பரீட்சை – 14
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
என்னுள் காதலை
தேடும்
எவனோ ஒருவன்
உன் மேல்
நான்
வைத்த காதலை
ஒன்றுமில்லாமல்
ஆக்க
துடிக்கிறான்…
அவனால்
அது முடியாதென்று
அறுதியிட்டு
சொல்லியும்
அடமாய் அதை
காதில் வாங்காமல்
உயிர் காதலை
ஒரேயடியாக
அழிக்கும் முயற்சியில்
இருக்கிறான்..
மற்றவர்களுக்கு தெரியாமல்
மனதோடு
மனம் பேசும்
போது
காதலை பரிமாறிக்
கொள்ள
கண்ணால் பார்க்கவும்
தேவையில்லை
மறைந்திருந்தாலும்
பிரிந்திருந்தாலும்
மங்கையவள்
மனம் புரியும்
அவளுடைய
மணாளனுக்கு…!!
###############
மனதோடு…நீ…!!
“அதோ அந்த நியூஸை எடுத்து பாருங்க.. உங்க பொண்ணு எவ்வளவு பத்தினி.. எவ்வளவு வெள்ளந்தீனு எல்லாம் நல்லா வெளிச்சமா தெரியும்.. இதுக்கப்புறம் இந்த வீட்ல நிக்கறதுக்கு கூட உங்களுக்கு தகுதி கிடையாது.. வெக்கம் மானம் இருக்கிற ஒரு மனுஷனா இருந்தா எங்க மூஞ்சிலயே இனி நீங்க முழிக்க கூடாது.. அப்படியே திரும்பி போயிருங்க.. இல்ல ரொம்ப அசிங்கமாயிடும்..” என்றார் பார்வதி அம்மாள்..
அந்த செய்தித் தாளை எடுத்து அதில் இருந்த செய்தியையும் அதில் அருணின் அணைப்பில் தேஜஸ்வினி இருக்கும் படத்தையும் பார்த்தவர் அப்படியே அதிர்ச்சியில் அசைவு இல்லாது மூச்சு விட கூட மறந்து நின்றார்..
பார்வதி அம்மாள் “இப்ப என்ன வாயே திறக்க மாட்டேங்கறீங்க? பேச்சே வரல..? வந்த உடனே அப்படியே என்னமோ என் புள்ளையை பத்தி பொரிஞ்சு தள்ளினீங்க? இப்ப ஏன் உங்க வாய் அடைச்சு போச்சு.. இப்பவும் பேச வேண்டியதுதானே? உங்க பொண்ணு லட்சணத்தை பார்த்தீங்க இல்ல? ஊரே கைகொட்டி சிரிக்குது எங்க குடும்பத்தை பார்த்து…. இப்படி ஒரு பொண்ணை கட்டிட்டு வந்துட்டோமேன்னு நினைச்சு கூனி குறுகி போய் வீட்டுக்குள்ள இருந்து வெளியிலேயே போக முடியாம அடைஞ்சு கிடக்கிறோம் நாங்க…. இந்த நேரத்துல யாரோ என் புள்ள மேல தப்பா பழியை போட்டு அவனையும் ஜெயில்ல தள்ளிட்டாங்க.. அவனுக்கு என்ன போறாத காலமோ தெரியல.. இப்படி கஷ்டத்து மேல கஷ்டம் வந்து சேர்ந்திருக்கு.. இதுல வேற.. நீங்க என்னடான்னா அவன் ஜெயிலுக்கு போனதை பத்தி தப்பா பேசறதுக்கு அங்கயிருந்து கூடை நிறைய வார்த்தைகளை எடுத்துட்டு வந்துட்டீங்களா? உங்க வீட்டு அசிங்கத்தை கழுவ பாருங்க மொதல்ல.. இப்படி ஒரு நடத்தை கெட்ட பொண்ணை பெத்து வச்சுட்டு இவர் வந்து இங்க என் புள்ளைய பத்தி பேசிகிட்டு இருக்காரு..”
பார்வதி அம்மாள் தன் தோளில் நாடியை நொடித்தபடி கத்தினாள்..
