பரீட்சை – 21
– சுபஸ்ரீ எம். எஸ். “கோதை”
உன்னை அறியும்
நோக்கோடு
உளவு பார்க்க
எண்ணி
உன்னறைக்குள் நான்
செல்ல
உதவி செய்யவே
எனக்கு
இரு நெஞ்சம்
தேடி வர
அவர்களை
இறுகப் பற்றிக்
கொண்டேனடா
அடிபட்ட அரிமாவாய்
மயங்கிய
உன்னை பார்த்து
அரண்டு போனதடா
என் நெஞ்சம்..
பல கொடுமை
செய்த உன்மேல்
பரிதாபம் நான்
கொண்டதேனோ
புரியாமல்
விழிக்கின்றேன்..
###############
யாரடா நீ…!?
உள்ளே வந்த அருண்… தான் உள்ளே நுழையும் போது அலமாரியின் கதவு சாத்தப்பட்டதை அறிந்து விட்டவன் நேரே அலமாரி அருகே வந்து அதன் ஒரு பக்க கதவை திறந்தான்..
அலமாரிக்குள் தனக்கு எதிரே அமர்ந்து இருந்த தேஜுவை பார்த்து ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த வைஷூ அருண் காலடி சத்தம் அந்த அலமாரியை நோக்கி வருவது போல் கேட்கவும் “என்ன செய்வது?” என்று தெரியாமல் கண்களையும் கைகளையும் இறுக்க மூடிக்கொண்டு அவன் அந்தக் கதவை திறக்க கூடாது என்று எல்லா சாமிகளையும் வேண்டிக் கொண்டாள்..
ஆனால் எந்த சாமிக்கும் அவள் வேண்டுதல் காதில் விழவில்லை.. அருண் ஏற்கனவே அவள் பக்கம் இருந்த அலமாரியின் கதவை திறந்து அவளைத்தான் முறைத்துக் கொண்டு இருந்தான்..
“நீ என்ன பண்ற இங்க?”
அவனுடைய கணீர் குரல் காதில் விழுந்ததும் ஒற்றை கண்ணை மட்டும் திறந்து அவனைப் பார்த்தவள் “ஹி..ஹி..ஹி.. ” என்று இளித்துவிட்டு “அது வந்து.. சார்.. கோபப்படாதீங்க.. நான் எதுக்கு வந்து இருக்கேன்னு தான் உங்களுக்கு தெரியுமே..” பயந்தபடி சொன்னவள் அந்த இடத்திலிருந்து கீழே இறங்க முயற்சி செய்து அவன் மேல் அப்படியே விழுந்தாள்..
அவளை கையில் தாங்கினான் அவன்.. ஒரு நிமிடம் அவன் பரந்த மார்பையும் அவன் தீர்க்கமான விழிகளையும் தீர்மையான நாசியையும் அளவாய் அடர்ந்திருந்த மீசைக்கு உள்ளிருந்த அவன் இறுக்கமான உதடுகளையும் தன்னை மறந்து அப்படியே நோட்டமிட்டு கொண்டிருந்தவளை முறைத்தவன் “டமார்” என்று அவளை கீழே போட “ஐயோ அம்மா.. ஏன் சார் இப்படி..? உங்களுக்கு எதுக்கு இவ்வளவு கொலைவெறி..?” என்று இடுப்பை தடவிக் கொண்டே புலம்பினாள்..
அவன் அந்த அலமாரியின் இன்னொரு கதவை திறக்க கையை எடுத்துக் கொண்டு போவதை பார்த்து சட்டென அங்கிருந்து எழுந்து அவன் கையைப் பிடித்தாள்..
அலமாரிக்குள் இருந்து வெளியே வந்தவள் திறந்திருந்த கதவை அழுத்தி சார்த்தி அதன் மேலேயே சாய்ந்து கொண்டாள்..
“சார் உங்க கையை காலா நினைச்சு கேட்கிறேன்.. உண்மையா இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு சொல்லுங்க சார்.. எனக்கு மண்டையே வெடிச்சிடும் போல இருக்கு..” அவள் பாவமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்கவும் அப்படியே அந்த கையை எடுத்து அவள் கழுத்தை நெரிக்க ஆரம்பித்தான் அருண்..
“உனக்கு இதெல்லாம் விளையாட்டா இருக்கா? ஒருவாட்டி சொன்னா புரியாது? இன்னொரு முறை உன்னை பார்த்தேனா உன்னை கொன்னுடுவேன்னு நான் சொன்னேன்ல? அதை மீறி எதுக்குடி இங்க வந்த?” அவள் கழுத்தை நெறித்த கையால் அப்படியே அந்த கதவின் மேல் அவளை தூக்க அவள் கால்கள் ரெண்டும் அந்தரத்தில் இருக்க மூச்சுக்கு திண்டாடினாள்..
