அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 2

5
(17)

 

பரீட்சை – 2
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

சொப்பனத்தில்
அவன்
அவளை
தனியே..

சதிராடவிட்டு
பிரிந்து
செல்வது
போல்..

கண்டிருந்த
கனவு
நிஜமாகுமோ
என்று..

கலக்கம்
கொண்டது
காரிகையின்
மனம்…

உடலால்
பிரிந்தாலும்
உயிரால்
எப்போதும்…

ஒருவருக்குள்
ஒருவர்
உறைந்தே
இருப்பரென..

அறிந்திருந்தும்
அச்சம்
கொண்டது
அணங்கவள் உள்ளம்…!!

###############

கனவு நிஜமாகுமோ!!!?

“நம்ம வாழ்க்கை என்னைக்குமே இப்படியே இருக்குமா ராம்? நான் இந்த சந்தோஷமான கூட்டிலேயே என் வாழ்நாளோட கடைசி வரைக்கும் கவலங்கறது என்னன்னே தெரியாம வாழ்ந்திருவேனா?”

உருக்கமாக கேட்ட தேஜூவை இவள் திடீரென்று ஏன் இப்படி கேட்கிறாள் என்று அவளுக்காக கவலை கொண்டு பார்த்தான் ராம்..

“எதுக்கு தேஜூ இப்படி திடீர்னு கேக்குற?”

இரண்டு நாட்களாக தானும் ராமும் பிரிந்து விடுவதைப் போல அவளுக்கு மறுபடி மறுபடி கனவு வந்து கொண்டு இருக்க அது கொடுத்த சிறு பயத்தினாலேயே அவள் இந்த கேள்வியை கேட்டாள்…

ஆனால் இப்போது நிஜமான காரணத்தை சொன்னால் அவனும் கவலைப்படுவான் என்று எண்ணியவள் “ஒன்னும் இல்லை.. சும்மாதான் கேட்டேன்” என்றாள் தன் விழிகளை தாழ்த்தி..

“சரி.. நீ சொல்ல வேண்டாம்.. ஆனா நீ ஒன்னும் இல்லைன்னு சொல்றதை நான் நம்புவேன்னு நினைக்கிறயா? உன்னை பத்தி எனக்கு நல்லா தெரியும்.. எதுக்காகவோ என்கிட்ட சொல்ல வேண்டாம்னு நினைக்கிறே.. ஓகே.. நோ ப்ராப்ளம்” என்றான் ராம் தெளிவாக..

தன்னை அவன் அணு அணுவாக அறிந்து வைத்து இருக்கிறான் என்று அவளுக்கும் தெரியும்.. அவள் மனதில் ஓடும் எந்த விஷயத்தையும் அவனிடமிருந்து அவளால் மறைக்க முடியாது..

அவளுக்குள் ஏதோ கவலை பூத்திருக்கிறது என்று அறிந்தவன் அதை முதலில் போக்க வேண்டும் என்று எண்ணி “தேஜுமா.. உன் கன்னத்துல ஏதோ ஒட்டிட்டு இருக்கு.. இரு.. இரு.. நான் அதை எடுக்கிறேன்” என்று அவள் கன்னத்து அருகே தன் முகத்தை எடுத்துக் கொண்டு போய் சட்டென ஒரு முத்தம் இட்டான்..

“ஆரம்பிச்சிட்டீங்களா?” என்றவளிடம் “பின்ன.. நீ எனக்கு புடிச்ச மாதிரி புடவை கட்டி என்னை அப்படியே மயக்கற ‌உன் அழகால.. அம்மா அப்பா வேற வீட்ல இல்ல.. என் கை சும்மாவே இருக்க மாட்டேங்குதே.. ”

அவள் இடையில் கைவிரல்களை மேய விட்ட படி அவன் சொல்ல அவள் அவனை முறைக்கவும் “தேஜூமா.. பேசாம நீயும் இன்னிக்கு ஸ்கூலுக்கு லீவு போட்டுடு.. நானும் பேங்குக்கு லீவு போட்டுடறேன்.. நம்ப ரெண்டு பேரும் அப்படியே ஜாலியா வீட்டிலேயே இருக்கலாமா?” அவள் நெற்றியோடு நெற்றி முட்டி அணைப்பை இறுக்கி கேட்டான் ..

