அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 13🔥🔥

5
(14)

பரீட்சை – 13

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

இங்கே 

ஒரு பாதி ஜீவன்

தனியாய் சிறையில் 

தவித்திருக்க

மற்றொரு 

பாதியையோ

மிரட்டி மிருகமவன்  

சிறைபடுத்தியிருக்க

இருவரும் ஒன்றாகும்

பொன் நாளும்

எந்நாளோ?

மங்கையின் மணாளனை

மாதவள் சேர்ந்திட

மாதங்கள் ஆகுமோ

வருடங்கள் போகுமோ

இல்லை 

மதம் கொண்ட 

யானையை எதிர்த்து

மரணப் போராட்டம்

நிகழ்த்தி

மன்னனை கைப்பிடிக்க

மாதவம் செய்ய

வேண்டுமோ?

################

எங்கே என் ஜீவனே!!?

“ஆனா உங்களை அந்த அருண் கடத்தி வச்சிருக்கிறதா..” என்று தலைமை ஆசிரியை இழுக்கவும் “இந்த கற்பனை கதையை உங்களுக்கு யார் சொன்னது? நான் எங்கேயாவது மனசார விரும்பி போனா நீங்களா என்னை கடத்திட்டாங்கன்னு கதை கட்டி விடுவீங்களா? நான் சொல்லாம நீங்க எப்படி இப்படி ஒரு முடிவுக்கு வர முடியும் மேடம்?” காட்டமாக கேட்டாள் தேஜு..

அவள் அப்படி கேட்டதை புன்னகையோடு தன் காரில் இருந்த படி கைபேசியில் பார்த்துக் கொண்டிருந்தான் அருண்..

“இப்ப அதை பத்தி எல்லாம் பேசி நான் நேரத்தை வீணாக்க விரும்பல.. ஆக்சுவலா நான் என் குழந்தைகளை கூட்டிட்டு போகலாம்னு தான் வந்தேன்.. அவங்க அப்பாவும் ஜெயில்ல இருக்காரு.. நானும் இல்லாம அவங்க ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அதனால அவங்களை நான் என்னோட கூட்டிட்டு போக போறேன்.. நாளையிலிருந்து ஸ்கூலுக்கு நானே கொண்டு வந்து விடுறேன்.. இப்ப கூட்டிட்டு போறதுக்கு உங்க பர்மிஷன் வேணும்” இறுக்கமான முகத்துடன் கேட்டாள் அவள்..

“ஓகே.. மிஸஸ். தேஜஸ்வினி.. ஆனா சாயங்காலம் உங்க வீட்ல இருந்து வேற யாராவது வந்து அவங்களை கேக்காம குழந்தைகளை அனுப்பினதுக்காக எங்க கிட்ட வந்து சண்டை போட்டாங்கன்னா நாங்க என்ன செய்யறது?” 

“நான் அந்த குழந்தைகளோட அம்மா.. யாரை விடவும் எனக்கு தான் அவங்க மேல உரிமை ஜாஸ்தி.. அவங்களோட பாட்டி, தாத்தாவோ இல்ல அவங்க அப்பாவோ ஜெயில்ல இருந்து வந்து ஒரு வேளை கேட்டாங்கன்னா நீங்க எனக்கு ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லுங்க.. நான் வந்து அவங்ககிட்ட பேசிக்கிறேன்… உங்ககிட்ட என் காண்டாக்ட் நம்பர் குடுத்துட்டு போறேன்” 

‘ஓகே மிஸஸ்.தேஜஸ்வினி.. நீங்க உங்க ஃபோன் நம்பரை குடுத்துட்டு போங்க.. அப்படி உங்க வீட்ல இருந்து யாராவது வந்து கேட்டா நான் உங்களுக்கு காண்டாக்ட் பண்ணி சொல்றேன்.. நீங்க வந்து பேசிக்கோங்க” என்றார் தலைமை ஆசிரியை..

