விஷ்வ மித்ரன்
💙 நட்பு 40
இன்று தாய் காமாட்சியின் பிறந்த நாள் என்பதால் கோயிலுக்கு வந்திருந்தான் ரோஹன். எந்த வருடமும் போல் அவருக்கு வாழ்த்த முடியவில்லையே என்ற ஏக்கம் மனதை அழுத்திக் கனக்க வைத்தது.
சாமி கும்பிட்டு விட்டு, தாயின் பெயரில் அர்ச்சனை செய்து அன்னதானம் வழங்கியவனின் கண்களில் தென்பட்டார் காமாட்சி.
அவனைக் கண்டதும் ஓடோடி வந்தவரின் பின்னால் வந்தாள் வனிதா. “பரவாயில்லையே அம்மா பிறந்த நாளை மறந்திருப்பனு நெனச்சேன். ஆனால் மறக்காம இருக்கியே” உச்சுக் கொட்டினாள் வனிதா.
“நான் உங்க யாரையும் பார்க்க விரும்பல. பேசாம போயிடு வனிதா” அழுத்தம் திருத்தமாகச் சொன்னான் ரோஹன்.
“ரோஹன் உன்னைக் கண்டது ரொம்ப சந்தோஷம். எல்லாம் மறந்துட்டு வீட்டுக்கு வா” அன்போடு அழைத்தார் காமாட்சி.
“என்னால வர முடியாதும்மா. தயவு செஞ்சு இதற்கு மேல என்னை கூப்பிடாதீங்க. அப்படி கூப்பிடறது உங்களுக்கும் கஷ்டம் எனக்கும் கஷ்டம்” என்றவனிடம்,
“நீ இன்னும் பொண்டாட்டி மயக்கத்தில் இருந்து வெளி வரலையா? ஓவரா துள்ளுற? அந்த சிறுக்கி உனக்கு வீட்டுக்கு போக வேணானு சொல்லி இருக்காளோ?” கோபமாகக் கேட்டாள் வனிதா.
“ஏய்! கோயில்னு பார்க்குறேன். உனக்கு அவ்ளோ தான் மரியாதை” என எகிறினான் ரோஹன்.
“வெளி வரதுக்கு எனக்கு அவ மேல இருக்கிறது மயக்கம் இல்லை. காதல்! அது என்னிக்குமே இருக்கும். நீ தேவையில்லாமல் பேசாத” விரல் நீட்டி எச்சரித்தான் அவன்.
“மகாராணி பேச்சைக் கேட்டு அம்மாவையே உதாசீனம் செய்யுறியே. இதற்கு எல்லாம் நீ அனுபவிப்ப” என்று வனிதா சொல்ல,
“வாயை மூடு வனிதா! ஆயிரம் தான் இருந்தாலும் அவன் என் பையன். என் முன்னாடியே அவனைத் திட்டுவியா? வாடி” அவளை இழுத்துக் கொண்டு சென்றார் தாய்.
நெற்றியைத் தேய்த்து விட்டுக் கொண்டு திரும்பிய ரோஹன் அதிர்ந்து போனான். அவனுக்கு முன்பாக கண்களில் தீப்பொறி பறக்க நின்றிருந்தாள் பூர்ணி.
“பூ…பூ நீ எப்போ வந்த?”
“எதைக் காது கொடுத்து கேட்கனுமோ அதை உன் தங்கச்சி சொல்லும் போதே வந்துட்டேன்” பெண்புலியாய் சீறியவள் டாக்சியில் வீடு செல்ல, வேறு வழியின்றி அவளை பைக்கில் தொடர்ந்து சென்றான் ரோஹன்.
கதவை அடித்துத் திறக்கும் வேகத்திலேயே தெரிந்தது அவளது உள்ளக் கொதிப்பின் அளவு. நூறு பாகை செல்சியசையும் தாண்டி கத கதவெனக் கொதித்தது பெண்ணவளின் மலர் இதயம்.
“பூ நீ வேகமா மூச்சு விடுவதைப் பார்க்கும் போது பயமா இருக்கு. தண்ணி குடி” மேசையில் இருந்த ஜக்கில் இருந்து நீரை ஊற்றிக் கொண்டு வந்து நீட்டினான் ரோஹன்.