அவள் அருகே இருந்த பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்தாள்.. அவன் ஒரு வங்கியில் மேலாளராக இருந்தான்..

“என் ஸ்கூல்ல இன்னைக்கு பசங்களுக்கு எக்ஸாம்.. நான் கட்டாயம் போயாகணும்.. லீவ் எல்லாம் போட முடியாது..” என்று சொன்னவள் “அய்யய்யோ.. நேத்து வரும்போது வண்டியில பெட்ரோல் போடணும்னு நெனச்சேன்.. மறந்தே போயிட்டேன்.. வண்டி ஸ்கூல் வரைக்கும் ஓடுமா தெரியலையே.. வரவர எனக்கு ஏன் இவ்வளவு மறதி ஆயிடுச்சுன்னு தெரியல.. நான் ரொம்ப கேர்லெஸ் ஆயிட்டு இருக்கேன்.. வெரி பேட்..” என்று தன்னை தானே திட்டிக் கொண்டாள்…

“அதனால என்ன தேஜூமா.. நான் தான் இருக்கேன் இல்ல.. என் கார்லயே உன்னை கூட்டிட்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு போறேன்.. அதுக்கு எதுக்கு இப்படி திட்டிட்டு இருக்க உன்னையே.. என் தேஜூவை  நீ அப்படி எல்லாம் திட்டக்கூடாது.. என் மனசு தாங்காது.. அவ‌ என் கண்ணம்மா.. செல்லக்குட்டி”

தன்னோடு அவளை இன்னும் அழுத்தமாக இறுக்கி கொண்டவனை அன்போடு பார்த்தவள்.. “எந்த நேரமும் என்னை கொஞ்சி கொஞ்சி இப்படி கெடுத்து வச்சிருக்கீங்க.. இப்ப எல்லாம் வெளியில.. ஸ்கூல்ல யாராவது திட்டினா கூட எனக்கு சட்டுனு ரொம்ப கோவம் வருது… தாங்கவே முடியல.. பெட்ரோல் போட மறந்துட்டேன்னு சொல்லிட்டு இருக்கேன்.. ஏன்டி இவ்வளவு மறதி கேஸா இருக்கேன்னு ஒரு முறையாவது என்னை நல்லா திட்டுங்களேன்.. என் மேல கோபப்படுங்களேன்..” என்று கேட்டாள் அவள்..

“உன்னை நான் எதுக்கு திட்டணும்? அதுவும் இப்படி எனக்கு பிடிச்ச பிங்க் கலர் சாரி கட்டிக்கிட்டு தேவதை மாதிரி என் முன்னாடி நின்னுகிட்டு திட்ட சொல்றியே.. அது என்னால முடியாது.. வேணும்னா..” என்று சொல்லி அவள் முகத்தருகே தன் முகத்தை கொண்டு போக “போதும் போதும்.. நீங்க எதுக்கு அடி போடறீங்கன்னு தெரியுது… அத்தை மாமா வேற இல்ல.. இப்படியே போயிட்டு இருந்ததுன்னா நான் ஸ்கூலுக்கு போன மாதிரி தான்.. நீங்களும் பேங்குக்கு போன மாதிரி தான்… வாங்க.. முதல்ல உட்கார்ந்து சாப்பிட்டு கிளம்பலாம்..” என்று சொல்லி அவனை இருக்கையில் அமர வைத்தாள்..

அவள் பக்கத்து இருக்கையில் அமர போக அவளை இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டவன்… தன் தட்டில் இருந்து தோசையை விண்டு எடுத்து தேஜுவுக்கு ஊட்ட அவள் வாய் அருகே கொண்டு சென்றவனை பார்த்து சிரித்து அதை தன் வாயில் வாங்கிக் கொண்டாள் தேஜஸ்வினி.. அவளின் கண்களோ கலங்கி இருந்தன..

“ஏ தேஜும்மா.. எதுக்கு இப்ப கண்கலங்கற?” என்று அவன் கேட்கவும் “ஒன்னும் இல்ல..” என்று தலையை குனிந்து கொண்டு சொன்னாள்..

“என்னடா விஷயம்?” என்று அவள் முகத்தை நிமிர்த்தி பார்த்தவனோ அவள் கண்களில் கண்ணீரை கண்டவுடன் துடித்து போனான்..

“எதுக்கு அழற தேஜூம்மா?”

