விஷ்வ மித்ரன்
💙 நட்பு 60
(அருள் + அம்முலு ஸ்பெஷல்)
சில்லென்று வீசிய சாரல் காற்றின் சுகந்தம் நாசியை நிறைக்க, தன் கைவிரல்களோடு பின்னிப் பிணைந்த தன்னவளின் கரத்தை மறு கரம் கொண்டு மெல்லமாய் அழுத்திக் கொடுத்தான் அருள் மித்ரன்.
அவளுக்கோ அந்த கொடைக்கானல் குளிரில் அந்த வெப்பம் போதவில்லை போலும், கதகதப்புத் தேடி அவளவன் மார்பினில் முகத்தை ஆழப் புதைத்துக் கொண்டாள் அக்ஷரா.
“அம்முலு…!!” நெற்றியில் புரண்ட முடியை விரல்களால் பின்தள்ளி விட்டுக் காதோரம் இதழ் தீண்டி அழைத்தான் ஆடவன்.
“கொஞ்ச நேரம் இப்படியே இருக்கேன். ஒன்னும் பேசாத” முணுமுணுத்தாள் அவள்.
சில்லிடும் குளிரில் இதமாய்க் கிடைத்த அவளின் அணைப்பு அவனது பொறுமையைத் தான் மிகவும் சோதித்துக் கொண்டிருந்தது.
தலை கோதி தன்னை சமன் செய்து கொண்டவனோ அவளைக் கைகளில் ஏந்திக் கொண்டான்.
“என்ன பண்ணப் போற அருள்?”அவன் கழுத்தில் கைகளை மாலையாகக் கோர்த்தவாறு வினவினாள்.
“என்னவோ பண்ண போறேன். பேசாம இருக்கனும்” மிரட்டல் தோரணையில் சொன்னவனைக் கண்டு,
“நான் பயப்பட மாட்டேன்டா. நீ ஒன்னும் பண்ண மாட்ட” அவனது முகம் போன போக்கைப் பார்த்து அடக்கமாட்டாது நகைத்தாள்.
“அடிங்ங்! உன்னை சும்மா விட்டு வெச்சது தப்பு டி. இப்போ என்னை கலாய்க்க வரியா?” அவள் காதைச் செல்லமாக திருகி விட்டான்.
மூன்று நாட்களுக்கு முன்பு, எங்கேயாவது செல்ல வேண்டும் என்று கூறிய அக்ஷராவிடம் அடுத்த நாள் ஒரு கவரைக் கொண்டு வந்து நீட்டினான் கணவன். பிரித்துப் பார்த்தவளோ கொடைக்கானல் செல்வதற்கான டிக்கெட் இருப்பதைக் கண்டு துள்ளிக் குதித்தாள்.
“வாவ்! சூப்பர் டா சூப்பர். கொடைக்கானல் போக போறோமா?” சந்தோஷ மிகுதியில் அவனை முத்தங்களால் திக்குமுக்காட வைத்து விட்டாள் அவனது அழகிய ராட்சசி.
அதன்படி நேற்று வந்து சேர்ந்தனர். அவனோடு கை கோர்த்து எங்கும் சுற்றினாள். அவள் சொல்லும் இடமெல்லாம் அழைத்துச் சென்றான் அவனும்.
இரவானதும் குளிர் மேனியை விறைக்கச் செய்ய, விடுதியில் வந்து தங்கினர்.
விடுதியின் பின்னால் மைதானம் போன்றதொரு இடம் இருக்க அங்கிருந்த புற்றரையில் அவளை அமர வைத்தான் மித்து.
குச்சிகள் சிலதை எடுத்துப் போட்டு நெருப்பு மூட்டி விட்டு அவளருகே அமர்ந்தான்.
