பரீட்சை – 19
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
அழகன் உன்னில்
புதைந்திருக்கும்
மர்மம் தான்
என்ன..?
அறியாமல்
விட மாட்டாள்
இந்த அறிவாளி
பெண்..!!
உன் ரகசியம்
அறிந்து
ஊர் முழுக்க
சொல்வேன்..
இது
என்னுயிராய்
இருக்குமென்
பணியின் மேல்
உறுதி..!!
#############
மர்மம் என்ன..?!
சாலை எங்கும் பார்வையை ஓடவிட்டு யாரையோ தேடினாள் வைஷூ.. அவள் பக்கத்தில் நெடியவன் ஒருவன் வந்து நின்றான்..
“ஹே.. வைஷு.. அடி பலமோ?” என்று புன்னகைத்தபடி கேட்டுக்கொண்டே வந்தவனை இடுப்பில் கை வைத்து முறைத்து பார்த்தாள் வைஷூ..
“ஏண்டா வளர்ந்தவனே.. ஒரு நியூஸ் கலெக்ஷன்காக ஒருத்தி இங்க மாடு மாதிரி அடி வாங்கிட்டு இருக்கேன்.. மரத்து பின்னாடி ஒளிஞ்சிக்கிட்டு வேடிக்கை பாக்குற? வெக்கமா இல்ல உனக்கு? ஒரு பத்திரிகைக்காரிய அடிச்சிட்டு அவன் பாட்டுக்கு போறான்.. நீ என்னடான்னா அவன் அடிக்கும் போது வந்து எனக்கு சப்போர்ட் பண்ணாம நிதானமா வந்து அடி பலமான்னு விசாரிக்குற.. நீ எல்லாம் எனக்கு ஒரு ஃப்ரெண்ட்.. தூ.. ” துப்புவது போல் பாவனை செய்தாள்..
“ஹேய்.. வைஷூ.. நோ.. நோ.. துப்பி கிப்பி வெச்சு என் இமேஜை டேமேஜ் பண்ணிடாத.. எப்படியும் நீ அடி வாங்கிட்ட.. நான் வந்து உனக்கு சப்போர்ட் பண்ணி இருந்தா என் ரெண்டு கன்னமும் பழுத்து இருக்கும்.. இது தேவையா..? இந்த விஷ்வா அனாவசியமா யாருக்காகவும் அப்படி எல்லாம் ரிஸ்க் எடுக்க மாட்டான்..” என்றான் விஷ்வா என்ற அந்த நெடியவன்..
“டேய் நம்ம எல்லாம் நியூஸ் ரிப்போர்ட்டர்ஸ்டா.. ரிஸ்க் எடுக்கிறதெல்லாம் நமக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி இருக்கணும்.. நீ ஒரு வெத்துவேட்டு.. உன்கிட்ட போய் சொல்றேன் பாரு… சரி அதை விடு.. டேய்.. எருமை மாடு.. அந்த காரு போயிடுச்சு.. ஆனா என்னவோ விஷயம் இருக்குடா.. அந்த ஆளு எதையோ மறைக்கிறான்.. அவன் என்னதான் என்னை அடிச்சாலும் ஆளு பயங்கர ஸ்மார்ட் என்ட் ஹேன்ட்ஸமா இருக்கான்.. இன்னொரு வாட்டி அவனை மீட் பண்ணனும்னு தோணுது.. எப்படியாவது அவனை பத்தி விஷயத்தை தெரிஞ்சுக்கணும்.. எனக்கு என்னவோ அந்த லேடி என்னை குறுகுறுன்னு பார்த்துட்டே போன மாதிரி இருக்கு.. ட்ரை பண்ணா அவங்க கிட்ட இருந்து ஏதாவது உண்மையை வாங்கலாம்னு நினைக்கிறேன்.. ஆமா.. அவங்க அட்ரஸ் எங்கன்னு உன்னை தேடி வைக்க சொன்னேனே.. வெச்சியா..? என்று கேட்டாள் வைஷு..
