❤️🤍 இதய வானில் உதய நிலவே!
நிலவு 12
ஆபீஸில் இருந்த அதியை அழைத்து “அதியா! இப்போ ஒருத்தர் வருவாரு. எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவர். அவருக்கு இதுல இருக்குற ப்ளேனை எக்ஸ்ப்ளேன் பண்ணு” என்று கூறினார் எம்.டி.
வரப்போவது யார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தவள் முன் பைக்கில் வந்து நின்றான் உதய்.
“ஏய் மாயக்காரா…!!” என்று இதழ்களின் புன்னகை தவழ அழைத்தாள் அதி.
“போகலாமா?” எனக் கேட்டவனை விழி விரித்து நோக்கினாள் அவள்.
“நீ ஆசையா கூப்பிடற. எனக்கு வர ஆசையாத்தான் இருக்கு. ஆனா எங்க எம்.டி தவளை வாயன் ஒரு வேலை தந்திருக்கான். எவனோ ப்ளான் பண்ணத் தெரியாத மங்கி பில்டிங் கட்டப் போறானாம். அதுக்கு நான் வாத்தி வேலை பார்க்கணுமாம். அந்த மலை மாட்டுக்கு வேற இடமே இல்லயாமா? உன் கூட ஜோடி போட்டு ஜாலி பண்ண முடியாம தடுத்துட்டான் அந்த பவுடர் போடாத டொங்கி” என திட்டிக் கொண்டே சென்றாள் அவள்.
உதய் தீயாக முறைக்க “நீ முதல் முதலாக கூப்பிட்டும் வராததால உன் கோபம் புரியுது. என்னை முறைக்காம இங்கே வரப்போற டப்பா மூஞ்சை மூக்கு முட்ட மூட்டை முட்டையா முறைச்சு பாரு” என்று கூறினாள் காரிகை.
“ஹலோ மேடம்! உங்க போனுக்கு கால் வருது. அப்புறமா அவரைத் திட்டிக்கோங்க இப்போ எடுத்து பேசலனா உங்க எம்டி காது கிழியுற அளவுக்கு திட்டுவாரு” என்றான் அவன்.
“ஓகே டா” என அழைப்பை அவள் ஏற்க, “நீ உதய வர்ஷன் கூட பேசிட்டு இருக்கிறது எனக்கு கண்ணாடி வழியா தெரியுது. அவன் கூட போய் அவன் கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்லு” என்று எம்டி படபடத்து விட்டு வைத்து விட, “எதே உதய வர்ஷனா?” என நெஞ்சைப் பிடித்துக் கொண்டாள் அதியா.
“என்ன சொன்னாரு எம்டி? மங்கி கூட போய் மரத்துக்கு மரம் தாவ சொன்னாரா? இல்ல பவுடர் போடாத டொங்கிக்கு மேக்கப் போட்டு விட சொன்னாரா?” ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான் ஆடவன்.
“அ… அது வந்து ஈஈஈ சாரி! ஏதோ ஃப்ளோல சொல்லிப்புட்டேன். எதுவும் நினைச்சுக்காத” வாயைக் காது வரை இழுத்து இளித்து வைத்தாள் வஞ்சி.
“ஆமாமா உங்களோட ஃப்ளோ வார்த்தைகளோட டிசைன்லயே தெரிஞ்சது. இருந்தாலும் சொல்லுங்க. என் மூஞ்சிய பார்த்தா டப்பா மூஞ்சி மாதிரியா இருக்கு?” பாவமாகப் பார்த்தான் வர்ஷன்.
“நோ நோ! ஒட்டு மொத்த அழகையும், அத்தனை குறும்புகளையும், சூரியனுடைய பிரகாசமான கதிர்களையும் உறிஞ்சி எடுத்து பிரம்மன் தன் கைவண்ணத்துக்கு செஞ்ச ஆணழகனா இருக்கே. அப்பப்பா உன் மூஞ்சை மூச்சு எடுக்கக் கூட மறந்து பார்த்துட்டே இருக்கலாம். அப்படி ஒரு முகராசி என்னோட வர்ஷுவுக்கு” அவனது வதனத்தை இமை கொட்டாமல் பார்த்தாள் பாவை.
