உயிர் தொடும் உறவே -09

4.7
(7)

உயிர்-09

சங்கரபாண்டியனோ ,” நம்ம‌‌ வீடு தான் அரண்மனை மாதிரி இருக்குதே. ஏன் வெளியில தங்கனும்…? கோமதிக்கு வேலையெல்லாம் சிரமம் இல்லை. சொந்த பந்தம் வந்தா ஆக்கிப் போட்டு நல்லா பாத்துதான் அனுப்பனும்‌ அதான் வீட்டு பொம்பளைகளுக்கு அழகு.” என்று மீசையை முறுக்கியவாறே கூறிவிட்டு தங்களின் தோப்பு வீட்டிலேயே அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார்.

அதே மீனாட்சி மற்றும் கோமதி அவர்களின் வீட்டிற்கு சென்றால் இவர் கூறிய விருந்தோம்பல் கிடைக்குமா ..? என்பது சந்தேகமே. தலை வலி, மூட்டு வலி, சுகர்‌ பிரச்சினை என வியாதிகளை முன்னிறுத்தி அனைத்து வேலைகளையும் கோமதி மற்றும் மீனாட்சியின் தலையில் கட்டி விடுவார்.

சங்கர பாண்டியனும்‌ ,” பாவம்‌ தங்கச்சி மூட்டு வலியில் கஷ்டப்படுது. கொஞ்சம் ஒத்தாசையா இருங்க‌ ரெண்டு ‌பேரும்‌ “என்று கூறிவிட்டு மயில்வாகனத்துடன் திராட்சை தோட்டத்திற்கு சென்று விடுவார்.

 

 வடிவு கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்க,  அனைத்து வேலைகளையும் கோமதி மற்றும் மீனாட்சியிடம் ஒப்படைத்து விட்டு அமர்ந்திருப்பார். இருவரும் வீட்டு வேலைகளை செய்வதற்கு என்றுமே சளைத்தவர்கள் இல்லை. ‌மளமளவென அனைத்து வேலைகளையும் முடித்து சமையலையும்‌ முடித்து விடுவார்கள்.

 

இவ்வாறெல்லாம் ஒரு காலத்தில் நடந்து கொண்டிருந்தது . மெது மெதுவாக கோமதி தேனிக்கு செல்வதை குறைத்துவிட்டார்.  அவ்வபோது சங்கர பாண்டியனின் குடும்பம் தேனிக்கு வருவது , மீனாட்சி மற்றும் கோமதியிடம் வடிவு நடந்துக் கொள்வது என அனைத்தும் ஆதியின் கவனத்திற்கு சென்றுவிடும். அதை எண்ணித்தான் தனி வீடு முக்கியமாக பார்க்கச் சொன்னான்.

 

சங்கர‌பாண்டியனும்‌ தனது வீட்டிற்கு‌ சற்று‌ தள்ளி‌ உள்ள‌ தோட்ட வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு கூறிவிட்டார். இது‌‌ கூட ஒரு ‌‌வகையில் கோமதிக்கு நிம்மதியாகவே‌ இருந்தது.

 

முழுதாக மூன்று வருடங்களுக்கு பிறகு கள்ளிக்குடி கிராமத்திற்கு தனது‌ பெற்றோர்‌ மற்றும் நேஹாவுடன்‌ வந்திறங்கினான் ஆதித்யன்.

மனதில் ஏதேதோ சொல்ல முடியாத எண்ணங்கள் கிளர்ந்தெழுந்தது. அவர்கள்  முதலில் வந்திறங்கியது சங்கர‌பாண்டியனது ‌இல்லத்திற்கு‌தான்.

எட்டு ‌பேர்‌ அமரக்கூடிய வகையில் இருந்த உயர் ரகக் காரில் இருந்து இறங்கி நின்றான் ஆதித்யன்.