அப்போது கட்டிலுக்கு அடியில் இருந்து வெளியே வந்த விஷ்வா “அய்யய்யோ இவளை கொன்னுடுவான் போல இருக்கே.. வைஷூ மாதா.. இப்படி வந்து நீயும் மாட்டிகிட்டு என்னையும் மாட்டிவிட்டுட்டியேடி”
மனதிற்குள் நினைத்தவன் “என்ன செய்வது?” என்று தெரியாமல் கண்களை உருட்டி உருட்டி இங்கும் அங்கும் சுற்றி பார்த்து எதையோ தேடினான்..
கட்டிலுக்கு பக்கத்திலேயே ஒரு பூ ஜாடி இருக்க அதை கையில் எடுத்தவன் யோசிக்காமல் அருணை அந்த பூச்சாடியால் பின் மண்டையில் ஓங்கி அடித்தான்..
அவன் அடித்ததினால் பின் தலையில் ஏற்பட்ட வலியில் இடது கையால் தன் பின்னந்தலையைப் பிடித்துக் கொண்ட அருண் கண்களை இறுக்க மூடி ” ஆ..” என்று உறுமியவன் தன் வலது கையின் பிடியை சிறிது தளர்த்தினான்..
அப்படியே கீழே விழுந்த வைஷு பெரிதாக மூச்சை விட்டுக்கொண்டு இரும ஆரம்பித்தாள்..
ஆனால் அதற்குள்ளாக விஷ்வாவின் புறம் திரும்பிய அருண் அவனை நோக்கி கையை நீட்டிக் கொண்டு வர பயந்த விஷ்வா மறுபடியும் அந்த பூச்சாடியை எடுத்து அவன் நெற்றியில் ஓங்கி ஒரு அடி அடித்தான்..
அவ்வளவுதான்.. அப்படியே மயங்கி கீழே விழுந்தான் அருண்..
அப்போதுதான் தன்னிலை உணர்ந்த வைஷுவோ அருண் அடிப்பட்டு கிடப்பதை பார்த்தவள் “என்னடா இப்படி அடிச்சுட்ட?” என்று விஷ்வாவை பார்த்து கேட்க அவனோ அவளை எரித்து விடுவது போல் முறைத்தான்..
“அடியே.. பன்னி.. உன்னை கஷ்டப்பட்டு காப்பாத்தி இருக்கேன் டி.. மரியாதையா அந்த ஆளு திரும்பி எழுந்துக்கறதுக்குள்ள எஸ்கேப் ஆயிடலாம்.. ஓடி வந்துரு..” என்றான்..
“விஷயம் புரியாம பேசாத.. இவ்ளோ ரிஸ்க் எடுத்து வந்து இந்த ஆளை அடிச்சு வேற போட்டு இருக்கோம்.. இப்படியே போனா இந்த ஆளு எழுந்த அப்புறம் நேரா நம்மளை வந்து கொன்னுட்டு தான் மறு வேலையே பார்ப்பான்.. அட்லீஸ்ட் சாகறதுக்கு முன்னாடி இவன் எதுக்கு இப்படி எல்லாம் பண்ணான்னு தெரிஞ்சுகிட்டாவது சாவறேன்டா.. அப்பதான் என் ஆத்மா சாந்தி அடையும்..” என்றவளை இன்னும் தீவிரமாக முறைத்தான் விஷ்வா..
பிறகு முகத்தை அழுவது போல் வைத்துக் கொண்டவன் “நான் அப்பவே சொன்னேன் டி.. இதெல்லாம் வேண்டான்னு. நீ ஏண்டி இப்படி என் உயிரை எடுக்குறதுலையே குறியா இருக்க? நான் வேற அவனை அடிச்சிட்டேன்.. நிச்சயமா இவன் எழுந்த அடுத்த நிமிஷம் என்னை பழி தீர்க்காம விடப்போறது இல்ல..” மறுபடியும் புலம்ப தொடங்கினான் அவன்..
“இருடா.. அதுக்கு முன்னாடி அந்த டைரி பார்த்தோம் இல்ல.. அதை படிக்கலாம் டா..”