“அதுக்கு உங்களுக்கு அவசியமே வராது.. இப்ப நான் போகும் போது எங்க மாமியார் மாமனார் கிட்ட ஃபோன் பண்ணி விஷயத்தை சொல்லிடறேன்.. இவங்களை கூட்டிட்டு போறேன்.. ஒரு வேளை என் ஹஸ்பண்ட் வந்து கேட்டாருன்னா எனக்கு கால் பண்ணுங்க.. நான் வந்து அவரோட பேசிக்கிறேன்.. ஓகே மேடம்… அப்ப நான் போய் என் பசங்களை கூட்டிட்டு போலாமா?” என்று கேட்டாள் தேஜஸ்வினி..

“நீங்க இந்த மாதிரி கூட்டிட்டு போறீங்கன்னு கிளாஸ் டீச்சர் கிட்ட ஒரு லெட்டர் எழுதி கொடுத்துட்டு அப்புறம் கூட்டிட்டு போங்க” என்று சொல்லி அனுப்பினார் தலைமை ஆசிரியை..

இதன் பிறகு அவர் சொல்லிய படியே ஒரு கடிதம் எழுதி கொடுத்துவிட்டு பிள்ளைகள் இருவரையும் அழைத்து போனாள் தேஜஸ்வினி..

அருணுடைய காருக்கு அருகில் பிள்ளைகளை கூட்டி செல்லும்போது காருக்கு வெளியே வந்தவன் “ஹாய் குட்டி செல்லம்ஸ்.. எப்படி இருக்கீங்க? இன்னைக்கு நம்ம ஒரு புது இடத்துக்கு போலாமா? அதுக்கு முன்னாடி இன்னிக்கு ஃபர்ஸ்ட் டைம் என்னோட கார்ல வர போறீங்க இல்ல? அதனால உங்களுக்கு என் சைடுல இருந்து ஒரு கிப்ட்..” என்று சொல்லி இரண்டு பரிசு பொருட்களை ஆளுக்கு ஒன்றாக அவர்களிடம் தந்தான் அருண்..

“தேங்க்யூ அங்கிள்” என்று சொல்லியபடி அந்த பரிசு பொருளை வாங்கிக் கொண்டனர்… இருவரும் வாங்கிக் கொண்ட வேகத்திலேயே அவசர அவசரமாக அதை பிரித்துப் பார்த்தனர்..

பூஜா அவளுடைய பரிசு பொருளை பிரித்துப் பார்த்து “ஐ டோரா புஜ்ஜி..” என்று ஆசையாக அதை தன் கைக்குள் வைத்துக் கொண்டாள்..

அஸ்வின் அவனுடைய பரிசு பொருளை திறந்து பார்த்தான் “ஏ.. என் ஃபேவரிட் சோட்டா பீம்.. ” என்று கத்தியவன் நேராக சென்று அருணின் கழுத்தை சுற்றி  கைகளை அணைத்து கட்டிக் கொண்டு “தேங்க்யூ நியூ டாடி..”  என்றான்..

அவன் அருணை அப்படி அழைத்ததை கேட்ட தேஜுவுக்கு தூக்கி வாரி போட்டது..

 “அஸ்வின்.. அவரை என்ன கூப்பிட்ட நீ இப்போ?” என்று கேட்கவும் “நீதானம்மா.. அன்னைக்கு சொன்னே.. இவர்தான் எங்க நியூ டாடி ஆக போறாங்கன்னு.. அதான் அப்படி கூப்பிட்டேன்.. அப்போ இவர் என் நியூ டாடியாக போறதில்லையா?” என்று கேட்டான் அஸ்வின்..

அருணை பார்த்து முறைத்த தேஜூ அவன் மறுபடியும் ஒரு புருவத்தை உயர்த்தி அவளை பார்க்கவும் அப்படியே இரு கைகளையும் இறுக்கிக் கொண்டவள் “ஆமா.. இவரு உங்க நியூடாடி ஆகப்போறாரு.. ஆனா அப்படி ஆனதுக்கப்புறம் அப்படி கூப்பிட்டுக்கலாம்.. அதுவரைக்கும் அங்கிள்ன்னே கூப்பிடுங்க..” என்றாள் தேஜு.. 

கண்களை மூடிக்கொண்டு தன் துக்கத்தை தனக்குள்ளேயே பதுக்கிக் கொண்டாள்..

அவர்களை வண்டியில் ஏற்றியவள் “அருண்.. எங்க அத்தை மாமாக்கு நான் ஒரு ஃபோன் பண்ணி இவங்க என்கூட இருக்காங்கன்னு சொல்லணும்” என்று சொன்னாள்..

