32. விஷ்வ மித்ரன்

0
(0)

விஷ்வ மித்ரன்

 

நட்பு 32

 

இரவின் நிசப்தத்தைக் கிழித்துக் கொண்டு டிஜே சத்தத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது சிவகுமார் இல்லம்.

 

நாளை அவரது பாசமிகு பிள்ளைகளின் திருமணம் அல்லவா? மழலைகளின் ஓட்டமும், உறவுக்கார இளைஞர்களின் ஆட்டம் பாட்டமும், ஆண்களின் பேச்சும், பெண்களின் சலசலப்புமாக வீடே அமர்க்களமாக இருந்தது.

 

தனது அறையில் நாடியில் கை குற்றி அமர்ந்திருந்தாள் அக்ஷரா. தோழிகள் கிண்டல் செய்து சிவக்க வைத்து விட்டுக் கிளம்ப, இப்பொழுது தான் சுதந்திரமாக இத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த மூச்சை வெளியிட்டாள்.

 

விசில் சத்தத்துடன் குறுஞ்செய்தி வர எடுத்துப் பார்க்க, “முட்டபோண்டா மொட்டை மாடிக்கு யாருக்கும் தெரியாமல் வா” என மேசேஜ் அனுப்பியிருந்தான் விஷ்வா.

 

“இந்த நேரத்தில் எதுக்கு கூப்பிடுறானோ தெரியல” அண்ணனைத் திட்டிக் கொண்டு பூனை போல் மொட்டை மாடிக்குச் செல்ல, முதுகாட்டி நின்றிருந்தான் அவன்.

 

“ஹாய் விஷு தடியா” என கையைப் பொத்திக் குத்த, “அடியே” என்ற அலறலுடன் திரும்பியவனைக் கண்டு முட்டைக் கண்களை விரித்தாள் அக்ஷரா.

 

“அருள்! நீ.. நீ எப்படி டா இங்கே?” தட்டுத் தடுமாறிக் கேட்டவளைக் கண்டு, “யேன் வரக் கூடாதா?” என கண்ணடித்தான் அருள் மித்ரன்.

 

“வரலாம். ஆனால் கல்யாணம் ஆகும் வரை ரெண்டு பேரும் பார்த்துக்க கூடாதுன்னு மாம் சொன்னாங்க தானே? பின்ன எதுக்கு வந்தே?” இடுப்பில் கை குற்றி முறைத்தாள் அவள்.

 

“என் ஏஞ்சலைப் பார்க்க வந்தேன். ஆனால் அவள் திடீருனு டெவிலாகி என்னை வெச்சு கிக் பாக்ஷின் ப்ராக்டிஸ் பண்ணி முதுகெலும்பை உடைச்சுட்டாள். என்னா ஒரு அடி” முதுகைத் தேய்த்துக் கொண்டான் அவன்.

 

“நீ விஷு டிசர்ட்டைத் தானே போட்டிருக்க. அதான் அவன்னு நினைச்சேன்” பாவமாக நோக்கினாள் மாது.

 

“அதென்னடி அவன் மேல அப்படி ஒரு கோவம்? எப்போ பாரு அடிச்சுட்டே இருக்கே. என் முன்னாடி மட்டும் அடிச்சு பாரேன் உனக்கு இருக்கு” அவள் கன்னத்தில் வலிக்காமல் அடித்தான் மித்து.

 

“நீ பெரிய கொம்பனா? உன் முன்னாடி அடிக்க மட்டுமில்ல அவனை உதைக்க கூட செய்வேன். யாராச்சும் பார்த்தால் மாம் கிட்ட நான் செத்தேன்” படபடவென இமைகளை சிமிட்டினாள்.

 

“பார்த்தால் தானே ப்ராப்ளம். நாம இங்கே இருக்க போவதில்லை. போக போறோம்”

 

“நாமளா? என்னால வர முடியாது டா” மறுப்பாக தலையசைத்தாள்.

 

“முடியாதுனு சொல்லாத. வா செல்லக்குட்டி. ஒரு குட்டி ரைட்” கண்களைச் சுருக்கி கெஞ்சினான் காதலன்.