“அட உனக்கும் கொஞ்சம் மூளை இருக்குல்ல டா” வியப்போடு பாராட்டியவளைக் கண்டு,
“ஆமா! கொஞ்சம் மூளை இருக்கிறதால தான் உன்னைக் கட்டிக்கிட்டேன். இல்லனா சூப்பர் பிகரா பார்த்து கட்டிக்கிட்டு இருந்திருப்பேன்” பெருமூச்சு விட்டான் அவன்.
அவளுக்கோ இரத்த அழுத்தம் ஏகத்துக்கும் எகிற, “யாரு உன்னை கட்டிக்கிட்டு இருக்கிறது போடா. போய் சூப்பர் பிகரை கட்டிக்க. அப்பறம் அவளை மேக்அப் பண்ண பியூட்டி பார்லர்க்கும், டான்ஸ் பண்ண பப்புக்கும் கூட்டிட்டு போற ட்ரைவரா இருந்து சம்பளம் வாங்காத உயர்ந்த தொழிலாளியா பட்டம் வாங்கி இருக்கலாம்” கோபத்தில் மூக்கு நுனி சிவக்க சீறினாள் அவள்.
“என்னடி ரொம்ப பேசுற?”
“நீ பேசுன பேச்சுக்கு பப்பரப்பானு பல்லை இளிச்சிட்டு நிற்க சொல்லுறியா? இதை விட பேசுவேன் டா பன்னாடை” சரவெடியாக வெடித்தவளை சமாதானம் செய்வது எப்படி என புரியாது விழித்தான் மித்து.
“அம்முலு! ரொம்ப குளிருதுனு நெருப்பு பற்ற வெச்சா, நீ அதை விட கதகதனு கொதிக்கிற. இந்த கூலான ப்ளேஸ்லயும் எனக்கு வியர்த்து வழியுது” டிசர்ட்டை இழுத்து குனிந்து ஊதுவது போல் செய்கை செய்தான்.
“உனக்கு அந்த தடிப்பயல் கூட சேர்ந்து வாய் கூடிருச்சு”
“என் விஷுவை தடிப்பயல்னு சொல்றியா டி? வாயை தச்சி வெச்சிருவேன்” பொய்யாக முறைத்தான் அவன்.
“அப்படித் தான்டா சொல்லுவேன் என்ன பண்ணுவ? அவன் எனக்கு அண்ணன்” அன்புப் போராட்டத்தில் இணைந்தாள் அவள்.
“ஆஹ் அது சரி” என்று விட்டுக் கொடுத்தவனின் அருகில் மேலும் நெருங்கி அமர்ந்தாள் மங்கை.
“என்னடி ஒட்டிக்கிற? தள்ளு தள்ளு” வாய் தான் அப்படிச் சொன்னதே தவிர கைகளோ அவள் இடையூடு கையிட்டு மேலும் தன்னோடு அவளை இணைத்துக் கொண்டன.
“நீ தள்ளிப் போனா பாட்டு பாடலாமேனு பார்த்தா வாயால ஒன்ன சொல்லிட்டு வேற ஒன்னை கையால பண்ணுறியே மாமு” மார்பில் சாய்ந்து அவனை நோக்கினாள் அக்ஷு.
“பாட்டா என்ன பாட்டு?” கேள்வியாய் அவள் முகம் நோக்கினான்.
“தள்ளி தள்ளி போகாதய்யா நில்லு நில்லு! நம்ம கல்யாணத்த எப்போ வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு” என்று பாடினாள் பாவை.
“மறுபடி கல்யாணம் பண்ண ஆசையா உனக்கு? வா பண்ணிக்கலாம்” என்றவனின் விழிகள் அவள் மீது குறும்புடன் படிந்தன.
“ஓஓ பண்ணிக்கலாமே” என்று அவன் இமை உயர்த்தியவள், “என்ன ஒரு மார்க்கமா பார்க்கிறீங்க சார்?” என புருவம் தூக்கினாள்.