அவன் அவனுடைய கைபேசியில் இருந்து அவருடைய மாமனாரின் கைபேசிக்கு உடனே அழைக்க அவள் திடுக்கிட்டு போனாள்.. 

“என்ன அஷ்ஷூம்மா அப்படி பார்க்கறே..? உன்னோட ஆல் டீடெயில்ஸ் ஐ நோ…” என்று சொன்னவன் அந்த பக்கம் அவளுடைய மாமனார்  கைபேசியை எடுக்கவும் தேஜூவிடம் தன் கைப்பேசியை பேசு என்று சொல்லிக் கொடுத்தான்.. 

அதை வாங்கியவள் “ஹலோ மாமா நான் தேஜூ பேசுறேன்..” என்று கூற அவள் குரலை கேட்டவுடன் அவர் குரல் கடுமையாகி போனது..

“நீ எதுக்கு இப்ப இங்க ஃபோன் பண்ண? அதான் எல்லாத்தையும் விட்டுட்டு எவனோடயோ போயாச்சு இல்ல? இனிமே உனக்கும் எங்களுக்கும் என்ன சம்பந்தம்? அப்படியே போயிட வேண்டியதுதானே? அப்பப்போ எங்களுக்கு வேற ஃபோனை பண்ணி ஏன் உயிரை எடுக்குற?” என்று அவர் கேட்கவும் அவருடைய கைபேசியை அவர் கையில் இருந்து வாங்கிய அவள் மாமியார் பார்வதி அம்மாள் அவள் சொல்ல ஆரம்பித்த எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் “ஏய்..‌ இனிமேல் நீ இந்த பக்கம் வந்துராத.. எவனோட ஓடிப்போனியோ அவனோடயே இருந்துக்கோ.. நாங்க என் புள்ள.. என் பேரப் புள்ளைங்களோட  நிம்மதியா இருக்கோம்..” என்றார்..

“அதை பத்தி சொல்ல தான் நான் இப்ப ஃபோன் பண்ணுனேன் அத்தே..” என்று அவள் சொல்லவும் “யாருக்கு யாருடீ அத்தை..? அதான் எவனோடயோ ஓடிப்போய் புது புருஷன் ஆக்கிக்க போற இல்ல? அப்புறம் நான் எப்படி உனக்கு அத்தை? இனிமேல் அத்தை கித்தைன்னு என்னை கூட்டுக்கிட்டு இருந்த… பல்ல ஒடச்சிடுவேன்.. உன்னை மாதிரி கேவலமான ஒருத்திக்கு அத்தையா இருக்கறதை விட அசிங்கமான விஷயம் எனக்கு வேற எதுவுமே கிடையாதுடி” நாக்கில் விஷம் தடவியது போல் வார்த்தைகளை கொட்டினார் பார்வதி அம்மாள் கோபத்தில்.. 

“நான் வேற எதுக்கும் ஃபோன் பண்ணல.. நான் பூஜாவையும் அஸ்வினையும் என்னோட கூட்டிட்டு போறேன்.. ஸ்கூல்ல லெட்டர் எழுதி கொடுத்துட்டேன் பர்மிஷன் வாங்கறதுக்கு.. இனிமே அவங்க ரெண்டு பேரும் என்னோட தான் இருப்பாங்க.. உங்க பிள்ளையும் ஜெயிலுக்கு போயிட்டாரு.. அவங்க நாங்க ரெண்டு பேருமே இல்லனா உங்க கூட தனியா இருக்க மாட்டாங்க.. ரொம்ப கஷ்டப்படுவாங்க.. அதனால நான் அவங்களை கூட்டிட்டு போறேன்.. சாயங்காலம் நீங்க யாரும் அவங்களை கூட்டிட்டு போறதுக்கு வர வேண்டாம்..” என்று சொன்னவள் “நான் ஃபோனை வெச்சுடுறேன் அத்தை.. சாரி.. உங்களை அப்படி கூப்பிட்டதுக்கும்… உங்களோட பேசி உங்களை டிஸ்டர்ப் பண்ணதுக்கும்..” என்று சொல்லியவள் கைபேசி இணைப்பை படக்கென துண்டித்தாள்..