அவன் அவள் கண்ணீரை துடைத்து விட்டு “என்னடா?” என்று ஆதுரமாக அவள் தலையை கோதிவிட்டு கேட்கவும்.. “சத்தியமா சொல்றேன்.. என்னை மாதிரி கொடுத்து வச்சவ இந்த உலகத்துல யாருமே இருக்க மாட்டாங்க.. இந்த மாதிரி அன்பு யாருக்குமே கிடைச்சிருக்காது.. நான் எவ்வளவோ தவம் செஞ்சி இருக்கேன் போல இருக்கு.. அதனாலதான் எனக்கு நீங்க கிடைச்சு இருக்கீங்க.. இந்த அளவுக்கு அதிகமா சந்தோஷம் அனுபவிக்கும் போது நமக்குள்ள எந்த பிரிவும் வந்துடக்கூடாதுன்னு கொஞ்சம் பயமா இருக்கு.. அப்படி ஒரு நாள் என் வாழ்க்கையில இருக்குனா அதை பத்தி நினைச்சாலே எனக்கு உயிரே நடுங்குது”

அவளை தன் மார்போடு சேர்த்து இறுக்க அணைத்து அவள் கழுத்தில் இதழ்களை பதித்து எடுத்த ராம் “நம்ம ரெண்டு பேர் வாழ்க்கையில பிரிவுன்னு ஒரு வார்த்தைக்கு இடமே கிடையாது டா.. அப்படியே யாராவது பிரிச்சாலும் நம்ம உடம்பை தனித்தனியா பிரிக்க முடியுமே தவிர நம்ம மனசை யாராலயும் பிரிக்க முடியாது.. ஏன்னா உன் மனசுக்குள்ள நான் இருக்கேன்.. என் மனசுக்குள்ள நீ இருக்க.. இன்னும் ஏழேழு ஜென்மத்துக்கும் நீ தான் என்னோட பொண்டாட்டி.. சாவு கூட நம்ம உடம்பைதான் பிரிக்க முடியுமே தவிர உயிரை பிடிக்க முடியாது தேஜூம்மா..” என்று சொன்னவனை அவளும் இறுக்கிக் கொண்டாள்..

“ராம் ஒரு பேச்சுக்கு கேக்கிறேன்… ஒருவேளை எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா.. நான் ஒருவேள செத்…” என்று ஆரம்பித்தவளை முடிக்கவிடாமல் அவள் இதழை தன் இதழால் மூடினான்..

“என்னை திட்டு திட்டுன்னு கேட்டுட்டு இருந்த.. என்ன..? என்னை திட்ட வெக்க ட்ரை பண்றியா தேஜூ..? உனக்கு எதுவும் ஆகாது.. அப்படியே ஆச்சுன்னாலும் நான் செத்துப் போயிடுவேன்னு டயலாக் எல்லாம் பேச மாட்டேன்.. செத்துப் போக மாட்டேன்… உன்னோட உருவமா இருக்குற நம்ம பொண்ணையும் பையனையும் வளர்த்து ஆளாக்குவேன்.. என் கடைசி மூச்சு இருக்கிற வரைக்கும் என் உயிரில உன்னை சுமந்துக்கிட்டே தான் இருப்பேன் தேஜூம்மா..” என்றான் அவன்..

“இந்த உங்க அன்புக்காகவே எனக்கு ஒன்னும் ஆகாது.. நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இந்த ஜென்மம் இல்லை எந்த ஜென்மத்திலும் பிரிவே கிடையாது.. எனக்கு அது தெரியும்.. ஆனா..” என்று இழுத்தவள் அவனை இன்னும் இறுக்க அணைத்துக் கொண்டாள்..

“என்னடா தேஜு? என்ன ஆச்சு? திடீர்னு இன்னைக்கு நம்ம பிரியறதை பத்தி இவ்வளவு பேசுற? என்ன விஷயம்? சொல்லு..” என்றான் ராம் அவள் முகத்தை ஏந்தியபடி..

“அது.. ராம்.. ரெண்டு மூணு நாளா ஏதோ நம்ம பிரியற மாதிரியே எனக்கு கனவு வந்துட்டு இருக்கு.. அந்தக் கனவு முடிஞ்ச உடனே நான் பதறிப் போய் எழுந்துக்கும் போது என் உயிரே என்கிட்ட இருக்க மாட்டேங்குது.. அதான்.. நான் அப்படி கேட்டேன்..”