“ஏ.. வைஷூ மாதா..இப்ப கேட்டியே இது நியாயமான கேள்வி.. என்கிட்ட ஒரு வேலையை கொடுத்து அதை செய்யாம இருப்பேனா? தீயா வேலை செய்வான் இந்த விஷ்வா.. அதெல்லாம் ஐயா ரெண்டு நாள் முன்னாடியே கண்டுபிடிச்சிட்டேன்” என்று அவன் காலரை தூக்கி விட்டுக் கொண்டு சொல்லவும் “ஐயோ என் ராசா.. என்ன சுறுசுறுப்பு.. டேய் எருமை.. வண்டி எடு.. ஓவரா சீன் போடாத” என்று சொல்ல “ரொம்ப பாராட்டாத வைஷூ.. எனக்கு வெக்க வெக்கமா வருது..” என்றவன் “ஃபாலோமி பேக்.. நான் அவங்க வீட்டுக்கு உன்னை இப்பவே கூட்டிட்டு போறேன்.. ” என்று சொல்லி தன் வண்டியை எடுத்துக் கொண்டு முன்னே சென்றான்..
தலையில் அடித்துக் கொண்டு அவன் வண்டியை பின் தொடர்ந்தாள் வைஷ்ணவி..
################
ராம் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு தன் வீட்டிற்கு வந்தான்.. வீட்டிற்குள் நுழையும்போதே வாசலில் அழகப்பன் அவருடைய மனைவி அகிலாவோடு நின்று கொண்டிருந்தார்..
“வாங்க மாமா.. எப்ப வந்தீங்க? என்ன வீட்டு வாசலிலேயே நிற்கிறீங்க? உள்ள வாங்க.. ஏன் நீங்க வந்தது அம்மாக்கு தெரியாதா? பெல் அடிச்சு உள்ள போக வேண்டியது தானே..” என்று கேட்டுக் கொண்டே அழைப்பு மணியை அழுத்த போனான்..
“இல்ல மாப்ள.. உங்க அம்மா தேஜு மேலயும் எங்க மேலயும் ரொம்ப கோவமா இருக்காங்க.. நான் வேற நீங்க ஜெயிலுக்கு போனப்போ உங்களை பத்தி தப்பா பேசிட்டேன்.. என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை.. உங்களை பத்தி முழுசா புரிஞ்சுக்காம அந்த பேப்பர்ல வந்த நியூஸை பார்த்து அவசரப்பட்டு உங்களை தப்பா நினைச்சுட்டேன்.. நீங்க எப்பேர்பட்ட தங்கம்னு இப்ப நல்லா புரிஞ்சுடுச்சு மாப்பிள்ளை..” என்றார் அவர்..
“ஐயோ மாமா.. உங்க நிலைமையில யார் இருந்தாலும் அப்படித்தான் நினைச்சிருப்பாங்க.. நீங்க முதல்ல உள்ள வாங்க..” என்று சொல்லி அழைப்பு மணியை அழுத்த பார்வதி அம்மாள் வந்து கதவை திறந்தார்..
பூஜாவும் அஸ்வினும் கத்திக்கொண்டு உள்ளே ஓட ராமையும் அழகப்பனையும் அகிலாவையும் பார்த்த பார்வதி அம்மாள் திடுக்கிட்டு போனார்..
“மறுபடியும் நீங்க எதுக்கு இந்த வீட்டுக்கு வந்தீங்க? உங்களுக்கு இந்த வீட்ல என்ன வேலை?” என்று கேட்கவும் “அம்மா.. முதல்ல அவர் உள்ள வரட்டும்.. உள்ள போய் பேசிக்கலாம்..” என்று சொன்னான் ராம் கோவமாக பார்வதி அம்மாளை முறைத்துக்கொண்டு..
அழகப்பனை முறைத்து விட்டு அப்படியே திரும்பி பார்வதி அம்மாள் உள்ளே செல்ல அழகப்பனோ சங்கடத்துடனே ராமை பார்த்தார்..
“மாமா.. அம்மா சொல்றதெல்லாம் மனசுல வச்சுக்காதீங்க.. நீங்க உள்ள வாங்க.. நம்ம உள்ள போய் பேசலாம்..” என்று சொன்னவன் அவர் கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு உள்ளே போனான்..
“மாப்ளை எனக்கு உள்ள வர்றத்துக்கு தகுதி இருக்கான்னு கூட எனக்கு தெரியல.. உங்ககிட்ட மறைக்க கூடாத ஒரு விஷயத்தை மறைச்சு என் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சிருக்கேன்.. இப்போ உங்க குடும்பத்தோட சேர்ந்து என் பொண்ணும் அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கான்னா அதுக்கு காரணம் நான் செஞ்ச அந்த பெரிய தப்பு தான்.. நான் நினைக்கிற மாதிரி மட்டும் நடந்திருந்தா தேஜூ இப்ப எப்பேர்பட்ட தர்ம சங்கடத்தில இருப்பான்னு என்னால நினைச்சு கூட பாக்க முடியல.. இருதலை கொள்ளி எரும்பா தவிச்சிட்டு இருப்பா மாப்பிள்ளை என் பொண்ணு..” என்று அவர் சொல்லவும் அவர் சொல்வது ஒன்றுமே புரியாமல் விழித்துக் கொண்டிருந்தான் ராம்..