ஆனால் அவள் கத்தியது ஒன்றுமே அழகப்பனின் காதில் விழவில்லை.. அந்த படத்தை பார்த்து சிலையாக நின்றவர் கண்களில் கண்ணீர் மழை கொட்டிக் கொண்டிருந்தது..
அதை பார்த்த பார்வதி அம்மாள் “ஏன்.. உங்க பொண்ணு செஞ்சதை உங்களாலேயே நம்ப முடியலையா? போங்க.. அப்படியே இதை ஊரெல்லாம் போஸ்டர் அடிச்சு ஒட்டுங்க.. உங்க பொண்ணு பெருமையை நெனச்சு பத்தினி தனத்தை நெனச்சு ஊரெல்லாம் மெச்சுக்கும்.. இப்ப நீங்க இங்க இருந்து கிளம்பி போங்க.. எங்க வயித்தெரிச்சலை கிளப்பாதீங்க..” என்று சொன்னவரை நிமிர்ந்து பார்த்தவர் வாய் பேசாமல் தலையை தொங்க போட்டுக் கொண்டு அப்படியே அந்த வீட்டை விட்டு வெளியே வந்தார்..
##############
அருண் வீட்டிற்கு வந்தனர் பிள்ளைகளும் தேஜுவும்.. உள்ளே வந்தவுடன் அவர்களுக்கு ஐஸ்கிரீம் சாக்லேட் என்று விதவிதமாக உணவு தந்தும் அவர்களோடு பலவித விளையாட்டுகளை விளையாடியும் வேறு எதைப் பற்றியும் அவர்களை சிந்திக்கவிடாமல் இரண்டு மணி நேரங்கள் மட்டுமே வைத்திருக்க முடிந்தது அருணால்..
முதலில் அஸ்வின் அருணுடனும் பூஜாவுடனும் வீடியோ கேம் விளையாடி கொண்டு இருக்கையில் “இந்த கேம் விளையாடும் போது எங்க அப்பா எப்பவுமே என் கிட்ட தோத்து போயிட்டே இருப்பாரு.. அடி வாங்கிட்டே இருப்பாரு… நான் தான் இந்த கேம்ல எப்பவும் வின் பண்ணுவேன்..” என்று சொல்லிக் கொண்டே இருந்தவன் திடீரென்று தன் தந்தை ஞாபகம் வர அப்படியே அந்த விளையாட்டை நிறுத்தி விட்டு தேஜுவின் அறைக்கு போய் அவளிடம் “அம்மா.. அப்பா எப்பம்மா வருவார்? எனக்கு அப்பாவை பார்க்கணும்மா.. இவ்வளவு நைட் ஆயிடுச்சு.. இன்னும் ஏம்மா அப்பா வரல?” என்று கேட்டான்..
அவன் பின்னாடியே வந்த பூஜாவும் அதே கேள்வியை அவளிடம் கேட்க பதில் சொல்ல முடியாமல் திணறினாள் தேஜு..
தன் கணவனுக்கு வேறு எதுவும் விபரீதம் நிகழ்ந்து விடக்கூடாது என்று அன்று அருண் மிரட்டி மிரட்டி அவளை செய்ய வைத்த விஷயங்களை எல்லாம் நினைத்து பார்த்து அவ்வளவு நேரம் அழுது கொண்டிருந்தவள் திடீரென அஸ்வின் உள்ளே வரவும் கண்ணை துடைத்துக் கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்திருந்தாள்…
அவன் கேட்ட கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கையில் பூஜா “அம்மா உன் ஃபேஸ் ஏம்மா இப்படி வீங்கி போய் இருக்கு.. நீ அழுதியா? நீ எங்களை எப்பவும் அழக்கூடாதுன்னு சொல்வே.. இல்ல..? எப்பவுமே தைரியமா இருக்கணும்னு சொல்லுவ.. நீ எதுக்குமா அழுத? அருண் அங்கிள் உன்னை ஏதாவது திட்டினாரா?” என்று பாவமாக கேட்கவும் அதற்கு மேல் தாங்க முடியாமல் இருவரையும் கட்டி அணைத்துக் கொண்டு அவர்களுக்கு தெரியாமல் அமைதியாக கண்ணீர் உகுத்து அழுதாள்..