“நாட் வர்ஷு! அய் ஆம் உதய வர்ஷன்” என திருத்தினான் அவன்.
“நோ நோ இதய வர்ஷன் ” நெஞ்சைக் காதல் வழிய தொட்டுக் காட்டியவள்,
“நீ அன்னைக்கு எனக்கு சொன்னதுக்கு பதிலா இதை சொல்லல, உண்மையா உணர்வு ரீதியா சொல்லுறேன். என் இதயத்துல இருந்த இருளை நீக்க வந்த உதய ஜோதி நீ! உனக்குத் தெரியும் வர்ஷ். சூரியன் இல்லைனா வானத்துல நிலவே வராது, ஏன்னா சூரிய வெளிச்சம் தான் இரவுல நிலவுக்கு பயன்படுது. அதே மாதிரி உன் நினைவுகள் தான் என்னை சுவாசிக்க வைக்குது ஜீவிக்க வைக்குது. நிலவுக்கு சூரியன் எப்படியோ அப்படித்தான் எனக்கு நீயும். உதய வர்ஷன் இல்லைனா அதிய நிலாவும் இல்லடா” தன் மனதில் உள்ளதைக் கூறினாள் அதியா.
“நமக்குள்ள இருக்கிற உறவு கானல் நீர் போன்றது அதியா! எப்போ வேணா கண்ணுக்கு எட்டாமல் இதயத்துக்கு கிட்டாமல் மறைஞ்சு போயிடலாம். அதை இந்த வார்த்தைகளால் என்னிக்குமே நிலையானதா மாத்திக்க முடியாதுங்க. அதனால இனிமேல் இப்படி எல்லாம் பேசி உங்க மனசு வருத்திக்காம, நேரத்தை வேஸ்ட் பண்ணாம உங்களுக்கு செட் ஆகுற மாதிரி ஒரு வாழ்க்கையை அமைச்சுக்கோங்க” என்று அன்பாக சொன்னான் வர்ஷ்.
“எனக்கு ஒரு வாழ்க்கை அமையுதுனா அது உன் கூட மட்டும் தான் உதய்! நீ இல்லனா எனக்குனு எந்த வாழ்க்கையும் தேவையில்லை. முன்ன இப்படி இருந்தேனோ அதே மாதிரி ஷாலுவுக்கு நான் எனக்கு ஷாலுனு வாழ்ந்துருவேன். தயவு செஞ்சு இனிமேல் இப்படி எல்லாம் பேசாத” வலி நிறைந்த குரலில் பேசினாள் அவள்.
“நான் உங்களை ஹர்ட் பண்ணனும்னு பேசலைங்க. என்னை இருந்தாலும் இது தான் நிதர்சனம் அதை ஏத்துக்கிற மனப்பக்குவம் நமக்கு வரணும்”
“ஆமாடா நீ இப்படி சொல்லுற. கனவுல கூட வந்து என்னை காதலிக்கிற. நிஜத்துல மனப்பக்குவம் கானல் நீர்னு கதை விடறே. இதுக்கு என்ன அர்த்தம்?”
“என்னால எதுவும் சொல்ல முடியாது. இதுக்கு நான் என்ன பண்ணுறது? உங்க ஆழ் மனசுல இருந்து என்னை அழித்து விட்டால் கனவுல வர மாட்டேன்” தோளைக் குலுக்கினான் அவன்.
“நினைச்சா எழுதவும் நினைச்சா அழிக்கவும் என் மனசு கரும்பலகையா? அவ்வளவு ஈஸியா சொல்லிட்டே” என்று முறைத்துப் பார்த்தாள் பெண்.