சங்கர பாண்டியன் ஓடோடி வந்து ,* வாப்பா ஆதி‌…. எப்படியிருக்க..? நல்லா இருக்கியா…? உள்ள‌ வா நம்ம‌ வீடு தான்…. “ என்றவர் நேஹா மற்றும் தனது தங்கை, அவரின் கணவர் மயில்வாகனத்தையும் ‌வரவேற்று ‌வீட்டினுள்ளே அழைத்துச்‌ சென்றார்.

 

“ கோமு…. மீனாட்சி….. எங்க இருக்கீங்க…? இங்க‌ன வாங்க…என்ன பண்ணிட்டு இருக்கீக‌ ரெண்டு பேரும்….” என்று உரத்த குரலில் அழைத்தார் இருவரையும்.

 

மீனாட்சி மற்றும் கோமதி சலித்துக் கொண்டே மாடியில் இருந்து இறங்கி வந்தனர்.

 

வடிவாம்பாளோ , “ ஆத்தாளுக்கும் பொண்ணுக்கும் வெளியே வந்து கூப்ட தெரியாதாக்கும்….பெரிய இளவரசிங்க….மஹாராணிங்க…இறங்கி வர‌ வலிக்குது….” என‌முணுமுணுத்தார்.

 

அவர் முணுமுணுத்தது நேஹா மற்றும் ஆதியின் காதில் விழுந்தது . ஆதி திரும்பி தனது தாயை ஒரு‌ பார்வை பார்த்தான். கப்பென வாயை மூடிக்கொண்டார்.

 

அடர் நீல நிற‌ப் பாவாடையிலும் ஆகாய நீல நிறத் தாவணியில் தேவதையைப் போலிருந்தாள் மீனாட்சி. சிறிய‌ குடை ஜிமிக்கி அவளது காதினோரம் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. கார் மேகக் கூந்தலைப் பின்னி மல்லிகை சரத்தை சூடியிருந்தாள்.

 

மூன்று வருடங்களுக்கு பிறகு பார்ப்பதினால் வடிவும் மீனாட்சியை கண்டு திகைத்துப் போய் ‌‌நின்றிருந்தார். ஏனோ அவளது அழகு இந்த மூன்று வருடங்களில் கூடிப்‌போய் இருப்பதாகத் தோன்றியது. நேஹாவோ அவளைப் பார்த்து வாய் பிளந்தாள்.

பெரிதாக அலங்காரம் இல்லாமல் அவளது அமைதியான அழகினைக் கண்டு ,” வாவ்…டிவைன்‌ ப்யூட்டி “ என்று ஆதித்யன் காதில் முணுமுணுத்தாள்.

அவனது விழிகளோ அழுத்தமாக அவளின் மேல் பதிந்திருந்தது.

அவளைப் பார்த்தபடியே , “ ம்ம்…எஸ்..டிவைன் ப்யூட்டி “ என்றான். கோமதியும் மீனாட்சியும் பொதுவாக, “ வாங்க…” என்பதோடு நிறுத்திக் கொண்டார்கள்.

 

சங்கரபாண்டியனோ நேஹாவைப் பார்த்தக் கொண்டே ,“ வடிவு…இந்தப் பொண்ணு….?” என்று இழுத்தார்.

 

“ ஆதித்யனோட….” என்று வடிவு ஆரம்பிக்கும் முன்னச ‌ஆரம்பிக்கும்‌ முன்னரே,

“ ஐ யம் நேஹா….ஆதியோட‌‌ ப்ரெண்ட் …ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் மட்டும் தான் ‌அங்கிள்….” என்று‌ தெளிவாக தங்களுடைய உறவினை அனைவருக்கும் புரிய வைத்தாள்.

 

சங்கர பாண்டியனோ யோசனையுடன் ,” ஓ.ஓ…அப்படியா…சரி‌…சரி‌ வாங்க சாப்பிடலாம் . கோமதி …எல்லாருக்கும் இலையை போடு…. மீனாட்சி தண்ணி எடுத்து வை…” என்றபடி அனைவரையும் உள்ளிருக்கும் பெரிய அறைக்குள் அழைத்துச் சென்றார்.