கண்களில் மிரட்சியுடன் அவள் கூற அவள் கன்னத்தில் விழுந்திருந்த முடியை எடுத்து காதின் பின் சேர்த்தவன்.. “நம்ம ரெண்டு பேரும் பிரியணும்னா நமக்குள்ள ஏதாவது சண்டை வரணும்.. அப்படி ஏதாவது நமக்குள்ள வரும்னு நினைக்கிறியா? எனக்கு நம்மளோட அண்டர்ஸ்டாண்டிங் மேல ரொம்ப கான்ஃபிடன்ஸ் இருக்கு.. நம்ம ரெண்டு பேருக்கும் ரெண்டு பேரை பத்தியும் நல்லா தெரியும்.. நிச்சயமா நம்மளை யாராலும் பிரிக்க முடியாதுன்னு நான் நினைக்கிறேன்.. நீ ஏதாவது படம் பார்த்து இருப்பே.. இல்லைனா உன் ஃபிரண்டு யாருக்காவது ஏதாவது இந்த மாதிரி நடந்து இருக்கும்.. அதைக் கேட்டு உனக்கும் பயம் வந்திருக்கும்.. வேற ஒன்னும் இல்ல.. அதனால தேவையில்லாம மனசை போட்டு குழப்பிக்காத… நம்ம ரெண்டு பேரும் இப்ப எப்படி இருக்குமோ இப்படியே தான் கடைசி வரைக்கும் இருப்போம்.. இதுல எனக்கு எந்த டவுட்டும் இல்லை” என்று அவளுக்கு புரிய வைத்தவன் மென்மையாய் அவள் இதழில் பட்டும் படாமல் ஆறுதலாய் இதழ் பதித்தான்..

அவளுக்கு புரிய வைத்து விட்டானே தவிர அவள் கண்ட கனவு பற்றி சொன்ன விஷயம் அவனுக்கு மனதில் லேசாக கவலையை கொடுக்க ஆரம்பித்தது.. தாங்கள் இருவரும் நிச்சயமாக சண்டை போட்டு பிரிய மாட்டோம் என்று அவனுக்கு தெரியும்‌. ஆனால் வேறு விதமாக தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டால் என்ன செய்வது என்று ஒரு சிறிய கவலை அவனுக்குள் தோன்றியது..

அவளுக்கு எதுவும் ஆபத்து வந்து விடக்கூடாது என்று மனமார கடவுளிடம் வேண்டினான்..

ஆனால் அதை அவளிடம் காண்பித்துக் கொண்டால் அவள் இன்னும் கவலைப்படுவாள் என்று எண்ணியவன் அவளிடம் அதை காண்பித்துக் கொள்ளாமல் “இப்போ உன் டவுட் எல்லாம் தீர்ந்து போச்சா..? எதை பத்தியும் கவலைப்படாம எனக்கு ஒரு வாய் தோசை ஊட்டுறியா? கொஞ்சம் பசிக்கிற மாதிரி இருக்கு..” அவன் சொல்லவும் வாய்விட்டு சிரித்தவள் தோசையை விண்டு எடுத்து அவனுக்கு ஊட்டி விட்டாள்..

தோசையுடன் அவள் விரலையும் சேர்த்து சுவைத்தவனை பொய் கோபத்துடன் முறைத்தாள்..

அவனும் ஒரு துண்டு தோசையை பிய்த்து அவளுக்கு ஊட்ட அவள் வாய் வரை எடுத்து சென்றவன் சட்டென அதை தன் வாயில் போட்டுக் கொள்ள அவள் புருவம் சுருக்கி பொய் கோபம் காட்டினாள்.. ஆனால் அவளுடைய காதல் கள்வனோ சடாரென அவள் பின் கழுத்தில் கை வைத்து அவளை தன்னை நோக்கி இழுத்தவன் அவள் இதழுக்குள் இதழ் கோர்த்து தன் வாயிலிருந்த தோசை விள்ளலை அவள் வாய்க்கு கடத்தி இருந்தான்..