அவள் கண்களில் நீர் கட்டிக் கொண்டிருந்தது.. அப்படியே கண்களை துடைத்தவள் காருக்குள் திரும்பி கைபேசியை அருணிடம் தந்தாள்..

அதன் பிறகு காருக்குள் ஏறியவள் இரண்டு நாட்களுக்குப் பிறகு தன் பிள்ளைகளுடன் ஆசை தீர பேசிக் கொண்டே வந்தாள்..

################

கைபேசியை வைத்த பார்வதியம்மாள் “எவ்வளவு திமிரு பாருங்க அந்த தேஜூக்கு.. அப்படியே அடக்கமா நம்ம வீட்ல எப்படி இருந்தவ.. இப்ப எப்படி பேசுறா பாத்தீங்களா ஃபோன் பண்ணி.. இப்படி விட்டுட்டு போயிட்டேன்னு ஒரு மன்னிப்பு கூட கேட்காம நான் பிள்ளையை கூட்டிட்டு போறேன்னு மொட்டையா சொல்லிட்டு ஃபோனை வச்சுட்டா.. அவ குரல்ல எங்கேயாவது அவ செஞ்சதுக்கு ஒரு வருத்தம் இருந்ததா.. பார்த்தீங்களா? ” புலம்பி தீர்த்தார் பார்வதி அம்மாள்..

“ஆமாம் பார்வதி.. இந்த பொண்ணு ஏன் திடீர்னு இப்படி ஆயிட்டா? யாரு அந்த அருண்? அது எப்படி ஒரே  நாள்ல இப்படி அவ தலைகீழா மாற முடியும்?” என்றார் அவர் கவலையுடன்..

“எனக்கும் அதாங்க புரியல.. ஒரு வேளை ரொம்ப நாளா அவனோட பழகிட்டிருந்தாளோ என்னவோ? நம்ப ராமுக்கு தான் ஒன்னும் புரியல.. வெள்ளந்தியா இருந்திருக்கான்.. வெளுத்தது எல்லாம் பால்ன்னு நம்பிட்டு இருந்திருக்கான்” என்றார் அவர்..

அப்போது வாசலில் அழைப்பு மணி ஒலிக்கும் சத்தம் கேட்கவே பார்வதி அம்மாள் சென்று கதவை திறந்தார்.. அங்கு தேஜுவின் அப்பா அழகப்பன் நின்றிருந்தார்.. 

கையில் ராம் கைதான செய்தியை தாங்கிய ஒரு செய்தித்தாள் இருந்தது..

 அப்படியே பார்வதி அம்மாளை தீயாய் முறைத்துக் கொண்டு நின்றவரை “இப்ப எதுக்கு நீங்க இங்க வந்தீங்க? உங்களை யார் இப்போ வெத்தலை பாக்கு வச்சு அழைச்சாங்க இந்த வீட்ல? உங்களுக்கு சம்பந்தமானவங்க இந்த வீட்ல யாரும் இல்ல.. முதல்ல நீங்க கிளம்பி வெளியே போங்க..” கடுகடுத்தார் பார்வதி அம்மாள்..

“உங்க வீட்ல என் பொண்ணை கல்யாணம் கட்டி கொடுத்து இருக்கேன்.. உங்க புள்ள செய்யக்கூடாத தப்பு எல்லாம் செஞ்சிட்டு ஜெயிலுக்கு போய் இருக்காரு.. எனக்கு அதை பத்தி கேக்குறதுக்கு உரிமை இல்லையா? என் பொண்ணு வாழ்க்கை பத்தி எனக்கு கவலை இருக்காதா? அதான் ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு போலாம்னு வந்தேன்.. ஏன் உங்க புள்ள ஜெயிலுக்கு போன உடனே என் பொண்ணை இந்த வீட்டை விட்டு அடிச்சு தொரத்திட்டீங்களா? எங்க அவ?” என்று கத்தினார் அவர்..