 

நேஹா இது போன்ற ‌வீடுகளை பார்த்ததில்லை என்பதால் அவளுக்கு ஒவ்வொரு விஷயமும் ‌பழக்க வழக்கங்களும் புதிதாக இருந்தது. அங்கு அவளுடைய உடை மட்டுமே ‌வித்தியசாமாக இருந்துது.

 

ஆனால் அவள் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. படபடவென பேசும் நேஹாவை ஏனோ சங்கர பாண்டியனுக்கு முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது. அவள் மேல் நல்ல அபிப்பிராயம் தோன்றவில்லை. பெண் என்றால் அடக்க ஒடுக்கமாக இருக்க வேண்டும் என்று வரையரைக்குள் இருப்பவருக்கு நேஹாவின்‌ சாதாரண பேச்சுக் கூட அலட்டலாகத் தெரிந்தது.

அவரது மனம் ஏனோ மீனாட்சியையும் நேஹாவையும்‌ சம்பந்தமேயில்லாமல் தொடர்பு படித்தி பார்த்துவிட்டு ஏளனமாக இதழ் வளைத்தார்‌ .

அவரது செயலை ஆதித்யன் பார்த்து விட்டான்.‌ஒன்றூம்‌ கூறாமல் இருந்தான். அவன் மனதில் எண்ண நினைக்கின்றான் என யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

 

 நன்றாக அசைவ உணவுகளை சமைத்து வைத்திருந்தார் கோமதி. சுடச்சுட அனைவருக்கும் பரிமாறினார்.

 

வடிவோ , இன்னும் கொஞ்சம் மிளகு தட்டிருக்கலாம்…” , “ இன்னும் கொஞ்சம் காரம் சேர்ததிருக்கலாம் …” எனக் குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருக்க , நேஹா மட்டும் கடோத்கஜியாக மாறி , “ வாவ் வாவ்… ஆன்ட்டி சமையல் சூப்பர். ஆதென்டிக் சௌத் இந்தியன் சமையல்…. ம்ம்…டேஸ்ட் அப்படியே நாக்குல நிக்குது…. இப்படியே இலையோட இருந்திடுறேன் ஆன்ட்டி…நைட்டுக்கும் இதையே சாப்டுக்கிறேன்…..யாரு சமையல் ஆன்ட்டி….நீங்களா…? இல்லை மீனாட்சியா…? “ என்றாள்.

 

கோமதியோ வடிவை ஒரு‌ பார்வை பார்த்து விட்டு ,  “இரண்டு பேரும் சேர்ந்து தான் சமைச்சோம்….” என்றார்.

 

நேஹாவோ பட்டென்று , “ சூப்பர்… அங்கிள் அல்ரெடி கொடுத்து வச்சவர் தான்…. மீனாட்சி உன்னை கட்டிக்கப் போறவரு ரொம்ப லக்கி ….” என்று கூறிய‌ பின்னரே சட்டென்று ஆதியின் புறம் திரும்பினாள்.

 

ஆதியோ நேஹாவை முறைத்துக் கொண்டிருந்தான். அவளோ வாயில் நெய் மிதக்கும் ரவா கேசரியை அதக்கிக் கொண்டு ,” ஹி…ஹி… …சாரி..டா…” என்றவள் கூச்சமின்றி , “ மீனாட்சி…இன்னும் கொஞ்சம் ‌கேசரியை கிண்ணத்துல போட்டு வை…. பாயசத்தை குடிச்சிட்டு கை கழுவிட்டு வந்து சாப்டுக்கிறேன்…இந்த மாதிரி சாப்பாடெல்லாம் நா சாப்டதேயில்லை. இங்க இருக்குற வரை இது மாதிரியே சாப்பாடு குடுத்துடு.. அப்பறம் எனக்கும் கொஞ்சம் சொல்லித் தா….நானும் ‌கத்துக்கிறேன். ஓகே வா….” என்று கூறி அவள் முகம் பார்த்து நின்றாள்.

