பரீட்சை – 17
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
என் உயிர் நதியாய்
எனக்குள்
ஓடும் உன்னை
வேறொருவன் கைகள்
ஆள்வதை கண்ட
அந்த நொடி
என் உடல் விடுத்து
உயிர் நீங்கும்
உணர்வு கொண்டேன்..
மாற்றான் உயிர்
எடுத்துன்னை இந்த
மரணவலியிலிருந்து
காத்து விட எனதிரு
கைகள் துடிக்குதடி
என்
கவிமலரே..!!
##########
உயிர் நதியே..!!
சிறையில் நடக்கும் அனைத்தையும் அருண் காண்பித்துக் கொண்டிருந்த காணொளியில் பார்த்துக் கொண்டிருந்த தேஜுக்கு இதயம் பல மடங்கு வேகத்தில் எக்கு தப்பாக துடித்துக் கொண்டிருந்தது.
. ஒரு கையால் தன் புடவையை படப்படப்பில் இறுக்கிப்பிடித்தவள்.. இன்னொரு கையால் அவன் கைபேசியை இன்னும் அருகில் பிடித்தபடி ராம் அடுத்து என்ன சொல்ல போகிறான் என்று அந்த கைபேசியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்..
“உன் கண்டிஷனுக்கு ஒத்துக்கலாமான்னு ஒரு யோசனை வருது.. ஆனா.. ” என்று இழுத்த ராம் ஒரு யோசனையுடனே ரக்ஷிகாவின் கண்களை தீர்க்கமாக பார்த்துக் கொண்டிருந்தான்..
“ஆனா என் தேஜூ அவங்க கூட இருக்கா.. அவகிட்ட என் பசங்க இருக்கும்போது நிச்சயமா அந்த அருணால அவங்களை ஒண்ணுமே செய்ய முடியாது.. அவ என் புள்ளைங்களை கண்ணுல வச்சு பார்த்துப்பா.. அதனால நான் வேற வழியில எப்படியாவது உண்மையை நிரூபிச்சு வெளில நிதானமா வந்துக்கிறேன்.. இப்போ நான் அவசரமா வெளியில வர்றதுக்காக உன்னை மாதிரி ஒரு கேடுகெட்டவளை கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் கிடையாது.. என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் என் தேஜூ மட்டும் தான் என்னோட பொண்டாட்டியா இருப்பா.. என்னோட பொண்டாட்டியா மட்டும் தான் இருப்பா..!!” அழுத்திக் கூறினான் அவன்..
“இவ்ளோ நடந்த அப்புறமும் நீ இப்படி பேசிட்டிருக்கறதை என்னால நம்பவே முடியல ராம்.. உன் பொண்டாட்டி அவனோடயும் உன் பசங்களோடயும் தைரியமா ஊர் சுத்திக்கிட்டு ஜாலியா இருக்கா.. இப்ப கூட நீ இன்னும் அவ உனக்கு மட்டும் சொந்தமா இருக்கானு நம்பிக்கிட்டு இருக்கியா? ஒருத்தர் மேல நாம வைக்கிற நம்பிக்கைக்கும் ஒரு அளவு இருக்கணும் ராம்.. இல்லன்னா நம்மளை ஏமாத்திட்டு அவங்க ஒரு உறுத்தலும் இல்லாம போய்க்கிட்டே இருப்பாங்க.. நீ என்னை கல்யாணம் பண்ணிக்கிற பண்ணிக்கலங்கறது எல்லாம் வேற விஷயம்.. ஆனா இப்படி உன்னை விட்டுட்டு போயி உன்னை ஜெயிலுக்கும் அனுப்பிச்சிட்டு இன்னொருத்தனோட உறுத்தலே இல்லாம வாழ்ந்துட்டு இருக்காளே அவளுக்காக நீ எதுக்கு இன்னும் உருகிக்கிட்டு இருக்க.. தெரிஞ்சோ தெரியாமலோ நான் உன்னை விரும்பிட்டேன்.. அந்த ஒரு உரிமையில சொல்றேன் நீ என்னை உன்னை மனசார விரும்புற ஒருத்தியா மதிக்கலன்னா கூட ஒரு ஃப்ரெண்டா நான் சொல்ற அட்வைஸை எடுத்துக்கோ.. தயவுசெஞ்சு இனிமேல அவளை நம்பி ஏமாறாதே.. நான் வரேன்..” சொல்லி விட்டு அவள் அங்கிருந்து சென்றிருந்தாள்..
