விஷ்வ மித்ரன்
💙 நட்பு 59
சூரியன் உச்சிவானில் பவனி வந்த நேரமது. அமைதியில் ஆழ்ந்திருந்தது பூர்ணியின் இல்லம்.
தன் மடி மீது சாய்ந்திருக்கும் மனைவியை அன்பாக வருடிக் கொடுத்துக் கொண்டிருந்தது ரோஹனின் கரம். இதமான தலை கோதலில் இமை மூடியிருந்தாள் அவனது மனையாட்டி.
சொற்கள் ஒன்று பேசினால், மௌனம் ஓராயிரம் பேசும் அல்லவா? இருவருள் நிலவிய தங்கு தடையின்றிய மௌனமும் பல லட்சம் கதைகள் பேசின.
“பூக்குட்டி…!!” நீண்ட நேர அமைதியைத் தவிடுபொடியாக்கினான் ரோஹன்.
அதற்கு பதிலின்றி அவள் இருக்க, மீண்டும் அதே அழைப்புடன் அவள் தோளைத் தட்டினான்.
பூப்போன்ற மெல்லிய அசைவோடு இமைகளைப் பிரித்தவளின் விழிகளில் தெரிந்த உணர்ச்சி புதுவிதமாகத் தான் தெரிந்தது அவனுக்கு.
கரைபுரண்டோடும் காதலுடன், மதிமயக்கும் போதையுடன், அளவற்ற அக்கறையுடன், ஆழமான நேசத்துடன், குறும்புச் சிரிப்புடன், கனல் கக்கும் கோபத்துடன், உயிர் வதைக்கும் வலியுடன், வெட்டி விடும் வெறுமையுடன் என்று பல ரகமாக பார்த்திருக்கும் நயனங்களில் தற்போது பிரதிபலிக்கும் உணர்வை அவனால் என்னவென்று அறிய முடியவில்லை.
“என்னாச்சு பூர்ணிமா? என்ன பண்ணுது?” பாசம் பீறிடத் தான் செய்தது ஆடவனின் குரலினில்.
“ஒன்னும் இல்லை” தலையை இடம் வலமாக அசைத்தாள் அவள்.
“அப்புறம் ஏன் ஒரு மாதிரி இருக்கே? நீ இப்படி இருந்து பார்த்தது இல்லை. முகத்தில் ஏதோ வித்தியாசம் தெரியுது”
“தெரியல ரோஹி. உன் கூட இருக்கனும் போல தோணுது”
“உன் கூட தானே இருக்கேன் தங்கம். எதுவும் யோசிக்காத. ரிலாக்ஸா இரு” என்றவன் விழிகள் அவளது நிறைமாத வயிற்றில் படிந்தது.
“நம்ம பையன் என்ன சொல்லுறான்?”
“அவனோட அப்பாவைப் பார்க்க கூடிய சீக்கிரமே வருவேன்னு சொல்லுறான். அப்பாவுக்கு அம்மா கூட இருக்க சொல்லுறான். இல்லனா வந்து உன்னை வெச்சு செய்ய போறானாம்” சற்றே தெளிந்து புன்னகையுடன் உரைத்தாள் பூர்ணி.
“அப்படி சொல்லுறது பையனா? அவனோட அம்மாவா?” மெலிதாக நகைத்தான் ரோஹன்.
“ரெண்டு பேரும் தான்” என்றவள் திடீரென்று, “ரோஹி ரோஹி இங்க பார்” என அவனது கையை எடுத்துத் தன் வயிற்றின் மீது வைத்தாள்.
குழந்தையின் நுண்ணிய அசைவை அவனால் உணர முடிந்தது. உணர்வுகள் யாவும் ஆழிப்பேரலையாய் பிரவாகித்து நின்றன அவனுக்கு.
தன் உயிரில் உருவான உயிரின் அசைவு அவனுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
அவளது வயிற்றருகே குனிந்து, “குட்டிப் பையா! நீ சொல்ல வாறது புரியுது. உன் அம்மா சொன்ன மாதிரி அவங்களை நல்லா பார்த்துப்பேன் என்னால் முடிந்த அளவு ப்ராமிஸ். அம்மாவை கஷ்டப்படுத்தாம சீக்கிரம் வந்துடு டா” வயிற்றில் முத்தமிட்டான் அவன்.
