❤️🤍 இதய வானில் உதய நிலவே!
நிலவு 11
ஷாலு அடம்பிடித்ததில் அவளை பார்க்கிற்கு அழைத்து வந்திருந்தாள் அதிய நிலா.
விளையாடிக் கொண்டிருந்த ஷாலு அத்தையின் முகவாட்டத்தைக் கண்டு அருகில் வந்து “அத்துகுட்டி”என அழைக்க,
சட்டென சிந்தனை வலையிலிருந்து விடுபட்டு “சொல்லு பாப்பா! ஏதாச்சும் வேணுமா?” என போலிப் புன்னகையை உதட்டில் படர விட்டுக் கொண்டாள் அதி.
“நீ தான் சொல்லணும் அத்து. எதுக்கு சோகமா இருக்க? வர்ஷுவை மிஸ் பண்ணுறியா?” சரியாகக் கேட்ட சின்னவளைத் தூக்கி மடியில் இருத்திக் கொண்டாள மங்கை.
நேற்று உதய் நடந்து கொண்ட விதம் அவளைக் கவலையில் ஆழ்த்தியிருந்தது.
“ஆமா தங்கம்” என்று தலையாட்டினாள்.
“நானும் அங்கிளை ரொம்ப மிஸ் பண்றேன். அவருக்கு கியூட்டி கூடவும் பெண்டா கூடவும் அவ்ளோ பாசம். ஆனா எங்களை பார்க்க வராம இருக்காரு. எனக்கு வர்ஷுவை பார்க்கனும் போல இருக்கு. அவர் எப்போ வருவாரு?” என அதியின் மார்பில் சாய்ந்து கொண்டாள்.
அவன் வந்து விட்டான் என்பதைக் கூறினால் ஏன் தன்னைப் பார்க்க வரவில்லை என அழுது ஆர்ப்பாட்டம் செய்வாள் என்பதை அறிந்து “தெரியலடா! வர்ஷுக்கு ஏதாச்சும் வேலை இருக்கும். அதான் இன்னும் வரலை” என்று கூறியதில் சுருங்கிய அவளது முகம் சூரியனைக் கண்ட செந்தாமரை போல் மலர்ந்து விகசிக்க “வர்ஷு” எனக் கத்தியவாறு அத்தையின் மடியில் இருந்து துள்ளி இறங்கி ஓடினாள்.
தன்னைக் கண்டு ஓடிவரும் அந்த அன்பு மிகுந்த அம்முக்குட்டியைத் தூக்கி “மை கியூட்டி” என்று சுற்றினான் அந்தப் பாசமிகு வர்ஷன்.
“வந்துட்டீங்களா அங்கிள்? நான் உங்களை ரொம்பத் தேடினேன். அத்து கிட்ட இப்போ உங்களை பத்தி பேசினேன்” உச்சபட்ச சந்தோஷத்தில் சொன்னாள் அவள்.
“அப்படியா? நானும் கியூட்டியை ரொம்ப மிஸ் பண்ணேன்” அவள் நெற்றியில் இதழ் ஒற்றி மூக்கோடு மூக்கை வைத்து உரசினான்.
“ஹா ஹா கூசுது வர்ஷு” என கிளுக்கிச் சிரித்தாள் ஷாலு.
தன் முன் நிற்கும் கண்ணாளனை வைத்த கண் வாங்காமல் பார்த்தபடி நின்றிருந்தாள் பெண்ணவள்.
அவன் ‘இதயா’ என்று ரகசியம் கொஞ்சும் குரலில் அழைத்து தன் பக்கத்தில் உட்கார மாட்டானா என ஏங்கினாள் ஏந்திழை.
“உங்க பெண்டா பேபியைப் பார்த்து பேசலையா அங்கிள்?” என அவனிடம் ஷாலு கேள்வி எழுப்ப,
“ஓஓ பேசலாமே” எனக் கூறி அவளுக்கு முன்னால் இருந்து இருக்கையில் அமர்ந்தவனின் செய்கையே அவனது விலகலை அப்பட்டமாக எடுத்துக் கூறியது.
“எப்படி இருக்கீங்க அதியா?” என நலம் விசாரித்தவனை, “இப்படி கேட்கிறதுக்கு கேட்காமலே இருந்திருக்கலாம்” என்று முறைத்தாள்.
