்சுவை மாதிரி சுயநலவாத துரோகிங்களை நினைக்கும் போது பத்திக்கிட்டு வருது” என முகமறியா விச்சுவின் மீது கோபமாக வந்தது.
……………..
வாட்சப்பினுள் நுழைந்த மித்து வீடியோ கால்வரவும் அழைப்பை ஏற்று எடுத்த மாத்திரத்தில் “அம்முலு உம்மா” என்று இதழ் குவித்து முத்தம் கொடுக்க,
“அடேய் கருமம் புடிச்சவனே!” என்ற குரலில் கண்களை விரித்து நின்றான்.
“டேய் விஷு நீயா?” அதிர்வுடன் மித்ரன் கேட்க, “நான் தான் டா காதல் கண்ணனே. கால் பண்ணுனது யாருனு கூட பார்க்காம ட்ரீம் வேர்ல்ட்ல இருந்துட்டு எடுத்த உடனே முத்த மழையா பொழியுற?” புருவம் தூக்கினான் விஷ்வா.
“நான் அக்ஷுனு நெனச்சிட்டேன் மாப்ள ஹி ஹி”
“சும்மா பொய் சொல்லாத. லவ்வர்ஸ் மாதிரி பேசிக்கிட்டும் ஒட்டிக்கிட்டும் மட்டும் தான் இருக்கனு பார்த்தா கிஸ் வேற கொடுப்பியா டா வெள்ளைப் பணியாரம்?” என்ற பெண் குரல் கேட்க,
“ராட்சசி மாதிரி பேசவும் கத்துக்கிட்டியா விஷு? தேஞ்சு போன ரெக்காடர் போல கரக்ட்டா அவளை மாதிரியே பேசுறியே?” சிரிப்புடன் நண்பனைப் பார்த்தான் மித்து.
“தேஞ்சு போன ரெக்காடர் சத்தத்தைத் தான் இவ்ளோ நாளும் தேன் சிந்தும் குரல், குயிலினும் இனிய குரல்னு பொய்யா கமண்ட் கொடுத்து ஐஸ் வெச்சுக்கிட்டு இருந்தியா பக்கி?” எட்டி தன்னவனைப் பார்த்தாள் அக்ஷரா.
“அ.. அக்ஷு நீயா?” உட்சென்ற குரலில் அவன் ராகம் இசைக்க,
“இல்லை அடுத்த வீட்டு பாட்டியம்மா” பல்லைக் கடித்தாள் அக்ஷரா.
“ஏன்டா இவ பக்கத்தில் இருக்கானு சொல்லல?” மித்து பாவமாகக் கேட்கும் போது அவனருகில் வந்து உட்கார்ந்தாள் வைஷ்ணவி.
“டேய் பொய்காரா. நான் இருக்கேன்னு தெரிஞ்சாலும் இப்படித் தான் பேசியிருப்ப. அவ்வளவு வாய் உனக்கு. பார்த்துக்கிறேன் உன்னை” சினம் கொண்டு சீறிப் பாய்ந்தாள் அம்முலு.
தொடுதிரையில் புதிதாய்ப் பூத்த தன் இதயப் பூவை இமைக்காமல் பார்த்த விஷ்வாவின் இதயம் லப் டப்பிற்கு மாற்றமாக, “நவி, ஹனி” என தன்னவள் பெயர் சொல்லித் துடிக்கலாயிற்று.
“ஹேய் வைஷு வா வா. உன் கிட்ட ஒரு விஷயம் சொல்லனும் டி” அவளைக் கண்டு அழைத்தாள் அக்ஷரா.
“சொல்லு அக்ஷு! என்ன விஷயம்?” கையசைவில் கேட்டாள் அவள்.
“என் பாசமிகு அண்ணன் இருக்கான்ல…?” என்று அக்ஷு இழுவையாக சொல்ல ஆரம்பிக்கும் போதே,
“ஹேய் சொல்லாதடி! அக்ஷு என் தங்கக் குட்டில்ல?” என அவளது வாயைப் பொத்தினான் விஷ்வா.
“விஷு என்ன பண்ணான்?” இம்முறை மித்ரன் ஆர்வமாக கேள்வி எழுப்பினான்.
“அது… அது மாம்மை இழுத்து…?” என்று அக்ஷு வாய்க்குள் முனகிட, “அத்தையை என்ன பண்ணுனாரு?” என்ன நடந்தது என்று அறியும் உத்வேகம் நவிக்கு.
