அரண் 6
கண்விழித்ததும் மெதுவாக எழுந்து கைகளை பின்புறமாக கொண்டு சென்று சோம்பல் முறித்தபடி அங்கு சுற்றும் முற்றும் பார்த்தாள் அந்த அழகிய பெண்.
அங்கு யாரையோ கண்களால் சுழற்றித் தேட, அங்கு குழுமி நிற்பவர்கள் ஒவ்வொருத்தரும் அந்தப் பெண்ணின் அழகை பார்த்து மெய் மயங்கி தான் போனார்கள். அப்படியே அனைவரும் இமை மூடாமல் அந்தப் பெண்ணேயே பார்த்த வண்ணம் இருக்க,
துருவனின் அருகில் இருந்த அவனது நண்பனும்,
“டேய் யார்ரா இந்த பொண்ணு இவ்வளவு அழகா இருக்கா வாவ் பியூட்டிபுல் கேர்ள் சும்மா ஏஞ்சல் மாதிரி இருக்கா டா..” என்று கூற,
அப்போதுதான் துருவன் அவனது வார்த்தைகள் கேட்டு திகைப்புடன் அவளை திரும்பிப் பார்த்தான்.
அவனுக்கு இந்த இக்கட்டான நிலைமையில் அவளது அழகை ரசிக்கும் எண்ணமெல்லாம் தோன்றவில்லை.
யார் இவள்..? என்ற கேள்வி மட்டுமே அவனது மூளையை குடைந்து கொண்டிருந்தது.
யாராவது தொழில் வட்டாரத்தில் இருக்கும் எதிரிகள் செய்த சதியோ என சிந்தித்தவன்,
தனது சுயமரியாதை, கௌரவம் அனைத்தும் இந்த பிசினஸ் சாம்ராஜ்யத்தில் தவிடு பொடியாக்கவே இவ்வாறு யாராவது செய்திருக்க வேண்டும் என்று அவனது எண்ணம் அதிலேயே நிலைத்து நின்றது.
வைதேகி அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு தனபாலின் அருகில் வந்து நிற்க,
தனபால் அந்தப் பெண்ணை பார்த்து,
“இங்க பாருமா.. பயப்படக்கூடாது… நான் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுமா..” என்று பரிவாகக் கேட்க,
அந்தப் பெண்ணின் தலையோ குனிந்தபடியே இருந்தது.
தனபாலனின் கண்கள் ஒரு முறை அங்கு இருப்பவர்களை மேய்ந்தது. பின் குரலை செருமிக் கொண்டு,
“உன்னோட பெயர் என்னம்மா..” என்று தனபால் கேட்க, அந்தப் பெண்ணும் துருவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு திரும்பியும் தலையைக் குனிந்தது.
“நீ எங்கிருந்து வாராமா..?”
“…………..”
“உனக்கு எப்படி துருவன தெரியும்..?”
“………………”
“நீயும் அவனும் லவ் பண்றீங்களா..”
“……………”
“அவனோட பெட் ரூம்ல நீ எப்படி வந்த…?”
“………….”
“ஏதாவது பேசுமா நீ பேசினால் தான் இங்கு நடக்கின்ற குழப்பங்களுக்கெல்லாம் ஒரு முடிவு வரும்..” என்றவர் கேள்விகளை தொடுத்துக் கொண்டிருக்க ஒன்றுக்கும் பதில் கூறாமல் துருவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.
துருவனும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளைப் பார்த்து அனைவரும் அழகில் ரசித்திருக்க துருவனுக்கு மட்டும் அவள் மீது ஏகபோகமாக கோபம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.
அவளின் பார்வை எல்லாம் தன் மீதே நிலைத்து நிற்க அவனுக்கு மேலும் எரிமலை வெடிப்பது போல சீற்றம் எழுந்தது.
‘ஏதோ பிளானோட தான் இவள் இங்க வந்திருக்கணும்.. வாயை திறக்கிறாளா பாரு.. அவ்வளவும் விஷம்…’ என்று அந்தப் பெண்ணை மனதிற்குள் அர்ச்சனை செய்து கொண்டிருந்தான்..
வாய் திறந்து என்ன கூற போகின்றாளோ என்று தெரியாமல் துருவன் முழித்துக் கொண்டிருக்க, அவளோ மெல்ல நடந்து துருவனின் அருகில் போய் நின்றாள்.
‘சரியா போச்சு இன்னைக்கு யார் மூஞ்சில முழிச்சேனோ தெரியல… விடிந்ததும் ஏழரை வந்து பக்கத்தில் நிற்கிறது..’ என மனதிற்குள் நினைத்தவன் அவள் அருகில் வர அவன் இரண்டு அடி பின் வைத்து நகர்ந்து நின்றான்.
மும்பை தொழில் சாம்ராஜ்யத்தை ஆள்பவன் ஒரு பெண்ணிற்கு பயந்து பின் நகர்ந்து நிற்க வேண்டிய நிலைமை உண்டாகும் என்று யாராவது நேற்று சொல்லி இருந்தால் கூட அவன் நம்பி இருக்க மாட்டான்.
