பரீட்சை…!! – 1
-சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
பெரியவர்கள் பார்த்து
இணைத்து
வைத்த
பந்தம் நம் பந்தம்..
பெண் பார்த்த
அன்றே உன்
கண்
பார்த்தேன்..
பிறைமுகம் கண்டு
பித்தாகிப்
போனேன்
நான்..
நீ என்னவள் என்று
நிச்சயம் செய்ததும்
நல்ல ஒரு
நாளில்
நம் திருமணம்
நடக்க
நிழலாய் வந்தாய்
நீ என்
பின்னோடு..
ஆறு வருடமாய்
இந்த
அழகிய உறவில்
அளவிலா ஆனந்தம்
கண்டு
மனதால் உயிரால்
உணர்வால்
ஒன்றானோம்.. இனி
மரணம் மட்டுமே
நம்மை
பிரிக்க முடியும்..
################
உயிருக்குள் உறைந்தவள்..!!!

கதிரவன் மெல்ல மலைமுகட்டில் இருந்து தன் ஒளிகிரணங்களை நிலத்தின் மீது படர விட்டுக் கொண்டு மெல்ல மெல்ல மறைத்த தன் முகத்தை வெளி காட்டிக் கொண்டிருந்தான்..
இலைகளில் ஒளிந்திருந்த பனித்துளி மெல்ல வந்த கதிரவன் தன்னை ஈர்த்து விட அப்படியே அவனுக்குள் மாயமாய் மறைந்து போனது..
அந்தப் பனித்துளி போலவே தன்னவனின் கையணைப்பிற்குள் தன்னை மறந்து புதைந்து நிம்மதியாய் உறங்கிக் கொண்டிருந்த தேஜஸ்வினி கண் மலர்ந்தவுடன் நிமிர்ந்து தன்னவனின் முகத்தை பார்த்தாள்..
அவனோ ஆழ்ந்த மூச்சுக்களை விட்டுக் கொண்டு அழகாக உறங்கிக் கொண்டிருந்தான்.. அப்படியே எம்பி அவன் நெற்றியில் இதழ் பதித்தவள்.. “எங்கிருந்துடா வந்த எனக்காக? நீ இல்லாம எனக்கு ஒரு நாள் கூட நகர மாட்டேங்குதுடா… இப்படி என் மேல விடாம அன்பு மழை பொழிஞ்சு என்னை திக்குமுக்காட வைக்கிறியே.. அப்படியே உனக்குள்ளே புதைஞ்சுக்கணும்னு ஆசையா இருக்குடா.. உன்னை விட்டு நகர்ந்து போறதுக்கு கூட மனசு வரமாட்டேங்குது வர வர..”
உறங்கிக் கொண்டிருந்த தன் கணவன் ராம்சரணை பார்த்து புலம்பிக் கொண்டிருந்தவளை அப்படியே அள்ளி தன் மீது போட்டுக் கொண்டான் அவன்..
“எதுக்குடி போகணும்? என் கூடவே இப்படியே இருக்கலாம் இல்ல?”
அவனும் அவள் நெற்றியில் இதழ் பதித்துக் கொண்டே செல்லவும் “ஹான்… ஆசைதான்.. இன்னும் பத்து நிமிஷத்துக்குள்ள நான் இங்கிருந்து போலன்னா உங்க பையன் அஸ்வினும் உங்க அருமை பொண்ணு பூஜாவும் எழுந்தாங்கன்னா அத்தை வந்து கதவை தட்ட ஆரம்பிச்சுடுவாங்க… அதனால..”
பேச்சை நிறுத்தி அவன் இதழில் மெலிதான முத்தம் ஒன்று இட்டு “இப்போதைக்கு இதை வச்சு சமாளிச்சுக்கங்க.. இன்னிக்கு நைட்டு இன்னும் கொஞ்சம் தர்றேன்”
சொன்னவளை விடாமல் இன்னும் இறுக்க அணைத்தான் ராம்சரண்..
“ஐயோ.. என்னங்க?”
சிணுங்கியவளின் நெற்றியுடன் தன் நெற்றியை சேர்த்தவன் “ஏய்.. தேஜும்மா.. அது என்னடி நான் தூங்கும் போது வாடா போடான்னு பேசுறே.. நான் முழிச்ச உடனே என்னங்க என்னங்கன்னு உயிரை எடுக்கிற? ஆசையா வாடா போடான்னு நீ பேசறது கூப்பிடறது எனக்கு ரொம்ப புடிச்சிருக்குடி.. முழிச்சுக்கிட்டு இருக்கும்போதும் அப்படியே கூப்பிடுடி.. நீ அப்படி கூப்பிடும் போது எவ்வளவு கிக்கா இருக்கு தெரியுமா? நான் எப்பவோ முழிச்சிட்டேன்.. ஆனா நீ தினமும் இப்படி என்னோட பேசுற இல்ல அதை கேக்குறதுக்காகவே கண்ணை மூடிட்டு தூங்கற மாதிரி இருக்கேன்..”