“எனக்கு வேண்டாம். நீயே என்னை சூடாக்குவ, அப்புறம் கூலாக்குவ. ஒன்னும் தேவையில்லை” டம்ளரைப் பறித்து டீப்பாயில் டக்கென்று வைத்தாள்.
“ஒரு நிமிஷம் நான் சொல்லுறதைக் கேளு மா” அவளை அமைதிப்படுத்த முயன்றான்.
“ஏன்டா என்னை இப்படி சாவடிக்குற? உனக்கு நான் என்ன பண்ணுனேன்? பாசமா இருக்கிற, அக்கறை காட்டுற, அரவணைக்கிற, ஆனா…ஆனால் எல்லாம் மறந்துட்டு பழையபடி மாறும் போது திரும்பவும் அதை ஞாபகப்படுத்துற மாதிரி பண்ணிடுற” தலையைக் கைகளால் தாங்கிப் பிடித்தாள் பூர்ணி.
“அது…”
“உனக்கு அம்மா வீட்டுக்கு போகாதன்னு எப்போவாவது சொல்லி இருக்கேனா? பின்ன ஏன் போகாம இருந்து எனக்கு கெட்ட பெயர் வாங்கித் தரே? சிறுக்கி,மயக்கத்தில் இருக்கேனு எல்லாம் உன் தங்கச்சி பேசினதை கேட்ட தானே?
எனக்கு யார் என்ன சொன்னாலும் அதை கண்டுக்க மாட்டேன். ஆனாலும் எவ்வளவு தான் பொறுத்துப் போறது? எனக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு. அதில் சிலரது வார்த்தைகள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால வலிங்குற ஒன்னும் வரும். வனிதா அப்படி சொல்லும் போது தாங்கிக்க முடியல. நானும் ஒரு சாதாரண மனுஷி தான்” கோபத்தை உடைத்துக் கொண்டு கவலை அவள் குரலில் சிலீரிட்டுப் பாயலானது.
இதற்கு என்னவென்று மறு மொழி சொல்வான்?
வீட்டுக்குச் செல்லாமல் இருப்பதைச் சொன்னால் அதற்கான காரணத்தையும் கூற வேண்டி வரும்.
இதையே தாங்க முடியாதவளால் அந்த கொடிய வார்த்தைகளை எவ்வாறு தாங்க முடியும்?
பதில் கூற முடியாத மௌனியாய் மனதளவில் மரித்துப் போனான் பூர்ணியின் கணவன்.
அதைத் தவிர வேறு வழியேது?
“எது கேட்டாலும் நீ இப்படியே இருக்க தானே? எல்லா சந்தர்ப்பத்திலும் உன் கிட்ட மௌனம் மட்டுமே பதிலாகக் கிடைக்குது. இந்த மௌனம் நீ தப்பு பண்ணலைங்குறதை சொல்லுதா? இல்லை உன் மனசுல ஏதேதோ கவலைகள் இருப்பதை சொல்லுகிறதா? இல்லை என்றால் நீ என் கிட்ட இருந்து எதையோ மறைக்கிறதை வெளிப்படுத்த நினைக்கிறதா என்று புரியல” இயலாமையுடன் உரைத்தாள் அவள்.
அவளும் எவ்வளவு தான் தாங்குவாள்?
பேசாமல் வீட்டிற்கு செல்ல வேண்டியது தானே? சென்று தாயின் பிறந்த நாளைக் கொண்டாடி விட்டு வந்தால் குறைந்தா போய் விடுவான்? என கோபமாக வந்தது.
வனிதாவைப் பற்றி அவளுக்கு கவலையே இல்லை. ஆனால் இவன் ஏன் மாற்றமாக நடந்து கொண்டு அவள் தனக்கு பழி சொல்லுமாறு வழியமைக்கிறான் என்பது மட்டும் புரியவில்லை.
