அவளது மென் கரம் பட்டதும் செந்தாழினி தான் என்று உணர்ந்தவன், திரும்பி அவளைப் பார்க்க அவளும் அவனது வதனத்தை பார்த்ததும், அவனது முகவாட்டத்தை நொடியில் கண்டு கொண்டவள்,
“என்ன சார் ஏதாச்சும் பிரச்சனையா முகம் வாடி போய் இருக்கு அம்மாகிட்ட பேசறதுன்னு சொன்னீங்களே அம்மாக்கு எதுவும் உடம்பு சரியில்லையா..?” என்று ஊகித்த விடயத்தை கேட்க,
அவனுக்கும் அது ஆச்சரியம் தான். ‘எனது முகத்தில் தெரியும் சிறிய மாற்றத்தை வைத்து எனது மனதை படித்து விட்டாளே..!’
“இல்ல செந்தாழினி அம்மா நல்லா தான் இருக்காங்க ஆனா அக்காக்கு தான் கொஞ்சம் உடம்புக்கு முடியல அதுதான் ரொம்ப கவலையா இருக்கு..”
“என்னாச்சு அக்காவுக்கு காய்ச்சலா..?”
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல அவங்க ஆறு மாசம் கர்ப்பமா இருக்காங்க இப்போ கொஞ்சம் வயிறு வலிக்குதாம் அதுதான் நானும் அங்க இல்ல அப்பாவும் வெளியூருக்கு வேலைக்கு போயிட்டாங்க.
அக்காவை ஹாஸ்பிடல் சேர்ப்போம்னா யாருமே பக்கத்துல இல்ல அதோட அவங்க ரொம்ப பயப்படுறாங்க அக்காவும் தான் இப்போ எனக்கு என்ன செய்றன்னு தெரியல நான் வந்து முழுசா மூணு நாள் கூட ஆகல அதுக்குள்ள திரும்பி போகணுமான்னு எனக்கும் ரொம்ப கவலையா இருக்கு
இங்க எவ்வளவோ சுத்தி பார்க்க இருக்கு இப்பதான் திருவிழாவும் ஆரம்பிச்சிருக்கு இந்த திருவிழாவில் நடக்கிற சடங்கு சம்பிரதாயங்கள் எல்லாத்தையும் பார்க்கலாம்னு நினைச்சேன் ஆனா என்னோட ஆசை எல்லாம் அப்படியே மண்ணா போச்சு சரி பரவால்ல அடுத்த தடவை லீவுக்கு கட்டாயமா வந்து டூ வீக்ஸ் ஆவது தங்கி இருந்து தான் போவேன்..”
“அப்போ நீங்க இப்போ கிளம்ப போறீங்களா சார்..?”
“ஆமா செந்தாழினி நான் உடனே புறப்படணும் அங்க நான் இருந்தா தான் அம்மாவுக்கும், அக்காவுக்கும் கொஞ்சம் மனசுக்கு ஆறுதலா இருக்கும் டிரஸ் எல்லாம் எடுத்து வச்சுட்டேன் உன்கிட்ட சொல்லிட்டு போகணும்னு தான் வந்தேன்..” என்று கூற,
“சரிங்க சார் கவனமா போயிட்டு வாங்க..” என்றதும் ஆதிரனுக்கு மனதில் ஏனோ மனம் பாரமாக இருந்தது.
அவ்வளவுதானா போய்ட்டு வாங்கன்னு சொல்லிட்டா ஏதாவது என்ன பத்தி கவலை அவளது கண்களில் தெரிகின்றதா என்று பார்த்தால் அவளோ அங்கு திருவிழாவை பார்க்கும் சந்தோசத்தில் இருந்தாள்.
அப்போ நான் போறதில்ல அவளுக்கு ஒரு துளி கவலை கூட இல்லையா என்று அவன் மீண்டும் தன் மனதையே கேட்டுக்கொண்டான்.