“அவன் வருவான் வருவான்” பட்டென்று சொன்னவளைக் கண்டு, “அடுப்புல ஏதாவது சமைக்க வெச்சிட்டு மறந்துட்டியா பூ?” எனக் கேட்டான் அவன்.
“இல்லையே ஏன்?” புரியாமல் தான் வினவினாள் அவள்.
“இல்லை ஏதோ கருகுற வாசம் வந்துச்சு. அதான் கேட்டேன்”
“என்னடா கிண்டலா?”
“இல்லையே, நீ எதுக்கு பொங்குற? ஓஹ் அப்படினா நான் என் பையனுக்கு கிஸ் பண்ணதைப் பார்த்து நீ பொறாமையில் பொங்கி இருக்க”
“இவரு மார்க்கோனி. ரேடியோவைக் கண்டு பிடிச்ச பெருமை வழியுது முகத்தில். நான் எதுக்கு பொறாமைப்படனும். நீயாச்சு உன் பையனாச்சு என்னமோ பண்ணிக்கங்க. நான் ஒன்னும் சொல்லல” கடுகாகப் பொரிந்தாள் பாவை.
“நீ ஒன்னும் சொல்ல தேவையில்லை. எனக்கு என் பொண்டாட்டியை கிஸ் பண்ண விட்டா போதும்” என்றவன் அவள் கன்னம் தாங்கி நெற்றியில் ஆழ்ந்து முத்தமிட்டான்.
“உன் பிள்ளைக்கு கொடு. எனக்கு எதுக்கு தாற?” முகத்தைத் திருப்ப, அவளது கன்னத்தில் முத்தமிட்டு, “என் பிள்ளைக்கு தான் கொடுக்கிறேன்” என்றான்.
அவளை லேசாக அணைத்து, “ஒன்னு இல்லை இன்னும் எத்தனை பேபிஸ் வந்தாலும் எப்போவும் எனக்கு நீ தான் முதல் குழந்தை. உனக்கு பிறகு தான் மற்ற எல்லாம். சரியா பூக்குட்டி” வினாவாய் அவளை ஏறிட்டான்.
“என் செல்ல ரோஹி” அவனைக் காதலுடன் பார்த்தாள் மனைவி.
“இப்படி சொன்னா மட்டும் பத்தாது. ஏதாச்சும் தரனுமே” தன் கன்னத்தைத் விரல்களால் வருடிக் காட்டினான்.
“வா இங்கே ஒரு அடி தரேன்” என்று கையை ஓங்கியபடி அவனை நெருங்கியவள், “அடி வேணாம்” என்றவனது கன்னத்தில் அழுத்தமாக இதழ் பதித்தாள்.
“ராட்சசி!” இதழின் ஈரம் காயாத தனது கன்னத்தைத் தடவிச் சிரித்தான் ரோஹன்.
இப்படியே நாட்கள் நகர ரோஹனின் அருகாமையை வேண்டி ஏங்கி நின்றாள் பூர்ணி. அதை உணர்ந்தவனும் தன்னால் இயன்றளவு அவளுடனே இருந்தான்.
அன்று லீவ் போட்டவனுக்கு ஆபீஸில் இருந்து அவசரமாக வருமாறு அழைப்பு வரவே மறுக்க முடியாமல் பூர்ணியிடம் சொல்லி விட்டு ஓடினான்.
சிறு பிரச்சினை ஒன்றிருக்க அதைத் தீர்த்து விட்டு வரும் போது தாமதாகி விட்டது.
“ஓ ஷிட்! ரொம்ப லேட் ஆச்சு. பூ சாப்பிட்டிருக்க மாட்டாள் இந்நேரம்” நேரத்தைப் பார்த்து தலையில் தட்டிக் கொண்டவன் கடையில் சாப்பிட வாங்கிக் கொண்டு பைக்கை வேகமாகச் செலுத்தினான்.
வாயிலில் பைக்கை நிறுத்தியவன் கேட்டது அவளது “அம்மாஆஆ” எனும் வீறிடலைத் தான். உள்ளம் பதைபதைக்க கதவைத் திறந்து கொண்டு சென்றவனோ தரையில் அமர்ந்து வயிற்றைப் பிடித்துக் கொண்டிருக்கும் மனையாளைக் கண்டு, “பூஊஊ” என்ற அலறலுடன் அருகில் சென்றான்.