“பூ”
“வாடிப் போச்சு டா. என்னை ஒவ்வொரு தடவையும் இப்படி கசக்கி எறிஞ்சுட்டு ஏன் திரும்பவும் பூ பூனு என்னை ஆறுதல்படுத்த வர? போடா வராத”
“நான் வருவேன். உன் கிட்ட மட்டும் தான் வருவேன்” என்று அவளை நெருங்கி அமர, “கிட்ட வரக் கூடாது. டிஸ்டன்ஸ் மெயின்டைன் பண்ணு” தள்ளிச் சென்றாள்.
அவன் இன்னும் இன்னும் நெருங்க அவளோ விலகி விலகிச் சின்று சோபாவில் ஓரத்தில் இருக்க, அவளை உரசிக் கொண்டு அமர்ந்தான் ரோஹன்.
“வேணும்னே என் கிட்ட வம்பு பண்ணாத ரோஹி! என்னை கொஞ்ச நேரம் தனியா விடு”
“உன்னை விடுறேன். ஆனால் என் பேபி கூட நான் இருக்கனும். உன் கிட்ட தானே பேபி இருக்கு. சோ நீ என் கிட்ட இருந்து தான் ஆகனும்”
“ஓஓ! அப்போ உனக்கு என்னை விட பேபி தான் முக்கியம் இல்லையா? உன் பேபிக்கு யாராவது எதுவும் சொல்வாங்கனு தெரிஞ்சால் நீ அவனை ஏச்சு வாங்குற மாதிரி எதுவும் பண்ண மாட்ட. என்னை மட்டும் தான் வேற மாதிரி ட்ரீட் பண்ணுற?” அவனுக்கு அடித்தவள் இறுதியில் ஓய்ந்து போய் அவன் தோளிலேயே தஞ்சமானாள்.
“நீ ஓவரா யோசிக்கிற பூ. முதல்ல கோயில்ல நடந்ததை மறந்து வெளியே வா”
“என்னால் நீ டக்குனு சொல்லுவதைப் போல் அப்படி எல்லாம் இலகுவா வெளியே வர முடியாது” அவன் தோளில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள் மாது.
“தண்ணி குடி” என டம்ளரை எடுத்து வாயருகே வைக்க, மறுப்பேதும் சொல்லாமல் அதைப் பருகினாள்.
மனதின் வெப்பத்தை குளிர்ந்த நீரின் சில்லிப்பு தணிக்க கண்களை மூடிக் கொண்டாள்.
“வனிதா ஒவ்வொன்று சொல்லுவாள் என்று பயத்தில் சொல்லலை. ஒரு தாயின் மனதை உணர்ந்து சொல்லுறேன் ரோஹி! உன் அம்மா வீட்டுக்கு போயிட்டு அவங்க கூட சந்தோஷமா இருந்துட்டு வா.
எனக்காக எதுவும் பார்க்காதே. கல்யாணத்துக்கு முன்னாடி எல்லாம் நீ என்னைப் பார்த்துத் தான் உன் அம்மா கூட பழகுனியா இல்லைல? அதே மாதிரி தான். அம்மா மகன் பாசத்திற்குள் பொண்டாட்டி வரக் கூடாது”
“ப்ச்! உனக்கு தூக்கம் வருதுன்னு நினைக்கிறேன். தூங்கு டா” அவள் சொன்னதற்கு விடையளிக்காமல் அவளது முதுகைத் தட்டிக் கொடுக்க ஆரம்பித்தான்.
மற்றொரு கரத்தால் தலையை இதமாக வருடிக் கொடுக்க, அவன் தோளிலேயே கண் அயர்ந்தாள் பூர்ணி.
உறங்கும் தன்னவளின் குழந்தைத்தனம் மாறா வதனத்தைப் பார்த்தவனின் இதயம் ஒரு பக்கம் கனிவிலும், இன்னொரு பக்கம் சோகத்திலும் தவித்துத் துடித்தது.
“நான் அம்மா வீட்டுக்கு போகாம இருக்க நீ காரணம் இல்லை. உன் மேல நான் வெச்ச காதல் ஒரு காரணம் என்றால் அவங்க பொண்ணைக் கண்டிக்காமல் என் பொண்டாட்டியைத் திட்ட வெச்சுப் பார்த்துட்டு இருந்து ஒரு மகனா என் மனசை நோகடிச்சதும் தான் காரணம்.