 

மீனாட்சிக்கோ அவளது செய்கை சிறு பிள்ளைப்‌போல தோன்றியது. லேசாக சிர்த்தபடி , “சரிங்க…” என்று கூறிவிட்டு நகர்ந்தாள்.

அவள் பின்னரே சென்ற ஆதித்யன் ,” மீனாட்சி..” என்று அழுத்தமான குரலில் அழைத்தான். லேசாக உடல் அதிர திரும்பி அவனைப் பார்த்தாள்.

 

“ நிமிர்ந்து பாரு‌…” என்றவன் குரலில் அதே அழுத்தம். நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் அவனது பார்வையை கண்டு திகைத்தாள். அப்பட்டமாக காதலை விதிகளின் வழியே கடத்திக்க கொண்டிருந்தான் ஆதித்யன். முகத்தில் கடுமையையும் விழிகளில் அளப்பரியா காதலையும் காட்டுவதற்கு அவன் ஒருவனாலேயே முடியும்.

 

“ எப்படியிருக்க…? “ என்றான்.

 

அவனது முகத்தை பார்த்து குழம்பியவள்‌,” ம்ம் நல்லாயிருக்கேன்…” என்று சுருக்கமாக கூறி விட்டு நகர்ந்தாள்.

செல்லும் அவளையே விழியகற்றாமல் பார்த்திருந்தான் ஆதித்யன்.  அவள் எங்கு சென்றாலும்  அவனது விழிகள் அவளை வஞ்சனை மில்லாமல் பின் தொடர்ந்தது.

 

ஏனோ அவனது பார்வை அவளுக்கு சரியாகப் படவில்லை. மனதில் ஏனோ ஒரு வித நடுக்கம் பரவியது. எனவே ,ஈஸ்வரன் எங்கிருக்கின்றான்

என புகழனியிடம் கேட்டுவிட்டு அவனைக் காண வயற்காட்டிற்குச் சென்றாள்.

எட்டு ஏக்கர் அளவில் நெற்பயிர்களை சாகுபடி செய்திருந்தான். பச்சை பசேலென கண்ணுக் குளிர்ச்சியாக‌ மெல்லிய காற்றில் அழகாக அசைந்தாடிக் கொண்டிருந்தன நெற்பயிர்கள்.

பார்த்து பார்த்து ஒரு தாய் தன் முதல் குழந்தையை எவ்வாறு வளர்ப்பார்களோ அவ்வாறு பாடுபட்டு ஒரு பூஞ்சை நோயும் அண்டாமல் கண்ணும் கருத்துமாக ஒவ்வொரு பயிர்களையும் நேசத்துடன் பாதுகாத்து வந்தான்‌.

 

இப்போதும் அழகிய பச்சை பட்டாடை  அணிந்தது போலிருந்த நெற்பயிர்களின் அழகினை ரசித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் ஈஸ்வரன். அவனது மனம் மீனாட்சிக்கு புரிந்தது. நெற்கதிர்களை சொந்தக் குழந்தைகளைப் போன்று பாவிப்பவன் . பொழுது போகவில்லை என்றால் இப்படியே அமர்ந்து ரசிக்க ஆரம்பித்து விடுவான். அன்ன ஆகாரம் தேவையில்லை. அவனது ஜீவனே அதில்தான் உள்ளது.

“ என்ன மாமா…? நா வந்ததக் கூட கவனிக்காம அப்படி என்னத்த ரசிச்சு பாக்குறீங்க…? என்னைய கூட நீங்க இப்படி ரசிச்சு பார்த்ததில்லையாக்கும் . ம்ம்க்கும்…” என சலித்து கொண்டாள்.