வைஷூ சொல்லவும் “எதுக்கு டைரி படிச்சு முடிச்சுட்டு அப்படியே ரெண்டு பேரும் மேல போறதுக்கா? வைஷு.. ஒழுங்கு மரியாதையா சொல்றேன்… வா ரெண்டு பேரும் ஊரை விட்டு ஓடிடலாம்.. இந்த ஆளு எப்படி இருந்தாலும் நம்ம ரெண்டு பேரையும் தீர்த்து கட்டாம விடமாட்டான்..”
“டேய் அழாதடா.. எருமை.. நான் சொல்றதை கேளு.. உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த அலமாரியை நான் ஏன் இவ்வளவு அழுத்தி மூடி இதுக்கு மேல சாய்ஞ்சிக்கிட்டேன் தெரியுமா?”
அவள் புதிர் போட “எதுக்கு சாஞ்சிருப்ப? கீழ விழுந்ததினால உன்னால பேலன்ஸ் பண்ணி நிக்க முடியலை.. சரியா?” என்று அவன் கேட்க அவனை முறைத்து பார்த்தவள் “ஏய் லூஸு.. அதெல்லாம் நான் ரொம்ப ஸ்ட்ராங்.. என்னால எல்லாம் நிக்க முடிஞ்சது.. அவரு திறந்து பார்த்து இருந்தா இன்னொருத்தங்களும் மாட்டி இருப்பாங்க.. அதனாலதான் இந்த கதவை சாத்தினேன்..” என்றாள் வைஷு..
“என்னது இன்னொருத்தங்களும் மாட்டி இருப்பாங்களா? யாரு? ”
மெதுவாக திரும்பி அலமாரியின் இன்னொரு கதவை திறந்தாள் வைஷூ.. அங்கே தேஜுவை பார்த்தவன் அப்படியே ஸ்தம்பித்து நின்றான்..
“அய்யய்யோ.. இவங்க வேற இங்க வந்து ஒளிஞ்சிகிட்டு இருக்காங்களா? நீங்க ஏன்கா இங்க வந்து ஒளிஞ்சிகிட்டு இருக்கீங்க?”
“என்ன..? பார்த்த உடனே அவங்களை அக்கான்னுட்ட.. அவங்களுக்கு என்ன வயசுன்னு உனக்கு தெரியுமா? அவங்களை பார்த்தா கொஞ்சம் சின்னவங்க மாதிரி தான் டா இருக்காங்க.. எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு சீக்கிரம் கல்யாணம் ஆயிருக்கும்னு நினைக்கிறேன்..” என்று சொன்னாள் வைஷு..
சிரித்துக் கொண்டே இறங்கிய தேஜு “பரவால்ல வைஷு.. பார்த்த உடனே கண்டுபிடிச்சிட்டியே.. நீ சொல்றது கரெக்ட் தான்.. காலேஜ் முடிச்ச உடனேயே எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு.. எனக்கு உங்க வயசு தான் இருக்கும்..” என்றாள் தேஜு..
“நியாயம் தானே? அவங்க இருக்கிற அழகுக்கு காலேஜ் முடியற வரைக்கும் கூட யாரும் காத்துட்டு இருந்து இருக்க மாட்டாங்க.. நம்மளை மாதிரியா? இதை பாரு.. ரெண்டு பேருக்கும் 25 வயசு ஆகுது.. இதுவரைக்கும் ஒரு ஜீவன் கூட திரும்பி பார்க்கல உன்னையும் என்னையும்.. இப்படியே கல்யாணம் ஆகாமே கடைசி வரைக்கும் வாழ்ந்துட்டு செத்துருவோம் போல இருக்கு” என்றான் விஷ்வா..
“டேய் உனக்கு சொல்லணும்னா உன்னை வேணா சொல்லிக்கோ.. நான் அப்படியெல்லாம் சாக மாட்டேன்.. நிச்சயமா என்னை நான் விரும்புற மாதிரி ஒருத்தர் வந்து கல்யாணம் பண்ணிப்பாரு.. இல்லன்னா கல்யாணம் பண்ண வெப்பேன்..” என்றாள் வைஷூ..
அப்போதுதான் கீழே அருண் விழுந்து கிடப்பதை பார்த்தாள் தேஜு.. என்னதான் அவன் மேல் கோபம் இருந்தாலும் அவன் அடிபட்டு விழுந்து கிடப்பதை பார்த்து மனத்தை பிசைந்தது அவளுக்கு..
“விஷ்வா.. அவரை கொஞ்சம் தூக்கி அந்த கட்டில்ல படுக்க வெச்சிடறீங்களா? ரொம்ப அடிபட்டு இருக்கா?” என்று கேட்டாள் தேஜு..