 

“நாளைக்கு கல்யாணம். அப்பறம் உன் கூடவே இருக்க போறேன். குட்டி ரைட் இல்லை லாங் ட்ரைவ்வே போகலாம். இப்போ வேணாம்”

 

“கூடவே இருப்போம் தான். ஆனால் நீ நாளைக்கு எனக்கு பொண்டாட்டி ஆயிடுவ. இன்னிக்கு ஒரு நாள் லவ்வர்ஸா வெளில போகனும்னு ஆசைப்படுறேன்” என்று கூறியவனின் ஆசை புரிந்து, “ஓகே ஓகே” என சம்மதித்தாள்.

 

“ஆனால் எப்படி போறது? எங்க சொந்தக்காரங்க யாராச்சும் பார்த்துட்டா அவ்ளோ தான்”

 

“சுவரேறிக் குதிச்சு வந்தேன். அப்படியே தான் போகனும். விஷு போகும் போது ஏணியை வெச்சிட்டு போயிருக்கான். அதை வெச்சு மொட்டை மாடில இருந்து இறங்கி காம்பவுன்ட்ல ஏறிக் குதிக்கனும். வா வா” அசரப்படுத்தியவனைக் கண்டு,

 

“போடா. என்னைப் படுத்தி எடுக்குற” என பயந்தாலும் அவன் சொன்னவாறு இறங்கி, மதிலில் ஏறியவள் அப்படியே எகிறிக் குதித்தாள்.

 

“நான் என்னமோ பயப்படுவன்னு பார்த்தா எனக்கு முன்னால குதிச்சுட்ட?”

 

“யாஹ்! சின்ன வயசுல ஐஸ்கிரீம் சாப்பிட திருட்டுத் தனமா இந்த வழியில் தானே போவேன். அந்த அனுபவம் இப்போ கைகொடுத்திருச்சு” பெருமையாகப் பார்த்தாள் அவள்.

 

அக்ஷு ஏறவுமே மித்ரனின் கைகளில் வேகமெடுத்தது பைக்.

 

“ஸ்ஸ் குளிருது அருள்” கைகளைத் தேய்த்து கன்னத்தில் வைத்து அவன் இடுப்பைச் சுற்றி கை போட்டு முதுகில் முகம் சாய்த்தாள்.

 

தோழிகளுடன் அரட்டை அடித்ததில் சாப்பிட மறந்து போனவளுக்கு இப்போது பசி வயிற்றைக் கிள்ளியது. இந்த நேரத்தில் எந்த கடையாவது திறந்து இருக்காது என்பதால் அவனிடம் சொல்லவில்லை.

 

“எங்கே போறோம் டா?”

 

“உனக்குப் பிடிச்ச ஒரு இடத்துக்கு தான்” என்றவன் பைக்கை நிறுத்திய இடத்தை வாய் திறந்து பார்த்தாள்.

 

அது ஒரு ரோட்டுக் கடை! பிரியாணி வாசம் மூக்கைத் துளைக்க, “இப்படி ஒரு கடை இருக்கா இங்கே?” என்று கேட்டாள் கனவுலகில் மிதப்பது போல்.

 

“இருக்கு. இது ஆஃப்டர் டென்கு தான் திறக்கும். இங்கே பிரியாணி செமயா இருக்குமாம். நான் கூட சாப்பிட்டதில்லை” என்றவன் ஒரு பார்சல் எடுத்துக் கொண்டு வந்து சற்று தள்ளியிருந்த வீதியோரமாக சென்றான்.

 

அந்த குறும்பாதை எவ்வித அரவமுமின்றி அமைதியாக இருந்தது. ஓராமாக ஒருவர் அமரத்தக்க பெரிய கல் இருந்தது. அதில் அமர்ந்த மித்து தன்னவளை அழைக்க, அவன் மடியில் அமர்ந்தாள் பெண்.

 

“உன் முகத்தை பார்த்தாலே தெரியுது பசிக்குதுன்னு. வாயைத் திறந்து சொன்னால் குறைஞ்சா போயிருவ?” சற்றே கடினமாகக் கேட்டான் ஆடவன்.