“என்கிட்ட எதையோ மறைச்சீங்களா? என்ன மாமா சொல்றீங்க?” என்றான் ராம்..
அவர் தலையை குனிந்து கொண்டு கைகளை பிசைந்து கொண்டிருக்க அவர் கண்களில் இருந்து சிந்திய ஒரு துளி கண்ணீர் அவர் கை மேல் விழுந்ததை கவனித்து பதறிப் போனான் ராம்..
##############
வைஷ்ணவியும் விஷ்வாவும் அருண் வீட்டிற்கு முன் வந்து நின்றனர்.. “டேய் எவ்வளவு பெரிய வீடு டா? வாசல்ல செக்யூரிட்டி வேற இருக்கான்.. எப்படிடா உள்ள போறது?” என்று கேட்டாள் வைஷ்ணவி..
“சத்தியமா நேர் வழியில போக முடியாது.. குறுக்கு வழியா தான் போகணும்.. நேர் வழியா போனா இயேசுநாதர் மாதிரி நீ இன்னொரு கன்னத்தை அடி வாங்க காட்டிகிட்டு தான் நிக்கணும் அந்த அருண் கிட்ட… எப்படியும் ரெண்டு அறை கொடுத்துட்டுதான் பேசவே ஆரம்பிப்பாரு.. ஒரு பக்க வசனம் பேசுவார்.. ரெண்டு பேருக்கும் காதுல நிச்சயமா ரத்தம் வரும்.. என்ன ஒரே டிஃபரென்ஸ் அப்ப நீ மட்டும் அடி வாங்கின.. இப்போ உன்னோட சேர்ந்து உள்ள போனா நானும் அடி வாங்கணும்.. வேணாண்டி வைஷு.. சொன்னா கேளு.. நம்ம இப்படியே திரும்பி போயிடலாம்.. வா.. வேற ஏதாவது சின்ன நியூஸா பார்த்து நம்ம பேப்பர்ல போட்டுக்கலாம்.. இவ்வளவு ரிஸ்க் வேண்டாம்..” என்றான் விஷ்வா இரண்டு கன்னத்தையும் கைகளால் பிடித்துக் கொண்டே..
“ஏன்டா.. இவ்வளவு பெருசா நெடுநடுன்னு வளர்ந்து இருக்க.. இப்படி பயப்படுற.. அந்த ஆளுக்கு நான் பயந்தா கூட ஒரு கோ-ரிப்போர்ட்டரா எனக்கு தைரியம் சொல்லாம இப்படி நடுங்கி சாகுற..? உன்னை மாதிரி ஒரு தொடநடுங்கியை கூட வச்சுகிட்டு எப்படித்தான் நான் பெரிய ஜர்னலிஸ்டா ஆகப்போறேனோ தெரியல..” என்று பெருமூச்சு விட்டபடி சொன்னாள் வைஷூ..
“ஏய்.. நான் பார்க்க தாண்டி இப்படி நெடுநெடுன்னு வளர்ந்து இருக்கேன்.. ஆனா உள்ளுக்குள்ள அந்த ஆளு உன்னோட பேசறதை பார்க்கும்போதே ஒரு பூகம்பமே வந்துருச்சு.. நான்லாம் அவரோட ஒரு அடிக்கு கூட தாங்க மாட்டேன்டி.. பில்டிங் ஸ்ட்ராங்க்குதான்.. ஆனா பேஸ்மெண்ட் ரொம்ப வீக்குடி.. அதனால இந்த மாதிரி ஆபத்தான விளையாட்டெல்லாம் வேணாம்.. ரெண்டு பேரும் அடி வாங்கி சாக வேணாம் அவன்கிட்ட.. இப்படியே போயிடலாம்.. சொன்னா கேளு..” என்றான் விஷ்வா கெஞ்சும் குரலில்..
“உனக்கு வேணும்னா நீ போய்க்கோ.. நான் இந்த கேஸை இன்வெஸ்டிகேட் பண்ணாம விட மாட்டேன்..” என்று இடுப்பில் கை வைத்து கண்ணை சுருக்கி அவள் சொல்லவும் “பெரிய ரிவால்வர் ரீட்டா.. இன்வெஸ்ட்டிகேட் பண்ணாம விட மாட்டாளாம்.. இந்த அருண் கேஸ் இல்லன்னா வேற ஏதாவது ஒரு முத்துப்பாண்டி கேஸ் கிடைக்கும்.. ஆனா அடுத்த கேஸ் பாக்குறதுக்கு நம்ம உயிரோட இருக்கணும்.. சொன்னா கேளு.. வா இப்படியே போயிடலாம்..” என்றான் அவன் பயத்துடனே..