“மறுபடி கல்யாணம் பண்ணுனா மறுபடி பர்ஸ்ட் நைட் கொண்டாடலாம்னு கிளுகிளுப்பு தான்” கண்ணடித்தான் அவன்.
“அய்யடா ஆசையைப் பாரேன்” வாய் வெடுக்கெனப் பேசினாலும் கன்னங்கள் வெட்கச் சாயையை அள்ளிப் பூசிக் கொள்ள, கூச்சத்தில் மெல்ல விலகி நின்றாள்.
“வெள்ளி நிலவுன் வதனம்
செவ்வல்லி மலராய்ச் சிவக்க
அள்ளி உன்னை அணைத்து – கன்னம்
கிள்ளி விட நினைக்கையில்
தள்ளி நீயும் போகிறாயே
கள்ளி இது நியாயமா சொல்!” காதல் துள்ளும் இதயத்தின் மொழியை சொல்லியே விட்டான் வேங்கையவன்.
“காதல் பொங்குதே அடடா” நயனங்களில் ரசனை ஏற, களுக்கென்ற அவள் நகைப்பொலி அவ்விடத்தே ஊடுறுவிற்று.
“அது என்னிக்கும் தான் பொங்குது. ஆனா இன்னிக்கு காதல் கடல்ல ஓவரா அலையடிக்குது”
“ஏன் ஏன்?” ஒன்றும் அறியாதவள் போலத் தான் கேட்கலானாள்.
“நீ அழகு கூடிட்ட. க்ளைமட் வேற ஜில்லுனு இருக்கு. உன் நெருக்கம் கதகதப்பான இந்த ஸ்பரிசம் எல்லாம் சேர்ந்து இதயத்தை தத்தித் தாவ விடுது” இடது நெஞ்சை விரலால் சுட்டிக் காட்டினான் காதலன்.
அவளது இமை சிமிட்டும் விழிகளைப் பார்த்து, ” உனக்கு தோணலயா ஒரு அழகான ஃபீலிங்?” எனக் கேட்கவும் தான் செய்தான்.
“தோணுது தோணுது” வேகமாகத் தலையை ஆட்டி, “ஆனா எனக்கு உன்னை மாதிரி அழகா எல்லாம் சொல்ல வராது டா” என்றாள்.
“நீ என்னடி சொல்லுறது? வாய் சொல்ல நினைக்கிறத எல்லாம் தான் உன் கண்ணு அதுக்கு முன்னாடியே சொல்லிடுதே என் முண்டக்கண்ணி” செல்லமாகக் கன்னம் தட்டினான் அருள் மித்ரன்.
“உனக்கு ஒன்னு தரனும் கண்ணை மூடு” என்ற மித்ரனிடம், “என்ன தர போற?” என்று வினவினாள்.
“இப்போ தெரிஞ்சுட போகுது கண்ணை மூடு” என்றதும் அவ்வாறே செய்தாள்.
பின் அவனது கட்டளைப்படி கண்களைத் திறந்து தன் கழுத்தில் ஒய்யாரமாய் வீற்றிருந்த செயினைக் கண்டு கண்களை அகல விரித்தாள் அக்ஷு.
“ஹேய் சூப்பர் அருள்”
“பிடிச்சிருக்கா?”
“ஆமா ரொம்ப! அதை விட உன்ன பிடிச்சிருக்கு” பரிசளித்த தன் பொக்கிஷமானவனை விழிகளில் நிறைத்துக் கொண்டாள் அவள்.
அவன் மடியில் சாய்ந்து வானைப் பார்த்தாள் அக்ஷரா. இருள்தனைப் போக்க வானில் விகசித்தது நிலவு.
சற்றுத் தள்ளி மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக மின்னிக் கொண்டிருந்தன.
அவள் விழிகள் பளிச்சென மின்னின. காரணம், அவள் மனதில் குழந்தையொன்றின் முகம் தோன்றிற்று. அம்மூன்று நட்சத்திரங்களையும் அக்ஷரா, அருள், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தையாகக் கனவு கண்டாள்.