“ஆமா ஆமா.. இந்த விஷ்வா.. ஒரு அடியோடு நிறுத்தி இருக்கலாம்.. பாவம் என்னோட பட்டுக்குட்டியை ரெண்டு அடி அடிச்சிட்டான்.. ஏன்டா அடிச்ச..? அவர் மூஞ்சில ஏதாவது அடிபட்டு இருக்கா பாருடா.. ”
“பட்டுக்குட்டியா? இன்னும் ரெண்டு நிமிஷம் நான் அடிக்கிறதுக்கு லேட்டாகி இருந்ததுனா அம்மா பட்டுக்குட்டி கையாலே பரலோகம் போய் சேர்ந்து இருப்பீங்க.. பேசுற பேச்சை பாரு..” கீழே குனிந்தவன் அவனை தலையை திருப்பி பார்க்கவும் நெற்றியில் லேசாக பூ ஜாடி பட்டதால் ரத்த கீற்றுடன் ஒரு வடு இருந்தது..
“ரொம்ப பெரிய அடி எல்லாம் இல்ல.. லேசா கீறி இருக்கு அவ்வளவுதான்.. நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அக்கா.. அப்புறம் நான் உங்களை அக்கான்னு கூப்பிடலாம்.. காலேஜ் முடிச்சு கல்யாணம் ஆகி உங்களுக்கு அஞ்சு வயசுல குழந்தைங்க இருக்காங்கன்னா நிச்சயமா உங்களுக்கு குறைஞ்சது 26 27 வயசு இருக்கணும்.. எங்க ரெண்டு பேருக்கும் 25 வயசு தான் ஆகுது.. அதனால உங்களை நான் அக்கான்னே கூப்பிடுறேன்” என்றான் விஷ்வா..
அவன் வெள்ளந்தியாய் பேசுவதை பார்த்து சிரித்த தேஜூ “ரொம்ப அழகா பேசுற.. உன்னை மாதிரி ஒரு குட்டி தம்பி எனக்கு இல்லையேன்னு இப்ப தோணுது” என்றாள்..
“ஏன்கா.. என்னை மாதிரி ஒரு குட்டி தங்கச்சி இல்லையேன்னு தோணலையா?”
ஏட்டிக்குப் போட்டியாக வைஷு கேட்கவும் “அதுவும் தான் தோணுது.. எவ்வளவு துரு துருனு இருக்கீங்க ரெண்டு பேரும்..”
வெகு நாட்களுக்குப் பிறகு மனம் விட்டு சிரித்தாள் அவள்..
“சரி வைஷு.. ஒரு கை பிடி.. அவரை கட்டில்ல படுக்க வெச்சிடலாம்” என்று சொன்னவன் அருணை தூக்கி கட்டிலில் கொண்டு போய் படுக்க வைத்தான்..
அதன் பிறகு விஷ்வா தான் கையில் வைத்திருந்த ஒரு பையில் இருந்து எதையோ எடுத்தான்..
“டேய் என்னடா எடுக்கிற? என்று கேட்டாள் வைஷு..
“மயக்க மருந்து ஸ்பிரே..” என்றான் அவன் புருவத்தை ஏற்றி இறக்கி புன்னகைத்தபடி..
“டேய் இது எதுக்குடா?” என்று வைஷு கேட்கவும் தேஜூவும் “யாருக்கு மயக்கம் கொடுக்க போறீங்க?” என்று படபடப்பாய் கேட்டாள்..
“ஏன் வைஷு.. உனக்கு சமயத்துல மூளையே வேலை செய்ய மாட்டேங்குது? நம்ம உள்ள வரும்போது பார்த்தோம்ல ஒரு அம்மா பின்னாடி துணி துவைக்க போயிட்டு இருந்தாங்களே..” என்று அவன் கேட்க அப்போதுதான் வைஷுக்கு ஞாபகம் வந்தது..
“ஆமா.. துணி துவைக்க போனாங்க.. அய்யய்யோ அவங்க வந்தாங்கன்னா பெரிய பிரச்சனை ஆயிடுமே.. இப்போ என்ன செய்யறது?”
“அதுக்கு தான் என்னை மாதிரி ஒரு மூளை உள்ள ஆளு கூட இருக்கணுங்கறது.. அந்தம்மா அநேகமா இப்ப சமையல் ரூம்ல தான் இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.. நான் போய் இதை சமையல் ரூம்ல அடிச்சிட்டு வந்துடறேன்.. அவங்க எப்படியும் மயக்கம் போட்டு விழுந்திடுவாங்க.. அதுக்கப்புறம் ரெண்டு பேரும் மயக்கத்திலிருந்து எழும்பறதுக்குள்ள நம்ப அக்கா கிட்டயும் என்ன விஷயம்னு கேட்டுட்டு அந்த டைரியையும் ஃபுல்லா படிச்சுட்டு என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கலாம்.. அதுக்கப்பறம் ஊரை விட்டு ஓடிடலாம்.. ஓகேவா?” என்றான் அவன்..