“நான் தான் சொல்றேன் இல்ல..? நான் வரமாட்டேன்.. முன் வழியா போக முடியாது.. வீட்டுக்குள்ள போறதுக்கு வேற ஏதாவது வழி இருக்கான்னு தான் பார்க்கிறேன்.. டேய் வாடா.. அந்த பக்கம் போய் பார்க்கலாம்..” என்று விஷ்வாவையும் இழுத்துக்கொண்டு அந்த வீட்டின் பின்பக்கமாக மதில் சுவரை ஒட்டி நடந்து சென்றாள்..
“அடிப்பாவி நீ கேஸ் இன்வெஸ்ட்டிகேட் பண்றன்னு போலீஸ் நம்பள ஒரு கேஸ்ல தேடுற மாதிரி ஏதாவது பண்ணிடாதடி.
சொன்னா கேளு.. அய்யய்யோ உன் முழியே சரியில்லையே.. என்னடி பண்ண போற..? இன்னைக்கு ஒரு பலி நிச்சயம்னு நினைக்கிறேன்.. அநேகமா அது நானா தான் இருக்கும்..” என்று சொன்னான் நடுங்கும் குரலுடன்..
“அதாண்டா கரெக்ட்.. பேசாம இந்த சுவரு ஏறி குதிச்சு உள்ள போயிடலாம்..” என்று சாதாரணமாக சொன்னவளை அப்படியே விழி விரித்து பார்த்து, “எதூஊஊ… சுவரு ஏறி குதிக்கப்போறியா? அடிப்பாவி மவளே.. நான் வரலடி இந்த விளையாட்டுக்கு..” என்று அப்படியே திரும்பி ஓட தொடங்கியவனை சட்டை காலரை பின்னால் பிடித்து இழுத்தவள் “என்னால தனியா இந்த சுவரேறி குதிக்க முடியாது.. நீதான் எனக்கு ஹெல்ப் பண்ணனும்..” என்றாள்..
“சட்டையை விடுடி.. நீ பண்ற இந்த அதிரி புதிரி வேலைக்கு நான் ஹெல்ப் பண்ணணுமா? முடியாது.. போ..” என்றான் அவன்..
“என்ன.. நீ ஹெல்ப் பண்ணலனா நான் இப்படியே பெருசா கத்தி கூப்பாடு போட்டு உன்னை இந்த வீட்டுக்கு திருட வந்தேன்னு மாட்டி விட்டுடுவேன்..” என்றாள் வைஷூ..
“அடி சதிகாரி.. நீ செஞ்சாலும் செய்வே.. என்ன செய்யணும் சொல்லு..” என்றான் விஷ்வா..
“அப்படியே குனிஞ்சு நில்லு.. நான் உன் மேல ஏறி செவுத்தை தாண்டி அந்த பக்கம் குதிக்கிறேன்..” என்றாள் அவள்
“என்னது.. நீ என் மேல ஏறி அந்த பக்கம் குதிக்கிறியா? என் முதுகெலும்பை உடைக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டியா? நான் நடமாடிட்டு இருக்கறது கூட உனக்கு பிடிக்கலையா? எங்க அம்மாக்கு நான் ஒத்த செல்ல புள்ளடி..” என்று அவன் புலம்பவும் “என்னடா இவ்ளோ பெரிசா தடிமாடு மாதிரி வளர்ந்திருக்க? என்ன மாதிரி ஒரு சின்ன பொண்ணு வெயிட் கூட தாங்க முடியாதா உன்னால?” என்றாள் அவள்..
“என்னது சின்ன பொண்ணா? நான் ஒத்துக்குறேன்டி நீ கொஞ்சம் ஒல்லியா தான் இருக்கே.. ஆனா நான் உன்னை விட ஒல்லியா இருக்கேனேடி.. நீ ஏறி என் மேல நின்னா என் எலும்பு உடைஞ்சிடாதா?”