இதைப் காணொளியில் பார்த்துக் கொண்டிருந்த தேஜுவின் கண்களில் அருவி போல் நீர் கொட்டிக் கொண்டிருக்க சத்தமாக சிரித்தாள்.. அப்பொழுதே ராம் இருக்கும் இடம் சென்று அவனை இறுக்கமாய் அணைத்து அவனுக்குள் அவனிலிருந்து வெளிவர முடியாதபடி உறைந்து விட வேண்டும் என்று தோன்றியது அவனுடைய உயிரானவளுக்கு..
கண்களில் தன்னவனுக்கான பெருமிதம் மின்ன அருணை நிமிர்ந்து நேர் கொண்டு பார்த்தவள் “ஏ.. அருண்.. பார்த்தியா? என் ராம் எப்படி சிங்கம் மாதிரி சீறியிருக்காருன்னு.. நான் சொன்ன மாதிரி அவர் இந்த சேலன்ஜ்ல ஜெயிச்சிட்டார்.. அவர் மனசுல இருந்து என்னை நீ அழிக்கவே முடியாது.. நீ என்ன வேணா செஞ்சுக்கோ.. அவர் என்னோட ராம்.. ஏக பத்தினி விரதன்.. என்னோட ராம் என்னிக்குமே பாதை மாற மாட்டார்.. ஆமா.. இப்போ உன் மூஞ்ச கொண்டு போய் எங்க வச்சுக்க போற?” கிண்டலாக புன்னகைத்து கொண்டு கேட்டாள் தேஜு..
“ஒத்துக்கிறேன்.. உன் ராம் உன் மேல உயிரையே வச்சிருக்கிறார்.. ஆனால் நீ அவனோட சீதா இல்லை.. அது எனக்கு நிச்சயமா தெரியும்.. நீ என்னோட அஷ்ஷூ.. எனக்கு மட்டுமே சொந்தமான அஷ்ஷு.. இந்த முறை யாருக்காகவும் உன்னை விட்டுக் கொடுக்க மாட்டேன்.. நீ எனக்கு மட்டுமே சொந்தமானவ.. இனிமே உன் வாழ்க்கை என்னோடதான்.. கூடிய சீக்கிரம் இதை உன் வாயாலேயே நான் சொல்ல வைப்பேன்..” என்றான் அருண் அவள் கண்ணுக்குள்ளே பார்த்துக்கொண்டு..
“எப்படி..? இப்ப என் புருஷன் வாயால ரக்ஷிகாவை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்ல வச்சியே அதே மாதிரியா..? போய் வேற ஏதாவது நடக்கிற வேலையா இருந்தா பாரு.. நீ என்னை கட்டாயப்படுத்தி வலுக்கட்டாயமா அடைய முடியுமே தவிர என் மனசை மாத்தவே முடியாது… அது என் ராமுக்கு மட்டும் தான் சொந்தம்.. மிஞ்சி மிஞ்சி போனா அப்படியே நீ உனக்கு சொந்தமாக்கிக்கிட்டாலும் என் உடம்பை மட்டும் தான் சொந்தமாகிக்க முடியும்… என் மனசை அசைக்கக்கூட முடியாது உன்னால..” என்றாள் தீயாய் அவனை பார்த்துக்கொண்டு தேஜு..
“அதையும் பார்க்கலாமே.. நீ அசையறியா இல்லையான்னு..?!” என்றான் அருண் அவள் கன்னத்தில் தட்டியபடி.. அவள் அவனை முறைத்தாள்..
“எனிவேஸ்.. இப்போ இந்த சேலஞ்சில உன் ராம் ஜெயிச்சுட்டான்.. அதனால நான் சொன்னபடி அவனை வெளியில கொண்டு வந்துடறேன்.. இன்னும் ஒன் ஹவர்ல அவன் வெளியில வந்துருவான்..” என்றான் அருண்..
“பரவாயில்லையே அதிசயமா ரொம்ப ஜென்டில்மேனா நடந்துக்கிற என் விஷயத்துல..” என்றாள் தேஜு..