 

“இ..இல்லை சொல்லத் தோணல. ஆமா உனக்கு எப்படி நான் சாப்பிடலைனு தெரியும்?”

 

“விஷு தான் சொன்னான். ம்ம் சாப்பிடு” என ஊட்டி விட, அவனை அன்போடு பார்த்தபடி சாப்பிட்டாள்.

 

“அந்த லெக் பீஸைத் தா” என அதை எடுத்தவள் கையில் எடுத்துக் கொண்டு கடிக்க, “ஆத்தீ ஊட்டி விடவே பயம் வருது டி. உனக்கு இருக்கும் பசி வெறிக்கு என் விரலைக் கடிச்சு துண்டு எடுத்துருவ போலிருக்கே” மிரண்டு பார்த்தான் மித்ரன்.

 

“பசி வந்தால் பத்தும் பறக்கும் டா. அப்போ காதல் எல்லாம் கூட சிட்டுக் குருவி மாதிரி சிறகு விரித்துப் பறந்து போயிடும். விரலை மட்டும் என்ன? உன் கையையே கடிச்சு எடுத்துருவேன்” லெக்பீசை ருசித்தாள் அக்ஷரா.

 

“என் செல்ல தீனிப் பண்டாரம்” அவள் தலையில் தட்டி விட்டு ஊட்டினான்.

 

“நாளைக்கு கல்யாணம்ல அருள்? எனக்கு நினைக்கவே ஆச்சரியமா இருக்கு. உன்னை அளவில்லாமல் பைத்தியக்காரத்தனமா நேசிச்சேன். உன்னையே நினைச்சு உனக்காக வாழ்ந்தேன். நீ என்னை விட்டுட்டுப் போனப்போ கூட உனக்காக காத்திருக்கத் தோணுச்சு.

 

ஆனாலும் என் நம்பிக்கை பொய்யா போயிருமோனு ஒரு பயமும் அப்பப்போ எனக்குள்ள உருவாகும்” தன் கையைப் பிடித்த அவளது வெண்டை விரல்களின் மெல்லிய நடுக்கத்தை அவனால் உணர முடிந்தது.

 

“அம்முலு” அவள் மனம் உணர்ந்தவளாய் கையை இறுக்கினான்.

 

“ஆனாலும் என் காதல் தோற்கலை. என் நம்பிக்கை பொய்யாகலை. எனக்கு நீ கிடைச்சிட்ட டா. இனிமேல் என் கூடவே இருக்கனும்”

 

“கண்டிப்பா நான் உன் கூட இருப்பேன் தங்கம். உன்னை விட்டுப் பிரிஞ்சு தவிக்க விட மாட்டேன்” அவள் நெற்றியில் முத்தமிட்டான் வேங்கை.

 

“அது போதும் அருள்” மனநிறைவுடன் அவன் மார்பில் சாய்ந்தாள் அவனது தேவதை.

 

பின்னர், “நீ எப்படி விஷு டிசர்ட் போட்டே?” எனக் கேட்டவளுக்கு, சற்று முன் நிகழ்ந்ததை சொல்லத் துவங்கினான்.

 

…………….

“அம்முலுவைப் பார்க்கனும் போல இருக்கே. என்ன பண்ணுறது?” நகத்தைக் கடித்துக் கொண்டிருந்தான் மித்ரன்.

 

என்ன செய்வது என சிந்தித்தவனுக்கு நண்பனின் நினைவு வர, அவனுக்கு அழைத்து பக்கத்துத் தெருவிற்கு வர சொன்னான்.

 

“ஹல்லோ என் தங்கச்சி புருஷனே!” எனும் அழைப்புடன் கேட்டது விஷ்வாவின் குரல்.

 

“என்னடா அழைப்பெல்லாம் ஒரு மார்க்கமா இருக்கு மாப்பிள்ளை?” என சிரித்தவாறு திரும்பினான் மித்ரன்.

 

“உன் குரல் கேட்க ஒரு மார்க்கமா இருந்துச்சா அதான் நானும் அதே மார்க்கமா கூப்பிட்டேன்”

 

“உன்னோடு பேசி ஜெயிக்க முடியாது படவா” அவன் தோளில் அடித்தான் அவன்.