 

ஈஸ்வரனோ சிரித்தபடி, “ நமக்கு படியளக்குற சாமி மீனாட்சி….. இன்னும் கொஞ்ச நாள்ல அறுவடை பண்ணிடுவேன். அதேன் அதுக்கு முன்னாடி நல்லா ரசிச்சுக்கிடுவோம்….” என தனது பார்வையை பயிர்களில் இருந்து எடுக்காமலேயே கூறினான்.

 

“ மாமா…ஊர்ல இருந்து வடிவத்தை வந்துருக்காக…” என்று கூறி விட்டு நிறுத்தினாள்.

 

“ம்ம்…அதுக்கென்ன ஏற்கனவே சொன்ன தான…” என்று கூறி அவளது முகத்தை பார்த்தான்.

 

“அதில்ல மாமா…ஆதியும் வந்துருக்கு அவகக்…கூடவே ஒரு பொண்ணும். “

 

அவள் கூறியதைக் கேட்டவனது விழிகள் இடுங்கியது.

 

“ ஓஓ.ஓ…உங்க கையால வகையா சமைச்சு போட்டுட்டு வந்துருக்கீகளோ…? பலமான வரவேற்பா இருந்திருக்குமே…” என நக்கலாக.

 

மீனாட்சியோ சிரித்தபடி,” ஏன் இப்படி பேசுற…? வீட்டுக்கு வந்தவகளை நல்லா கவனிக்கத்தானே வேணும் ..” என எதார்த்தமாக கேட்டாள்.

 

“அது சரி ….எப்ப கிளம்புறாகளாம்… உங்க வீட்டுலயே தங்கிக்கிடுறாகளா…?”

 

“ அதெல்லாம் தெரியல மாமா…வேற வீடு பாத்து தங்குறாக…அப்பறம் புகழினிக்கு ஆஸ்பத்திரி கட்ட இடம் பாத்தியே…எப்ப பூசை போடப்போற…?”என பேச்சை மாற்ற அவனது முகமோ ஆயிரம் வாட்ஸ் பல்பாக எரிந்தது.

 

“ அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை..நீயும் வந்துடு…அத்தை கிட்டயும் சொல்லிபுடு. எனக்கிருக்க ஒரே சொந்தம் அதுவும் நீயும் மட்டுந்தேன். காலை ஆறுல இருந்து ஏழரைக்குள்ள பூசை போட்டுட்டுவோம். நீயும் அத்தையும் கண்டிப்பா வந்துடுங்க”

 

“ ம்ம்..சரி‌ மாமா…”எனறவள் தயக்கத்துடன் அவனது முகத்தை பார்க்க, ” மன்னிச்சுக்க மீனாட்சி…உங்க அப்பாவ கூப்பிடறதுக்கு எனக்கு அம்புட்டு பெரிய மனசு கிடையாது…நீயும் கூட வர்றதுன்னா வா…இல்ல உங்க இஷ்டம்…” என கடுகடுத்தான்.

 

சுணங்கிய மனத்துடன் எழுந்தவள் வலுக்கட்டாயமாக சிரித்தபடி, “ நல்லதே நடக்கும் மாமா…நானும் அம்மாவும் கண்டிப்பா வருவோம்.. கவலைப்படாதே ‌…அப்பறம் இப்படி கடுகடுக்காத …கஷ்டமா இருக்கு மாமா….நா வர்றேன் மாமா…”என நகர்ந்தது கைகளை பிடித்தான் ஈஸ்வரன் .

 

அவனது கைகள் மீது தனது கைகளை வைத்து அழுத்தி விட்டு வேக வேகமாக வயற்பரப்பில் நடந்தாள் மீனாட்சி.

செல்லும் அவளையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் ஈஸ்வரன்.

 

இவையனைத்தும் தூரத்தில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆதியின் உள்ளம் உலைகலனனெ கொதித்து.. இருவரும் நெருக்கமாக அமர்ந்திருந்த கோலம் இன்னும் தகிக்க செய்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 4.7 / 5. Vote count: 7

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!