ஆனால் அது அவளது கண்களில் தெரிந்த பாடு இல்லை ஏமாற்றத்துடன் செல்ல,
செந்தாழினி “ஆதிரன் சார்..” என்று அழைத்த வண்ணம் பின்னே ஓடி வர,
‘ஆஹா போகாதீங்க அப்படி இப்படின்னு ஏதோ சொல்ல போற பாப்போம் என்னதான் சொல்றான்னு..’ என்று எதிர்பார்ப்புடன் ஆதிரன் அதே இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருக்க,
அருகில் ஓடி வந்த செந்தாழினி மூச்சு வாங்கி படி,
“சார் கொஞ்சம் என்கூட வாங்க நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னுக்கு பத்து நிமிஷம் இதை செஞ்சுட்டு போனீங்கன்னா கட்டாயமா உங்களுக்கு நல்லது நடக்கும்..”
“என்னது என்ன செய்யணும்..?”
“வாங்க சார் வாங்க சொல்றேன்..” என்று அழைத்து சென்றவள்,
அங்கு அருகில் சந்திரா வீடு இருக்க அவளது சரிந்து வளர்ந்திருந்த தென்னையில் ஒரு தேங்காயைப் பறித்து வந்து தேங்காயின் கண் வெளியே தெரியாதபடி உரித்து எடுத்தவள்,
அதனை எடுத்துக் கொண்டு கழுவி மஞ்சள், சந்தனம் தடவி அதனை அலங்கரித்து ஆதிரனின் கையில் கொடுத்தாள்.
“என்ன செந்தாழினி இது எதுக்கு இந்த தேங்காய்..”
“வாங்க சார் சொல்றேன்..” என்று அம்மன் கோயிலுக்கு அழைத்து சென்றவள், அங்கு இருக்கும் ஆலமரத்தை காட்டினாள்.
அங்கு வெள்ளைத் துணியால் தேங்காயைக் கட்டி முடிந்து வைத்திருந்தனர். அந்த ஆலமரம் நிறைய தேங்காய்களால் கட்டப்பட்டிருந்தன.
அதைப் பார்த்ததுமே அவனுக்கு ஏதோ வேண்டுதல் முறையாக்கும் என்று தோன்றியது அதை பற்றிய விளக்கத்தைக் கேட்க செந்தாழினியை பார்த்து புருவம் உயர்த்தினான் ஆதிரன்.
“இது வந்து சார் இந்த ஊரு சம்பிரதாயம், நம்பிக்கை, வேண்டுதல் என்று சொல்லலாம்
இந்த ஆலமரம் ரொம்ப சக்தி வாய்ந்தது சார் அம்மனே இந்த ஆலமரத்துல குடியிருந்து எங்கள காக்குறானு எங்களுக்கு நம்பிக்கை எங்களுக்கு என்ன துன்பம் வந்தாலும் ஏதாவது பிரச்சனை வந்தாலும் ஒரு தேங்காய நிலத்துல படாம பறித்து அதில் மூன்று கண்களும் வெளியே தெரியாம உரித்து
அதை அம்மன் போல மஞ்சள் குங்குமம் தடவி அலங்கரித்து வெள்ளை துணியால் கட்டி எங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கோ அந்த கஷ்டத்த தேங்காய்கிட்ட சொல்லி அதை மரத்துல கட்டினோம்னா ஒரு வாரத்துக்குள்ளையே அது சரியா போயிடும்
எனக்கெல்லாம் ரெண்டு நாள் மூன்று நாளிலேயே சரியாகிடுச்சு ஒரே ஒரு வேண்டுதலை தவிர..” என்று அவள் சொல்லி முடிக்க,
“அது என்ன வேண்டுதல்..?” என்று ஆதிரன் கேட்டான்.
“அத விடுங்க சார் அது ரொம்ப பெரிய கதை நான் அப்புறமா சொல்றேன் நீங்க இப்போ உங்க அக்காவும், பிள்ளையும் ஆரோக்கியமா இருக்கணும் என்று நினைத்து இதை அந்த ஆலமரத்துல கட்டுங்க சார் உடனே சுகமாயிரும் பொய்யின்னா பாருங்க நீங் ஊர் போய் சேர முன்னே நல்ல செய்தி நல்ல செய்தி வந்திரும்..” என்று நம்பிக்கையுடன் செந்தாழினி கூற,
“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்ல இருந்தாலும் நீ சொல்றதுக்காக ஏதோ நான் இதை செய்றேன்..”