பாவமாக கேட்டவனை சமாதானப்படுத்தும் விதமாக “அதெல்லாம் ஒன்னும் உடையாது.. நான் கேரண்டி.. சரி படபடன்னு குனி.. நான் ஏறி போயிட்டே இருக்கேன்..” என்று அவள் சொல்லவும் “ஏறி மிதிச்சி என்னை சாவடிச்சிட்டு போக போறே.. அதானே..?” என்று சுவற்றை ஒட்டினாற்போல் கீழே குனிந்து கொண்டானவன்..
ஒரு பெரிய கல்லை கொண்டு வந்து அவன் பக்கத்தில் வைத்தவள் அதன் மேல் ஒரு காலை வைத்து இன்னொரு காலை தூக்கி அவன் முதுகில் வைத்து எம்பி ஏற “அடி சண்டாளி.. முதுகை உடைச்சிட்டியேடி” என்று கத்தினான்..
அவன் முதுகில் நின்று கொண்டு உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.. “டேய்.. உள்ள ஜம்ப் பண்ணா சத்தம் கேட்கும் போல இருக்கேடா..” என்று திரும்பி கீழே பார்த்துக்கொண்டு சொன்னவளிடம் “குதிடி.. உன்னால நான் கூனி கிழவி மாதிரி ஆயிடுவேன் போல இருக்கு.. ஏற்கனவே முதுகில உன் வெயிட் தாங்காம ரெண்டு எலும்பு உடைஞ்சிருச்சு போல இருக்குடி..” என்று புலம்பினான் அவன்..
“சரிடா என் இஷ்ட தெய்வம் ஆஞ்சநேயரை நினைச்சுகிட்டு குதிக்கறேன்..” என்று சொன்னவள் “ஜெய்…பஜ்ரங்பலீ…ய்..” என்று சொன்னபடி அந்த சுவற்றின் மேல் ஏறி உள்ளே குதித்தாள்..
அவள் குதித்ததும் “சரிடி குதிச்சிட்டியா? அம்…மா.. முதுகு உடைஞ்சிடுச்சு.. அப்ப நான் வரேன்..” என்று எழும்பியவனை “டேய்..கைப்புள்ள… அப்படியே ஏறி ஜம்ப் பண்ணுடா உள்ள..” என்றாள் அவள்..
“என்னது ஜம்ப் பண்ணவா? நான் வரல.. என்னால எல்லாம் உள்ள வந்து அடி வாங்க முடியாது.. நான் இப்படியே கிளம்புறேன்.. ” என்றான் அவன்..
“வெளியில சொன்னதை தான் இப்பவும் பண்ணுவேன்.. நீ இப்போ உள்ள வரல.. இந்த வீட்ல திருட சொல்லி என்னை இவன்தான் உள்ள அனுப்பிச்சானு சொல்லி உன்னையும் சேர்த்து மாட்டி விட்டுடுவேன்..” என்று அவள் சொல்ல “அடி.. கிராதகி… உனக்கு நான் என்னடி பாவம் செஞ்சேன்..? உன் கொடுமைக்கு ஒரு அளவே இல்லாம போச்சு..” என்றவன் “நீ என் முதுகுல ஏறி குதிச்சிட்ட.. நான் எப்படி ஏறுறது?” என்று கேட்டான் அவன்..
“கொஞ்சம் இரு..” என்று சொன்னவள் அந்த தோட்டத்தில் சுற்றி பார்க்க அங்கே ஓரமாக ஒரு ஏணி சார்த்தி வைக்கப்பட்டிருந்தது.. அதை கொண்டு வந்து மேல் வழியாக அவனிடம் கொடுக்க அவன் ஏணி மேல் ஏறி மறுபடியும் அதை எடுத்து உள் பக்கமாக போட்டு அதிலேயே இறங்கி வந்தான்..
இருவரும் மெதுவாக அடிமேல் அடி வைத்து வீட்டின் பின் பக்க கதவை அடைந்தனர்.. “பூட்டி இருக்கு” என்றாள் அவள்..
“பின்ன.. விருந்தாளியா நீ வருவன்னு தொறந்து வெச்சிருப்பாங்களா?” என்று கேட்டான் விஷ்வா.. “டேய்..” என்று அவனை முறைத்தவள் ” இப்ப எப்படி உள்ள போறது?” என்று கன்னத்தில் இடக்கை விரலை வைத்து தீவிரமாக யோசித்தாள்..
அதற்குள் யாரோ அந்த பின்பக்க கதவை திறக்கும் சத்தம் கேட்கவே சட்டென இருவரும் ஓடிச்சென்று சுவற்றுக்கு பின்னால் மறைந்து கொண்டனர்..
தொடரும்..
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்
க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து
காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி “சுபா”