அக்னி பரீட்சை (ராமனுக்கும்) – 20🔥🔥

5
(16)

பரீட்சை – 20

– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”

 

உன் 

கவிதை வரிகள் 

நீ என் மேல் 

வைத்திருந்த 

காதலை 

இருந்தபடியே 

எடுத்துரைக்க

 

என்னுள் உன் 

வலியை 

அது 

உணர்த்தினாலும் 

 

என்னவனை மட்டுமே 

முழுதாய் 

ஏந்தி இருக்கும் 

நூலிழை 

இடம் இல்லாத 

இதயத்தை 

வைத்துக்கொண்டு 

 

உன் காதலுக்கு 

பதிலாய் 

காலம் தோறும் 

திருப்பிக் கொடுக்க

 

எதுவும் செய்ய

முடியாத 

கையறுந்த நிலையில் 

காரிகை நான் 

இருக்கிறேனடா ..

 

###############

 

காதல் சடுகுடு…!!

 

யாரோ  பின்பக்க கதவை திறக்கும் சத்தம் கேட்கவே சட்டென  விஷ்வாவும் வைஷூவும் ஓடிச்சென்று சுவற்றுக்கு பின்னால் மறைந்து கொண்டனர்.. கல்யாணி அம்மாள் பின் பக்கத்திற்கு  துணியை துவைப்பதற்காக வந்திருந்தார்..

 

அவர் துவைக்கும் கல் அருகே சென்று துணி துவைக்க ஆரம்பிக்க வைஷூவும் விஷ்வாவும் மெதுவாக அவருக்கு தெரியாமல் திறந்திருந்த கதவு வழியே சத்தம் வராமல் உள்ளே நுழைந்தார்கள்..

 

வியாபார அலுவல்  சம்பந்தமாய் ஒருவரை சந்திக்க வீட்டிற்கு வந்து தேஜூவை அங்கே விட்டுவிட்டு உடனே கிளம்பி சென்றிருந்தான் அருண்.. ஆனால் சென்ற இடத்தில் தன் வீட்டில் பொருத்திய சிசிடிவி கேமரா மூலம் தெரிந்த காணொளியில் களவாணிகள் இருவரும் பதுங்கி பதுங்கி தன் வீட்டுக்குள் நுழைவதை பார்த்த அருண் “இவனுங்க யாரு புது தொல்லைங்க..? இதோ வர்றேன்டி.. உங்க ரெண்டு பேருக்கும் இருக்கு..” என்று சொல்லி கருவியவன் அங்கு நடந்து கொண்டிருந்த சந்திப்பை பாதியிலேயே முடித்துக் கொண்டு அங்கிருந்து தன் காரில் ஏறி உடனே வீட்டுக்கு கிளம்பினான்..

 

இங்கே வீட்டுக்குள் அவள் அறைக்குள் இருந்த தேஜூவுக்கோ நாளுக்கு நாள் அருணின் நடவடிக்கைகள் புரியாத புதிராய் மாறிக் கொண்டிருந்தது.. அவன் ஏன் இப்படி எல்லாம் செய்கிறான் என்று கண்டுபிடிக்க வேண்டும் என முடிவு செய்தவள் எப்படி கண்டுபிடிப்பது என்று யோசித்தாள்…

 

“அவன் ரூமுக்கு போய் தேடிப் பார்க்கலாம்.. அவனை பத்தி ஏதாவது க்ளூ கிடைக்கலாமில்லையா? அவன் இப்பதான் வண்டி எடுத்துட்டு எங்கயோ வெளில போனான்.. எப்படியும் திரும்பி வர்றத்துக்கு நேரம் ஆகும்.. கல்யாணி அம்மாவும் உள்ள சமைச்சுக்கிட்டு இருக்காங்க.. இப்போதைக்கு நம்மளை வந்து டிஸ்டர்ப் பண்ண மாட்டாங்க.. ” என்று நினைத்தவள்.. மெதுவாக தன் அறையின் கதவை திறந்து கொண்டு அருணின் அறைக்கு அடிமேல் அடி வைத்து சென்றாள்..