 

“எதுக்கு டா வர சொன்னே? எனி ஹெல்ப்?” அவன் தோளில் கை போட்டான் விஷ்வா.

 

“எனக்கு அக்ஷுவை பார்க்கனும் போல இருக்கு விஷு. ஏதாச்சும் ஐடியா சொல்லு”

 

“பொண்ணும் மாப்பிள்ளையும் நாளை காலை வரையில் பார்த்துக்க கூடாதாம் அப்படின்னு மாம் சொன்னாங்க. சோ தப்பு கண்ணா”

 

“ப்ளீஸ் ப்ளீஸ் டா. என் ப்ரெண்டு தானே?” பாவமாகக் கெஞ்சினான் காளை.

 

“இன்னிக்கு வரைக்கும். நாளைக்கு உன் வீட்டுக்கு மாப்பிள்ளை ஆயிருவேன்” நக்கல் தொனியில் பேசியவனை முறைத்துப் பார்த்தான் தோழன்.

 

“ஓகே உடனே கண்ணுல ஃபயரை பத்த வெச்சுடாத. என்ன பண்ணலாம்னு திங்க் பண்ணுவோம்” என்றவன் தான் அணிந்திருந்த டிசர்ட்டைக் கழற்றினான்.

 

“என்னடா பண்ணுற?” என மித்து புரியாமல் பார்க்க, “கராத்தே ப்ராக்டிஸ் பண்ண போறேன் வரியா? சும்மா கேள்வி கேட்காம உன் ட்ரெஸ்ஸை எனக்குக் கொடு” என்றவனின் சொற்படி இருவரும் டிசர்ட்டை மாற்றி அணிந்தனர்.

 

“நான் வெளில போயிட்டு வர நேரமாகும்னு சொல்லிட்டு வந்திருக்கேன். சோ நீ பின்னாடி காம்பவுன்ட்ல குதிச்சு தான் போகனும். மொட்டை மாடிக்கு வர சொல்லி அக்ஷுக்கு நான் மேசேஜ் போடுறேன். நீ போ” நண்பனிடம் கூறினான் விஷ்வஜித்.

 

“ஓகே டா. அச்சோ! எனக்கு ஃபேஷியல்னு ஏதோ கருமத்தை முகத்தில் பூசி கொடுமை படுத்திட்டாங்க முடியல” முகத்தைத் தேய்த்து விட்டுக் கொண்டான் மித்து.

 

“ஐடியா! எனக்கு உன் வீடு இப்போ கல்யாணக் களையில எப்படி இருக்குனு பார்க்க ஆசையா இருக்கு. சோ உன் முகத்தில் ஃபேஷியல் பண்ணதால நான் கர்சீபால முகத்தைக் கட்டிட்டு முன் வாசல் வழியா உன்னை மாதிரி போயிட்டு வரேன்”

 

“ஓஓ! என் வீட்டின் மேல் அவ்வளவு காதலா சார்க்கு?” மித்திரனின் பேச்சில் குறும்பு டன் கணக்கில் கூத்தாடியது.

 

“இருக்கு அது நான் வாழ்ந்த வீடாச்சே. அதை விட அங்கு இருக்கும் என்னோடு வாழப் போகும் பெண் மேலேயும் அவ்வளவு காதல் மித்து! எஸ் எனக்கு வைஷுவை ரொம்ப பிடிச்சுருக்கு டா” அவனிடம் கூறினான் விஷ்வா.

 

“இதை நீ உணர்ந்தது வைஷு காணாமல் போனப்போ தானே? ஆனால் அவளைப் பார்த்த அந்த நேரமே உனக்குப் பிடிச்சுருச்சுனு எனக்குத் தெரியும். உன் முகத்தில் அவளைப் பத்திப் பேசும் போது அவ்வளவு ப்ரைட்னஸ் இருந்துச்சு டா” அவன் அகத்தையே உணரும் மித்துவிற்கு முகத்தில் தெரியும் உணர்ச்சியைப் படிக்கத் தெரியாதா என்ன?