நான் வீட்டுக்கு போகாத காரணத்தை உன் கிட்ட சொல்ல முடியல டி. சொன்னா உன்னால தாங்கிக்க முடியாது. உன்னை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு நினைக்கிறேன். ஆனால் அடிக்கடி நான் அறியாமல் என் மூலமாக நீ காயப்பட்டு நிக்கிற. சாரி டி” அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான் ரோஹன்.
………………..
தன்னவனைத் தேடி அறையினுள் வந்தாள் வைஷு. அவனோ லேப்டாப்பில் ஆபீஸ் வேலைகளில் மூழ்கிப் போயிருந்தான்.
கட்டிலில் அமர்ந்து கொண்டு அவனை ஆராய்ந்தாள் வைஷ்ணவி.
லேப்டாப்பில் கூர்மையாகப் பதிந்திருக்கும் விழிகள், அடிக்கடி இடுங்கி ஒன்றிணையும் புருவங்கள், யோசனையில் சுருங்கும் நெற்றி, பேனையை எடுத்து வைத்து பரபரப்புடன் கடிக்கும் பற்களும், அதற்குள் சிறைப்படும் இதழ்களும் என அவள் கவனத்தை காந்தமாய் ஈர்த்தான் ஜித்து.
“ஓய்! உன் பார்வை ஏன் நான்ஸ்டாப்பா என் மேல விழுது? அதுவும் அவ்வளவு ரசனயா?” கேள்வியுடன் விழியுயர்த்தி அவளை ஏறிட்டான்.
“ரசிக்கிற மாதிரி இருக்கு. அதனால ரசிக்கிறேன். அழகை ரசிக்க கத்துக்கனும்” அவனை கள்ளச்சிரிட்புடன் பார்த்தாள் பாவை.
“அவ்வளவு அழகாவா இருக்கேன்? இன்னிக்கு மட்டும் புது தேஜஸ் என் முகத்தில் வந்திருக்கா? இத்தனை நாளா அனல் பார்வை தான் என் மேல் விழும். இன்னிக்கு உன் பார்வை கிளு கிளுக்க வைக்குதே” கண் சிமிட்டலுடன் அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்த்தான்.
“உங்களுக்கு பிடிக்கலைனா இனிமேல் அனல் பார்வையையே வீசுறேன்”
“யார் பிடிக்கலைனு சொன்னது? பிடிச்சிருக்கு ரொம்ம்ம்ம்ப!” என லேப்பை மூடி விட்டு அருகில் உட்கார்ந்தான்.
அவள் தோள்களில் கை வைத்து அவளது முகத்தையே உற்றுப் பார்க்க, “என்ன பண்ணுறீங்க?” என்றாள்.
“யாராவது நல்ல விஷயம் சொல்லித் தந்தா அதை உடனே லைஃப்ல எடுத்து நடப்பேன். அழகை ரசிக்கனும்னு நீ சொன்னல்ல. அழகு இல்லை பேரழகை கிட்ட வெச்சுட்டு ரசிக்காமல் இருக்கேன் என்று கில்டியா இருக்கு. அதனால ஆசை தீர ரசிக்க போறேன்” என்றவன் அவள் மீன் விழிகளோடு தன் கூர் விழிகளை உறவாட விட்டான்.
இதயத்தைக் காதல் உளி கொண்டு ஆழத்துளைத்த அப்பார்வையில் செவேலெனச் சிவந்தது அவளது வெண்முகம். அக்கன்னச் சிவப்பில் அவன் நயனங்களில் மேலும் ரசனை ஏறியது.
“அப்படி பார்க்காதீங்க” தலையைக் குனித்துக் கொண்டவளின் நாடியைப் பிடித்து உயர்த்தினான்.
“பதிலுக்கு நீ என்னைப் பார். நான் எதுவும் சொல்ல மாட்டேன்” குறும்பு கிலோ கணக்கில் துள்ளி விளையாடியது அவன் குரலில்.
“என்னால் முடியாது” என வெட்கத்தில் இமை தாழ்த்தினாள் வைஷ்ணவி.