அவளை முகம் நிறைய காதலுடன் பார்த்துக்கொண்டு இருந்த அவன் காதல் கண்களை நாள் முழுவதும் இப்படியே பார்த்துக்கொண்டு அவனுடைய ஊடுருவும் பார்வையில் தொலைந்து போக அவளுக்கும் ஆசைதான்.. ஆனால் கடமை என்ற ஒன்று இருக்கிறதே.. அதை செய்து முடித்தாக வேண்டுமே.. ஆனால் அவன் பார்வைப் சிறையில் இருந்து தப்பிக்கும் வித்தை அவள் அறிவாள்…
“ஓ உங்க அம்மாகிட்ட என்னை திட்டு வாங்க வைக்க இப்படி ஒரு பிளானா? உங்களை வாடா போடான்னு கூப்பிடுறேன்னு தெரிஞ்சா அவ்வளவுதான்.. என்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க..”
அவன் கழுத்தை சுற்றி தன் கைகளை மாலையாக கோர்த்துக் கொண்டு வாதிட்டாள்..
“அம்மா என்ன இப்ப இங்க இருக்காங்களா? அம்மாவும் அப்பாவும் பக்கத்து ரூம்ல நம்ம பசங்களோட இருக்காங்க.. நம்ம ரூம்ல என்னை கூப்பிடுறதுக்கு உனக்கென்னடி பிரச்சனை?” இறுக்கி அணைத்தபடியே கேட்டான் அவன்..
“நம்ம தனியா இருக்கும் போது அப்படி கூப்பிட ஆரம்பிச்சு தப்பி தவறி மத்தவங்க எதிரே என்னைக்காவது வாய் தவறி உங்களை அப்படி கூப்பிட்டுட்டேனா.. மத்தவங்க எதிரே உங்க மரியாதையும் கௌரவமும் இம்மி அளவு கூட என்னால குறைய கூடாதுன்னு நினைக்கிறேன் நான்.. எனக்கு உங்க மரியாதையும் கௌரவமும் ரொம்ப முக்கியம்..அதனால சாரி.. எப்பவும் போல தூங்குற மாதிரி கண்ணை மூடிட்டு நான் கூப்பிடுறதை ரசிச்சு கேட்டுக்கோங்க..”
அவன் அவளை விடாமல் இன்னும் இறுக்க அணைக்கவும், ” விடுங்க.. புள்ளைங்க எழும்பிட போறாங்க” அவன் உடும்பு பிடியில் இருந்து தப்பிக்க நெளிந்தாள் பாவை..
“ஓகே ஓகே.. அப்படின்னா ஒன்னே ஒன்னு”
அவளை தன் முகத்தருகே சரித்து அவள் இதழை சிறை பிடித்தான்.. ஒருவர் இதழுக்குள் மற்றவர் வேறு எந்த நினைவும் இல்லாமல் மூழ்கி கிடந்த வேளையில் அறைக் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது..
அவனிடமிருந்து சட்டென விலகியவள் “பாருங்க.. நான் சொன்னேன்ல.. புள்ளைங்க எழுந்துட்டாங்க.. இப்போ அத்தை கதவை தட்டுறாங்க..”
எழுந்து நின்று தன்னுடைய ஆடையை சரி செய்து கொண்டு கதவை திறந்தாள் தேஜூ..
அங்கே தன் ஐந்து வயது பெண் குழந்தை பூஜா கண்ணை கசக்கி கொண்டு நிற்க “அம்மாடி தேஜூ.. எழுந்த உடனே ஆரம்பிச்சிட்டா உன் பொண்ணு அம்மா கிட்ட போகணும் அம்மா கிட்ட போகணும்னு.. இவளை சமாளிக்கிறதுக்கு நீ தான் சரி.. இந்தா..”
பூஜாவின் கையை தேஜுவின் கையில் கொடுத்தார் பார்வதி அம்மாள்..
“ஐயையோ.. ஏன்டா செல்லம்.. பாட்டியோட தானே இருக்க? சரி வா”
அவளை அப்படியே கையில் தூக்கிக் கொண்டு நேரே குளியலறைக்கு சென்றாள்..
மெதுவாக தன் படுக்கையை விட்டு எழுந்த ராம்சரண் தன் காலைக்கடன்களை எல்லாம் முடித்துவிட்டு வெளியே வந்தவன் நேரே சென்று உறங்கிக் கொண்டிருந்த அஸ்வினை அப்படியே கையில் அள்ளிக் கொண்டான்..