 

“சரி சரி. அப்போ சீக்கிரம் போகலாமா?”

 

“என்னை விட உனக்கு அவசரமா இருக்கே. காலில் இறக்கை கட்டிப் பறக்குறே?”

 

“கால் மட்டுமில்லை நவியைப் பார்க்க என் மனசும் இறக்கை இல்லாமலே பறக்குது” இதயத்தைத் தடவிக் கொண்டு சொன்ன விஷ்வாவை பூரிப்புடன் ஏறிட்டான் மித்து.

 

அவன் முகத்தில் தெரியும் மகிழ்வைக் காணக் காணத் திகட்டவில்லை அவனுக்கு. “மெயின் டோர் வழியா போனா உன்னை எல்லாரும் காண சான்ஸ் இருக்கு. அது நீன்னு தெரிஞ்சா ஏதாச்சும் சங்கடம் வந்துருமோனு ஒரு பயம் விஷு. எங்க சொந்தக்காரங்க எல்லாம் வந்திருக்காங்க ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி பேசுவாங்கள்ள?”

 

“நீ வீணா பயப்படுற மித்து! என்னால உன்னை மாதிரி காட்டிக்க முடியும். நீ முடி கோதுற ஸ்டைல், உன் மேனரிசம், இன்னும் உன்னைப் போல பேசக் கூட என்னால முடியும். முகத்தை மட்டும் காட்டாமல் மேனேஜ் பண்ணிருவேன்” அவன் முதுகில் தட்டிக் கொடுத்தான் விஷ்வா.

 

“அப்படினா ஓகே. டேக் கேர்” என்க, இருவரும் பைக்கையும் மாற்றிக் கொண்டு சென்றனர்.

 

………………..

ஜே ஜே என்றிருந்த மித்துவின் வீட்டின் முன் பைக்கை நிறுத்தி முகத்தை கர்சீபால் முழுதாக மறைத்துக் கட்டி யார் கண்ணிலும் படாமலும் அதே சமயம் கேசுவலாகவும் உள்ளே நுழைந்தான்.

 

அவன் விழிகளோ தன்னவளைத் தேட, “மித்து! நான் கேட்டது எங்கேடா?” என்றவாறு வந்தார் நடுத்தர வயதைச் சேர்த்தவர்.

 

“யாருனு தெரியலயே? எதையோ கேட்குறார்” மைன்ட் வாய்ஸில் பேசியவன், “என்ன கேட்டீங்க அங்கிள்?” எனக் கேட்டான்.

 

“தண்ணி கேட்டேனே” என்று அவர் கூற, “சாரி மறந்துட்டேன். இதோ இப்போவே bபாருக்கு ஒருத்தனை அனுப்பி சரக்கு வாங்கிட்டு வர சொல்லுறேன். குடிச்சு என்ஜாய் பண்ணுங்க” என வேகமாக சென்று விட்டான்.

 

“வாட்டர் தானே கேட்டேன். இந்த மித்து என்னமோ அந்த தண்ணியடிக்குறதை சொல்லிட்டு போறான். எனக்கு அந்த கெட்ட பழக்கம் கிடையாதே” தலை சொறிந்தார் அந்த மனிதர்.

 

விஷு மாடிக்குச் செல்ல, “இது என்ன மித்து முகத்தை மறைச்சிருக்கே?” ஒரு வயதான பாட்டி அவனை நோக்கி வந்தார்.

 

“நான் நாளைக்கு அழகா இருக்கனும்ல? அதான் வெயில் படாமல் முகத்தை மறைத்து இருக்கேன்” வாயில் வந்தது அடித்து விட்டான்.