இதழ் பிரித்தவன் அவன் செயலில் செவ்வானமாய் சிவந்திருந்தவளை பார்த்து கண்ணடிக்க அவளோ நாணத்தில் தலை கவிழ்ந்தாள்.. நாணம் கொண்ட பெண்ணவளின் முகத்தை ரசனையோடு பார்வையால் வருடியவன் “ஏய்.. லட்டு.. நமக்கு கல்யாணம் ஆகி எவ்வளவு வருஷம் ஆகுது? இன்னும் கூட புதுப்பொண்ணு மாதிரி இவ்வளவு அழகா வெக்கப்பட்டு என்னை தெனம் தெனம் கொல்றியேடி.. தேஜூம்மா.. ப்ளீஸ்.. ப்ளீஸ்.. நிஜமாவே இன்னைக்கு லீவு போட்டுடலாம்டி செல்லம்..”

அவன் அவள் நாடி பிடித்து கெஞ்சி கெஞ்சி கொஞ்ச அவளோ ஸ்ட்ரிக்ட் ஆஃபீசராய் “பிச்சிடுவேன் பிச்சு.. இந்த கதையே வேணாம்” என்றவள் அவன் மடியை விட்டு எழப்போக “சரி.. சரி.. போகலாம்.. இப்ப தள்ளி போகாதே.. இந்த கொஞ்ச நேரமாவது எனக்கு கொடு கண்ணம்மா..” என்றவனின் கொஞ்சலில் அவன் மடியிலேயே அடங்கி போனாள்..

அதன் பிறகு அவனுடைய காதல் சீண்டல்களையும் சில்மிஷங்களையும் ரசித்து அனுபவித்தாலும் ஒரு சில நேரம் அவை எல்லை மீறி போகவும் அவனை முறைத்து கெஞ்சி கொஞ்சி சமாளித்து ஒருவழியாக உண்டு முடித்து இருவரும் காரில் ஏறி கிளம்பினார்கள்..
அவளை அவள் பள்ளியில் கொண்டு விடும் வரை கிட்டதட்ட ஒரு 100 முத்தங்கள் அளித்திருப்பான் அவளுக்கு..

காரை விட்டு இறங்கியவள் பள்ளிக்கூடத்தினுள் போக இரண்டு அடி எடுத்து வைக்க “தேஜுமா..” என்று அவன் அழைக்கவும் மறுபடியும் காருக்கு ஓடி வந்தவள் “என்னாச்சு? எதுக்கு கூப்பிட்டீங்க? ” என்று கேட்டாள் படபடப்புடன்..

“எதுக்கு இவ்வளவு பதட்டமா ஓடி வர்ற? ஒன்னும் இல்ல.. சாயங்காலம் நானே வந்து உன்னை கூட்டிட்டு போறேன்.. இங்கேயே வெயிட் பண்ணுன்னு சொல்லத்தான் கூப்பிட்டேன்..”

அவள் கையை இறுக்க பிடித்தவன் அவள் கண்களை பார்த்தபோது இருவருக்குமே ஒருவர் கண்களில் மற்றவருக்கு ஒரு கலக்கம் தெரிந்தது.. ஆனால் இருவருமே அதை மறைத்து புன்னகை சிந்தினர்..

“சரி.. நான் போயிட்டு வரேன்” என்று அவனிடம் சொன்னவள் அவன் கையை விட்டு தன் கையை விலக்கவும் அவனுக்கு ஏனோ அவளை இழப்பது போல ஒரு உணர்வு உள்ளுக்குள்ளே ஏற்ப்பட்டது..

அவளோ அவனைப் பார்த்தாலே எங்கே தன் பயத்தினை தான் வெளிக்காட்டி விடுவோமோ என்று அவனை திரும்பி பார்க்காமல் பள்ளிக்குள் சென்று விட்டாள்..

ஆனால் அப்போது அவர்கள் பேசிய வாய் முகூர்த்தமோ என்னவோ அவர்களை எப்படியாவது பிரித்துவிடவேண்டும் என எண்ணி ஒரு ஜீவன் அவர்களை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததை அவர்கள் அறியவில்லை…

தொடரும்….

வாசகர்களுக்கு வேண்டுகோள்: உங்கள் விமர்சனங்கள் ( கமெண்ட்ஸ்) மற்றும்  ஸ்டார் ரேட்டிங்க்ஸை எதிர்பார்த்து உங்கள் தோழி காத்திருக்கிறேன என்பதை மறக்காதீர்கள்.. ஃப்ரெண்ட்ஸ்!!!

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 17

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!