“எப்படி இருக்கீங்கன்னு மரியாதையா தானே கேட்டேன்? அதுல என்ன குறை இருக்குன்னு இப்படி சொல்லுறீங்க?” கேள்வியாக அவள் முகம் பார்த்தான் வர்ஷன்.
“என்னன்னு உனக்கு தெரியாதா? சும்மா தெரியாத மாதிரி கேட்காத”
“தெரியாத மாதிரி நடிக்கிற பழக்கம் எனக்கு இல்லை. அதுக்கான அவசியமும் கிடையாது” உதடு பிதுக்கினான். அவனது வார்த்தைகள் அவள் இதயத்தைத் தாக்கின. ‘தெரியாத மாதிரி நடிக்கிற பழக்கம்’ என்பது அன்று அவனைத் தெரியாது என்று கூறியதை நினைவுபடுத்தியது.
அதை நினைத்து வருந்துவதால் எவ்வித பயணம் இல்லை என உணர்ந்தவளோ அவனருகில் சென்று அமர்ந்து “எனக்காக கவிதை சொல்ல மாட்டியா டா?” என்று கேட்ட போது குரல் கமறியது.
“கவிதை சொல்ல மூட் இல்லைங்க” அவன் நெற்றியை நீவி விட்டுக் கொள்ள, “என்ன உதய் தலைவலியா?” என பதற்றமானாள் பாவை.
“ஆமாங்க! மெடிக்கல் கேம்ப்ல அப்படி பிசி. சரியா தூங்கவும் இல்லையா தலைவலி வந்து தொல்லை பண்ணுது” தலையைப் பிடித்துக் கொண்டான் அவன்.
“என்ன உதய்? தூக்கத்தை தொலைச்சிட்டு அப்படி என்ன வேலை வேண்டிக் கிடக்கு? இப்போ உன்னை தலைவலி டார்ச்சர் பண்ணுது பாரு. இனிமேல் டைமுக்கு தூங்கு. ஏதாச்சும் மாத்திரை போட்டுக்க. டென்ஷன் ஆகாத” என படபடவென்று சொன்னாள் அதியா.
“ஓ! இதைத்தான் வைத்தியருக்கே வைத்தியம் என்று சொல்லுறதா?” சிரிப்புடன் கேட்டவனைப் பார்த்து,
“எல்லா டாக்டருக்கும் இல்லை. டாக்டர் உதய வர்ஷனுக்கு மட்டும் இந்த அதி தான் டாக்டர்” அவனைச் சுட்டிக் காட்டினாள்.
“இது கூட நல்லாத் தான் இருக்கு டாக்டரம்மா!” என்க அவளோ கலகலத்துச் சிரித்தாள்..
அவளது சிரிப்பை கண்டு “அச்து இப்போ தான் நல்லா சிரிக்கிறா. உங்களைக் காணாமல் அழுது வடிஞ்சிட்டு இருந்தா அங்கிள்! நான் அழாதன்னு சொன்னா நீ என்ன சொல்லுறது உன் வீணாப்போன வர்ஷுவை வந்து அழ வேணானு சொல்லச் சொல்லு. என் கண்ணீரைத் துடைச்சு விடச் சொல்லுன்னு கோபப்படும்.” இன்னும் இலவச இணைப்புகளை சேர்த்து வர்ஷுவிடம் காரசாரமாக கதை கூறினாள் குட்டிச் சிறுமி.
“அடிங்க வாயாடி. ஓவரா புளுகாத” அவளது காதைப் பிடித்துத் திருகினாள் அதி.
“ஸ்ஸ் ஆஆஆ வலிக்குது. வர்ஷு அவளைத் திட்டுங்க” காதைப் பிடித்துக் கொண்டு முகத்தை சுருக்கினாள்.
“அதியா! என் கியூட்டியை எதுவும் பண்ணக் கூடாது. ஏதாச்சும் பண்ணா அவ்வளவு தான்” விரலை நீட்டி பொய்யாக மிரட்டினான் உதய்.
அத்தைக்கு பழிப்புக் காட்டிச் சிரித்தாள் ஷாலு. “என் கிட்ட தானே வரப் போற. அப்போ உனக்கு இருக்கு டி அறுந்த வாலு” என முறைத்துப் பார்த்தாள் அவள்.