ஆயினும் அது இது வரைக்கும் வெறும் கனவாகவே கலைந்ததை எண்ணி தவிப்பு சூழ்ந்தது. அவள் முகமாற்றங்கள் அவளவனுக்குப் புரியாதா என்ன?
“அம்முலு வா போகலாம்” அவள் கையைப் பிடித்து எழுப்பினான்.
“ம்ம்” எனும் தலையாட்டலோடு நடந்தவளைத் தோளோடு சேர்த்து அணைத்துப் பிடித்தான் மித்து.
அவனும் தன்னால் வருந்துவதை உணர்ந்து நொந்தவளின் கண்கள் மீண்டும் ஒளிர, “மித்து அங்க பாரேன்” என மீண்டும் வானத்தைக் காட்டினாள்.
“என்னம்மா?” அவள் காட்டிய திசையில் இரண்டு நட்சத்திரங்கள் அழகாக ஒளிர, “காதல் ஜோடி அக்ஷர மித்ரனா?” தம்மிருவரையும் காண்பித்துக் கேட்டான்.
“இல்லை இல்லை! தோஸ்துகள் விஷ்வ மித்ரன்” புன்னகையோடு துள்ளினாள் சிறுமியாய்.
“அப்படியா?” அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில் ஒரு நட்சத்திரத்தில் விஷ்வாவின் முகம் தெரிய, “விஷு” எனும் அழைப்புடன் அவன் விழிகளோடு இதழ்களும் மலர்ந்தன.
………………….
மறுநாள்
“அருள்”
“மித்து”
“டார்லிங்”
விதவிதமாக தன்னவனை அழைத்தது அக்ஷரா அன்றி வேறு யாராக இருக்க முடியும்?
அழைப்பு காதில் செவ்வனே விழுந்தாலும் அதனை காதிலும் வாங்காமல் அசையக் கூட மறுத்தவனாய் நின்றான் அவ்வழைப்புக்களின் சொந்தக்காரன்.
அழைத்து அழைத்து ஓய்ந்து போனவளது பொறுமையோ நூலறுந்த பட்டமாய் மாறி விட, “டேய் அருள்ள்ள்” பல்லைக் கடித்துக் கொண்டு இறுதி எழுத்தை வெகு அழுத்தமாகத் தான் உச்சரிக்கலானாள்.
“சொல்லு” அலுங்காமல் குலுங்காமல் ஒற்றை வார்த்தையை உதிர்த்தான் மித்ரன்.
“என்னது சொல்லவா? என்ன சொல்லனும்?” மூக்கு விடைக்கக் கேட்டாள் அக்ஷரா.
“கூப்பிட்டது நீ. அதனால நீ தானே சொல்லனும்” அலைபேசிக்குள் தலையைப் புதைத்துக் கொண்டான்.
“வேண்டாம் சொல்லிட்டேன். என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற” சுட்டு விரலை நீட்ட,
“என்ன வாய் நீளுது” தன்னை நோக்கி நீண்ட விரலைப் பிடித்துக் கொண்டான்.
“வாய் விரிய பேசுறவங்க வாயை மூடும் போது பேசாம இருக்கிற எங்க வாய் நீளுறது ஆச்சரியம் இல்லையே?!” முறைப்புடன் விரலை இழுத்துக் கொண்டாள் அக்ஷு.
“நல்லா பேசுற” பதிலுக்கு அவனும் முறைக்க, “இப்போ என்னடா உன் ப்ராப்ளம்?” அதற்கு மேல் முடியாமல் கேட்டாள் அவள்.
“ஏன் உனக்கு தெரியாதோ? வெளியே போக நான் கூப்பிட்டா வர மாட்ட”
“நான் சொன்னா மாதிரி சைக்கிள்ல நீ கூட்டி போக மாட்ட”
“அது முடியாது”
“அப்போ என்னாலயும் வர முடியாது” இருவரும் மீண்டும் முறுக்கிக் கொள்ள, “வா வெளியே” மறுத்தவளை அலேக்காக தூக்கிக் கொண்டு போனான் மித்து.