 

அருணின் அறை கதவை திறந்தவள் உள்ளே சென்று கதவை சாத்தி தாளிட்டுக் கொண்டாள்.. மெதுவாக அவன் அறையில் ஒவ்வொரு இடமாக தேடத் தொடங்கினாள்.. மேஜை அருகில்.. தலையணை அடியில் என்று ஒவ்வொரு இடமாக பதட்டத்துடனே தேடிக் கொண்டிருந்தாள்.. 

 

அங்கே எல்லாம் எதுவுமே கிடைக்காமல் போகவே விரக்தியில் கையை உதறியவள் பார்வை அப்போதுதான் அந்த அறையில் இருந்த அலமாரிக்கு சென்றது.. முதல் அலமாரியை திறந்தவள் கண்கள் அப்படியே நிலை குத்தி நின்றது..

 

அங்கே அந்த அலமாரி முழுக்க அவளுடைய புகைப்படங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.. அவள் பேசும்போது.. சிரிக்கும்போது.. அழும் போது.. கோபப்படும்போது.. என கிட்டத்தட்ட ஒரு 50 புகைப்படங்களை அந்த அலமாரிக்குள் பார்த்தவள் இருதயம் வேகமாக துடிக்க தொடங்கி இருந்தது..

 

அது எல்லாமே ஒரு ஆறு ஏழு வருடங்களுக்கு முன் எடுத்தவை என்று தோன்றியது..

 

அதைப் பார்த்து அதிர்ச்சியானவள் ஒவ்வொரு படத்தின் கீழேயும் ஏதோ எழுதி இருக்க எடுத்து படிக்கலானாள்..

 

முதல் படத்தில் அவள் சிரித்துக் கொண்டிருக்க அதன் கீழே..

 

உன் புன்னகை முகத்தை 

கண்டு 

நான் சிறுநகை புரிய 

கற்று கொண்டேனடி…

 

அஸ்வினி நட்சத்திரமாய் 

மின்னும்

புன்னகைக்காக 

என் 

ஆயுள் வரை

காதல் 

அடிமையாய் இருக்க 

உன் 

கையளவு மனதில் 

கையொப்பமிட்டு 

கொடுக்கட்டுமா என் 

கண்ணான காதலியே…!!

 

என்று ஒரு கவிதை எழுதி இருந்தது..

 

அடுத்த புகைப்படத்தில் இரட்டை பின்னல்கள் போட்டு கொண்டிருந்தவள் அந்தப் பின்னல்களை தன் கையில் இரண்டு பக்கம் பிடித்துக் கொண்டு முறைத்து கொண்டு குழந்தை போல் உதட்டை பிதுக்கி கோபமாக இருப்பது போல் இருந்தாள்..

 

அந்தப் புகைப்படத்தில்

 

மீண்டும் மீண்டும் 

உன்னை நான் 

சமாதானம் 

செய்ய வேண்டும் என…

உன் 

மலர் முகத்தை 

மணிக்கு ஒருமுறை 

கோவத்தில்

சிவக்க வைக்கிறாயோ 

என் 

சித்தத்தில் உறைந்த 

சிந்தாமணியே..!!

என்று அழகாய் கவிதை வடித்து இருந்தது..

 

அடுத்த புகைப்படத்தில் வெட்கத்துடன் ஓரக்கண்ணால் பார்த்தபடி சிரித்தாள்..

 

அடிக்கடி சிவக்கிறாய் 

வெட்கத்தில்..

சிவந்த உன் 

அழகு முகத்தில்

மேலும் 

செவ்வாப்பு 

சேர்க்க..

 

அளவில்லாமல் 

அடுக்கடுக்காய் 

அன்பு தந்து..

உன்

சிந்தைக்குள்

சிறையிருக்க

தோணுதடி…

 

அடுத்த புகைப்படம் படபடவென ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்..