“அங்கிள் நீங்கள் இனிமேல் எந்த நாளும் முன்ன மாதிரி என்னைப் பார்க்க வருவீங்களா? என் கூட விளையாடுவீங்களா?” ஆசையோடும் எதிர்பார்ப்போடும் அவன் முகத்தை நோக்கினாள்.
“முன்ன மாதிரி வர முடியாமல் போனாலும் போகலாம். ஆனால் எப்படியாவது கிடைக்கிற நேரத்தை ஒதுக்கி உன்னைப் பாக்க வருவேன். நீ என் பிரண்டுல கியூட்டி! கண்டிப்பா உனக்காக வருவேன். நான் வரலைன்னாலும் அழக்கூடாது. எப்பவாவது வருவார்னு நினைச்சுக்கணும் ஓகேவா” அவனது தலையை வருடினான் வேங்கை.
“ஓகே வர்ஷு. நீங்க வரலைன்னா அந்த பெண்டா பொம்மையை ஹக் பண்ணிட்டு இருப்பேன். ஷாலு இப்போ குட் கேர்ள்” என்று கூறித் துள்ளலுடன் விளையாடப் போனாள் அவள்.
அவளைப் பார்த்து புன்னகையுடன் நகரப் போனவனின் முன்னால் வந்து நின்றாள் அதியா.
“ஏதாவது சொல்லனுமா அதியா?” கைசைவில் கேட்டான் அவன்.
“ஏன் ஷாலு கிட்ட அப்படி சொன்ன? அடிக்கடி வரமாட்டேன்னு சொன்னே? இதுக்கு எல்லாம் என்ன அர்த்தம் உதய்? எனக்கு பதில் தெரிஞ்சுக்கணும்” என்று கைகளைக் கட்டிக்கொண்டு அவனைத் தீவிரமாகப் பார்த்தாள் பாவை.
“அடிக்கடி வந்து பார்க்குற அளவுக்கு நம்ம ரெண்டு பேருக்குள்ளேயும் என்ன உறவு இருக்கு? அதை முதல்ல சொல்லுங்க” அதை விடத் தீவிரமாக தன்னை அளவிடுபவனைத் திகைப்புடன் ஏறிட்டாள் பெண்.
“அ… அது.. உறவு” எனத் தடுமாறியவளால் உறுதியாக எதையும் சொல்ல முடியவில்லை.
“சொல்ல முடியலல்ல? இப்படி இருக்கும் போது நான் தினமும் பார்க்க வருவேன்னு கியூட்டி கிட்ட எப்படி சொல்ல முடியும்? வர முடியாத சூழ்நிலைகள் வரும்போது அவ ஃபீல் பண்ணுவா அதான் அப்படி சொன்னேன்” என்று தெளிவாக சொன்னான்.
ஏதோ புரிந்தும் புரியாதது போல் இருந்தது அவளுக்கு. எது புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் புரிந்தது, இவன் முந்தைய உதயவர்ஷன் இல்லை என்பது!
கேட்பதற்கு எல்லாம் பதில் கூறுகிறான். வெறுத்து ஒதுக்கவில்லை. அதே சமயம் முன்பு போல் உரிமை கொண்டாடவும் இல்லை. மனம் புழுவாகத் துடித்தது.
“அப்போ காதல்…?? ப்ரபோஸ் பண்ணது? எனக்காக காத்துட்டு இருப்பேன்னு சொன்னது?” திக்கித்திணறி வினவினாள் அவள்.
“எஸ்! உங்களைப் பார்த்ததும் பிடிச்சுது ப்ரொபோஸ் பண்ணேன். உங்களுக்காக எத்தனை வருஷம் வேணாலும் காத்துட்டு இருக்கலாம்னு அப்போ தோணிச்சு அதை வெளிப்படையா சொன்னேன் தட்ஸ் இட்” உணர்வுகள் மரத்துப் போயிருந்தது அக்குரலில்.
“அப்போ இருந்துச்சு தோணுச்சுன்னா? இப்போ அந்தக் காதல் இல்லையா. எனக்காக காத்துட்டு இருக்கலாம்னு இப்போ தோணலையா உதய்? ஏதோ பாஸ்ட் மாதிரி சொல்லுற” தவிப்பும் துடிப்பும் அவளுள் மிகுந்திருந்தன.
