அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 18🔥🔥

5
(13)

பரீட்சை – 18

சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

மன்னித்துவிடு

என்னை

மலர்க்கொடியே…!!

 

கணவனாய்

உன்னை அந்த

காமுகனிடமிருந்து

காத்து நிற்கும்

கடமை செய்ய

முடியாமல்

கையொடிந்த

காவலனாய்

கவலை மட்டும்

கொண்டேன்

 

ஒரு வார்த்தை

சொல்லிவிடு

அவன் உன்னை

உருட்டி மிரட்டி

வதைப்பதை பற்றி..

 

மறுநிமிடம் அவனுக்கு

மரண வாசல்

காட்டிடுவேன்

மான் விழியாளே..

மனத்தோடு உனக்குள்ளே

மறுகி மறுகி

துடிக்காதே

மங்கை நதியே…!!

 

##############

 

மலர் கொடியாளே…!!

 

ராம் தேஜூவை நோக்கி ஒரு அடி எடுத்து வைக்க அப்போதுதான் அவள் கண்களில் இருந்து கீழ் இறங்கிய அவன் பார்வை அவள் கைகளை பற்றி இருந்த அருணின் கைகளில் நிலைத்தது..

 

அருண் தேஜுவின் கைகளைப் பிடித்துக் கொண்டிருப்பதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள்ளிருந்து ஆத்திரம் பொங்கி வர இரு கைகளையும் இறுக்கியபடி நகர்ந்த தன் கால்களை ஒரு நொடி நிறுத்திக் கொண்டான்..

 

ஆனால் அவன் கையில் இருந்து தன் கையை விடுவித்துக் கொள்ள தேஜூ போராடுவதை கண்ட ராம் அவர்களிடம் சென்று “டேய்.. அவ கைய விடுடா” என்றான்..

 

பதட்டமடைந்த தேஜுவோ “இனி என்ன நடக்கப் போகிறதோ?” என்று படபடப்பாக தன் இயலாமையை வெளிக்காட்டிய படி ராமை ஏக்கப்பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள்..

 

அப்போது வாய் திறந்த அருண் ராமிடம் இருந்து கண்களை அகற்றாமல் “என்ன அஷ்ஷூ.. உன் கையை விட சொல்லி என்னை மிரட்டிட்டு இருக்கான்.. உன் மாஜி புருஷன்.. நீயும் வாயை மூடிட்டு இருக்க?” என்று கேட்க சட்டென அவன் பக்கம் திரும்பியவளை ஒற்றை புருவத்தை தூக்கி ஒரு அர்த்தமுள்ள பார்வை பார்த்தான் ..

 

அவன் பார்வையின் அர்த்தம் புரிய கண்கள் மூடி தன் வேதனையை விழுங்கிக் கொண்டவள் ராம் பக்கம் திரும்பி “ராம்.. அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க போறாரு.. அவர் என் கையை பிடிச்சுக்கிறதுல என்ன தப்பு இருக்கு? இப்படி எல்லாம் அவரை மிரட்டுற வேலை வச்சுக்காதீங்க..” என்றவள் அப்படியே தலையை குனிந்து கொண்டு தன் விழியோரம் பூத்திருந்த ஒரு துளி கண்ணீரை மறைத்தாள்..

 

அவளை மேலும் தர்ம சங்கடப்படுத்த வேண்டாம் என்று நினைத்த ராம்  அப்படியே நகர்ந்து குழந்தைகளிடம் வந்தவன் “பூஜா.. அஸ்வின்.. நீங்க அம்மாவோட போங்க.. அப்பா கிளம்புறேன் ” என்றான்..

 

“அப்பா 2 டேஸா உங்களை பார்க்கவே இல்லப்பா.. நான் உங்களோடயே வரவாப்பா? அம்மாவையும் கூட்டிட்டு வீட்டுக்கு போலாம்பா” என்றான் அஸ்வின்..