அவனை தூக்கிக்கொண்டு குளியலறைக்கு சென்று அவன் உடைகளை மாற்றி விட்டு அவனை பல் விலக்கி குளிக்க வைத்து விட்டு அவனோடு தானும் எல்லா வேலைகளையும் முடித்து வெளியே அழைத்து வந்தவன் “ஓகே.. நம்மளுடைய எனர்ஜி ட்ரிங்க் டைம்.. போய் குடிக்கலாமா?”
வலது கையை விரித்து அவனை நோக்கி காட்டிக் கொண்டு கேட்கவும் அவன் கையில் ஓங்கி தட்டியவன் “எஸ்.. டாடி.. வாங்க போலாம்.. “
அப்படியே ஒரே தாவலில் அவன் முதுகில் உப்பு மூட்டை போல ஏறிக்கொண்டான் அஷ்வின் உற்சாகமாக..
அவனை உப்பு மூட்டையாய் சுமந்து கொண்டு வந்த ராம் சாப்பாட்டு மேஜையின் மேல் அவனை அமர வைத்துவிட்டு சமையலறை உள்ளே சென்று பார்த்தபோது தேஜஸ்வினி தோசை வார்த்து கொண்டிருக்க அருகில் பூஜா நின்று அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்..
“ ஹாய் மை டார்லிங்.. குட் மார்னிங் பூஜாகுட்டி..”
பூஜாவைத் தூக்கி அவள் கன்னத்தைக் கிள்ளி அவன் சொல்லவும் “ ஹாப்பி மார்னிங் டாடி” அவளும் சொல்லி அவன் கழுத்தை சுற்றி கட்டிக்கொண்டாள் ..
அதற்குள் தேஜுவின் அருகே சென்ற ராம் “தேஜு நீ இப்போ இருக்கிற தோசை எடுத்துட்டு போய் பசங்களுக்கு ஊட்டிட்டு இரு.. நான் மிச்ச தோசையை செஞ்சு எடுத்துட்டு வரேன்” என்றபடி அவளிடம் பூஜாவை கொடுத்தான்..
ஒரு தட்டை எடுத்து இருக்கும் தோசைகளை அதில் வைத்து சட்னியை போட்டு அவள் கையில் கொடுத்தான்..
“நீ போ.. நான் சுட சுட தோசை செஞ்சு எடுத்துட்டு வரேன்” அடுப்பில் தோசை வார்க்க ஆரம்பித்தவன் வேலையில் மூழ்கி போனான்..
தேஜுவிற்கு எல்லா வேலைகளிலும் அவன் உதவி செய்வான்.. தான் ஆண்மகன்.. தான் இந்த வேலையெல்லாம் செய்யக்கூடாது என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பவன் அவன் கிடையாது.. இருவரும் அத்தனை வேலைகளையும் சரிசமமாக பங்கு போட்டு இடை இடையே செல்ல சீண்டல்கள் சிணுங்கல்கள் என அவர்கள் வாழ்க்கையே இனிய அமிர்தமாக ஓடிக் கொண்டிருந்தது..
வெளியே வந்த தேஜு.. பூஜாவை அஸ்வின் பக்கத்திலேயே அமர வைத்தாள் .. இருவருக்கும் தோசையை ஊட்ட ஆரம்பித்தாள்.. அதற்குள் உள்ளிருந்து 2 தட்டுகளில் பிள்ளைகள் இருவருக்கும் இன்னும் இரண்டு தோசைகள் போட்டு எடுத்து வந்த ராம்.. “சுட சுட ஸ்மைலி தோசை.. யாருக்கு வேணும்?” தோசை தட்டை அவர்களிடம் காட்டியபடி கேட்டான்..
தான் செய்து எடுத்துக் கொண்டு வந்திருந்த ஸ்மைலி வடிவில் ஆன தோசையை இருவர் தட்டிலும் வைத்து தேஜூ கையில் இருந்து தட்டை வாங்கி இருவருக்கும் தானே தோசையை ஊட்டி விட்டு இருவரின் வாயையும் துடைத்து விட்டு தண்ணீரும் எடுத்துக் கொடுத்தான்..
பார்வதி அம்மாள் “டேய் ராம்.. இங்க பக்கத்துல இருக்குற பிள்ளையார் கோவில்ல இன்னிக்கு அபிஷேகம் செய்றாங்க.. பசங்களை ஸ்கூலுக்கு கூட்டிட்டு போற வழியில என்னையும் அப்பாவையும் அந்த கோவில்ல இறக்கி விட்டுடுடா” தன் அறையில் இருந்து வெளி வந்து கொண்டே சொன்னார்..
“ஓகே மா” தோசை ஊட்டிய வண்ணமே பதில் சொலாலி இருந்தான் அவன்..