 

மடை திறந்தாற்போல 

நீ பேசும் 

வார்த்தைகள் என்னை 

மயக்குதடி மானே..!!

 

மனதில் கொண்ட காதலை 

மொத்தமாய் 

மழையாய் உன்மேல் 

பொழிந்து..

மரணம் வரை 

நீ பேசி 

நான் கேட்க 

வேண்டுமடி 

என்னுயிரே..!!

 

அடுத்த படத்தில் அழுதுக்கொண்டிருந்தாள்.. 

 

கண்ணோரம் இருக்கும்

கண்ணீர் துளிகள்

விழி தாண்டி

விழும் முன்னே

கன்னத்தை

கைகளில் ஏந்தி

விரலால் 

விழி நீர் துடைத்து

நினைவில் கூட 

துன்பம் ஏதும் 

நெருங்காமல் என் 

நெஞ்சில் புதைத்து 

வைப்பேன் உன்னை

என் நிழலானவளே..!!

 

 

இப்படி வரிசையாய் அவளின் ஒவ்வொரு உணர்வுக்கும் ஒவ்வொரு கவிதை உயிரை உரித்து எழுதினாற்போல் அந்தப் புகைப்படங்களில் எழுதி இருந்தது..

அதை படித்தவளுக்கு மனது ஏனோ பிசைந்தது.. அந்த வார்த்தைகள் அவள் இதயத்தை ஊடுருவி சென்றன.. இத்தனை நாள் அருண் அவன் காதலைப் பற்றி சொல்லும்போது அதை ஒரு பொருட்டாக மதிக்காமல் இருந்தது போல் இந்த கவிதையை அவளால் ஒதுக்கி தள்ள முடியவில்லை.. அது நேரே அவள் மனத்திற்குள் புகுந்து அவளுடைய ஒவ்வொரு அசைவும் அவனை எவ்வளவு பாதித்திருக்கிறது என்று அவளுக்கு புரிய வைத்தது..

 

ஆனால் இப்படி ஒரு காதல் உணர்வு அவளுக்கு அவளுடைய ராம் மேல் தானே இருக்கிறது.. அருணின் இந்த ஒரு தலை காதலை.. உயிர் காதலை.. எப்படி கையாள்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தாள் அவள்..

 

இதை ஒரு பொருட்டாக மதிக்காமல் அப்படியே தூக்கி எறியவும் அவளால் முடியவில்லை. அதே சமயம் அவள் இதயத்தின் ஒரு ஓரத்தில் சிறு இடம் கூட மிச்சம் இல்லாமல் ராம் அவள் மனம் முழுக்க நிரம்பி வழிகிறான். இப்படி இருக்கும் போது அருணின் இந்த காதலுக்கு.. அது உண்மையான காதலாகவே இருந்தாலும்.. அவள் என்ன தான் பதில் சொல்ல முடியும்? 

 

அந்த அலமாரியை மூடப் போனவள் அதன் கடைசி அடுக்கில் மூன்று டைரிகள் இருப்பதை பார்த்தாள் அதை பார்த்தவள் அதை கையில் எடுத்து பிரித்து படிக்கத் தொடங்கவும் அப்போது அந்த அறையின் வாசலில் காலடி சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது..

 

“ஐயோ.. ஒருவேளை கல்யாணி அம்மா வந்துட்டாங்களோ? அவங்க என்னை இந்த ரூம்ல பார்த்தா அருண் கிட்ட சொல்லிடுவாங்களே… இப்ப என்ன பண்ணறது?” என்று யோசித்தவள்  சட்டென சென்று அறைக்கதவின் தாழ்ப்பாளை சத்தமில்லாமல் நீக்கிவிட்டு அடுத்த அலமாரியை திறந்தாள்.. அந்த அலமாரியில் எந்த பொருளும் வைக்காமல் நான்கு சட்டைகளும் கோட்டும் மட்டும் மாட்டி இருந்தது.. அதன் உள்ளே ஒரு தட்டில் ஒரு பக்கமாக சென்று அமர்ந்து கொண்டு கதவை மூடிக்கொண்டாள்..