 

பிள்ளைகளுடன் நின்று கொண்டிருந்த ஆசிரியரோ “சார்.. பூஜாவையும் அஸ்வினையும் நீங்க கூட்டிட்டு போக போறீங்களா? இல்ல உங்க ஒய்ஃப் கூட்டிட்டு போகப்போறாங்களா? சொல்லிட்டீங்கன்னா நான் உங்ககிட்ட பிள்ளைங்களை ஹேண்டோவர் பண்ணிட்டு போயிடுவேன்.. பசங்களை பொறுப்பா அவங்கவங்க பேரெண்ட்ஸ்கிட்ட ஒப்படைச்சிட்டு போகணும் சார்.. எங்க ஸ்கூலோட ரூல்ஸ் சார்..” என்று சொல்லி இவர்களின் பதிலுக்காக காத்திருந்தார்..

 

அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்ட தேஜு அருண் பக்கம் திரும்பி “அருண் குழந்தைகளை அவர் கூட்டிட்டு போகட்டும்.. தயவு செஞ்சு விட்டுடு” என்று சொன்னாள்..

 

“அது எப்படி அஷ்ஷூ டியர்? குழந்தைங்க இல்லாம நீ எப்படி இருப்ப? வா பிரின்ஸ்பல் கிட்ட போய் நம்ம குழந்தைகளை கூட்டிட்டு போறதுக்கு பர்மிஷன் வாங்கிட்டு வரலாம்.. வேணும்னா உன் டெம்ப்ரவரி புருஷனையும் வர சொல்லு.. அவங்க டிசைட் பண்ணட்டும் யார் கூட குழந்தைகளை அனுப்பனும்னு..” என்றான் அருண்..

 

“உனக்கு கொஞ்சம் கூட என் மேல இரக்கமே வராதா?” என்று கேட்ட தேஜு அவனை கெஞ்சும் பார்வை பார்க்க ,”ஓகே உனக்கு ஒன்னும் பிராப்ளம் இல்லைன்னா ராமே கூட்டிகிட்டு போகட்டும் நம்ம குழந்தைகளை..” என்றான் அருண்..

 

தேஜு அந்த ஆசிரியரை பார்த்து “மேடம் அவரே குழந்தைகளை கூட்டிட்டு போகட்டும் மேடம்.. குழந்தைங்களை நீங்க அவரோடயே அனுப்புங்க..” என்று சொல்லவும் “ஓகே.. எதுக்கும் நீங்க ரெண்டு பேரும் போய் பிரின்சிபல் மேடம் கிட்ட இதை இன்பார்ம் பண்ணிட்டு வந்துடறீங்களா?” என்று கேட்டாள் அந்த ஆசிரியை..

 

“ஓகே.. நோ ப்ராப்ளம்.. வா..அஷ்ஷூ.. போய் பிரின்சிபல் கிட்ட சொல்லிட்டு வரலாம்..” என்று அவள் தோள்களை அணைத்தாற்போல் பிடித்துக் கொண்டு அவளை அழைத்துக்கொண்டு முதல்வர் அறை நோக்கி போனான் அருண்.. இதை பார்த்துக் கொண்டிருந்த ராமுக்கோ ரத்தம் கொதித்தது.. விழியை உருட்டி அவர்களை பார்த்துக் கொண்டே அவர்களை பின் தொடர்ந்தான் ராம்..

 

முதல்வர் அறைக்கு சென்றவுடன் கதவை தட்ட அவர்கள் மூவரையும் உள்ளே அழைத்தார் அவர்..”தேஜஸ்வினி.. ராம்.. வாங்க.. மிஸ்டர் அருண் நீங்களும் வந்து இருக்கீங்களா? என்ன விஷயம்?” என்று அவர் கேட்கவும் தேஜஸ்வினி “குட் ஈவினிங் மேடம்.. ஆக்சுவலா பசங்களை யாரு கூட்டிட்டு போறதுங்கறது பத்தி உங்ககிட்ட இன்ஃபார்ம் பண்ணலாம்னு வந்தோம்” என்றாள்..

 

அதற்குள் அருண் “ஆமா மேடம்.. எங்க பசங்களை ஒரு ரெண்டு நாளைக்கு ராம் அவர் கூட கூட்டிக்கிட்டு போவார்.. ” என்று கூற ராம்க்கோ “எங்க பசங்களை” என்று அவன் சொன்னது பற்றி கொண்டு வந்தது..”யார் யாருக்குடா புள்ள?” என்று அருணை தீயாய் முறைத்துக் கொண்டு கேட்டான்..

