காளையன் கதிருடன் நடந்த விஷயங்கள் பற்றிப் பேசிக் கொண்டு இருக்கும் போது, அவனுக்கு தெரியாத ஒரு நம்பரில் இருந்து போன் வந்தது. சிறிது நேரம் போனைப் பார்த்துக் கொண்டு இருந்தவன், யோசனையோடே போனை எடுத்தான். “ஹலோ யாரு..?” என்றான்.
அந்தப் பக்கத்தில் இருந்தவன், “என்ன காளையா, உன்னோட வீட்ல இழவு நடந்திருக்கு போல.. மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அதுதான் விசாரிக்கலாம்னு போன் பண்ணினான்… என்னதான் செத்தது ஒரு வாயில்லா பிராணியாக இருந்தாலும், உங்களுக்கு வலிக்கும்ல…” என சிரித்தான். இதைக் கேட்ட காளையனுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
காளையன் அமைதியாக இருக்க, அவன் மேலும் பேசினான்.”சரி ஒரு கெட்டது நடந்திட்டுனு பார்த்தா, உங்களோட ரைஸ் மில்லுக்கு போலிஸ் வந்திட்டு போனதா தகவல் வந்திச்சு. பார்த்து காளையா கஞ்சா மூட்டையை போலிஸ் பிடிச்சிருந்தா மில்லுக்கு பூட்டுத்தான்….. என்ன செய்றது நீ புத்திசாலித்தனமாக அதை தடுத்திட்ட. ஆனால் உன்னால எத்தனை நாளுக்கு இதை தடுக்க முடியும்…? எங்கிட்ட இருந்து உங்களால தப்பிக்கவே முடியாது….” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டான்.
காளையின் கண்கள் கோபத்தில் சிவந்தன. கதிர், “என்னாச்சி அண்ணே…..?” எனக் கேட்க காளையன்,”யாரோ இதை எல்லாம் பிளான் பண்ணி செய்றாங்கடா.. ஆனால் யாருனு தெரியலை. எங்கிட்ட இருந்து உங்களால தப்பிக்கவே முடியாதுனு சொல்றான். ஆனால் அவன் எதுக்காக நம்ம குடும்பத்தை அழிக்க நினைக்கிறான்னு தெரியலையே.” என்றான்.
அதற்கு கதிர்,”விடுங்க அண்ணே, நேர்ல மோத தைரியம் இல்லாத பொட்டைப் பையன். நீங்க இருக்கும் போது இங்க யாருக்கும் எதுவும் நடக்காது அண்ணே.” என்றான். காளையன்,”சரி கதிர் இந்த விஷயம் யாருக்கும் தெரிய வேண்டாம். அவங்களுக்கு தெரிஞ்சா ரொம்ப பயப்படுவாங்க.” என்றான். கதிரும் சரி என்று கூற, கதிரை அவன் வீட்டில் விட்டு விட்டு காளையன் தன் வீட்டிற்கு வந்தான்.
சென்னையில் தனது பிளாட்டிற்கு வந்தான் சபாபதி. குளித்து விட்டு வந்து தேநீருடன் பால்கனியில் இருந்தான். அவனுக்கு கேசவன் சொன்ன விஷயங்கள், மனசைப் போட்டு குழப்பிக் கொண்டு இருந்தது. ஒரு வேளை உண்மையில் தாத்தா படிக்காத பட்டிக்காட்டுப் பொண்ணை கல்யாணம் பண்ணி வைச்சா, என்னோட வாழ்க்கை என்னாகும்?
நானும் எத்தனை நாட்களுக்குத்தான் தொழிலாளியாகவே இருக்கிறது? எங்கூட படிச்சவனுங்க எல்லாம் சொந்தமா பிஸ்னஸ் செய்றானுங்க. நான் மட்டும்தான் இங்க வேலை பார்த்திட்டு இருக்கிறன். போனதடவை ஊருக்கு போகும் போது, அப்பாக்கிட்ட பிஸ்னஸ் ஆரம்பிக்க போறன்னு சொன்னதுக்கு, தாத்தாட்ட கேளுனு சொல்லிட்டாரு. தாத்தாவோட எப்பிடி பேசுறது?
பேசாமல் கேசவன் சார் சொன்ன மாதிரி, மோனிஷாவை கல்யாணம் பண்ணா நாமளும் சொந்தம் பிஸ்னஸ் பண்ண முடியும். மோனிஷா நாகரீகம் தெரிஞ்ச பொண்ணு. எனக்கு எல்லா வகையிலும் பொருத்தமா இருப்பா. ஆனால் நாம மோனிஷாவை லவ் பண்றம்னு வீட்டில சொன்னா என்ன நடக்கும், ஒரு வேளை தாத்தா வேணாம்னு சொல்லிட்டா? “என பலவற்றை யோசித்துக் கொண்டு இருந்தான் சபாபதி.