“என்ன ஒரு அவசரம் அண்ணன் தங்கச்சிக்கு. என்னை கலாய்க்கனும்னு ஒரு முடிவோடு தான் இருக்கீங்க போல” அக்ஷுவின் வாயிலிருந்த கையை எடுத்துத் தலையில் தட்டிக் கொண்டான் விஷ்வா.
“வைஷுவை நினைச்சு ஃபீலிங்ல இருந்து இருக்கான். மாம் அவனை பேசவும் அண்ணினு நினைச்சு அவங்களை இழுத்தெடுத்து கிஸ் பண்ணிட்டான் என் மொரட்டு சிங்கிள் அண்ணன்” கலகலத்துச் சிரித்தாள் அக்ஷரா.
“ஏய் அம்முலு இவனா அப்படி பண்ணது? அம்மாவுக்கே முத்தம் கொடுத்துட்டானா? ஹா ஹா” மித்ரன் கிளுக்கிச் சிரிக்க,
அவனைக் கடுப்பேற்ற ஏதாவது விடயம் கிடைக்கும் என்ற ஆவலில் இருந்த காரிகைக்கோ முத்தம் எனும் சொல்லில் வார்த்தை வர மறுத்து சதி செய்ய மலர் வதனத்தில் நாணப்பூ பூக்க செந்நிறம் கொண்டாள் நவி.
“நான் ஏதோ ஒருக்க ஃப்ளையிங் கிஸ் கொடுத்ததுக்கு அப்படி வெச்சு செஞ்ச. இப்போ நீயும் அதையே தான் பண்ணிருக்க மாப்ள” அடக்கப்பட்ட புன்னகையுடன் பார்த்தான் அருள்.
“போதும்டா மித்து. என்னை ஆளை விடு. இன்னும் டூ டேய்ஸ்ல வெட்டிங் ஆனால் உன் முகத்தில் கல்யாணக் களையே தெரியலையே மாப்ள” அவனை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான் தோழன்.
“அதெல்லாம் வரும். வர வேண்டிய நேரத்திற்கு அந்த களையை எல்லாம் வர வைக்கிறது எனக்குக் கை வந்த கலை” இல்லாத காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான் மித்து.
“த்தூ ரொம்பப் பீத்திக்காத டா”
“உனக்கும் தானே கல்யாணம் உன் கிட்ட மட்டும் அந்தக் களை இருக்கா?” என்று மித்து தலை சொரிய, “களை உள்ளுக்குள்ள தாண்டவம் ஆடுறதால தானே மாம்கு நச்சு நச்சுனு கிச்சு போச்சு” இடைமறித்து கிண்டலடித்தாள் அக்ஷு.
“அடியே பிசாசு உன்னை சாவடிக்க போறேன்” அவள் முடியைப் பிடித்து இழுக்க,
“விட்றா தடிமாடு” முஷ்டியால் அவனது வயிற்றில் குத்து விட்டாள் தங்கை.
“அம்முலு என் விஷுவை என்னடி பண்ணுற? அப்படிலாம் குத்தாத”
“ஆமா பெரிய விஷு! நீயும் அப்படித் தானே குத்து விடுவ. எனக்கு மட்டும் வேணானு சொல்லுற” சண்டைக்குத் தாயாரானாள் அம்முலு.
“நாங்க அடிச்சுப்போம் குத்திப்போம்” என்ற விஷ்வாவை இடைவெட்டி, “கிஸ் கொடுத்துப்போம்” என்று கூறினாள் வைஷு.
“இந்த கேர்ள்ஸ் ரெண்டும் நம்மளை ரொம்ப இன்சல்ட் பண்ணுறாங்க மித்து” சுட்டு விரலை காதினுள் விட்டுக் குடைந்தான் விஷு.
“விடு டா. இன்னும் ரெண்டு நாள் தானே, அதுக்கு அப்பறம் நாம சேர்ந்து அவங்களை ஒரு வழி பண்ணிரலாம்” என்று மித்து சொல்ல, “டபுள் ஓகே மாப்ள” என ஆமோதித்தான் நண்பன்.
“மாப்ளயாம் மாப்ள ஹூம்” அக்ஷரா கழுத்தை வெட்டிக் கொள்ள, “உனக்குப் பொறாமை ராட்சஸி” அவள் தலையில் விஷ்வா கொட்ட,
இப்படியே சண்டையும், சமாதானமும், கேலியும், கிண்டலும், சிரிப்புமாக நால்வரும் கொட்டமடித்தனர்.
நட்பு தொடரும்……!!
ஷம்லா பஸ்லி