 

தேஜஸ்வினியின் தோளை இறுக்க அணைத்தாற் போல் பற்றிய அருண் “அவங்க அஷ்ஷூவோட குழந்தைங்க.. இன்னும் கொஞ்ச நாள்ல நான் அஷ்வினியை கல்யாணம் பண்ணிக்க போறேன்.. அப்ப அவங்க எனக்கும் குழந்தைங்க தானே..” என்று சொல்ல அதை பார்த்த ராம் அவளை அவன் அணைத்தாற் போல் கை போட்டிருக்கும் காட்சியை காண முடியாமல் நேரே சென்று அருணின் சட்டையைப் பிடித்து உலுக்கி “அவ மேல இருந்து முதல்ல கையை எடுடா ராஸ்கல்..” என்று அவன் கண்ணை பார்த்து உறுமினான்..

 

அருணுக்கு கோபம் வந்தது..  “முதல்ல என் சட்டையிலிருந்து கையை எடுத்துட்டு பேசு” என்று ராமின் கண்களை பார்த்துக் கொண்டே சொல்லவும் அவன் மேலே கோபம் வந்தால் என்ன செய்வானோ என்ற அச்சத்தில் தேஜஸ்வினி ராமின் கையை அவன் சட்டையில் இருந்து உதறி “அவர் சொல்றது கரெக்ட் தான்..இன்னும் கொஞ்ச நாள்ல அவர் என்னை கல்யாணம் பண்ணிக்க போறாரு.. அப்படின்னா  எனக்கு பிறந்த குழந்தைங்க அவருக்கும் குழந்தை மாதிரி தான்.. அதனால அவர் அப்படி சொல்றதுல எந்த தப்பும் இல்ல.. தயவு செஞ்சு இனிமே என் முன்னாடி அவரை மரியாதை குறைவா நடத்தாதீங்க..” என்று ராமின் கண்ணை பார்த்து அவள் சொல்லவும் ராமுக்கோ அப்படியே இடியை இறக்கினாற்போல் இருந்தது அவன் தலையில்..

 

அவள் கண்களை ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தவன் தன் பார்வையின் ஊடுருவலை தாங்காமல் அவள் தலையை குனிந்து கொள்ளவும் அவள் நிலையை புரிந்து கொண்டான்.. எதற்காகவோ அருணிடம் பயந்து அவள் இப்படி நடந்து கொள்கிறாள் என்று அவனுக்கு புரிந்தது..

 

“தேஜூ.. நான் சொல்றதை கேளு.. எதுக்காகவும் பயப்படாத… நீ தைரியமா என்னோட வா.. நம்ம வீட்டுக்கு போலாம்.. இவன் என்னதான் செய்றான்னு பாத்துரலாம்..” என்று அவன் அருணை பார்த்து சொல்லவும் அருண் மறுபடியும் அவள் தோள்களை இறுக்க பிடித்தவன் ராமை பார்த்து “அவ என்னை உயிருக்கு உயிரா விரும்பறா.. அவ இனிமே என்னோட மட்டும்தான் இருப்பா..” என்று சொல்ல அவன் கைகளுக்குள் சிக்குண்டு அவள் நெளிவதை  கண்ட ராமுக்கோ ஏனோ சற்று பாரமாய் இருந்தது..

 

அவள் நடந்து கொள்வதை பார்த்தால் எதோ ஒரு காரணத்துக்காக அருணை பொறுத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவனுக்கு தெள்ளத்தெளிவாக தெரிந்தது..

 

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பள்ளி முதல்வர் “போதும் நிறுத்துங்க உங்க சண்டையை.. இது ஸ்கூல் ஆஃபீஸ் ரூம்னு நினைச்சீங்களா? வேற ஏதாவதுன்னு நினைச்சீங்களா..? மிஸ்டர் ராம் ..அவங்க தான் நீங்க குழந்தைகளை கூட்டிட்டு போறதுக்கு ஓகே சொல்லிட்டாங்க இல்ல..? அதோட நீங்க குழந்தைகளை கூட்டிட்டு கிளம்புங்க.. வேற எந்த பிரச்சினையும் இங்க பண்ண வேண்டாம்.. உங்க குடும்ப சண்டையை எல்லாம் வீட்டுக்கு போய் வச்சுக்கோங்க.. இது ஸ்கூல்.. அது ஞாபகம் இருக்கட்டும்..” என்றவர் “நீங்க கிளம்பலாம்.. ” என்று சொல்லி அவர் கையில் இருந்த கோப்பை பார்க்கத் தொடங்கினார்..

