பரீட்சை – 103
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உனக்காக வாழ நினைக்கிறேன்..!!
அடுத்த ஒரு மணி நேரத்தில் அருண் கண் விழித்தான்.. மருத்துவர் வந்து அவனை பரிசோதித்து பார்த்துவிட்டு வெளியே வந்து ராமிடம் பேச தொடங்கவும் அதற்கு முன்னரே சின்னப் பையன் அவரிடம் ஓடி வந்து “டாக்டர்.. எங்க அண்ணனுக்கு என்ன ஆச்சு? அவரு பொழைச்சிடுவாரு இல்ல? எப்படியாவது காப்பாத்திடுங்க டாக்டர்..!!” என்று அழுது அரற்றினான்..
“கொஞ்சம் அமைதியா இருங்க.. அதை பத்தி பேச தான் வந்தேன்.. ஆக்சுவலா அவரோட தலையில் பட்ட அடி கொஞ்சம் கொஞ்சமா அதிகமான பாதிப்பை அவருக்கு கொடுத்துக்கிட்டு இருக்கு.. நாங்க அதனால வர்ற பெயினை குறைக்கறதுக்காக தான் அவருக்கு மருந்து கொடுக்கிறோம்.. அவரோட மரணத்தை அட்லீஸ்ட் ஒரு ஒரு மாசமாவது தள்ளி போடணும்னு நாங்க முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கோம்.. ஆனா அவரு உடம்பு எந்த மருந்தையும் அக்செப்ட் பண்ண மாட்டேங்குது.. அவர் அந்த மருந்து சாப்பிட்டு உயிரோட இருக்கணும்னு மனசார நினைக்க மாட்டேங்குறாருன்னு தோணுது.. அவர் முதல்ல அந்த மருந்து தனக்கு கொஞ்சம் நிவாரணம் கொடுக்கும்னு நினைக்கணும்.. அந்த நம்பிக்கையோட அவர் அந்த மருந்தெல்லாம் எடுத்துக்கணும்.. அப்பதான் நாங்க கொடுக்கிற மெடிசின்ஸ் எல்லாம் வேலை செய்யும்.. நீங்க தயவு செஞ்சு அவர்கிட்ட கொஞ்சம் பேசுங்க.. இப்படியே போச்சுன்னா அப்புறம் இன்னும் ஒரு வாரம் அவர் பிழைச்சு இருக்கிறது கூட கஷ்டமாயிடும்…” கவலையோடு சொன்னார் அவர்..
“என்ன டாக்டர் சொல்றீங்க? நான் அவரோட பேசுறேன்.. அண்ணன் நிச்சயமா நான் சொன்னா கேட்டுப்பாரு.. அவர் எப்படி எங்க எல்லாரையும் விட்டுட்டு போகணும்னு நினைக்கலாம்..? எங்களுக்காக அவரு உயிரோட இருந்து தான் ஆகணும்..” என்றவன் நேராக அருண் இருந்த அறைக்குள் சென்றான்..
அவனைப் பார்த்த அருண் “டேய் சின்ன பையா.. நீ எப்படி டா வந்த? உனக்கு எப்படி தெரியும் நான் இங்க இருக்கிறது?” அதிர்ந்து கேட்டவனை ஓடி சென்று அணைத்து கொண்டான் சின்ன பையன்..
“ஏன்..? நீங்க சொல்லலைன்னா எங்களுக்கு தெரியாதா? அப்படியே எங்களை எல்லாம் ஓரங்கட்டிட்டு எங்களை விட்டு ஒரேயடியா போயிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா? இப்ப என்ன? எங்களுக்காக எல்லாம் உயிர் பிழைச்சு எங்களோட வாழணும்னு உங்களுக்கு ஆசை இல்லையா?” உள்ளே சென்றதும் உணர்ச்சி பூர்வமாக கத்தி பேச ஆரம்பித்தான் சின்ன பையன்..
“டேய் இருடா.. பொறுமையா இரு..” என்று அருண் சொல்லிக் கொண்டிருக்கும் போதே உள்ளே வந்தான் ராம்..
“சின்ன பையா.. தேஜு ரொம்ப சேஃப் ஆயிட்டான உடனே அவருக்கு உயிர் வாழணுங்குற ஆசையே போயிருச்சு.. நல்லா கேள்வி கேளு.. அது.. அவருக்கு அவரோட அஸ்வினியோட வாழ்க்கை மட்டும் தான் முக்கியம்.. மத்தவங்களை பத்தி எல்லாம் அவருக்கு கவலையே இல்லை..” வேண்டுமென்று சின்ன பையனை தூண்டி விட்டான் ராம்..