அவளுக்கோ “ஓ” என கதறி அழ வேண்டும் போல் இருந்தது..
அந்த அறைக்கு வந்த அருணை முதலில் முறைத்தவள் அதன் பிறகு பார்வையாலேயே பிள்ளைகளை காண்பித்து கெஞ்சினாள்..
பிள்ளைகளின் அருகில் வந்து கீழே மண்டியிட்டு அமர்ந்த அருண் “அஸ்வின்.. பூஜா.. என்னை பாருங்க..” என்றான்..
“அங்கிள்.. நீங்க ஏதாவது எங்க அம்மாவை திட்டினீங்களா? எங்க அம்மா இப்படி கண்ணு மூஞ்சி எல்லாம் வீங்கி போயி நாங்க பார்த்ததே இல்லை.. அவங்க அழுதாங்களா?” என்று கேட்டாள் பூஜா அருண் பக்கம் திரும்பி…
“இல்லடா அம்மா கண்ணுல ஏதோ தூசி விழுந்துடுச்சு.. நேத்துலருந்து அது உறுத்திகிட்டே இருக்கா? அதான் கண்ணு கலங்கி போய் இருக்கு.. அது.. கண்ணுலருந்து தண்ணி வந்துட்டே இருந்ததுனால அவங்க முகமும் வீங்கி போய் இருக்கு.. அப்புறம் அப்பாவை நாளைக்கு பாக்கலாம் நீங்க.. ஓகேவா..? ஆனா அதுவரைக்கும் அம்மாவை தொந்தரவு பண்ணாம சமத்தா இருக்கணும்..”
“ஏன்.? எங்க அப்பா எங்க போயிருக்காரு? இன்னைக்கு ஏன் எங்க வீட்டுக்கு போய் எங்க அப்பாவை பார்க்க முடியாது? எனக்கு டாடியை உடனே பாக்கணும்.. எங்களை கூட்டிட்டு போங்க அங்கிள்..”
அஸ்வின் சிணுங்கியபடி கேட்கவும் “அஸ்வின் கண்ணா.. அப்பாக்கு திடீர்னு ஊர்ல ஏதோ வேலை வந்துடுச்சு.. அதனால ஊருக்கு போய் இருக்காரு.. நாளைக்கு சாயங்காலம் தான் வருவாரு.. அவர் வந்த உடனே அவர் கிட்ட கொண்டு போய் விடுறேன்.. ஓகேவா?” என்றான் அருண்..
“அப்படின்னா டாடியை இங்கே கூட்டிட்டு வந்துடலாமா? நான், நீங்க, பூஜா, அம்மா, டாடி எல்லாரும் இந்த வீட்ல ஹாப்பியா இருக்கலாமா?” என்று அவன் கேட்க தேஜூ தலையில் கை வைத்துக் கொண்டாள்.. அவளுக்கு எங்காவது சுவற்றில் போய் முட்டிக்கொண்டு ஒரேயடியாக செத்து விடலாம் என்று தோன்றியது..
“சரி.. இப்போதைக்கு நாளைக்கு அப்பாவை போய் பார்க்கலாம்.. அதுக்கப்புறம் நம்ம எல்லாம் எங்க இருக்க போறோம்னு டிசைட் பண்ணிக்கலாம்.. சரியா? நாளைக்கு முதல்ல அப்பாவை போய் பார்த்து பேசிட்டு அதுக்கப்புறம் இதெல்லாம் டிசைட் பண்ணிக்கலாம்.. இப்ப நீங்க சமத்தா தூங்குவீங்களாம்.. ஓகேவா?” என்றான் அருண்..
அவன் முகத்தில் பிள்ளைக்கு பதில் சொல்ல முடியாத தடுமாற்றம் தெரிந்தது.. அது ஒரு விதத்தில் தேஜூவுக்கு சந்தோஷத்தையே கொடுத்தது..