இதோ இப்போது நடக்கின்றதே.. அவள் மீண்டும் அவன் அருகே நகர்ந்து சென்று அவனை இறுக்கி அணைத்து அழத் தொடங்கினாள்.
அழுகையோ அழுகை அப்படி ஒரு அழுகை அவன் நடப்பது என்னவென்று தெரியாமல் அவனை அனைவரும் பார்க்க அவன் விழி பிதுங்கி அதிர்ச்சியில் நின்றான்.
அவளது அழுகை சத்தம் அந்த மண்டபத்தையே ஆட்டி அசைத்தது அப்படி ஒரு குரல் வளம்.. ஒலிபெருக்கியை திறந்து விட்டது போல இருந்தது.. அந்த மண்டபமே அதிருது என்றால் அருகில் இருக்கும் துருவனின் நிலைமை எப்படி இருக்கும்.
ஒரு நிமிடத்தில் அவனது காது அடைத்துவிட்டது.
அவளது அனைப்பில் இருந்து விடுபட துருவன் முயற்சிக்க அவளது பிடி உடும்புப்படியாக இருந்தது.
வைதேகி இவளது திடீர் செயலைப் பார்த்து ஒரு நிமிடம் நெஞ்சில் கை வைத்தபடியே இருக்கையில் அமர்ந்து விட்டார்.
தனபால் சுதாரித்துக் கொண்டு
“என்னடா துருவன் இது..?”
“எனக்கு தெரியலப்பா இந்த பொண்ண முதல் என்னிலிருந்து இழுத்து பிரித்து எடுங்க ஏதோ நாடகம் ஆடுது ப்ளீஸ்பா ஹெல்ப் பண்ணுங்க..” என்று கேட்க,
தனது மகள் வயது இருக்கும் பெண்ணை எவ்வாறு தனபால் தொடுவது என்று நாகரிகம் கருதி பின் நகர்ந்து நின்று விட்டார்.
அவளோ விடாமல் அழுது கொண்டே இருக்க, சுற்றி நின்ற அனைவரும் தங்களுக்குள் ரகசியம் பேசிக்கொண்டார்.
அடுத்து என்ன நடக்கக் காத்திருக்கின்றது என்று பார்ப்பவர்களுக்கு அவ்வளவு சுவாரசியமாக இருந்தது.
ஒருவாறு அழுது முடித்தவள் துருவனிலிருந்து விலகி விம்மி விம்மி,
“எனக்கு ரொம்ப பசிக்குது..” என்று மீண்டும் தனது ராகத்தை இழுக்கத் தொடங்கினாள்.
அங்கிருந்த அனைவருக்கும் இவளது அழுகையைக் கண்டு சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை.
சாப்பாட்டிற்காக வா இப்படி அழுது இருக்கிறாள்.
தனபாலுக்கோ இவளிடம் என்ன கேட்டால் என்ன சொல்கிறாள்.
குடியே மூழ்கிப் போனது போல வைதேகி அருகில் போய் தனபாலும் உட்கார்ந்து விட்டார்.
“வைதேகி இது சரிப்பட்டு வராது வா நாங்க வீட்டுக்கு கிளம்புவோம்..” என்று கோபமாக தனபால் கூற,
“என்னங்க இப்படி சொல்றீங்க கொஞ்சம் பொறுங்க நான் அந்தப் பெண்ணிடம் பக்குவமாக என்னென்று கேட்கிறேன்..”
“அப்படியே சொல்லிட்டாலும்.. ஏதாவது செய்து தொலை இந்த கருமத்தை எல்லாம் என்னால பார்க்க முடியாம இருக்கு..” என்று தனபால் சிடுசிடுக்க,
எழுந்த வைதேகி அந்தப் பெண்ணின் அருகில் சென்று தோளில் ஆதரவாகத் தொட,
அவளோ கண்களை துடைத்து விட்டு கேள்வியாக அவரைப் பார்த்தாள்.
“நான் உனக்கு அம்மா மாதிரி என்றே வைத்துக் கொள் வயிற்றை காய போடக்கூடாது வா சாப்பிடலாம்.. சாப்பிட்ட பிறகு நான் உன்கிட்ட சில விஷயங்கள் கேட்பேன் நீ எனக்கு மட்டும் தனியாக அதை ரகசியமா சொல்லணும் சரியா..?” என்று கூற,
துருவனை திரும்பிப் பார்த்துவிட்டு சரியென தலையாட்டினாள்.
உடனே அங்கு வேலையாட்கள் மூலம் உணவு பரிமாறப்பட்டது. அனைவரையும் தனபால் கீழே நிற்கும்படி கூற அனைவரும் கீழே இறங்கி விட்டனர்.
உணவை இலையில் போட்டவுடன் 10 நாள் சாப்பிடாமல் பட்டினி இருந்தவள் போல மிகவும் வேகமாக உணவினை உண்ணத் தொடங்கினாள். அன்று திருமணத்திற்கு என்று பல வகையான உணவுகள் சமைக்கப்பட்டிருந்தன அதில் கிட்டத்தட்ட 20 வகைக்கு மேல் உணவுகள் அவள் முன் வைக்கப்பட்டிருந்தது.