 

ஆனால்  கதவிடுக்கின் வழியாக பார்த்தவளுக்கு உள்ளே நுழைந்தது கல்யாணி அம்மாள் இல்லை… வேறு இருவர் என்று தெரிந்தது.. 

 

இளம்பெண்ணொருத்தியும் அவளுடன் இன்னொருவனும் கதவை சாத்திவிட்டு மெதுவாக பதுங்கி பதுங்கி உள்ளே நுழைவது தெரிந்தது.. ஆனால் அந்த கதவிடுக்கின் வழியாக எவ்வளவு முயன்று பார்த்தும் அவர்களின் முகம் அவளுக்கு தெளிவாக தெரியவில்லை..

 

அப்போது அவர்கள் பேச்சு சத்தம் கேட்க ஆரம்பித்தது..

 

“அடியே.. அந்த மனுஷன் ரோட்ல நிறுத்தி அவர் கதையை கேட்டதுக்கே உன் கன்னத்தை பழுக்க வச்சுட்டாரு.. இப்ப அவருக்கு தெரியாம அவர் ரூமுக்கு வந்துருக்கே..” என்ற விஷ்வாவின் கன்னத்தை பிடித்து ,” வந்திருக்கே இல்ல வந்திருக்கோம்” என்றாள் வைஷூ..

 

“ம்க்கும்.. என்னை கோத்து விடுறதில உனக்கு அவ்வளவு சந்தோஷம்..?! இன்னைக்கு என்ன என்ன கலவரம் எல்லாம் நடக்க போகுதோ.. தெரியல… ஆப்பு இருக்குடி நம்மளுக்கு!!” என்று சொல்லிக் கொண்டே விஷ்வா  முகத்தில் ஒரு கலவரத்துடனே சுற்றி சுற்றி பார்த்தான் அந்த அறையை..

 

“டேய்.. எனக்கே டென்ஷனா இருக்கு.. நீ வேற இப்படி எல்லாம் பேசி பேசி மேல மேல டென்ஷன் ஏத்தாத..” என்று வைஷூ சொல்லவும் “அவ்வளவு பயம் இருக்குன்னா எதுக்குடி உள்ள வந்த? நான் அப்பவே சொன்னேன் இல்ல..? அப்படியே போலான்னு..” என்று கேட்டான் விஷ்வா..

 

“டேய்.. அந்த லேடி ..அதான் அந்த தேஜஸ்வினி.. அவங்க முகத்தை பார்த்தா ஏதோ அவங்க விருப்பம் இல்லாம இவரோட இருக்கிற மாதிரி இருக்குடா.. அதான் ஏதாவது ஹெல்ப் பண்ணலாமேன்னு வந்தேன்.. ஒரு பொம்பளையோட கஷ்டம் இன்னொரு பொம்பளைக்கு தான் தெரியும்..” என்றாள் அவள்..

 

“அதுக்கு ஏண்டி ஆம்பள என்னை சிக்க வைக்கிறீங்க? நான் அப்படியே போறேன்னு சொன்னேன் இல்ல?” என்றான் விஷ்வா..

 

“இப்படி பயந்தாங்கொள்ளி மாதிரி பயந்துட்டு ஆம்பளன்னு காலரை வேற தூக்கி விட்டுக்கோ.. நானே இருக்கிற பயத்தை எல்லாம் அடக்கி வச்சு தைரியமா இருக்கேன்.. நீ ஏன்டா இப்படி ஜர்னலிஸ்ட்ன்னு சொல்லிக்கிட்டு ஒரு டம்மி பீசா இருக்க? சரி சரி… டைம் ஆகுது வந்த வேலையை பாரு.. ஏதாவது இந்த ரூம்ல க்ளு கிடைக்குதான்னு பாரு..” என்றாள் அவள்..