 

“இந்த நேரத்தில் அதுவும் வீட்டுக்குள்ள வெயிலா? என்னப்பா சொல்லுற? சரி உன் முகத்தை ஒரு வாட்டி காட்டு கொஞ்சமாவது அழகு கூடி இருக்கானு பார்க்குறேன்” என அவன் முகத்தில் இருந்த கர்சீபைக் கழற்ற எத்தனிக்க,

 

‘அச்சோ இந்த தாய்க்கிழவி என்ன இப்படி பண்ணுது? ஏதாச்சும் பண்ணி எஸ் ஆகிரு விஷு. இல்லைனா உன் கனவு எல்லாம் புஸ்வானமா போயிரும்’ என மனதில் புலம்பியவன்,

 

“பாட்டிமா நாளைக்கு பார்த்துக்கலாம். இப்போ நான் முக்கிய வேலையா போயிட்டு இருக்கேன். அது வரைக்கும் இந்த ஹக்கை வெச்சுக்கங்க. ஐ லவ் யூ பட்டு குட்டி” என அவரை அணைத்துக் கொண்டான்.

 

“காதலா? என்னையா? உன் முகத்தையே காட்ட வேணாம். நீ என்னை கட்டிப் புடிச்சதை என் புருஷன் கண்டா அவ்ளோ தான் அய்யோ அய்யோ” அரண்டு போய் அவனைத் தள்ளிக் கொண்டு ஓடியே விட்டார் அந்த பெண்மணி.

 

சிரிப்புடன் வைஷுவின் அறையை எட்டிப் பார்க்க, உள்ளே யாரும் இல்லாததை அறிந்து உள்ளே செல்ல, “அண்ணா!” என்று ஓடி வந்து அவனை அணைத்துக் கொண்டாள் வைஷ்ணவி.

 

தன் இதய நிலவின் திடீர் அணைப்பில் தடுமாறித் தான் போகலானான் காதல் பித்தனும். “எ..எதுக்கு பாப்பா திடீர் பாசம் எல்லாம்?” மித்துவைப் போல் பேசினான்.

 

“நீங்க வாங்கி கொடுத்த கிப்டை இப்போ தான் பார்த்தேன். அந்த டெடி எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு”

 

“அப்போ நான் உனக்கு கிஃப்டா தந்த விஷ்வாவை புடிச்சிருக்கா?” என்று கேட்டான் அவன்.

 

“பிடிக்காமலா கல்யாணம் பண்ணிக்க போறேன். அவரை எனக்கு அவ்ளோ பிடிக்கும்” என்றவளுக்கு உள்ளுணர்வு ஏதோ உணர்த்த, விலகி அவனைப் பார்த்தாள்.

 

“அவ்ளோனா எவ்ளோனு சொல்லுடி கள்ளி?” கர்சீபை ஸ்டைலாக அகற்றினான் ஜித்து.

 

“நீ..நீங்களா? நான் அண்ணானு நெனச்சேன் சாரி” அவனை எதிர்பார்க்காததால் ஒருவித பயம் கலந்த ஆனந்தம்.

 

“அது கூட நல்லது தான் இல்லைனா இந்த ஹக் கிடைச்சிருக்குமா? எப்போ பாரு அடி தான் தருவ. இன்னிக்கு தான் முதன் முறையா ஒரு அழகான அணைப்பு” அவளை அணைக்க வர,

 

“யாராச்சும் வந்துட போறாங்க இருங்க” என்றவள் கதவைத் தாழ் போட்டு விட்டு, “நாம பார்த்துக்க கூடாதுனு அத்தை சொன்னாங்க தானே. பின்ன ஏன் வந்தீங்க?” என்றாள்.

 

“உன்னைப் பார்க்க தான்னா என்ன பண்ணுவ? ஆசையா வாங்க மாமானு கூப்பிட்டு வரவேற்பியா?” ஒற்றைக் கண் சிமிட்டினான்.

 

“மாமாவா அப்படி ஏன் உங்களை கூப்பிடனும்?”

 

“புருஷனை மாமான்னு கூப்பிடுவாங்க உனக்கு தெரியாதா?”

 

“தெரியும். ஆனால் உன்னையெல்லாம் அப்படிக் கூப்பிட முடியாது” என்று மறுக்கும் போது கதவு தட்டப்பட, “விஷு யாரோ கூப்பிடுறாங்க. எனக்குப் படபடனு இருக்கு” பதற்றத்துடன் அவனைப் பார்த்தாள் காரிகை.