“ரோஹி! வந்துட்டியா என்னை விட்டு எங்கேடா போன? எனக்கு நீ வேணும் ரோஹி. என் கூட இரு டா” அவனது சேர்ட்டைப் பிடித்துக் கொண்டு வலியுடன் பேசினாள்.
“சாரிமா! என்னால உன் கூட இருக்க முடியாம போச்சு. வேலைனு கூப்பிட்டாங்க அவாய்ட் பண்ண முடியல. இப்போ அதை விடு வா ஹாஸ்பிடல் போகலாம்” அவளைக் கையில் ஏந்திக் கொண்டான் அவன்.
அவள் எவ்வளவு நேரமாக வலியில் துடிக்கிறாளோ என்று நினைத்து அவளை விட்டுச் சென்றதற்காக தன் மீதே கோபமாக வந்தது. அடுத்த வீட்டு இளைஞன் காரை எடுத்து வர, பின்னால் அமர்ந்து அவளை இறுகப் பிடித்துக் கொண்டான்.
“ரோஹி! எனக்கு ஏதாச்சும் ஆனா நம்ம பையனை நல்லா பார்த்துப்ப தானே?” என்று அத்தனை வவியிலும் கேட்டாள்.
“ஏய்ய் அறைஞ்சேன்னா பாரு! என்ன வார்த்தை பேசுற நீ. மூடிட்டு வா” கோபமாகக் கத்தினான் அவன்.
அவளது பயந்த முகத்தைக் கண்டு தன்னையே நொந்தவன், “இப்படி பேசாத பூ! என்னால தாங்க முடியல. உனக்கு ஒன்னும் ஆகாது. நாம நம்புற தெய்வம் நம்மளை கை விடாது. நான் இல்லை நாம ரெண்டு பேரும் சேர்ந்து நம்ம பையனை ரொம்ப நல்லா வளர்க்க தான் போறோம்” அவள் முகத்தை வருடியபடி அன்பொழுகக் கூறினான் ஆணவன்.
மௌனமாய் நின்றவளோ அவனது தோளை அழுந்தப் பிடித்து வலிறைப் பொறுத்துக் கொண்டாள். அந்தப் பிடியின் அழுத்தமே சொன்னது அவளது வலியை!
வைத்தியசாலை வந்து விட பிரசவ அறையில் அனுமதிக்கப்பட்டாள் பூர்ணி. கண்களை மூடி கதவருகே சாய்ந்திருந்தான் அவன். தன்னவளின் வலி தோய்ந்த முகமே அவனுள் தோன்றி மனதைப் பிசைந்தது.
அவளது அலறல் காதை எட்டும் போதெல்லாம் துடிதுடித்துப் போனான். மித்ரன், விஷ்வா மற்றும் ரோஹனின் குடும்பத்தினர் விடயம் கேள்விப்பட்டு வந்தனர்.
தனது தோளில் பதிந்த கையின் சொந்தக்காரனான மித்ரனைக் கண்டதும், “மித்து” என அணைத்துக் கொண்டான் ரோஹன்.
“ரோஹன் ரிலாக்ஸ்! ஒன்னும் இல்லை” சமாதானம் செய்ய முயன்றான் மித்ரன்.
“பூ! என் பூக்குட்டி… அவ சத்தம் கேட்குதுல. எனக்கு அவள் வேணும். உன் பூரியை வர சொல்லு என் கிட்ட” கதறினான் சிறு பிள்ளையாய்.
“பூரி அவளோட ரோஹியைப் பார்க்க இப்போவே வந்துடுவா. நீ இப்படி மாதிரியா போய் பேச போற. அப்பறம் உன் பேபி மனசுல முதல் பார்வையிலே அழுமூஞ்சா பதிஞ்சு போனா நல்லாவா இருக்கும்? காம்டவுன்” ஆறுதல் கூறினான் மித்து.
ரோஹன் மீதிருந்த கோபம் மறந்தவனாய் அவனது தோளில் தட்டி ஆறுதலளித்தான் விஷ்வாவும்.