 

” என்னது டம்மி பீசா..? ஏண்டி சொல்ல மாட்ட? உன் கூட இப்படி நீ போற இடத்துக்கெல்லாம் வந்து லோல் பட்டுக்கிட்டு இருக்கேன்ல.. இதுவும் பேசுவே இன்னமும் பேசுவே.. ம்ம்ம்ம்..” என்று யோசித்தவன் “பெரிய ரூமா இருக்கு.. அநேகமா ஒன்னு இது அருண் ரூமா இருக்கணும்.. இல்லன்னா தேஜஸ்வினி ரூமா இருக்கணும்.. இங்க சுத்தி அந்த அருணோட ஃபோட்டோ தான் வச்சிருக்கு.. அதனால அருண் ரூமா தான் இருக்கணும்னு நினைக்கிறேன்..” என்ற விஷ்வா விடுவிடுவென மேஜையில் இருந்த டிராவில் ஏதாவது இருக்கிறதா என்று தேட ஆரம்பித்தான்..

 

வைஷூவும் ஒவ்வொரு அலமாரியாக திறந்து தேடலாம் என்று முதல் அலமாரியை திறந்தாள்..

 

அதிலிருந்து தேஜுவின் புகைப்படங்களை பார்த்த அவளோ அதிலிருந்த கவிதைகளை சத்தமாக படிக்க தொடங்கினாள்.. அவள் படிப்பதை திரும்பிப் பார்த்த விஷ்வா அவள் அருகில் வந்து அவனும் அந்த படங்களை பார்த்தான்..

 

ஒவ்வொரு கவிதையாக படித்து முடிக்கும் போது வைஷூவின் கண்கள் கலங்கி இருந்தன.. 

 

“என்ன ஒரு லவ் டா? நெஜமாவே இந்த அருண் பெரிய லவ்வரா இருப்பாரு போல இருக்கு.. இப்படி உருகி உருகி லவ் பண்ணி இருக்காரு.. அந்த தேஜூ என்னன்னா இப்படி உயிரை உருக்கி லவ் பண்ண ஒருத்தனை விட்டுட்டு ராமை ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க? ஒரே குழப்பமா இருக்கே.. எனக்கெல்லாம் இப்படி ஒருத்தர் லவ் பண்ண கெடைச்சா உலகமே அழிஞ்சாலும் அவரை விட்டு போயிருக்க மாட்டேன்.. ஆனா இந்த கேள்விக்கெல்லாம் அவங்க ரெண்டு பேர் தான் பதில் சொல்லணும்”

 

“உன்னை லவ் பண்ணறதுக்கு எல்லாம் இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் டி.. ரெண்டு பூரி செட்.. ஒரு ஐஸ் கிரீம்.. வாங்கி கொடுத்தா போதும்.. நீ தான் கவுந்துருவியே.. என்ன…? உனக்கு சாப்பாடு வாங்கி கொடுத்தே அவனுக்கு சொத்து அழிஞ்சுடும்..”

 

அவனை பின்தலையில் தட்டியவள் “நீ வேணா பாரு.. இப்படி ஒருத்தரை தான் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிப்பேன் நான்..” என்று சொல்லவும் “அப்படின்னா அவ்வையார் மாதிரி இப்படியே கெழவி ஆயிடுவ.. ஏன்னா உன்னை எல்லாம் பார்த்தா இப்படி எல்லாம் கவிதை எழுதணும்னு எந்த ஜென்மத்துக்கும் தோணாது..” என்றான்..

 

கண்களை இடுக்கி அவனை முறைத்தவளை “ஓகே ஓகே.. கூல்..கூல்..வந்த வேலையை பார்க்கலாமா?” என்றவன் அப்போதுதான் கீழே பார்த்தான் “ஏய் இங்க பாரு எவ்ளோ டைரிஸ் இருக்கு..” என்று அங்கு இருந்த மூன்று டைரிகளையும் வைஷுக்கு காட்டினான்.. “இதை படிச்சு பார்த்தா எல்லாம் தெரிஞ்சுரும்டா.. அருண் பத்தியும் தேஜஸ்வினி பத்தியும்..” 