 

“சாரி மேடம்.. ” என்று ராம் சொல்ல “ஓகே மேடம் தேங்க்யூ..” என்று தேஜுவும் சொல்ல இருவரது கண்களும் ஒரு நொடி சந்தித்துக் கொண்டன.. தேஜூவின் கண்களில் இருந்த ஒரு கழிவிறக்கப் பார்வை ராமை என்னவோ செய்தது.. அவனை நோக்கி இது எல்லாவற்றையும் சிறிது நாட்களுக்கு பொறுத்துக் கொள்ளுமாறு கெஞ்சும் பார்வை பார்த்து பார்வையாலேயே பேசியவளை கண்ணை மூடி திறந்து ஆசுவாசப்படுத்தினான்..

 

இருவருக்கும் ஒரு தீண்டலோ வாய்ப்பேச்சோ தேவை இருக்கவில்லை ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் சொல்ல.. கண் பார்வை மட்டுமே போதுமானதாய் இருந்தது அவர்களுக்குள் பேசிக் கொள்ள..

 

அதன் பிறகு வெளியே வந்தவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டே அவரவர் வாகனங்களில் ஏறி வீடு நோக்கி புறப்பட்டனர்..

 

அப்போது அவர்கள் காரின் எதிரே ஒரு ஸ்கூட்டி வந்து நின்றது.. அதிலிருந்து ஒரு பெண் இறங்கி வந்தாள்.. நேரே அருணையும் தேஜுவையும் நோக்கி வந்தவளிடம் அருண் “ஹலோ.. எதுக்கு எங்க வண்டி முன்னாடி கொண்டு வந்து உங்க வண்டியை நிறுத்தி இருக்கீங்க? உங்களுக்கு என்ன ரோடு சென்ஸே கிடையாதா? இப்படி நடு ரோட்ல குறுக்கால வண்டியை நிறுத்துனீங்கன்னா நாங்க எப்படி போறது?” என்று கேட்டான்..

 

“சார்.. சாரி சார்.. என் பேரு வைஷு அலையஸ் வைஷ்ணவி.. நான் ஒரு ஜர்னலிஸ்ட்.. உங்களை பத்தி ஊர் முழுக்க பலவிதமா வேற வேற நியூஸ் வருது.. நீங்க செய்யறது எல்லாம் ஒரே மர்மமா இருக்கு.. அதனாலதான் உண்மையான கதை என்னன்னு உங்களையே நேரில் கேட்டுட்டு போலாம்னு நான் வந்தேன்.. என்ன என்னமோ சொல்றாங்க எல்லாரும்.. கல்யாணம் ஆன இவங்களை நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்கன்னு சொல்றாங்க.. நீங்க இவங்களை மிரட்டி உங்க கூட தங்க வச்சிருக்கீங்கன்னு சொல்றாங்க.. சில பேர் உங்க ரெண்டு பேருக்கும் கள்ளத்தொடர்பு…” என்று அவள் முடிப்பதற்கு முன் அருணின் கை அவள் கன்னத்தில் பதிந்து இருந்தது..

 

“நானும் நீ ஏதோ பொண்ணாச்சேன்னு வாயை மூடிட்டு இருந்தா உன் மனசுல தோணுனது எல்லாம் பேசுவியா? கள்ள தொடர்பு அது இதுன்னு..சே.. எவ்வளவு கேவலமான புத்தி… நீ எல்லாம் பத்திரிகை நடத்தி விளங்கிடும்.. என் அஸ்வினியை பத்தி இதுக்கு மேல ஒரு வார்த்தை தப்பா பேசின.. அதோட பல்லெல்லாம் கழண்டுடும்.. ஞாபகம் வச்சுக்கோ..” என்று அவன் சொல்லவும் “என்ன சார் நீங்க..? பேப்பர்ல எல்லாம் வந்த நியூஸ் பத்தி தான் நான் சொன்னேன்.. அதுக்குள்ள பட்டுன்னு அடிச்சிட்டீங்க.. இந்த நியூஸ் எல்லாம் நான் நம்பல.. அதனாலதான் உண்மையை தெரிஞ்சுக்கணும்னு உங்களை தேடி வந்து இருக்கேன்..” என்றாள் அவள்..