சற்றே நேரத்தில் கேட்ட குழந்தையின் அழுகுரலில் அனைவரும் மகிழ, ரோஹனிற்கு மேனி சிலிர்த்தது. என்றாலும் தன்னவளைக் காணத் தான் தவித்தான்.
நோர்மல் வார்டுக்கு அனுமதிக்கப்பட்டதும் அவளைப் பார்த்த நொடி கைகளை இறுகப் பற்றிக் கொண்டான்.
“ரோஹி!” என்று அழைத்தவளை உணர்வுக் குவியலோடு தான் நோக்கினான்.
அவள் குழந்தையைக் கொடுக்க, வாங்கியவன் கைகளில் மெல்லிய நடுக்கம். தன் உயிர் நீரில் ஜனித்த ஜீவனை ஏந்திய தருணம் அவன் விழிகளில் ஆனந்தத்தினால் நுண்ணிய விழிநீர்ப்படலம்!
……………
ஹாஸ்பிடலில் பூர்ணியின் குழந்தையைப் பார்த்து ஹிட்டு மித்துவின் வீட்டிற்கு வந்திருந்தனர் அனைவரும்.
“குட்டி குட்டி கைகள், அழகான கன்னம், சின்ன கண்ணு ரொம்ப கியூட்டா இருந்தான்ல” இதழ்களில் புன்னகையோடு கூறினாள் அக்ஷரா.
“வந்து மூனு மணி நேரம் ஆச்சுடி. இன்னும் பேபியை வர்ணிச்சிட்டு இருக்க” சோபாவில் சாய்ந்து கொண்டு கூறினான் விஷ்வா.
“எனக்கு அந்த பேபி கண்ணுக்குள்ளயே இருக்கு. எப்படி அழகு. அவனைக் கையில் தூக்கும் போது ரொம்ப நல்லா இருந்துச்சு” தொடர்ந்தும் குழந்தையைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தவள் மற்றவர் கண்களுக்கு வளர்ந்த குழந்தையாகவே தெரிந்தாள்.
குழந்தைக்கான அவளது ஆசை மித்ரனுக்குப் புரிந்தது. அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டான்.
நால்வரும் ஒரு புறம் அரட்டையடிக்க, மறுபுறம் சிவகுமாரும் ஹரிஷும் கதையளந்து கொண்டிருந்தனர். நீலவேணி சமையலில் மும்முரமாக இருந்தார்.
நீலவேணி ஜூஸ் கொண்டு வந்து நீட்ட அதை வாங்கிப் பருகினர்.
“மாம்! பேசாம உங்களுக்கு ஜூஸ் கடை போட்டிருக்கலாம். ஒரு தடவை கடைக்கு வந்தா எல்லாரும் உங்களுக்கு தினசரி வாடிக்கையாளராகி விடுவாங்க. அப்படிக்கு டேஸ்ட் தூக்கலா இருக்கு” என்று அக்ஷு சொல்ல,
“போடி வாயாடி. இதுக்கு மட்டும் நல்லா பேசு” அவளைச் செல்லமாக கடிந்து கொண்டு சென்றார்.
இன்று காலையில் இருந்தே சோர்வாகத் தெரிந்த மனைவியிடம், “நவிமா ஏன் டல்லா இருக்க?” என்று வினவினான் விஷ்வா.
“தெரியல ஏனோ டயர்டா இருக்கு” என ஜூஸை அருந்தியவளோ வாயைப் பொத்திக் கொண்டு எழுந்து சமயலறைக்குள் ஓடினாள்.
“என்னாச்சு நவி?” பதற்றமாக விஷு அவள் பின்னால் செல்ல, மற்றவர்களும் சென்றனர்.
அவள் வாந்தி எடுப்பதைக் கண்ட நீலவேணிக்கு ஏதோ புரிபடுவதாய் இருந்தது. ஹரிஷிடம் அவளைப் பார்க்குமாறு சொல்ல மகளின் அருகே சென்று அவளது கையைப் பிடித்துப் பரிசோதித்தார்.
“அப்பா என்ன பண்ணுறீங்க? அவளுக்கு என்னாச்சு?” குரலில் அச்சம் தொனிக்கக் கேள்வியெழுப்பினான் விஷு.