“அடடே! என் பொண்டாட்டி நவியா இது? உனக்கு வெட்கம் எல்லாம் வருமா?” வியந்து பார்த்தான் விஷ்வா.
அவனது ‘பொண்டாட்டி’ எனும் வார்த்தையில் இருந்த உரிமை அவள் உள்ளத்தை மயிலிறகு கொண்டு வருடியது.
“ஏன் வரக் கூடாதோ?”
“பெண்களுக்கு நாணம் உரித்தான ஒன்று தான். ஆனால் அது உனக்கு வந்ததைத் தான் நம்ப முடியல”
“அப்போ நான் பெண் இல்லையா? ஆம்பளையா?” கடுகடுத்தாள் காரிகை.
“அப்படிச் சொல்ல வரலை” என்றவன், “நான் உன் கிட்ட உதவி கேட்கனும். செய்வியா?” என்று வினவினான்.
“என் கிட்ட உங்களுக்கு என்ன உதவி ஆக வேண்டும்?”
“நான் உதவி கேட்டா பண்ணுறேன்னு சொல்லி இருக்க. பண்ணியே ஆகனும்”
“சரி பண்ணுறேன். அப்படி என்னத்தைக் கேட்டுட போறீங்க?” அலட்சியமாகத் தோளை உலுக்கிக் கொண்டாள்.
“நான் இப்போ ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்ணுறேன். சோ நீ எனக்கு ஒரு எனர்ஜி பூஸ்ட் தரனும்”
“கண்டிப்பா கொண்டு வந்து தரேன். இருங்க” என எழுந்தவளின் கரத்தைப் பற்றி, “அங்கெல்லாம் போகக் கூடாது. இப்படி இருந்த இடத்தில் இருந்து தரனும்” என்றான்.
“நான் வித்தைக்காரியா? இங்கே இருந்து மேஜிக் பண்ணியா தர முடியும்?” முறைப்புடன் பார்த்தாள் அவள்.
“தர முடியும். மேஜிக் பண்ணாமல், டயர்ட் ஆகாமல், எழுந்து போகாமல் ஒரு ஸ்வீட் எனர்ஜி பூஸ்ட் உன் கிட்ட இருக்கு”
“வாய் இருக்கின்ற பெயருக்கு இல்லாத பொல்லாததையும் உளறிக் கொட்டாதீங்க. வேணும்னா ஏதாவது கூல் ட்ரிங்க் கொண்டு வரேன். இல்லைனா சும்மா இருங்க” பொய்க் கோபத்துடன் குமுறினாள்.
“அச்சோ மக்கு பிளாஸ்திரி. நீ ஆள் தான் வளர்ந்து இருக்கியே தவிர அறிவு வளரவே இல்லை. இல்லை இல்லை ஆளும் வளரலை அறிவும் வளரலை” என்று அவன் சொல்லவும் வெறியாகி விட்டாள்.
“இதோ இதோ! எதை வேணா பேசுங்க, என் உயரத்தைப் பத்தி மட்டும் இழுக்காதீங்க. இல்லைனா அவ்வளவு தான்”
“அப்படித் தான் டி இழுப்பேன் என் குட்டி பேபி. எனக்கு நீ குட்டியா இருக்கது ரொம்ப பிடிச்சிருக்கு” இரண்டு கைகளாலும் குட்டி என்பதாக செய்கை காட்டினான்.
“வேண்டாம் விஷு. நீங்க நெட்டையா இருந்துட்டு என்னை டீஸ் பண்ணாதீங்க” செல்லமாக சிணுங்கினாள் செவ்வந்தியவள்.
பின் அவளாகவே, “உங்க ஹனி நெட்டையா இருப்பாங்களா? இல்லை குட்டையா இருப்பாங்களா?” என்று விசாரித்தாள்.
“குட்டியா ரொம்ப கியூட்டா இருப்பா. குட்டிப் பசங்களைக் காணும் போது மனசுக்குள்ள ஓஓனு அன்பு பொங்கி வருமே அதே மாதிரி அவளைக் காணும் போது அப்படியே தூக்கி என் கைகுள் அடக்கி அள்ளிக் கொஞ்ச தோணும்” அணைத்துக் கொள்வது போல் கண்களில் ஆசை துளிர்க்கக் கூறினான்.