“விடுடா என்னை விடு” அவனுக்கு அடித்து திமிறி விடுபட முயன்றாள்.
வாயிலுக்குச் சென்றவளோ அங்கு நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளைக் கண்டு ஒரே துள்ளலில் இறங்கி ஓடினாள்.
கைகட்டி அவளின் குதூகலத்தைக் கண்டு களித்தான் கணவன். அவனிடம் ஓடி வந்து, “ஏன்டா சைக்கிள் கொண்டு வந்துட்டு முடியாதுனு சொன்ன?” அவன் தோளில் செல்லமாக அடி போட்டாள் அவள்.
“சைக்கிள் கொண்டு வந்தேன் உன் ஆசைப்படி. ஆனால் நாம போக போற பார்க் ஏரியாவுக்கு சைக்கிள்ல போக போறதில்ல”
“என்ன குழப்புற?” தலை கால் புரியாமல் பார்த்தாள்.
“புரியும் கொஞ்ச தூரம் வா” சைக்கிளில் சென்றனர் இருவரும்.
சிறிது தூரம் சென்றபின் தொழுவம் போன்ற இடத்திற்குச் சென்றிட அங்கிருந்த ஒருவன் கையைக் காட்டி விட்டு, உள்ளிருந்து ஒரு குதிரையைக் கொண்டு வந்து ஒப்படைத்தான்.
“ஆஹ் இதுலயா போக போறோம்?” விழி விரித்து நிற்கலானாள் அம்முலு.
“ஆமாம் மகாராணி ஏறுங்கள்” இடைவரை குனிந்தவனின் அளவிறந்த அன்பில் லயித்து மெதுவாக அதில் ஏறினாள்.
அவனும் பின்னால் அமர்ந்து சேணத்தைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்த பையனிடம் தலையசைப்புடன் புறப்பட்டான்.
“அருள் சூப்பரா இருக்குல்ல டா” சிறு பிள்ளையாய் கைகளை விரித்து சந்தோஷத்தை வெளிக்காட்டினாள்.
“உனக்கு இது தான் பர்ஸ்ட் டைம்ல? என்ஜாய் பண்ணு செல்லம்”
“அப்போ உனக்கு எத்தனையாவது தடவை இது? இங்கே வந்திருக்கியா இதுக்கு முன்னாடி?” பக்கவாட்டாகத் திரும்பி அவனை ஏறிட்டாள்.
“ஒரு தடவை பிசினஸ் விஷயமா நானும் விஷுவும் கொடைக்கானல் வந்தோம் ஞாபகம் இருக்கா? அப்போ ரெண்டு பேரும் குதிரை எடுத்துட்டு ரேஸ் எல்லாம் போனோம். அப்பறம் நான் யூ.கேல இருக்கும் போது ஸ்ட்ரெஸ்ஸா இருக்கிற நேரம் ஹோர்ஸ் ரைட் போவேன்” என்று பதிலிறுத்தினான் மித்து.
“விஷு சொன்னான் தான். நான் நெனச்சேன் சும்மா என்னை கடுப்பேத்த உருட்டுறான்னு. ரெண்டு பேரும் என்னை விட்டுட்டு வந்திருக்கீங்க” குறைபட்டுக் கொண்டாள் அவள்.
அவள் முகத்தைக் கண்டு சிரித்ததோடு,
“சின்ன வயசுல நாங்க ரெண்டு பேரும் டியூசன் போறப்போ என்னை ஏன் கூட்டி போகலனு கேட்டு சண்டை போடுற குட்டி அக்ஷராவாவே இருக்க டி. நீ மாறவே இல்லை” தன் சிரிப்பிற்கான காரணத்தையும் முன்வைத்தான்.