அத்தனையும் ருசி பார்ப்பது போல் ஒன்று விடாமல் உண்டு முடித்து விட்டாள்.
அவளது இந்த குட்டி வயிற்றுக்குள் இவ்வளவு உணவும் எங்கு சென்று ஒளிந்து கொண்டது என்றே தெரியவில்லை.
உண்ண உண்ண அவளுக்குப் பசியும் அடங்கிய பாடில்லை.
தனபாலுக்கே தலை சுற்றுவது போல இருந்தது. இவ்வளவு உணவையும் இது நாள் வரை இவள் கண்டதில்லையோ..!
துருவனுக்கு அதற்கும் மேல் சரியான தின்னிப் பண்டாரம் போல எப்படி சாப்பிடுகிறாள் பாரு கொஞ்சமாவாது கேப் விடுறாளா..? வாய் அழுகுறதுக்கும் தின்றதுக்கும் மட்டும்தான்.. கும்பகர்னி..” என்று வாய் அசைத்து முணுமுணுத்தான் துருவன்.
உண்டு முடித்து தண்ணீரையும் குடித்துவிட்டு நிமிர்ந்து வைதேகியை கேள்வியாகப் பார்த்தாள்.
அந்தப் பார்வையே உணர்த்திவிட்டது. எனக்கு பசி தணிந்தாகிவிட்டது நீங்கள் கேட்கும் கேள்வியை கேட்கலாம் என்று,
அந்த அறைக்குள் வைதேகி, தனபால் துருவன் அந்தப் பெண் இவர்களைத் தவிர வேறு ஒருவரும் இல்லை.
அனைவரையும் வெளியே அனுப்பி கதவை சாத்திவிட்டனர்.
சிறிது நேரத்தின் பின் அறைக்குள் இருந்து கதவை திறந்து கொண்டு வைதேகி வெளியே வந்து, மாடியில் இருந்து கீழே இருப்பவர்களை பார்க்க, அனைவரும் தங்களுக்குள் பலவிதமாக பேசிக்கொள்ள மேலே நின்றபடி,
“அனைவருக்கும் வணக்கம்.. தாமதத்திற்கு மன்னிக்கவும். இங்கு நடந்த குழப்பங்களுக்கு நாங்க சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கோம். நீங்க யாரும் கவலைப்பட தேவையில்லை. கல்யாணம் கட்டாயம் நடக்கும் துருவனோடு இந்த பொண்ணுக்கு, எல்லோரும் இருந்து கல்யாணத்தைப் பார்த்து இருவரையும் மனதார வாழ்த்தி சந்தோசமாக உண்டு விட்டு தான் செல்ல வேண்டும்..” என்று மகிழ்வோடு கூறினார்.
திருமணத்திற்கு வந்திருந்தவர்களுக்குள் பல கேள்விகள் எழுந்தன. ஆனால் இருந்தும் அங்கிருப்பவர்களில் ஒருவருக்கு கூட அந்தக் கேள்வியை கேட்கத் துணிவில்லை.
துருவன் தலையை தொங்கப் போட்டபடி வேட்டி சட்டையுடன் கீழே வர அந்தப் பெண்ணோ அழகிய பட்டுப் புடவையில் லட்சுமி கடாட்சமாக உடல் மினுங்க நகைகளும் அணிந்து கொண்டு கீழே இறங்கி வந்தாள்.
ஏனோ தெரியவில்லை ரேகா புடவையில் அழகாக இருந்தாலும் அவளிடம் சிறு சிறு குறைகள் காணப்பட்டன. அந்தக் குறைகள் இந்த பெண் அலங்கரித்து வந்த பின்பு நிவர்த்தி செய்யப்பட்டதாகவும் பார்ப்பவர்களுக்கு திருப்தியாகவும் இருந்தது. அங்கு இருப்பவர்கள் ரேகாவையும் இந்த பெண்ணையும் ஒப்பிட்டுப் பார்த்து மனதிற்குள் சிரித்துக் கொண்டனர்.
வைதேகிக்கும் ரேகாவை விட இந்தப் பெண்ணின் அழகு மிகவும் பிடித்திருந்தது. விசித்திரமான பெண்ணாகவே வைதேகி இவளை பார்த்தாள்.
அடுத்தடுத்து தடல்புடலாக கல்யாண வேலைகள் வேகமாக இடம் பெற்றன.
மேளம் கொட்ட நாதஸ்வரம் இசைக்க கெட்டிமேளம் கெட்டிமேளம் என்று ஐயர் கூற அந்தப் பெண்ணின் சங்குக் கழுத்தில் தாலி ஏறியது.
விண்ணில் இருந்த தேவர்களும் வாழ்த்தியது போல பூக்கள் இருவர் மீதும் தூவப்பட்டன. துருவனோ எந்தவித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இயந்திர கதியிலேயே இயங்கிக் கொண்டிருந்தான்.
அறையினுள் நடந்த விடயம் யாது..? ஏன் துருவன் இயந்திர கதியில் இயங்க வேண்டும்..
அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்