அவனது யோசனையை தடை செய்யும் வகையில் போன் ஒலித்தது. ஸ்கிரீனில் கேசவனின் நம்பர் வந்தது. போனை எடுத்தான்.” என்ன சபா ரொம்ப யோசிக்கிறீங்க போல. “என்றார். அதற்கு சபாபதி,” அப்பிடி இல்லை சார். நான் மோனிஷாவை கல்யாணம் பண்ணிட்டா, சொந்தமா பிஸ்னஸ் பண்ண உதவி பண்ணுவீங்களா?” என்று கேட்டான்.
கேசவன் சிரித்துக் கொண்டு, “கண்டிப்பா சபா. உங்களோட திறமைதான் எனக்கு தெரியுமே அதனால நிச்சயமா நீங்க புது கம்பனியை ஆரம்பிக்க, என்னால முடிஞ்ச அளவுக்கு உதவி செய்வன். “
இதைக் கேட்ட சபாபதிக்கு சந்தோசமாக இருந்தது.” சார் எங்க வீட்ல நான் மோனிஷாவை லவ் பண்றேன். கல்யாணம் பண்ணி வைங்கனு சொல்ல முடியாது. அதனால நீங்க மாப்பிளை கேட்டு வர்ற மாதிரி பண்ண முடியுமா ப்ளீஸ்?” என்றான்.
அவன் இவ்வாறு கேட்பதில், கல்யாணத்திற்கு அவனுக்கு சம்மதம் என்று நினைத்த கேசவன், “இதில என்ன இருக்கு சபா? நீங்க ஊருக்கு போயிட்டு சொல்லுங்க. அதுபடியே செய்யலாம்.” என்றார். உடனே சபாபதி,” சரி சார் நான் ஊருக்கு போயிட்டு சொல்றன். நான் கல்யாணத்திற்கு சம்மதம் சொன்னதை, நானே மோனிஷாகிட்ட சொல்லிடுறன். நீங்க எதுவும் சொல்ல வேண்டாம் சார்.” என்றான். கேசவனும் சிரித்துக் கொண்டு சரி என்று சொல்லி போனை வைத்தார்.
நடு இரவில் அந்த ஹாஸ்பிடல் அமைதியாக இருந்தது. நோயாளிகள் இருமும் சத்தம் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது. டாக்டர்களும் நர்ஸ்களும் தமது இரவு நேர ரவுண்ஸ் சென்று விட்டு, தமது இடத்தில் இருந்தனர். இரவு நேர காவலாளிகள் தமது கடமையை செய்து கொண்டு, ஒவ்வொரு மாடிகளிலும் இருந்தனர். மலர்னிகாவின் அருகில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார் துர்க்கா.
மலர்னிகா மாத்திரை போட்டதால் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தாள். நள்ளிரவு நேரத்தில் நர்ஸ் வந்து துர்க்காவை எழுப்பி, “மலர்னிகா எப்படி இருக்கிறாங்க? உடல் வலி எப்பிடி இருக்குனு சொன்னாங்களா? என்று கேட்டார்.
அதற்கு துர்க்காவும்,”ஆமா சிஸ்டர் கொஞ்சம் தலைவலி இருக்குனு சொன்னா.” என்றார். நர்ஸ் ஒரு தடவை அவளை செக் பண்ணி விட்டு, ஆக்ஸிடெண்ட்ல தலையில அடிபட்டிருக்கு, அதுதான் தலைவலி. நீங்க கவலைப்படாதீங்க அது சரியாகிடும். என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அவர் சென்றதும், துர்க்காவிற்கு தூக்கம் வரவில்லை. அதனால் மகளின் அருகில் வந்து, அவளது நெற்றியில் முத்தமிட்டு விட்டு, அவள் அருகில் இருந்து, தலையை வருடிக் கொடுத்துக் கொண்டே மலர்னிகாவின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைத்துக் கொண்டு இருந்தார். அப்படியே அந்த கட்டிலில் தலைசாய்த்துக் கொண்டார்.
சிறிது நேரத்தில் மலர்னிகாவின் அறைப் பக்கம் வந்த முகமூடி அணிந்த உருவம், முதலில் வலது பக்கம் பார்த்தது, பின்னர் இடது பக்கம் பார்த்தது. யாரும் இல்லை என்று உறுதி செய்துகொண்டது. பின்னர் அந்த அறைக் கதவை மெதுவாக திறந்து கொண்டு, பதுங்கிப் பதுங்கி உள்ளே வந்தது. அந்த உருவம் மெல்ல மலர்னிகாவை நெருங்கியது. நல்ல உறக்கத்தில் இருந்ததாள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்து, தனது கையில் இருந்த பளபளக்கும் கத்தியை எடுத்து, அவள் வயிற்றில் குத்தச் சென்றது.
படிச்சிட்டு உங்களோட கருத்துக்களை சொல்லுங்க பட்டூஸ் 😊
Super divima