“பாஸ்டை பாஸ்ட் டென்ஸ்ல தான் சொல்ல முடியும். நான் நிச்சயமா உங்களை வெறுக்கல. உங்களைப் பிடிக்காமலும் இல்லை. ஆனால் இப்போ உங்க மேல இருக்கிறது அன்பு! அப்போ இருந்த காதல் இல்லை” இப்பொழுது அவள் மீது செலுத்திய பார்வையில் அவன் கூறியது போல் அன்பு மட்டுமே இருந்தது. அவன் ஷாலுவிடம் காட்டுவது போன்ற அன்பு.
“நானும் இப்படித்தான் உன் மேல இருந்த உறவை பாசம்னு பொய்யா நினைச்சுக்கிட்டேன். அந்த தப்புத் தான் என்னை உன்னை விட்டும் பிரிய வெச்சுது. அந்தப் பிரிவுல காதலை உணர்ந்தேன். இப்போ அளவில்லாத காதலை சுமந்துட்டு இருக்கேன். ஐ…” என சொல்ல வந்தவளை, “ப்ளீஸ் ஸ்டாப்” எனத் தடுத்திருந்தான் ஆணவன்.
“என்னாச்சு வர்ஷன்? ஏன் தடுத்த” புரியாமல் நோக்கினாள் அவள்.
“நீங்க சொல்ல வந்தது என்னன்னு புரியுது. பட் அதை சொல்ல வேண்டாம். எனக்கு ஷாலுவை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதனால அவளைப் பார்க்க வரேன். நீங்க அவ அத்தை! அவ்வளவுதான் நமக்குள்ள இருக்குற உறவு. அதை மீறி வேறு எதுவும் இல்லை. இப்படி இருக்கிறது தான் எனக்கும் நல்லது உங்களுக்கும் நல்லது ஷாலுவுக்கும் நல்லது”
அவனை விழி விரித்து அதிர்ச்சியுடன் பார்த்தாள் அதி. அவனுக்கும் எனக்கும் நடுவே எதுவும் இல்லை என்கிறான். அப்படி என்றால் அவன் தன் மீது கொண்ட மலையளவு காதல்? எங்கே சென்றது? என்னவானது? யோசிக்க முடியவில்லை அவளால்.
“ஷாலு வந்தா நான் போயிட்டேன்னு சொல்லுங்க” அவளிடம் கூறி விட்டுச் சென்றான் உதய்.
அவ்விடத்தில் முட்டி போட்டு “வர்ஷு எனக்கு நீ வேணும்டா” என்று பெரும் குரலெடுத்து அழவேண்டும் போல் இருந்தது. அழவில்லை அவள்.
“உனக்கு என்னைப் பிடிக்கும். எனக்காக உயிரையே கொடுக்கிற அளவுக்கு பிடிக்கும். ஆனால் ஏதோ காரணத்தால விலகிப் போகப் பார்க்குற. அப்படி எல்லாம் உன்னை விலகிப்போக விடமாட்டேன். இனிமேல் உன்னைத் துரத்தி துரத்தி லவ் பண்ண போறேன். உன்னை லவ் டார்ச்சர் பண்ணி என் வழிக்குக் கொண்டு வரது தான் இந்த அதியோட ஆல் டைம் டியூட்டி” குறும்புப் புன்னகையுடன் நிமிர்ந்தவளின் கண்களில் அழகான மினுமினுப்பு!
மறுநாள் ஷாலு வர்ஷனின் வீட்டிற்கு செல்லலாமா? எனக் கேட்க, ‘கரும்பு தின்னக் கூலியா என்ன? உடனே தலையசைத்த அத்தையைக் கொஞ்சித் தீர்த்தது குட்டி வாண்டு.
ஷாலுவுக்காக செய்த கேரட் அல்வாவில் அவனுக்கும் சிறிதை எடுத்துக் கொண்டு அவன் வீட்டு காலிங் பெல்லை அழுத்தினாள் அதி.
நல்ல தூக்கத்தில் மூழ்கியிருந்த உதய் தூக்க கலக்கத்தில் சென்று கதவைத் திறக்க தன் முன் நின்றிருந்த இருவரையும் கண்டு ஒரே ஓட்டமாக உள்ளே ஓடி விட்டான். ஆர்ம் கட் டி-ஷர்ட்டும் முட்டி வரை ஷார்ட்சும் அணிந்து கலைந்த முடியுடன் நின்ற தன்னவனைக் கண்டு ரசிக்க எண்ணிய அதி அவனது ஓட்டத்தில் வாய்மூடிச் சிரித்தாள்.