“எனக்கு புரிஞ்சிருச்சு. ஹரிப்பா அது தானே?” கண்கள் பளிச்சிடக் கேட்டாள் அக்ஷரா.
அவர் புன்னகையுடன் தலையசைக்க, “என்னடி ஆச்சு சொல்லு. இப்படி அரைகுறையா சொல்லாத” கடுப்படித்தான் விஷ்வா. மித்ரனும் அதே நிலையில் புரியாது விழித்தான்.
வைஷ்ணவியோ தலையைக் குனித்தபடி நின்றாள்.
“அடேய் மக்கு அண்ணா! நான் அத்தையாக போறேன். நீ அப்பாவாக போறடா” என்றாள் தங்கை.
“அப்… அப்பாவா…?” அவனது உள்ளத்தில் சடுதியில் உருவெடுத்த உணர்வுகள் வார்த்தைகளைக் கவ்விக் கொண்டன.
“எஸ் கண்ணா! பாப்பா ப்ரெக்னன்டா இருக்கா” என்று ஹரிஷ் கூற, வாயில் கை வைத்து மகிழ்வை அடக்கி தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்.
மனைவியைப் பார்க்க அவளோ அவனைப் பார்க்கவேயில்லை. மித்ரன் விஷ்வாவை அணைத்துக் கொண்டு வாழ்த்துத் தெரிவித்தான்.
அனைவரும் தத்தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த அவற்றை மென்னகையுடன் ஏற்றுக் கொள்ளும் தன்னவளைத் தான் காளையின் காதல் சொரியும் கண்கள் மொய்த்து நின்றன.
அக்ஷரா என்னதான் உளமாரப் புன்னகைத்தாலும் தனக்கும் குழந்தைக்கான ஏக்கம், இது போல அது தனக்கும் கிடைத்திருக்கலாமே என்ற தவிப்பு தன்னவள் கண்களில் தெரிவதைக் கண்டு கொண்டு அவள் கையைப் பற்றி யாருமறியா வண்ணம் அழுத்திக் கொடுத்தான் அருள் மித்ரன்.
விஷ்வாவோ அவள் தனியாக வரும் வரை மாடியறையில் காத்திருக்க, அதைப் புரிந்து கொண்டது தாயுள்ளம். மருமகளை மேலே அனுப்பி வைத்தார் நீலவேணி.
அறையினுள் நுழைந்தவளை ஈரெட்டில் நெருங்கி அணைத்துக் கொண்டான் விஷ்வஜித். எதிர்பார்த்தது தான் என்றாலும் அவனது இந்த அதிரடி அணைப்பில் முதலில் தடுமாறி பின் தன்னிலை மீண்டாள் பெண்ணவள்.
“ஜித்து…!!” என்று அழைக்க, “ஹனி தாங்க்யூ டி. லவ் யூ சோ மச் பொண்டாட்டி. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. தாங்க முடியல. உன்னைத் தூக்கி சுத்தனும் போல, நான் அப்பாவாக போறேன்னு கத்தனும் போலிருக்கு” அவளை இன்னும் ஆழமாக தன்னுள் புதைத்துக் கொண்டான் காதலன்.
அவளிடமிருந்து மௌனமே பதிலாகக் கிடைக்க அவளை நோக்கியவனோ விழியோரம் கசிந்த கண்ணீரைக் கண்டு பதறித் தான் போனான்.
“என்ன நவி? ஏன் அழுற? கண்ணைத் துடை முதல்ல. நீ அழக் கூடாது”
“எனக்கு அழுகையை கன்ட்ரோல் பண்ண முடியல. அநாதையா யாரும் இல்லாம இருந்தேன். உரிமையாக என்னைக் கூப்பிட ஒருத்தர் கூட இருக்கல. இப்போ எனக்குனு அன்பு காட்ட பெரிய குடும்பம்.
என்னை ராணி மாதிரி உணர வைக்க நீங்க. என்னை அன்பில் குளிப்பாட்டுறீங்க. இப்போ நமக்குனு ஒரு குழந்தை! அம்மா யாருனே தெரியாம அப்படி ஒருத்தரை அழைக்காமலே வாழ்ந்த என்னை அம்மானு உரிமையா கூப்பிட ஒரு உயிர் வர போகுதுனு கேட்டு அப்படி ஒரு உணர்வு.