 

“எதுக்கு இப்படி பயப்படுற? போய் கதவைத் திற” என அவன் சாதாரணமாகச் சொல்ல, “விளையாடாதீங்க. பாத்ரூம்குள்ளே போய் ஒளிஞ்சுக்கங்க” அவனைத் தள்ளிக் கொண்டு போய் குளியலறைக்குள் விட,

 

“என்னடி பண்ணுற? எனக்கு இதுக்குள்ள இருக்க முடியாது” என அவன் கூற, “பெரிய இவனாட்டம் வந்தீங்கள்ள. இங்கேயே சத்தமில்லாமல் இருக்கனும்” கதவை மூடிக் கொண்டு சென்று அறைக்கதவைத் திறந்தாள்.

 

பூர்ணியும் இன்னும் இளம்பெண்களும் அரட்டையடிக்க வைஷுவிற்கு இவர்கள் செல்ல மாட்டார்களா என்றிருந்தது. அவள் தவிப்பை உணர்ந்த பூ என்னவென்று கேட்க அவளிடம் ரகசியமாக விடயத்தைச் சொன்னாள்.

 

“அதுவா சங்கதி? சரிடி நடத்து நடத்து” என்றவள் மற்றவர்களை இழுத்துக் கொண்டு செல்ல கதவைத் தாழிட மறந்தவளோ அவசரமாக குளியலறைக்குள் செல்ல எத்தனிக்க, “அக்கா! பாத்ரூம் போகனும்” என வந்து நின்றாள் ஒரு சிறுமி.

 

“நா.. நானும் போகனும் டா அர்ஜன்ட்” என்று அவசரமாக உள்ளே நுழைந்து கொண்டவளைப் பார்த்து விஷ்வா சிரிக்க, “சிரிக்காதீங்க கடுப்பாகுது. எவ்ளோ பயந்துட்டேன்” அவனுக்கு அடித்தாள் நவி.

 

“நெஜமாவே அர்ஜன்ட்டா? நான் வேணா வெளில போய் இருக்கட்டுமா?” அவன் அக்கறையுடன் வினவ, “ரூம்ல ஒரு பாப்பா இருக்கா. உங்களைக் கண்டா என் கதை கந்தல். உன்னால நிஜமாவே எனக்கு அர்ஜன்ட் வந்திரும் போலிருக்கு” கொடுத்தாள் பாவை.

 

“கூல் கூல் நவி! உன் சூட்டை நான் குறைக்குறேன்?” அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தினான்.

 

“எ…என்ன செய்யுறீங்க?” அவளிதயம் தாளம் தப்பி எகிறி எகிறிக் குதிக்கலானது.

 

“உன் கடனை கூட்ட போறேன் நவி. அப்போ தானே கடன்சுமை கூடிருச்சுனு பயந்து சீக்கிரமே திருப்பி தருவ” ரகசியக் குரலில் பேசியவனின் மூச்சுக் காற்று அவள் கழுத்தில் மோதியது.

 

அவன் கூற்றில் மெல்லியவள் வெட்கத்தில் சிவந்து போக, தன்னை வா வா என்று அழைத்த அப்பிள் கன்னத்தைக் கடித்து வைத்தான் மென்மையாக.

 

“ஸ்ஸ்! விஷ்வாஹ்” சிறு வலியில் பூனைக் கண்களை கொஞ்சம் சுருக்கி இதழ் மடித்துக் கடித்தாள் நவி.

 

“அச்சோ என்னை வள்ளலா மாத்துற நவி” கடித்த இடத்தில் மென்முத்தம் பதிக்க, அம்முத்தத்தில் சித்தம் தடுமாறிப் போனாள் அவள்.

 

வார்த்தைகளால் சொல்லப்படாத காதல் இங்கு உணர்வுகளால் பரிமாற்றப்பட்டது. ஆயினும் வார்த்தையால் வெளியிடப்படாததால் உணர்வும் ஒரு நாள் கேள்விக் குறியாகி விடுமோ?

 

கண்களை மூடி தன் முத்தத்தின் ஈரத்தை சுகிப்பவளைக் கண்டு துடிக்கக் கூட மறந்து உறைந்தன, அவனது இமைகள்! காற்றில் விடப்படும் காற்றாடியாக படபடக்கும் மயில் பீலியை ஒத்த இமைகளில் சரணடையத் தான் தோன்றிற்று அவனுக்கு.