“ஐயோ ராம்.. நீங்க வேற.. கொஞ்ச நேரம் சும்மா இருங்க.. சும்மாவே அவன் என்னை வறுத்துக்கிட்டு இருக்கான்.. நீங்களும் கூட சேர்ந்து அவனை கிளப்பி விடாதீங்க..” அருண் சொல்ல இடை மறித்தான் சின்ன பையன்..
“அவரை எதுக்கு அண்ணே திட்டுறீங்க?ஆமா அண்ணே.. ராம் அண்ணன் சொல்றது கரெக்ட் தான்.. உங்களுக்கு எங்களை பத்தி எல்லாம் கவலையே இல்ல.. கொஞ்சமாவது எங்களை பத்தி எல்லாம் யோசிச்சு இருந்தீங்கன்னா இந்த மாதிரி யாருக்கும் சொல்லாம ஒரேயடியா போகறதுக்கு தயாராகி இருப்பீங்களா? இப்ப கூட டாக்டர் சொல்லிட்டு போறாரு.. நீங்க மருந்தெல்லாம் எடுத்துக்கிறீங்களே தவிர உங்க உடம்பு கோ ஆபரேட் பண்ண மாட்டேங்குதுன்னு.. என்ன நினைச்சுக்கிட்டு இருக்கீங்க? எங்களோட எல்லாம் இருக்க வேண்டாமா? எனக்கு குழந்தை பிறந்து அதையெல்லாம் நீங்க தூக்கி கொஞ்சணும்னு உங்களுக்கு ஆசையே இல்லையா?” கண்ணில் கண்ணீர் வடிய உருக்கமாக கேட்டான் சின்ன பையன்..
“டேய் சின்னப்பையா.. இதுக்கு தான்டா உங்க கிட்ட எல்லாம் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்.. டேய்.. எப்படி இருந்தாலும் நான் பொழைக்க மாட்டேன் டா.. அதை ஏண்டா தள்ளி போட்டுக்கிட்டு..? மிஞ்சி மிஞ்சி போனா இந்த மருந்தெல்லாம் சாப்பிட்டா ஒரு வாரத்துல போக வேண்டியவன் ஒரு மாசத்துல போவேன்.. அவ்வளவுதான்.. நான் உடம்பால அவ்ளோ நாள் எதுக்குடா அவஸ்தைப்படணும்? நான் செய்யணும்னு நெனைச்சதை எல்லாம் முடிச்சுட்டேன் டா.. உன்னை நல்லா படிக்க வச்சிட்டேன்.. அஸ்வினி வாழ்க்கை சேஃப் ஆயிடுச்சு.. அவ புருஷன் குழந்தைங்கன்னு சந்தோஷமா இருக்க போறா.. தாத்தாவோட கடனையும் அடைச்சிட்டேன்.. நான் வளர்த்து விட்ட கம்பெனியை பாத்துக்குறதுக்கு நிலவழகன் இருக்கான்.. இனிமே எனக்கு ஒரு கவலையும் இல்லடா.. என்னை சுத்தி இருக்கிற அத்தனை பேரும் செட்டில் ஆயிட்டாங்க.. நான் நிம்மதியா போறேன் டா.. எனக்கு நான் செத்துப் போறதுல ஒரு வருத்தமும் இல்லை.. அன்னைக்கு மலை மேல இருந்து விழுந்தப்பவே செத்துப் போய் இருக்க வேண்டியவன் நான்.. இப்ப நான் சந்தோஷமா தான்டா போறேன்..” அவன் சொல்லிக் கொண்டிருந்த போதே அவன் கைபேசி ஒலித்தது..
அதில் வந்த எண்ணைப் பார்த்தவனின் முகம் சுருங்கியது.. சட்டென அந்த அழைப்பை ஏற்று பேசினான்..
“சொல்லுங்க..” என்றவனிடம் எதிர்பக்கம் எவரோ ஏதோ சொல்ல அவன் முகம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கமாக மாறியது..
“சரி நான் பாத்துக்கிறேன்..” என்றவன் அந்த இணைப்பை துண்டித்த பிறகு அப்படியே அசையாமல் இறுக்கமாக சிறிது நேரம் உட்கார்ந்து இருந்தான்..