“இல்ல சார் நம்பிக்கையோடு நீங்க வேண்டுதல் வச்சா தான் அது நிறைவேறும்..” என்று கூற சிரித்துவிட்டு அந்த தேங்காயை சூடம் ஏற்றி ஆதிரனின் கையில் கொடுத்தாள்.
அந்த மரத்தை ஒரு முறை சுற்றி வந்து வெள்ளை துணியால் அதை சுற்றி கட்டி அந்த மரத்தில் ஒரு கிளையில் நன்கு இறுகக் கட்டி கைகூப்பி கடவுளை வேண்டிக் கொண்டான்.
அப்படியே வேண்டியவன் செந்தாழினியைப் பார்த்து,
“உனக்கு எப்படி நான் தேங்க்ஸ் சொல்றதுனே தெரியல எவ்வளவோ கஷ்டங்கள் மனசுல இருந்தாலும் நீ தார நம்பிக்கையிலையும் நீ சொல்ற வார்த்தைகளாலையும் எனக்கு என்னவோ என்னோட கவலைகள் எல்லாம் என்னை விட்டு பறந்து போற மாதிரி இருக்கு
என்ன பிரச்சனை வந்தாலும் நீ எனக்கு வழிகாட்டுறா முறையும், நீ என்னை வழி நடத்துற முறையும் நீ எனக்கு கொடுக்கிற சப்போர்ட்டு அதெல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப உதவியா இருக்கு
இப்போ இங்க சாமிகிட்ட வேண்டினதுக்கு அப்புறம் அக்காவுக்கு எதுவும் ஆகாது என்ற நம்பிக்கை எனக்கு வந்திருக்கு சரி நான் சீக்கிரமா போகணும் இல்லான்னா பஸ்ஸ மிஸ் பண்ணிடுவேன் ஓகே நான் போயிட்டு வரேன்..”
“சரிங்க சாரி கவனம்…” என்று செந்தாழினி வழி அனுப்ப,
பெட்டியை எடுத்துக்கொண்டு வேகமாக மாந்தோப்பு வழியாக நடந்து சென்றான் ஆதிரன். அவன் செல்லும் வழி சரி என்று தான் எண்ணிக் கொண்டு சென்றான் ஆனால் வழி ரொம்ப நீளமாக இருந்தது.
பேசாமல் செந்தாழினியையும் கூட்டி வந்திருக்கலாமோ திருவிழாவை பார்த்து ரசிச்சு கொன்னு இருக்கா அவள ஒரே நாம தொல்லை பண்ண கூடாது அப்படியே இந்த வழியாக தான் வந்த ஞாபகம் இருக்கு இருட்டா இருந்ததால பெருசா ஒன்னும் புரியல சரி அந்த அருவிய பிடிச்சு அப்படியே போய் சேர்ந்திடுவோம் என்று மாந்தோப்பு வழியாக அப்படியே அருவி ஓடும் திசை நோக்கி நடக்க ஏதோ சலசலப்பு சத்தம் கேட்டது.
அந்த சத்தம் கேட்டு அன்று முதன்முதலாக அவன் ஊருக்குள் வரும்போது செந்தாழினியன் முதல் சந்திப்பு ஞாபகம் வந்தது.
மென் சிரிப்புடன் வேகமாக நடையை எடுத்து வைக்க மீண்டும் அதேபோல சத்தம் கேட்க யார் என்று திரும்பி சுற்றும் முற்றும் பார்த்தால் அங்கு யாரும் இல்லை.
ஏதோ மனதுக்கு தப்பாகப் பட, மீண்டும் நடையின் வேகத்தை அதிகரித்த படி அவன் அந்தப் பாதையில் செல்லும் அவ்வேளையிலேயே எதிர்பாராத விபரீதமான அந்த சம்பவம் நடந்தேறியது.