இது வரை நான் இவ்ளோ சந்தோஷமா இருந்ததே இல்லை ஜித்து! அண்ணாவால எனக்கு நீங்க கிடைச்சீங்க! உங்களால எனக்குனு இன்னொரு அழகான உறவு கிடைச்சிருக்கு. உங்களுக்கு நான் பதிலுக்கு என்ன செய்ய போறேன்?” கண்ணீருடன் அவனை ஏறிட்டாள் ஏந்திழை.
“பதிலுக்கு நீ என் கூட இருந்தாலே போதும். நீ சந்தோஷமா என் கூட வாழ்வதை நான் பார்க்கனும். இதே மாதிரி நீ எப்போவும் சந்தோஷமா இருக்கனும். நீ என் பக்கத்தில் எப்போவும் இருக்கனும்.
நவி நவினு உன் பின்னாடி நான் சுத்தனும். ஜித்துனு உன் அழைப்பை நான் கேட்கனும். என் தோளில் நீ சாயனும். உன் மடியில் நான் குழந்தையா மாறனும். உன்னை என் காதலால் திணற விடனும்.
என் கடைசி மூச்சு வரைக்கும் உன் வாசம் எனக்குள்ள வேணும். இதெல்லாம் எனக்காக தருவியா?” தன் வெண்மதியிடம் விழி தீண்டி வரம் வேண்டினான் வேங்கையவன்.
அவனது வார்த்தைகளும் அதில் ஒளிர்ந்த ஏக்கமும், அதீத காதலும் அவளை முற்றாக வீழ்த்தின.
“நிச்சயமா! என்னால முடிந்த வரை நீங்க கேட்டதெல்லாம் உங்களுக்கு தருவேன். லவ் யூ சோ மச் ஜித்து” என்றவள் எம்பி நின்று அவன் இதழில் தன்னிதழ் பதித்தாள்.
அவனவளின் திடீர் முத்தத்தில் அவனுள்ளும் காதல் மேலும் முகிழ்க்க, அவளைத் தன்னோடு சேர்த்து கட்டிக் கொண்டான்.
என்றும் அவனது அதிரடியில் இவள் ஈடுகொடுக்க முடியாது போவாள். இன்றோ மெல்லியவளின் அதீத அதிரடி முத்தத்திற்கு முன் அடிபணிந்து போனான் ஜித்து. தன் மொத்த காதலையும், மகிழ்வையும் அவனில் விதைத்துக் கொண்டிருந்தாள் வஞ்சிக் கொடியவள்.
முத்தங்கள் நீண்டு முடிய, தன் மடியில் அமர்த்திக் கொண்டான் அவளை.
“உங்களுக்கு என்ன பேபி பிடிக்கும்?” என்று அவள் கேட்க, “எதுனாலும் ஓகே தான். ஆனா பொண்ணு கிடைச்சா நல்லா இருக்கும்னு தோணுது”
“ஏன்? எப்போவும் நீங்கலாம் பொண்ணு கேட்கிறீங்க?”
“இல்லடி அப்பாவுக்கு மகனை விட பொண்ணு கொஞ்சம் ஸ்பெஷல் தான் எப்போவும்.. என்ன தான் இல்லனாலும் அது உண்மை தான். ஆனா என்ன பேபி கிடைச்சாலும் பரவாயில்லை உன்னை மாதிரி அழகா கியூட்டா வந்தா” அவள் மூக்கைச் செல்லமாகக் கிள்ளி விட்டான்.
“இல்லை எனக்கு உங்களை மாதிரி சேட்டை பண்ணுற பையன் தான் வேணும்”
“ஆஹ் இந்த சேட்டை பையன் என்னலாம் பண்ணுவான்னு கொஞ்சம் பண்ணிக் காட்டவா?” என்று கேட்டவனின் குறும்புப் பார்வையில்,
“போங்க விஷு” என நாணம் பீறிட்டெழ, அவனது மார்பில் முகம் புதைத்தாள் வைஷ்ணவி.
நட்பு தொடரும்……!!
ஷம்லா பஸ்லி