பிள்ளைகள் இப்படியே கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தால் அவர்களுக்காக அவன் தன்னை விட்டு விடுவதை பற்றி யோசிப்பான் என்று ஒரு நம்பிக்கை பிறந்து அவளுள்.. ஏனென்றால் மற்றவர்களிடம் எப்படி நடந்து கொண்டாலும் பிள்ளைகளிடம் அவன் அன்பாகவே நடந்து கொண்டது அவள் மனதிற்கு ஆறுதலாக இருந்தது..
இருவரும் தேஜூவின் பக்கத்தில் சென்று படுக்க இருவருக்கும் ஆளுக்கு ஒரு கதை புத்தகத்தை கொண்டு வந்து கொடுத்தான்…
“இதில் நிறைய உங்களுக்கு பிடிச்ச ஸ்டோரீஸ் எல்லாம் இருக்கு.. படிச்சுக்கிட்டே தூங்கலாமா?” என்று கேட்டான் அருண்.. அவர்கள் தலையை தடவியபடி..
அதற்குள் தேஜூ “பூஜா.. அஸ்வின்.. நீங்க ரெண்டு பேரும் இங்க படுத்துக்கோங்க.. நான் கொஞ்சம் அங்கிள்கிட்ட பேசணும்.. நான் போய் பேசிட்டு வரேன்..” என்று சொன்னவள் அவர்கள் இருவரையும் படுக்க வைத்து அவர்கள் நெஞ்சுவரை போர்வையை போர்த்தி விட்டு அறையை விட்டு அருணுடன் வெளியே வந்தாள்…
“உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா? இப்ப கூட மனசு இறங்கமாட்டியா? என் குழந்தைங்க அவங்க அப்பா அம்மா ரெண்டு பேரும் வேணும்னு சொல்றாங்க.. அவங்களுக்காகவாது என்னை என் புருஷனோட வாழ விடு.. ப்ளீஸ்..” என்று கெஞ்சினாள் அவள்..
“அஷ்ஷூ டியர்..” என்று ஏதோ சொல்ல ஆரம்பித்தவனின் கைபேசி ஒலிக்கவும் அதிலிருந்த குறுஞ்செய்தியை எடுத்து பார்த்தவன் “இந்த வீடியோ பாரு அஷ்ஷூ.. அதுக்கப்புறம் நீ கேட்ட விஷயத்துக்கு நான் ஒரு முடிவு சொல்றேன்” என்றான் அருண்.
அந்தக் காணொளியில் காவல் நிலையத்தில் ராமை பார்த்து பேசிக் கொண்டிருந்தாள் அவனுடைய தோழி ரக்க்ஷிகா..
உள்ளே நுழைந்த ரக்ஷிகாவை பார்த்து “நீ எதுக்கு இங்க வந்த? உன்னோட பேசுறதுக்கு எனக்கு விருப்பம் இல்லை” என்றான் ராம்..
“உனக்கு நல்லது பண்ணலாம்னு வந்திருக்கேன்.. நீ இப்படி விரட்டுற.. எப்பவுமே நீ நல்லா இருக்கணும்னு தான் நான் நினைக்கிறேன்.. ஆனா நீதான் என்னை புரிஞ்சுக்கவே மாட்டேங்குற.. பாரு ஜெயில்ல எவ்வளவு கஷ்டப்படுற? உன்னை பாக்க மனசுக்கு அவ்வளவு கஷ்டமா இருக்கு.. நீ மட்டும் என்னை கல்யாணம் பண்ணி இருந்தேனா உனக்கு இப்படி ஒரு நிலைமை ஜென்மத்துக்கும் வந்திருக்காது..”
“இதை பாரு.. இந்த விஷயமா நம்ம நிறைய தடவை பேசியாச்சு.. இங்க ஜெயில்லயாவது என்னை நிம்மதியா இருக்கவிடு… இங்கேயும் வந்து ஏன் என் உயிரை எடுக்கிற? முதல்ல இங்கிருந்து கிளம்பு..” என்றான் ராம் முகத்தை திருப்பி..