ராம் அவன் அருகில் சென்று “என்ன ஆச்சு? ஏதாவது பிரச்சனையா?” என்று மெதுவாக கேட்டான்.. வைஷூவும் நிலவழகனும் விஷ்வாவும் கூட உள்ளே வந்திருந்தார்கள்..
ராம் கேட்ட கேள்விக்கு ஆம் என்று தலையாட்டி பதில் சொன்னவன் “மறுபடியும் அஸ்வினிக்கு ஆபத்து வரப்போகுது.. நான் என் சாவை தள்ளி போட்டே ஆகணும்.. இப்ப நான் செத்து போயிட்டேன்னா அஸ்வினிக்கு பெரிய பிரச்சினை வந்துரும்..” அவன் சொன்னதை கேட்ட அத்தனை பேர் முகத்திலும் கலவரத்திற்கு பதிலாய் சந்தோஷமே இருந்தது..
எப்படியோ அவன் தன் இறப்பை தள்ளிப் போட வேண்டும் என்று எண்ணுகிறான் என்பது எல்லோருக்கும் நிம்மதியை கொடுத்தது.. அவன் உயிரோடு இருந்தால் எப்படியும் தேஜூக்கு ஏற்படும் ஆபத்தை தடுத்து நிறுத்தி விடுவான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது தான் அதற்கு காரணம்..
தன் கைபேசியில் இரண்டு நிமிடங்கள் பேசியதே அவனுக்கு தலைவலி எடுப்பதை போன்று இருக்க நிலவழகனிடம் அவனுக்கு முன்பு யுஎஸ்ஏவில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவருக்கு கைப்பேசி மூலம் அழைப்பு விடுக்க சொன்னான்..
நிலவழகனும் அவருக்கு அழைப்பு விடுக்க கைபேசியை ஸ்பீக்கரில் போட சொல்லி அவரோடு அவன் பேச ஆரம்பித்தான்.. தனக்கு ஏற்பட்டிருக்கும் நிலையை அவரிடம் முழுதாக சொல்லி தன் மருத்துவ அறிக்கைகளை அவருக்கு கைபேசி மூலமாக அனுப்பி வைத்தான்.. அவன் அருகில் நின்றிருந்த மருத்துவரிடமும் அவரை பேச வைத்தான்..
“டாக்டர்.. உங்களால எனக்கு ஏதாவது சர்ஜரி பண்ணி என்னோட சாவை தள்ளி போட முடியுமா?” என்று அவன் ஆங்கிலத்தில் கேட்க அவரோ சிறிது நேரம் மௌனமாக இருந்தார்..
அதன் பிறகு மெதுவாக பேசியவர் “மிஸ்டர் அருண்.. ஏற்கனவே உங்களுக்கு இரண்டு முறை சர்ஜரி நடந்திருக்கு.. இது மூணாவது சர்ஜரி.. போன முறை அளவுக்கு இதுல எவ்வளவு தூரம் உங்க உயிரை என்னால காப்பாத்த முடியும்னு என்னால உறுதியா சொல்ல முடியாது.. போன முறை நீங்க கோமா ஸ்டேஜூக்கு போகாம சர்ஜரி முடிஞ்ச உடனே நல்லா ஆயிட்டீங்க.. ஆனா இந்த முறை அப்படி இருக்காது.. என்ன வேணா நடக்கலாம்.. சர்ஜரில உங்க உயிர் போறதுக்கு வாய்ப்பு இருக்கு.. சர்ஜரி முடிஞ்சு நீங்க கோமால போறதுக்கும் வாய்ப்பு இருக்கு.. அந்த கோமால இருந்து நீங்க மீண்டு வராம போறதுக்கும் வாய்ப்பு இருக்கு.. ஒருவேளை போன முறை மாதிரி அந்த கோமாவில் இருந்து நீங்க ஏதாவது அதிசயம் நடந்து மீண்டு வரலாம்.. இந்த சர்ஜரில நீங்க உயிர் பிழைக்கறதுக்கு பத்து பர்சன்ட் சான்ஸ் தான் இருக்கு.. மிஸ்டர் அருண் இப்ப நீங்க ரொம்ப கிரட்டிக்கலா இருக்கீங்க.. அங்க இருக்கிற டாக்டரோட டிஸ்கஸ் பண்ணதுல எனக்கு ஓரளவுக்கு உங்க நிலைமை புரிஞ்சிருக்கு.. என்னால 100% கான்ஃபிடண்டா எதுவுமே சொல்ல முடியாது மிஸ்டர் அருண்.. நீங்க கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்திருக்கலாம்..” என்றார் அவர்..