“சரி அதை விடுங்க! பில்டிங் கட்ட சூஸ் பண்ணுன இடத்துக்கு போகணும் வரிங்களா?” என்று அவன் கேட்க,
“என் காதல் கட்டிடத்தைக் கட்ட ஒரு செங்கல்லைக் கூட எடுத்து தர மாட்ற. இதுல எந்த பில்டிங்கை கட்ட போற?” என்று சிணுங்கினாள் காதலி.
“ஒரு பிரைவேட் ஹாஸ்பிடல் கட்டப் போறோம். போகலாமா?” என அழைத்தான்.
“நீ என் லவ்வ ஏத்துக்கிட்ட அப்புறம் உன் கூட ஜாலியா, குஜாலா ஜோடி போட்டு வரேன். இப்போ வரமாட்டேன். நான் ஆட்டோல வந்துடுறேன்” என வீம்பு பிடித்ததால், தலையில் அடித்துக் கொண்டு உதய் பைக்கில் செல்ல,
ஆட்டோவில் அவனைப் பின் தொடர்ந்து செல்லத் துவங்கி தன்னவனைப் பின்னாலிருந்து ரசித்துக் கொண்டே செல்லலானாள் செவ்வந்தியாள்.
……………………
ஒரு மதிய வேளையில் உதய் வழங்கிய நாவலில் மூழ்கிப் போயிருந்தாள் அதியா. அதனை இருபதுக்கும் அதிக தடவைகள் வாசித்து முடித்து விட்டாள்.
அந்த நாவலில் விரல் பதித்து பக்கங்களைப் புரட்டிக் கொண்டு படிப்பது அவனோடு விரல் கோர்த்து காதலோடு நடப்பது போல் இருக்கும் காதலிக்கு. அவளுக்கு வாழ்வில் கிடைத்த மறக்க முடியாத தொலைக்க முடியாத பரிசு எதுவென்று கேட்டால் இந்த நாவலும் பெண்டா பொம்மையும் என்றே கூறுவாள்.
அவனது காதல் நோயுற்ற இதயம் வேகமாகத் துடித்துக் கொண்டிருந்தது. அவனை இப்பொழுதே பார்க்கத் துடியாய்த் துடித்தது. உடை மாற்றி ஷாலுவை அழைத்துக் கொண்டு வர்ஷுவின் வீட்டு வாயிலின் முன் நின்றாள் அவள்.
காலிங் பெல்லை அழுத்தியும் சத்தமில்லாத போக கதவைத் தட்ட எத்தனிக்க கதவு தானாகத் திறந்து கொண்டது.
“என்ன டா கதவு திறந்திருக்கு? உள்ளே போகலாமா வேணாமா” என யோசித்தவளுக்கு உள்ளே போ என மனம் கட்டளையிட உள்ளே சென்று ஷாலுவை சோபாவில் அமர வைத்துவிட்டு உதய் என அழைத்துக் கொண்டு அவனைத் தேடினாள்.
அவன் இல்லையோ என்று திரும்பிச் செல்ல நினைத்தவளை நிறுத்தியது டிவியில் ஓட விடப்பட்டிருந்த கார்ட்டூன். “டிவி போட்டு இருக்குனா வீட்டில் தான் இருக்கணும். ஏன் சத்தமில்லாமல் இருக்கான்? நான் வந்தது பிடிக்காமல் இருக்கானா?” என நினைத்து அவனறையை சங்கடத்துடன் எட்டிப் பார்த்தவளோ சிலையென சமைந்து நின்றாள்.
போர்வையை இழுத்துப் போர்த்தி தரையில் உறங்கி நடுங்கிக் கொண்டிருந்தான் உதய்.
“உதி” என பதறியடித்து ஓடிச் சென்று அவனருகில் முட்டிப் போட்டு அமர்ந்து கன்னத்தை தட்ட அதுவோ அனலாகச் சுட்டது.
“மை காட்! ஃபீவர் இருக்கு” என அதிர்ந்தவள் அவன் முகத்தையே பார்த்தாள். முகம் சுருங்கி உடம்பெல்லாம் நடுங்க இருப்பவனின் தோற்றம் அவளை கவலைக்குள்ளாக்கியது.