“உன் பொண்டாட்டி உன்னை நட்டாத்துல விட்டுட்டு அவ பாய் ஃப்ரண்டோட போயிட்டா.. நான் என்னடான்னா உனக்கு கேர்ள் ஃப்ரெண்ட்டா ஆகணும்னு இத்தனை வருஷமா ட்ரை பண்ணிட்டிருக்கேன்.. நீ அதை புரிஞ்சுக்காம என்னை அவாய்ட் பண்ணிட்டே இருக்க.. உன்னை மதிக்காம ஓடிப்போன அவளையே நெனச்சுக்கிட்டு எத்தனை நாள் இப்படி கஷ்டப்பட போறே.. இப்பவும் ஒரு வார்த்தை சொல்லு.. இந்த ஜெயில்ல இருந்து உன்னை நான் வெளிய கொண்டு வரேன்..” என்றாள் அவள்..
“அது எப்படி.. உன்னால என்னை ஜெயில்லருந்து வெளிய கொண்டு வர முடியும்? இன்ஸ்பெக்டரே என்னை நம்பினாலும் என் மேல தப்பு இல்லன்னு எப்படி ப்ரூவ் பண்ணறதுன்னு தெரியாம முழிச்சிட்டு இருக்காரு.. நீ என்னவோ என்னை ஈசியா வெளிய கொண்டு வருவேன்னு சொல்ற.. உன்னால மட்டும் எப்படி என்னை வெளிய கொண்டு வர முடியும்?” ஏதோ அவளிடம் தான் தவறு இருக்கிறது என்று தோன்ற கேட்டான் ராம்..
“ஏன்னா நீயும் அந்த மாலினியும் உண்மையா என்ன பேசினீங்க.. அங்க என்ன நடந்ததுன்னு அக்கு வேரா ஆணி வேரா பிரிச்சு காட்டற வீடியோ என்கிட்ட இருக்கு.. நான் அதை போலீஸ்ல கொடுத்து உன்னை வெளியே கொண்டு வரணும்னா நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒத்துக்கோ.. இல்லன்னா.. இங்கேயே ஓடிப்போன உன் பொண்டாட்டியை நெனச்சிட்டு அழுதுகிட்டு உக்காந்துட்டு இரு”
அவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்த ராம் “அப்போ இதெல்லாம் உன் வேலை தானா? நான் கூட அந்த அருணோட வேலையோன்னு சந்தேகப்பட்டேன்.. கடைசியில நீ தான் இதெல்லாம் நடத்தியிருக்கியா?” என்று கேட்டான்..
அதை பார்த்த தேஜூ “இல்லைங்க.. இது எல்லாமே இந்த பாழாப்போன அருணோட வேலைதான்.. இவன்தான் இது அத்தனையும் பண்ணியிருக்கான்..” என்று சொல்லிக் கொண்டிருந்தவள் அதற்குள் ராம் ஏதோ சொல்ல வர காணொளியை கவனித்தாள்..
“இதை பாரு.. நான் இந்த ஜெயில்லேயே இருந்து செத்தே போறதா இருந்தாலும் சாவேனே தவிர உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒரு ஜெயில்ல இருந்து இன்னொரு ஜெயிலுக்கு போகணும்னு நினைக்க மாட்டேன்.. நான் இங்கேயே இருக்கிறேன்.. நீ கெளம்பு ” என்றான்..
“உனக்கு உன்னை பத்தி வேணா கவலை இல்லாம இருக்கலாம்.. ஆனா உன் குழந்தைகளை நினைச்சு பார்த்தியா? நீ இல்லாம அவங்க துடிச்சுடமாட்டாங்க.. அவங்களுக்காகவாது நீ வெளில வரணும் இல்ல..?” என்று அவள் கேட்கவும் அவன் முகத்தில் ஒரு அதிர்வு தெரிந்தது..
சற்று குழப்பத்துடன் யோசிக்க ஆரம்பித்தான் அவன்.. இங்கே தேஜூவோ காணொளியில் தெரிந்த அவன் முகத்தை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள்..
“ஐயோ.. பசங்க என்கிட்ட தாங்க இருக்காங்க.. அவங்க தனியா இல்ல.. இந்த அருண் ரொம்ப நம்ம வாழ்க்கையோட விளையாடுறான்ங்க.. நீங்க ஏமாறாதீங்க..” என்று அழுதாள் அவள்..
தொடரும்….
வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும் ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!