“உன் விஷயத்தில ஜென்டில்மேனாவும் நடந்துப்பேன்.. லவ்வர் பாயாவும் நடந்துப்பேன்.. அது என்னோட உரிமை..” என்று சொன்னவன் கால்களை அவன் எடுத்து வந்த நாய்க்குட்டி ஓடி வந்து நக்கி கொடுக்க அதை அப்படியே கையில் எடுத்து அள்ளியவன் “என்னடா சாப்பிட்டியா? கல்யாணி அம்மா உனக்கு சாப்பாடு போட்டாங்களா?” என்று கொஞ்ச அது அவன் முகம் எல்லாம் நாக்கால் நக்கியது..
” ஏய்..ஏய்.. ஓகே.. ஓகேடா குட்டி..” என்று சிரித்துக்கொண்டே அதை கண்கள் மூடி ரசித்தவன்.. “சரி வா கல்யாணி அம்மா என்ன பண்ணி வச்சிருக்காங்கன்னு பார்க்கலாம்.. எனக்கு பசிக்குது..” என்று சொன்னவன் அந்த நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான்..
“இவன் என்ன பிறவியோ?” என்று தேஜூ அவனை பார்த்து தலையை இடவலமாக ஆட்டியபடி பெருமூச்சு விட்டுக்கொண்டு நின்றாள்..
அடுத்த அரை மணி நேரத்திற்குள்ளாகவே அந்த காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ராமிடம் சென்று “மிஸ்டர் ராம்.. உங்க மேல தப்பு இல்லன்னு சொல்ற வீடியோ ஆதாரம் கிடைச்சிருச்சு.. என்னோட ஃபோனுக்கு ஏதோ ஒரு நம்பர்ல இருந்து அந்த மிஸ் ஆன சிசிடிவி ஃபுட்டேஜ் கிடைச்சுடுச்சு.. யார் அனுப்புனாங்கன்னு செக் பண்ணினோம்.. ஆனா அந்த நம்பரை டிரேஸ் பண்ண முடியல..” என்று சொன்னார்..
ராமுக்கு ஒரே புதிராக இருந்தது.. இந்த அருண் ஏன் இப்படி ஒரு விளையாட்டை தன்னோடு விளையாடுகிறான் என்று நினைத்துக் குழம்பிப் போனான்..
“அதனால இனிமே உங்களை இங்கே அரெஸ்ட் பண்ணி வைக்க முடியாது.. வெளில ரிப்போர்ட்டர்ஸ் இருக்காங்க.. அவங்க கிட்ட இந்த வீடியோவை காமிச்சிட்டு உங்ககிட்ட தப்பா நடந்துட்ட அந்த லேடியை அரெஸ்ட் பண்ணிடறோம்..” என்று அவர் சொல்ல “வேணாம் இன்ஸ்பெக்டர்.. இதை இப்படியே விட்டுடுங்க.. இது அவங்களா பண்ணல.. வேற யாரோ சொல்லி பண்ணது.. அவங்க வெறும் அவங்க கை பொம்மைதான்.. அதனால இதை பெரிசாக்காதிங்க..” என்று சொல்லிவிட்டு அவர் கதவை திறந்து விடவும் வெளியே வந்தான் ராம்..
இன்ஸ்பெக்டர் சொன்ன இடத்தில் கையெழுத்திட்டு விட்டு அவரோடு வெளியே வந்தான்.. அங்கே இன்ஸ்பெக்டர் வர வைத்து குழுமி வைத்திருந்த பத்திரிக்கையாளர்களிடம் அவர் அந்த சிசிடிவி ஃபுட்டேஜ் அடங்கிய காணொளியை போட்டு காண்பித்தார்..
அதை பார்த்தவர்கள் “சார்.. அப்படின்னா அந்த லேடி தான் இது அத்தனையும் பண்ணி இருக்காங்களா?” என்று கேட்க “எக்ஸாக்ட்லி.. ஆனா அதுக்குள்ள உங்க பத்திரிகைகள்ல எல்லாம் ராமை பத்தி நீங்க என்ன என்னவோ எழுதிட்டீங்க.. நான் அப்போ அவர் மேல எந்த தப்பும் இருக்காதுன்னு சொல்லி இருந்தா என்னை பத்தியும் தப்பா எழுதி இருப்பீங்க.. உங்களை எல்லாம் ஆதாரத்தோடு சந்திக்கணும்னு தான் நான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்..”