அவளுக்கு முன்பு காய்ச்சல் வந்தால் முழுக் குடும்பமும் அவளைச் சுற்றி இருக்கும். தலை தந்தையின் மடியிலும் தாயின் மடியில் காலையும் போட்டு தூங்கும் தங்கையை அருகில் இருந்து அன்போடு பார்த்திருப்பான் அண்ணன் ரமேஷ். இப்பொழுது ஷாலு அவளது தலையை தடவி விடுவாள்.
ஆனால் இவன்? மடி சாய்க்க யாரும் இல்லாமல், தன் உடல்நிலையைக் கூறக் கூட யாரும் இல்லாமல் கட்டாந்தரையில் படுத்திருப்பதைக் காணக் காண நெஞ்சம் விம்மித் தவிக்க கண்களும் கலங்கிப் போயின.
“யாரும் இல்லைனா என்ன? இனிமேல் உனக்கு நான் இருக்கேன் உதய். முன்னெல்லாம் எப்படி இருந்தியோ தெரியல இனிமேல் உனக்கு எல்லாமா நான் இருப்பேன், உன்னை சந்தோஷமா பார்த்துப்பேன்” அவனது தலையை மென்மையாகக் கோதினாள் அவள்.
“இதயா! என் கிட்ட வந்துட்டியா” உறக்கத்திலும் தன்னை உணர்ந்தவனின் அன்பில் சிலிர்த்து அவன் தலையைத் தூக்கித் தன் மடியில் வைத்துக் கொண்டாள் அவனது இதய தேவி!
காதலை அள்ளி வழங்கி அவளுள் காதல் பூ பூக்க வைத்த கள்வன் காரிகையின் மடியில் குழந்தையாய் மாறி தாயன்பைத் தேடிக் கொண்டிருந்தான். அவளும் சலிக்காமல் தலையைத் தடவிக் கொண்டிருக்க அவனது உடம்பின் சூடு கூடிக் கொண்டு வரவே பயந்து போய் “வர்ஷ்…!! எந்திரிடா. கொஞ்சம் எழுந்திரு கண்ணா” பாசத்தில் குழைந்து கரைந்து ஒலித்தது அவள் குரல்.
அழுந்த மூடியிருந்த இமைகளை வெகு சிரமப்பட்டுப் பிரிக்க அவன் விழித் திரையில் வந்து விழுந்தது அவள் வதனம். தன்னை அன்பொழுகப் பார்க்கும் அவளைக் கண்டு புன்னகைத்து “என்ன மேடம்! என்னை எந்திரிக்க சொல்லுறீங்க? நீங்க முதல்ல எந்திரிங்க” என்றான் அவன்.
“ஹலோ டாக்டரே! பயாலஜி கெமிஸ்ட்ரி எல்லாம் கரைச்சுக் குடிச்சு இருக்க. ஆனால் சாதாரண விஷயத்தை மறந்துட்டியே” என்று கேட்டாள் அதி.
“என்ன மேட்டர்?” புரியாமல் அவன் வினவ, “நீ என் மடியில் இருக்க. சோ நீ முதல்ல எந்திரிச்சா தான் என்னால எழும்ப முடியும்” என கண் சிமிட்டினாள்.
அப்பொழுதே தான் அவளது மடியில் தலையை வைத்திருப்பதை உணர்ந்து “ஓ சாரிங்க” என எழுந்தமர்ந்தான் உதய்.
“சாரி எல்லாம் சொல்லாத! உன்னை மாதிரி அழகான, அம்சமான, ஹேன்ட்ஸமான பையன் என் மடியில் சாய்ந்ததுக்கு நான் தான் தாங்க்ஸ் சொல்லணும்” என்று சிரித்தாள் அவள்.