 

🎶 இணையே என் உயிர்த் துணையே

உன் இமை திறந்தால் நான் உறைவது ஏனடி 🎶 

அக்ஷரா பாடும் போது ஒரு நாள் மொக்கையாக கமண்ட் கொடுத்த பாடல் வரிகள் இன்று அவனுக்குக் கைக்கொடுத்து மனதினுள் இனிமையாய் ராகமிசைத்தது.

 

உண்மையில் தன் இணையின் இமைகளின் சிமிட்டுதலில் உறைந்து போய் நின்றான் அவளின் துணைவன் அவனும்.

 

கதவு தட்டும் ஓசையில் சிந்தை கலைந்தவளோ, “கடவுளே! யாரோ வந்துட்டாங்க. இப்போ என்ன பண்ணுறது?” என மீண்டும் தொற்றிக் கொண்ட பதட்டத்துடன் கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள்.

 

“யார் கூட பேசிட்டு இருந்த வைஷுமா? பேச்சு சத்தம் கேட்டுச்சு?” என்று கேட்டார் பூர்ணியின் தாய்.

 

“நான் பாத்ரூம் சிங்கர் அத்தை! ஜாலி மூட்ல இருக்கேன்ல அதான் பாட்டோட ஒரு ஆட்டம் போட்டேன்” இளித்துக் கொண்டு சமாளித்து வைத்தாள் அவள்.

 

“சரிடா. சீக்கிரம் வா தூங்கனும்ல?” என அவர் சென்று விட,

 

“ஊஃப்ப்” என்று பெருமூச்சு விட்டுத் திரும்பியவளை, “என்ன பாட்டு பாடுன நவி?” எனக் கேட்டு கோப மூச்சுக்களை விட வைத்திருந்தான் ஆணவன்.

 

“எனக்கு கல்யாண வயசு தான் வந்துருச்சுனு பாடுனேன் போதுமா? பின்ன என்னடா என்னை பட படனு பதற வைக்கிறதே உனக்கு ஆல்டைம் டியூட்டி தானே?” பொரிந்து தள்ளினாள் நவி.

 

“உடனே பாப்கார்ன் மாதிரி வெடிக்குறியே. ஏதாச்சும் பேசலாம் வா”

 

“ஏன்டா உனக்கு ரணகளத்திலும் குதூகலம் கேட்குதா? யாருடையாவது நரிக் கண்ணுல பட்டா ப்ராப்ளம் ஆகிரும்” என்றவள் சற்றே தணிந்து, “ப்ளீஸ் போங்க விஷு! நாளைக்கு சந்திக்கலாம்” என்றாள்.

 

“ஒன்னு மரியாதையாப் பேசு. இல்லை சுத்தமா கை விடு. இதென்ன ரெண்டுத்தையும் கலந்து பேசுற?” அவளை விட்டுப் போகும் மனமில்லை அவனுக்கு.

 

“அது அப்படித் தான். தயவு செஞ்சு இடத்தைக் காலி பண்ணுங்க லொலொட விஷ்வா?” என்று சொன்னவளை,

 

“லொடலொட விஷ்வாவா? உன்னை அப்பறமா கவனிச்சுக்குறேன் டி. வரட்டா?” அவள் கன்னத்தைத் தட்டி விட்டு கர்சீபால் முகத்தை மறைத்துக் கொண்டு செல்ல,

 

“என்ன மேக் டா இவன்?” நெஞ்சில் கை வைத்து பலமான மூச்சை வெளியேற்றியவளின் கன்னத்தில் அவன் தந்த முத்தத்தின் ஈரம் இருப்பதாகத் தோன்ற, “ஸ்வீட் அன்ட் மொரட்டு ஜித்து” என புன்னகையுடன் அவன் முத்தமிட்ட இடத்தை வருடினாள் விஷ்வ நவி.

 

நட்பு தொடரும்….!!

 

✒️ஷம்லா பஸ்லி

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 0 / 5. Vote count: 0

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!