“நீங்க மட்டும் மாறினீங்களா? என்னை விட்டு விட்டு போய் நல்லா ஜாலியா ஊர் சுத்துறீங்க. இருக்கட்டும் ஊருக்கு போய் உங்க ரெண்டு பேரையும் பார்த்துக்கிறேன்” அத்தோடு அந்தப் பேச்சை விட்டவள் அவனுடன் அப்பயணத்தை ரசிக்கத் துவங்கினாள்.
கொடைக்கானலில் மென்குளிரில் அப்புற்றரைகளில் குதிரையின் காற்குளம்புகள் பதியும் போது எழும் ஒலியும், பறவைகளின் கீச் கீச் நாதமும் இயற்கையோடு அவளை லயிக்க வைத்தன.
அதிலும் தன்னவனின் அருகாமை, இடைக்கிடை அவள் மீது உரசும் அவன் கரத்தின் தொடுகை, கழுத்தைத் தீண்டும் மூச்சுக்காற்றின் உஷ்ணம் அவளுள் மின்னலாய் சில உணர்வுகளை ஊடுருவச் செய்தது.
ஒரு கடையில் நிறுத்தி ஹாட் காபீ வாங்கிப் பருகினர். அப்பயணம் அவளால் மறக்க இயலாத ஒன்றாப் பதிந்தது.
இரவின் இருள் பூமியைக் கவ்விக் கொள்ள, கட்டிலில் சாய்ந்து கொண்டிருந்தாள் அக்ஷரா.
அறையினுள் நுழைந்த மித்ரன் அருகில் அமர தலையை அவன் மடிக்கு இடம்மாற்றி மெதுவாகப் புன்னகை பூத்தாள்.
“அம்முலு….!!” அவள் விரலோடு தன் விரல்களைப் பிணைத்துக் கொண்டான்.
“ஹ்ம்ம் அருள்” அவன் கரத்தில் முத்தமிட்டாள் அவள்.
“என்ன கிஸ் ப்ரீயா கிடைக்குது”
“வேணாமா? வேணாம்னா எனக்கே திருப்பி தந்திடு”
“இல்லை வேணும் தா” என்று கன்னம் காட்ட கன்னத்தில் முத்தமிட்டாள். மறுகன்னத்திலும் அவ்வாறே.
புன்னகையுடன் வாங்கிக் கொண்டான் அவன். சிறிது நேரம் தன்னையே பார்த்திருந்தவளைக் கண்டு, “என்ன முகம் வாடுது” என்று கேட்டான் அவன்.
“ஒன்னும் இல்லை” முகத்தைத் திருப்பிக் கொண்டாள் அக்ஷரா.
“சொல்லு” தெரிந்து கொண்டே கேட்பவனை என்ன தான் செய்வது என்று கொலைவெறியுடன் பார்த்தவளின் கன்னத்தில் பச்சக்கென்று இதழ்களால் அச்சாரம் பதித்தான் ஆடவன்.
முறைப்புடன் திரும்பியவளின் மறுகன்னத்திலும் முத்தமிட்டான். கன்னத்தை மறைத்த போது நெற்றியில் முத்தமிட்டான். தடா போடும் கைகளுக்கும் தண்டனை கொடுத்தான், உதட்டால்.
தன்னை அணு அணுவாய் இதயக் கொலை செய்யும் அழகு விழிகளிலும் அன்பு ததும்ப அதரம் ஒற்றினான்.
கைகளைக் கீழிறக்கி தன்னைப் பார்த்தவளை நோக்கியவனுக்கு, “மேடமுக்கு கோபம் தீரலயோ?” என்று கேட்கையில் விஷமம் துளிர்த்தது குரலில்.
“அது தீராது நான் முகம் வாடினா தான் நீ முத்தம் தருவியா? சும்மா தர மாட்டியா?” எனக் கேட்டாள்.