“இப்போல்லாம் ரொம்பத் தான் பேசுறீங்க”
“நல்லா பேசுறவங்க பேச்சைக் கட் பண்ணிட்டாங்க. பேசாதவங்க பேசுறாங்க. எல்லாம் அப்படித்தான்” என பெருமூச்சு விட்டவள், “என்னாச்சு டா? இப்படி காய்ச்சல் அடிக்குது. மெடிசின் எடுத்தியா” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் எடுத்தாச்சு” என்றவனிடம், “ஆமா இதையெல்லாம் வக்கனையாப் பேசு. மெடிசின் எடுத்தா மட்டும் குணமாகும் என்று உனக்கு படிச்சு தந்திருக்காங்களா? எடுத்தா மட்டும் பத்தாது அதை கரெக்டா போட்டுக்கவும் வேணும்” என்று முறைத்தாள் முறைப்பழகி.
“சும்மா சும்மா திட்டாதீங்க. கிச்சனுக்கு போய் தண்ணி எடுக்கக் கூட முடியல அந்தளவுக்கு வீக்கா இருந்தேனா கீழே படுத்து தூங்கிட்டேன்” என பாவமாக சொன்னான்.
“ஓகே நீ எந்திரிச்சு ஹாலுக்கு வா. நான் தண்ணீ கொண்டு வந்து தரேன்” என்று அவன் கையைப் பிடித்து எழுப்பினாள்.
“அதெல்லாம் வேணாங்க! நீங்க இங்க வந்ததை கண்டால் யாராச்சும் தப்பா பேசுவாங்க. போயிருங்க அதியா. எனக்காக எதுவும் செய்யத் தேவையில்லை” அத்தனை நோயிலும் தன்னை விரட்டுவதிலேயே குறியாக இருந்தவனைக் காண கடுப்பாகினாள் அவள்.
“யார் என்ன பேசினாலும் பரவாயில்லை. அதைப் பற்றி எனக்குக் கவலையும் இல்ல. எப்போ இருந்தாலும் நீ என் புருஷன். சோ உன் கூட சேர்த்து வச்சு பேசினாலும் ஐ டோன்ட் கேர்” சாதாரணமாகத் தோளைக் குலுக்கினாள்.
“நான் ஒன்னும் உங்க புருஷன் இல்லை. திரும்பவும் இப்படி பேச வேண்டாம்”
“எஸ்! நீ என் புருஷன் இல்லை. இப்போ நீ என்னோட குழந்தை. இன்னைக்கு ஃபுல்லா உன்னை அம்மா மாதிரி பார்த்துக்க போறேன். இதை நீ மறுக்கவே கூடாது” அவனிடம் அன்பைப் பிச்சை கேட்பது போல் பார்த்தாள்.
அவன் முகத்தில் ஒரு நொடி அழகான மின்னல் தோன்றியது போல் அவளுக்கு விளங்கியது. மறு கணமே முகத்தை சரி செய்து கொண்டு “இ… இல்லை” என மறுக்க வாயெடுக்க,
“அன்னைக்கு எனக்கு ஃபீவர் வந்தப்போ என்னைக் கவனிச்சுக்கிட்டல. அதுக்கு பிரதியுபகாரமா இன்னைக்கு நான் பண்ணப் போறதா நினைச்சுக்க” என்கவும் அவனால் மறுக்க முடியாமல் தலையசைத்தான்.
அதி அவனுக்கு உணவு சமைக்க செல்ல, வர்ஷுவுடன் கதையளந்து கொண்டிருந்தாள் ஷாலு. அவனை வாட்டமாகக் காண கவலையாக இருந்தது சின்னவளுக்கு.
அதி சமைத்து வந்த உணவை “எனக்குத் தா அத்து! நான் வர்ஷுக்கு ஊட்டுறேன்” என எடுத்து அவனுக்கு ஊட்டினாள் ஷாலு.
சாப்பிட்டு முடிந்ததும் அதி மருந்தை உதய்யின் வாயில் போட்டு நீரைப் புகட்டினாள். இப்படியே மாலையும் ஆனது.