திடீரென நான்கு அடியாட்கள் கையில் கத்திகளுடன் வந்து ஆதரன் முன்பு நின்றனர். அப்படியே பின்னே இரண்டடி எடுத்து வைக்க அவன் பின்புறமும் நான்கு பேர் கையில் கத்தியுடனும் அரிவாளுடனும் வந்து நின்றனர்.
ஒவ்வொருத்தனையும் பார்த்தால் மலைப்பாம்பை முழுங்கியவர்கள் போல மிகவும் திடகாத்திரமான உடலுடன் முகத்தை யாரும் அறியாதபடி சேரும் சகதியும் பூசியபடி ஆதிரன் முன்பு வந்து நிற்க,
ஆதிரனுக்கு நன்கு விளங்கியது இவர்கள் தன்னை தாக்கத்தான் இவ்வாறு வந்து நிற்கின்றனர் என்று ஆனால் நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்று அந்நேரம் அவனது மனம் கணக்கிட்டு கொண்டிருந்தது.
அத்தோடு இதை செய்தவர் யாராக இருக்கக்கூடும் என்றும் மனம் ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
அவனை அதிகம் யோசிக்கவிடாமல் அதில் இருக்கும் ஒருவனே அதற்கான பதிலையும் தந்தான். அந்த அடியாட்களில் ஒருவன்,
“என்னடா எங்கடா ஓடப் பார்க்கிற இந்த ஊரை விட்டு நீ உயிரோட இங்கிருந்து போய் விடுவியா அதுவும் எங்கய்யா வரதராஜனையும், சின்னய்யா செந்தூரனையும் பகைச்சுக்கிட்டு இந்த ஊரை விட்டு ஒழுங்கா நீ உன்னோட ஊருக்கு திரும்பி முழுசா போய்டுவியா அப்படி போகத்தான் நாங்க விட்டுருவோமா..” என்று கேட்க,
ஒன்றும் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தவன் அதில் மிகவும் கருப்பாகவும் உயரமாகவும் பெரிய உருவத்துடனும் இருக்கும் ஒருவன் இப்படி மிரட்ட அப்போது தான் அவனுக்கு புரிந்தது வரதராஜனும் செந்தூரனும் சேர்ந்து திட்டம் போட்டு தன்னை அடிப்பதற்காக அடியாட்களை அனுப்பி இருக்கின்றார்கள் என்று உடனே அவர்களைப் பார்த்து,
“இங்க பாருங்க எனக்கும் உங்களுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை பஞ்சாயத்துல நான் நியாயம் கேட்டு எல்லாருக்காகவும் தான் பேசினேன்.
ஆனா நீங்க இப்படி செய்றது ரொம்ப தப்பு அவங்க கிட்ட அதிக பணம் இருக்கு என்றதுக்காக இப்படி எல்லாம் அவங்க பண்ணிக்கிட்டு இருக்கிறது சட்டப்படி குற்றம் அதைத்தான் இந்த ஊர் மக்களுக்கு நான் எடுத்துச் சொன்னேன் அதுக்கு ஏன் என்ன கொல்ல வர்றீங்க..”
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது எங்க ஊர் பெரிய மனுசன எதிர்த்து பேசினா இதுதான் நிலைமை என்று ஊருக்குள்ள இருக்குறவங்களுக்கு தெரியணும் அப்பதான் இனிமே எங்க ஐயாவை யாருமே எதிர்த்து பேச மாட்டாங்க எங்கோ இருந்து நீ வந்து வாலாட்டிட்டு போக நாங்க என்ன சொம்பையா..” என்று அடுத்தவன் மிரட்ட,
“இங்க பாருங்க ஒரு பொண்ணுக்கு அநியாயம் நடந்துச்சு அத தட்டிக் கேட்டேன் அவ்வளவுதான் இப்போ நான் அவசரமா ஊருக்கு கிளம்புறேன் வீணா தகராறு பண்ணாம வழிய விடுங்க இந்த பஸ்ஸ மிஸ் பண்ணினா இனி நாளைக்குத் தான் அடுத்த பஸ் வரும்..” என்று கூறிக் கொண்டிருக்கும்போது முன்னிருந்து ஒருவன் பெரிய தடியைக் கொண்டு ஆதிரனைத் தாக்க பாய்ந்து வந்தான்.