“பரவால்லடா என் பெரிய மூளை பெருசா வேலை செஞ்சா உன் சிறு மூளை நல்லா சிறுசா வேலை செய்யுது..” என்று வைஷூ சொல்ல அவளை தீவிரமாக முறைத்தவன் ” பேசாம மயக்க மருந்தை உனக்கு போடறேன்” என்று சொன்னவனை “சரி சரி போ.. போய் அந்தம்மாக்கு மயக்க மருந்து ஸ்பிரே அடிச்சிட்டு வா..” என்று பேசிக் கொண்டிருந்தவர்களை சற்றே பயத்துடன் பார்த்தாள் தேஜு..
இருவரும் அவளை என்ன என்பது போல் பார்க்க”நீங்க ரெண்டு பேரும் பத்திரிகைக்காரங்க தானே..?” என்று அவள் நிதானமாக கேட்க “ஏன்கா.. அதுல என்ன உங்களுக்கு சந்தேகம்?” என்று கேட்டாள் வைஷு..
“சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க.. நீங்க செய்யறது எல்லாம் பார்த்தா ஏதோ திருட்டு கும்பல் மாதிரி இருக்கு.. கைல மயக்க மருந்து ஸ்பிரே எல்லாம் வச்சிருக்கீங்க?”
அவள் தயக்கத்துடன் கேட்க “அக்கா.. திருட்டு கும்பல் கூட ஈஸியா தப்பிச்சுருவாங்க.. ஆனா நாங்க எடுக்கிற ரிஸ்குல சில சமயம் மயக்கமருந்து ஸ்ப்ரே.. அப்புறம் மிளகாய் பொடி ஸ்ப்ரே.. கத்தி அதெல்லாம் கூட தேவைப்படும்.. இன்னும் லைசன்ஸோட துப்பாக்கி ஒன்னு வாங்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன்..” என்றான் விஷ்வா..
அவனை சிறிது பயத்தோடு பார்த்துக் கொண்டிருந்தாள் தேஜு..
“டேய்.. ஏதாவது சொல்லி அவங்களை பயமுறுத்தாத.. அதெல்லாம் ஒன்னும் இல்லக்கா.. அவன் சும்மா விளையாட்டுக்கு சொல்றான்.. அவனே ஒரு தொட நடுங்கி.. இதோ.. இப்ப அருண் சார் எழுந்துக்கட்டும்.. அப்ப தெரியும்.. இவன் துப்பாக்கி சுடுற அழகெல்லாம்.. வேற எதுக்காவது எடுத்துட்டு வந்திருக்கும்.. இந்த மயக்கம் மருந்து ஸ்பிரேவை.. இப்ப அது நம்மளுக்கு யூஸ் ஆயிடுச்சு.. ” என்றாள் அவள்..
“இல்ல.. பாவம் கல்யாணி அம்மா.. அவங்க வாயில்லா பூச்சி.. கொஞ்சம் அமைதியானவங்க.. அவங்களை போய்..” என்று அவள் இழுக்க “அக்கா உங்களுக்கு அந்த டைரியை படிக்கணுமா இல்லையா?” என்று கேட்டாள் வைஷு…
“படிக்கணும்.. நிச்சயமா படிக்கணும்..” என்ற தேஜு சொல்லவும் “அப்படின்னா நீங்க எங்களோட கோ-ஆபரேட் பண்ணுங்க..” என்று சொல்லிவிட்டு விஷ்வாவை போகச் சொல்லி கண்ணை காட்ட அதற்குள் அந்த அறைக்கு வெளியே காலடி சத்தம் கேட்டது..
“போச்சு.. கல்யாணி அம்மா வந்துட்டாங்க..” என்றான் விஷ்வா..
தொடரும்…
ஹலோ.. என் அன்பு நண்பர்களே..!! மறக்காதீங்க..!! மறக்காதீங்க…!! கமெண்ட்ஸ், ரேட்டிங்ஸ் போட மறக்காதீங்க…!!! தவறாம கதையை பத்தியும் அதில் வரும் கதாப்பாத்திரங்கள் பத்தியும் உங்க கருத்துக்களை தயவு செய்து பதிவு பண்ணுங்க..!! உங்க விமர்சனங்களை.. எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள் அன்பு தோழி “சுபா”