ராம் அவர்களை பார்த்து,”தயவு செஞ்சு உங்க பத்திரிகை வேலையை கொஞ்சம் நியாயமா பண்ணுங்க.. உண்மை என்னன்னு தெரிஞ்சுகிட்டு அதை மட்டும் எழுதுங்க.. யாரையாவது சந்தேகத்தில் அரெஸ்ட் பண்ணாங்கனா அவங்க மேல சந்தேகம் இருக்குன்னு அர்த்தமே தவிர அவங்க தான் குற்றவாளின்னு அர்த்தம் கிடையாது.. தயவு செஞ்சு அவங்களை குற்றவாளின்னு நீங்களா முடிவு பண்ணி உங்க பேப்பர்ல அவங்களை பத்தி உங்க கற்பனையை தட்டி விட்டு வித விதமா தப்பு தப்பா எழுதாதீங்க.. அது அவங்க வாழ்க்கையை எவ்வளவு பாதிக்குதுன்னு உங்களுக்கு தெரியாது.. இன்னைக்கு இந்த வீடியோவை நீங்க காட்டும் போது இத்தனை நாள் நீங்க எழுதின நியூஸ் எல்லாம் எவ்வளவு பொய்யானது என்று மக்களுக்கு தெரிய வரும்.. அப்படி தெரிய வந்தா உங்க நியூஸ் பேப்பர் மேல இருக்கிற நம்பிக்கையே போயிரும்.. அதனால தயவு செஞ்சு இனிமே இந்த மாதிரி தப்பா எழுதாதீங்க..” என்று சொல்லிவிட்டு இன்ஸ்பெக்டரிடம் திரும்பி “அப்ப நான் போறேன் சார்..” என “கிளம்புங்க ராம்..” என்றார் இன்ஸ்பெக்டர்..
அங்கிருந்து நேராக வீட்டுக்கு வந்தவனை பார்வதி அம்மாள் ஆரத்தி எடுத்து வரவேற்றார்..
உள்ளே வந்தவர் “பார்த்தீங்களா? என் புள்ள மேல எந்த தப்பும் இல்லைனு நிரூபிச்சு வெளிய வந்துட்டான்.. ஒவ்வொருத்தனும் எப்படி நாக்கு மேல பல்ல போட்டு பேசினானுங்க.. அதுக்கு எல்லாம் பதில் சொல்ற மாதிரி அவன் எவ்வளவு அழகா வெளியில வந்துட்டான் பாருங்க.. இங்க வந்து அவ்வளவு நியாயம் கேட்க வந்தாரே அந்த பெரிய மனுஷன்.. இப்ப அவர் மூஞ்சியை எங்க கொண்டு போய் வச்சுப்பாரு?” என்று கேட்டுக் கொண்டே ராமுடன் உள்ளே வந்தார் பார்வதியம்மாள்..
“யாரை பத்தி நீ சொல்றம்மா?” என்று ராம் கேட்கவும் “அதாண்டா உன் மாஜி மாமனார் அழகப்பன்.. அவர் வந்திருந்தார்.. பேப்பர்ல நீ அரெஸ்ட் ஆன நியூஸை பார்த்துட்டு அந்த பேப்பரை தூக்கிட்டு வந்து நியாயம் கேட்க வந்துட்டார் அந்த பெரிய மனுஷன்.. அவர் மூஞ்சிலேயே மறுபடியும் தேஜூ அந்த ஆளோட ஓடி போனது போட்டிருந்தாங்கல்ல? அந்த நியூஸ் வந்த நியூஸ் பேப்பரை விட்டு எறிஞ்சேன்.. மனுஷனுக்கு அதுக்கப்புறம் என்னை பாக்குறதுக்கு மூஞ்சே கிடையாது.. அப்படியே தலையை தொங்க போட்டுட்டு திரும்பி போயிட்டாரு..” என்றார் பார்வதி அம்மாள்..
“என்னம்மா சொல்றீங்க..? மாமா வந்திருந்தாரா..? அவர்..” என்று புருவத்தை சுட்டு விரலால் தேய்த்தவன், “ஐயோ.. ஏம்மா அந்த இடத்துல யாரு இருந்தாலும் அப்படி தானம்மா கேட்டு இருப்பாங்க? ஏன்மா இப்படி பண்றீங்க? அப்புறம் எதுக்கு மாமாவை வீட்டை விட்டு துரத்துனீங்க? போதா குறைக்கு தேஜூவை பத்தி வேற தப்பா பேசி அனுப்பி இருக்கீங்க அவர்கிட்ட.. அப்படித்தானே..?”