“ஓ அப்படியே ஒழுக்க சீலமா ஒரு பொண்ணை பெத்து வச்சுட்டீங்க.. அவளுக்காக என் பையனுக்கு எதிரா குத்தம் சொல்ல இந்த நியூஸ் பேப்பரை தூக்கிட்டு வந்து இருக்கீங்களா? என் பையனை பத்தி இன்னைக்கு தான் இந்த மாதிரி நியூஸ் வந்து இருக்கு.. அது பொய்யின்னு எங்களுக்கு நல்லா தெரியும்.. உங்களுக்கெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் இல்லை.. அப்படி ஒண்ணும் உங்க குடும்பம் ரொம்ப நல்ல குடும்பம் கிடையாது.. இப்படி ஒரு தரம் கெட்டுப் போய் இருக்கிற பொண்ணை பெத்தவர் தான நீங்க.. நீங்கதான் முகத்தை வெளியில காட்டாம வீட்டுக்குள்ளே பதுக்கி வச்சுக்கணும்”

 பார்வதி அம்மாள் விஷத்தைக் கக்கவும் “பா…ர்வ…தி.. அம்…மா…!!” என்று கத்தினார் அன்பழகன்..

“சும்மா கத்தற வேலை எல்லாம் வெச்சுக்காதீங்க… முதல்ல போய் உங்க பொண்ணை என்னன்னு கேட்டுட்டு அதுக்கப்புறம் இங்கே வந்து சத்தம் போடுங்க” என்றார் பார்வதி அம்மாள்..

“என்ன..? நான் மூஞ்ச பதுக்கி வச்சுக்கணுமா? ஜெயிலுக்கு போனது உங்க புள்ள.. நான் எதுக்கு என் மூஞ்சை பதுக்கி வச்சுக்கணும்? பொண்ணுங்க கிட்ட எப்படி எல்லாம் நடந்துக்க கூடாதோ அப்படி எல்லாம் தப்பா நடந்துகிட்டு அதுக்காக ஜெயிலுக்கு போய் இருக்காரு.. ரெண்டு புள்ளையை பெத்தவரு அவரு..  வெக்கமா இல்ல அவருக்கு..? அந்த மாதிரி ஒரு புள்ளையை பெத்துட்டு எந்த மூஞ்சியை வச்சுட்டு என் பொண்ணை குத்தம் சொல்றீங்க? ஆமா.. என் பொண்ணு சரி இல்ல தான்.. இல்லனா இத்தனை நாள்ல புருஷனை முந்தானைல முடிஞ்சு வச்சிட்டு இருப்பா இல்ல? அவ வெள்ளந்தியா இருந்துட்டா..” என்று அவர் சொல்லவும் சத்தமாக சிரித்தார் பார்வதி அம்மாள்..

“ஐயோ… எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல.. நான் பேச வேண்டியது எல்லாம் நீங்க பேசிக்கிட்டு இருக்கீங்க.. உங்க பொண்ணு வெள்ளந்தியா..? ஒரு நிமிஷம் இங்கேயே இருங்க..” என்று சொல்லி உள்ளே சென்று தேஜஸ்வினியும் அருண்குமாரும் இருந்த படத்தை போட்டு செய்தி வந்த செய்தித்தாளை எடுத்து வந்து அவர் முன்னே விட்டெறிந்தார்..

“அதோ அந்த நியூஸை எடுத்து பாருங்க.. உங்க பொண்ணு எவ்வளவு பத்தினி.. எவ்வளவு வெள்ளந்தீஈஈஈஈ..னு எல்லாம் நல்லா வெளிச்சமா தெரியும்.. இதுக்கு அப்புறம் இந்த வீட்ல நிக்கறதுக்கு கூட உங்களுக்கு தகுதி கிடையாது.. வெக்கம் மானம்  இருக்கிற ஒரு மனுஷனா இருந்தா எங்க மூஞ்சிலயே இனி நீங்க முழிக்க கூடாது.. அப்படியே திரும்பி போயிருங்க.. இல்ல ரொம்ப அசிங்கமாயிடும்..” என்றார் பார்வதி அம்மாள்..

அந்த செய்தித்தாளை எடுத்து அதிலிருந்த செய்தியையும் அதில் அருணின் அணைப்பில் தேஜஸ்வினி இருக்கும் படத்தையும் பார்த்தவர் அப்படியே அதிர்ச்சியில் அசைவில்லாது மூச்சு விட கூட மறந்து நின்றார்.. 

தொடரும்…

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள்

( கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 14

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!