“ஓகே டாக்டர்.. இப்ப அதை பத்தி எல்லாம் பேசி பிரயோஜனம் இல்ல.. நீங்க அந்த 10% சான்ஸ் இருக்குன்னு சொன்னீங்க இல்ல..? அந்த 10% சான்ஸை நம்புவோம்.. நான் இப்போ யூஎஸ்க்கு வந்தா உங்களால எனக்கு சர்ஜரி பண்ண முடியுமா?” அவன் நம்பிக்கையோடு கேட்டான்..
“நிச்சயமா பண்ண முடியும்.. நீங்க கிளம்பி வாங்க.. ஆனா நான் சொன்னதெல்லாம் ஞாபகம் வச்சுக்கிட்டு வாங்க.. ரொம்ப எக்ஸ்பெக்டேஷன் வச்சுக்காதீங்க.. நீங்க ரொம்ப ஸ்ட்ராங் மைன்டட் பெர்சன்.. நான் சொல்றது உங்களுக்கு புரியும்னு நினைக்கிறேன்..”
அவர் சொன்னதை கேட்டவன் “அதெல்லாம் ஒன்னும் பிராப்ளம் இல்ல டாக்டர்.. நான் ஆல்டர்நெட் ஏற்பாடுகளோட தான் அங்க வருவேன்.. ஒருவேளை எனக்கு ஏதாவது ஆயிடுச்சுனா என்ன பண்ணனுங்கறதையும் ப்ளான் பண்ணிட்டு தான் அங்க வரேன்.. சோ.. நான் கிளம்பி வரேன் டாக்டர்.. நீங்க சர்ஜரி பண்ணறதுக்கு எல்லா ஏற்பாடுகளும் பண்ணி வைங்க.. அந்த பத்து பர்சென்ட்டை நம்பி தான் நான் வர்றேன்.. பத்து பர்சன்ட் உயிர் பொழைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கிறப்போ அதை ட்ரை பண்ணாமயே மிஸ் பண்ணிட கூடாதுன்னு தான் நான் இந்த சர்ஜரி பண்ணிக்கறதுக்கு வரேன்.. ஒருவேளை ஏதாவது மிராக்கிள் நடந்ததுன்னா இந்த சர்ஜரி மூலமா உயிர் பொழைச்சிட மாட்டேனான்னு ஒரு சின்ன நம்பிக்கை.. அப்படி இல்லாம இந்த சர்ஜரில எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என் அஸ்வினியை காப்பாத்துறதுக்கு என்னால முடிஞ்ச வரைக்கும் நான் மேக்சிமம் ட்ரை பண்ணிட்டேன்கிற திருப்தியோட போய் சேர்ந்துருவேன்.. நெக்ஸ்ட் ஃப்ளைட்ல நான் வர்றேன் டாக்டர்”
அந்த மருத்துவர் மறுபடியும் அவனிடம் “மிஸ்டர் அருண்.. நான் மறுபடியும் மறுபடியும் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. இந்த சர்ஜரில நீங்க இறந்து போறதுக்கு தான் வாய்ப்பு அதிகம்.. அங்கேயே இருந்து அவங்க கொடுக்கிற மாத்திரை எடுத்துக்கிட்டிங்கனா உங்க மரணத்தை இன்னும் ஒரு மாசம் தள்ளி போடலாம்.. ஆனா இந்த சர்ஜரியை உடனே பண்ணிக்கிட்டீங்கன்னா சர்ஜரி நடக்கும்போதே நீங்க இறந்து போற சான்ஸ் தான் அதிகம்.. இந்த 10% சான்ஸ் கூட எவ்வளவு தூரம் சரியா இருக்கும்னு நீங்க இங்க வந்தா தான் எனக்கு தெரியும்.. இந்த சர்ஜரி செஞ்சுக்கறதனால உங்க மரணத்தை நீங்க உடனே வரவேற்கிறீங்கன்னு தான் நான் சொல்லுவேன்.. நீங்க இந்த சர்ஜரியை இப்ப பண்ணிக்க வேண்டாங்கறதுதான் என்னோட அட்வைசா இருக்கும்.. நீங்க ஒரு மாசம் வெயிட் பண்ணிட்டு அதுக்கப்புறம் இந்த சர்ஜரியை பண்ணிக்கலாமே..”
அவர் சொன்னதை கேட்டவன் ஒரு
விரக்தி சிரிப்பை சிரித்துக் கொண்டான்..
தொடரும்..