“நீ என்னடா இப்படி பேசுற? நெஜமாவே அவ தப்புதான டா பண்ணி இருக்கா.. உன்னை விட்டுட்டு இன்னொருத்தனோட போய் குடும்பம் நடத்திட்டு இருக்கா.. அவளை பத்தி தப்பா சொல்லாம பின்ன புகழ்ந்து பேசுவாங்களா? இந்த மாதிரி மருமக எவளுக்குமே கிடைக்க மாட்டாடா.. அவரு உன்னை பத்தி அவ்வளவு தப்பு தப்பா கேள்வி கேட்கும் போது நான் மட்டும் வாயை மூடிட்டு போகணுமா? அதான் பதிலுக்கு பதில் பேசினேன்.. இப்போ என் புள்ள மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சுருக்கும்.. அவர் பொண்ணு தான் முழுக்க முழுக்க தப்புன்னு தெரிஞ்சிருக்கும் இல்ல.. அவருக்கு?” என்றார் பார்வதி அம்மாள்..
கோவத்தில் கண் சிவந்தவன் தன் அன்னையின் அருகில் சென்று ஒரு விரல் நீட்டி, “அம்மா.. இன்னொரு தடவை தேஜூவை பத்தி தப்பா பேசுனீங்க அம்மானு கூட பார்க்க மாட்டேன்.. தேஜூவை பத்தி எனக்கு தெரியும்.. அவ எந்த நேரத்திலும் எனக்கு துரோகம் பண்ண மாட்டா.. ஏன்மா வேற மாதிரி உங்களுக்கெல்லாம் யோசிக்க தெரியாதா..? அவ ஏதோ ஒரு நிர்ப்பந்தத்தில தான் அங்க இருக்கா.. அவ மேல எந்த தப்பும் இல்லை.. ன்னு எனக்கு தெரியும்.. இனிமே இந்த மாதிரி பேசுற வேலை வெச்சுக்காதீங்க..” என்று கோபமாக சொன்னான் ராம்..
“இது என்னடா? ஓடிப்போன பொண்டாட்டி பத்தி சொன்னா உனக்கு இவ்ளோ கோவம் வருது.. சரியான அதிசயமான புருஷனா இருக்கே நீ.. டேய் ராம்.. அவ இவ்வளவு தூரம் போன அப்புறமும் இன்னும் கூட அவளை நீ நம்பிகிட்டு இருக்கியா? உனக்கு எவ்வளவு பட்டாலும் அறிவே வராதுடா.. சரி.. அங்க என்ன சாப்டியா? நான் உனக்கு சாப்பாடு எடுத்து வைக்கிறேன்..” என்று சொன்னார் பார்வதி அம்மாள்.. அவர் பின்னால் சென்று சாப்பிட அமர்ந்தான்..
மாலையில் பூஜாவையும் அஷ்வினையும் பள்ளியிலிருந்து கூட்டி வர அருணும் தேஜூவும் பள்ளிக்கு சென்று இருந்தார்கள்.. காரை விட்டு இறங்கியவுடன் தேஜு கண்ட காட்சியில் அவள் கண்கள் பனித்தன.. மூன்று நாட்களுக்குப் பிறகு தன் குழந்தைகளோடு கொஞ்சிக் கொண்டிருந்த ராமை பார்த்தவள் அப்படியே நெகிழ்ந்து போய் அவன் அருகில் செல்ல வேண்டும் என ஒரு அடி எடுத்து வைக்கவும் அவள் கையை இறுக்க பற்றி இருந்தான் அருண்..
அதே நேரத்தில் சரியாக திரும்பிய ராமின் கண்கள் தேஜுவின் கண்களை சந்தித்தன.. கண்களாலேயே பேச தொடங்கியவர்கள் ஒரு நிமிடத்திற்கு மேலாக கண்களாலேயே பேசி ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டார்கள் ..
அதற்கு மேல் தாள முடியாமல் ராம் அவளை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அப்போதுதான் அவள் கண்களில் இருந்து கீழ் இறங்கிய அவன் பார்வை அவள் கைகளை பற்றி இருந்த அருணின் கைகளில் நிலைத்தது..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்துகா த்திருக்கும் உங்கள் அன்பு தோழி “சுபா”