இம்முறை ஹனி’ பற்றிக் கூறும் போது வெறுப்போ கோபமோ வரவில்லை. மாறாக இதழ்களில் சிரிப்பும் மனதில் ஏனென்றே தெரியாத ஆனந்தமும் உருவானது.
“அந்த குட்டி ஹனியோட பெயர் என்ன?” என்று கேட்டாள் அடக்கப்பட்ட புன்னகையோடு.
“இப்போ சொல்ல முடியாது. கூடிய சீக்கிரமே ஹனியை உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கின்றேன்”
“ஓகே ஓகே அய்ம் வெய்ட்டிங்” என அவள் சொல்லி விட்டு, “எனர்ஜி பூஸ்ட் பத்தி சொல்லலையே?” என்றாள்.
“அதை மறப்பேனா? நான் உனக்கு எனர்ஜி பூஸ்ட் தரேன். அதைப் பார்த்து நீயும் எனக்கு தரனும்” என்றான் விஷு
அவளோ தலையசைக்க அவள் கன்னத்தைப் பிடித்து முத்தமிட்டான்.
“ஆத்தீ! இதுவா எனர்ஜி பூஸ்ட்?” என வாயைப் பிளந்தவளின் இருதயம் அம்முத்தத்தின் தித்திப்பில் மதி மயங்கிப் போயிற்று.
“எஸ்! சீக்கிரம் கொடு. எனக்கு நிறைய ஆஃபீஸ் ஒர்க் இருக்கு. அப்போ தான் டயர்ட் ஆகாம செய்ய முடியும்” என்றிட, முத்தம் கொடு, முத்தம் கொடு என்று அவள் மனம் ஓலமிட்டது.
“ம்ம் குயிக்” என அவன் அவசரப்படுத்தியவன், “உன்னால தர முடியாதுல்ல போ!” என்று முறுக்கிக் கொண்டான்.
“விஷு! கோபமா?” என்று கேட்க, “ஆமா. என் கூட பேசாத” என்றவன் மறு புறம் திரும்பி சிரித்ததைக் கண்டு கொண்டாள் வைஷு.
“கோபமே இல்லை. சும்மா கதை விடாதீங்க”
“கோபம் இருக்கு. அதையும் தாண்டி நேசம் இருக்கு” கண்ணடித்தவனைக் கண்டு காதல் பெருகியது அவளுக்கு.
“இப்போ போனாலும் ஒரு நாள் என் கிட்ட வசமா சிக்குவ. அப்போ எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமா வாங்கிக்குறேன் என் குட்டச்சி” அவளது தலையில் மெல்லத் தட்டினான் விஷ்வா.
“போடா நெட்டை, சொட்டை” என பழிப்புக் காட்டினாள் வைஷு.
“ரிசப்ஷன்கு ட்ரெஸ் எடுக்க ஷாப்பிங் போகனும்னு அக்ஷு சொன்னாளாம். நாம சேர்ந்தே போகலாம்னு மித்து கிட்ட சொன்னேன். நாளைக்கு போகலாம் நவி” என்று கூறினான் விஷ்வா.
“சரி விஷு! ஒன்னா போனா ஒரே மாதிரி ட்ரெஸ் எடுக்கலாம்”
“உன் தங்கச்சி எனக்கு முத்தம் தர மாட்டேங்குறானு மித்து கிட்ட கண்டிப்பா கம்ப்ளைன் பண்ண போறேன்”
“பண்ணிக் காட்டுங்க பார்க்கலாம். பண்ணுனீங்கனா நானும் நிச்சயமா உங்களுக்கு நீங்க கேட்ட எனர்ஜி பூஸ்ட்டைத் தருவேன்” என சொன்னவளோ விஷ்வாவின் கள்ளச் சிரிப்பைக் கண்டு, யோசிக்காமல் வாய் விட்டு விட்டோமே என நாக்கைக் கடித்துக் கொண்டாள்.
நட்பு தொடரும்….!!
✒️ ஷம்லா பஸ்லி