சட்டெனு உடை மாற்றி வந்தவனிடம், “வீட்டுக்கு வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடற பழக்கம் கிடையாதா? அது என்ன பேயைக் கண்ட மாதிரி தலை தெறிக்க ஓடுற?” இடுப்பில் கை குற்றி போலியாக முறைத்தாள் அவள்.
“இந்த டைம்ல வந்தா யாரும் பேயாத் தான் தெரிவாங்க” என்று அவனும் அவளைப் போல் முறைக்க, அவளோ சுவரில் மாட்டியிருந்த கடிகாரத்தை எட்டிப் பார்க்க அதுவோ காலை 5.45 எனக் காட்ட முழித்துப் பார்த்தாள்.
அவனைப் பார்க்கும் ஆர்வக்கோளாறில் நேரத்தைக் கவனிக்கக் கூட மறந்ததை எண்ணி மானசீகமாக தலையில் கொட்டிக் கொண்டாள்.
“அதை விடு! டாக்டர் ஐயா காலையில எழுந்து ஒர்க் அவ்ட் எல்லாம் பண்ண மாட்டாரா?” என்று கேட்டாள்.
“அதெல்லாம் அவ்வளவா பண்ண மாட்டேன். காலையில் ஜாக்கிங் போவேன். உள்ளே வாங்க” என்று இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
மார்புக்கு குறுக்காக இரு கைகளையும் கட்டி முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டிருந்த ஷாலுவைக் கண்டு “ஹேய் கியூட்டி” என அழைத்தான் உதய்.
“பேசாதீங்க! நான் உங்க கூட டூ” முகத்தைத் திருப்பினாள் ஷாலு.
“என் பேபி டாலுக்கு அப்படி என்ன கோபம்? வர்ஷு ஏதாச்சும் பண்ணானா?” என அவளைப் போலவே கொஞ்சும் குரலில் கேட்டான்.
“ஆமா. நான் உங்களைப் பார்க்க அத்துவை கூட்டிட்டு வந்தா நீங்க என்னை மறந்து அத்து கூட பேசிட்டு இருக்கீங்க. ஷாலு பாவம் இல்லயா? அவ அழுதுருவா” என கண்களைக் கசக்க,
“சாரிடா. அங்கிள் தப்பு பண்ணிட்டேன். இனிமே உன் கூட மட்டும் தான் பேசுவேன். அத்துவை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன்” என்று அவளது குண்டுக் கன்னங்களைப் பிடித்து ஆட்டினான்.
“டபுள் ஓகே! ஆனால் அத்து கூடவும் பேசுங்க. இல்லனா அழுதுரும்” என்ற ஷாலுவை அதியா முறைக்க, அவனோ சிரித்தான்.
கட்டுக்கடங்காமல் கலைந்து கிடந்த அவனது கேசம் காற்றினில் நடனம் பயில அதைத் தன் விரல்களுக்கிடையில் அடக்கி மென்மையாய்க் கோதி விடத் துடித்த மனதை வெகு சிரமப்பட்டு கட்டுப்படுத்திக் கொண்டாள் காதலி.
“நீங்க ஷாலு சொல்லுற மாதிரி அழுமூஞ்சியாவே மாறிட்டீங்களா?” அவளிடம் உதய் வினவ, “இல்ல உம்மனா மூஞ்சி ஆகிட்டேன். சும்மா போ மேன்” என சிலுப்பிக் கொண்டவளின் செய்கையில் அவனுக்கு சிரிப்புத் தான் வந்தது.
அவனுக்காக கொண்டு வந்திருந்த கேரட் அல்வாவை ஷாலு கொடுக்க மகிழ்வுடன் பெற்றுக் கொண்டான் காளை.
“அங்கிள்…!! அன்னிக்கு மாதிரி சூப்பர் காபி போட்டு தர மாட்டீங்களா?” என்று ஷாலு ஆசையோடு கேட்க,
“தருவேன் டா செல்லம். உனக்கில்லாத காஃபியா?” என்று கேட்டவனின் கையில் இருந்த கட்டை இப்போது தான் கவனித்தாள் அதியா.