“வேணும்னா கேட்க மாட்டியா?” பதிலுக்கு அவன் கேள்வி அஸ்திரத்தை எய்தான்.
ஒன்றும் பேசாமல் நின்றவளைத் தன்னோடு சேர்த்து அணைத்தவன், கேட்டான். “கோபமா?”
நாலாபுறமும் தலையை உருட்டியவளின் செய்கை அவன் இதயத்தைத் திருடிச் செல்ல, ஒற்றைக் கண் சிமிட்டலோடு அவள் இதழைத் தன் வசப்படுத்தினான்.
இதயம் தாளம்தப்பித் துடிக்க அவளவனது முதுகோடு கையிட்டுப் பிடித்துக் கொண்டாள்.
சோடி ஈரிதழ்கள் வறட்சி நீக்க, இரு சோடி விழிகளோ காதல் புரட்சியும் தான் செய்யத் துவங்கின.
🎶 இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம் தானடா
தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி 🎶
🎶 கரை நீ பெண்ணே
உனை தீண்டும் அலையாய் நானே
ஓ நுரையாகி நெஞ்சம் துடிக்க
ஒன்றோடு ஒன்றாய் கலக்க
என்னுயிரே காதோரம் காதல் உரைக்க
ஓ ஒரு பாா்வை வேண்டும் இறக்க என்னுயிரே
மறு பாா்வை போதும் பிறக்க 🎶
🎶 இரவாக நீ
நிலவாக நான்
உறவாடும் நேரம் சுகம் தானடா
தொலையும் நொடி
கிடைத்தேனடி
இதுதானோ காதல் அறிந்தேனடி 🎶
🎶விழி தொட்டதா விரல் தொட்டதா
எனதாண்மை தீண்டி பெண்மை பூ பூத்ததா
அனல் சுட்டதா குளிா் விட்டதா
அடடா என் நாணம் இன்று விடை பெற்றதா 🎶
🎶 நீ நான் மட்டும் வாழ்கின்ற உலகம் போதும்
உன் தோள் சாயும் இடம் போதுமே 🎶
🎶 உன் போ் சொல்லி சிலிா்க்கின்ற இன்பம் போதும்
இறந்தாலும் மீண்டும் பிழைப்பேன்
ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே
காதோரம் காதல் உரைக்க🎶
🎶 மழை என்பதா வெயில் என்பதா
பெண்ணே உன் பேரன்பை நான் புயல் என்பதா
மெய் என்பதா பொய் என்பதா
மெய்யான பொய் தான் இங்கே மெய் ஆனதா 🎶
🎶 அடியே பெண்ணே அறியாத பிள்ளை நானே
தாய் போல் என்னை நீ தாங்க வா
மடி மேல் அன்பே பொன் ஊஞ்சல் நானும் செய்தே
தாலாட்ட உன்னை அழைப்பேன்.🎶
🎶 ஒன்றோடு ஒன்றாய் கலக்க என்னுயிரே
காதோரம் காதல் உரைக்க 🎶
தன்னிடமிருந்து விலகிச் செல்லப் போனவளைப் போக விடாது தடுக்க, “நான் கோபமா இருக்கேன்” நாணத்தை மறைக்க பொய்யாக கோபப் பூச்சை பூசிக் கொண்டவளின் கள்ளத்தனத்தைக் கண்டு,
“கோபத்தை இல்லாம பண்ண தான் இப்போ முத்தம் எல்லாம் குடுத்தேன். இன்னும் போகலயா? அப்போ மிச்சத்தையும் இல்லாம பண்ணிர வேண்டியது தான்” அதே கண்சிமிட்டலுடன் மீண்டும் ஓர் இதழ் வேட்டையை இனிதே நடாத்த முற்பட்டான், அக்காதல் வேட்டைக்காரன்!
நட்பு தொடரும்…..!!
ஷம்லா பஸ்லி