 

“ஹலோ.. உங்கிட்ட உண்மையை சொல்லணும்னோ இதை பத்தி டிஸ்கஸ் பண்ணனும்னோ எனக்கு ஒரு அவசியமும் இல்லை.. என் வாழ்க்கையில என்ன நடக்குதுன்னு எனக்கு தெரிஞ்சா போதும்.. வேற யார்கிட்டயும் சொல்ல நான் ரெடியா இல்லை.. நீ கிளம்பி போறியா உன் வேலையை பார்த்துக்கிட்டு..”  என்று சொன்னான் அருண்..

 

“நீங்க இப்படி பேசாம என்னை அவாய்ட் பண்ணறதை பாத்தா அந்த பத்திரிகைல எல்லாம் சொன்னது உண்மையா தான் இருக்குமோன்னு சந்தேகமா இருக்கு..” என்று அவள் சொல்லி முடிப்பதற்கு முன் அவள் கழுத்தை அவன் கைகள் நெறித்து இருந்தது..

 

“இப்பதான சொன்னேன்.. அஸ்வினி பத்தி ஒரு வார்த்தை தப்பா வரக்கூடாதுன்னு.. மறுபடியும் மறுபடியும் அதையே பேசுற.. நான் திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருக்கமாட்டேன்.. ” என்று சொல்லிக் கொண்டே கையை மேலும் இருக்க அவள் மூச்சு விட முடியாமல் தவிக்க ஆரம்பித்தாள்..

 

தேஜு ஏதோ விபரீதமாய் நடந்து விடப்போகிறது என்று அவசர அவசரமாய் அருண் கையை பிடித்து இழுத்து “அருண் அவங்களை விடுங்க.. அவங்களுக்கு ஏதாவது ஆயிரப்போகுது.. ஏன் இவ்வளவு முரட்டுத்தனமா நடந்துக்குறீங்க? ” என்று அவன் கையை விலக்க முயற்சி செய்தாள்.. ஆனால் அவன் பிடி உடும்புப்பிடியாய் இருந்தது..

 

“யாருடி நீ..? உனக்கு எதுக்கு நான் விளக்கம் கொடுக்கணும்? மரியாதையா இங்க இருந்து கிளம்பி போயிரு. இதுக்கு அப்புறம் உன்னை நான் என் கண்ணால பார்த்தேன் அப்பறம் நான் என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது..” என்று கூறியவன் அவளை பின்பக்கமாய் தள்ளி தன் கையை எடுக்கவும் அவன் கையை எடுத்த வேகத்தில் இரண்டு அடி பின்னால் நகர்ந்து நின்றாள் அவள்..

 

“அஷ்ஷூம்மா.. வண்டியில ஏறு.. நம்ம போலாம்..” என்று சொல்லி தேஜு காரில் ஏறியவுடன் தானும் காரை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்..

 

காருக்குள் இருந்து தேஜஸ்வினி அவளையே அந்த தெருமுனையில் திரும்பும் வரை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே போனாள்.. அவர்கள் போவதை பார்த்துக் கொண்டே இருந்த வைஷ்ணவியோ எப்படியாவது இவர்கள் உறவுக்குள் இருக்கும் மர்மம் என்ன என்று கண்டுபிடித்தே தீர வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டாள்..

 

“இந்த ஆளு சரியான முசுடு.. இவன் கிட்ட இருந்து எந்த விஷயத்தையும் வாங்க முடியாது.. ஆனா அந்த லேடி கிட்ட கொஞ்சம் நூல் விட்டா ஏதாவது விஷயம் கறக்க முடியும்னு நினைக்கிறேன்.. அதான் கரெக்ட்..” என்று கையை சுண்டி ஒற்றை விரலை நீட்டியவள் சாலை எங்கும் பார்வையை ஓட விட்டு யாரையோ தேடினாள்.. அவள் பக்கத்தில் நெடியவன் ஒருவன் வந்து நின்றான்..

 

 

தொடரும்..

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து

காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி “சுபா”

 

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 13

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!