“கை என்னாச்சு? நேற்று நல்லாத்தானே இருந்தது?” பதற்றமுடன் அவள்.
“வெஜிடபிள் கட் பண்ணும் போது கையை கட் பண்ணிக்கிட்டேன். நீங்க கண்டதுக்கெல்லாம் டென்ஷன் ஆகாதீங்க. அப்புறம் சீக்கிரம் கிழவியாகிடுவீங்க” என்றவனைப் பார்த்து,
“ஓவரா கோவப்பட்டால் கிழவியாவனு சொல்லுறது ஓகே. இது என்ன டென்ஷன் ஆகினாலும் அப்படி சொல்லுற? அது யாரு சொன்னது?”
“இட்ஸ் உதய வரஷன்ஸ் வெர்ஷன்” என்றான் கண்சிமிட்டி.
“நல்லா வருவ. இன்னிக்கி அங்கிளால காபி போட முடியாது பாப்பா! அதனால அத்து போட்டு தரேன்”
“எனக்கு உன் காபியை குடிச்சு குடிச்சு அலுத்து போச்சு அத்து” என்று கிண்டலாகக் கூறினாள் ஷாலு.
“அடியே வாயாடி! என்னையே நக்கல் பண்ணுறியா? இனிமேல் உனக்கு காபியும் இல்ல ஒன்னும் இல்ல” என்று எகிறினாள் அதி.
“அலுத்துப் போற அளவுக்கு அவ்வளவு நல்லவா இருக்கு உங்க காபி?” என உதய் நக்கலாகக் கேட்க,
“போ நான் காபி போடல” என்று முகத்தைத் தூக்கிக் கொண்டு அமர்ந்தாள் பெண்.
“அத்து கோபப்படாத! எனக்கு உன் காபி வேணும். போட்டுத் தா” என ஷாலு சத்தமிட்டாள்.
அதற்கு மேல் கோபத்தை இழுத்துப் பிடிக்காமல் கிட்சனுக்குள் நுழைந்தாள். அவ்வளவு நேர்த்தியாக இருந்தது சமையலறை. “ஹ்ம்! நீட் அண்ட் கிளீன் பர்சன்” என உள்ளுக்குள் மெச்சியவள் காபி போட்டு எடுத்து வந்தாள்.
இருவருக்கும் கொடுத்து விட்டு அவளும் ஒன்று எடுத்து அமர்ந்திட அதைக் குடித்து விட்டு “சூப்பர் அதியா” என ரசனையுடன் கூறினான் உதய்.
“அன்னைக்கு நீ போட்ட காஃபி இதை விட செமயா இருந்தது தெரியுமா? ஸ்மெல்லே கலக்கலா இருந்துச்சு” என்று கண்களை விரித்து சொன்னாள்.
“தேங்க்யூ தேங்க்யூ” என்று சிரித்தான் அவன்.
“டேய் சிரிப்பழகா! உன் சிரிப்பு தாண்டா எனக்கு பிடிச்சதே” எனக் கூறியவனைக் கண்டு, “அப்படியென்றால் நான் சிரிக்கவே மாட்டேன்” என்று வாயை மூடிக் கொண்டாலும் அவனையும் மீறி அவனிதழ்கள் பெரிதாக விரிந்தன.
“ஸ்மைல் பேபி அங்கிள்! உங்களுக்கு சிரிக்கிறதுன்னா அவ்வளவு பிடிக்குமா?” என்று கேட்டாள் ஷாலு.
“எஸ் கியூட்டி! எனக்கு இந்த உலகத்திலேயே பிடிச்சது ஸ்மைல். சிரிக்கிறவங்களைப் பிடிக்கும். சிரிக்க வைக்கிறவங் களை ரொம்ப ரொம்ப பிடிக்கும். சிரிப்பு இல்லனா அவங்க முகத்தை பார்க்கக் கூட நல்லா இருக்காது. சிரிக்கணும் கஷ்டங்கள்ள கூட சிரிக்க ட்ரை பண்ணனும். ஸ்மைல் இஸ் மை எவ்ரிதிங்” என்று கையை விரித்துக் காட்டி மந்தகாசப் புன்னகையைச் சிந்தினான் அந்த மாய வர்ஷன்.
நிலவு தோன்றும்…!!
✒️ ஷம்லா பஸ்லி