“மணி நாலாச்சுங்க. உங்களுக்கு வீட்டுல வேலை இருக்கும்ல” என்று கூறியவனைப் பார்த்து,
“நீ இப்படி சொன்னால் மட்டுமில்ல வீட்டை விட்டுப் போனு துரத்தினா கூட இன்னிக்கு நைட் ஆகாம போக மாட்டேன். சோ சும்மா பேசி எனர்ஜியை வேஸ்ட் பண்ணிக்காம இரு” என்று கூறி டிவி பார்க்கத் துவங்கினாள் அவள்.
இரவு ஏழு மணி ஆகியது. கிச்சனுக்குள் இருந்து அதி ஏதோ கொண்டு வருவதைக் கண்டு “இது என்ன?” என்று கேட்டான் அவன்.
“வெஜிடேபிள் ஜூஸ் டா” என்று அவள் சொல்லவும், “இல்லை இல்லை. அது கசாயம். ரொம்ப கசக்கும்” என்று கத்தினாள் ஷாலு.
“எதே…?? கசாயமா நான் இதெல்லாம் குடிக்கிறது இல்லங்க” வாயைப் பொத்திக் கொண்டான் வர்ஷன்.
“அப்படியெல்லாம் சொல்ல முடியாது. இன்னிக்கு நீ குடிச்சே ஆகணும் உதிம்மா” என்று அன்போடு சொன்னவள் அருகில் வர எழுந்து ஓடத் துவங்கினான் அவன்.
“உதய் ஓடாத டா! நில்லு. அடியே வாயாடி நீ தானே கசாயம்னு சொல்லி அவனைக் குழப்பி விட்ட. எப்படியாவது அவனைப் பிடிச்சு தரணும்! இல்லன்னா அவ்வளவுதான்” என்ன ஷாலுவை மிரட்டினாள் அதியா.
அதி ஒரு பக்கமாக துரத்த ஷாலு மறுபக்கத்தால் வந்து பிடிக்க அவனைப் பிடித்து இழுத்து வந்து சோபாவில் இருத்தி கிண்ணத்தை வாயருகே கொண்டு செல்ல, “ப்ளீஸ் வேண்டாங்க என்னை விட்றுங்க” பயத்துடன் மிரள மிரள விழிப்பவனின் சிறு பிள்ளைத்தனத்தில் புன்னகையுடன் அவன் வாயில் கசாயத்தை ஊற்றினாள்.
“ஆஆஆ கசக்குது அதி. கியூட்டி கசக்குது. அய்யோ எனக்கு கசக்குது” என கண்ணை மூடி மூடித் திறந்தான் ஆடவன்.
“கசாயம்னா கசக்காம இனிக்கவா செய்யும்? இப்போ பாரு இனிக்கும்” என்று சொல்லி அவன் வாயில் சர்க்கரையைப் போட்டாள் அதியா.
அதைச் சுவைத்து விட்டு “ஹப்பா இப்போஇப்போ ஓகே. திரும்பவும் தர மாட்டீங்களே?” என்று பாவமாக விழித்தவனின் கன்னங்களைப் பிடித்து ஆட்டி “சோ கியூட்டு பாப்பா” என்று கொஞ்சத் தோன்றியது அவளுக்கு.
“நோ நோ இவ்வளவு தான். இப்போ போய் சமத்தா தூங்குவியாம். நான் போயிட்டு வரேன்” என்று எழுந்து கொண்டாள்.
“சரி” என அவன் தலையசைக்க, “பத்திரமா இருந்துருவல்ல? திரும்பவும் காய்ச்சல் வந்தா எனக்கு பயமா இருக்குடா. உன்னை விட்டு போகவே மனசு இல்லை” என்று கூறியவள் ஷாலுவின் கன்னத்தில் முத்தமிட்டு “இதை நம்ம வர்ஷுவுக்குக் கொடு” என்று கூற,
ஷாலு ஓடிச் சென்று அவன் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டாள். இன்னதென்று தெரியாத உணர்வுடன் அவளை ஏறிட்டான் உதய நிலாவின் அதிய வர்ஷன்.
நிலவு தோன்றும்….!!
✒️ ஷம்லா பஸ்லி