ராமின் அப்பா கஜேந்திரன் பிள்ளைகளுக்கு சீருடை அணிவித்து அவர்களை தயார் செய்து காரில் அமர வைக்க தாத்தா பாட்டி நடுவில் உற்சாகமாக அமர்ந்திருந்தனர் பூஜாவும் அஸ்வினும் ..
ராம் வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.. அவர்கள் அனைவரும் செல்வதையே பார்த்துக் கொண்டு தன்னையே மறந்து சில நொடிகள் நின்ற தேஜு பிறகுதான் தானும் வேலைக்கு கிளம்ப வேண்டும் என்று நினைவு வர உள்ளே சென்று ஒரு சேலையை மாற்றிக் கொண்டாள்..
தன் பெற்றோரை கோவிலில் விட்டுவிட்டு பிள்ளைகளை பள்ளியில் விட்டு விட்டு வந்தவன் வீட்டிற்கு வந்ததும் ஏற்கனவே அழகு தேவதையாய் இருக்கும் தன் காதல் மனைவி தனக்கு பிடித்த பிங்க் நிற புடவையில் வேலைக்கு கிளம்பி தயாராக இருப்பதை பார்த்தான் ..
அவன் தேவதையை அந்த புடவையில் பார்த்தவனுக்கு அதற்கு மேல் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.. வீட்டில் தன்னையும் தேஜூவையும் தவிர யாரும் இல்லை என்று அவனுக்கு தான் தெரியுமே..
தாங்கள் இருவரும் சாப்பிடுவதற்காக இரண்டு தட்டில் தோசை எடுத்துக் கொண்டு வந்து மேஜை மேல் வைத்துக் கொண்டிருந்தவளை பின்பக்கமாக சென்று அணைத்தான்..
“தே….ஜ்ஜ்ஜ்ஜ்….ஜுஊஊஊஊ…” அவள் கழுத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்..
அப்படியே அவன் புறமாய் திரும்பியவள் “புள்ளைங்களை பத்திரமா ஸ்கூலுக்கு கொண்டு போய் விட்டுட்டீங்களா ?” அவன் சட்டை காலரை சரி செய்தபடியே கேட்டாள்…
அவளை தன் அணைப்புக்குள்ளேயே வைத்திருந்தான்.. “நீயும் தினமும் இப்படியே கேளு.. நானும் தினமும் வந்து ஒரே பதில் தான் சொல்லுவேன்… ஆமா பத்திரமா போயிட்டாங்க”
“நான் அப்படி கேட்டு நீங்க ஆமான்னு சொன்னா எனக்கு ஒரு நிம்மதி… இதுல உங்களுக்கு என்ன கஷ்டம்?”
“ஓகே புரியுதுமா உன்னோட அம்மா பாசம்.. அப்படியே இந்த புருஷன் மேலயும் கொஞ்சம் பாசத்தை காட்டறது…” என்றான் பாவமாக முகத்தை வைத்து கொண்டு..
“இப்போ உங்க மேல நான் காட்டுற பாசத்துல என்ன குறை வந்துச்சாம்” முகத்தில் பொய் கோபம் காட்டியபடி கேட்டாள்…
அவளின் கன்னங்களை தன்னிரு கைகளில் ஏந்தியவன் “ஒரு குறையும் இல்ல தேஜூம்மா.. நீ எனக்கு கிடைச்ச பொக்கிஷம்.. கல்யாணம் வேணா வேணான்னு சொல்லிட்டு இருந்தவனை கம்பெல் பண்ணி கூட்டிட்டு வந்து உன்னை பொண்ணு பார்க்க வெச்ச எங்க அம்மா அப்பாக்கு நான் இன்னிக்கு வரைக்கும் தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்கேன்… அந்த நாள் என் தேவதை எனக்கு கிடைச்ச நாள்டா தேஜூ.. தேவதை காட்டற பாசத்துல குறை இருக்குமா?” அவன் பேசியதில் அப்படியே உணர்ச்சி வயப்பட்டு போனாள் அவள்..
அவன் முகத்தை தானும் தன் இரு கைகளில் ஏந்தினாள் “ நம்ம வாழ்க்கை என்னைக்குமே இப்படியே இருக்குமா ராம்? நான் இந்த சந்தோஷமான கூட்டிலேயே என் வாழ்நாளோட கடைசி வரைக்கும் கவலைங்கறது என்னன்னே தெரியாம வாழ்ந்திருவேனா?” உருக்கமாக கேட்டவளை புருவம் சுருக்கி கூர்ந்து பார்த்தான் அவன்..
இரண்டு நாட்களாக தானும் ராமும் பிரிந்து விடுவதைப் போல அவளுக்கு மறுபடி மறுபடி கனவு வந்து கொண்டு இருக்க அது கொடுத்த சிறு பயத்தினாலேயே அவள் இந்த கேள்வியை கேட்டாள்…
தொடரும்…
வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும் லைக்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!
Super
Thank you Dear