 

 கீழே அமர்ந்து அதை எடுக்க போன போது வெளியே கார் கேட்டை தாண்டி உள்ளே வரும் சத்தம் கேட்டது..

 

விஷ்வா “அய்யய்யோ.. வந்துட்டான்டி ராட்சசன்.. இப்ப என்னடி பண்ணுவ? போச்சு போச்சு.. இன்னைக்கு நான் பிரியாணி தான் அவனுக்கு.. எங்க அம்மாக்கு நான் ஒத்த பிள்ளை.. அடிப்பாவி கிராதகி.. நான் உனக்கு என்னடி பாவம் பண்ணேன்..? என்னை இப்படி மாட்டிவிட்டுட்டியே..” புலம்ப ஆரம்பித்தான் அவன்..

 

” நீ வேற ஏன்டா..? இப்ப என்ன? அவர் வந்துட்டாரு.. சரி சீக்கிரம் போய் எங்கயாவது ஒளிஞ்சிக்கலாம்..” என்று அவள் கூற “என்னது ஒளிஞ்சுக்கிறதா? இங்க எங்கடி ஒளிஞ்சுக்க இடம் இருக்கு?” அவளை முறைத்தான் அவன்..

 

“நீ போய் அந்த கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சுக்கோ..”

 

“ஏன்.. நான் மட்டும் அவர்கிட்ட சிக்கி சின்னாபின்னமாகி சாவறதுக்கா? நீயும் என்னோட வா.. “

 

 அவள் கையை பிடித்து இழுத்து அவன் சொல்ல “அதுக்கு இல்லடா.. நீ ஒரு இடத்துல.. நான் ஒரு இடத்துல.. ஒளிஞ்சிக்கலாம்.. அப்பதான் யாராவது ஒருத்தரை அவரு அட்டாக் பண்ணா கூட இன்னொருத்தர் ஹெல்ப் பண்ண முடியும்.. நீ போய் கட்டிலுக்கு அடியில ஒளிஞ்சிக்கோ.. சொன்னா கேளு..” என்றவளை முறைத்து விட்டு கட்டிலுக்கடியில் சென்று ஒளிந்து கொண்டான்.. 

 

சுற்றி முற்றி பார்த்தவள் அடுத்த அலமாரியின் ஒரு கதவை திறக்க அறைக்கு மிக அருகில் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கவும் சட்டென அலமாரிக்குள் ஏறி ஒரு தட்டில் அமர்ந்து கொண்டவள்.. அலமாரியின் கதவை சாத்தவும் அந்த அறைக்குள் அருண் நுழையவும் சரியாக இருந்தது..

 

கதவை சாத்தியதுமே உள்ளே தனக்கு எதிர்பக்கமாய் தன்னைப் போலவே தேஜு உட்கார்ந்து கொண்டிருக்க அவளை விழி விரித்து அப்படியே ஆச்சரியமாக பார்த்தவள்.. வாயை திறந்து கத்த போக அவள் வாயை தன் கையால் பொத்தினாள் தேஜூ..

 

உள்ளே வந்த அருணோ தான் உள்ளே நுழையும் போது அந்த அலமாரியின் கதவு சாத்தப்பட்டதை அறிந்து விட்டவன் நேரே அலமாரி அருகே வந்து அதன் ஒரு பக்க கதவை திறந்தான்..

 

தொடரும்…

 

ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்துகா த்திருக்கும் உங்கள் அன்பு தோழி “சுபா”

 

இந்தக் கதைக்கான உங்கள் விமர்சனம்?

Click on a star to rate it!

Average rating 5 / 5. Vote count: 16

No votes so far! Be the first to rate this post.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!